அன்புள்ள ஜெ.மோ,
முதல்வரியில் கண் போனவுடன் அது எதைப்பற்றின்னு புரிஞ்சதும் மனசுக்கு ‘திக்’ன்னு இருந்தது. தெம்பு இல்லைன்னு கடந்து போய் மறுபடியும் வந்து பார்த்தேன். ஐயோ….. இந்தியாவில் மிருகமாகப் பிறப்பதே ஒரு வதை. தினம்தினம் வயிறு ஒட்டி உலர்ந்து கன்களில் பசியோடு உலவும் நாய் பூனைகளைப் பார்த்துக் கண்ணில் நீர் வழிவது ……
சீக்கிரமா இதையெல்லாம் பார்க்கமுடியாத இடத்துக்கு ஓடணும் என்ற ஒரே நோக்கம்தான் இப்போதைக்கு(-:
என்றும் அன்புடன்,
துளசி
அன்புள்ள துளசி,
இந்தியாவில் என்றல்ல, எங்குமே மிருக வாழ்க்கை ஒன்றுதான். ஈவிரக்கமற்ற வாழ்தல்போட்டி. காடுகளில் பயணம்செய்யும்போது சிலசமயம் அந்த குரூரம் வந்து கண்ணில் அறையும். சூழ்ந்திருக்கும் காடு தெய்வீகமான அழகுடன் இருக்கும்.
அந்த முரண்பாட்டைப் புரிந்துகொள்வது எளிதல்ல
ஜெ
அன்புள்ள ஜெயமோகன்,
நீண்ட நாட்களுக்குப் பின் தவிர்க்க முடியாமல் உங்களுக்கு எழுதுகிறேன். ‘முறையீடு’ படித்தேன். அந்தத் தருணத்தில் நானே கடும் மன உளைச்சலில் இருந்ததாலோ என்னவோ, பதிவை முழுவதும் படிக்க முடியாமல் இருத்தலின் அபத்தம் தாங்கிய துயரம் நெஞ்சுக்குள் பொங்கி வழிந்தது. நாயின் சித்திரம் மறைந்து என்னை அங்கே பொருத்திப் பார்க்க தூண்டியது மனம்.
உங்களின் அறிவையெல்லாம் தூக்கி ஓரமாகப் போட்டுவிட்டு ஆன்மாவின் துணை கொண்டு இதை எழுதியிருப்பீர்கள் என நம்புகிறேன். அந்தளவிற்கு பதிவில் உண்மையின் குரலின் ஒலியை என்னால் கேட்க முடிந்தது.
என்ன சொல்ல?…அவ்வளவுதான்.
—
சுரேஷ் கண்ணன்
http://pitchaipathiram.blogspot.com
அன்புள்ள சுரேஷ் கண்ணன்,
எல்லாவற்றையும் நம்மில் இருந்தே பார்க்கிறோம். சிலசமயம் சில விஷயங்கள் மூர்க்கமாக வந்து ஆன்மாவை அறைந்துவிடுகின்றன
நன்றி
ஜெ
வணக்கம் ஐயா ,
கொஞ்சம் என் மனதில் பட்டதையும், நேரில் நான் பார்த்ததையும் வைத்து இதை நான் கிறுக்கினேன். ( 09.11.2009 ) ஐந்து நாட்களுக்கு முன்பு. ஆனால் உங்கள் எழுத்து என்னை மனதளவில் மிகவும் பாதித்துவிட்டது. அருமை …………..
http://www.ithutamil.com/[email protected]&postid=506b9552-23f4-44a7-bce8-8c0822ee2890
நன்றி
சே. ராஜப்ரியன்
மதிப்பிற்குரிய ஜெ,
‘வளர்ந்து ஆளாகிறப்போ அண்ணன் தம்பி மாமன் மச்சான் எவனும் துணைக்கு வரப் போறதில்லை’ என்று அப்பா சொன்னதாகச் சொல்லியிருக்கிறீர்கள். அண்ணன், தான் சொன்னதுபோல் துணைநிற்கிற பாக்கியம் உங்களுக்குக் கிட்டியிருந்தாலும் அப்பா சொன்னது ஆதார உண்மை. அதன் தகிப்பில் எவர் மீதும் பழிசொல்ல முடியாத தன்னுணர்வு நமக்குத் துணை வரும். ஆனால் அந்த நாய்போல் தவறி அல்லது தவறிழைக்கப்பட்டு புலம்பலில் சோர்வதே பெரும்பால் நடைமுறை. ‘உண்டு’ என்று வளர்ந்த நம் வழியின் நம்பிக்கை ஏமாற்றம் அது.
