மந்திர மாம்பழம்

”சாவான பாவம் மேலே
வாழ்வெனக்கு வந்ததடீ
நோவான நோவெடுத்து
நொந்துமனம் வாடுறண்டீ”

நான் இருபத்தேழு வருடம் முன்பு திருவண்ணாமலையில் பார்த்த ஒரு பண்டாரம் பாடிய வரி இது. இதை நான் ஏழாம் உலகம் நாவலின் மகுடவரியாகக் கொடுத்திருக்கிறேன்

அவர் விசித்திரமான மனிதர். சிக்குபிடித்த தலைமயிரும் அழுக்குடையுமாக பித்தர் கோலம். பேசுவதேயில்லை, பாடுவதுடன் சரி. எங்காவதுபோய் எதையாவது சாப்பிட்டுவிட்டு வந்து கோயிலின் பின்பக்க கோபுரவாசலில் படுத்துக் கொள்வார். நானும் அன்று கிட்டத்தட்ட அதே வாழ்க்கைதான்.

அவர் பகல்களில் பாடுவதில்லை. இரவில் தனிமையில், தனக்குத்தானேதான். அவரது வரிகள் பெரும்பாலும் அவரே உருவாக்கியவை என்பது தெரியும். பலவரிகளை நான் நினைவிலிருந்து எடுத்தாண்டிருக்கிறேன். ‘சாவான பாவம்’ என்பது ஒரு கிறித்தவச் சொல்லாட்சி.  அவரது மெட்டுகளில் காதில்விழும் சினிமாப்பாடல்களின் பாதிப்பும் உண்டு. சிலவரிகளில் ‘மந்திரத்தால் விளுந்த மாங்கா மனசிலே இனிக்குதடி’ போன்ற அபூர்வமான கவித்துவமும் தெரியும். யார் எவரென யாருக்கும் அக்கறையில்லை.

ஒருமுறை அவரை ஒரு தூணில் சாய்ந்தவராக அமர்ந்திருக்கக் கண்டேன். அசைவில்லாமல். விழிகள் மேலேறி. மூன்றாம்நாள் அதே நிலையில் கண்டபோதுதான் செத்துவிட்டாரோ என்ற ஐயம் ஏற்பட்டது. ”சாமி நிட்டையிலே இருக்கு” என்றார் அவர் அருகே கவலையில்லாமல் கிடந்த கேப்பைப் பண்டாரம். ஆறுநாள். சாகவில்லை என்பதே எனக்கு வியப்பாக இருந்தது. ஏழாம் நாள் ஆளைக் காணவில்லை.”சாமி வடக்க போயிட்டுது” என்றார் கேப்பைப்பண்டாரம். ”அவுக சித்தர்லா? சில்லற இருக்கா மலையாளச்சாமி, பீ£டி வாங்கணும்”

விசித்திரமான மர்மம் சூழ்ந்த நாடோடிகள் நம் கிராம வாழ்க்கையில் மீண்டும் மீண்டும் அடையாளம் கண்டுகொள்ளபப்ட்டிருக்கிறார்கள். அவர்கள் அனைவருக்குமே பொதுவான பெயர் சித்தர்கள். கிறுக்கென ஒரு தோற்றமும் ஞானியென மறுதோற்றமும் காட்டும் மனிதர்கள். அவர்களை நம் லௌகீக மனம் தனது தேவைகளை வைத்து புரிந்துகொள்கிரது. ‘சாமி தொட்டு குடுத்தா வேவாரம் விருத்தியாகும்லா’ என்பதில் தொடங்கி ‘சாமி கல்யாணமாகி பத்துவருசமாட்டு பிள்ளையில்ல’ என்பது வரை. அவர்கள் இறந்ததுமே அவர்களுக்கு சமாதி உருவாகிறது. குருபூஜைகள் நிகழ ஆரம்பிக்கின்றன.

