தெரளி

நாளை திருக்கார்த்திகை. இன்று மாலை அலுவலகம் விட்டு வரும்போது வழியெங்கும் தெரளி இலைகளை குவித்துப்போட்டு விற்றுக் கொண்டிருந்தார்கள். தெரளியப்பம் அவிப்பதற்கான இலைகள் அவை. பொதுவாக குமரிமாவட்டத்தின் சாஸ்தா ஆலயங்களில் தெரளி ஒரு முக்கியமான படையலாக இருந்தாலும் கார்த்திகையன்றுதான் அது பரவலாக அனைவராலும் அவிக்கப்படுகிறது.

தெரளியிலை கேரளத்தில் வழனைஇலை என்று சொல்லப்படுகிறது. இது ஒரு மரத்தின் இலை. மாமர இலைபோன்ற வடிவம் கொண்டது. இந்த மரத்தின் பட்டைதான் கருவாப்பட்டை என்று சொல்லப்படுகிறது. இலவங்கப்பட்டை என்றும் இதற்குப் பெயருண்டு. பட்டை முக்கியமான ஒரு நறுமணப்பொருள். இந்த இலைகளில் அந்த நறுமணம் மிதமான அளவில் இருக்கும்.

 

தெரளியப்பம் ஓர் அரிசிப்பலகாரம். பச்சரிசியை ஊறவைத்து இடித்து மாவாக்கிக்கொள்ளவேண்டும். இளந்தேங்காயை துருவி அதில் கலக்கவேண்டும். வெல்லத்தை நீரில் கலந்து கெட்டியான திரவமாக்கி அதில் உள்ள கரும்புத்தாள்களையும் கல்லையும் களைந்தபின் அந்த திரவத்தை அரிசிமாவில் போட்டு பிசைந்து எடுக்கவேண்டும். சப்பாத்தி மாவுக்கான பருவத்தில்.

அந்த மாவை தெரளி இலைக்குள் வைத்து சுருட்டி நுனியை ஒடித்து  இலையிலேயே குத்தி நிறுத்திக் கொள்ளலாம். அவற்றை இட்டிலித்தட்டில் பரப்பிவைத்து இட்டிலிப்பாத்திரத்தில் வைத்து இட்லிபோலவே ஆவியில் வேகவைத்து எடுத்தால் தெரளி. மாவுடன் வேறு நறுமணப்பொருட்கள் எதையும் சேர்க்கக் கூடாது.

இந்த அப்பத்தின் சிறப்பம்சமே இதன் நறுமணம்தான். சிறப்பான தெரளி வருவதற்கு சிவப்பு கைக்குத்தல் பச்சரிசி தேவை. அதை நன்றாக ஊறவைத்து இடித்து எடுத்த மாவுதான் சிறப்பாக இருக்கும். அரிசிமாவு வாங்கிச்செய்தால் சுவைகுறையும். வெல்லம் அதிகமாக போகக்கூடாது. நீர் குறைவாக இருந்தால் மாவுமாவாக பிரியும். அதிகமாக இருந்தால் வழுவழுவென ஆகிவிடும். தேங்காய் முற்றலாக இருந்தாலும் தெரளி சுவை இழக்கும். மிக எளிமையான பக்குவமாக இருந்தாலும் சரியான ஒத்திசைவு கவனமாகச் செய்தால்தான் வரும்.

கேரளத்தில் இப்போது ஆற்றுகால், சக்குளத்துகாவு முதலிய அம்மன் கோயில்களில் பொங்கல்வழிபாடுகள் வரப்போகின்றன. இந்த பகவதி கோயில்கள் அனைத்திலுமே சிறப்பான வழிபாட்டு படையலாக தெரளி உள்ளது. இந்த இலைக்கும் பௌத்தத்திற்கும் உள்ள தொடர்பு மர்மமானது. சாஸ்தா அல்லது கண்ணகி போல பௌத்ததுடன் தொடர்புள்ள ஆலயவழிபாடுகளில்தான் தெரளி மையமான இடத்தைப் பெறுகிறது.

நான் சிங்கப்பூர் சென்றிருந்தபோது சீனர்களின் பௌத்த ஆலயம் ஒன்றுக்குச் சென்றிருந்தேன். அந்த ஆலயமுற்றத்தில் நின்றிருந்த இலவங்க மரத்தில் இலைகளைப் பறித்துக்கொண்டிருந்தார்கள். எதற்காக என்று கேட்டபோது ஏதோ பூஜைக்காக பலகாரம்செய்யப்போகிறோம் என்று சொன்னார்கள். மேலே கேட்க மொழிச்சிக்கல்.

தெரளி இலைக்கு தாவரவியல் பெயர் Cinnamomum verum. சாதாரணமாக குற்றாலம் போன்ற மலைப்பகுதி ஊர்களில் கிடைக்கும். இலவங்கப்பட்டை  இலங்கைக்குரிய மரம் என்றும் அங்கிருந்தே மற்ற ஊர்களுக்குச் சென்றது என்றும் ஒரு கூற்று உண்டு. இன்றும் இலவங்கத்தின் 90 சத உற்பத்தி ஸ்ரீலங்காவிலேயே உள்ளது. கேரளத்திலும் இலவங்கத்தோட்டங்கள் சில உள்ளன.  கண்ணூர் மாவட்டத்தில் அஞ்சரக்கண்டி என்ற ஊரில் கிழக்கிந்தியக் கம்பெனியைச் சேர்ந்த லார்ட் பிரவுன் 1767ல் முதல் இலவங்க தோட்டத்தை அமைத்தாராம்

பைபிளில் மோஸஸ் இலவங்கத்தைலத்தை புனிதச்சடங்குகளுக்குப் பயன்படுத்தும்படிச் சொல்லியிருக்கிறாக குறிப்புகள் சொல்கின்றன. சீன, அராபிய வணிகர்களால் நறுமணப்பொருளாக இலவங்கம் ஐரோப்பாவுக்கு கொண்டுசெல்லப்பட்டது. ஐரோப்பாவில் மிக விரும்பப்பப்பட்ட நறுமணப்பொருளாக இருந்துள்ளது இலவங்கம்.

ஆனால் வேறெங்கும் அப்பம் தயாரிக்கிறார்களா என்று தெரியவில்லை. இலங்கையின் பௌத்த ஆலயங்களில் தெரளியப்பம் போன்ற ஏதாவது படையல்கள் புத்தருக்கோ போதிசத்துவர்களுக்கோ செய்யப்படுகின்றனவா?

மறுபிரசுரம் முதற்பிரசுரம் நவம்பர் 2009

முந்தைய கட்டுரைஜேகெ- கடிதங்கள் 3
அடுத்த கட்டுரைவெள்ளையானையும் மீட்கப்பட்ட கப்பலும்