3. ராம்தாஸ்,தேவதாஸ்
காந்தியின் மூன்றாவது மகன் ராம்தாஸ் ஹரிதாஸ் ,மணிலால் இருவரில் இருந்தும் மாறுபட்ட ஆளுமை கொண்டவர். ராம்தாஸ் காந்தியின் ஆசிரமங்களில் வளர்ந்தார். ராம்தாஸின் வளார்ப்பு பாதி காந்தியாலும் மீதி அவரது அண்ணன் மணிலாலாலும் நிறைவேற்றப்பட்டது. காந்தி ராம்தாஸை அவரது நம்பிக்கைகளின்படி பள்ளிக்கு அனுப்பவில்லை. முடிந்தபோதெல்லாம் அவரே கற்பித்தார். ராம்தாஸ் தென்னாப்ரிக்க ஆசிரமச்சூழலில் வளர்ந்தார்.
காந்தி தென்னாப்ரிக்காவிலிருந்து இந்தியா திரும்பியபோது ராம்தாஸுக்கு 16 வயது. சபர்மதி ஆசிரமத்தை உருவாக்கிய மணிலாலுக்கு உதவும்படி காந்தி அவரைக் கேட்டுக்கொண்டார். காந்தியின் ஆரம்பகால போராட்டங்களில் அவருடைய செயலர் போல ராம் தாஸ் பணியாற்றினார். காந்தி ராம்தாஸுக்கு எழுதிய ஏராளமான கடிதங்கள் அவரது தொகுக்கப்பட்ட ஆக்கங்களில் கிடைக்கின்றன.
ராம்தாஸுக்கு காந்தியின் ஆசிரமங்களில் காந்தி தன்னை நம்பிவந்தவர்களுக்கு விதித்த கடுமையான வறுமை மற்றும் உழைப்பு குறித்து விமரிசனம் இருந்தது. பலர் அவற்றை விரும்பியோ நம்பியோ ஏற்றுக்கொள்ளவில்லை என்று ராம்தாஸ் எண்ணினார். அதைப்பற்றி காந்தியிடம் அவர் விவாதித்தார்.
காந்தி பூனா ஆஸ்பத்திரியில் இருந்து 1924ல் ராம்தாஸுக்கு எழுதிய கடிதத்தில் ‘நீ உன்னைப்போலவே பிறருக்கும் கடுமையான சோதனைகளை வைக்கிறாய். ஆசிரமவாசிகளில் எவருமே என்னுடைய இலட்சியங்களைப் புரிந்துகொள்ளவில்லை என்றால்கூட வருந்துவதற்கேதுமில்லை. அப்படி அவர்கள் என் இலட்சியங்களை மீறி இருப்பதில் மகிழ்ச்சி அடைகிறார்கள் என்றால் மட்டுமே அவர்கள் சுய ஏமாற்றுக்காரர்கள் அல்லது நம்பிக்கை இல்லாதவர்கள் என்று பொருள். ஆனால் ஆசிரமத்தில் இருப்பவர்கல் பிறரை ஏமாற்றுவதற்காகவே அங்கே அப்படி நடித்துக்கொண்டிருக்கிறார்கள் என நீ சொல்லமாட்டாய் என நினைக்கிறேன். அப்படி இருந்தாலும் கூட நாம் நம்பிக்கையில் உறுதியாக இருப்போம். போராடுபவர்களுக்கு எப்போதும் இந்த உலகில் நம்பிக்கைக்கு இடமிருக்கிறது’ என்று எழுதினார்.
ராம்தாஸ் சிறுவயதிலேயே அலைபவராக, சுயமான தேடலும் தத்தளிப்பும் கொண்டவராக இருந்திருக்கிறார். காந்தியுடன் தொடர்பு கொண்டிருந்த போலே பாபா என்ற துறவியின் சுயசரிதைக்குறிப்புகளில் வார்தாவில் இருந்து அவர் இமயமலைக்குக் கிளம்பும்போது ராமதாஸும் உடன்வந்ததாக எழுதியிருக்கிறார். ஆப்ரிக்காவில் இருந்தபோது காந்தியின் நண்பரான ஜோச·ப் டோக்[ Joseph Doke] என்ற பாதிரியாரின் மகன் கிளெமெண்டிடம் ராமதாஸ் இசை கற்றிருக்கிறார்.