‘ஏதாவது செய்தாக வேண்டும்’ என்று உறுத்தவேண்டும். அதுவே தீர்வுக்கான முதற்படி. உங்கள் கைவசம் தயிர்ச்சோறாவது இருந்தது. அதுகூட இல்லாதவருக்கு? கையாலாகாத நிலைமையில் அதோடு சேர்ந்து தாயுமானவரைப் போல் அழுதாலும் செல்லும். ‘ஆண்டவரே அருளும்!’ என்று மன்றாடினாலும் தாழ்வில்லை. ஆனால், நாய்தானே என்று சோலியைப் பார்த்துக்கொண்டு போகிற ஆள் உயிரோடு சேர்த்தி இல்லை.
நமக்கு நாம்தான் துணை. அடுத்தவரை எதிர்பார்க்க வேண்டா. ஆனால் அடுத்தவருக்குத் துணையாகிற எள்ளளவு நாட்டமாவது இயலவேண்டும். அதாவது, greater than 100% என்பதே உயிர்ப்பொருள். உங்கள் ஆயிரம் ஆயிரம் பக்கங்களில் ஒன்றிரண்டோடு எனக்கும் உடன்பாடு இல்லைதான். ஆனால் அவை செயல்பாடுகள். வைக்கோலோ மயிர்க்கற்றையோ ஆனால் அவை செயல்பாடுகள். ஆற்றுவார் ஆற்றல் அரிதோ எளிதோ நாம் போற்றிட வேண்டும் அதை.
– ராஜசுந்தரராஜன்
அன்புள்ள சுந்தர ராஜன்
கருணை என்பது ஒருவன் தன்னை விட எளிய ஓர் உயிரைக் கண்டு அடையும் நெகிழ்ச்சி அல்ல, தன்னைவிட மகத்தான ஒன்றை அறியும் கணமே. அந்த எண்ணமே எழுதுவதற்காக என்னைக் கொண்டுசென்றது
ஜெ
அன்புள்ள திரு.ஜெயமோகன் அவர்களுக்கு,
http://jeyamohan.in/?p=4877 – முறையீடு என்ற இக்கட்டுரை மிக அருமை.
வாழ்வின் புரியாமையை எளிதாக, உள்ளது உள்ளபடி, உள்ளத்தை ஊடறுப்பது போல் எழுதியுள்ளீர்கள்.
நன்றி. வணக்கம்.
அன்புடன்,
வேல்முருகன்
அன்புள்ள வேல்முருகன்
புரியாமை என்பதைவிட புரிந்துகொள்ள முடியாத ஒன்றை என்று சொல்லலாம் அல்லவா?
ஜெ
அன்புள்ள ஜெ,
முறையீடு கட்டுரையை வாசித்து முடித்தவுடன் இக்கடிதத்தை எழுதுகிறேன். சில நாட்களுக்கு முன்பு நான் பார்த்த சம்பவம் ஒன்று நினைவுக்கு வருகிறது.
