அணிகளின் அணிநடை

கேரளத்தில் நடந்த ஒருவிழாவில் அழகிய இளம்பெண்கள் கேரளமரபுப்படி சரிகையுள்ள வெண்ணிற ஆடை அணிந்து வட்ட முன்கொண்டையில் முல்லைப்பூச்சரம் சுற்றி கையில் தட்டில் மங்கலப்பொருட்கள் ஏந்தி வரிசையாக நின்றிருந்தார்கள். தாலப்பொலி என்ற தூயதமிழ்ச் சொல்லால் அது அங்கே குறிப்பிடப்படுகிறது. என்னுடன் வந்த இளம் மலையாள எழுத்தாளர் கடும் சினத்துடன் ”கொடுமை”என்று குமுறினார். தேநீர் அருந்த அமர்ந்திருந்தபோது என்னிடம் ”பெண்களை அவமதிப்பதற்கு இதைவிட வேறு வழியே தேவையில்லை…”என்றார்.

எங்களுடன் அந்த விழாவின் முக்கியப்பேச்சாளரான மிக வயதான மலையாளப்பேராசிரியரும் இருந்தார். ”…அதில் என்ன தவறு இருக்கிறது? அந்தப்பெண்கள் நின்ற காட்சி மிக அழகாக இருந்ததே…”என்றார். ”நீங்கள் இப்படி கேவலமாக ரசிப்பதற்குரியவர்களா பெண்கள்?”என்று இளம் எழுத்தாளர் சீறினார்.

”கேவலமாக என்பது உங்கள் எண்ணம். அழகு என்பது ரசிப்பதற்குரியதுதான்…இன்று இந்த விழாப்பந்தலில் மலர்களால் முற்றம் அமைத்திருந்தார்கள். வாழைக்குலைகளையும் ஈச்சமர ஓலைகளையும் கொண்டு அலங்காரம்செய்திருந்தார்கள். நெற்றிப்பட்டம் கட்டிய இரு யானைகள் நின்றன…அவையெல்லாம் இயற்கையில் உள்ள அழகுகள். அவற்றையும் இங்கே ஏன் வைக்க வேண்டும் என்று கேட்பீர்களா? மனிதன் ரசிப்பதற்குத்தானா அவை என்று கேட்கலாமே?” என்றார் முதிய பேராசிரியர்

”இது மிக மோசமான ஆணாதிக்கப் பார்வை…”என்று இளம் எழுத்தாளர் முகம் சிவக்க கத்தினார். ”பெண்களை அலங்காரப்பொருட்களாகக் காண்பது கீழ்த்தரமான மனநிலை…”

முதிய பேராசிரியர் ”நான் நாலு பெண்களின் அப்பா. ஏழு பேத்திகளின் தாத்தா. பெண்களை ஒருபோதும் மதிப்பில்லாது நடத்தியதில்லை. அவர்களை கீழ்த்தரமாக காண்பவன் அல்ல. மலர்களையும் கனிகளையும் யானையையும் எல்லாம் நுகர்பொருட்களாக எண்ணுபவனும் அல்ல. நான் ஆத்திகன். எனக்கு அவையெல்லாம் கடவுளின் சிருஷ்டிகள். படைப்பில் உள்ள அழகையும் மகத்துவத்தையும் எனக்குக் காட்டுபவை அவை”

”பெண்களை நீங்கள் அவமதிக்கிறீர்கள்…சுரணையுள்ள ஒரு பெண் நீங்கள் சொல்வதைக் கேட்டால் ஓங்கி அடித்து உங்கள் செவிப்பறையை ப் பிய்ப்பாள்”

