அன்புள்ள ஜெ.எம்,
உங்கள் கட்டுரைகளைக் கூர்ந்து வாசித்து வருகிறேன். சமீபத்தில் ஓர் இணையப்பதிவில் உங்கள் உரை ஒன்றை [ மூதாதையர் குரல் ]வாசித்தேன். அதற்குப் பின்னூட்டமிட்டிருந்தவர் கீழ்க்கண்ட சுட்டியைக் கொடுத்து நீங்கள் 1770 வாக்கில் இந்தியாவில் வந்த பஞ்சமே முதல்பெரும்பஞ்சம் என சொல்லியிருந்தது முட்டாள்தனம் என்றும், அடிப்படை வாசிப்புகூட இல்லாத ஒருவர் நீங்கள் என்றும் சொல்லியிருந்தார். நீங்கள் என்ன சொல்ல விரும்புகிறீர்கள் என அறிய ஆவலாக இருக்கிறேன்
http://en.wikipedia.org/wiki/Famine_in_India
சிவராஜ் சண்முகம்
அன்புள்ள சிவராஜ்,
நீங்கள் ஒரு புதுவாசகர் என நினைக்கிறேன். இக்கேள்விக்காகவே எழுதுகிறீர்கள் போல.
ஒன்று நான் எப்போதுமே சொல்லிக்கொள்வதுண்டு. நான் ஆய்வாளான் அல்ல. ஆய்வாளனின் வேலையை எழுத்தாளன் செய்வதென்பது அனேகமாக சரிவராது. ஆய்வின் திட்டமிட்ட முறைமை மெல்லமெல்ல எழுத்தாளனின் கற்பனையை இல்லாமலாக்கிவிடும். நான் எழுத்தாளன் மட்டுமே.
இந்தியவரலாறு, பண்பாடு ஆகியவற்றில் ஆர்வத்துடன் பிற ஆய்வாளர்களின் நூல்களை தொடர்ச்சியாக வாசித்து வரக்கூடியவன் நான். இந்தியாவின் முக்கியமான ஆய்வாளர்களுடன் நேரடியாக உரையாடும் வாய்ப்புகளும் உடையவன். என்னுடைய கட்டுரைகளில் நீங்கள் ஒருபோதும் நானே ஆய்வுசெய்து அறிந்த தகவல்களை காணமுடியாது
புனைவெழுத்தாளன் என்ற முறையில் என்னால் தகவல்களைக் கொண்டு சில புதிய கோணங்களை உருவாக்கிக் கொள்ள முடியும் என்பதனால் மட்டுமே என் எழுத்துக்கள் முக்கியமானவை. உலகம் முழுக்க இந்தக் காரணத்தாலேயே புனைவெழுத்தாளர்களின் கருத்துக்கள் ஆய்வாளர்களால் கவனிக்கப்படுகின்றன. ஆய்வாளர்கள் அல்ல என்று உதாசீனம் செய்யப்படுவதில்லை. ஒரு தகவலைப் பற்றிக்கொண்டு ஏளனம்செய்ய வருபவருக்கு ஆய்வும் தெரியாது, இலக்கியமும் தெரியாது. அத்தகைய கருத்துக்களை நான் பொருட்படுத்துவதில்லை.
என்னுடைய கட்டுரைகளில் தகவல்பிழைகள் இருக்கலாம். குறிப்பாக உரைகள், கடிதங்கள் போன்றவற்றில் நினைவுப்பிழைகள் இருக்கும். ஒரு பெயருக்குப் பதில் இன்னொரு பெயர் இருக்கும். பலமுறை வாசித்தாலும் அந்தப்பிழையை மனம் தாண்டிச்சென்றுவிடும். ஒரு கால இடைவெளிக்குப் பின்னர் அது முதல் பார்வையிலேயே கண்ணுக்குப் படும். பல பிழைகளை உடனடியாகச் சுட்டிக்காட்டிவிடுவார் வன்பாக்கம் விஜயராகவன். உதாரணமாக. நீங்கள் குறிப்பிடும் இந்த உரையிலேயே அகமது ஷா அப்தாலிக்குப் பதில் ஜெங்கிஸ்கான் என்றிருக்கிறேன். அதை விஜயராகவன் சுட்டிக்காட்டியிருக்கிறார். ஆனால் பலபிழைகளை நானே திருத்தியிருக்கிறேன். யாருக்கும் தெரியாமல்.
