ஆர்.எஸ்.எஸ், கோயில்-கடிதங்கள்.

அன்புள்ள ஜெயமோகன்,

சௌக்கியமா?

உங்கள் “எனது அரசியல்” பதிவு மிக நன்றாக இருந்தது. உங்கள் பின்புலத்தைப்
பற்றி உங்கள் பேச்சிலிருந்தும் எழுத்திலிருந்தும் புரிந்து கொள்ள
முடிந்தாலும், அதை நீங்களே விளக்குவது வேறு மாதிரி இல்லையா?

ஆர்.எஸ்.எஸ். பற்றி எனக்கு அரசல் புரசலாகவே தெரியும். உண்மையை சொல்லப்
போனால் எனக்கு ஆர்.எஸ்.எஸ்.சுக்கு எதிரான முன் முடிவுகள் உண்டு. அங்கங்கே
படிக்கும் சில பல செய்திகளும் அந்த முன் முடிவுகளையே
உறுதிப்படுத்துகின்றன. அயோத்தியில் மசூதி இடிக்கப்பட்டதற்கு ஆர்.எஸ்.எஸ்.
முக்கியமான காரணம். கோல்வால்கர் முஸ்லிம்களை வெறுப்போடு – குறைந்த பட்சம்
சந்தேகக் கண்ணோடு பார்த்த மாதிரிதான் தெரிகிறது. ஆனால் அதே சமயம்
ஆர்.எஸ்.எஸ்.சில் பணி புரியும் சில தனி மனிதர்களைப் பற்றி எனக்கு உயர்வான
எண்ணம் உண்டு. அவர்களையே நேரடியாக கேள்வி கேட்கும் சந்தர்ப்பம் எனக்கு
வாய்க்கவில்லை. தேசபக்தி உடையவர்கள், ஆனால் அவர்களின் தேசபக்தி
வெறுப்பின் மேல் எழுப்பப்பட்டிருக்கிறது என்றுதான் எனக்கு தோன்றுகிறது.
ஆர்.எஸ்.எஸ்.சின் கொள்கைகள், கோட்பாடுகள் ஆகியவற்றைப் பற்றி எதுவுமே
தெரியாத நான் அவர்களைப் பற்றி அந்த காலத்தில் ஹிந்து பேப்பரிலும் இந்தியா
டுடேவிலும் வந்த செய்திகளை வைத்து மட்டும் முடிவெடுத்துவிட்டேனோ என்று
சந்தேகம் உண்டு, ஆர்.எஸ்.எஸ்., கோல்வால்கர் பற்றி உங்கள் புரிதல் என்ன?
நேரம் இருந்தால் கொஞ்சம் எழுதுங்களேன்!

ஹிந்து மதம் மற்றும் ஏசுவின் தாக்கம் உங்களிடம் நிறைய இருக்கிறது என்று
தெரிகிறது. இஸ்லாம், குரான், முகமது நபியின் தாக்கமும் உண்டா? (நான்
குரானைப் படித்ததில்லை, முகமதைப் பற்றி எதோ எட்டாவதில் சரித்திரப்
புத்தகத்தில் படித்ததைத் தவிர வேறு எதுவும் அறியாதவன்)

சாதியை வைத்துக் கொண்டு என்ன செய்வது என்ற பதிவும் நன்றாக இருந்தது.
அதில் ஒரு வரியில் எனக்கு ஒரு சந்தேகம். // ஆனால் சாதி அழியாததா?
அழியப்படக்கூடாததா? இரண்டுக்குமே நான் இல்லை என்றே பதில்சொல்வேன். //
சாதி அழியக் கூடாதது என்று ஏன் சொல்கிறீர்கள்? ஜாதியின் பாசிடிவ் கூறுகளை
விட நெகடிவ் கூறுகளே அதிகம் – அதுவும் இன்றைய சமுதாயத்தில் என்று நீங்களே
சொன்ன ஞாபகம் இருக்கிறது. ஒரு வேலை என் தவறான புரிதலோ? நெகடிவ் கூறுகள்
அதிகம் உள்ள ஒரு விஷயம் ஏன் அழியக் கூடாது? அழியாது, அது நம் மனதின்
அடியில் ஊறிவிட்டது என்று சொன்னால் புரிந்துகொள்ள முடிகிறது. ஆனால்
அழியப்படக்கூடாதது என்பது புரியவில்லை.

