இரு படைப்பாளிகள்

கனடா இலக்கியத்தேட்டத்தின் விருது பெற்ற ‘கூகை’ நாவலை எழுதிய சொ.தருமனை பலருக்கும் தெரிந்திருக்கும். அவரது ‘தூர்வை’ என்ற முந்தைய நாவலும் முக்கியமானது. தலித்துக்களின் வாழ்க்கையின் அவலங்களை மையப்படுத்துவதற்குப் பதில் அவர்களின் மண்சார்ந்த பண்பாட்டையும், அவர்கள் வாழ்க்கையில் உள்ள களியாட்டங்களையும், உறவுகளில் உள்ள மூர்க்கமான உணர்ச்சிகரத்தையும் வெளிப்படுத்திய ஆக்கங்கள் இவை. கோயில்பட்டி அருகே உள்ள உருளைக்குடி கிராமத்தில் பிறந்த சொ.தருமன் எழுத்தாளர் பூமணியின் மருமகன். ‘ஈரம்”சோகவனம்’ ‘வனக்குமரன்; ஆகிய சிறுகதைத் தொகுதிகள் வெளிவந்துள்ளன. மறைந்த வில்லிசைக்கலைஞர் பிச்சைக்குட்டி அவர்களைப்பற்றி ஒரு வரலாற்று நூலையும் எழுதியிருக்கிறார்

அமிர்தம் சூரியாவை அதிகம் பேருக்கு தெரிந்திருக்காது. வடசென்னையில் பிறந்தவர். பல சிறுவேலைகளுக்குப் பின் இப்போது கல்கி இதழில் வேலைபார்க்கிறார். ‘அமிர்தம்’ என்ற சிற்றிதழை நடத்தியமையால் இப்பெயர் வந்தது. ‘உதிரி சயனத்தை நீரில் அலசும்வரை’ என்ற கவிதைத்தொகுப்பு மூலம் கவனத்துக்கு வந்தவர். ‘முக்கோணத்தின் நாலாவது பக்கம்’ என்ற கட்டுரைத்தொகுதியும், ‘பகுதிநேரக் கடவுளின் நாட்குறிப்பு’ என்ற கவிதைத்தொகுதியும் வெளிவந்துள்ளன. சிறுகதைத்தொகுதி வரவுள்ளது.

இவர்கள் இருவருடனும் எனக்கு நல்ல நட்பு உண்டு. சொ.தருமனை அவ்வப்போது பார்ப்பேன். தொலைபேசியில் பேசுவர். அமிர்தம் சூரியா பல வருடங்களுக்கு முன் எனக்கு தென்சென்னையில் நண்பர் செந்தூரம் ஜெகதீஷ் வழியாக அறிமுகமான நல்ல நண்பர்களில் ஒருவர்

இவர்கள் இருவருடைய பேட்டிகளை சமீபத்தில் இரு இதழ்களில் படிக்க நேர்ந்தது. தீரா நதி ஜூன் இதழில் சொ.தருமனின் பேட்டி வெளிவந்துள்ளது. இனிய உதயம் மே மாத இதழில் அமிர்தம் சூரியாவின் பேட்டி வெளிவந்துள்ளது. இருவருடைய பேட்டிகளும் எனக்கு மிக முக்கியமானவையாக பட்டன.

இவர்கள் பேட்டிகளில் உள்ள பொதுவான அம்சங்கள் என எனக்குப் பட்டவை இவை. தங்களை இலக்கியவாதிகள் என்ற அடையாளத்துடன் முன்வைக்கவே இவர்கள் விரும்புகிறார்கள். தலித் அடையாளத்துடன் அல்ல. அதை ஒரு சலுகையாகவோ, முன்னுரிமையாகவோ வாசகர்கள் அளிப்பதை வெறுக்கிறார்கள். அவ்வாறு அடையாளப்படுத்திக் கொள்வதன் மூலம் கிடைக்கும் பலவகையான அங்கீகாரங்களின் ராஜபாட்டையை படைப்பாளிக்கே உரிய அகங்காரத்துடன் நிராகரிக்கிறார்கள். தலித் வாழ்க்கை என்பது அவர்களின் எழுதுதளம் மட்டுமே. தலித் அல்லது பிற அரசியல் தளங்களில் மட்டும் வேரூன்றி நின்று இலக்கியம் பற்றிப் பேசாமல் இலக்கியத்தில் மட்டுமே வேரூன்றி நிற்க விரும்புகிறார்கள். தங்கள் படைப்பை அரசியல் கோட்பாடுகள் மற்றும் செயல்பாடுகள் சார்ந்து விவாதிக்காமல் தாங்கள் எதிர்கொண்ட வாழ்க்கையை நேரடியாக முன்னிறுத்தி விவாதிக்கிறார்கள்.

