மலேசியாவில் கம்போங் மெடான் வட்டாரத்தில் 2001 மார்ச் மாதம் எட்டம் தேதி முதல் தொடங்கி மார்ச் 24 வரை தொடர்ந்து அங்கு வாழும் இந்திய வம்சாவளி மலேசியர்கள் மேல் கடுமையான தாக்குதல் நடைபெற்றது. ஐந்து இந்தியர் வம்சாவளியினரும் ஒரு இந்தோனேசியரும் இதில் கொல்லப்பட்டார்கள். தொண்ணூறுக்கும் மேற்பட்ட இந்திய வம்சாவளியினர் இதில் கடுமையாக காயம் அடைந்தார்கள்.இந்தக் கலவரம் தொடர்பான ஆவணங்களையும் கள ஆய்வுத்தகவல்களையும் திரட்டி முனைவர் சு.நாகராஜன் எழுதிய ஆய்வேட்டுப் பக்கங்களையும் பிற ஆதாரங்களையும் கொண்டு கா.ஆறுமுகம் தொகுத்திருக்கும் நூல் ‘மார்ச் 8.’
இந்த வன்முறையை இனக்கலவரம் என்றே அரசும் ஊடகங்களும் சொல்லிவருகின்றன. ஆனால் பாதிக்கப்பட்டவர்கள் அனைவருமே ஏழை இந்திய வம்சாவளியினர் என்ற தகவலை அங்கே அவர்கள் தங்களிடம் இருந்து ஒளிக்க முடியவில்லை. பல காலமாக அங்கே தமிழர்களும் பிற இந்திய வம்சாவளியினரும் வாழ்ந்து வருகிறார்கள். கடுமையான உழைப்பின் வழியாக அந்த நாட்டை முன்னேற்றியதில் அவர்களுடைய பங்கு முக்கியமானது. மலேசியா அவர்களுடைய மண்ணும் கூடத்தான். மலேசிய சுதந்திரப் போராட்டத்தில் அவர்கள் ரத்தம் சிந்தியிருக்கிறார்கள்.
ஆனால் 1957ல் ஆங்கிலேயரிடமிருந்து பெற்ற விடுதலைக்குப் பின் மெல்லமெல்ல அங்கே ஆட்சியாளர்களால் மலேசிய இனவாதம்- இஸ்லாமிய மதவாதம் இரண்டும் வளர்க்கப்பட்டன. கல்வி ,வேலை வாய்ப்பு, நில உரிமை, குடியிருப்பு ஒதுக்கீடு அனைத்திலும் மலேசியர்களுக்கு அதீதமான முன்னுரிமை அளிக்கப்பட்டது. மலேசியாவின் இன்னொரு தேசிய இனமான சீனர்கள் பொருளியல் ரீதியாக தங்கள் மேலாதிக்கத்தை தக்கவைத்துக் கொண்டவர்கள். தமிழர்களும் பிற இந்தியவம்சாவளியினரும் எற்கனவே வறுமையின் விளிம்பில்தான் வாழ்ந்துகொண்டிருந்தார்கள். இந்த பாகுபாட்டின் பலியாடுகள் முழுக்க முழுக்க இவர்களே.
தொடர்ச்சியாக இந்திய வம்சாவளியினர் மனதில் இருந்து வந்த கசப்பும் அச்சமும் 2001ல் நிகழ்ந்த இந்தக் கலவரம் மூலம் உறுதிப்பட்டன
என்றால் அது மிகையல்ல. அரசாங்கத்தால் மலேசியர்கள் மனதில் உருவாக்கப்பட்ட ‘மண்ணின் மக்கள்’ வாதத்தின் விளைவே இந்தக் கலவரம். ஏற்கனவே சீனர்கள் மேல் மலேசிய முஸ்லீம்கள் தாக்குதல் நடத்தியிருந்தாலும் அதன் பின் அத்தகைய தாக்குதல்களின் பின் விளைவுகளை அரசு உணர்ந்தது. ஆகவே இப்போது இந்திய வம்சாவளியினர் எளிய இலக்காக இருக்கிறார்கள். இன்று இண்டிரா·ப் அமைப்பால் முன்னெடுக்கப்படுள்ள கிளர்ச்சியின் பின்புலம் இதுவே. அதைப் புரிந்துகொள்ள மிக உதவியான நூல் இது.