உங்களுக்கு இரண்டு தளங்களை சிபாரிசு செய்கிறேன். முதல் தளம் – <a
href=”http://thamizham.net/naalorunool-u8.htm“>தினமும் ஒரு நூல்</a>
இங்கே பழைய பத்திரிகைகளை ஸ்கேன் செய்து வைத்திருக்கிறார்கள். பிரசண்ட
விகடன், தமிழரசு கழகத்தின் ஒரு பத்திரிகை (பேர் மறந்துவிட்டது,
கா.மு.ஷெரிஃப் ஆசிரியர்) மாதிரி நிறைய கிடைக்கிறது. உங்களுக்கு
பிடிக்கலாம். தமிழரசு கழகத்தின் பத்திரிகை நான் விரும்பிப் படிக்கும்
ஒன்று. அன்றைய அரசியல், தமிழக-ஆந்திர எல்லைத் தகராறு ஆகியவற்றுக்கு இது
ஒரு நல்ல கண்ணாடி. முக்கியமான ஆவணம்.

<a href=”http://azhiyasudargal.blogspot.com“>அழியாச்சுடர்கள்</a>
பதிவில பல “பழைய” எழுத்தாளர்களின் சிறுகதைகள் கிடைக்கின்றன. எனக்கு
மிகவும் பிடித்த தளங்களின் ஒன்று. மௌனியின் தீவிர ரசிகர் இவர்.
காப்பிரைட் பிரச்சினை எதுவும் இன்னும் வரவில்லை என்று நினைக்கிறேன். ;-)
உங்கள் தளத்தில் இந்த முயற்சியைப் பற்றி எழுதினால் சிறுகதைகளை தேடி
கொண்டிருக்கும் 4 பேருக்கு ஜன்ம சாபல்யம் கிடைக்கலாம்.

அன்புடன்
ஆர்வி

அன்புள்ள ஆர்வி,

முதல் ஐயம்  என்ற வரிகள். அதில் நான் சொல்லியிருப்பதை நீங்கள் தலைகீழாகப் புரிந்துகொண்டிருக்கிறீர்கள். என்னுடைய சொற்றொடர்கள் உருவாக்கும் பொருட்குழப்பம்தான். ஆனால் அதைத்தொடர்ந்த வரிகளில் நான் உத்தேசிக்கும் பொருள் இருப்பதாகக் காண்கிறேன். என் வரிகளை  என்று மாற்றிக் கொள்கிறேன். சரிதானே? சாதி நிலப்பிரபுத்துவகால ஒழுங்கமைப்பு. நிலப்பிரபுத்துவம் எஞ்சும்வரை அதுவும் எஞ்சும்- இதுவே என் கருத்தாக கட்டுரையில் சொல்லியிருக்கிறேன்.

ஆர்.எஸ்.எஸ் போன்ற அமைப்புகளைப் பற்றி போகிறபோக்கில் ஒருவரிக் கருத்துக்களைச் சொல்லிவிட முடியாது. அவை பல லட்சம் மனிதர்களின் பங்களிப்புடன் நெடுங்காலம் வரலாற்றில் பணியாற்றியவை. சிக்கலான உள்ளியக்கங்கள் கொண்டவை. அனைத்துக்கூறுகளையும் ஆராய்ந்து விரிவாகவே எழுத வேண்டும். ஆர்.எஸ்.எஸ்சின் கொள்கைகளில் உள்ளோட்டடமாக இருந்துகொண்டிருக்கும் வெறுப்பும் ஐயமும், அவர்களில் ஒருசாராரிடம் இருக்கும் உக்கிரமான பழமைவாதமும் இந்தியாவுக்கு இன்று ஒவ்வாதது என்றே எண்ணுகிறேன்.

