இரு அழைப்புகள்

ஸ்ரீ ஜெயமோகன் நமஸ்கார். நீங்கள் நான் அளித்த முக்கியமான தகவலை அளித்திருக்கிறீர்களா என்று பார்ப்பதற்காக உங்கள் இணையதளத்தைப் பார்த்தேன். நான் மிருகங்கள் மீதான கருனையால் அதை அளித்தேன். நீங்கள் அதை பிரசுரிக்கவில்லை. நான் உங்கள் கட்டுரையை மீண்டும் வாசித்து சில விஷயங்களைப் புரிந்துகொண்டேன்.

 

நீங்கள்தான் அதை எழுதியவர் அல்லவா? இப்போது எனக்கு முந்தைய கடிதத்தில் இருந்ததை விட முற்றிலும் மாறான ஒரு கருத்தே இருக்கிறது. இந்தக்கட்டுரை மிருகத்தின் துயரத்தைப் பற்றியதா அல்லது உங்கள் வாழ்க்கை மற்றும் உங்கள் இன்றியமையாத தனிமையைப்பற்றியதா? உங்கள் சொந்தமனத்தில் உள்ள சூனியத்தைப்பற்றியா? அல்லது எதையும் மதிக்கத்தெரியாத உங்கள் இயல்பைப்பற்றியதா?

 

புனிதமான விஷயங்க¨ளைப்பற்றி உங்களிடம் ஒரு அ-ஹிந்து அணுகுமுறை உள்ளது. ஆகவே தான் உங்களுக்கு இந்த துயரம். சொற்க்கத்தில் உள்ள பிதாவோ அல்லது கடவுளோ உங்களுக்கு எளிமையான விடைகளை அளிக்கப்போவதில்லை. தப்பும் வழியையும் காட்டப்போவதில்லை. ஏதாவது உயிர் துயரப்படுவதைக் கண்டால் அதற்கு உதவிசெய்யுங்கள். விடைகளுக்கோ தீர்வுகளுக்கோ வானத்தைப்பார்க்காதீர்கள்.

 

இந்து புரிதலின்படி எந்த உயிரும் எளிமையானதோ அர்த்தமற்றதோ அல்ல. படைப்பைப்பற்றிய, படைப்புக்குப் பின்னால் உள்ள அறிவைப்பற்றிய சாராம்சமானப் புரிதல் கொண்ட ஒரு இந்துவைப்பொறுத்தவரை  மனிதர்களுக்கு நடுவே உள்ள உறவும்சரி மனிதர்களுக்கும் பிற உயிர்களுக்கும் இடையே உள்ள உறவும் சரி இவ்வாறுதான் புரிந்துகொள்ளப்படும். நாயின் உள்ளே உள்ள அதே ஆத்மாதான் உங்களுக்குள்ளும் உள்ளது.

 

இந்த கட்டுரை நாயைப்பற்றியதே அல்ல இல்லையா ஜெயமோகன்? அது உங்களுடைய கடவுளற்ற இதயத்தையும் உலகத்தையும் நாடகத்தனமாக வெளிப்படுத்துவதற்கான ஒரு முயற்சி இல்லையா? லோக், நீட்சே, ஹோப்ஸ், புரூதோன், டெகார்த்தே என்றெல்லாம் ஏராளமாக மேற்கோள்களை அள்ளிவிட்டு இந்திய சிந்தனையின் அமைப்புகளையும் உங்கள் சொந்த பண்பாட்டையும் பற்றி ஒன்றுமே தெரியாமல் இருப்பதனால் எந்தப்பயனும் இல்லை.

 

உங்கள் ஆன்மா இந்து தர்மத்தின் நறுமணத்தை உள்வாங்கி நுகர திறனற்றது என்றால் உங்கள் எழுத்து எத்தனை ஆடம்பரமாக இருந்தாலும் சரி, பல்வேறு நாடுகளைப்பற்றியும் மேலைநாட்டு தத்துவங்களைப்பற்றியும் பேசினாலும் சரி ,அது ஆத்மா இல்லாத மனத்தின் ஆத்மா இல்லாத எழுத்து மட்டுமே.

