காந்தி தன் வாழ்க்கையையே ஒரு வெளிப்படையான பரிசோதனையாக ஆக்கிக்கொண்டவர். ஆகவே காமத்தையும் அப்படி ஆக்கிக்கொண்டார். அவற்றைப்பற்றி அவர் அதிகமாக எழுத நேரவில்லை. அவர் எழுதியிருக்கக்கூடிய சாத்தியங்களை நாற்பதுகளுக்குப்பின்னர் நடந்த கடுமையான அரசியல் சிக்கல்கள், மதமோதல்கள் இல்லாமலாக்கிவிட்டன. நடுநடுவே அவரே வெளிப்படையாக சொன்னவற்றைவைத்தே நாம் அவற்றை ஊகிக்க முடிகிறது.
காந்தியின் பாலியல்சோதனைகளை இந்தியர்கள் அதிகமாக விவாதிக்கவில்லை. நமக்கு அத்தகைய விவாதங்களை வெளிப்படையாக நடத்தும் மரபு இல்லை. காந்தி நமக்கு தந்தைவடிவமும்கூட. ஆகவே நாம் அவற்றை அப்படியே புதைத்துவிட்டோம். சுதந்திரத்துக்குப் பின்னர் காந்தி தேசிய அடையாளமாக ஆக்கப்பட்டபோது அத்தகைய விவாதங்கள் ஓரளவுக்குச் சட்டவிரோதமும் ஆயின. அவற்றை விவாதிக்கும் பலநூல்கள் தடைசெய்யப்பட்டிருக்கின்றன.
ஆனால் மேலைநாட்டவர் அந்தவகையான தடைகள் இல்லாமல் அவரது பாலியல் சோதனைகளைப் பற்றிப் பேசினார்கள். ஆனால் அதில் உள்ள சிக்கல் என்னவென்றால் மேலைநாட்டினருக்கு பாலியலை ஆராய்ச்சி செய்வதற்கென்று ஒரு வழக்கமான இருக்கும் முறைமையை ஒட்டியே அவர்களின் சிந்தனைகள் அமைந்தன. ஹாவ்லக் எல்லிஸ், கின்ஸி போன்றவர்களின் பாலுறவியல் கோட்பாடுகள் மற்றும் சிக்மண்ட் ·ப்ராய்டின் உளப்பகுப்பியல் ஆகிய கோட்பாடுகளைச் சார்ந்தே பெரும்பாலான ஆய்வுகள் அமைந்தன. இன்றுவரை காந்தியின் பாலியல்சோதனைகளைப் பற்றிய எல்லா பேச்சுகளும் இந்த எல்லைகளுக்குள்ளேயே நிகழ்ந்துள்ளன.
காந்தியைப்பற்றிய தந்தைமை சார்ந்த புனித பிம்பத்துடன் இருக்கும் நம் இளைஞர்கள் அந்நூல்களின் சில ஆய்வுகளை அங்குமிங்கும் உதிரியாகக் கேள்விப்பட்டு அதிர்ச்சியும் அருவருப்பும் கொண்டு காந்தியை நிராகரிக்கத்தலைபப்டுகிறார்கள். அந்த அதிர்ச்சிகளுக்குப் பின்னால் இருப்பது நம்முடைய மனநிலையில் உள்ள குறுகலும் போலித்தனமுமே என்பதை அவர்கள் தன்னைத்தான் பார்த்து அறிவதுமில்லை.
மலைநாட்டினரின் பாலியல் சார்ந்த அணுகுமுறை இரு தளங்களைச் சார்ந்தது. ஒன்று கிறித்தவ கத்தோலிக்க ஒழுக்கவியல். ‘காமம் என்பது ஒருவகையான பாவம்’ என்பது இதன் அடிப்படை. இன்னொன்று அதற்கெதிராக பத்தொன்பதாம் நூற்றாண்டில் வலிமைபெற்ற தாராளவாத அணுகுமுறை. தாராளவாதிகளின் மூலக்கோட்பாடு என்பது ·ப்ராய்டியமே. ‘காமத்தை அடக்கினால் நோய் வரும், சுதந்திரமாக விடுவதே சிறந்த பண்பாடு’ என்ற எளிமையான நம்பிக்கையின் அடிப்படையாக ·ப்ராய்டியத்தை வைத்திருக்கிறார்கள் இவர்கள்.
இவை காந்தியைப்போன்ற ஒரு சிக்கலான தத்துவதரிசியைப் புரிந்துகொள்ள உதவுபவை அல்ல. காந்தி கீழைத்தேய ஞானமரபில் உதித்தவர். மேலைநாட்டு சிந்தனை முறைமையை சுவீகரித்துக்கொண்டவர். இந்த இணைப்பினால் விளையும் பலவகையான புதியசாத்தியங்கள்தான் காந்தியை உருவாக்கின. அதேசமயம் ஏராளமான போதாமைகளை காந்தியில் இது உருவாக்கியது. பலவகையான குழப்பங்களையும் சிக்கல்களையும் பிறப்பித்தது.
ஆகவே காந்தியைப்பற்றி ஆராய்ந்த மேலைநாட்டினர் அவரது பாலியல் தளத்தை முடிந்தவரை சிக்கலாக ஆக்கி தேவையில்லாத கோட்பாடுகளையும் கண்டுபிடிப்புகளையும் அவர் மேல் போட்டு வைத்திருப்பதைக் காணலாம். அந்த சொற்குவியல்களைத்தாண்டி காந்தியை அணுகுவது இன்று எளிதானதல்ல.