ராம்தாஸ் காந்தி
காந்தியின் வழிகளை ராம்தாஸ் நிராகரித்தார் என இன்று விக்கி கலைக்களஞ்சியம் போன்றவற்றில் காண்கிறோம். அது பிழை.காந்தி 1917ல் எஸ்தர் ·பியரிங் [Esther Fearing] என்பவருக்கு எழுதிய கடிதத்தில் ”ராம்தாஸ் ஒரு மேன்மையான சிறுவன். தென்னாப்ரிக்க போராட்டத்திற்கு அவனும் செல்லவிருக்கிறான்” என்று எழுதியிருக்கிறார். வழிகாந்தியின் அகிம்சைவழி அரசியல்போராட்டங்களில் ஆழமான நம்பிக்கை கொண்டிருந்தார் ராம்தாஸ். காந்தி அவரை 1917ல் தன் அண்ணா மணிலாலுடன் இருந்துகொண்டு இந்தியன் ஒப்பினியன் இதழை நடத்தும்படி அனுப்பினார். அங்கே மணிலாலுடன் பணியாற்றினார் ராம்தாஸ்.
பின்னர் இந்தியாவில் முக்கியமான போராட்டங்களை காந்தி அறிவித்தபோது தன் பிள்ளைகள் அதில் பங்கெடுக்க வேண்டுமென விரும்பி மணிலாலையும் ராமதாஸையும் இந்தியாவுக்கு அழைத்துக்கொண்டார். 1930கள் முதல் ராம்தாஸ் காந்தி நடத்திய எல்லா போராட்டங்களிலும் முன்னணிப்போராளியாக இருந்திருக்கிறார். தொடர்ச்சியான சிறைவாசமும் பலமுறை எதிர்கொள்ள நேர்ந்த தடியடி போன்றவையும் அவரது உடல்நிலையை பாதித்து கடைசிவரை அவரை அவதிக்குள்ளாக்கின. காந்தியின் பல போராட்டங்களிலும் பயணங்களிலும் ராம்தாஸ் கூடவே இருந்திருக்கிறார். வைக்கம் சத்யாக்ரகப் பேச்சுவார்த்தைகளில்கூட காந்தியுடன் அவர் இருந்தார்.
ஆனால் முழுநேர அரசியல்வாதியாக ராம்தாஸ் ஆவதை காந்தி விரும்பவில்லை. ராம்தாஸுக்கும் அந்த ஆசை இருக்கவில்லை. முப்பதுகளில் அரசியல் ஒரு தொழிலாகவும் இருக்கவில்லை. 1935 அப்ரல் 28 அன்று எழுதப்பட்ட ஒரு கடிதத்தில் ராம்தாஸுக்கு காந்தி எதேனும் ஒரு தொழிலைக் கற்றுக்கொள்ளும்படி ஆலோசனை சொல்கிறார். ராமதாஸ் தொடங்கிய ஒரு வணிகம் தோல்வியடைந்ததாக கஸ்தூர்பா சொல்லியிருந்ததைச் சொல்லி அது நல்லதே என்று சொல்கிறார் காந்தி. வணிகத்தில் கிடைக்கும் வருமானம் எல்லையற்றது. தொழிலில் உள்ள வருமானம் எல்லைக்குட்பட்டது. ஆனால் ஒரு தொழிலை கற்றுக்கொள்ளாமல் வணிகம்செய்யக்கூடாது என்கிறார் காந்தி
ராம்தாஸ் காந்தி
மகனிடம் காந்தி எந்த தொழிலும் சிறந்ததே என்றும் எதைவேண்டுமானாலும் கற்றுக்கோண்டு அதில் ஒரு நிபுணனாகவேண்டும் என்றும் சொல்கிறார். அச்சுத்தொழில் சிறந்தது என்கிறார். அதேபோல கைத்தொழில்களையும் கற்றுக்கொள்ளலாம் என்கிறார். செருப்பு தைத்தல் துணிகளை தைத்தல் இரண்டும் எளிதானவை, தைத்தால் மட்டும் போதும் என்று சொல்கிறார். இப்படி ஒரு தொழிலைக் கற்றுக்கொண்டபின் நீ எந்த வணிகத்திலும் ஈடுபடலாம் என்று சொல்லும் காந்தி அது உனக்கு தன்னம்பிக்கையும் தொழிலும் வணிகமும் அடிப்படையில் என்ன என்ற புரிதலையும் அளிக்கும் என்று விளக்குகிறார்.