சிலசமயம் பிழைகள் ஏதேனும் ஒரு நூலை மட்டும் நம்புவதனால் வரும். சிலசமயம் பிழைகள் ஒரு துறை சார்ந்து ஆழமான அறிதல் இல்லாததனால் அத்துறை வல்லுநர்களால் சுட்டிக்காட்டப்படலாம். பொதுவாக நான் எனக்கு பெரிய அறிமுகம் இல்லாத பல துறைகளைப் பற்றி ஒன்றுமே சொல்வதில்லை. குறிப்பாக அறிவியல், உலகஅரசியல், சினிமா போன்றவை சார்ந்து. அப்படி இருந்தும் பிழைகள் நிகழலாம். பிழைகள் சுட்டப்படுவது எனக்கு என் எல்லைகளைக் காட்டுவதுடன் புதிய விஷயத்தைக் கற்றுக்கொள்ளவும் உதவுகிறது என்றே எண்ணுகிறேன். ஏற்கனவே சொல்லியிருக்கிறேன், பிழைகள் சுட்டும் எவரும் என் ஆசிரியர்களே.
இனி நீங்கள் சொன்ன விஷயத்துக்கு வருகிறேன். அந்த விஷயத்தில் தெளிவான புரிதலும் திட்டவட்டமான தகவல்களும் என்னிடம் உண்டு. பிறிதொரு தருணத்தில் மிக விரிவாகவே என்னால் பேசமுடியும். நான் அந்த உரைத்தொடர்களில் சொல்லியிருப்பதைப்போல பஞ்சங்கள் மண்டிய நாடுதான் இந்தியா. ஏனென்றால் நாம் பருவக்காற்றை நம்பி வாழ்கிறோம். மகாபாரதத்திலேயே அங்கநாட்டுப் பஞ்சம் குறித்த சித்திரம் உள்ளது என அக்கட்டுரைகளிலேயே சொல்லப்பட்டிருக்கிறது. பஞ்சங்கள் மீண்டும் மீண்டும் இந்தியாவில் நிகழ்ந்தே வந்தன. ஆனால் இங்கே லட்சக்கணக்கில் மக்கள் பஞ்சங்களில் செத்த வரலாறு இல்லை. அது பிரிட்டிஷ் ஆட்சியால் உருவாக்கப்பட்ட செயற்கையான ஒரு நிலை.
இந்தியாவில் கட்ச்,ராஜஸ்தான் போன்ற வடமேற்குபகுதிகள், மத்தியதக்காணப்பகுதி ஆகிய இரு நிலங்களும் அடிக்கடி மழைபொய்க்கக்கூடியவை. ஆகவே அங்கே பஞ்சங்கள் வருவது இயல்பே. ஆனால் அங்கே ஒருபோதும் லட்சக்கணக்கான மக்கள் மடியமுடியாது. இதை இன்று இப்பகுதிகளில் பயணம்செய்தால்கூட நீங்கள் பார்க்கலாம். இன்றும் மிக மிகக் குறைவான மக்கள்பரவல் கொண்ட நிலங்கள் இவை. இன்றும்கூட இங்குள்ள மக்களில்பெரும்பாலானவர்கள் எளிதில் இடம்பெயரும் பண்பாடு கொண்டவர்கள். ஆகவே பஞ்சங்களில் கிராமங்களே ஒட்டுமொத்தமாக இடம்பெயர்வது பிராந்தியங்களே காலியாவது மிகச்சாதாரணம். எனவே அவர்கள் பஞ்சங்களில் கூட்டம் கூட்டமாகச் சாவதில்லை. அவர்களில் ஒருபகுதியினர் சென்ற இடங்களில் தங்கிவிடுவார்கள், கணிசமானவர்கள் திரும்பி வருவார்கள். திரும்பத் திரும்ப கிராமங்கள் கைவிடப்பட்டு மீண்டும் முளைத்தெழும்.
இதற்கெல்லாம் விரிவான இலக்கியப்பதிவுகள் உள்ளன. இரு உதாரணங்கள், வெங்கடேஷ் மாட்கூல்கரின் பங்கர் வாடி, பன்னலால் பட்டேலின் வாழ்க்கை ஒரு நாடகம். இரண்டுமே தமிழில் கிடைக்கின்றன. பஞ்சங்களில் மக்கள் ஒட்டுமொத்தமாக கிராமங்களை உதறிச் சென்றுவிடுவதன் கதைகள் இவை.