நான் பைபிளை தினமும் படிப்பவன். அது எனக்கு மகத்தான ஊற்று. இந்து ஞானமரபின் பெருநூல்களில் உள்ள ஆழமான ஈடுபாடுஎ நக்கு பைபிளில் உண்டு. குர்.ஆனை வாசித்திருக்கிறேன். வரலாற்று ஆர்வத்துடன். குர்.ஆன் ஒரு காலகட்டத்தில் மக்கலை ஒருங்குதிரட்ட உருவான நூல். மகத்தான நீதியுணர்வின் ஒளி வெளிப்படும் நூல். ஆனால் அதில் ஆன்மீகமாக, தத்துவார்த்தமாக மன எழுச்சியை ஊட்டும் எதுவும் இல்லை. மிகப்பெரும்பாலும் அது ‘கூடாது’ களை சொல்லக்கூடிய நெறிநூல் மட்டுமே. நம்முடைய மரபின் அளவீட்டில் பைபிள் ஒரு சுருதி. என்றும் அழியாத விவேகத்தைச் சொல்வது. குர்.ஆன் ஒரு ஸ்மிருதி. காலத்துடன் இணைந்த நீதிநெறிகளைச் சொல்லக்கூடியது.

ஜெ

அன்பு ஜெ,

மக்களால் மிகவும் புனிதமாகக் கருதப்படும் அர்ச்சகர் பணியில் உள்ள ஒரு பிராமணர் கோவிலின் கர்ப்ப கிரஹத்ததுக்குள்ளேயே காம லீலையில் ஈடுபட்டிருப்பது நாத்திகனான என் மனதையே கூட மிகவும் சஞ்சலப்படுத்துகிறது. அர்ச்சகர்கள் கோவிலை வெறும் ஒரு பணியிடமாகவும் தம் பணியினை வெறும் ஒரு தொழிலாகவும் பார்ர்க்கும் போக்கு வந்‌துவிட்டதோ எனத் தோன்றுகிறது. அப்படியேயாயினும் கூட எந்‌த ஒரு தொழில் செய்பவனும் தன் பணியிடத்தை புனிதமாகவே கருதுகிறான். தம்மைத் தவிர வேறு யாரும் உள் நுழைய அனுமதி இல்லை என்பதை பயன் படுத்திக் கொண்டு கர்ப்ப கிரஹத்துக்குள்ளேயே காமச் செயலில் ஈடுபடும் இவர் போன்றோரை மனதளவில் எப்படி அனுகுவது என்றே தெரியவில்லை.இத்தகைய செயல்பாடுகள் இறை பக்தி எனும் கருத்தினை மீள் பார்வை செய்து திருத்தி அமைத்துக் கொள்ள இறை பக்தி கொண்டோருக்கு உதவ வேண்டும் என ஆவல் கொள்கிறேன். இது பற்றி தங்கள் என்ன நினைக்கிறீர்கள்?

அன்புடன்,

லோ. கார்த்திகேசன்

அன்புள்ள கார்த்திகேசன்

இவர்கலை எப்படி அணுகுவது என்பதில் என்ன சிக்கல்? இது ஒரு குற்றம். அதற்கான தண்டனை அளிக்கப்பட வேண்டும். ஒருகிரிமினல் கிரிமினல் குற்றங்களில் ஈடுபடுவதில் என்ன ஆச்சரியம் இருக்கிறது? அவர்களுக்கு அவர்கலின் சுய இன்பங்கள் அல்லாமல் எந்த புனிதமும் மரியாதையும் இருப்பதில்லை. முன்பொருமுறை கோயிலில் சிலைத்திருட்டு போயிருக்கிறது. கருவறைக்குள் மலம் கிடந்தது. பிடிபட்டவன் வாக்குமூலத்தில் சொன்னான். அவன் பகலிலிலேயே உள்ளே புகுந்து காத்திருந்திருக்கிறான். மலம் முட்டியது போனான். திருவந்தவனுக்கு கோயில் என்ன புதர் என்ன?