நூலின் முதல் பகுதியில் வன்முறையால் பாதிக்கப்பட்ட பத்து பேரின் அனுபவங்களைத் தொகுத்துக் கொடுத்திருக்கிறார்கள். பொதுவான அம்சங்களாக காணக்கிடைத்தவை இவை. பெரும்பாலும் பாதிக்கப்பட்டவர்கள் ஏழை எளிய மக்கள். உழைப்பாளிகள். உழைப்புக்காக இரவிலும் அலையநேர்பவர்கள். அவர்கள் எவருக்குமே தாங்கள் தாக்கப்படலாம் என்ற எண்ணமே இல்லை. நேரடியான வன்முறைக்குப் பழக்கம் இல்லாதவர்கள். சாதாரணமாக தனியாகவோ நண்பர்களுடனோ அவர்கள் வாகனங்களில் செல்லும்போது பத்திருபது இளம் மலேசிய முஸ்லீம்களின் குழு அவர்களை தடுத்து நிறுத்துகிறது. எந்தவிதமான விசாரணையும் இல்லாமல் மூர்க்கமாக அடிக்க ஆரம்பிக்கிறார்கள். பெரும்பாலும் குண்டாந்தடிகள் கற்கள் ஹாக்கி மட்டைகள். வாகனங்களில் ஓடித்தப்ப முயல்பவர்களும் துரத்திப் பிடிக்கப்படுகிறார்கள்.
தாக்கியவர்களும் கொல்வதில் பயிற்சி இல்லாதவர்கள். ஆள்செத்துவிட்டான் என அவர்களே அனுமானித்து அப்படியே விட்டுவிட்டு செல்கிறார்கள். பல நிகழ்ச்சிகளில் தாக்குதல்கள் மையச்சாலைகளில் நடக்கின்றன. ஆகவே போலீஸ் வரக்கூடும் என்ற அச்சம் காரணமாக விட்டுவிட்டுச் செல்கிறார்கள். சில சமயங்களில் போலீஸ் வந்து விடுகிறது. கணிசமான நிகழ்ச்சிகளில் இவர்கள் பொது இடங்களில் தாக்கப்படும்போது சுற்றி இருப்பவர்கள் உதவிக்கு வருவதில்லை. மண்டைஓடு பிளந்தும் எலும்புகள் வெளியே வந்தும் குடல் சரிந்தும் காயம்பட்டவர்கள் தாங்களே ஓடி போலீஸ¤க்குச் செல்கிறார்கள். அல்லது அங்கேயே நினைவிழந்து கிடந்து ஆஸ்பத்திரியில் கண்விழிக்கிறார்கள்.
பெரும்பாலான நிகழ்ச்சிகளில் தாக்கியவர்கள் வெளியே இருந்து வந்தவர்கள் என்று தாக்கப்பட்டவர்கள் தெளிவாகவே சொல்கிறார்கள். அவர்களை தங்களால் அடையாளம் காட்ட முடியும் என்று சொல்கிறார்கள். ஆனால் இச்சம்பவங்களை ஒட்டி கைதானவர்கள் மொத்தம் 327 பேர்.இவர்களில் 206 பேர் மலாய் இனத்தவர்கள். 109 பேர் இந்திய வம்சாவளியினர். 12 பேர் இந்தோனேசியர்கள். இவர்களில் எவருமே தண்டிக்கப்படவில்லை. குறிப்பாக மலாய்க்காரர்கள் விசாரணை கூட இல்லாமல் நீதிமன்றங்களால் வெளியே விடப்பட்டார்கள்.
இனத்தாக்குதல்களுக்கே உரிய வழக்கமான நிகழ்ச்சி நிரல் ஒன்று இதிலும் உள்ளது. நெடுங்காலமாகவே சந்தேகமும் மனக்கசப்பும் புகைந்துகொண்டிருக்கிறது. ஒரு சிறு சம்பவம் நிகழ்கிறது. அதை ஊதிப்பெரிதாக்கி வதந்திகளைக் கிளப்புகிறார்கள். வன்முறை வெடிக்கிறது. வன்முறை மேலும் வதந்திகளை உருவாக்குகிறது. அரசியல்வாதிகள் உள்ளே புகுந்து தூண்டிவிடும் செயல்களில் ஈடுபட்டு அரசியல் லாபம் பெற முயல்கிறார்கள். ஊடகங்கள் ஒருசார்பான செய்திகளை வெளியிடுகின்றன. அரசாங்கம் செய்திகளை மழுப்ப முயல்கிறது. காலப்போக்கில் பிரச்சினை அப்படியே இருக்க காயங்கள் மறக்கப்படுகின்றன.
