’’ஞானம் மனுஷாளுக்கு தேவையே இல்லே. அதெல்லாம் ஞானிகளுக்கு போரும். மனுஷா எந்த புஸ்தகத்தையும் வாஷிக்க வேண்டியதில்லை. வாஷித்தாலும் ஷாதாரண மனுஷாளுக்கு அதெல்லாம் ஒண்ணுமே புரியப்போறதில்லே. சொல்லப்போனா அவா பகவத்கீதையைக்கூட பாராயணம் பண்ணவேண்டியதில்லை. பேஷாம நாராயணான்னு அவன் காலடியிலே அப்டியே ஷாஷ்டாங்கமா விழுந்துட்டா போரும். எல்லாம் அவன் பாத்துக்குவான்…அவ்ளவுதான் வைஷ்ணவம்ங்கிறது’’
உங்களுக்கு எப்படியோ..எனக்கு படித்தவுடன் ஒரு அரை நொடி தியான அனுபவம் கிடைத்தது. உங்களுக்கும் அந்த அம்மாளுக்கும் (அப்படியே நாராயணனுக்கும்!) நன்றி. மடிசார் புடவையோடு குங்குமத்தோடு நடுவயது பிராமண அம்மாளின் உருவம் மின்னி மறைந்தது.
சிந்தித்து, சிக்கெடுத்து புரிந்து கொண்டு என்ன ஆகப் போகிறது (விரக்தியல்ல.எனக்கு இன்னும் கல்யாணம் ஆகவில்லை:)) . கல்வியோ, பேரறிவோ அற்ற வெள்ளந்தி மனிதர்கள் வாழ்வதைவிட நாம் என்ன பெரிதாக வாழ்ந்துவிட்டோம்.
குழப்பங்களற்ற நல்ல வாழ்க்கை வாழ்ந்த வெள்ளந்தி மக்களின் முகத்தில் தெரியும் அமைதி புத்தரின், ரமணரின் முகத்தில் தெரியும் சாந்தத்துக்கு ஒப்பானது!
வெங்கட்
அன்புள்ள வெங்கட்,
உங்கள் கடிதத்தில் தெரிவது நகர்ப்புறம் சார்ந்த, படித்த நடுத்தர வற்கத்து மனிதரின் கற்பனாவாதமன்றி வேறல்ல. மானுட மனத்தின் காமகுரோத மோகங்கள் கல்வியால் வருவதல்ல என்றும் அவை பிறவியாலேயே வருகின்றன என்றும் மேலான கல்விமூலமும் ஞானம் மூலமும் மட்டுமே அவற்றை வெல்லமுடியும் என்றும் ஆயிரமாண்டுகளாக நம் மரபில் சொல்லப்பட்டிருக்கிறது.
நாம் பொதுவாகவே கிராமங்களை மிகைப்படுத்திக்கொள்கிறோம். நீங்கள் காணும் அந்த வெள்ளந்தி மனிதர்களிடம் ஒருநாள் சேர்ந்து வாழ்ந்தால் நீங்கள் அவர்கள் எத்தனை உக்கிரமான இருளில் இருக்கிறார்கள் என்று உணர்வீர்கள். சகமனிதன் மீது வெறுப்பும் பொருளாசைக்கு மேல் செல்லாத உலகநோக்கும் தந்திரங்களும் கொண்டமனிதர்களாக இருப்பார்கள். ஒருமணிநேரம் அவர்களிடம் பேசிக்கொண்டிருந்தாலே உங்கள் கண்களுக்குள் இருட்டு நுழைந்துவிடும்.
தமோகுணம் அசைவற்றது. சாந்தகுணமும் அசைவற்றது. முந்தையது செயலின்மையின் விளைவு. பிந்தையது சமநிலைகொண்ட செயலின் விளைவு. இரண்டையும் ஒன்றாக நினைப்பதென்பது அறியாமை மட்டுமே. கற்பனாவாதம் அறியாமையை உருவாக்கும்.
கடைசியாக, சரணாகதி என்று சொல்லலாம். ஆனால் அதை அடைவதெல்லாம் எளிதல்ல. சரணாகதிமூலம் ஞானம் வராது. ஞானம் மூலமே சரணாகதி வரமுடியும். சாதாரண மனிதர்களால் ஒருபோதும் பூரண சரணாகதியை அடைய முடியாது. எந்நிலையிலும் அவனது அகங்காரமே முன்னிட்டு நிற்கும். அகங்காரத்தை கரைத்துக்கொள்வதெல்லாம் எளிய விஷயங்கள் அல்ல. சும்மா சொல்லிக்கொள்ளலாம், சரணாகதி அடைந்துவ்ட்டேன் என்றெல்லாம்.