கோயில் என்பது ஒரு குறியீடு. சிலைகளும் குறியீடுகளே. அக்குறியீடுகள் அவற்றை உள்வாங்க தங்கள் அகத்தில் வளர்த்துக்கொள்பவர்களுக்கு அபாரமான மனவிரிவையும் தரிசனங்களையும் அளிக்கக் கூடியவை. வழிபாடுகளும் ஆராதனைகளும் அவ்வாறு குறியீடுகளை உணர்ச்சிகரமாக உள்வாங்கிக்கொள்வதற்கு உரியவையே. சுவரில் நீங்கள் ஒட்டியிருக்கும் மைக்கேல் ஜாக்ஸனின் படம் தினமும் பார்க்கப் பார்க்க உங்கள் முகம்பார்க்க ஆரம்பிக்கும். பேச ஆரம்பிக்கும். அப்படி இருக்க புனிதமும் மரியாதையும் ஏற்றப்பட்டு தினமும் வழிபடப்படும் ஒரு சிலை மெல்லமெல்ல பிரபஞ்சசாரமான ஒன்றையே நம்மிடம் சொல்லக்கூடும். ஆனால் அது அதை உள்வாங்குபவர்களுக்கே. அதை கல் என பார்ப்பவர்களுக்கு அது கல். சிலை என்பவர்களுக்குச் சிலை ‘தெய்வமென்றால் அது தெய்வம், சிலையென்றால் வெறும் சிலைதான்’

ஒரு மகத்தான கவிதை எழுதப்பட்ட காகிதத்தை வைத்து ஒரு ஆசாமி குண்டி துடைக்கிறான். அதனால் நீங்கள் கவிதைமீது நம்பிக்கை இழப்பீர்களா என்ன?

ஜெ

ஐயா,
தங்களது முதலாற்றல் கட்டுரை படித்தேன். “ஜே” என்று நண்பரது துயரம் கண்டு வருத்தப்படுகிறேன்.
தாங்கள் பகற்கனவு காண்பதை பற்றி சொல்லிருந்தீர்கள். மிகவும் அருமையான யோசனை.
மற்றுமொரு வழி இருக்கிறது, அது வேதனைகளை ஏற்று கொண்டு ( “Conscious suffering” ), இந்த கணத்தில் வாழ்வதுதான். இது வெறும் அறிவுப்பூர்வமான யோசனை அல்ல. மிகவும் உபயோகமானதும், ஆழமானதும் ஆகும். நீங்கள் “எகர்ட் டோல்லே” என்பவரது புத்தகத்தை அறிந்து இருப்பிர்கள்.
தங்களது நண்பருக்கு உபயோகமாய் இருக்கும் என்று அவரது புத்தகங்களை அனுப்பி இருக்கிறேன்.
தங்கள் நண்பருக்கு அனுப்பி வைக்கவும்.
நன்றி

ராமகிருஷ்ணன்

எட்கார் டோலேயின் ஒரு நூலை நான் வாசித்திருக்கிறேன்.    நன்றி

ஜெ

அன்பு ஜெமோ ,

காந்தி இப்படித்தான் இருந்தார் அல்லவா , சிந்திப்பதை உரக்க சிந்தித்து , சொல்ல நினைப்பதை மறைக்காமல் சொல்லி …

அவருடைய வார்த்தைகளை வைத்துதான் அவரை அவதூறு செய்கிறார்கள் , உங்கள் வார்த்தைகளையும் அவ்வாறே பயன்படுத்துவார்கள் என தெரிந்தும் வெளிப்படையாக பேசும் உங்கள் வார்த்தைகள் உங்களை மேலும் மேலும் விரும்ப வைக்கின்றது ,

ஆர் எஸ் எஸ் குறித்தான உங்கள் மதிப்பீடுகளை அப்படியே ஏற்றுக் கொள்கிறேன் , ஆம் அது அப்படிதான் என்பதை நேரடியாக உணர்ந்தவன் என்ற முறையில் .

