பெரிய கட்டுரைகளைப்பற்றி-கடிதங்கள்

அன்புள்ள ஜெயமோகன்,

தங்களுடைய காந்தி சலிப்பூட்டுகிறாரா? கடிதங்கள் பார்த்தேன்.

இவ்வகையான கட்டுரைகள் என்னை பொருத்த வகையில் மிகப்பயனுள்ளவகையாகவே இருந்தன. இளம் தலைமுறையினருக்கும் நிச்சயம் பயனுள்ளவை என்பதில் அய்யமில்லை. கருத்தாழமிக்க கட்டுரைகள் நீளமானவையாக இருப்பதில் தவறும் இல்லை.

தங்களது பணி சிறக்க வாழ்த்துக்கள்.

நன்றி
சபரிநாதன் அர்த்தநாரி.

 

 அன்புள்ள சபரி

 ஒரு வகையில் அவர்கள் சொல்வதும் கணக்கில் கொள்ளப்படவேண்டியதே. நமது பிளஸ் டூ வகுப்பில் ஒரு எளிய நூலைக்கொடுத்து வாசித்து அதன் பொருளை சுயமாக எழுதச்சொன்னா ல் எழுதுபவர்கள் எத்தனை பேர் இருப்பார்கள்? ஆயிரத்தில் ஒருவர் கூட தேறமாட்டார்கள். இது சமீபத்தில் என் நண்பர் கிருஷ்ணன் பொறியியல் கல்லூரி மாணவரக்ளை திரட்டி நடத்திய ஒரு பட்டறையின் அனுபவமும் கூட. ஆகவே நம்மால் எதையும் படித்து உள்வாங்கிக்கொள்ளும் பயிற்சி இல்லை. சுயமாக சிலர் அதை வளார்த்துக்கொள்கிறார்கள். பிறருக்கு கல்வி என்பது வேலைக்கான பயிற்சி. அதன் பின் வேலை. நடுவே இளைப்பாறலுக்காக கொஞ்சம் வாசிப்பு. அது எளிதாக இருக்கவேண்டுமென நம்மவர் எதிர்பார்க்கிறார்கள். அது உண்மையிலேயே உள்ள ஒரு பண்பாட்டுச்சிக்கல்

 ஜெ

  

அன்பு எழுத்தாளர் ஜெயமோகன் அவர்களுக்கு…

இரண்டு வகையாகப் பிரிக்கலாமா..?

அ. நீங்கள் எதை இந்த தளத்தில் எழுத வேண்டும் என்று சொல்ல விரும்புபவர்கள்.

ஆ. ‘நாமே படிப்பதில்லை. இந்த ‘ஆப்ரிக்கன் கோமணம்’ போன்ற நீளப் பதிவுகளை
யார் படிப்பார்கள்?’ என்று ஐயப்படுபவர்கள்.

நீங்கள் இவற்றைப் பற்றியெல்லாம் கவலைப்படாமல் மேலும்  பெரிய கட்டுரைகளை
எழுத வேண்டும். யாரும் படிப்பதில்லை என்று காட்டும் அன்பர்கள் போலவே,
நாங்கள் படிக்கிறோம் என்று சொல்லும் கும்பல்களும் இருக்கின்றன என்பதைச்
சொல்லிக் கொள்ள விரும்புகிறேன்.

நன்றிகள்.

அன்புடன்,
இரா.வசந்த குமார்.

 

அன்புள்ள வசந்தகுமார்

நலமா?

திருவனந்தபுரத்தில் மழை எப்படி?