”இதுவரை அப்படி எதுவும் நிகழவில்லை… ஒருவேளை அப்படி நிகழ்வதற்குமுன் நான் செத்துவிடுவேன்…”என்றார் பேராசிரியர். ”இயற்கையில் எங்கும் அழகு விரிந்திருக்கிறது. அதில் மலர்களிலும் இளமையிலும் குழந்தைத்தன்மையிலும் அவ்வழகு உச்சம் கொண்டிருக்கிறது. அதை மனிதன் ரசிப்பான். அவன் கண்களை அதிலிருந்து எந்த சக்தியாலும் விலக்க முடியாது. அப்படி ரசிக்காமல் இருக்கிறேன் என்று ஒருவன் சொன்னால் அது பொய் அல்லது சுய ஏமாற்று… இந்த இடத்தில் நல்ல இளம் பையன்கள் இறுகிய உடலுடன் களரிப்பயிற்சி செய்தால் அதையும் நான் கண்வாங்காமல் பார்த்து ரசிக்கத்தான் செய்வேன். ஆனால் அழகிய பெண் என்பவள் எப்போதும் மானுடக்கண்களுக்கு விருந்துதான்…ஆணின் கண்களுக்கு மட்டுமல்ல…பெண்களின் கண்களுக்கும்கூடத்தான்…வேண்டுமானால் பெண்களிடம் கேட்டுப்பார். ஒரு குறிப்பிட்ட வயதில்தான் பெண்கள் ஆண்களைப் பார்ப்பார்கள். அதற்கு முன்னும்பின்னும் பெண்களைத்தான் பார்ப்பார்கள்…  உண்மைதான்.பெண்ணை நேரடியாகப் பார்த்து ரசிப்பதில் ஒழுக்கம் சம்பந்தமான பிரச்சினைகள் உண்டு. அப்பட்டமாக ரசிப்பது பெண்களுக்குச் சங்கடமாகத்தான் இருக்கும். ஆனால் எந்த ஆணும் அழகிய பெண்ணை பார்க்காமல் விடுவதில்லை, அதை அறியாத பெண்ணும் உலகில் இல்லை.”

பேராசிரியர் ஆசிரியர்களுக்கு உரிய அழுத்தமான உச்சரிப்புடன் பேசிக்கொண்டே சென்றார்.”மனிதனுக்கு பிரபஞ்சத்தில் உள்ள அழகை பார்த்து மாளவில்லை…அதை மேலும் மேலும் அழகாக ஆக்குகிறான். அதற்காகவே கலைகளைக் கண்டுபிடித்தான். பூக்களைப் பார்த்தால்போதாது. அதை மாலையாகக் கட்டி ரசிக்கவேண்டும் அவனுக்கு . அழகிய இளம்பெண்ணை அலங்கரிக்கவும் நடனமாடவும் செய்யவேண்டும்.. வெளியே இருக்கும் அழகை மேலும் பலமடங்கு மனதுக்கு உள்ளே கொண்டுசென்று உக்கிரப்படுத்திக் கொள்ள வேண்டும். அதற்காகவே இலக்கியங்கள்,கவிதை,பாடல்கள். உலகம் முழுக்க எல்லா பண்பாடுகளிலும் மனிதனின் அழகுணர்வு பெண்ணழகாலேயே நிறைவடைந்துள்ளது…அதற்கான கலைகளும் இலக்கியமும் இல்லாத ஊரே இல்லை.நான் ஒழுக்கம்கெட்டு அலைந்தது இல்லை.ஆனால் என் வாழ்நாள் முழுக்க பெண்களை ரசித்துக் கொண்டுதான் இருக்கிறேன்…என் வகுப்பில் பெண்கள் இருந்தால் அவர்களை ரசிப்பதுமட்டுமால்லாமல் அதை அவர்களிடம் சொல்லவும்செய்வேன்…இப்போது வயதாகிவிட்டது. இனி தயக்கமேதும் இல்லை…நேற்று பக்கத்துவீட்டுப் பெண்ணிடம் நீலச்சுடிதார் போட்டுக்கொண்டுவந்து காட்டு என்று சொல்லி ரசித்தேன்… ”