உதாரணமாக, காந்தியால் அவருக்கு பாலியல் சார்ந்த எச்சரிக்கையை உருவாக்கிய நிகழ்ச்சியாக சத்தியசோதனையில் குறிப்பிடப்படும் அவரது இளமைப்பருவ நிகழ்ச்சியை எடுத்துக்கொள்ளலாம். காந்தியின் அப்பா உடல்நலமில்லாமல் மரணப்படுக்கையில் இருக்கும்போது காந்தி அவருக்கு மிக விரும்பி பணிவிடைகள் செய்கிறார். ஆனால் ஒருமுறை தந்தை கொஞ்சம் கண்ணயரும்போது தன் இளம் மனைவியுடன் உடலுறவு கொள்வதற்காக அவர் படுக்கையறைக்கு வந்துவிடுகிறார். அந்த நேரத்தில் தந்தையின் உயிர் பிரிகிறது. அச்செய்தியை வேலையாள் கதவைத்தட்டி காந்தியிடம் சொல்கிறார். காந்தி அதற்காக வருத்தப்படுகிறார். மானுட அகத்தில் காமம் எந்த இடத்தில் உள்ளது என உணர்கிறார்.
இப்படி ஒரு சந்தர்ப்பம் கிடைத்தால் மேலை உளவியலாளர்கள் விடுவார்களா என்ன? அவர்களுக்கு சம்பிரதாயமாக பாலியல் பற்றி பேசத்தேவையான இரு அடிப்படைகளும் இதில் உள்ளன. ஒன்று, ஈடிப்பஸ் உளச்சிக்கல். காந்தி தந்தையை புறக்கணித்தல்லவா காமத்துக்கு வந்தார்? இரண்டு, குற்றவுணர்ச்சி. காந்தியின் பிற்காலத்தைய எல்லா பாலியல் சோதனைகளுக்கும் அடிப்படை குற்றவுணர்ச்சியே என எளிதில் முத்திரை குத்திவிட்டார்கள். அதை காந்தியின் எழுத்தில் வாசிப்பில் செயலில் கண்டுகொள்வதற்கான ஆராய்ச்சியே நிகழவில்லை.
முக்கியமான உதாரணம், புகழ்பெற்ற உளப்பகுப்பாய்வாளரான எரிக் எரிக்ஸனின் ‘காந்தியின் உண்மை : போராடும் அகிம்சையின் பிறப்பிடம்’ [Gandhi’s Truth: On the Origin of Militant Nonviolence: Erik Erikson ] என்ற நூல். இந்நூல் காந்தி என்ற சிக்கலான நிகழ்வை மேலை உளப்பகுப்பாய்வின் சில உபகரணங்களைக்கொண்டு எளிமைப்படுத்துகிறது. ஒரு குற்றவுணர்ச்சியைச் சரி செய்ய வாழ்நாளெல்லாம் தன் ஆழ்மனத்துடன் போரிட்ட பலவீனமான , குழம்பிப்போன மனிதர்தான் காந்தி என்று ‘கண்டுபிடிக்கிறார்’ எரிக் எரிக்ஸன்.
அதாவது காந்தி ஒரு நோயாளி, இவரிடம் வந்திருந்தால் படுக்கையில் மல்லாக்க வைத்து முகத்தில் விளக்கை அடித்து மெல்லியகுரலில் பேசி காந்தியைக் ‘குணப்படுத்தி’யிருப்பார். எரிக் எரிக்ஸனின் நூலின் விரிவான கோட்பாட்டு ஆய்வுகள், நவீனக் கலைச்சொற்கள் ஆகியவற்றுக்கு அடியில் இருப்பது நம்ப முடியாத அளவுக்குச் சாதாரணமான எளிமைப் படுத்தல். ஆனால் காந்தியின் அகிம்சை கோட்பாட்டை எரிக் எரிக்ஸன் மிகுந்த படைப்பூக்கத்துடன் அணுகியிருப்பதையும் காணலாம். காரணம் மேலைநாட்டு கோட்பாடுகள் வரலாற்றுநோக்கில் ஒன்றை ஆராய மிகவும் உதவியானவை. ஒட்டுமொத்தமாக பார்ப்பதற்கும் உள்ளோட்டங்களை அடையாளப்படுத்துவதற்கும் அவை உதவுகின்றன.
தந்தையின் மரணத்தை காமத்தால் உதாசீனம்செய்தது தனக்களித்த குற்றவுணர்ச்சியை காந்தி எழுதியிருக்கிறார். ஆனால் அது அவரது தேடல்களுக்கான முழுமுதல் காரணம் ஆக வேண்டியது இல்லை. காமம் உருவாக்கும் ஆளுமைச்சிதறலை அவருக்குக் காட்டியிருக்கலாம். காமம் எத்தனை வலிமையானது என்று அவருக்குக் காட்டியிருக்கலாம். காமத்தை ஒரு ஆன்மஅழுக்காகச் சித்தரிக்கும் மரபு அவருக்கு தெளிவாகியிருக்கலாம். அது ஒரு தொடக்கமாக இருந்திருக்கலாம்.
