நீரும் நெறியும்

பேச்சிப்பாறை கால்வாய்,பார்வதிபுரம்

 

பேச்சிப்பாறை அணையில் இருந்து சானல்களுக்குத் தண்ணீர் விட்டு பத்துநாள் தாண்டிவிட்ட பிறகும் பார்வதிபுரத்துக்கு நீர் வரவில்லை. நடக்கச் சென்றபோது கணபதியா பிள்ளை கலுங்கில் அமர்ந்திருந்தார். ”ஞாற்றடி பெருக்கியாச்சா?”என்றேன்.”வெள்ளம் வரல்லேல்லா?”என்றார். ”விடல்லியோ?” ”விட்டு பத்துநாளாச்சு…வந்துசேரணுமே” எனக்கு புரியவில்லை. நீர் எங்கே போகிறது?

கணபதியாபிள்ளை சொன்னார். பேச்சிப்பாறை நீரின் அரசியலை. 1906 ல் அப்போதைய திருவிதாங்கூர் மகாராஜா மூலம்திருநாள் அவர்களால் கட்டப்பட்டது அந்த அணை. குமரிமாவட்டத்தின் வளத்தைப் பெருக்கியதில் அந்த அணைக்குள்ள பங்கு சாதாரணமல்ல. உண்மையில் இன்று மாபெரும் வயல்வெளிகளாக உள்ள பகுதிகள் எல்லாம் அந்த அணைவந்தபின் நீர் பெற்ற தரிசு நிலங்கள்தான். மொழி -சாதி அரசியல் காரணமாக இன்றைய குமரிமாவட்ட நாடார்களில் இளைய தலைமுறையினர் மன்னரை வெறுக்கிறார்கள். சாதி அரசியலும் மதஅரசியலும் உருவாக்கிய குறுகிய, இருண்ட ஒரு வரலாற்றுணர்வே இங்கே உள்ளது.

ஆனால் குமரிமாவட்ட நாடார்களிடம் இன்றுள்ள செழிப்பான தென்னந்தோப்புகள் எல்லாமே பேச்சிப்பாறை அணைநீர் மூலம் உருவானவையே. அவ்வணையே இங்குள்ள நாடார் எழுச்சியில் பெரும்பங்குவகித்தது என்றால் அது மிகையல்ல. சமீபத்தில் பேச்சிப்பாறை அணையின் நூறாண்டு நிறைவுவிழா [இரண்டுவருடம் பிந்தி ]கொண்டாடபப்ட்டது. மொத்தப் பேச்சாளர்களும் இப்போதைய ஆட்சியாளர்களைப் பற்றி மட்டுமே பேசினர், ஒருவர் கூட மூலம்திருநாளைப் பற்றியோ அவரது கனவை நனவாக்கிய எஞ்சினியர் மிஞ்சின் பற்றியோ ஒரு சொல்லும் சொல்லவில்லை என்று நாளிதழ்களில் செய்திவந்தது.

வரலாறு எப்போதுமே அபப்டித்தானே? பண்டைய வரலாற்றை எடுத்துப் பார்த்தால் இன்றைய குமரிமாவட்டத்தின் வளத்துக்கு மூலகாரணமானவர் இருவர். மதுரை ஆட்சியாளர்களிடமிருந்து குமரி நிலபப்குதிகளை மீட்டு 1731 முதல்  இருபதண்டுக்காலம் ஆட்சி செலுத்திய  மார்த்தாண்டவர்மா மகாராஜா. அவரது படைத்தலைவரான காப்டன் பெனடிக்ட் டி லென்னாய் என்ற டச்சுக்காரர். டி லென்னாயின் சமாதி தக்கலை அருகே உதயகிரிக் கோட்டையில் பாழடைந்து கிடக்கிறது. நான் அறிந்து திருவனந்தபுரம் அரச குலம் அல்லாமல் எவருமே அவரை நினைவு கூர்ந்து அஞ்சலி செலுத்தியதில்லை.