தமிழ்நாட்டில் எந்த ஐந்து கிலோமீட்டரிலும் குறைந்தது இரு சித்தர்கள் வாழ்ந்த வரலாறு இருக்கும். குமரிமாவட்டத்தில் அறியப்பட்ட சித்தர் சமாதிகளே இருபதுக்கும் மேல். சித்தர்களின் இஸ்லாமிய வடிவம் சூ·பிகள். அவர்களுக்கு தர்காக்கள்.அவர்களில் வெகுசிலர் பாடல்கள் பாடியிருக்கிறார்கள். கூட இருந்த சீடர்கள் கைச்சரக்கு கலந்து பதிவுசெய்திருக்கிறார்கள். பலருடைய பாடல்களில் யாப்பு சித்தர்களின் மாணவர்களின் பங்களிப்புதான் என்பவர்கள் உண்டு.

பெரும்பாலான சித்தர் பாடல்கள் பாமர மொழியிலானவை. பாமரர்கள் புரிந்துகொள்ள முடியாதவை. இந்த மர்மமே சித்தர்பாடல்களின் உச்சகட்ட வசீகரம் என்று படுகிறது. சித்தர்கள் பற்றிய கதைகளிலும் இந்த இரண்டு தளங்கள் உள்ளன. அரிய மெய்ஞான குறிப்பொருட்கள் உள்ள கதைகள் உண்டு. அதேபோல மிகச்சாதாரணமான பாமர அற்புத கதைகளும் உண்டு. சித்தர்கள் பாமர மனத்தின் வியப்புக்கும் உயர்தத்துவத்தின் மர்மத்துக்கும் நடுவே உள்ள ஒரு இடத்தில் நிலை கொள்கின்றன

சித்தர் என்ற கருதுகோள் நம் பண்டைய இலக்கியங்களில் அதிகம் இல்லை. பதினாறாம் நூற்றாண்டைச் சேர்ந்த பரஞ்சோதி முனிவரின் திருவிளையாடற்புராணத்தில் வரும் சிவலீலைகளில் ஒன்று சிவபெருமான் சித்தராகியது. அதற்கு முன்னால் திருமூலரின் திருமந்திரம் சித்தர்ஞானத்தின் தொகுதியாக உள்ளது. அதற்கு முந்தைய இலக்கியப்பதிவு எதுவென தெரியவில்லை. சித்தர்கள் பதினைந்தாம் நூற்றாண்டு முதல் தொடர்ச்சியாக அறியக்கிடைக்கிறார்கள்.

அதாவது சித்தர்கள் என்ற கருத்துருவம் பதினைந்தாம் நூற்றாண்டு முதல்தான் உருவாகி வலுப்பெற்று வந்திருக்கிறது என்று பொருள்.பௌத்த சமண மதங்களின் அழிவிற்குப் பின் தமிழகத்தில் பக்தி இயக்கம் தொடங்கியது. இக்காலகட்டத்தில் காளாமுகம், காபாலிகம் போன்ற தாந்த்ரீக மதங்கள் தமிழ்நாட்டில் அறிமுகமாகியிருக்கலாம். இவை அதிகமும் சைவம் சார்ந்தவை. சாக்த மதம் சார்ந்தவையும் உண்டு. இவர்களுக்கு பொதுவான மதச்சடங்குகளான வேள்வி, பக்தி என்ற இரு வழிகளிலும் நம்பிக்கை இல்லை. உபாசனை மற்றும் யோகம் ஆகிய செயல்முறைகளில் நம்பிக்கை கொண்டவர்கள் இவர்கள். ஏற்கனவே இங்கே வலிமையாக இருந்த வஜ்ராயன பௌத்தம் என்ற பிரிவு உபாசனையில் நம்பிக்கை கொண்ட ஒன்று. அதுவும் இதனுடன் சேர்ந்து கொண்டது.