ஒரு குட்டிசுவற்றின் மேல் அமர்ந்து மூன்று, நான்கு பேர் டீ குடித்து கொண்டிருந்தனர். ஒரு குட்டி நாய், மிஞ்சி போனால் பிறந்து ஒரு மூன்று, நான்கு மாதங்கள் ஆகியிருக்கும், அங்கே கீ, கீ, என்று முனகிக்கொண்டு அலைந்து கொண்டிருந்தது. அமர்ந்திருந்த மூவரில் ஒருவன் அவன் கையில் இருந்த டீ க்ளாசை காட்டி அதை அழைத்தான். பசி கொடுமையால் ஜீவனற்று போயிருந்த அதன் முகத்தில் அவ்வளவு சந்தோஷம். ஓடி போய் அவன் கால்களுக்கு நடுவில் நின்று கொண்டு வாலை ஆட்டி கொண்டு துள்ளியது. அடுத்த கணம் அவன் அதன் வயிற்றில் எட்டி ஒரு உதை விட்டான். அந்த நாய் குட்டி செவி சவ்வுகள் கிழியும் அளவிற்கு அலறிக்கொண்டு ஓடியது. இவன் அருகில் அமர்ந்திருந்த நண்பர்களிடம் சற்றும் பதற்றம் இன்றி ‘எப்ப பாத்தாலும் கத்திகிட்டே இருக்கு; சனியன்’ என்று சொன்னான். என் மனம் மிகவும் கனத்து போனது.
அந்த சின்னஞ்சிறு ஜீவனுக்கு யாரும் உதவி செய்ய வேண்டாம்; குறைந்த பட்சம் அதை துன்புறுத்தாமலாவது இருக்கலாம் அல்லவா?
உங்கள் கட்டுரையை வாசித்த போது கிட்டத்தட்ட அதே மனநிலையை அடைந்தேன். இது போன்ற சம்பவங்களை பார்க்கும் போது மனித குலத்தின் மேல் ஒரு விதமான வெறுப்பு வருவதை தவிர்க்க முடியவில்லை.
சக மனிதர்களுக்கே உதவ மறுக்கும் இந்த காலத்தில் நாய்களுக்கு எல்லாம் கருணை காட்ட வேண்டும் என்று நினைப்பது எந்த விதத்தில் நியாயம் என்று சிலர் கேட்கலாம். ஒரு மனிதனுக்கு பசித்தால் அதை அவன் வாய் விட்டு கூற முடியும்; அவனால் பிச்சை எடுக்க முடியும்; திருடக்கூட முடியும்; ஒரு சின்னஞ்சிறு நாய்க்குட்டி என்ன செய்யும்?
இது போன்ற ஆதரவற்ற ஜீவன்களிடம் ஒரு துளி கருணை காட்ட முடியா விட்டால் நமக்கு ஆறறிவு இருந்து என்ன பயன்?
“பரிபூரணமாகக் கைவிடப்பட்டவனின் அழுகையைப்போல இந்தப்பூமியில் அருவருப்பான ஏதேனும் உள்ளதா என்ன?”
சத்தியமான வரிகள்.
நீண்ட நாட்களுக்கு பிறகு என் மனதில் ஆழப்பதிந்த வரிகள். தங்கள் கட்டுரைக்கு மிகவும் நன்றி.
அன்புடன்,
கிருஷ்ணன்
பி. கு: முதன் முறையாக தமிழில் டைப் செய்கிறேன். (Thanks to Google Transliteration tool) பிழைகள் ஏதேனும் இருந்தால் மன்னிக்கவும்.
—
http://www.cellphone-advertising.com
அன்புள்ள கிருஷ்ணன்
உங்கள் தமிழ் சிறப்பாக, பிழைகளற்று உள்ளது. பாராட்டுக்கள். இனிமேல் தமிழிலேயே எழுதுங்கள்.
முழுமையாகக் கைவிடப்பட்ட ஒருவன் என ஒருவன் இருந்தால் பிரபஞத்தை ஆளும் ஏதோ ஒன்று அங்கே இல்லாமல் ஆகிவிட்டிருக்கிறது என்று நித்யா ஒருமுறை சொன்னார். அங்கே சூழ்ந்திருக்கும் இருள் அவனை மட்டும் சார்ந்தது அல்ல. அவன் வாழும் சூழலை, மானுடத்தைச் சார்ந்த ஒன்று அது
ஜெ
அன்புள்ள ஜெயமோகன்,
நீண்ட நாட்களின் வேலைப்பளுவிற்கு பின் ‘முறையீடு’ பதிவைப் படித்தேன்.
