சரணாகதி, காளி:கடிதங்கள்

அன்புள்ள ஜெயமோகன்,

“கடைசியாக, சரணாகதி என்று சொல்லலாம். ஆனால் அதை அடைவதெல்லாம் எளிதல்ல. சரணாகதிமூலம் ஞானம் வராது. ஞானம் மூலமே சரணாகதி வரமுடியும். சாதாரண மனிதர்களால் ஒருபோதும் பூரண சரணாகதியை அடைய முடியாது. எந்நிலையிலும் அவனது அகங்காரமே முன்னிட்டு நிற்கும். அகங்காரத்தை கரைத்துக்கொள்வதெல்லாம் எளிய விஷயங்கள் அல்ல. சும்மா
சொல்லிக்கொள்ளலாம், சரணாகதி அடைந்துவ்ட்டேன் என்றெல்லாம்.”

நீங்கள் கூறியது முற்றிலும் உண்மை. இன்று சரணாகதியைப் பேசுபவர்கள் பெரும்பாலும் சரணாகதி அனுஷ்டித்தப் பிறகு வரும் “மஹா விஸ்வாசம்” என்கிற கடினமான வாழ்கையை, வசதியாக மறந்துவிடுகிறார்கள். சரணாகதிக்குப் பின் வரும் இந்த வாழ்க்கையில் பாவங்கள் செய்ய முடியாது. அப்படியே செய்தாலும், அறிந்து செய்தவற்றை கழிக்க வேண்டும். அறியாமல் செய்தவை மன்னிக்கப் படலாம். இப்படி சாஸ்திரங்களின் படி பாவங்களற்ற வாழ்க்கையை வாழ்வதும், அதற்குரிய மனோபாவத்தை வளர்த்துக் கொள்வதும் என்னைப் பொறுத்தவரையில் ஞானம் பிறந்ததற்கு சமம். நிச்சயமாக சரணாகதி ஒரு துருப்புச் சீட்டு கிடையாது. முதலில் அனுஷ்டிக்கப்படும் சரணாகதியும், ஆச்சர்யனும், காலக்ஷேபங்களும், இந்நிலையை அடைய ஒருவனை வழிநடத்தக் கூடியவைகளே. இப்படி ஒருவன் வாழ்வதற்கு சாத்தியம் வெகு குறைவு. ஆனால்,  இப்படி வாழ முற்பட்டவனுக்கு நாராயணன் தன்னுடைய தயையால்  மோக்ஷம் அருளுகிறான். இன்று சரணாகதியைப் பரிந்துரைப்பவர்கள், “அப்புறம் என்ன?” என்ற கேள்விக்கு விடை தேடினால் சுலபமாகவே இந்த விஷயத்தை புரிந்து கொள்ளலாம்.

– சீனு.அன்புள்ள சீனு

உண்மை. நான் சொன்னதும் ஏறக்குறைய இதுவே. சரணாகதி என்பது ஒருவன் லௌகீகத்தில்  இருந்துகொண்டு சாதாரணமாகச் செய்யத்தக்க ஒன்றல்ல. அது லௌகீகத்தைப் புரிந்துகொண்டு அதன் மெய்நிலையாக அறியத்தக்க ஒன்றே.

சரணாகதி அடை என்று  அர்ஜுனனிடம் கிருஷ்ணன் சொன்ன பின் அர்ஜுனன் மேலும் கேட்கும் ஐயங்கள் முக்கியமானவை. அந்த ஐயங்களில் இருந்து எளியவர்கள் தப்பவே முடியாது

ஜெ

வணக்கம் ஐயா,
தங்களின் ‘பொம்மையும் சிலையும்’ பதிவு வாசித்தேன்.அதில் தாங்கள் குறிப்பிட்டிருக்கும் பன்றியும்-குட்டிகளும் அனுபவப் பதிவை படித்ததும், சட்டென்று நினைவிற்கு வந்தது ‘ஆயிரம் கால் மண்டபத்தில்’ , ‘அன்னை’ எனும் சிறுகதை.நான்கைந்து ஆண்டுகள் முன் நான் படித்த அக்கதையின் உக்கிரமான காட்சிகள் இன்றும் புதிய புரிதல்களை வசீகரித்துக் கொண்டே இருக்கின்றது.ஆனால், குழம்பிய தயக்கங்களுடனே புரிதல் திறப்பதுபோல் தோன்றி தோன்றி மறைகின்றது.இப்பதிவில் ஒரு சாவி கிடைக்கும் என நினைத்தேன்.தங்களின் உந்துதல் அவ்வனுபவமாகவே இருக்க வேண்டும் என்ற உற்சாகம் மட்டுமே கிடைக்கிறது.