காந்தியைப்போல நாடகீயமான ஓர் அனுபவம், குற்றவுணர்ச்சி, இல்லாத இந்திய ஞானிகள் அனேகமாக அனைவருமே காந்தி வந்துசேர்ந்த அதே இடத்துக்கு தங்கள் வளர்ச்சியின் ஒரு கட்டத்தில் வந்து சேர்ந்திருக்கிறார்கள். ராமகிருஷ்ண பரமஹம்ஸர், அரவிந்தர், விவேகானந்தர், வள்ளலார், நாராயணகுரு. அவர்கள் அனைவரையுமே இயக்கியது குற்றவுணர்ச்சி என்று ஒருவர் சொன்னால் அது எத்தனை அபத்தம்? அடுத்தபடியாக ஒட்டுமொத்த இந்திய ஞானத்தேடலே குற்றவுணர்ச்சியின் குழந்தை என்று எளிமைப்படுத்தலாமே? உண்மையில் பிரம்மசரியம் அல்லது காம நிராகரிப்பு என்பது நம் மரபு ஒரு ஞானத்தேடியை கொண்டுசென்று சேர்க்கும் ஒரு முக்கியமான புள்ளி.
பொதுவாக இந்த விஷயத்தை புறவயமாக, கோட்பாடுகளையும் கொள்கைகளையும் கொண்டு, புரிந்துகொள்ள முயற்சிப்பது ஒரு வகை மூளைப்பயிற்சியாகவே அமையும். இத்தகைய ஆய்வுகள் நமக்கு ஓர் ஆச்சரியத்தையும் காலப்போக்கில் அவநம்பிக்கையையும் மட்டுமே உருவாக்கும். ஒவ்வொரு காலகட்டத்துக்கும் ஒரு புதிய கோட்பாடு வந்து அதன் மூலம் காந்தி பரிசீலிக்கப்படுகிறார். நேற்று ப்ராய்டியம் என்றால் இன்று குறியீட்டியல். நாளை பிறிதொன்று வரும்
நம்முடைய அந்தரங்கமான பாலியல் உலகை நாம் அறிவோம். அதனுடன் நாம் போராடியதையும், சமரசம் செய்துகொண்டதையும் அறிவோம். நம்முடைய சொந்த அனுபவங்களைக் கொண்டு காந்தியைப் புரிந்துகொள்வதே எளிதானது, நமக்குப் பயன்தருவது. கோட்பாடுகளை அவ்வாறு புரிந்துகொள்வதற்கு அவை கருவியாக உதவுமா என்ற வகையில் மட்டுமே நாம் பயன்படுத்தவேண்டும்.
காந்தி எந்தக் குற்றவுணர்ச்சியினாலும் பாலியல் சோதனைகளுக்கு முன்வரவில்லை. மாறாக அவரே சொல்லியிருப்பதுபோல தன்னுடைய பலவகையான ஆன்மீக சோதனைகளின் ஒரு கட்டத்தில் பாலியல் சோதனைகளுக்கும் வந்துசேர்கிறார். அவருக்கு 36 வயதாகும்போது தென்னாப்ரிக்காவில் அவர் பிரம்மசரியத்தைக் கடைப்பிடிப்பது என்ற முடிவுக்கு வருகிறார். ஏற்கனவே பலவகையான உணவுக்கட்டுபபடுகள், அன்றாட உடலுழைப்பு என அவர் பல கடும்நெறிகளை தனக்கென வகுத்துக்கொண்டிருந்தார்.
தன் முடிவை அவர் கஸ்தூர்பாயிடம் பேசி அவரது அனுமதி வாங்கித்தான் ஆரம்பிக்கிறார். கடினமானதாக இருந்தாலும் காந்தி அதைத்தொடர்ந்து செய்கிறார். இக்காலகட்டத்தில் இதுகுறித்த அவதானிப்புகளை காந்தி எழுதவில்லை. ஆனால் என்ன நடந்திருக்கும் என அவரது பிற்காலத்து செயல்களை ஒட்டி எளிதில் ஊகிக்க முடியும்.
காந்தி புலனடக்கத்துக்காக எந்த விதமான மேலதிக முயற்சியையும் மேற்கொள்ளவில்லை. வெறுமே புலன்களை அடக்குகிறார், அவ்வளவுதான். இந்துமெய்ஞான மரபில் உள்ள யோகமுறை, தியானமுறை, தாந்திரீகமுறை போன்ற எதையுமே அவர் பரிசீலிக்கவில்லை. அவற்றைப்பற்றி அவருக்கு எதுவுமே தெரியாது. கிறித்தவ மரபில் பிரம்மசரிய நெறிக்காக முன்வைக்கப்படும் கடுமையான பிரார்த்தனை, ஒடுக்கம் போன்றவையும் அவரால் கடைப்பிடிக்கப்படவில்லை
அவர் தன் முரட்டுத்தனமான மனவலிமையை மட்டுமே நம்பி அந்தச் சோதனையைச் செய்தார். அந்த மனவலிமை என்பது ஓர் நீராவி யந்திரத்தின் வாயை கையால் மூடிப்பிடித்துக்கொள்வது போல. காந்தியின் மனவலிமை முழுக்க இதற்கே செலவாகியிருக்கும். அழுத்தப்பட்ட காமம் ஆழ்மனதுக்குச் சென்று மேலும் மேலும் பேருருவம் கொண்டிருக்கும். கனவுகளும் தன்னை மீறிச்செல்லும் பகற்கனவுகளுமாக காந்தி கடுமையான மனச்சோதனைக்கு ஆளாகியிருப்பார்.
ஏனென்றால் யார் ஒருவர் அழுத்தமான ஆன்மீகத்தேடலுக்கு வருகிறார்களோ அவர்கள் சாதாரண மக்களை விட மேலான அறிவுத்திறனும் கற்பனைத்திறனும் கொண்டவர்களாகவே இருப்பார்கள்.அதை மேலான உள ஆற்றல் என்று சொல்லலாம். இன்னும் பொருத்தமாக அடிப்படையான உயிராற்றல் எனலாம். அது காமத்திலும் இருப்பது என்பதனால் அவர்களின் காமமும் பெரிதே. பசியும் பெரியதே.