 

உங்கள் கட்டுரைகளில் நீங்கள் அந்த நாயை மிதிப்பதைப்பற்றியும் அடிப்பதைப்பற்றியும் அதன் தலைமேல் கல்லைத்தூக்கிப் போடுவதைப்பற்றியும் சொல்கிறீகள். அதன் அழுகை நான் உங்களைப்பற்றி அறிய விரும்பும் அனைத்தையும் எனக்குச் சொல்கிறது. உங்கள் ஆத்மா முதிர்ச்சி அடைந்து இந்து தேசத்தைப்பற்றியும், இந்து அரசு ஏன் வேண்டும் என்பதைப்பற்றியும் அறிய நீங்கள் இன்னும் பல பிறவிகள் எடுத்து முன்னேறி வரவேண்டிய தேவை உள்ளது.

 

உங்களை உணர்ந்துகொள்ளுங்கள் ஜெயமோகன். இந்த கட்டுரை வழியாக தெரியும் ஜெயமோகனின் சித்திரம் கசப்பூட்டுவது. இதை நீங்கள் எழுதியதை எண்ணி நான் அருவருப்படைந்தேன் . நான் ஏற்கனவே இந்த கட்டுரையில் உள்ள இந்த விஷயத்தை வேறு யாரோ எழுதியது என்ற எண்ணத்திலேயே செரித்துக்கொள்ள தயாராக இருந்தேன். யாரோ குறைந்தபட்சம் ஒரு நாயின் அழுகையைக் கேட்குமளவுக்கு கண்ணையும் இதயத்தையும் திறந்து வைத்திருக்கிறார்களே என்று எண்ணினேன் உங்களுக்கு என்றால் அந்தவகையான எந்த சாக்குபோக்கும் கிடையாது.

 

உங்களைச் சுற்றி இருக்கும் உலகத்தை விமரிசித்துத் திருத்த முற்படுவதற்கு முன்னர் நீங்கள் உங்கள் சொந்த ஆத்மாவை சரிசெய்துகொள்ளவேண்டும். சுற்றியுள்ள மனிதர்களல்லாத உயிர்களின் உலகை இன்னும் கவனமாக பார்க்க ஆரம்பிக்க வேண்டும். இன்னும் நேர்மையாகச் சொல்லவா? இன்னொன்றையும் சொல்ல விரும்புகிறேன். நீங்கள் அந்த நாயிடம் நடந்துகொண்ட முறை காந்தியின் அகிம்சையை மிகவும் ஒத்திருக்கிறது.

 

காந்திக்கு துதிகள் எழுதுவதற்கு முன்பு நீங்கள் அவரை முழுக்க வாசிக்க வேண்டும். அவர் தன் மனைவியைப்பற்றியும் தெருநாய்களைப்பற்றியும் எறும்புகளைப்பற்றியும் என்ன எழுதினார் என்று பார்க்க வேண்டும். வெளிப்படையாகவே அகிம்சை என்பது மனிதர்கள் மனிதர்களிடம் காட்டுவது மட்டும்தான் என்று அவர் சொல்கிறார்

 

ராதா ராஜன் [மொழியாக்கம்]

 

 

அன்புள்ள ராதாராஜன்

 

உங்களிடம் விவாதிக்க ஏதுமில்லை. நீங்கள் சொல்வது போல அதற்கு இன்னமும் ‘சில பிறவிகள்’ எடுக்க வேண்டியிருக்கிறது. படிப்படியாக பிராமணன் ஆகவேண்டியிருக்கிறது. என் கட்டுரை இயங்கும் தளத்தை உணர நீங்களும் இன்னும் நிறைய வாசித்துப் பழக வேண்டும். ஆனால் இனி அது சாத்தியமும் அல்ல நல்லது.