அலங்காரங்கள் ஏதுமற்ற, சொற்கள் உணர்வின் வெளிப்பாடுகளை சிதைக்காத, மிக நுண்ணிய ஆனால் மிக நேரடியான, அது, அதை பதிவு அல்லது கட்டுரை என்றெல்லாம் குறுக்க முடியாத, ஓர் உணர்ச்சி…
பொதுவாக பிறவுயிர்களின் அவலம் கூறும் எழுத்துகளில் தன்னேற்றம் ஒரு தடையென மாறி விடுவதுண்டு. அநாதரவான அந்த உயிரின் நிலை ஏற்படுத்த வேண்டிய உணர்வழுத்தம், சுய விவரனையிலோ கழிவிரக்கத்தினாலோ பின்னுக்கு தள்ளப்பட்டு நீர்ப்பதுண்டு.
முறையீட்டில் அது மிக இயல்பாக உருபெற்றிருக்கிறது. காரணம், எவ்வித உடன்பாடுகளும் மறுதளிப்புகளும் இல்லாமல், எந்த கற்பிதமும் இல்லாமல் அந்த உயிரின் வலியை உங்களால் உணர முடிந்திருக்கிறது.
பரிபூரணமாக கைவிடப்பட்டவனின் அழுகையைப் போல இந்த உலகத்தின் அத்தனை அழகுகளையும் இன்பங்களையும் ஒருசேர அருவருப்பாக்கத்தக்க வேறொன்று இல்லவேயில்லை. வேதம் கூறும் மகா வாக்கியம் போலொரு உண்மை. நாம் வாழும் வாழ்க்கையும், அனுபவிக்கும் இன்பங்களும், இடும் போட்டிகளும், கொள்ளும் தந்திரங்களும், இத்தகையதோர் கணத்தில் நம்மை கடையனிலும் கடையனாக உணரச் செய்கின்றன.
சுடர்மிகும் அறிவின் விளைவாய் ஒருபுறம், உயிர்களின் மீதான காதலும், மறுபுறம் மூளையின் கூர்மையை மழுங்கச் செய்ய வேண்டும் ஏற்புகளும்…
ஆனால், எத்தகைய உணர்வையும் சித்திரமாய் வடித்து விடும் வல்லமை வரப் பெற்றவனுக்கு முறையீடுகளும் ஓர் ஓவியவெளிதானோ?
சமீபத்தில் நான் கடந்து சென்ற ஒரு நிகழ்வை கவிதையாக்கி இருந்தேன். அதை கீழே தந்திருக்கிறேன்
நம்மில்…
மெலிந்து சுருங்கிய
முகத்தினில்
ஒளி சுடர் விடும் கண்கள்
வற்றிக் குறுகிய உடல்
களைத்துத் தொங்கும் கைகள்
அவ்வப்போது
காற்றில் எழுந்து
அனைத்து விரல்களாலும்
எல்லாத் திசைகளிலும்
சித்திரம் வரைந்து
திரும்பும்
மீண்டும் எழுந்து விரையும்
ஓரிடம் நில்லாமல்
முன்னும் பின்னும்
நகரும் கால்களை போலவே
ஓயாமல்
பேசிக்கொண்டிருக்கும்
அவனைப் பார்க்காமல்
மறுதலிப்பது கடினம்
யாருமே கேட்க
மறுக்கும்படி
கூறுவதற்கு
அவனிடம் என்ன இருக்க முடியும்
அப்போதும் பேசியவாறு
அருகில் நின்ற
அவன் கண்களைப்
பரிதாபத்துடன் பார்த்தேன்
உறைய வைக்கும்
ஏளனம்
:
இதயம் தொட்ட பதிவிற்கு மிக்க நன்றி,
வணக்கத்துடன்
சரவணன்
சிங்கப்பூர்
—
http://sarandeva.blogspot.com
அன்புள்ள சரவணன்
கருணை என்ற ஒன்றை உணரும் கணம் ஆன்மீகமான தேடல் கொண்டவன் கொள்ளும் உணர்ச்சிகள் குழப்பமானவை. கருணை காட்ட தான் யார் என்ற கேள்வியில் இருந்து எழுபவை அவை
கவிதை நன்றாக உள்ளது
ஜெ