”உங்கள் மனைவியை பிறர் இப்படி ரசிக்க விடுவீர்களா?”என்றார் இளம் எழுத்தாளர்

”நான் என்ன விடுவது? என் மனைவி நாற்பது ஐம்பது வருடம் முன்பு திருவனந்தபுரத்தின் பேரழகிகளில் ஒருத்தி….இப்போது எழுபது எண்பது வயதான எல்லா திருவனந்தபுரம்வாசிகளும் அவளைப் பார்த்து ரசித்திருப்பார்கள்… இப்போது வயதானதனால் சாதாரணமாக அந்த நினைவுகளை அவர்கள் என்னிடமே சொல்லவும் செய்கிறார்கள்… பூக்களும் இளம்பெண்களும் ஒன்றுதான். இயற்கையின் ஒரு அழகிய ஃபாவம் அது. அந்த ஃபாவம் அப்போது அவர்கள் மனதிலும் உண்டு. அது அவர்களை மலரச் செய்கிறது. இளம்பெண்களின் கண்களிலும் புன்னகையிலும் உள்ள ஒளி அந்த மலர்ச்சியில் இருந்து வருவதே. அவள் இந்தபிரபஞ்சமே தன்னைப்பார்க்கவேண்டும் என்றுதான் ஆசைப்படுகிறாள். நீங்கள் பெண்ணியக் கோட்பாடுகளைக் கொண்டு அவள் நெஞ்சின் அழகிய தடாகத்தில் முட்செடிகளை நிறைக்காதவரை அது இயல்பாகவே அப்படித்தான் இருக்கும்…ஆனால் ஒன்று-” சட்டென்று அவர் முகம் மாறுபட்டது ”அழகு என்பது இயற்கையின் ஒரு ஃபாவம் மட்டுமே…மிகமிகத் தற்காலிகமானது. என் மனைவி பேரழகி என்றேன். மிஞ்சிப்போனால் ஒரு  பதினைந்து வருடம் அவள் அப்படி இருந்திருப்ப்பாள். மீதி ஐம்பது வருடத்துடன் ஒப்பிட்டால் அது கொஞ்சநேரம்தான்… இப்போது இந்த வயதில் நின்றபடி அழகைக் காணும்போது இது ஒரு தோற்றம்மட்டும்தான் என்ற எண்ணமும் ஏற்படுகிறது. காவியம் படித்தவனால் குமாரன் ஆசானின் உதிர்ந்தமலரின் வரிகளை நினைக்காமல் பூக்களை ரசிக்க முடியாது…”

”ஆகவே நாம் பெண்களை ரசிப்போம். அவர்களின் அலங்காரங்களை ,நடனங்களை, அணிவகுப்புகளை, உடைகளை ரசிப்போம். அழகிய பெண்கள் பூத்த நந்தவனங்கள் ஆகட்டும் நமது நகரங்கள். நமது நவீனக்கவிதை அதன் அழகை இழந்ததே அது பெண்களை வர்ணிப்பதை விட்டுவிட்டதனால்தான். மனநோய் மருத்துவரிடம் நோயாளி எழுதி நீட்டிய நோய்விவரம்போல இருக்கின்றன நம் கவிதைகள். ஆகவே தான் நான் காளிதாசனை மட்டும் படிக்கிறேன். பெண்ணழகை ரசிக்கக் கூடாதென்பவன் உலகின் மொத்த இலக்கியச்செல்வங்கலையும் கூட்டி குப்பையில்போட்டாகவேண்டும். மொத்த கலைகளையும் அழித்தாகவேண்டும்.. அது நீங்கள் உலகத்தின் கமிசார்களாக ஆவதுவரை  நடக்காது..”

இளம் எழுத்தாளர் “இதெல்லாம் காலாவதியான நிலப்பிரபுத்துவக் குப்பைகள்” என்று சொல்லி எழுந்துவிட்டார்.
*