சில செயல்பாடுகளில் ஈடுபட்டிருந்த போது அதுகுறித்து மீடியாக்களில் வெளிவந்த செய்திகளை படித்து வியந்திருக்கிறேன் , பல செயல்பாடுகள் , தனி மனிதர்கள் குறித்தான் மீடியா பிம்பமும் நிஜமும் சம்பந்தமே அற்றவை .

எனக்குத்தெரிந்த வட்டத்திற்குள் நான் மக்களிடையே ஒரு விழிப்புணர்வை உருவாக்க முடிகிறது. அவர்களின் வாழ்க்கையில் மாற்றத்தை அது உருவாக்குவதை கண்கூடாகப் பார்க்கிறேன். இந்தச் செயல்களெல்லாம் ஒன்றாகத் திரண்டு பெருவெள்ளமாகும் என நம்புகிறேன். பெரு வெள்ளம் என்பதே இவ்வாறு துளிகள் இணைந்து உருவாவதுதான்

உங்களாலும் ஒரு பெருவெள்ளம் உருவாகும் என மனதார நம்புகிறேன் .

என் மனம் நிறைந்த அன்புகள் உங்களுக்கு , வேறு என்ன சொல்வதென்று தெரியவில்லை ,

With Best Regards,

Arangasamy.K.V

அன்புள்ள அரங்கசாமி

அடிபப்டையான விஷயங்கள் எப்போதுமே கொஞ்சம் மூடப்பட்டிருக்கும். ஆர்.எஸ்.எஸ் குறித்து நான் எழுதுவதை தவிர்ப்பதற்குப் பலகாரணங்களில் ஒன்று தனிப்பட்ட உறவுகள். இன்னொன்று அதன்மீதுள்ள அவதூறுகள்.

என்னிடம் இங்கே வந்த ஒருநண்பர் சொன்னார். காட்டுநாயக்கர் அவர்.  ‘இத்தனைபேசுறாங்க சார், பெந்தேகொஸ்துகாரனை விட்டா எங்க சேரிக்கு ஒண்ணு நக்சலைட்டுக்காரன் வருவான் இல்லாட்டி ஆர்.எஸ்.எஸ்காரன் வருவான்…வேற எவன் வந்தான்?’ இது ஒரு நடைமுறை உண்மை. உங்கள் பக்கத்துச் சேரிக்குச் சென்றால் இதை காணலாம். ஆனால் ஊடகங்களில் அது தீண்டாமையைக் கடைப்பிடிக்கும் ஒரு பிராமண இயக்கமாகவே எப்போதும் சொல்லப்படும். ஒரு மாற்றுக்கருத்துகூட இருக்காது. அந்த பிற்போக்குத் தரப்பைச் சொல்லக்கூடிய ராதா ராஜன் போன்றவர்களை மட்டுமே ஊடகங்கள் ஆர் எஸ் எஸின் குரலாகக் காட்டும்

எந்த தேசியப்பேரிடரிலும் முதன்மையான மீட்புப்பங்களிப்பு ஆர்.எஸ்.எஸ் இயக்கத்ததாகவே இருக்கும். இந்தியாவின் மாபெரும் தொண்டர் இயக்கங்கள் எவையுமே அப்பக்கம் நடமாட மாட்டார்கள். சிறந்த உதாரணம் சமீபத்திய சுனாமி. அதைப்பற்றி நான் எழுதியிருக்கிறேன். இத்தனைக்கும் இங்கே பாதிக்கப்பட்டவர்களில் இந்துக்கள் மிகமிகக் குறைவு. கிறித்தவ அமைப்புகளுடனும் இஸ்லாமிய அமைப்புகளுடனும் இணைந்தே அவர்கள் பணியாற்றினார்கள்.