 

நன்றி

ஜெ

 

***

 

கிறிஸ்துவுக்கு அன்பான சகோதரரே,

 

பரிசுத்த ஆவிக்கு ஸ்தோத்திரம்! நீங்கள் ஒருநாயைப்பற்றி எழுதியிருந்த கதையை வாசித்தேன். அதை ஒரு நண்பர் எனக்கு அனுப்பியிருந்தார். உங்கள் ஆன்மாவின் வேதனையை அந்தக்கதையில் இருந்து அறிந்துகொண்டேன். நீங்கள் வானத்தை நோக்கி இறைஞ்சி மன்றாடி கண்ணீர் விட்டதை மெய்யான தேவனாகிய ஏசுவானவர் பார்த்துவிட்டார் என்ற மகிழ்ச்சியான செய்தியை, அல்லேலூயா, உங்களுக்குத் தெரியப்படுத்த ஆசைப்படுகிறேன். உங்கள் மன்றாட்டை நான் என்னுடைய ஜெப இரவிலே என்னுடைய ஆன்மாவால் உணர்ந்தேன். கிறிஸ்துவின் அருமையான வார்த்தைகளை நான் என் காதுகளிலே கேட்டேன். இதோ என் மைந்தன் என்னுடைய மந்தையிலே தன்னைச்சேர்ப்பித்து என்னுடைய  உன்னதமான ஆசிகளை பெற்றுக்கொள்ள வந்திருக்கிறான் என்று கர்த்தராகிய ஏசு என் காதிலே சொன்னார். அதனால்தான் இந்தக் கடிதத்தை உங்களுக்கு எழுதுகிறேன்.

 

அல்லேலூயா! ஸ்தோத்திரம் பிதாவே!ஸ்தோத்திரம் ஆவியானவரே! நீங்கள் நிறைய புஸ்தகங்களை வாசிக்கிறீர்கள். நிறைய தத்துவங்களை அறிந்து வைத்திருக்கிறீர்கள். ஆனால் அவற்றால் கடுகுமணியேனும் பயன் இல்லை என்பதை உணர்ந்துகொள்ளுங்கள். வானத்திலும் பூமியிலும் மெய்யான தேவனாகிய கர்த்தரின் வார்த்தைகளாலன்றி எதனாலும் ஆன்மாவுக்கு மீட்பு கிடையாது.  நீங்கள் அக்கினியால் அபிசேகம் செய்யப்பட்டு மெய்யாலுமே உயிர்த்தெழுந்தாலொழிய உங்கள் பாவங்கள் மன்னிக்கப்படுவதில்லை. நீங்கள் இப்போது நம்பிக்கொண்டிருக்கும் விக்கிரகங்களையும் நீங்கள் வாசித்துக்கொண்டிருக்கும் பொய்யான புஸ்தகங்களையும் எனக்கு புறத்தாலே போ சாத்தானே இனி உன்னாலே எனக்கு தடையேதும் இல்லை என் ஆண்டவர் என்னை நோக்கி கை நீட்டியிருக்கிறார் என்று சொல்லி வீசியெறிந்துவிட்டு வராதவரை உங்கள் ஆன்மாவுக்கு மீட்பு கிடையாது என்று சொல்ல விரும்புகிறேன்.

 

என்னுடைய நாக்கிலே கர்த்தர் அவரது உக்கிரமான அக்கினியாலே ஆசீர்வதித்திருக்கிறபடியாலே நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் என்று எனக்கு தெரியும். நீங்கள் இந்த அழைப்பை நிராகரித்தீர்கள் என்றால் பரிசுத்த ஆவியின் நாமத்தினாலே, அல்லேலூயா,உங்களையும் உங்கள் குடும்பத்தையும் பாதாளம்வரை தாழ்த்துவதற்கான தேவ வல்லமை எனக்கு இருந்துகொண்டிருக்கிறது. ஆகையினால் கர்த்தருக்கு அன்பானவரே பொய்யான வசனங்களை எழுதுவதையும் பேசுவதையும் நிறுத்திவிட்டு மெய்யான தேவனின் திவ்வியமான அருளை அள்ளிப்புசிக்க வாருங்கள் என்று அருமையாய் அழைக்கிறேன்.