இப்பேச்சை பிறகொருமுறை நினைவுகூர்ந்தேன். உ.வே.சாமிநாதய்யரின் சுயசரிதையில் ஒரு நிகழ்ச்சி வருகிறது. சென்னை கவர்னர் மற்றும் அவரது மனைவிக்கு ஒரு வரவேற்பை சென்னை நகர பிரமுகர்கள் ஏற்பாடு செய்கிறார்கள். அதற்கு இந்திய வழக்கப்படி ஒரு ‘மங்கல பத்ரம்’ [வரவேற்பிதழ்] எழுதிவாசிக்க விரும்பி அப்போதைய முக்கியமான கவிஞரான மாம்பழக் கவிசிங்கராயரிடம் கேட்டு எழுதி வாங்குகிறார்கள். விழா தொடங்கும் முன் அச்செய்யுட்களை வாசிக்க நேர்ந்த உ.வே.சாமிநாதய்யர் அதிர்ந்தே போகிறார். அதில் நான்கு பாடல்களை கவர்னரின் மனைவியான துரைசானியின் முலைகளை வருணிப்பதற்காக மாம்பழக் கவிசிங்கராயர் ஒதுக்கியிருந்தார். முலைகள் என்றே உ.வே.சா சொல்வதில்லை ‘நகில்கள்’ என்கிறார். உடனே அச்செய்யுட்களை கழித்துவிட்டு தானே வேறு எழுதி அளிக்கிறார்.

உ.வே.சா இருந்தது ஒரு ‘நவீன’ காலகட்டத்தில். அதற்கு முந்தைய ஒரு தொல்மரபில் காலூன்றி நிற்கிறார் மாம்பழக் கவிசிங்கராயர். அவருக்கு முலைகள் அருவருப்பூட்டும் அந்தரங்க உறுப்புகள் அல்ல. கலைகளில், சிலைகளில், ஓவியங்களில்,பாடல்களில் அவர்கள் ரசித்த  அழகுச்சின்னங்கள் அவை. பெண் உடலைக் கொண்டாடிய, வருணித்து வருணித்து அழகுணர்ச்சியின் உச்ச்சங்களைத் தொட்ட ஈராயிரம் வருடத்து மரபு அவருக்கு கீழே பிரம்மாண்ட்மான பீடம் போல் நின்றுகொண்டிருந்தது. இதில் கவனிக்கவேண்டிய இன்னொன்று உண்டு. அந்த சீமாட்டியின் படம் அருங்காட்சியகத்தில் உள்ளது. அம்மையாரின் திரண்ட தோள்களையும் சிவந்த அழகிய முலைகளையும் உலகமே காணும்படி  அழகாக வரைந்திருக்கிறான் கலைஞன். அதுவே அன்றைய ஓவிய மரபு. மாம்பழக் கவிசிங்கராயரின் கவிதையை அம்மையாருக்கு எடுத்துச் சொல்லியிருந்தால் அவர் ரசித்திருப்பார்.

சி.என்.அண்ணாத்துரையின் ‘கம்பரச’த்தின் ஒட்டுமொத்த விமரிசனமே இந்த புள்ளியில் மட்டும் மையம் கொண்டதுதான். கம்பன் பெண்களின் உறுப்புகளை வருணிக்கிறான், சீதையின் உடலை விவரிக்கிறான்,ஆகவே கொளுத்து! தீ பரவட்டும்! அந்த நோக்கில் அணுகினால் தமிழில் கிடைக்கும் முதல் நூலான குறுந்தொகை முதல் அனைத்து இலக்கியங்களையும் ஒட்டுமொத்தமாகக் கொளுத்திவிடவேண்டும். சிந்தாமணி சிலம்பு திருக்குறள் அனைத்தையும். ‘பெண்ணாகிய ஒருவளை’ ‘உலகளந்த அன்னையை’ பாடும்போதே அவள் முலையையும் அல்குலையும் பற்றி பாடுவதே நம் மரபு.

*

கம்பன் காலூன்றி நிற்கும் நெடிய தமிழிலக்கிய மரபு மனித உடலை அருவருக்காதது. அதை பாவத்தின் கனியாகக் காணும் நோக்குகளை அறியாதது. காமத்தைக் கொண்டாடுவது அது. மானுடக் காமத்தை அகிலவல்லமையின் அலகிலாத லீலையாகக் காண்பது. அலகிலாத அந்த லீலையையே அப்பெரும்சக்தியின் காமக் களியாட்டமாக உருவகிப்பது.