இந்தியாவில் பெரும் மதக்கலவரங்கள் எப்போதும் பெரும் புறநகர்களிலேயே நடந்துள்ளன. நான் பம்பாய் அருகே மதக்கலவரம் நடந்த ‘பிவாண்டி’யை நன்றாகவே சுற்றிப்பார்த்திருக்கிறேன். இப்பகுதிகள் நகரின் குப்பைத்தொட்டிகள். மனிதர்களே குப்பைகள். எந்தவித வசதியும் இல்லாமல் தானாகவே ஊதிப்பருத்த பகுதிகள் இவை. பல்வேறு வகையான உதிரித்தொழிலாளர்கள் வாழும் இடங்கள். இவர்களுக்கு இடையே வாழ்க்கைக்கான போட்டி உக்கிரமாக நடந்துகொண்டிருக்கும். அவர்களில் ஒருசாராரிடம் இன்னொரு சாரார் உங்கள் வாய்ப்புகளை திட்டமிட்டு பறிக்கிறார்கள் என்று பிரச்சாரம் செய்து வெறுப்பை வளர்ப்பது மிக எளிது.
தென் பெட்டாலிங் ஜெயா நாடாளுமன்ற தொகுதியின் கீழ் வரும் கம்போங் மேடான் 200,000 மக்கள் வாழும் ஒரு மாபெரும் குடிசைப்பகுதி. இவர்களில் 40000பேர் 7300 புறம்போக்குக் குடிசைகளில் வசிக்கிறார்கள். இவர்கள் தோட்டப்புறங்களில் வேலைவாய்ப்பிழந்து இங்கே வந்து குடியேறி நகர்ப்புறப் பாட்டாளிகளாக வாழ்பவர்கள்.
வன்முறைக்கான தூண்டுதல் மிகச்சாதாரணமானது.மார்ச் 4 ஆம் தேதி பி சுப்ரமணியம் என்பவரது மரணத்தை ஒட்டி சிலர் இந்திய வம்சாவளியினர் கூடியிருந்தார்கள். ஒரு இந்திய வம்சாவளி இளைஞன் அவ்வழியாக மோட்டார் சைக்கிளில் சென்று சற்று அப்பால் அல்வி யூனுஸ் என்பவரின் வீட்டு திருமண நிகழ்ச்சிக்குள் புகுந்து கலாட்டாசெய்து அவரை தாக்கிவிட்டு திரும்பிவந்து மோட்டார் சைக்கிளை மரணவீட்டின் அருகே போட்டுவிட்டு செல்கிறான். அவன் மரணவீட்டைச் சேர்ந்தவன் என எண்ணிய யூனுஸின் ஆட்கள் மரண வீட்டுக்கு வந்து அங்கே நின்ற வாகனங்களை எரிக்கிறார்கள். அங்கே நின்றவர்கள் நிலைமையை விளக்கி மன்றாடியபோது பிரிந்துசென்றார்கள். இச்சம்பவமே தொடக்கம். இதிலிருந்து இந்திய வம்சாவளியினர் மலாய் முஸ்லீம்களை தாக்குகிறார்கள் என்ற வதந்தி பரப்ப்ப பட்டு வன்முறை உருவாகியது.
உண்மையில் இந்த நிகழ்வுகளில் போலீஸ் நுழைந்து பாரபட்சமில்லாது நடவடிக்கை எடுத்திருந்தால் வன்முறை நிகழ்ந்திருக்காது. ஆனால் போலீஸ் பொதுவாகவே மௌனம் காத்தது. பின்னர் நடந்த வன்முறைத்தாக்குதல்களில் பாதிக்கப்பட்டவர்களைப் பாதுகாக்க அவர்கள் எதுவுமே செய்யவில்லை. பல தருணங்களில் அவர்களின் கண்ணெதிரே வன்முறையாளர்கள் தாக்குதல்கள் நடத்தும்போது பேசாமல் இருந்தார்கள். அவர்கள் இனரீதியாகவும் மத ரீதியாகவும் அவர்களை ஆதரித்தார்கள்.