 

வானத்திலே இருந்துகொண்டு எல்லாருடைய கண்ணீரையும் பார்ப்பவரும் அவர்களின் முறையீட்டுக்கு பதில் சொல்பவரும் மெய்யான தேவனாகிய ஏசுவானவரே. மனிதர்களின் எல்லா சுகதுக்கங்களையும் நிறைவேற்றி வைப்பது பரிசுத்த ஆவியானவர் மட்டுமே. அல்லேலூயா! பரிசுத்த ஆவியிலே நீங்கள் விழித்தெழாதவரை நீங்கள் மேலே பார்த்தால் இருட்டும் கீழே பார்த்தால் பாதாளமுமாகவே இருக்கும். கர்த்தராகிய ஏசுகிறிஸ்து நமக்காக சிலுவையில் மாண்டார். மெய்யான தேவனின் அருமையான  வார்த்தைகள் அக்கினியாலே பூமிமீது எழுதப்பட்டிருக்கிறது. அவரது வார்த்தைகளை அறியாத பாவிகளுக்கு ஐயோ. அவர்களுடைய குடும்பங்களுக்கு ஐயோ. அவர்களின் மூதாதையருக்கு ஐயோ. ஆகையினால் நீங்கள் உடனடியாக மனம்திரும்பி மெய்யான தேவனின் வார்த்தைகளை உங்கள் சிரசுமீது ஏற்றுக்கொண்டு பரிசுத்த ஆவியிலே உங்களை ஒப்புக்கொடுத்து மீட்பு கொள்ளவேணுமாய் பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன்.

 

”கர்த்தராகிய ஏசுகிறிஸ்துவை விசுவாசி. அப்போது நீயும் உன் வீட்டாரும் ரட்சிக்கப்படுவீர்கள்”

 

கிளெமெண்ட் ஜெஸ்ட்டஸ்

திருச்சி

 

அன்புள்ள ·பாதர்,

 

பொதுவான நகலை அனுப்பாமல் இந்த வரிகளை நீங்கள் எனக்காகவே தட்டச்சு செய்திருப்பீர்கள் என்றால் என் நலன் மீதான உங்கள் அக்கறைக்கும் நீங்கள் எனக்காகச் செய்த ஜெபத்துக்கும் நன்றி. என்னுடைய ஆன்மீகம் என்பது முதுகெலும்புள்ளது. ஊர்வதற்குப் பதில் ஓடவும் பறக்கவும் வல்லமை கொண்டது. ஆகவே எனக்கு விசுவாசம் என்ற ஓடு தேவையில்லை. கைகால்களை உள்ளிழுத்து ஒடுங்கிக்கொள்ள விரும்பவும் இல்லை. உங்களுக்கு எத்தனை நெருக்கமானவரோ அதேயளவுக்கே கிறிஸ்து எனக்கும் நெருக்கமானவர். என்னிடம் அவர் விசுவாசத்தைச் சொல்லவில்லை. தேடும்படியும், தியானிக்கும்படியும்தான் சொன்னார். அவருக்கு என்னைத் தெரியும். என்றாவது ஓடு தேவையாகும் என்றால் உங்கள்தரப்புக்கே வருவேன்.

 

இன்று ஓர் பிராமணப்பெண்மணி எனக்கு எழுதியிருந்தார்கள், நான் மெய்ஞானத்தை அடைய பல பிறவிகள் எடுத்து மேலேற வேண்டும் என்று. நீங்கள் குறைந்தபட்சம் இந்தப்பிறவிலேயே மீட்பை வாக்குறுதி அளிக்கிறீர்கள்!

வணக்கம்

ஜெ

 

முந்தைய கட்டுரைமுறையீடு,கடிதங்கள்
அடுத்த கட்டுரைபழசிராஜா ஒரு மதிப்புரை