மார்த்தாண்டவர்மா

பேச்சிப்பாறையையைப் பற்றி கணபதியா பிள்ளை ஒன்று சொன்னார். அணையை கட்டும் முடிவை எடுத்தவர் மூலம்திருநாள் மகாராஜா. ஆனால் போதிய நிதி இல்லை. ஆகவே குளங்கள் வயல்களாக விற்கப்பட்டு நிதி திரட்டப்பட்டது. ஆனால் அது ஒரு கண்துடைப்பு. இன்று பத்மநாபசாமி ஆலயத்தில் இருக்கும் அரண்மனையின் ரகசிய கருவூலத்தில் இருந்தே நிதி வந்தது. அதை வெள்ளையன் அறிந்துகொண்டால் பிடுங்கிவிடுவான் என்பதனால் இந்த நாடகம் நடத்தப்பட்டது. அன்றைய பெரும்பஞ்ச காலகட்டத்தில் திருவிதாங்கூரில் மட்டும் மூன்றுவேளை அனைவருக்கும் கஞ்சி ஊற்றப்பட்டது. கஞ்சித்தொட்டிக்கான செலவும் இப்படி மக்களிடமிருந்து வசூலிக்கப்பட்டதாக நாடகம் போடப்பட்டது

அணை கட்டப்பட்டதும் ஆயக்கட்டு பகுதிகள் முழுமையாக சர்வே செய்யப்பட்டன. சானலின் ஒரு மடை வழியாக பயன்பெறும் வயல்கள் ஒரு அலகாக வகுக்கப்பட்டன. அவர்கள் இணைந்து நீரை பங்கிட்டுக் கொள்ள ஒரு உழவர் குழுவை அமைக்க வேண்டும். கிடைக்கும் நீரை அவர்கள் சீராக பங்கிடவேண்டும். அவர்களுக்கு தேவையான நீர் கணக்கிடப்பட்டு அது கிடைக்கும்வரை மட்டுமே மடை திறக்கப்படும். அதை அதிகாரிகள் கறாராகவே கண்காணிப்பார்கள். நீரை அவர்கள் குளங்களில் சேமித்துக் கொண்டு சீராக செலவிடுவார்கள்.

சுதந்திரத்துக்குப் பின்னர் மெல்ல மெல்ல நீர்ப்பங்கீட்டு அமைப்புகள் சீரழிந்து கடந்த நற்பது வருடங்களாக எந்தவிதமான கட்டுபாடும் இல்லை. பெரும்பாலான இடங்களில் மக்கள் அவர்களே மடைகளை திறந்து விட்டுக் கொள்கிறார்கள். இன்று வேளாண்மைப் பகுதி பத்துமடங்காக ஏறியிருக்கிறது. ஆனால் நீர் அரிதிலும் அரிதாக உள்ளது.  பல ஊர்களில் கால்வாய் நீரை மடை திருப்பி தோப்புகளையும் ரப்பர் எஸ்டேட்டுகளையும் சதுப்பாகும் வரை நனைக்கிறார்கள். நாட்கணக்கில் விட்டுவிடுகிறார்கள். பல இடங்களில் நீர் நிறைந்து காடுகளையெலலம் நனைத்து ஓடைகள் வழி ஆற்றுக்கு போய் வீணாகிறது.

”அவனுகளுக்கு நெறைஞ்ச பெறவுதான் பய்ய வெள்ளம் இங்க வந்து சேரும்…அதாக்கும் காரியம்”என்றார் பிள்ளைவாள்.”எஸ்டேட்டுக்காரனுகளை தட்டிக் கேக்க எங்கிளுக்கு சங்குறப்பு இல்லல்லா? அவனுக பைசா உள்ளவனுக…”