எளிய மனிதர்களில் நிறைவு கொண்டவர்கள் இல்லையா? இருக்கிறார்கள். ஆனால் அவர்கள் தாங்கள் செய்யும் செயல்களை தங்களையறியாமலேயே யோகமாகக் கொண்டவர்கள். அதனூடாக மெய்நிலையை அடைந்தவர்கள். அன்னைகள், விவசாயிகள் என எல்லா தளத்திலும் முழுமனிதர் உண்டு. அவர்கள் சாதாரணமாக நிகழ்பவர்கள் அல்ல. கற்றோரில் விவேகானந்தர் எத்தனை அபூர்வமானவரோ அத்தனை அபூர்வமானவர்கள் கல்லாதோரில் அவர்கள்
ஜெ
இது நிஜமாக நடந்ததாம், சமீபத்தில் படமாகப் பார்த்தேன் (அதே தலைப்பு)
உங்களுக்கு இன்று வந்திருக்கிறதே கடிதம் (நோய்ப்பட்ட எழுத்தாளர்), அவர் இதைப்படிக்கட்டும் / பார்க்கட்டும்
http://en.wikipedia.org/wiki/Diving_bell_and_the_butterfly
சுரேஷ் பாபு
ஐயா,
தங்களது முறையீடு, அழைப்பு: கடிதங்கள் படித்தேன். தமிழ்நாட்டிலுள்ள எல்லோருமே இத்தகைய மூர்க்கமான பிராமணியத்தை ஏதோவொரு சந்தர்ப்பத்தில் எதிர்கொண்டிருப்பர்கள், நான் உட்பட. அதுவே என்னை பெரியாரியல்-இன் பால் இழுத்துச்சென்றது. நல்லவேளையாக நான் ஏற்கனவே ஓஷோ படித்திருந்ததால் பெரியாரிடமிருந்து ஓரளவாவது தப்பிக்கவும் முடிந்தது.
இத்தகைய முட்டாள்தனமான பிராமணியத்தை எதிர்கொள்வது எப்படி? பொதுவாக பலரும் பெரியாரிடம்தான் சென்றடைகிறார்கள். நீங்கள் எளிதாக அதை ஒதுக்கி முன்னகர்வதைக் கண்டு ஆச்சரியப்பட்டேன்.
வாழ்க்கையை கற்றுக் கொள்ளும் மாணவன் என்ற விதத்தில் தங்களிடம் இந்த கேள்வியை கேட்கின்றேன். நேரம் இருந்தால் பதிலளிக்கவும்.
நன்றியுடன்,
சென்.கோவி
அன்புள்ள கோவி
அதற்கடுத்த கடிதத்தை எப்படி எதிர்கொள்கிறோம்? அதேபோலத்தான். முட்டாள்தனம் எங்கும் உள்ளது. மனக்குறுகல் மனிதனுக்கு இயல்பாக வருவது. மனவிரிவு என்பது கல்வியும் ஞானமும் அவனுக்கு அளிப்பது.
கேரளமுதல்வராக இருந்த இடதுசாரித்தலைவர் இ.கெ.நாயனார் ஒருகாலத்தில் ஏஷியாநெட் தொலைக்காட்சியில் நேரடியாக குடிமக்களுடன் பேசி பதிலளிப்பார். ஓர் அழைப்பு. ”டேய் நாயனாரே, என்ன நெனைச்சிருக்கே? எங்க தலைவர் பாபு திவாகரனை நீ அரெஸ்ட் செய்வியாடா? டேய் நாங்க அரைலட்சம்பேர் இருக்கொம்டா…நாங்க உசிரைக் கொடுப்போம்..எங்க தலைவர் கடவுள்டா..டேய்…”
நாயனார் சிரித்தபடி ”இது அவங்க சைடுலே ஏதோ லூசு…அடுத்த கால் எடு” என்றார். அடுத்த அழைப்பு ”லால் சலாம் சகாவே..சகாவே லால் சலாம். இங்குலாப் சிந்தபாத் சகாவே…சகாவுக்காக நான் உசிரைக்குடுப்பேன் சகாவே..சகாவு என் தெய்வமாக்கும் சகாவே…” நாயனார் இன்னமும் சிரித்தபடி ”இது நம்ம சைடு லூசு…கட் பண்ணு” என்றார்
நமது மனநிலையையும் கருத்தியலையும் நாமேதான் தீர்மானிக்க வேண்டும். எதற்கும் எதிர்வினையாக அது உருவாகக்கூடாது.
ஜெ
சங்க இலக்கியம் ஆபாசமென்று சொன்னாரா புதுமைப் பித்தன்??? நம்ப முடியவில்லை.. இல்லை.. இல்லை.. you too பு.பி என்றுதான் சொல்லத் தோன்றியது..