அரசியல்வாதிகளின் பங்களிப்பும் இதில் எதிர்மறையானது. இது ஒரு சாதாரண வன்முறை மட்டுமே என்ற நிலைபட்டையே அப்போதைய பிரதமர் மஹாதீர் மொகம்மது எடுத்தார். அப்போது பொறுப்பிலிருந்த அப்துல்லா படாவி கலவரம் நடந்த இடத்துக்கே செல்லவில்லை. நோர்கைலா ஜமாலுதீன் என்ற பெண் பாராளுமன்ற உறுப்பினர் ‘இப்பகுதியில் உள்ள இந்தியர்கள் மலாய்காரர்களை தொடர்ந்து தாக்கி வருகிறார்கள். இருந்தும் மலாய்காரர்கள் நெடுங்காலமாக அமைதி காத்து வந்தார்கள்’ என்றார். ஒரு பாராளுமன்ற உறுப்பினர் கையில் கட்டு போடப்பட்ட மலாய்க்காரருக்கு ஆறுதல் சொல்லும் படத்தை வெளியிட்டார்.
மலாய் நாளிதழ்கள் தொடர்ச்சியாக இனவாதச் செய்திகளை வெளியிட்டன. பல வன்முறை நிகழ்ச்சிகளை அவை குடிசைவாசிகள் தங்களுக்குள் போட்ட சண்டை என்றே வர்ணித்தன. மலேசிய இந்தியர் காங்கிரஸ் கட்சியின் டத்தோ சாமிவேலு நிதியுதவி வழங்குதன் மூலம் ஆதரவை பெற முயன்றார். நீதி வேண்டும் என்று கேட்ட மக்களை அவர் துரோகிகள், நன்றிகெட்டவர்கள் என்றார்.
ஆக, இந்தக் கலவரமெ இந்திய வம்சாவளியினர் நடுவே ஒற்றுமையை உருவாக்கியது. இனியும் அரசியல் உரிமைகளை விட்டுக்கொடுத்தால் அழிந்துவிடுவோம் என்ற எண்ணத்தை எழுப்பியது. மலேசிய அரசின் உறுதியான ஆதரவாளர்களாக இருந்துவந்தவர்கள் இந்திய வம்சாவளியினர். தொடர்ந்து எல்லா தேர்தல்களிலும் அவர்கள் ஆளும்கட்சிக்கே வாக்களித்துள்ளார்கள். அந்த ஆதரவை அவர்கள் மறுபரிசீலனைசெய்ய ஆரம்பித்தார்கள். இன்றைய அரசியல் கிளர்ச்சிக்கான விதை இவ்வாறு பரப்ப்பபட்டது.
‘இனவாதமும் சமயவாதமும் ஓங்கும்போது நாம் ஒதுக்கப்பட்டுள்ளோம் என்ற உணர்வுகள் கிளம்புகின்றன’ என்று சொல்லும் இந்த நூல் ‘நடைமுறையின் எல்லையில் அழிவு என்பது காத்திருக்கிறது என்பதை உணரும்போது நாம் ஏன் எல்லைவரும் காலம் வரை காலத்தை ஓட்டவேண்டும்?’ என்று கேட்கிறது.மானமும் மரியாதையும் உள்ள குடிமக்களாக ஏன் வாழக்கூடாது என்கிறது.
*
மலேசியா இன்று சென்றுகொண்டிருக்கும் அபாயகரமான ஓர் இடத்தை தெலிவாகவே அடையாளப்படுத்துகிறது 2006ல் வெளிவந்த இந்த நூல். இது எழுப்பும் வினாக்கள் பலவகையானவை. முதல் விஷயம் இந்தக் கலவரம் மற்றும் இதுசம்பந்தமான செய்திகள் அனைத்துமே நம்முடைய தமிழ்நாட்டு ஊடகங்களில் முழுமையாகவே தவிர்க்கபட்டன. இச்செய்திகளை நான் மலேசியாவின் இவ்வகை வெளியீடுகள் வழியாக மட்டுமே அறிகிறேன். ஏன் இந்த சுயதணிக்கை?