தன்னுடைய அபாரமான காமவிருப்பு , உணவு விருப்பு இரண்டைப்பற்றியும் காந்தி எழுதியிருக்கிறார். நம்முடைய சித்தர்கள் அவர்களின் பயிற்சிக்காலத்தில் தங்கள் அபரிமிதமான காமத்தைப் பழித்து தங்களை பாவி என்றும் நீசன் என்றும் சபித்துக்கொண்டு எழுதிய பல பாடல்களை நாம் காணலாம். உடலில் வெளிப்படும் அந்த மிதமிஞ்சிய ஆற்றலே பின்னர் உள்ளத்திலும் வெளிப்படுகிறது. நம்முடைய பல ஞானியர் சண்டியர்களாக, போலீஸ்காரர்களாக, பயில்வான்களாக எல்லாம் இருந்திருக்கிறார்கள் என்பதை இதை வைத்து புரிந்துகொள்ளலாம்.
காந்தி அந்த உக்கிரமான காமத்தை அதற்கிணையான உக்கிரமான தன்னகங்காரத்தால் மோதி நிறுத்தியிருந்தார் என்று சொல்லலாம். எந்த அளவுக்கு எதிர் அழுத்தம் அளிக்கிறோமோ அந்த அளவுக்கு உக்கிரமாக ஆகும் தன்மை காமத்துக்கு உண்டு– தியான அனுபவமுள்ளவர்கள் அறிவார்கள் இதை. ஆக, காந்தி தென்னாப்பிரிக்காவில் இருந்த காலகட்டத்திலும் இந்தியாவுக்கு வரும்போதும் உச்சகட்ட அழுத்தத்திலேயே இருந்திருப்பார். நேரம்காலமில்லாத பொதுச்சேவை, மிகக்குறைவான தூக்கம் மூலமே அவர் அந்த அக ஆற்றலை வெளியே பிய்த்து வீசிச் செலவழித்திருப்பார்.
இந்தியாவுக்கு வந்த காலகட்டத்தில் காந்தியின் வாழ்க்கையில் விசித்திரமான ஒரு அத்தியாயம் சரளாதேவி சௌதராணியுடன் அவருக்கு இருந்த உறவு. ராஜ்மோகன் காந்தி ‘காந்தி- மனிதர் அவரது மனிதர்கள் மற்றும் பிரிட்டிஷ் சாம்ராஜ்யம்’ [Gandhi: the man, his people, and the empire By Rajmohan Gandhi] என்ற அவரது காந்தியைப்பற்றிய நூலில் இந்த உறவைப்பற்றி சொல்கிறார்.
1919ல் ஜாலியன் வாலாபாக் படுகொலைக்குப் பின்னர் பஞ்சாபில் நடந்த நிகழ்ச்சிகளை ஆராய்வதற்காக காந்தி அமிர்தசரஸ¤க்கும் லாகூருக்கும் சென்றார். அப்போது லாகூரில் பஞ்சாபின் காங்கிரஸ் தலைவரும் இதழாசிரியருமான ராம் பஜ் சௌதுரியின் வீட்டில் தங்கினார். ராம்பஜ் சௌதுரியின் மனைவி சரளாதேவி அவர்பால் ஈர்க்கப்பட்டார். அவரும் அவளிடம் ஈர்க்கப்பட்டார்.
சரளாதேவி சௌதராணி
சரளாதேவி வங்காளத்தைச் சேர்ந்தவர். செல்வந்தக் குடும்பத்தில் பிறந்தார். தாகூருக்கு நெருக்கமான உறவினர். மிக இளம் வயதிலேயே அரவிந்தரால் ஈர்க்கப்பட்டு பயங்கரவாதிகளுடன் இணைந்து சுதந்திரப்போராட்டத்தில் ஈடுபட்டவர். முதல்முதலாக காங்கிரஸ் மாநாட்டில் வந்தே மாதரம் பாடலைப்பாடியவர் அவரே. வங்காள காவல்துறையின் நெருக்குதல்காரணமாகவே அவர் தொலைதூர பஞ்சாபுக்கு ராம்பஜ் சௌதுரிக்கு மணமகளாக வந்தார். பேரழகி. இலக்கியம் , கலைகள், அரசியல் ஆகியவற்றில் ஆர்வம் உடையவர்.
காந்தி சரளா தேவையைச் சந்திக்கும்போது காந்திக்கு ஐம்பதுவயது. சரளாதேவிக்கு நாற்பத்தேழு. காந்திக்கு நான்கு குழந்தைகள் இருந்தன. சரளாதேவிக்கு ஒரு மகன். சம்பாரன் சத்தியாக்கிரகம், ஒத்துழையாமை இயக்கம் ஆகியவற்றை நடத்தி ஏற்கனவே மகாத்மா என்று அழைக்கப்பட்டிருந்தார் காந்தி. அவரைச்சுற்றி இந்திய சுதந்திரப்போர் மையம் கொண்டுவிட்டது.
அவர்கள் இருவருக்கும் இடையேயான ஈர்ப்பு மிகக்குறைவான காலம் நீடித்தது. காந்தி சரளாதேவியுடன் நீண்ட உரையாடல்களில் ஈடுபட்டார். பின்னர் சுருக்கமான சில கடிதங்கள் எழுதினார். அக்கடிதங்களில் சரளாதேவியை தன் அறிவார்ந்த நண்பர் என்று சொன்னார். சரளாதேவி காந்தியின் அற்புதமான வசீகர சக்தியைப் பற்றி உணர்ச்சிகரமாக எழுதினார்.