சமண மரபில் உள்ள திகம்பரர் என்ற கருதுகோளுக்கும் சித்தர் என்ற கருதுகோளுடன் உறவிருக்கலாம். உடைகள் உட்பட உலகியல் அனைத்தையும் துறந்துவிட்டவர்கள். அத்துடன் தொன்மையான தமிழ் யோகப்பயிற்சி மரபு ஒன்று இருந்திருக்கலாம். அது ஊழ்கம் என்ற சொல்லால் குறிப்பிடப்படுகிறது. அதைப்பயின்றவர்கள் படிவர்கள் எனப்படுகிறார்கள்.  இந்த மரபுகள் எல்லாம் கலந்து உருவானதே சித்தர் என்ற உருவகம். சோறிடும் நாடு, துணிதரும் குப்பை என்று ஏதுமொரு குறையில்லாமல் வாழும் மனிதர் என்ற இலட்சியக்கனவு.

இவ்வாறாகநாடெங்கும் பரவியிருந்த புரிந்துகொள்ள முடியாத இந்த மனிதர்கள் சித்தர் என்ற பொதுப்பெயரால் சட்டென்று அடையாளப்படுத்தப்பட்டார்கள். அவர்களில் சிலர் கவிஞர்கள். சிலர் யோகிகள். சிலர் மாயாவாதம் பேசியவர்கள். சிலர் சிவபக்தர்கள். சிலர் மருத்துவர்கள். சிலர் ரசவாதிகள். சிலர் ஜடவாதிகள். அவர்களின் பாடல்கள் வாய்மொழிப்பதிவாக இருந்து பின்னர் நேரடியாக அச்சுக்கு வந்தன. எஸ்.வையாபுரிப்பிள்ளை சித்தர் பாடல்களுக்கு ஏடுகளே கிடைக்கவில்லை என்று குறிப்பிடுகிறார். அக்காரணத்தாலேயே அவர் சித்தர் பாடல்களை தொன்மையான இலக்கியம் என்ற தகுதி கொடுத்து நோக்க மறுத்தார்.

சித்தர்களில் சிவவாக்கியர், பத்ரகிரியார், பட்டினத்தார் ஆகியோர் பெரும்புகழுடன் இருந்திருக்கிறார்கள். தனித்தனியாக சாணித்தாள் வெளியீடுகளாக சந்தைகளில் விற்கப்பட்ட இவர்களின் நூல்களை ஒன்றாக ‘பெரியஞானக்கோவை’ என்றபேரில் ரத்தினநாயகர் அண்ட் சன்ஸ் என்ற பிரசுர நிறுவனம் ‘மாம்பழக்கவிசிங்கராயர்’ என்பவரின் உதவியுடன் தொகுத்து வெளியிட்டது என்று சொல்லப்படுகிறது. நாம் இன்றுகாணும் பதினெட்டு சித்தர்கள் என்ற முறையை உருவாக்கியவர் மாம்பழத்தாரே — கைக்கு கிடைத்த ஒழுங்கில். பதினெண் சித்தர்கள் என்ற சொல்லாட்சியை ஏதேனும் தொல்நூலில் இருந்து எடுத்திருக்கலாம். ஒன்பது பதினொன்று ஏழு ஆகியவை உபாசனை மரபில் உள்ள மர்மமான, புனிதமான எண்கள்.

பதினெட்டு சித்தர் பெயர்கள் ஒவ்வொரு நூலிலிலும் ஒவ்வொன்றாகவே இருக்கும் . முக்கிய சித்தர்கள் தவிர பிறர் மாறிக் கொண்டே இருப்பார்கள். ராமலிங்க வள்ளலாரும் பாரதியாரும்கூட அப்பட்டியலில் சேர்க்கபப்ட்டதுண்டு. ஐம்பது வருடம் முன்பு கவிஞர் ச.து.சு.யோகியார் சித்தர்பாடல்களுக்கு ஒரு தொகுப்பு கொண்டுவந்தபோது அதில் பொதுவுடைமைச்சித்தர் என்ற பேரில் கம்யூனிசக்கருத்துக்களை பாடல்களாக எழுதிச் சேர்த்தார்.  அதை கோமல் சுவாமிநாதன் அவரது சுயசரிதையான பறந்துபோன பக்கங்கள் என்ற நூலில் பதிவுசெய்கிறார். இன்றும் இடதுசாரிகள் பொதுவுடைமைச் சித்தரை  அடிக்கடி மேற்கோள் காட்டுகிறார்கள்.