இருவகையான உடல்சித்தரிப்புகளை நாம் கம்பனில் காணலாம். காமத்தின் நுண்சித்தரிப்பாக வருபவை ஒரு வகை. பூக்களை, நதிகளை, பறவைகளை வருணிப்பதுபோல இயல்பாக பெண்ணழகை வருணிக்கும் பாடல்கள் இரண்டாம் வகை. இவை வெறும் அலங்காரத்துக்காகவே பெண்ணழகைச் சொல்கின்றன.

கம்பனின் கவைச்சிறப்பை இங்கே மீண்டும் சொல்லியாகவேண்டும். அவன் செவ்வியலாளன். செவ்வியல் என்பது நுட்பத்துள் நுட்பத்துள் நுட்பம் என்று செல்லும் கலைரீதி. கலையெழுச்சியும் செய்திறனும் பிரித்தறிய முடியாமல் இணைவதே செவ்வியல். ஒரு சிறு இடத்தைக் கூட அது வீணாக விட்டுவிடுவதில்லை. அலங்காரங்கள் அதன் இன்றியமையாத பகுதிகள். நமது கோபுரங்களை செவ்வியல் கலைக்கான உடனடியான பெரும் உதாரணங்களாகச் சொல்லலாம். சிலையில்லாத இடமே இல்லை. சிலை கையில் வைத்திருக்கும் ஆயுதத்திலும் இருக்கும் இன்னொரு சிலை. அந்தச் சிலைக்கும் நகைகள் போடப்பட்டிருக்கும்.

தன் காவியம் முழுக்க கம்பன் வர்ணனைகளை இடைவெளியில்லாமல் நிறைத்து வைத்திருக்கிறான். வானம்,நிலம், நதி, பெண் மூன்றும் மீண்டும்மீண்டும் அவனுக்கு அலங்காரங்களை கொடுத்தபடியே இருக்கின்றன. பல சமயம் ஒன்று இன்னொன்றில் இழைகிறது. ஒரே கவிதையில் இரு அழகனுபவங்களும் பின்னிப்பிணைகின்றன. நவீனகலை ஒரு அழகிய படைப்பை உரிய இடத்தில் உரிய முறையில் வைப்பதற்கும் கவனம் கொள்ளும். செவ்வியல் கலைஞனுக்கு அந்த எண்ணமே இல்லை. கோபுரத்தின் மடிப்புகளுக்குள் கூட அற்புதமான சிற்பங்கள் இருக்கும். கம்பனின் கவிதைகளில் அலங்காரங்கள் அலங்காரங்களை மறைக்கின்றன. அலங்காரங்கள் திகட்டி நாலைந்து செய்யுட்களுக்குள்ளேயே நாம் வெளியே தள்ளப்பட்டுவிடுகிறோம். அதுவே செவ்வியல்.

செம்பொன்னால் செய்து குலிகம் இட்டு
எழுதிய செப்பு ஓர்
கொம்பு தாங்கியது எனப் பொலி
வன முலைக்கொடியே!
அம்பொன் மால்வரை அலர் கதிர்
உச்சி சென்று அணுகப்
பைம் பொன் மா முடி மிலைச்சியது
ஒப்பது பாராய்.
[அயோத்யா காண்டம் சித்ரகூடபடலம்]

”செம்பொன்னில்செய்து செங்குழம்புச் சித்திரங்கள் எழுதிய இரு செப்புகளை ஒரு பூங்கொம்பு தாங்கி நிற்பது போன்று பொலியும் காட்டு முலைக்கொடியே. அழகிய பொன்னிற மலையின் உச்சியில் கதிரவன் சென்று சேர்வது அம்மலை பசும்பொன்னால் மணிமுடி சூடியதைப்போல இருப்பதைப் பார்.”