இதன் காரணமாக குறுகிய காழ்ப்புகள், குழுஅரசியல் ,அர்த்தமில்லாத நிராகரிப்புகள் என இவர்களின் மனம் செல்வதில்லை. தங்கள் எழுத்தின் முன்னோடி மரபுகளை அங்கீகரிப்பதில் எந்தவிதமான தயக்கமும் இவர்களிடம் இல்லை. தங்கள் எழுத்து உட்பட அனைத்தையுமே இலக்கிய அளவுகோல்களின்படி கறாராக பார்க்க இவர்களால் இயல்கிறது. கோட்பாட்டாளர்களாலும் அவர்களின் தொண்டர்களாலும் முன்வைக்கப்பட்ட தலித்தியம் என்ற அரசியல்நிலைபாடு தலித் இலக்கியம் என்ற வாழ்க்கைசார்ந்த அழகியல் வெளிப்பாடாகவே தமிழில் வெளிப்பாடு கொண்டது என்பதற்கான உதாரணங்கள் இவை.

இவ்விரு பேட்டிகளையும் வைத்து நோக்கும்போது இன்னொரு அம்சமும் கவனத்தில் வருகிறது. இவர்கள் இருவருமே தலித் அரசியல் அல்லது பிற அரசியல்கள் வழியாக இலக்கியத்துக்கு வந்தவர்கள் அல்ல. தருமனின் தந்தை தெருக்கூத்துக் கலைஞர். வளமான ஒரு கலைப்பின்னணி அவருக்கு இருக்கிறது. அமிர்தம் சூரியாவின் தந்தையும் ஒரு நாட்டார் கலைஞர். நாடக ஆசிரியர். அவர்கள் அங்கிருந்துதான் இலக்கியத்துக்குள் வருகிறார்கள். கலைசார்ந்த நோக்கு அவர்களில் வலுவாக இருப்பதற்கான காரணம் இதுவே.

அமிர்தம் சூரியா சொல்கிறார். ”உறவினர் வீட்டில் தாய்க்கிழவி இறந்துபோன மகனைப்பார்த்து ‘அய்யோ எம் வீட்டு ஆதி சொத்து அம்போன்னு கொள்ள போவுதே’ என்று அழுதாள். இறந்தவன் அவளது மகன் மட்டுமல்ல ,தனது குடியின் ஆதி சொத்து என்கிறாள். துக்கம் விசாரிக்க வந்தநாம் அந்த ஆதி சொத்தை கொள்ளை அடிக்க வந்தவர்கள் என்கிறாள். மரணம் நிகழ்ந்த வீட்டிற்கு வருகை தந்த அனைவருமே இனி வாழ்ந்துவிடவேண்டும் , நாம் வாழ்கிறோம், என்ற முனைப்போடும் நம்பிக்கையோடும்தான் வீடு திரும்புவோம். அத்தகைய நம்பிக்கையை நாம் அந்த மரணவீட்டில் இருந்து எடுத்து வருகிறோம். இது கொள்ளைதானே? கிழவியின் இந்த பேச்சின் ஓசையை நான் என் கவிதையில் இடைநுழைக்கும்போது இறுக்கமான மொழியால் கட்டப்பட்ட கவிதையின் சமன்பாடு குலைக்கப்பட்டு கவிதை தன்னுள் வாசகனை அனுமதிக்கிறது”

சொ.தருமன் சொல்கிறார் .”கலாபூர்வமான சிருஷ்டி என்னவென்றால் கதை எல்லாருக்கும் தெரியும். கதை தெரியாத ஆட்களே கிடையாது. அதை எழுதவும் எல்லாருக்கும் தெரியும். அதை கலாபூர்வமாக எழுதுவதற்கு எழுத்தாளனுக்கு மட்டுமே தெரியும்…”

அமிர்தம் சூரியாவிடம் தலித் அழகியல்கூறுகள் உங்கள் கவிதைகளில் இருந்தும் ஏன் நீங்கள் தலித் படைப்பாளியாக வெளிப்படவில்லை என்ற கேள்வி கேட்கப்படுகிறது. ”என் கவிதையில் தலித் அழகியல்கூறுகள் இருப்பதை மறுக்கவில்லை. இது இயல்பானது.மாறாக தலித் இலக்கியம் மட்டுமல்ல இனி வரப்போகும் வன்னிய இலக்கியமாக இருந்தாலும் சரி அது அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்கான அறிவுஜீவிகளின் அரசியல். தன் இனப்படைப்பாளிகள் கூடி பயனைப்பங்கிட்டுக் கொள்வதற்கான திட்டமிட்ட இலக்கிய உடன்படிக்கை.” என்கிறார்.