”நீ எதிலாவது ஒன்றில் நிபுணன் ஆகவேண்டும். நீ ஒரு தொழிலை நன்றாகத் தெரிந்துகொண்டாயென்றால், அது நாவிதத் தொழிலாக இருந்தாலும் கூட நீ சிறப்புறுவாய்” என்று கடிதத்தை முடிக்கிறார் காந்தி . காந்தியின் கடிதங்களில் இருந்து ஒன்று தெரிகிறது. ராம்தாஸ் காந்தியின் துறவு நம்பிக்கைகளை ஏற்றுக்கொள்ளவில்லை என்பது இயல்பானதே. அதை காந்தியும் புரிந்துகொண்டிருக்கிறார். ராம்தாஸ்
ஒரு நேர்மையான வணிகனாக ஆவதை அவர் வரவேற்றிருக்கிறார்.
ஆனால் காந்தி தேசத்தை வழிநடத்தியவராக இருந்தாலும் தன் தேர்வினால் வறுமையில் வாழ்ந்தவர். ராம்தாஸுக்கு தன் தொடர்புகள் மூலம் காந்தி உதவியிருக்க முடியும். உதாவக்கரையான ஹரிலாலுக்கு இரண்டுமுறை காந்தி அப்படி உதவிருக்கிறார். ஆனால் அவர் அதை ராம்தாஸுக்காகச் செய்யவில்லை. ராம்தாஸ் தன் சொந்தத் திறமையால் முன்னேறும்படிச் சொல்கிறார் காந்தி. ஆனால் 1931ல் மும்பைக்குச் சென்று வணிகம் செய்து தன் சொந்தக்காலில் நிற்க ராம்தாஸ் முடிவெடுத்தபோது காந்தி அதை விரும்பவில்லை. ராம்தாஸ் தேசப்போராட்டத்தில் ஈடுபட வேண்டும் என்று சொன்னார். தேசப்போராட்டத்தை நிகழ்த்திக்கொண்டே செய்யும் வணிகம் போதும் என்று சொல்கிறார், ஆகவேதான் கைத்தொழிலை காந்தி சிபாரிசு செய்கிறார்.
ஒருவர் பொருளியல் ரீதியாக சுயச்சார்புடன் இருக்கவேண்டும், ஆகவே வேலைசெய்யவேண்டும் என்பது காந்தியின் கொள்கை. 1936ல் நேரு தன் பொருளியல் சிக்கல்களை காந்திக்கு எழுதும்போது காந்தி அவரிடம் ஏதாவது வேலைதேடிக்கொள்ளும்படி அறிவுரை சொல்லி கடிதம் எழுதியதை காணலாம். 1929லேயே நேரு இந்திய தேசிய காங்கிரஸின் தலைவராக ஆகிவிட்டார் என்பதை நினைவுகூர வேண்டும். தொழிலையும் தேசக்கடமைகளையும் சேர்த்தே செய்யலாம் என்பதே காந்தியின் எண்ணம்.
1948ல் காந்திகொலைசெய்யப்பட்டபோது ராம்தாஸ் காந்தியின் ஈமக்கிரியைகளைச் செய்து அஸ்தியை கங்கையில் கரைத்தார். ஹரிலால் இருக்குமிடம் தெரியவில்லை. மணிலால் தென்னாப்ரிக்காவில் இருந்தார். சுதந்திரத்துக்குப் பின்னர் அதிகார அரசியலுக்கு வர ராம்தாஸ் விரும்பவில்லை. காரணம் காந்தி அதை விரும்பியிருக்கவில்லை. காந்தி சுட்டிக்காட்டிய எவரும் இந்தியப்பிரதமாரக முடியும் என்ற நிலை இருந்தது. கடைசிக் கணம் வரை காங்கிரஸை எதிர்த்த அம்பேத்காரைக்கூட காந்தி அமைச்சராக ஆக்கினார். ஆனால் தன் மைந்தர்களை அரசியலதிகாரத்தில் புகுத்தவில்லை. அவர்கள் அரசியல் போராளிகளாக மட்டுமே இருக்கவேண்டும் என விரும்பினார்
ஆகவே ராம்தாஸ் நாக்பூரில் டாட்டா எண்ணை ஆலையில் சாதாரண நிர்வாகியாகச் சேர்ந்து பணியாற்றினார். அவர் வார்தாவின் சேவாஸ்ரம் ஆசிரமத்தின் பொறுப்பை தன் மனைவி நிர்மலா பென்னுடன் ஏற்று அதை நடத்தினார். ஆசிரமச்செலவுகளை ராம்தாஸ் தன் உழைப்பின் மூலம் ஈட்டிய வருவாயிலேயே நடத்தினார்.