சில நேரங்களில் சில வாசகர்கள் என்றுதான் சொல்லவேண்டும். வகைப்படுத்துவது எளிதே அல்ல. என் இணையதளத்தில் சிக்கலான கீதைக் கட்டுரைகளை நிறைய்பேர் மெனக்கெட்டு படிக்கிறார்கள். எளிய பல கட்டுரைகளை மேலோட்டமாக வாசித்து சென்றுவிடுகிறார்கள்

ஜெ
 

என்ன ஆசானே என்னை காந்தி சலிப்பூட்டுகிறாரா லிஸ்ட்ல் சேர்த்துவிட்டீர்கள்? நான் காந்தி குறித்த உங்கள் கட்டுரைகளை மிகவும் ஆர்வத்துடன் படித்து வருபவன். மற்ற கட்டுரைகளையும் விடாது தொடர்ந்து படித்து வருகிறேன். ஒரு நாளைக்கு குறைந்தது ஒரு 5 முறையாவது உங்கள் தளத்தை பார்வையிட்டு படிக்கிறேன். நான் எழுதியதில் முதல் கேள்வி தவறாக புரிந்துகொள்ளப்பட்டிருக்கிறதோ என்று ஐயப்படுகிறேன்.

நான் அதை கேட்டதன் நோக்கம் எனக்கேற்பட்ட சலிப்பல்ல. இவ்வளவு மக்கள் புரிந்துகொள்ளாதபோதும், புரிந்துகொள்ளமறுக்கும் போதும், நீங்கள் எழுதுவதன் நோக்கம்மும் உங்கள் அயராத முயற்சிக்கான காரணமும் என்னவாக இருக்கும் என்று எண்ணியதால் எழுதியது. அதெப்படி இத்தனைபேர் திட்டியும், இவர் விடாமல் பக்கம் பக்கமாக எழுதி, மக்கள் என்றாவது புரிந்துகொள்வார்கள் என்று நினைக்கிறார் என்று தெரிந்துகொள்வதற்காக எழுதியது.

நான் கடிதம் எழுதிய தொனி சரியில்லை என்று நினைக்கிறேன். மாற்றிக்கொள்கிறேன்.

அன்புடன்
ராம்.

 

அன்புள்ள ராம்

சும்மாதான். கீதையை எடுத்துவிட ஒரு சந்தர்ப்பம் என்று நினைத்தேன்
ஜெ

 

அன்புள்ள ஜயமோகன்

இருவர் உஙகள் எழுத்துக்களை , அதாவது இந்த தளத்தை பற்றி விமர்சித்தல் விசித்திரமாக உள்ளது. ஒருவர் நீங்கள் எழுதுவது ’நேரவிரயம்’ என்கிறார். மற்றொருவர் “மக்களுக்குப் பிடித்தமான கட்டுரைகளையும் போடுங்கள். இல்லாவிட்டால் இணையதளம் படுத்துவிடும்….    அகராதியை வைத்துக்கொண்டெல்லாம் இந்த அவசரகாலகட்டத்தில் ஏன் கட்டுரைகளை படிகக்வேண்டும்?”  இது தமிழ் எழுத்தாளர்கள், அதாவது ஊடகங்கள் எந்த அளவு ‘மசாலா’ கட்டுரைகளையே போட்டு சிலரின் மொழி உணர்ச்சியையும், ரசனையையும் கீழே தள்ளிவிட்டனர் என காட்டுகின்றது.

மேலும் சீரியசான, அறிவு சார்ந்த  விவாதங்களுக்கு தமிழ் உபயோகமில்லை என்ற எண்ணவும் பலரிடம் பரவியுள்ளது. பலர் தமிழிலிருந்து அக்கப்போர், கிசுகிசு, கிளுகிளுப்பு, துதி/வசை இவற்றைதான் எதிர்பார்க்கின்றனர்.  அது , தமிழ் அகராதியா, கிலோ என்ன விலை என்ற மனப்பான்மையை தான் உண்டாக்கியுள்ளது

ஒரு தமிழ் எழுத்தாளர் பல தரப்பட்ட விஷயங்களை எல்லோரிடமும் விவாதிக்க தயாராக உள்ளதை இவர்கள் பாராட்டுவதில்லை. இணையம் கொஞ்சமாவது உபயோகமாக இருக்கும் என்றால் , இதைப்போல் தமிழில் விவாதங்களால்தான். அதனால் இதைப்போல் விவாதங்களுக்கு இணையத்திற்கு ஒரு ஜே, உங்களுக்கும் ஒரு ஜே.