”இளையராஜா தலித்தாக பிறந்திருக்கலாம். அவரை தலித் என்ற சிமிழுக்குள் அடைக்க முடியுமா?” என்று கேட்கும் அமிர்தம் சூரியா ” நான் எனது இலக்கியத்தை ஒரு குறிப்பிட்ட சாதியின் இனவிடுதலை ஆயுதமாக மட்டும் பார்க்கவில்லை. ஒட்டுமொத்த மனித விடுதலையின் ஆயுதமாகவே பார்க்கிறேன். வினாயகசதுர்த்தி காலத்தில் ஒரே அச்சில் ஏராளமான வினாயகரை உருவாக்கி விற்பதுபோல பொம்மை வியாபாரத்தில் எனக்கு நம்பிக்கை இல்லை. ஆகவே நான் தலித் படைப்பாளியாகச் சுருங்கிப்போக விரும்பவில்லை” என்கிறார்.

”குடிக்க தண்ணீர் இல்லாமல் தமிழன் வாழ்ந்தாலும் வாழ்வானே தவிர சாதி இல்லாமல் கணநேரமும் வாழத்துணிவில்லாத நிலையில் வன்னிய இலக்கியம் தோன்றுவதில் என்ன ஆச்சரியம் இருக்க முடியும்? அமைப்பியல் இருத்தலியம் நவீனத்துவம் பின் நவீனத்துவம் இவற்ரையெல்லாம் கற்றுணர்ந்த பேராசிரியர் பிரம்மராஜனிடம் இது பற்றி கேட்டால் விரிவாகச் சொல்வார்” என்கிறார்.

சொ.தருமன் ”நான்குமாநிலங்கள் கூடி ஏற்பாடுசெய்திருந்த சாகித்ய அக்கதமி கூட்டத்தில் பதினைந்துவருடங்களுக்கு முன்னரே நான் என்னை பிறப்பால் வேண்டுமென்றால் தலித் என்று குறிப்பிடுங்கள். ஆனால் எழுத்தால் என்னை பிரிக்காதீர்கள் என்றேன். இலக்கியத்தில் என்ன இட ஒதுக்கீடு என்று கேட்டிருக்கிரேன்” என்கிறார் ”இதுவரை கிடைத்த தலித் இலக்கியங்கள் எனக்குச் சொன்னவை இவை. தலித் என்றால் எண்னையே தேய்க்காமல் பரட்டை தலையோடு இருப்பான். எதற்கெடுத்தாலும் கோபப்படுவான். சண்டை போடுவான். தலித் பொம்பிளை என்றால் அவள் லேசாகச் சோரம்போவாள். தலித்துக்களை லேசில் ஏமாற்றிவிடலாம். இதை மீறி என கொடுத்திருக்கிறது தலித் எழுத்துக்கள்? தலித்தின் பாஷையையாவது கொடுத்திருக்கிறார்களா? இவர்கள் பேசும் தலித் பாஷையே போலியானது”

சொ.தருமனின் கடைசிக் அக்ருத்தில் எனக்கு உடன்பாடு இல்லை. அது அவரது எதிர்கால திட்டங்களைச் சார்ந்து அவர் உருவாக்கும் நிராகரிப்பு என்றே படுகிறது. இவ்விரு பேட்டிகளும் தமிழின் படைப்பிலக்கிய தளத்தின் அடிப்படையான வலிமையைக் காட்டுகின்றன. இலக்கிய அரசியல்கள், குழுச்சண்டைகள், கோட்பாட்டுக்க்குதறல்கள் ஆகியவற்றுக்கு அப்பால் தமிழிலக்கியத்தின் ஆத்மா என்பது தன் வாழ்க்கைக்கு நேர்மையாக இருக்கும் தனிபப்ட்ட படைப்பாளியின் படைப்புத்திமிரில்தான் உள்ளது என்று வெளிப்படுத்தி நம்பிக்கை அளிப்பவை

சோ.தர்மன் பேட்டி

http://kadarkarai.blogspot.com/2008_06_01_archive.html

சோ.தர்மன் நாவல் முன்னோட்டம்

http://www.keetru.com/unnatham/unnatham12/dharman.php

http://www.tamilonline.com/Thendral/authorindex.aspx?ai=229

முந்தைய கட்டுரைசுவரில் முட்டி நிற்கும் மலையாள சினிமா.
அடுத்த கட்டுரைமலேசியா மறுபக்கம்