காந்தியின் வழக்கப்படி அவர் சரளாதேவியிடம் அவருக்கு ஏற்பட்ட ஆர்வத்தை மிக வெளிப்படையாகவே வைத்திருந்தார்.1920ல் சரளாதேவியின் கணவர் மரணமடைந்தபின்னர் அந்த ஈர்ப்பு இன்னும் நெருக்கமானதாக ஆகியது. காந்தி சரளாதேவியை மணம்புரிய முடிவெடுத்தார். அதை தன் சகாக்களிடம் தெரிவித்தார். காந்தி அப்போதும் பிரம்மசரிய நெறியை கடுமையாகக் கடைப்பிடித்து வந்தார். சரளாதேவியுடன் அவருக்கிருந்த ஈர்ப்பு என்பது ஓர் அறிவார்ந்த நட்பு ஈடுபாடு என்பதாகவே இருந்தது. ஆகவே அவர் மணம் முடிக்க முடிவெடுத்தது அவர்களுக்கு அதிர்ச்சியை அளித்தது.
காந்தி தான் சரளா தேவியுடன் கொண்டுள்ள உறவு சற்றும் உடலிச்சை கலவாதது என்று விளக்கம் அளித்தார். தங்கள் இருவருக்குமே அந்த வயது தாண்டிவிட்டது என்றும், ஆண் பெண் உறவை ஒருவரை ஒருவர் அறிவார்ந்த வளர்ச்சியை நோக்கிக்கொண்டுசெல்லும் ஓர் உரையாடலாக ஆக்கமுடியுமா என்று தான் சோதனைசெய்யப் போவதாகவும் காந்தி கூறினார். ஆனால் அதை அவரது மகன் தேவதாஸ் காந்தி, ராஜாஜி போன்றவர்கள் கடுமையாக எதிர்த்தார்கள். அது அவரது படிமத்தை அழித்து சுதந்திரப்போராட்டத்தையே இல்லாமலாக்கிவிடும் என்று சொன்னார்கள். காந்தி அதைப்பற்றியெல்லாம் கவலைப்படுபவர் அல்ல.
ஆனால் பின்னர் தேவதாஸ் தன் தந்தை காந்தியிடம் தனியாகப்பேசி கஸ்தூர்பா அதனால் கடுமையாகப் புண்பட்டிருப்பதை விளக்கினார். காந்தி அந்த எண்ணத்தில் இருந்து பின்வாங்க ஒத்துக்கொண்டார். சரளாதேவிக்கு தன்னுடைய பின்வாங்கலை தெரிவித்து கடிதம் எழுதினார். ஆனால் அதனால் சரளாதேவி மிகக் கடுமையாக மனம் புண்பட்டார். காந்தியைப்பற்றிய எதிர்மறையான கடிதங்களை எழுதினார்.
பின்னர் சரளாதேவியின் மகன் காந்தியின் ஆசிரமத்திற்கு வந்திருக்கிறார். காந்தி சரளாதேவியுடனான தன் உறவைப்பற்றி அவரது சுயசரிதையில் அதிக விளக்கம் இல்லாமல் தனக்கு ஒரு பெண்ணிடம் ஈர்ப்பு ஏற்பட்டது என்றும் விரைவிலேயே அதிலிருந்து விலகிவிட்டதாகவும் எழுதியிருக்கிறார். ஆனால் அப்போது சரளாதேவி உயிருடன் இருந்தமையால் அதை விரிவாகப் பதிவுசெய்யவில்லை.
ராஜ்மோகன் காந்தியின் நூல் வெளிவரும்வரை இந்தத் தகவல்கள் விரிவான விவாதத்துக்கு வரவில்லை. காந்தி எதையுமே ரகசியமாகச் செய்யவில்லை. கடிதங்களை எல்லாம் அவர் தன் செயலருக்கு சொல்லிக்கொடுத்தே எழுதவைத்திருக்கிறார். எல்லா கடிதங்களும் வெளிப்படையாக கிடைக்கின்றன.
காந்தியின் இந்த மனத்தடுமாற்றத்தைப்பற்றி அவரது சுயசரிதை நூலின் ஒற்றைவரியை வைத்து நான் நித்ய சைதன்ய யதியிடம் விவாதித்திருக்கிறேன் என்பதை நினைக்க ஆச்சரியமாகவே இருக்கிறது. நான் அன்று பித்துக்குளிமுருகதாஸ் மணம்செய்துகொண்டதைச் சார்ந்துஅதைப்பற்றிப் பேசியது நினைவிருக்கிறது. அப்போதுதான் நான் அவரது சிலபாடல்களை நித்யாவுக்குக் கொண்டு வந்துகொடுத்திருந்தேன். நித்யாகுருகுலத்திலும் அதைப்போன்ற ஒரு நிகழ்வு நடந்திருந்தது. துறவியர் குருகுலங்களில் இந்தச் சிக்கல் அடிக்கடி எழுவதாகும். அதை விரிவாகவே விவாதிக்கவேண்டும்.