இன்னும் சொல்லப்போனால் நம் தமிழ் இதழ்கள் முழுக்க முழுக்க டத்தோ சாமிவேலுவின் புகழ்பாடக்கூடியவையாக மட்டுமே ஒலித்தன, ஒலித்துக் கொண்டிருக்கின்றன. மலேசியாவில் இண்டிரா·ப் மேலெழுந்து உரிமைப்போராட்டம் வலுத்து உலக ஊடகங்களே அதைக் கவனிக்கும்போதுகூட நம் இதழ்கள் அச்செய்திகளை முழுமையாக வெளியிடவில்லை. ஒரு நல்ல கட்டுரைகூட இதுவரை வெளிவரவில்லை. பன்னிப் பன்னி எதையும் விடாது எழுதும் நம் சிற்றிதழ்களில் நான் ஒரு கட்டுரையைக்கூட இன்றுவரை வாசிக்கவில்லை. ஓரளவேனும் செய்திகளை வெளியிட்ட இதழ் ‘தமிழரல்லாதோர்’ நடத்தும் தினமணி மட்டுமே. ‘தி இந்து’ போன்ற இதழ்கள் மலேசியத் தமிழர்களைப்பற்றி எதிர்மறையான செய்திகளையும் அவதூறுகளையுமே வெளியிட்டன.
இணையத்தில் நிகழூம் விவாதங்களில் அப்படமான மதவெறிபேசும் இஸ்லாமியர் முதல் மனிதாபிமான இஸ்லாமியர் வரை அனைவருமே அவசரப்பட்டு பாய்ந்து வந்து மலேசியாவில் இனப்பிரச்சினையே இல்லை என்றும் செயற்கையாக இப்போது தூண்டப்படுகிறது என்றும் எழுதினார்கள். இவர்களில் பலருக்கு மலேசியாவுடன் தொடர்புகள் உண்டு. மலேசியாவில் நடந்த இந்த இன, மதக்கலவரம் பற்றிய நேரடித்தகவல்களே அவர்கள் அறிந்திருக்கக் கூடும். நமது பொதுக்கருத்துக்கள் கூட மதத்தால் பிளவுபட்டுக் கிடக்கின்றன.
*
மலேசியாவின் இந்தபோராட்டத்தை ஒட்டியும் என் கருத்துக்களை மீண்டும் வலியுறுத்திச் சொல்ல விரும்புகிறேன். எந்த ஒரு நிலையிலும் ஒரு மக்கள் கூட்டத்தின் வளர்ச்சிக்கும் வெற்றிக்கும்உருவாகும் தடைகளுக்கு இன்னொரு மக்கள் கூட்டமே காரணம் என்று சொல்லும் ‘சதிக் கோட்பாடுகளை’ நான் ஏற்றுக் கொள்ள மாட்டேன். அத்தகைய சதிக் கோட்பாடுகள் பேச எளிதாக, நம்ப வசதியானவையாக, இருக்கும். நம்முடைய பலவீனக்களை மறைக்க அவை உதவும். மக்கள்திரள் அவற்றையே ஏற்கும்.ஆனால் அவை வரலாற்றை திரிப்பவை. வெறுப்பை உருவாக்குபவை. வெறுப்பில் இருந்து ஆக்கபூர்வமாக எதுவுமே உருவாகாது.படிப்படியாக பேரழிவுகளே உருவாகிவரும். மிகச்சிறிய வெறுப்பின் விதைகூட எதிர்பாராமல் மாபெரும் மானுடக்கொலையாக ஆகக்கூடும்.