ஆனால் 1770 முதல் பிரிட்டிஷ் ஆட்சியில் உருவான பஞ்சங்கள் அப்படிப்பட்டவை அல்ல. அவை மக்கள்செறிந்து வாழக்கூடிய வளமான வேளாண்நிலப்பகுதிகளில் வந்த பஞ்சங்கள். பஞ்சம் வந்தால் மக்கள் எந்த நிலம் நோக்கி வருவார்களோ அந்த நிலங்களிலேயே பஞ்சம்.ஆகவேதான் கூட்டம் கூட்டமாக மக்கள் செத்தொழிந்தார்கள். அதற்கு முழுக்க முழுக்க பிரிட்டிஷ் ஆட்சியாளர்களின் அதிகாரிவற்கத்தின் பொறுப்பின்மையும், மையப்படுத்தப்பட்ட ஊழல்மிக்க நிர்வாகமும், அப்பட்டமான சுரண்டலும்தான் காரணம். இது ஒன்றும் என்னுடைய கண்டுபிடிப்பு அல்ல. பல்வேறு குளறுபடிகள், அநீதிகள் குறித்து பல்லாயிரம் பக்கங்கள் இந்தியப் வேளாண் ஆய்வாளர்களால் எழுதித்தள்ளப்பட்டுள்ளன. நான் அவற்றில் இருந்து எடுத்த எளிய மனப்பதிவை மட்டுமே சொன்னேன். [ குறைந்தபட்சம் காலச்சுவடு இதழில் தொடர்ந்து வெளிவரும் சங்கீதா ஸ்ரீராம் எழுதும் கட்டுரைகளை வாசித்தாலே போதும்
http://www.kalachuvadu.com/issue-103/page60.asp
]
பிரிட்டிஷ் ஆட்சி செய்தது என்ன? ஒன்று இந்தியாவில் நீர்நிர்வாகமும் பொதுநில நிர்வாகமும் வட்டார நிர்வாக அமைப்புகளாகன கிராமசபைகளின் கைகளில் இருந்தன. அவற்றை கைப்பற்றி தங்கள் மைய நிர்வாகத்துக்குக் கொண்டுவந்தார்கள். நிர்வாகம் சிவப்புநாடாவுக்குள் சிக்கியது. விளைவாக நீர்நிலைகளும் பாசனவழிகளும் அழிந்தன. கிராமங்களில் இருந்த உபரி நிதி முழுக்க கடுமையான வரிவசூல் மூலம் உறிஞ்சப்பட்டது. ஆகவே கிராமசபைகள் செயலற்றன. பஞ்சம் வந்தபோது பஞ்சம் தாங்கும் அமைப்புகள் செயலிழந்தன.
கொடும் பஞ்சங்களின்போதுகூட நிர்வாகத்தை குறுநிலமன்னர்களிடமும் ஜமீந்தார்களிடமும் விட்டுவிட்டு வாளாவிருந்தது பிரிட்டிஷ் அரசு. ஏன் பஞ்சத்தில் மக்கள் செத்துக் குவிந்துகொண்டிருந்தபோது தானியங்களை கப்பல் கப்பலாகக் கைப்பற்றி ஏற்றுமதி செய்தது. இதெல்லாமே இன்று ஆய்வாளர்களால் விரிவாக எழுதப்பட்டுவிட்டன. ஆகவேதான் லட்சக்கணக்கான மக்கள் செத்தார்கள். அடிமைகளாக வேற்று நாடுகளுக்கு இடம்பெயர்ந்தார்கள்.
ஐம்பதுகளுக்குப் பின்னர்தான் பின்காலனிய ஆய்வுகள் பிரிட்டிஷாரின் சுரண்டலையும் அதன் மூலம் உருவான பேரழிவுகளையும் விரிவாகப் பதிவுசெய்ய ஆரம்பித்தன. பிரிட்டிஷ் காலனியாதிக்க வரலாற்றாசிரியர்களால் மீண்டும் மீண்டும் பதிவுசெய்யப்பட்ட ஒரு வரலாற்றுக் கோணம் உண்டு. அதாவது மைய ஆட்சி இல்லாமல் போரினாலும் அராஜகத்தாலும் அழிந்துகொண்டிருந்த இந்தியாவுக்கு பிரிட்டிஷாரின் வரவு மூலமே உறுதியான மைய அரசும் சட்டத்தின் ஆட்சியும் கிடைத்தது என்பதுதான் அது.
அது ஓர் எல்லை வரை உண்மையும் கூட. முகலாய ஆட்சி வீழ்ச்சி அடைந்தபின் அவர்களின் உதிரி தளகர்த்தர்களால் சூறையாடப்பட்ட இந்திய நிலத்தில்தான் பிரிட்டிஷார் வந்து ஒருங்கிணைக்கப்பட்ட ஆட்சியை அளித்தனர். அவர்கள் அளித்த அந்த நிலையான நீதி நிர்வாகத்தை இந்திய மக்கள் ஏற்றுக்கொண்டமையால்தான் அவர்களால் இந்தியாவை ஆளவும் முடிந்தது. அவர்கள் செய்த சுரண்டலைக்கூட இந்திய மக்கள் ஏற்றுக்கொண்டுதான் இருந்தார்கள். இந்தியா இந்தியாவை காலனியாதிக்கத்துக்கு ஆளாக்கியதை நியாயப்படுத்த காலனியாதிக்கவாதிகளால் சொல்லப்பட்ட ஒரே நியாயம் இதுதான்.