பொதுவாக மானுட வாழ்க்கையில் சில ஊகிக்கக்கூடிய உளவியல் நிகழ்வுகள் உண்டு. திருமணமாகி ஏழெட்டு வருடங்களாகும்போது ஆண்கள் சட்டென்று பிற பெண்களுடன் உறவை உருவாக்கிக்கொள்வதற்கான ஒரு துடிப்பை அடைகிறார்கள். மிகத்தீவிரமாக குடும்பத்திலும் மனைவியிலும் அர்ப்பணம் கொண்டுள்ள ஆண்கள்கூட இவ்வாறு சட்டென்று திசைதிரும்பும்போது நமக்கு அதிர்ச்சியும் ஆச்சரியமும் நிகழ்கிறது. இதேபோல நாற்பதை ஒட்டிய வயதுகளில், மாதவிலக்கு நிற்பதற்கான காலகட்டத்தை ஒட்டி, பெண்களுக்கும் ஒரு பாலியல் மீறல் நிகழ வாய்ப்பிருக்கிறது. இதுவும் சமூகத்தில் இன்றுவரை முழுமையாகப் புரிந்துகொள்ள முடியாத ஒரு விஷயமாகவே நீடிக்கிறது.
இதற்கான உடலியல் காரணங்கள் பல உள்ளன. உளவியல் காரணங்களும் உள்ளன. அவற்றை விவாதிக்க இங்கே இடமில்லை. மனித மனம் என்பது பெரும்பாலும் சூழல்களின் சிருஷ்டி. உடல் என்ற மனிதனால் அறியமுடியாத அமைப்பின் ஒரு பகுதியே மனம் என்பது. ஒரு மனிதன் தன் மனத்தை அவதானிக்கும்தோறும் அது எந்த அளவுக்கு அவனை மீறிய ஒன்று என்பதை அறிவான். ஆகவே இந்நிகழ்வுகளை தனி மனிதர்கள் சார்ந்ததாக அல்ல, மானுட உடல் மற்றும் மனம் சார்ந்ததாக மட்டுமே எடுத்துக்கொள்ளவேண்டும்.
இதேபோன்ற ஒரு நிகழ்வு துறவு வாழ்விலும் உள்ளது. துறவு பூண்டு வாழ்க்கையை அமைத்துக்கொண்டபின் ஐம்பதை ஒட்டிய வயதுகளில் துறவிகளுக்கு கடுமையான மனச்சஞ்சலம் ஒன்று உருவாகிறது. துறவிகளில் ஏராளமானவர்கள் இந்தப்பிராயத்தில் சட்டென்று துறவை உதறி மணம் செய்துகொண்டிருக்கிறார்கள். இப்போது நீங்கள் அறிந்த இத்தகைய பல நிகழ்ச்சிகள் அலையலையாக உங்கள் நினைவில் எழக்கூடும்.
நாராயணகுருவின் இயக்கத்தில் ஏராளமான நிகழ்ச்சிகள் உள்ளன. நித்யா பேச ஆரம்பித்தது மகாகவி குமாரன் ஆசானைப்பற்றி. ஆசான் சட்டென்று துறவையும், நாராயணகுருவின் வாரிசு என்ற பட்டத்தையும் உதறிவிட்டு திருமணம் செய்ய முடிவெடுத்தது கேரளத்தில் பெரிய அதிர்ச்சியை உருவாக்கிய நிகழ்வு. அதேபோல நாராயணகுருவின் இன்னொரு மாணவர் ‘சகோதரன்’ அய்யப்பனும் மணம்செய்துகொண்டார். இவர்கள் மிக இளம் வயதான பெண்களை மணந்துகொண்டார்கள்.
அவர்கள் மிக நேர்மையானவர்களாக இருந்தமையாலும் தங்கள் பிம்பத்தை போலியாக உருவாக்கி எந்த மரியாதையையும் வசதியையும் அடையவிரும்பாதவர்கள் என்பதாலும்தான் உதறிச்சென்று மணம்முடிக்கும் முடிவை எடுத்தார்கள் என்று நித்யா சொன்னார். அந்த ஐம்பது வயது தடுமாற்றத்தை சரியாக வகுத்துவிட முடியாது என்றாலும் சிலவற்றைச் சொல்ல முடியும் என்றார். முக்கியமான விஷயம், தனக்கு இனிமேல் உடல்சார்ந்த காமம் பெரிய விஷயமல்ல என்று அந்தத் துறவிக்குப் படுகிறது. உடல்சார்ந்து பெண் தேவையாக இல்லை என்ற நிலையிலும் ஒரு பெண் மீது ஏற்படும் அபாரமான ஈர்ப்பு என்பது ஆன்மீகமானது அல்லது அறிவார்ந்தது என்று அவர் எண்ணிக்கொள்கிறார். தன்னிடம் பல துறவிகள் அப்படிச் சொல்லியிருக்கிறார்கள் என்றார் நித்யா.
இன்னும் நுட்பமாக இதைப் பார்த்தால் இது உயிரின் ஆதி இயல்பாகும். ஐம்பது வயது என்பது மரணம் நோக்கிய நகர்வு தொடங்கும் காலகட்டம். அந்த எண்ணம் ஆழ்மனதை பாதிக்கையில் உயிரின் வாழும் இச்சை வாழ்க்கையை நோக்கி தாவுகிறது. இளமையை நோக்கி அது செல்கிறது. வாழ்க்கை அப்படி முடிந்துவிடக்கூடாது என எண்ணுகிறது. ஏறத்தாழ இந்த வயதில்தான் ஆண்களில் பலர் பல புதிய விஷயங்களை நோக்கித்தாவுகிறார்கள். தொழிலை மாற்றிக்கொள்பவர்கள் உண்டு. ஊரை மாற்றிக்கொள்பவர்கள் உண்டு. முற்றிலும் புதிய தளங்களில் புதிதாக வாழ்க்கையை உருவாக்கிக்கொள்ள செல்பவர்கள் உண்டு. அத்தனை முயற்சிகளுக்கும் சாராம்சமான துடிப்பு ஒன்றே, ‘என் வாழ்க்கை முடியவில்லை நான் இப்போதுதான் தொடங்குகிறேன், இன்னும் ஒரு வாழ்க்கை மிச்சமிருக்கிறது’ என்ற பிரக்ஞைதான் அது.