ஆனால் ஊடகங்களில் நீங்கள் ஒருவரிகூட அவர்களைப்பற்றி எழுதப்பட்டு பார்க்கமுடியாது. சுனாமிக்காலத்தில் தவறுதலாக ‘தி ஹிந்து’ ஒரு புகைப்படம் வெளியிட்டது. யாரோ அமைச்சர் பேட்டி கொடுக்கும்போது பின்பக்கம் ஆர்.எஸ்.எஸ் தொண்டர்கள் சீருடையில் சடலம் சுமந்து செல்கிறார்கள். மறுநாளே ஆர்.எஸ்.எஸ் காரர்கள் இந்து சடலங்களை மட்டுமே தூக்கினார்கள் என்று ‘யாரோ’ சொல்ல ஒருவரியை வெளியிட்டார்கள். அந்த அழீக்கல் கடற்கரையில் இந்துக்களே இல்லை. ஆர்.எஸ்.எஸ் கிறித்தவப்பெண்மணிகளின் தாலிகளை பறித்துச் செல்கிறது என்று வாய்மொழிப்பிரச்சாரம் கூட அவிழ்த்து விடப்பட்டது.

ஆர்.எஸ்.எஸ் போன்ற அமைப்புகளின் பங்களிப்புகள் இருட்டடிப்பு செய்யப்படுகின்றன. அவதூறு செய்யப்படுகின்றன. திரிபுச்செய்திகள் வெளியிடப்படுகின்றன. அவர்களை மதவாதிகள் என முத்திரை குத்திவிட்டு இதையெல்லாம் செய்யலாம் என்று சிலர் எண்ணுகிறார்கள். ஆனால் இவையே அவர்களுக்கு பலமாக ஆகிறது. இச்செய்திகள் வழியாக அவர்களை அறிமுகம் செய்துகொள்பவர்கள் நேரில் அறிமுகமாகும்போது இவை பொய்கள் என அறிந்ததும் அந்தப்பக்கம் தாவி விடுகிறார்கள்.

ஆர்.எஸ்.எஸ் இந்தியாவைக் குறித்து வைத்திருக்கும் வரலாற்றுச் சித்திரம் பிழையானது என எண்ணுகிறேன். இந்நாட்டை ஒரு மதச்சார்பற்ற ஜனநாயகக் குடியரசாக எண்ணுபவர்களுக்கு அதை ஏற்பது கடினம். அதன் சாரத்தில் உள்ள இஸ்லாமிய வெறுப்பு பிரிவினையின் போது இஸ்லாமியத் தலைவர்களின் நடத்தையால் உருவாக்கப்பட்டது. ஆகவே முற்றிலும் எதிர்மறையானது. அந்த வரலாற்றுச் சிக்கலில் இருந்து மீண்டு  நேர்நிலையான வரலாற்றுத்தேசிய உருவகத்தை அவர்கள் உருவாக்கிக் கொள்ளவில்லை. அதே புண்களை இன்றும் சுமந்து இன்றைய இந்தியாவில் கசப்பை உருவாக்குகிறார்கள்.

ஆர்.எஸ்.எஸ் இயக்கம் இந்திய தேசியத்தில் நம்பிக்கை கொண்டது. ஆனால் அந்த தேசியத்தில் அவர்கள் பிற இந்திய மதங்கள் எப்படி இருக்கவேண்டும் என நினைக்கிறார்கள் என்பது ஐயத்திற்குரியது. கொள்கைகள் எப்படி இருந்தாலும் அதன் தலைவர்களின் பேச்சும் நடத்தையும் தாலிபான்தனமாகவே உள்ளன. அவர்கள் இந்து மதம் குறித்து வைத்திருக்கும் கருத்துக்கள் இந்த மதத்தின் பன்மையையும் ஜனநாயகத்தன்மையையும் மறுக்கும் ஒற்றை நோக்குள்ள அடிப்படைவாத அணுகுமுறை கொண்டவை. பழமைவாத நோக்குள்ளவை.ஆகவே அழிவுத்தன்மை கொண்டவை.