பாலா
சங்க இலக்கியத்தில் இலக்கியமாக ஒன்றும் இல்லை, வெறும் சதை என்றார் புதுமைப்பித்தன். மதிப்புரை ஒன்றில் எழுதியிருக்கிறார். ரகுநாதனின் புதுமைப்பித்தன் வரலாறிலும் அவர் சொல்வதாக வருகிறது
ஜெ
அன்பு ஜெயமோகன்,
என்றும் நிறைந்திருக்கும் இறையருள் உங்களை காக்கட்டும்.
சிலகாலம் முன்பு உங்களுடன் கடிதத் தொடர்பில் இருந்தேன். உங்களின்
சமீப கட்டுரைகள் மீண்டும் உங்களுடன் தொடர்பு கொள்ள சொல்லுகிறது. அப்பொழுது பதஞ்சலியையும் காந்தியும் காரணமாக இருந்தார்கள்.
எம் எப் ஹுசைன் மற்றும் காந்தியும் காமமும் பற்றிய கட்டுரைகளில் உங்களி ஆன்மீக உள்நிலை வெளிச்சமிடுகிறது. அதில் இருக்கும் விஷயங்கள் மிகவும் உன்னதமானவை மற்றும் தற்காலத்தில் ஆன்மீக நாட்டம் கொண்டவர்கள் தெரிந்துகொள்ளவேண்டியதும் கூட.
ஹூசைனையும் காந்தியையும் பற்றி பேசுகிறேன் என நீங்கள் தாந்ரீகமும் ஆன்மீகத்தையும் ஞானிகளையும் விளக்கிவிட்டீர்கள். உங்களின் தாந்ரீகத்தை பற்றி புரிதல் எனக்கு மகிழ்ச்சியை தந்தது. நடைமுறையில் செய்வினை செய்பவர்கள் தான் தாந்ரீகர்கள் என்றும், நரமாமிசம் சாப்பிடுபவர்கள் தாந்ரீகர்கள் அல்லது அகோரிகள் என தவறான புரிதலே மக்களிடையே உண்டு.
உங்கள் ஆழ்ந்த தாந்திரீக புலமைக்கு உங்கள் வசிப்பிடமும் , உங்கள் குருவின் அருளும் காரணமாக இருக்கும் என்பது எனது எண்ணம். உங்கள் எழுத்தில் அவரின் அருளாற்றல் தெரிகிறது.
உங்களை சிலர் மதவாதி என்றும், பாஸிஸ்ட் என்றும் கூறி கேட்டிருக்கிறேன். அதையும் மீறி உங்கள் மேல் எனக்கு ஒரு புரிதல்
இருந்தது. ஒரு ஆன்மீக நிலையில் இருப்பவர் புரிந்திருப்பதை போல தெளிவான நிலையில் இந்திய கலாச்சாரத்தையும் ஆன்மீக
நிலைப்பாட்டையும் உணர்ந்தவராக இருக்கிறீர்கள்.
ஹுசைனின் ஓவியத்தை கண்டிப்பவர்கள் ஒருமுறை காமாக்யா தேவி ஆலயத்திற்கு சென்று வரட்டும் என்பது என் எண்ணம்.
நம் நாட்டின் வடகிழக்கு பகுதியும் தென் மேற்கு பகுதியும் தாந்த்ரா என்ற பொக்கிஷத்தின் இடங்களாக இருக்கிறது. அதை சரியான முறையில் விளக்க முற்பட்ட உங்களுக்கு எனது அன்பும் ஆசியும்.
அனைத்துக்கும் மேல் ஒரு சின்ன கருத்து….
தினமும் ரகசியமாக மாமிசம் உண்ணும் பிராமணன் பிறரிடம் மாமிசம் பற்றி கூறும் பொழுது, “ சாப்பிடும் பொழுது எலும்பும் , மீன் முள்ளும் வாயில் குத்துமே அப்படிபட்ட மாமிசத்தை நான் தின்பதே இல்லை” என்பானாம். அது போல நீங்கள் தாந்த்ராவை பற்றி விளக்கிவிட்டு அதில் ஈடுபடவில்லை என்கிறீர்கள். வேடிக்கையாக இருக்கிறது.
தியானிக்கும்
ஸ்வாமி ஓம்கார்
vediceye.blogspot.com
வணக்கத்திற்குரிய சுவாமி ஓம்கார் அவர்களுக்கு
நன்றி. நான் தாந்த்ரீகம் குறித்த நூல்களை வாசித்திருக்கிறேன்.பல நூல்கள் மலையாலத்தில் மூலத்தில் இருந்தே வெளியாகியுள்லன. இது தாந்த்ரீகத்தின் மண். என் உறவினர்களிலேயே பலர் தாந்த்ரீகர்கள். குறிப்பாக பெரியப்பா மகன். இப்போது துறவியாக இருக்கிறார். தாந்த்ரீக பூஜைகளைபலர் செய்யும்போது உதவிசெய்திருக்கிறேன். அந்த அனுபவம்தான். அதில் ஈடுபடும் ம ன உ றுதியெல்லாம் எனக்கில்லை
ஜெ