சித்தர்பாடல்களில் ஐந்தாறு சித்தர்கள் பாடல்களை தவிர பிறபாடல்கள் கவித்துவம் அற்றவை, புரிந்துகொள்ளவே முடியாதவை என்பதே உண்மை.  ஏராளமான பாடல்கள் இன்று நாம் புரிந்துகொள்ள முடியாத விசித்திரமான குறியீடுகளால் ஆனவை. தங்கள் மேதாவித்தனத்தைக் காட்ட அவற்றுக்கு மனம்போல் பொருள் தந்து பேருரை ஆற்றுபவர்களும் உள்ளனர். சித்தர் பாடல்களில் ஆழ்ந்த பயிற்சி உடைய வடலூர் ராமலிங்க வள்ளலார் அவற்றில் உள்ள குறியீட்டு சாத்திரங்களினால் எந்த பயனும் இல்லை என்று முழுமையாக நிராகரிப்பதைக் காணலாம். ஒருவேளை அவற்றுக்கு பொருளும் பயனும் இருக்கலாம்– ஆனால் நம் மொழிப்பிளப்பு ஆசாமிகள் நிகழ்த்துவதுபோன்ற ஆய்வால் அங்கு சென்று சேர முடியாது. அந்த ஞானமரபின் நீட்சியாக ஏதேனும் குருவரிசை இன்று இருக்குமென்றால் அதனூடாகவே சென்றுசேர முடியும்.

சித்தர் பாடல்கள் இன்று சாதாரணமாக சைவ சித்தாந்தத்தில் இணைத்தே பார்க்கப்படுகின்றன. ஆனால் சென்ற நூற்றாண்டுவரைக்கும் கூட அவற்றுக்கு சைவ சித்தாந்தத்துக்குள் இடமில்லை என்ற நிலையே இருந்தது. சித்தர் பாடல்கள் ஆசார சைவர்களால் அநாச்சாரமானவை என்று கருதப்பட்டன. குறிப்பாக திருநெல்வேலி சைவர்கள் சித்தர்களை முழுக்கவே நிராகரித்தனர். சித்தர் பாடல்களும் சரி, சித்த மருத்துவமும் சரி வண்ணார் சாதியினரிடமே அதிகம் புழக்கத்தில் இருந்தன என்பது கூர்ந்து கவனிக்கப்படவேண்டிய ஒன்று. சித்தர் பாடல்கள் வாய்மொழி மரபாக இருந்து நேராக ‘குஜிலி’ பதிப்புகளாக சந்தையில் விற்கப்பட்டமை- ஏட்டுச்சுவடிகளில் எழுதப்படாமை- இவ்வாறுதான் புரிந்துகொள்ளப்படவேண்டும்.

இதற்கான காரணத்தை தேடிப்போவது விரிவான ஆய்வுக்குரிய விஷயம் என்றாலும் ஒரு சிலவற்றைச் சுட்டிக் காட்டலாம். நெல்லைப்பகுதிகளில் தாந்த்ரீக சைவம், அதாவது வாம மார்க்கம் ஒருகாலத்தில் பெரும்புகழ்பெற்று இருந்திருக்கிறது. காரணம் தென்பொதிகை மலைதான். குற்றால நாதர் ஆலயம், சங்கரன் கோயில் ஆலயம் போன்றவற்றில் தாந்த்ரீக வழிபாட்டு முறைகளுக்கு இடமிருந்த தகவலை அறிய முடிகிறது. படிப்படியாக காபாலிகர் காளாமுகர் போன்ற சைவ தாந்த்ரீகர்கள் சைவ பக்தி இயக்கத்தால் பின் தள்ளப்பட்டார்கள். அவர்களின் வழிமுறைகள் மேல் ஒரு வெறுப்பு பொதுவாக உருவாக்கப்பட்டது. அதற்கு அவர்களின் குரூரமான வாழ்க்கைமுறையும் மக்கள் விரோத தனிமைப்போக்கும் காரணமாக இருந்திருக்கலாம். இந்தியாவெங்கும் தாந்த்ரீக வழிமுறைகளை பக்தி இயக்கமே இல்லாமலாக்கியது. சித்தர்கள் வாம மார்க்கத்தின் தொடர்ச்சிகள் என்பதனால்  அவர்களை பக்திசார்ந்த சைவம் நிராகரித்தது. அவர்களின் கட்டற்ற போக்கு சைவர்களுக்கு மனமறுப்பை உருவாக்கியிருக்கலாம்.