ஆனால் ஆர்.எஸ்.எஸ் இந்நாட்டின் ஜனநாயகத்தலைமை இந்நாட்டின் தேசிய அடையாளங்கள் சிதைக்கப்படும் போது வாளாவிருக்கிறது என்று குற்றம் சாட்டுகிறது. தேசவிரோத நோக்கு மத உரிமை என்றபேரிலும் ஜனநாயக உரிமை என்றபேரிலும் வளர்வதற்கு இந்நாடு அனுமதிக்கிறது என்று கருதுகிறது. அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ் என உலகின் மாபெரும் ஜனநாயக நாடுகள் கூட இத்தகைய போக்குகளை ஆதரிப்பதில்லை என்று சுட்டிக்காட்டுகிறது. நீண்டநாள் நோக்கில் இத்தேசம் பேரழிவுகளை நோக்கிச் செல்லவே இந்த உதாசீனப்போக்கு காரணமாகும் என அது கூறுகிறது. அது முக்கியமான விஷயம் என்றே நான் எண்ணுகிறேன்.

ஆர்.எஸ்.எஸின் துணை அமைப்புகள் நேரடியாகவே வன்முறை அரசியலை, ரவுடித்தனத்தை, அடாவடிப்போக்கை மேற்கொள்கின்றன. அதன் மூலம் இந்த தேசத்தின் மதநல்லிணக்கசூழல் கெடுகிறது. இந்த தேசத்தின் ஜனநாயக மரபுகளை மீறி ராமஜன்மபூமியில்  இருந்த பாபர் கும்மட்டம் இடிக்கப்பட்டது ஒரு பெரும் அராஜகம். அதன் பின்னால் வந்த அராஜகங்களுக்கு அதுவே தொடக்கம்.  ஒரிசாவில் சிறுபான்மையினர் மீது அவர்கள் நடத்திய தாக்குதல்கள் போன்றவை முற்றிலும் அநீதியானவை. இத்தேசம் மீது அடிப்படையான பற்றுள்லவர்களால் வெறுத்து நிராகரிக்கபப்டவேண்டியவை. மேலும்  அவை சட்ட ஒழுங்குப் பிரச்சினையாகவே கண்டு ஒடுக்கப்படவேண்டியவை.

ஆர்.எஸ்.எஸ் எழுப்பும் வினாக்களை கருத்தில் கொண்டு, அவர்களின் சேவைகளை புரிந்துகொண்டு, இந்த நிராகரிப்பையும் செய்யும்போதுதான் அது சமநிலை கொண்ட அணுகுமுறை ஆகிறது. அத்தகைய அணுகுமுறை கொண்ட விமரிசகர்கள் மிக மிகக்குறைவு. அனேகமாக இல்லை.

ஆகவே நான் என் தரப்பை எவருடைய தரப்புடனும் அடையாளம் கண்டுகொள்ள விரும்பவில்லை. என் தரப்பை சொல்லி நிலநாட்டும் அளவுக்கு அரசியல் விவாதத்தில் ஈடுபட ஆர்வமும் எனக்கில்லை.

ஜெ

Coder
to me
show details
Nov 22 (4 days ago)

அன்புள்ள ஜெயமோகன்,
உங்களது ‘எனது அரசியல்’ பதிவு அருமை. அரசியல், பத்திரிகை துறைகளில் உள்ளவர்களின் நெருக்கம் மிக மிகச்சிறிது இருந்தாலே அரசியல் வெறுத்துவிடும்? தமிழகத்தில் உச்சகட்ட அரசியல்வாதி ஒருவரின் குடும்பத்தில் எனது நண்பருக்கு பெண் எடுக்க சென்றபோது, எல்லாம் முடியும் தருவாயில் ‘எதற்கும் எதிர் அணி தலைவரிடம் ஒரு வார்த்தை சொல்லிவிடுங்கள்’ என்றார்கள்.