மதிப்புடன்

வன்பாக்கம் விஜயராகவன்

அன்புள்ள விஜயராகவன்

பொதுவாக இந்த முறையீடு எல்லா இதழ்களுக்கும் உள்ளதுதான். ஆச்சரியமென்ன என்றால் விகடனுக்கும் குமுதத்துக்கும்கூட! அவ்விதழ்களின் மாதாந்திர மதிப்பீட்டு கூட்டங்கள் நடக்கும்போது திரட்டப்பட்ட பொதுமக்கள் கருத்துக்கள் முன்வைக்கபப்டும்.” இன்னும் எளிய விஷயங்கள் வேண்டும், இன்னும் அதிக சினிமா வேண்டும்” என்றே அது இருக்கும். எப்போதும். இதை பல நண்பர்கள் சொல்லியிருக்கிறார்கள். குமுதத்துக்கு இப்போதும்கூட வரும் கடிதங்களில் ‘ புரியவில்லை’ என்றும் ‘சினிமாச்செய்திகள் நிறைய வேண்டும்’ என்றும்  வரும் கடிதங்கள்தான் எண்ணிக்கையில் பெரும்பகுதி…

அது ஒரு தமிழ் மனநிலை

ஜெ 

அன்புள்ள ஜெயமோகன் சார்

காந்தியை பற்றிய நீண்ட கட்டுரையை பற்றிய வாசகர் கடிதத்ததை படித்தபோது வேதனையாக இருந்தது. இத்தனை வருடமும் மேலோட்டமான காந்தியை பற்றிய என்னை போன்றோரின் புரிதல்களை இக்கட்டுரைகள்தான் தெளிவுபடுத்திற்று. அதை எத்தனையோபேர் உங்கள் கவனத்திற்க்கு கடிதம் மூலமும், தொலைபேசி மூலமும் தெரிவித்தபடியே உள்ளனர்.

அப்படியிருக்க இம்மாதிரியான கடிதங்கள் உங்களை வந்தடைவது ஆச்சர்யமாக உள்ளது. எந்த மன நிலை சார்ந்து அவர்கள் இந்த இணையத்தளம் படுத்துவிடும் என்றும், சமூக மாற்றத்தை கொண்டுவராது என்றும், மற்ற இணையத்தளத்தோடு ஒப்பிடுகிறார்கள் என்றும், அவர்களை போல் எழுதுங்கள் என்றும் சொல்கிறார்கள் என்று தெரியவில்லை.

ஒரு கட்டுரையின் நீள அகலத்தை கொண்டு அதனை மதிப்பிடுகிறார்களா? அதில் அவர்களுக்கு நீங்கள் என்ன சொல்லியிருக்கிறீர்கள் என்பது தேவை இல்லையா? ஒரு கட்டுரை சரியானதாகவும், சுவாரசியமானதாகவும், பல தெளிவுகளை அளிக்ககூடியதாகவும் இருக்கும் பட்ச்சத்தில் அதன் நீளம் எப்படி இவர்களுக்கு தெரிகிறது என்று புரியவில்லை.

 என்னைபோன்ற பலபேர்க்கு ஒரு தொடர் விரைவில் முடிந்துவிட்டதைப்போல்தான் தோன்றும். இக்கடிதங்களை படிக்கும்போது கோவமாக வருது சார். இத்தகைய கடிதம் மூலம் நீங்கல் சோர்ந்துவிடப்போவதில்லை என்பதால் நாங்கள் சமாதானம் அடைகிறோம்.


Best Regards
Dhanasekaran

அன்புள்ள தனசேகர்

என்னுடைய இயல்பே நான் கொஞ்சம் சின்ன கூட்டங்களில்தான் நன்றாகப் பேசுவேன் என்பதுதான். ஏனென்றால் நம்மால் மதிப்பிட்டுவிடக்கூடிய அளவான ஒரு முன்னிலை நமக்கிருக்கிறது என்ற உணர்ச்சி.