இவ்விரு விஷயங்களுடனும் இணையும் மூன்றாவது அம்சம் துறவு வாழ்க்கையின் பகுதியாகிய யோகத்தைச் சார்ந்தது. யோகப்பயிற்சியின் வழக்கமான சிக்கல்களில் ஒன்று என்னவென்றால் மிகுந்த பரபரப்புடனும் தீவிரத்துடனும் ஆரம்பிக்கும் முதல்கட்டத்துக்கும், ஒரு பெரிய வெளிப்படுத்தலாக இருக்கும் முதல் திறப்புக்கும் பின்னர் வெகுகாலம் ஒன்றுமே நிகழாமல் போய்விடலாம் என்பதுதான். அதற்கு அந்த யோக சாதகனின் தனிப்பட்ட ஆளுமை, அவரது குருமுறை, அவர் கொண்ட வழிமுறை என பல காரணங்கள் உண்டு.
பொதுவாக கற்பனைத்திறனும், தர்க்கத்திறனும் அதிகமாக உள்ளவர்களுக்கு இரண்டாம் கட்டம் உருவாக மிகவும் தாமதிக்கும். அவர்கள் தாங்கள் அடைந்தவற்றை கற்பனைமூலம் மீட்டி, தனக்குத்தானே சொல்லிச் சொல்லிப்பார்த்துக்கொண்டு, அதையே ஒரு பெரிய அமைப்பாக மனதுக்குள் வளர்த்து வைத்திருப்பார்கள். அந்த அமைப்பே அவர்கள் மேலும் முன்னகர்வதற்கு பெரும் தடையாக அமையும்.
இவ்வாறு முன்னகர்தல் இல்லாமல் இருக்கையில் யோகசாதனை சலிப்பூட்டும் ஓர் அன்றாட நிகழ்வாக ஆகிவிடுகிறது. துறவிகள் யோகசாதனையின் பொருட்டு அன்றாட வாழ்க்கையை மிக எளிமையாக வைத்திருப்பார்கள் ஆதலால் மொத்த வாழ்க்கையே பொருளில்லாத, மாற்றமில்லாத, சுழற்சியாக ஆகிறது. இந்நிலையில் இந்த வகையான ஈர்ப்புகள் உக்கிரம் அடைகின்றன
இந்த மூன்று காரணிகளும் இணையும்போதுதான் அந்த ஐம்பது வயது உளச்சிக்கல் ஏற்படுகிறது. பல துறவிகள் உக்கிரமாக ஏதாவது பெண்ணால் கவரப்படுகிறார்கள். அந்த அனுபவத்தின் தீவிரம் அவர்களை அதிரச்செய்கிறது. அவர்களை அது ஒரு வன்மையான ஆறுபோல சுழற்றி அடித்துச்செல்கிறது. அவர்கள் அந்த வேகத்தில் தங்களை கைவிட்டுவிடுகிறார்கள். மிகச்சிலரே அதைத்தாண்டி வருகிறார்கள். எப்படி துறவிகள் இந்தவயதில் இல்லறத்துக்கு வருகிறார்களோ அப்படி இல்லறத்தார் ஆன்மீகத்திற்குள் குதிப்பதும் உண்டு.
இன்னொரு விஷயத்தையும் நித்யா சிரித்தபடிச் சொன்னார். இந்த நடுவயது துறவிகள் மணம்புரிந்துகொண்ட பெண்களைப் பார்த்தால் அவர்கள் சாதாரணமானவர்கள் அல்ல என்பது தெரிகிறது. அபாரமான அழகும் அறிவாற்றலும் கொண்டவர்கள். பெண்களில் முதல்தரத்தவர். எந்த ஓர் இளைஞனும் அவர்களுக்காக தவமிருப்பான். அவர்கள் ஏன் இவர்கள்பால் ஈர்க்கப்படுகிறார்கள்? பலதருணங்களில் அந்த உறவுக்கான முதல் அடியையே அந்தப்பெண்தான் வைத்திருப்பாள். அவரைக் கவர்ந்து தன்னுள் இழுத்திருப்பாள்.
அவ்வாறு ஓரு துறவியைக் கவர்ந்து மணந்த இளம்பெண் அவள் செய்தது தவறா என்று தன்னிடம் கேட்டபோது ”நீ ஒன்றும் செய்யவில்லை. உன் கருப்பைதான் அந்த செயலைச் செய்தது” என்று தான் சொன்ந்தாக நித்யா சொன்னார். அத்துடன் துறவிகளில் சிறந்தவர்களுக்கே இது நிகழ்கிறது. அவர்களின் அபாரமான உள்ள அகஆற்றல், அதன் வெளிப்பாடான அவர்களின் ஆளுமை பெண்களைக் கவர்கிறது, அவர்களுக்கு ஒரு சவாலாக ஆகிறது.
எப்போதுமே கற்பனையும் சிந்தனைத்திறனும் கொண்ட பெண்கள் ஆணின் உடலாலோ இளமையாலோ பெரிதாகக் கவரப்படுவதில்லை. ஆணின் ஆளுமையாலேயே கவரப்படுகிறார்கள். ஆணின் அகவல்லமையே அவர்களை கவர்கிறது. அது அவர்களில் செயல்படும் உயிரின் இச்சை. தன் இனத்தின் மிகச்சிறந்த கூறுகளை அடுத்த தலைமுறைக்குக் கொண்டுசெல்ல விரும்பும் உயிரியல் விருப்பு அது என எளிமைப்படுத்தலாம். ஒரு பெண்ணுக்கு அவள் உள்ளத்தைக் கவரும் ஆணைப்போலவே ஒரு குழந்தை வேண்டும் என்ற எண்ணம் ஆழ்மன விருப்பாக உருவாகிறது.