சித்ரகூட மலையின் அழகை ராமன் சீதைக்கு ஒவ்வொன்றாகச் சுட்டிக் காட்டும் இடம் இது. இரு பொன்னிற நிகழ்வுகள். மலையுச்சியில் நின்ற மாலைச்சூரியன் மணிமுடிசூடிய சிரம் போலிருந்ததைச் சொல்ல வந்தவன் ஏன் அவள் முலையழகைச் சொல்கிறான்? கம்பனின் மனம் பொன்னின் அழகுக்கு  வந்து சேர்வதே பெண்ணின் முலை வழியாகத்தான். மலர்க்கொடியே என்றழைக்கும் பெண்ணை முலைக்கொடியே என்றழைப்பதில் உள்ள அழகே இதைக் கவிதையாக்குகிறது. மீண்டும் மீண்டும் மலைசூடிய பொன்னுக்கும் முலைசூடிய பொன்னுக்குமாக மனம் மாறிமாறிச் செல்லும் அனுபவமே இவ்வரிகள் அளிப்பது.
பாந்தள், தேர் இவை பழிபடப்
பரந்த பேர் அல்குல்!
ஏந்து நூல் அணி மார்பினர்
ஆகுதிக்கு இயையக்
கூந்தல் மென் மயில் குறுகின்
நெடுஞ்சிறை கோலி
காந்து குண்டத்தில் அடங்கு எரி
எழுப்புவ காணாய்.
[அயோத்யா காண்டம் சித்ரகூட படலம்]

”பாம்பின் படமும் தேரின் தட்டும் கூட நிகரில்லாதபடி பரந்த அல்குலை கொண்டவளே. நூல் ஏந்தும் அணிமார்பைக் கொண்ட அந்தணர் ஆகுதி செய்வதற்காக கூந்தல் விரிந்த மென் மயிலினங்கள் நெடிய சிறகினால் விசிறி, கனல் காந்தும் குண்டத்தில் சற்றே அடங்கி விட்டிருக்கும் தீயை எழுப்பிக் கொண்டிருப்பதைப் பார்”

பொன்பூண்ட மலைக்கு முலை போல காந்து குண்டத்துக்கு அல்குல். அதைச் சூழந்து சிறகு விரித்து வீசும் நீலகூந்தல் கொண்ட மயிலினங்கள்! கம்பனின் கற்பனையின் வீச்சு. ‘வளைகள் காந்தளில் பெய்தன அனைய கை’ [காந்தள் மலரில் வளையல்களைப் போட்டுவைத்தது போன்ற கைகள்] ‘வடுவின் மா வகிர் இவை என பொலிந்த கண்’ [வடுமாங்காயை நேர்பாதியாகப் பிளந்தது போன்ற கண்கள்] என வருணனைகள் வந்தபடியே இருக்கின்றன இந்த சாதாரணமான காடுகாண் நிகழ்வில்.

இன்றைய வாசகன் கம்பனில் தோய்வதென்பது ஒரு விடுதலை. நாம் வாழும் இரும்புச்சட்டங்களினால் ஆன உலகில் இருந்து , மண்ணிலிருந்து எழமுடியாத எடையில் இருந்து எழுந்து கனவுகளின் பெருவெளியில் அலைதல்தான் அது. அங்கே நம்மைக் கட்டுப்படுத்தும் அச்சங்கள் இல்லை. ஏமாற்றும் பாவனைகள் இல்லை. முக்கியமாக கம்பன் மெல்லமெல்ல நம்மை ஒழுக்கம் என்ற கவசத்திலிருந்தும் சற்றே விடுவித்து ஆத்மாவின்மீது இளம்காற்று படும்படி செய்கிறான். அதன் பின் தூய உள்ளுணர்வுகளினால் மட்டுமே உள்வாங்கப்படும் வனப்புகளில் உலவ விடுகிறான்.

காமமும் கம்பனும்- ஒரு காலைநேரம்

கம்பனும் காமமும், இரண்டு

கம்பனும் காமமும் 3:அருளும் மருளும் அது

[ மறுபிரசுரம்/முதற்பிரசுரம் 2008 ஜூன் ]

முந்தைய கட்டுரைபெண்ணெழுத்து -நவீன்
அடுத்த கட்டுரை‘வெண்முரசு’ – நூல் மூன்று – ‘வண்ணக்கடல்’ – 44