அவர்கள் என்னுடைய வாசகர்களாக இருப்பார்கள். என் குரலை முக்கியமாகக் கருதக்கூடியவர்களாக இருப்பார்கள். தன் வாசகர்களை தன்னைப் பிந்தொடர வைக்கும்படி எதையும் எழுத்தாளன் செய்யக்கூடாது என்று எம்.கோவிந்தன் சொல்வதுண்டு. திரும்பிப்பார்த்து அவர்கள் கூடவே வருகிறார்களா என்று கூட பார்க்கக் கூடாது. அப்போதுதான் அவன் பின்னால்  முக்கியமானவர்கள் வருவார்கள் என்பார்

ஜெ

அன்புள்ள ஜெமோ,

உங்கள் இணையதளத்தில் இன்று ஒரு கடிதம் வெளியிட்டிருந்தீர்கள். இந்து மதத்தின் வழிபாட்டுச் சிலைகளைப் பற்றி ஒரு கடிதம். எழுதியவர் பெயர் ஸ்ரீதர் நாராயணன் என்று காணப்பட்டிருந்தது. எனது பெயர் போலவே இருந்ததால் சட்டென்று ஒரு குழப்பம் மனதில் தோன்றியது. மேலும் நேற்றுத்தான் உங்களுக்கு ஒரு கடிதமும் எழுதியிருந்தேன். ஒருவேளை ஏதும் ‘வெட்டி / ஒட்டுதல்’ குழப்பமோ என்று தோன்றியதால் இந்தக் கடிதம் :)

ஒருவேளை இன்னொரு ஸ்ரீதர் நாராயணன் அக்கேள்வி எழுப்பியிருந்தால் இந்தக் கடிதத்தை பொருட்படுத்த வேண்டாம் :)

காளி பற்றிய வர்ணனை அருமையாக இருந்தது.

அன்புடன்

ஸ்ரீதர்

http://www.sridharblogs.com/

அன்புள்ள ஜெயமோகன்,

உங்களின் நீண்ட கட்டுரைகளுக்கு எதிர்வினையாக நண்பர்கள் சிலர் எழுதியிருந்த கடிதங்களை பிரசுரித்திருந்தீர்கள்.  அதிலும் இணையதளம் படுத்துவிடும் என்றெல்லாம் நண்பர்கள் எச்சரித்திருந்தனர். இப்பொழுது எப்படி நின்று கொண்டிருக்கிறது என்று ஏதேனும் கணக்கு வைத்திருந்தாரா தெரியவில்லை.

உங்கள் இணைய தளம் தமிழ்சூழலில் நிச்சயம் ஒரு மாற்றுகளத்தை உண்டாக்குகிறது. நான் முடிந்தவரை தவறாது படித்து வருகிறேன். சில சமயங்களில் தாண்டிப் போவதும் உண்டு. அது படிப்பவரின் தேர்வாக இருக்குமே தவிர எழுதுபவரை கட்டுபடுத்த நினைப்பது முட்டாள்தனமாக தோன்றியதாலேயே இந்தக் கடிதம்.

உங்கள் சமீபத்திய இந்து மதத்தினைப் பற்றிய சில விளக்கங்களைப் படித்த போது கூட சில கேள்விகள் எழத்தான் செய்தன. உங்கள் கருத்தை முன்வைத்து பதில்களை தேடிக் கொண்டு இருக்கிறேன். அந்தவகையில் உங்கள் எழுத்து நிறைய வாசல்களை திறந்து வைக்க உதவியிருக்கின்றன. நன்றி.

நீங்கள் கைமாறு கருதாமல் இந்த தளத்தில் நிறையவே எழுதுகிறீர்கள்.  என்னைப் போன்ற படிக்க ஆலாய் பறக்கும் ஜீவன்களுக்கு பெரிய விருந்துதான். சில கருத்துகள் மட்டும்

– கட்டுரைகளுக்கு வரும் எதிர்வினையை கடிதமாக பிரசுரித்து, விளக்கமும் எழுதுகிறீர்கள். அது கட்டுரையிலிருந்து தனியாக வெளியாகிறது. இணைய தளத்தின் ஒரு பெரிய வசதி கட்டுரையையும், அதன் மேல் நடக்கும் கருத்து பரிமாற்றத்தையும் ஒரேயிடத்தில் படிக்க முடிகின்ற வசதி. சில காத்திரமான கட்டுரைகளுக்கு அப்படிப்பட்ட பின்னூட்ட வசதியை நீங்களும் கைக்கொள்ளலாம். கட்டுரையைப் படித்துவிட்டு பின்னர் தனியாக கடிதத்தில் எழுத வேண்டுமே என்று நினைத்து பலர் கருத்துகளை சொல்லாமல் போய்விட வாய்ப்புகள் உண்டல்லவா?