அப்படி கால்வாயில் வந்த நீரை தேக்கிவைப்பது இன்னும் கஷ்டம். பெரும்பாலான ஏரிகள் தூர்க்கப்பட்டுவிட்டன. கணியாகுளம் மைய ஏரியே உதாரணம். அதன் நான்குபக்கமும் பங்களா வீடுகள் வந்து விட்டன. நீரை நிரப்பி விட்டு விவசாயி வீட்டுக்குச் சென்றால் நள்ளிரவிலேயே ஆள்வைத்து மதகை திறந்துவிட்டுவிடுவார்கள். அல்லது தோண்டி விடுவார்கள். ஐந்துவருடத்தில் ஒருமுறைகூட ஏரியில் நீர் நிற்க அவர்கள் விட்டதில்லை. சுங்கான்கடையில் உள்ள மாபெரும் குதிரைபாஞ்சான்குளம் நிறைந்தால் ஐந்தே நாளில் காலியாகி மணல் ஓடிக்கிடக்கும். கணியாகுளத்தின் நான்கு ஏரிகளுமே கரைகளில்லாத வெற்றுச் சதுப்புகள்.

”என்னசெய்ய? ஆரிட்டண்ணு சண்டைக்குப் போறது? சாவுகது வரை நாம செய்வோம். பின்ன கெடந்து முள்ளு முளைக்கட்டு”என்றார் பிள்ளை. ”செரி அப்பம் கடமடைக்கு எப்பம் வெள்ளம் போறது?”என்றேன்.

”கடமடைக்கு வெள்ளம் போகணுமானா அவனுக நாலுநாள் பஸ்ஸை மறிக்கணும்…”என்றார் கணபதியாபிள்ளை. ”கலெக்டர் வந்து பேசி எடுத்து கொஞ்சம் தண்ணி விட்டுகுடுப்பாக….தலையெளுத்து கடப்பொறம் ஆளுகளுக்குத்தான். அவனுகளுக்கு இந்த வெள்ளம் எங்க போயி எண்ணைக்கு அவனுக குடிக்கது?”

மூலம்திருநாள் ராமவர்மா

”இதையா குடிக்காங்க?” என்றேன்.. பார்வதிபுரம் தாண்டினால் நகரில் உள்ள முக்கிய கழிவுநீர் ஓடைகள் எல்லாமே இதில்தான் கலக்கின்றன. அரசாங்கமே பெரிய சிமிட்டி ஓடையாக கட்டி கொண்டுவந்து சேர்த்திருக்கிறது. ”பின்ன? வேற தண்ணி வேணும்லா? குளோரினை அடிச்சு குடுப்பானுக…அப்டிபார்த்தா பழையாத்திலதானே நாகருகோயிலுக்க சாக்கடையும் க்ககூஸ¤ம் முழுக்க கலக்குது..அதைத்தானே கன்யாகுமரி முதல் உள்ள எல்லா கடப்பொறம் ஆளுகளும் குடிக்கானுக?”

நாகர்கோயிலில் எந்த ஆஸ்பத்திரியிலும் நேர் பாதிப்பேர் கடற்கரை பரதவர்களாகத்தான் இருப்பார்கள். வருடம் தோறும் செப்டம்பர் அக்டோபர் நவம்பர் மாதங்களில் கடற்கரைகளில் ஒரு வயிற்றுப்போக்கு அலையுண்டு. பலர் சாவார்கள். ”பீச்சுனாமி”என்று அவர்கள் சொல்லிக் கேட்டிருக்கிறேன். நாகரீகத்தின் சாக்கடை குடிக்கவைக்கப்பட்ட மனிதர்கள்.

”இது இங்க மட்டும் உள்ள காரியமில்ல..தமிழ்நாடு முழுக்க இந்த கதைதாலா…தண்ணி இல்ல. உள்ளவன் இல்லாதவனுக்கு விடமாட்டான். விட்டாலும்  அவனுக்க பீயக் கலக்கித்தான் குடுப்பான்…என்ன செய்யியது?” என்றார் கணபதியா பிள்ளை.

நீர் பங்கீடு

 

மறுபிரசுரம்/முதற்பிரசுரம் Jun 21, 2008 

 

முந்தைய கட்டுரைஅறம் -கடிதம்
அடுத்த கட்டுரைகுமரிநிலம் -கடிதங்கள்