சென்ற நூற்றாண்டில் மெல்லமெல்ல சைவம் சித்தர் மரபை உள்ளிழுத்துக் கொண்ட பரிணாமத்தை நாம் காண்கிறோம். அதனுடன் இணைந்து பிறர் நோயை தொட்டு மருத்துவம் செய்ய வேண்டும் என்பதனால் ஆசாரமானவர்கள் செய்யத்தயங்கி வந்த மருத்துவமும் உயர்குடிச் சைவர்களால் கையகப்படுத்தப்பட்டது. சென்ற நூற்றாண்டில் வெளிவந்த நூல்களை பார்த்தோமென்றால் ஒரு பெரும் பகுதி சைவநூல்கள் என்பதைக் காணலாம். ஒரு மாபெரும் அறிவுக் கொந்தளிப்பே நடந்திருக்கிறது. அந்நூல்களில் பெரும்பகுதி அப்படியே காலத்தின் ஆழத்தில் மூழ்கி இல்லாமலாயின. அவற்றில் நடந்திருக்கும் கருத்துச் செயல்பாட்டை மூன்று புள்ளிகளில் வகுக்கலாம். அவை

1. வேத, வேதாந்த மரபில் இருந்து முடிந்தவரை சைவத்தை விலக்கிக் கொண்டுவருதல்

2. சைவத்தையும் தமிழையும் ஒரே நாணயத்தின் இரு பக்கங்களாக காட்டுதல். திருக்குறள் போன்ற நூல்களை சைவத்துக்குள் கொண்டு வந்து நிறுவுதல்

3. சித்தர்மரபு போன்றவற்றை சைவத்திற்குள் கொண்டுவந்து ஒரு தொகுப்புத்தன்மையை உருவாக்குதல்

இவ்வாறு எழுதப்பட்ட பல்லாயிரம் பக்கங்கள் வழியாகவே சைவ மரபு சித்தர் மரபை உள் வாங்கிக் கொண்டது. ஆனால் சித்தர் பாடல்கள நேரடியாக படிப்பவர்கள் அவை சைவத்துக்குள் அடங்குபவை அல்ல என்பதை எளிதில் காணலாம். அவற்றுக்கு இந்து ஞானமரபில் உள்ள ஜடவாத தரிசனங்களுடனும் வேதாந்த தரிசனங்களுடனும் ஆழமான உறவு உண்டு. சித்தர்களை அப்படி ஒரு குறிப்பிட்ட தத்துவக் கோட்பாட்டுச் சட்டகத்துக்குள் அடக்க முடியாது.

அதேபோல ஆரம்பகால இடதுசாரிகள் – குறிப்பாக ஜீவா, ஆர்.கெ.கண்ணன் ஆகியோர் – சித்தர்களை சமூகப்புரட்சியாளர்களாகச் சித்தரித்தார்கள். அவர்களில் உள்ள சாதிமறுப்பு, ஆசார மறுப்பு போன்ற விஷயங்களை முன்னிலைப்படுத்தினர். அவர்களை கலகக்காரர்களாகச் சித்தரிக்கும் ஒரு போக்கும் இப்போது உள்ளது. இதன் உச்சமே பொதுவுடைமைச் சித்தர் போல போலி சித்தர்களை எழுதிச் சேர்த்த செயல். இந்த கருத்துக்களே இன்று சித்தர்களைப்பற்றிய நமது பொதுப்புத்தியில் உள்ளன. சித்தர்கள் சமூக சீர்த்திருத்தவாதிகள் அல்லர். அவர்களை சமூகமறுப்பாளர்கள் அல்லது சமூக நிராகரிப்பாளர்கள் என்று வேண்டுமானால் சொல்லலாம். அவர்களின் இலக்கும் வழிமுறைகளும் இந்த அரசியலாளர்கள் சற்றும் புரிந்துகொள்ள முடியாதவை.