ராம்தாஸ் 1969ல் இறப்பது வரை வார்தாவில் அமைதியான கிராமநிர்மாண ஊழியராகவே பணியாற்றினார். காந்தியைப் பற்றியும் கஸ்தூர்பா பற்றியும் முக்கியமான நினைவுகளை எழுதியிருக்கிறார். அவரது மனைவி நிர்மலா பென் தன் வாழ்நாளின் இறுதிவரை தீவிரமான சமூகசேவையாளராக, அதிகாரத்துக்கு எவ்வகையிலும் நெருக்கமாக ஆகாதவராக பணியாற்றினார். வார்தா ஆசிரமம் வழியாக உலகம் முழுக்க உள்ள முக்கியமான தலைவர்களிடம் அவர்களுக்குத் தொடர்பிருந்தது
என்றாலும் மிக எளிமையான வாழ்க்கையையே அவர்கள் வாழ்ந்தார்கள்.
ராம்தாஸ் காந்தியின் எளிய வாழ்க்கையை நிராகரித்துவிட்டதாக ஒரு கருத்து பலரால் சொல்லப்படுகிறது. ராம்தாஸ் காந்தியின் அடையாளத்தைப் பயன்படுத்திக்கொள்ள விரும்பவில்லை அவ்வளவுதான். எளிமையை துறவு வரைக் கொண்டு செல்ல அவர் நினைக்கவில்லை. ஆகவே உழைத்து வாழ்ந்தார். ஆனால் எந்நிலையிலும் காந்தியின் அடிப்படைக் கொள்கைகளில் சமரசம் செய்துகொண்டவரல்ல அவர். அவர் எழுதிய கட்டுரைகளில் அதை தெளிவாகவே குறிப்பிட்டிருக்கிறார்.
தன் அம்மாவைக்குறித்த அழகிய, நெகிழ்ச்சியான கட்டுரை ஒன்றில் ராம்தாஸ் பீனிக்ஸ் ஆசிரமத்தில் சிறுவர்களாக இருக்கும்போதே தன் தந்தையும் தாயும் வாழ்ந்த வாழ்க்கையில் இருந்த இலட்சியவாதம் தன்னை ஆழமாக கவர்ந்திருந்தது என்கிறார். தங்களை காந்தி பள்ளிக்கு அனுப்பாதது அவரது இலட்சியவாதத்துக்கு இயைந்ததே என்றும் அதைப்பற்றி கஸ்தூர்பா கவலைப்பட்டார் என்றும் ராம்தாஸ் சொல்கிறார். ஆறுதல் அளிக்கவும் பணிவிடை செய்யவும் போராட்டங்களை முன்னின்று வழிநடத்தவும் வல்லமை வாய்ந்த அசாதாரணமான பெண்மணியாக இருந்தார் கஸ்தூர்பா. அவரது மன உறுதி அபாரமானது என்று ராம்தாஸ் சொல்கிறார்.
காந்தி 1948ல் கொலைசெய்யப்பட்டபோது ராம்தாஸ் கொலையாளியான நாதுராம் கோட்ஸே தண்டிக்கப்படக்கூடாது என்றும், அது காந்தியின் வழி அல்ல என்றும் வெளிப்படையாக அறிவித்தார். அவரும் மணிலாலும் இந்திய கவர்னர் ஜெனரலாக இருந்த ராஜாஜிக்கு எழுதிய கடிதத்தில் கோட்ஸே மன்னிக்கப்படவேண்டும் என்றும் அதுவே காந்தியின் நினைவுக்கு உகந்ததாக இருக்கும் என்றும் கூறினார்கள். அந்த மனு ராஜாஜியால் நிராகரிக்கப்பட்டது.