கதையில், அப்பன்றி தன் குட்டியையே சாப்பிடுவது போன்ற கனவுடன் எழும்புகிறாள்.தன்னிலிருந்து விளைந்த ஒரு சுதந்திர தன்னியக்கத்தை வியக்கையில், அக்குழந்தையைக் கொஞ்சி ரசிக்கிறாள்.பின் அதை எடுத்து செல்லும் வழியில், அடர்ந்த இருளின் அமைதியில் தூங்கும் ஒவ்வொரு குழந்தையும் தெரித்த பாலை அருந்தி, சிரித்து தூங்குகிறது.இறுதியாக, தன் குழந்தையையே தின்று அமரும் போது, தெய்வமாக ஆகிறாள்.என்றுமே அம்மா தன் குழந்தை மீது உயிரை மிஞ்சிய பாசமும் உரிமையும் வைத்திருக்கிறாள்.அது ஒருவகை சுய அராதனையாகிறதோ.மேலும், தன் குழந்தையை அரவணைக்க முற்படும் போது, வேறு எந்த குழந்தையின் மீதும் வெறுப்பு கசிவதை அறியாமலாகிறாளோ.அடுத்தவர்களை இகழ்ந்தாவது, நம்மை புகழ்வது தானே அம்மாவின் இயல்பு.அதனால், அவள் அந்த இயல்பின் காரணத்தை விழுங்கிவிட்டால், உலகின் அனைத்துயிர்க்கும் அன்னையாகிறாளோ.

குழந்தை ஒரு கலைப்படைபின் படிமமாகக் கூட எடுத்துக் கொள்ளலாம் போல தோன்றுகிறது.எங்கோ எதையோ புரிந்துகொள்ள முடியாமல் சிந்தனை மோதுகின்றது.எதாவது ஒரு கதவை சுட்டுவீர்களானால் ஒரு புதிய உலகம் விரியக்கூடும்.தங்களின் பதிலை ஆர்வத்துடன் எதிர் நோக்குகிறேன்.

அன்புடன்,
அனு.

அன்புள்ள அனுக்ரகா

அந்தக் கதையிலும் ஒரு பன்றிதான் வரும் என நினைக்கிறேன், தன் குழந்தை ஒன்றை கடித்து கிழித்து தின்று பசியாறும் பன்றி…இல்லையா?

பன்றி நிறைய குட்டிபோட்டு நடக்க முடியாதபடி இருந்தால், பிற குட்டிகளுக்கு பால்கொடுத்து வளர்ப்பதறாக இருப்பதில் நோஞ்சான் குட்டிப்பன்றியை தின்றுவிடும். நாய்களும் புலியும் எல்லாமே செய்யக்கூடியது அது

தாய்மையின் இன்னொரு முகம்! அணைக்கும் அன்னைபோலவே அழிக்கும் அன்னை. இயற்கையில் நாம் காணும் இரு பாவனைகள் இவை.

ஏ.எல்.பாஷாம் அவரது வொண்டர் தட் வாஸ் இன்டியா என்ற நூலில் இதைப்பற்றி சொல்கிறார். கொடூரமான அன்னை என்ற உருவகம் பிரபலமாக இருப்பது மேற்குக் கடலோர மாநிலங்களில். இவை வருடம் தோறும் கொடுமையான புயல்களால் தாக்கபப்டுகின்ரன. எந்த மேகம் மழை அளித்து புரக்கிறதோ அதுவே அழிக்கவும்செய்கிறது. அதை வெறுக்க முடியாது. வழிபடவே முடியும். அந்த மனநிலையே காளியை உருவாக்கியது என்கிறார் பாஷாம்

எளிமையான விளக்கமாக இருக்கலாம். ஆனால் இயல்பான ஒரு விஷயம் இது. இயற்கையின் மகத்தான தோற்றங்களில் இருந்தே இறையிருவகங்களை மனிதர்கள் அடைந்தார்கள். அதில் ஒன்று பெருங்கருணையும் பெருங்கொடுமையும் கொண்ட அதன் இரட்டைமுகம்

இந்த உருவகம் பின்னர் வளர்ச்சி அடைந்தது. காளியின் கொடூரம் நம் மரபில் நான்கு வகைகலில் புரிந்துகொள்ளப்படுகிறது

1. தீமைகளை அழிக்கையில் அலகிலாத ஆற்றல் கொள்ளும் அளவிடமுடியாத உக்கிரம்.

2. இருண்ட குணமாகிய தமோகுணத்தை வென்று [அதுவே எருமையாக சித்தரிக்கப்படுகிறது] நற்குணமாகிய சத்குணத்தை உருவாக்கிக் கொள்ள வன்முணமாகிய ரஜோ குணத்தை பயன்படுத்தவேண்டும். அந்த உக்கிரமே காளி

3. காமத்தை வெல்ல அழகுக்குப் பதில் கோரமும் அன்புக்கு பதில் உக்கிரமும் கொண்ட பென்மைத்தோற்றம் உதவும். ஆகவே காமவினாசினி என்று காளி வழிபடப்படுகிறாள்

4  பிரபஞ்சம் முழுக்க நிறைந்திருக்கும் ஆற்றல் அதன் அதியுக்கிரமான வடிவிலேயே மானுடப்பிரக்ஞைக்கு தென்பட முடியும். அந்த தோற்றமே காளி. அதன் முன் சரணாகதியடைபவன் மட்டுமே அதன் கருணையை உணர முடியும்

இவ்வாறு இன்று காளியின் உருவம் ஒரு பெரிய தத்துவ படிமமாக உள்லது
அன்னை கதையில் எந்தப்பெண்ணுக்குள்ளுமிருக்கும் காளி வெளிவரும் ஒருகணம் உருஆக்கப்பட்டுள்ளது

ஜெ

முந்தைய கட்டுரைகாந்தி, கிறித்த்வம், தாந்த்ரீகம்- கடிதங்கள்
அடுத்த கட்டுரைதிருத்தம்