சித்தர்களை நாம் இன்று ஒருபக்கம் சைவர்களும் மறுபக்கம் முற்போக்காளர்களும் மூச்சுமுட்ட கண்பிதுங்க நெரித்து வளைத்து ஒடித்து செய்யும் விளக்கங்கள் மூலமே அணுகிக் கொண்டிருக்கிறோம். திறந்த நோக்குடன் சித்தர் பாடல்களை அணுகுவதற்கான பயிற்சி நம்மிடம் இல்லை. அதற்கு உள்நோக்கம் இல்லாத பார்வை தேவை. இந்து ஞான மரபுகளில் பழக்கமும், தாந்த்ரீக வழிமுறைகளைப் பற்றிய அறிவும் தேவை. மேலும் சித்தர்களை அவர்களின் சமகாலத்தில் இந்தியாவெங்கும் இருந்த இதேபோன்ற போக்குகளுடன் ஒப்பிட்டு ஆராயும் நோக்கும் தேவை. குறிப்பாக கன்னட வசன இயக்கத்துக்கு சித்தர்  மரபுடன் மிக நெருக்கமான உறவு உண்டு. இன்றுவரை இவ்விரு மரபுகளையும் ஒப்பிட்டு ஆராயும் ஒரு நல்ல ஆய்வை நான் கண்டதில்லை.

சித்தர்பாடல்களை வைத்து சித்தர்களை புரிந்துகொள்ள முடியாது. அவர்கள் ஒவ்வொருகணமும் புதிதாக நிகழ்பவர்கள். மனிதன் என்பவன் வெறும் மனம் மட்டுமல்ல. இப்பிரபஞ்சத்துக்கு உள்ள ஆழமும் விரிவும் அவனுக்கும் உண்டு என்ற எண்ணமிருந்தால் அவர்களை நெருங்க முடியும்.  நம்மிடையே இன்றும் சித்தர்கள் உருவாகிக் கொண்டுதான் இருக்கிறார்கள். உதாரணமாக கன்யாகுமரியில் வாழ்ந்த மாயம்மா. நானே அவரை பலமுறை கண்டிருக்கிறேன். எண்பது வயதுக்கும் மேற்பட்ட அந்த பெண்மணி சாதாரணமாகவே பாறைகள் மண்டிய, உக்கிரமான அலைகள் எழும் கடலில் நீந்திச்செல்வார், தேர்ந்த மீனவர்கள் கூட செல்லாத இடங்களில் அவரைக் கண்டிருக்கிறேன். அவர் யார் என்று புரிந்துகொள்ள அவரைப்பற்றிய எந்த பதிவும், எந்தக் கதையும் உதவாது என்பதே உண்மை.

பதினெட்டுவருடம் முன்பு ரிஷிகேசத்தில் ஒரு சடைச்சாமியாரைக் கண்டேன். தினம் ஒரு ரூபாய்க்குமேல் பிச்சை எடுக்கமாட்டார் என்றார்கள். அதற்கு சப்பாத்தி வாங்கிவிட்டு மலை ஏறிச் சென்றிவிடுவாராம். நான் ஒரு பத்து ரூபாயை திருவோட்டில் போட்டேன். அப்படியே கவிழ்த்துவிட்டு ஒன்றுமே நிகழாதது போல் அமர்ந்திருந்தார். அவர் ஒரு வெள்ளைக்காரர்.

================================================

மறுபிரசுரம். முதல்பிரசுரம் 2008 ஜூலை

sunday indian

கோட்பாட்டின் வலிமையும் வழிச்சுமையும் – கா. சிவத்தம்பியின் இலக்கிய நோக்கு

அறிவியல் புனைகதைவரிசை 5 – பித்தம்

இராமலிங்க வள்ளலார்

முந்தைய கட்டுரைநீலகண்ட சிவன், இன்னொரு தியாகையர்
அடுத்த கட்டுரைநாமக்கல் உரை -கடிதம்