ஆனால் 1949 மே மாதம் ஒன்றாம் தேதி ராம்தாஸ் தனிப்பட்ட முறையில் கோட்ஸேவுக்குக் கடிதம் எழுதி காந்தியின் வாரிசு என்ற முறையில் அவரை தான் மன்னித்துவிட்டதாகவும், காந்தி தனக்களித்த இலட்சியங்களின் அடிப்படையில் அதைச் செய்வதாகவும் தெரிவித்தார். கோட்ஸேவைச் சந்திக்க ராம்தாஸ் அனுமதி கோரியிருந்தாலும் அது மறுக்கப்பட்டது. சிம்லா சிறையில் இருந்து கோட்ஸே ராம்தாஸுக்கு பதில் எழுதி அவரது கருணைக்கு நன்றி சொல்லியிருந்தார். தன்னுடைய தீவிரமான தேசிய உணர்ச்சியாலேயே அதைச் செய்ததாகவும் அதற்காக வருத்தப்படவில்லை என்றும் சொன்னார்.
காந்தியை மிகக் கடுமையாக நிராகரித்து ஓஷோ ரஜ்னீஷ் கருத்து சொன்னபோது காங்கிரஸார் அதை அரசியல் பிரச்சினையாக ஆக்கினார்கள். அவருக்கு எதிராக போராட்டத்தை நடத்தினார்கள். ஆனால் ஓஷோவின் கருத்துக்கள் பிழையானவை, தகவல்கள் தவறானவை என்று சொன்ன ராம்தாஸ் காந்தியை விமரிசனம்செய்ய எவருக்கும் உரிமை உண்டு என்று சொல்லி ஓஷோவை ஆதரித்தார். உண்மையை விளக்கும்பொருட்டு ரஜ்னீஷை தன் வார்தா ஆசிரமத்துக்கு விருந்தினராக அழைத்து தங்கவைத்தார்.
ராம்தாஸுக்கு சுமித்ரா, கனு, உஷா என்று மூன்று குழந்தைகள். அவர்களில் கனு காந்தி அமெரிக்காவின் எம்.ஐ.டி -ஹார்வார்டில் அறிவியல் கற்று அமெரிக்காவில் அறிவியலாளராகப் பணியாற்றினார்.
காந்தியின் கடைசி மகன் தேவதாஸ் காந்தி கிட்டத்தட்ட மணிலாலால் வளர்க்கபப்ட்டவர். காந்தியின் நெருக்கமான உதவியாளராகவும் கிட்டத்தட்ட நண்பராகவும் இருந்தார் தேவதாஸ். காந்தியின் பிற்கால வாழ்க்கையின் பெரும்பாலான தருணங்களில் தேவதாஸ் உடனிருந்திருக்கிறார். போராட்டங்களில் சிறைசென்றிருக்கிறார். அவருடன் காந்தியக் கோட்பாடுகளை விவாதித்திருக்கிறார். காந்தி தவறுசெய்கிறார் என்று தோன்றிய தருணங்களில் கடுமையாக அவரை கண்டித்தும் இருக்கிறார்.
தேவதாஸ்
காந்தியின் ஆளுமை ஆழமாக பதிந்த மகன் என தேவதாஸைச் சொல்லலாம். காந்தி ஆசைப்பட்டபடியே எந்தவிதமான அதிகாரத்தையும் அடைய எண்ணாமல் கடைசிக்கணம் வரை சலிப்பில்லாத அரசியல் போராளியாகவே தேவதாஸ் வாழ்ந்தார். தேசிய விடுதலைப் போராட்டத்தில் தேவதாஸ் வகித்த பங்கு முக்கியமானது. புகழ்பெற்ற பூனா ஒப்பந்தத்தில் காந்தியின் சார்பில் கையெழுத்திட்டவர் தேவதாஸ்தான்.