ஆனால் பஞ்சங்களைப்பற்றிய தகவல்கள் வெளிவர வெளிவர இந்த நியாயப்படுத்தல் வலுவிழந்தது. ஆகவேதான் வங்காளப்பஞ்சங்களுக்கு முன்னரும் லட்சக்கணக்கானவர்கள் இறந்த பெரும்பஞ்சங்கள் இந்தியாவில் நிகழ்ந்திருந்தன என்ற சித்திரங்கள் காலனியவரலாற்றாசிரியர்களால் வலுவாக உருவாக்கப்பட்டன. இவற்றில் பஞ்சங்கள் குறித்த தகவல்கள் பல்வேறு முகலாய ஆவணங்களில் இருந்து திரட்டப்பட்டன. பெரும்பாலும் இவை வலிந்து உருவாக்கப்பட்டன. பிராந்திய வரிவசூல் விவரங்கள் டெல்லிக்குத்தெரிவிக்கப்படும்போது பஞ்சங்கள் அறிக்கையிடப்படும். அவற்றில் கிராமங்கள் அழிந்து விட்டன,அங்கே மக்களே இல்லை போன்ற வரிகள் இருந்தால் பலலட்சம்பேர் இறந்தார்கள் என்று அது இவர்களால் பொருள்கொள்ளப்பட்டது.
இந்தியாவில் பிரிட்டிஷ் ஆட்சிக்காலத்துக்கு முன்னரே பெரும்பஞ்சங்கள் வந்தன என்று சொல்லவரும் காலனிய வரலாற்றாசிரியர்கள்கூட அப்பஞ்சங்கள் எல்லாமே அந்தந்த பிராந்திய எல்லைக்குள் மட்டுமே நிகழ்ந்தன என்றும் தேசமளாவ நிகழ்ந்தவை அல்ல என்றும்தான் சொல்லவேண்டியிருக்கிறது. ஏனென்றால் முகலாய ஆவணங்கள் அவ்வாறே காட்டுகின்றன. இது பஞ்சங்களில் மக்கள் கூட்டம் கூட்டமாக இடம்பெயர்ந்தார்களே ஒழிய லட்சக்கணக்கில் செத்திருக்க வாய்ப்பில்லை என்ற கொள்கைக்குத்தான் ஆதரவாக இருக்கிறது.
உதிரித்தகவல்களைத் திரட்டியும் திரித்தும் 14 பஞ்சங்கள் 11 ஆம் நூற்றாண்டு முதல் நிகழ்ந்தன என்று சொல்கிறார்கள் இவர்கள். பல்வேறு திரிபுகள் செய்யப்பட்டும்கூட இந்தியாவின் வரலாற்றில் 1770 களுக்கு முன்னர் நிகழ்ந்த பெரும் பஞ்சங்கள் என எதையும் இவர்களால் உறுதியாகச் சுட்டமுடியவில்லை என்பதே உண்மை. முகலாயர் ஆட்சிக்காலம் தெளிவான வரலாற்றுப்பதிவுகள் கொண்டது என்பதையும் இணைத்துப்பார்க்கவேண்டும். இன்று இந்திய வரலாற்றில் மேலைநாட்டு நிதி பெறக்கூடிய ஆய்வுநிறுவனங்களே அளவிலதிகம். இந்த அமைப்புகள் வழியாக மீண்டும் மீண்டும் சொல்லப்பட்டும்கூட இன்றுவரை நிறுவப்படாத கருத்தாகவே இந்தியாவின் பழங்காலப்பஞ்சங்களைப் பற்றிய கருத்துக்கள் உள்ளன.
மிக எளிமையாகப் புரிந்துகொள்ள வேண்டிய விஷயம்தான் நான் என் உரையில் சொன்னது. ராமநாத புரத்தில் பஞ்சம் வரும், மக்கள் இடம்பெயர்வார்கள், திரும்பிவருவார்கள். தஞ்சாவூரில் பஞ்சம் வந்தால்தான் பல்லாயிரம்பேர் சாவார்கள். இந்தியாவில் மகாபாரதக் காலம் முதல் வந்த எல்லா பஞ்சங்களும் பஞ்சம் வரக்கூடிய இடங்களில் வந்தவை. பிரிட்டிஷ் ஆட்சிக்காலத்துப்பஞ்சம் சுரண்டல்மூலம் வளமான நிலங்களில் வந்த செயற்கையான பஞ்சம். என்னுடைய உரையில் மிகத்திட்டவட்டமாக வெளிப்படையாகச் சொல்லப்பட்டிருக்கும் கருத்து இதுதான். இன்று ஏராளமான ஆய்வாளர்களால் மீளமீளச் சொல்லப்பட்டுவரும் சாதாரணமான விஷயம் இது.
ஜெ
http://www.kalachuvadu.com/issue-103/page60.asp
அள்ளிப்பதுக்கும் பண்பாடு,கடிதங்கள்