– கடிதங்களையும் அதற்கான பதில்களையும் தனியாக வலையேற்றும்போது சிலசமயம் தவறுகள் ஏற்பட்டுவிடுகின்றன. வெட்டி ஒட்டும்போது நடக்கும் சிற்சில தவறுகள்தான். இம்மாதிரியான பின்னூட்ட வசதி இதைப்போன்ற சில்லறை வேலைகளிலிருந்து கட்டுரை ஆசிரியர்களுக்கு விடுதலை அளிக்கிறது அல்லவா?

– நீங்கள் ஏகப்பட்ட மெயில்களை பொறுமையாக படித்து பதிலளிக்கிறீர்கள் என்று தெரிகிறது. கட்டுரைக்கு வரும் பின்னூட்டங்களை மட்டுறுத்தி வெளியிடுதல் சங்கடமான அலுவல் இல்லை.

அன்புடன்

ஸ்ரீதர்

http://www.sridharblogs.com/

 

அன்புள்ள ஸ்ரீதர்

அவர் வேறு. மின்னஞ்சல்களில் பெயர்களாஇ அனைவரும் ஒரே மாதிரி அமைப்பதனால் பல பிரச்சினைகள். எனக்கு வரும் கடிதங்களில் ஸ்ரீனிவாசன் வெங்கட்ராமன் , வெங்கட்ராமன் ஸ்ரீனிவாசன் என்று மாறி மாறி வந்து மண்டையைக் குழப்பியதனால் பலருக்கு நானே பெயரைப் போட்டுவிட்டேன்.

நான் சொன்னதுபோல நான் எதை எழுதவேண்டுமென எண்ணுகிறேனோ அதற்காகவே இந்த தளம். அந்தச் சுதந்திரம் எனக்கு முக்கியம். அதற்காகவே சொல் புதிது வந்தது. அது நஷ்டம். இணையதளம் பரவாயில்லை, சிறிலுக்குத்தானே நஷ்டம்.

பின்னூட்டங்களை   அனுமதிக்கலாம். தினமும் கடிதம் எழுதும் நேரத்தை ஒப்பிட்டால் மட்டுறுத்துவது பெரிய விஷயமல்ல

 ஆனால் நான் எதிர்பார்ப்பது அதை அல்ல. ஒரு பொது இடத்தில் வந்து கருத்தைச் சொல்லிவிட்டுப்போகும் மனைநிலையை  அல்ல நான் எதிர்பார்ப்பது. என்னுடன் உரையாடும் நண்பர்களை. அதில் இன்னமும் அந்தரங்கமாக ஒர் உறவு உள்ளது

 மேலும் பொதுவாக கருத்துச் சொல்ல ஆரம்பித்தால் பங்கேற்பாளர்கள் சண்டைபோட்டுக்கொள்வதையே காண்கிறேன். அவதூறு கிளப்பும் அனானிகளை களையெடுப்பது கொஞ்சநாளில் சலித்துவிடும்.

 நான் ஐபி எண்ணை பார்க்க முடியும் என்பதனாலேயே எனக்கு வரும் கடிதங்களில் ஒரு பொறுப்பு உள்ளது

 அனைத்துக்கும் மேலாக  தமிழில் இந்தக் கடிதப்பக்கங்களில் உள்ளவற்றை விட மேலான பன்முகப்பட்ட விவாதங்கள் நடக்கும் பொதுக்கருத்து/ பின்னூட்டப்பக்கங்கள் ஏதாவது உள்ளனவா என்ன? இதுவே சிறப்பாகத்தானே உள்ளது?

 ஜெ

முந்தைய கட்டுரைமுறையீடு, அழைப்பு: கடிதங்கள்
அடுத்த கட்டுரைஅள்ளியள்ளிப்பெருகுவது…