தேவதாஸ் ராஜாஜியின் நெருக்கமான சகாவாக இருந்தார். தேவதாஸுக்கு ராஜாஜி நிறைய கடிதங்கள் எழுதியிருக்கிறார். மெல்ல தேவதாஸ் ராஜாஜியின் மகள் லட்சுமியுடன் காதல் கொண்டார். அந்தத் தகவல் காந்திக்குத் தெரிந்ததும் காந்தி தேவதாஸை ஐந்துவருடம் காத்திருக்கச் சொன்னார். காரணம், அப்போது லட்சுமிக்கு பதினைந்து வயதுதான் ஆகியிருந்தது. லட்சுமியும் தேவதாஸும் சந்தித்துக்கொள்ளவே கூடாது என்று காந்தி ஆணையிட்டார். அதன்படி அவர்கள் காத்திருந்தனர். 1933ல் தேவதாஸ் காந்தியின் ஆசியுடன் லட்சுமியை மணந்தார்.
தேவதாஸ்,லட்சுமி
தேவதாஸ் காந்தியின் விருப்பப்படி ஹிந்துஸ்தான் டைம்ஸ் நாளிதழில் ஆசிரியராகச் சேர்ந்தார். 1924ல் அந்த நாளிதழ் தொடங்கப்பட்டபோதே தேவதாஸ் அதன் ஆசிரியர் குழுவில் இருந்தார். பின்னர் மரணம் வரை அந்த நாளிதழின் ஆசிரியராக பணியாற்றினார். தேவதாஸ் சமரசமற்ற சமூக, அரசியல் விமரிசகராக இருந்தார். காந்திய கொள்கைகளைப் பரப்புவதற்காக பல்வேறு நாடுகளில் பயணம்செய்திருக்கிறார்.
ராஜ்மோகன் காந்தி
தேவதாஸுக்கு நான்கு குழந்தைகள். மூத்தவரான ராஜ்மோகன் காந்தி இந்தியாவில் புகழ்பெற்ற வரலாற்றாசிரியர். பல்வேறு வெளிநாட்டு பல்கலைகழகங்களில் ஆசிரியராகப் பணியாற்றிய ராஜ்மோகன் காந்தி சர்வதேச விருந்துகளையும் பெற்றவர். இந்திய ராஜ்யசபை உறுப்பினராகப் பணியாற்றியிருக்கிறார். காந்தியைப் பற்றி இருநூல்களை ராஜ்மோகன் எழுதியிருக்கிறார். ‘நல்ல படகுக்காரர் -காந்தியின் சித்திரம்’ [The Good Boatman: A Portrait of Gandhi] ராஜாஜி,பட்டேல் ஆகியோரின் வாழ்க்கைவரலாறுகளையும் எழுதியிருக்கிறார்
தேவதாஸ் காந்தியின் இன்னொரு மகனாகிய கோபாலகிருஷ்ண காந்தி இப்போது வங்காள கவர்னராக இருக்கிறார். காந்திய நெறிகளி ல் நம்பிக்கை கொண்ட அரசியல்வாதியாக அறியப்படுகிறார். நாவலாசிரியரும் கவிஞருமான கோபால் காந்தி இந்திய ஆட்சிபப்ணியில் பணியாற்றியபின் தென்னாப்ரிக்காவிலும் வேறுநாடுகளிலும் தூதராக இருந்தார்.
ராமச்சந்திர காந்தி
தேவதாஸின் மூன்றாவது மகன் ராமச்சந்திர காந்தி இந்திய சிந்தனை மரபின் குறிப்பிடத்தக்க பேரறிஞர்களில் ஒருவர். ஆக்ஸ்போர்ட் பல்கலையின் பேராசிரியர் பீட்டர் ஸ்டிராஸனின் மாணவர் ராமச்சந்திர காந்தி. ஹைதராபாத் பல்கலையின் தத்துவத் துறையை நிறுவியவர் அவரே. இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் புகழ்பெற்ற பல்கலைகளில் தத்துவப்பேராசிரியராக பணியாற்றியிருக்கிறார். ராமச்சந்திர காந்தியின் மகள் லீலா காந்தி இன்று புகழ்பெற்ற சமூக வரலாற்றாசிரியராக கருதப்படுகிறார். சிகாகோ பல்கலையின் ஆசிரியராக இருக்கிறார்.
காந்தியிந் வாரிசுகள் இன்று உலகம் முழுக்க பல்வேறு தளங்களில் வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள். ஒருவர்கூட காந்தியின் புகழுக்கு களங்கம் உருவாக்குபவராக இல்லை என்பதே உண்மை.