மேலும் அது அவள் அகங்காரத்தை சீண்டுகிறது. ஆணை வெல்வது என்பது பெண்ணின் ஆளுமையின் ஒரு இயல்பான விருப்பு. வெல்லமுடியாத ஆணை வெல்வதே மிகச்சிறந்த பெண்ணின் சவாலாக இருக்கிறது. அவளை அறியாமலேயே அவள் உடலில், பேச்சில் எல்லாம் அந்த கவரும்தன்மை குடியேறிவிடுகிறது. மகாகவி குமாரன் ஆசானை அடையாமல் பானுமதி அம்மாவின் ஆளுமை நிறைவடைந்திருக்காது. அபூர்வமாக சிலசமயம் இந்த விருப்பு அடிமைப்படுத்துவதாகவும் அவமானப்படுத்துவதாகவும் கூட அமையும்.
காந்தி விஷயத்தில் நடந்தது மிகச்சரியாக இதுவே என்றார் நித்யா. காந்தி அவரது பிரம்மசரிய நெறியை எந்த வகையான யோகமுறைகளும் இல்லாமல் நேரடியான மனவலிமையாலேயே செய்துகொண்டிருந்தார். ஏறத்தாழ பதினைந்து வருடங்களாக அதைக் கடைப்பிடிக்க முடிந்தமை காரணமாக அதை தான் வென்றுவிட்டதாக அவர் எண்ணினார். உடல்சார்ந்த காமம் மட்டுமே காமம் என்று அவர் எண்ணியிருக்கலாம். அது தனக்குத் தேவையில்லை என்ற நிலையில் அதிலிருந்து விடுபட்டதாக கற்பனைசெய்துகொண்டிருக்கலாம்.
ஆனால் ஆணுக்குப் பெண் உடலாக மட்டும் தேவையானவள் அல்ல. தோழியாக அவள் இடம் இன்னும் பெரியது. படுத்துக்கொண்டால் மட்டும் காமம் அல்ல, அந்த தோழமையும் காமமே. காந்திக்கு கஸ்தூர்பா ஒரு அர்ப்பணமுள்ள மனைவி அவ்வளவுதான். அறிவுத்தளத்தில் அவரது தோழியாக அவரால் இருக்க முடியாது. மிக நுட்பமான நகைச்சுவை உணர்வும் அறிவார்ந்த விவாதங்களில் பேரார்வமும் கொண்ட காந்தியால் கஸ்தூர்பாயை ஒரு இணையாக கருதவும் முடிந்திருக்காது.
ஆகவே அபாரமான நுண்ணுணர்வும், அறிவுத்திறனும், நகைச்சுவையும் கொண்ட சரளாதேவியால் காந்தி உலுக்கப்பட்டிருக்கலாம். சரளாதேவியுடனான தனது உரையாடல்கள் மிக உயர்தளத்தில் இருந்தன என்று காந்தி சொல்கிறார். அது காமம் அல்ல என்று காந்தி கற்பனைசெய்துகொண்டது அதனால்தான். அத்தகைய காமம் இல்லாத பெண் நட்பு பிரம்மசரியத்துக்கு உகந்ததே என்றும் அவர் எண்ணியிருக்கலாம். சரளா தேவியை அவர் மணம் புரிய முயன்றது அவரது நிரந்தரத் தோழமைக்கான ஏக்கத்தால்தான். துறவிகளின் அந்த ஐம்பது வயது அகழியில் காந்தியின் காலிடறி விழுந்திருக்க எல்லா வாய்ப்புகளும் இருந்தன.
ஆனால் பிடரியில் அடிவிழுந்தது போல எப்போதோ காந்தி அது காமம் தான் என்று கண்டுகொண்டிருப்பார். அந்த மன சஞ்சலத்தை அவர் மிகுந்த வருத்தத்துடன் தான் பார்த்தார் என்பதை சுயசரிதையில் காண்கிறோம். பின்னர் அதைப்பற்றி அவர் கஸ்தூர்பாவிடம் விவாதித்திருக்கிறார். கஸ்தூர்பா அக்காலத்தைய ஒரு உதாரண இந்து மனைவி. பொறுத்துப்போவதும் புரிந்துகொள்வதுமாகவே அவர் கணவனைப் பின் தொடர்ந்தார். காந்தியைப்போன்ற ஒரு கட்டற்ற மிகையுணர்வாளருக்கு மனைவியானது ஒரு வகையில் அவரது துரதிருஷ்டமே.
இந்த அனுபவம் காந்திக்கு காமத்தின் எல்லையற்ற வல்லமையை உணர்த்தியது என்று படுகிறது. ஏறத்தாழ இந்த இடத்தில் அவரது சத்திய சோதனை நூல் முடிந்து விடுகிறது. அதன் பின் காந்தியின் அந்தரங்கச்சோதனைகளில் என்ன நடந்தது என்பதை நாம் காண்பதில்லை. ஆனால் இக்காலகட்டத்து எழுத்துக்கள், கடிதங்களில் காந்தியிடம் முக்கியமான ஒரு மனமாற்றம் நிகழ்ந்திருப்பதை உணர முடிகிறது.
[மேலும்]