கல்வி சார்ந்த ஒரு அரசு ஆணை வரப்போவதாக எங்கள் பல்கலைகழகத்தில் தகவல் வந்து சில நாட்களில் ஒரு முன்னணி ஆங்கில பத்திரிகை அது பற்றிய விவாதத்தை ஆரம்பித்தது.  பின்னர் பத்திரிகைகளில் வெளிவந்த பொதுமக்கள் கருத்திற்கிணங்க அந்த ஆணை வெளியிடப்படுவதாக அறிவிப்பு வந்ததது!  அதாவது என்ன செய்வது என்று முடிவெடுத்த பின், மக்கள் அதை விரும்பி கேட்பதாக பத்திரிகை மூலம் செய்தி பரப்பி, பின்னர் ‘மக்கள் விருப்பிற்கேற்ப’ அதை நிறைவேற்றிகொண்டார்கள்.

ஒரு ஊழல் விவகாரம் வெளிவரும் நேரத்திலேயே, இன்னாரை சந்தித்து இவ்வளவு பணம் கொடுக்கப்பட்டுவிட்டது, ஆகவே இந்த விவகராம் விரைவில் கைவிடப்படும் என்பது அலுவலக கடை நிலை ஊழியருக்கும் தெரிந்திருந்தது. அவ்வாறு தெரிந்திருந்தர்களின் நக்கல் பார்வைக்கு நடுவில் புரியாத சாதாரண ஜனங்கள் கடும் வெயிலில், ஊழலுக்கு எதிராக தொண்டை கிழிய கத்தி பின் கலைந்தார்கள்.

எனது புரிதல் இவ்வாறு இருக்கிறது – அரசியல்வாதிகளுக்கு எல்லாம் தெரியும், பத்திரிகைகாரர்களுக்கு பெருமளவு தெரியும், இவர்கள் இருவரும் ஒன்று சேர்ந்து மக்கள் எதை நம்ப வேண்டும் என விரும்புகிறார்களோ அது செய்தியாக வெளிவருகிறது. அதை படித்துவிட்டு காரசாரமாக விவாதிப்பது வெட்டிவேலை என சாதாரண மனிதர்கள் உணர்வது இல்லை.

அன்புடன்
கணேசன்.

அன்புள்ள கணேசன்

ஆம், நம் நாட்டில் அரசியல் விவாதங்கள் ஒருவகை கேளிக்கையாகவே உள்ளன. விவாதம் என்பதற்காக விவாதங்கள் நடக்கின்றன. ஒரு விவாதத்தில் தன்னை ஒரு குறிப்பிட்டவகையில் காட்டிக்கொள்வதற்காகவே பெரும்பாலானவர்கள் பேசுகிறார்கள். அந்த விவாதம் ஒருபோதும் உண்மையை நோக்கிச் செல்வதில்லை. உண்மை என்பது இந்த அரசியல் விவாதங்களின் ஒரு தரப்பு அல்ல.

நம் ஊடகங்கள் இந்த விவாதங்களுக்கு தீனிபோடவே எழுதுகின்றன– உண்மையை ஒருபோதும் எழுதுவதில்லை. ஊடகங்களை நம்பி உண்மையிலேயே அரசியல் பேசினால் அதைவிட பெரிய பரிதாபம் ஏதுமில்லை

இப்போதுபாருங்கள் மின்னஞ்சல் முகவரி வைத்திருக்கும் அத்தனைபேருக்கும் ஈழ விஷயங்கள் சார்ந்த மின்னஞ்சல்கள் அவ்ந்து குவிந்துகொண்டே இருக்கும். வசைகள், மறுவசைகள், குற்றச்சாட்டுகள், புள்ளி விவரங்கள், விளக்கங்கள்….இவற்றை வைத்து எவராவது உண்மையை புரிந்துகொள்ள முடியுமா என்ன? வேண்டுமென்றால் நாமும் உள்ளே புகுந்து நமக்குப் பிடிக்காதவர்களை வையலாம் இல்லையா?

‘நானும் இருக்கிறேன்’ ‘நம்மில் யார் பெரியவர்’ இரு வரிகளாக இந்த விவாதங்களை பிரித்து விடலாம். இப்படித்தான் எல்லாமே நடக்கின்றன

ஜெ

முந்தைய கட்டுரைகாந்தியின் பிள்ளைகள் – 2
அடுத்த கட்டுரைகாந்தியின் பிள்ளைகள் – 3