மக்கள் சேர்ந்து வாழும்போது வாழ்க்கைபோராட்டங்கள் உருவாகும். அவநம்பிக்கைகள், கசப்புகள் உருவாகும். அவற்றை ஏதோ ஒரு நிலையில் அறிவு ஜீவிகளே கோட்பாடுகளாக ஆக்குகிறார்கள். அந்தக் கோட்பாடுகளை அதிகாரக் கருவிகளாக அரசியல்வாதிகள் மாற்றுகிறார்கள். அரசியலில் இருந்தே இனவெறுப்பு உருவாகிறது. அது இயல்பானது அல்ல. மலாய் மக்களுக்கு எதிராக இந்திய வம்சாவளியினர் சதி செய்வதாகச் சொல்லபடும் அவதூறு போன்றதே இந்திய வம்சாவளியினருக்கு எதிராக மலாய் மக்கள் சதிசெய்கிறார்கள் என்று சொல்லப்படுவதும். அத்தகைய வெறுப்பை உருவாக்கினால் அதற்கு வரலாறு பெரிய விலையை நம்மிடமே கோரும். எப்படியானாலும் அதே மண்ணில் அவர்களுடன் சேர்ந்து வாழ்ந்தாகவேண்டியவர்கள் இந்திய வம்சாவளியினர் என்பதை ஒருபோதும் மறக்கலாகாது.
அத்தகைய ஒரு வெறுப்பு நமது குறைபாடுகளை நாம் காண முடியாது செய்யும். நமது குறைபாடுகள் என்னென்ன என நாமறிவோம். முதன்மையாக ஒற்றுமை இன்மை. சாதிபாகுபாடுகள். ஓரு சிறந்த சிவில்சமூகமாக நாம் திரள நமக்குள்ள தடைகள் என்ன, ஏன் பிளவு இலலமல் ஒரு சிறு அமைப்பைக்கூட நம்மால் நடத்த முடிவதில்லை என நாம் என்ணிப்பார்க்க வேண்டும். அரசியல் ரீதியாக திரண்ட ஒற்றுமையான ஒரு சமூகம் ஒருபோதும் அடிமையாக இருக்காது.
நம் குறைகளை களைவதன் வழியாக நாம் ஒற்றுமையான வலிமையான சமூகமாக ஆக முடியும். உலகின் ஆதரவை பெற முடியும். ஆனால் குறுக்குவழி ஒன்று உள்ளது. நமது எதிரிகளை கற்பிதம்செய்து, அவர்கள் மேல் கடும் வெறுப்பை உருவாக்கி, அதன் அடிப்படையில் உடனடியாக ஒரு ஒற்றுமையை உருவாக்கலாம். அந்த ஒற்றுமை தற்காலிகமானது. அதைவிட அப்படி உருவாக்கப்படும் வெறுப்பு உடனடியாக வன்முறை அரசியலாளர்களின் கைக்கு ஆயுதமாகச் சென்றுவிடும். பிறகு அதை மீட்கவே முடியாது.
இந்நூற்றாண்டில் வன்முறையின் அரசியல் அழிவை அன்றி வேறெதையும் உருவாக்காது என்பதில் எனக்கு இம்மி கூட ஐயமில்லை. சுதந்திரத்துக்காக வன்முறையைக் கைக்கொள்ளும் சமூகங்கள் மேலும் அடிமைத்தனத்தையே அடையும். சுயமரியாதைக்காக வன்முறையைக் கைக்கொள்ளும் சமூகங்கள் மேலும் இழிவையே தேடிக்கொள்ளும். ஏன் ஒருசமூகம் வெறுமே தங்கிவாழ்தலுக்காக வன்முறையைக் கைக்கொள்ளுமென்றால் அது பூண்டோடு அழியும். இதுவே நடைமுறை உண்மை. வன்முறை நம்மிடம் இருப்பதை பறிக்கும், ஒருபோதும் எதையும் அளிக்காது.
வன்முறை என்பது எப்போதுமே உட்பூசல்களும் பல்வேறு சமூக சீர்கேடுகளும் கொண்ட பலவீனமான சமூகங்களால் கையாளப்படும் அரசியல் ஆயுதம். அச்சமூகத்தின் அனைத்து சிக்கல்களையும் வன்முறை மூலம் மறைத்துவிடலாம். தொடக்கத்தில் அது சாத்தியம். பின்னர் அந்த சிக்கல்களே வன்முறையை தங்கள் கையில் எடுத்துக்கொண்டுவிடும். அப்பட்டமாகவே சொல்கிறேன். மலேசிய சமூகம் வன்முறையை ஆயுதமாகக் கொண்டதென்றால் அடுத்த கட்டத்தில் அச்சமூகத்தின் உள்ளே உள்ள போராட்டங்களுக்கே அந்த வன்முறை கையாளப்படும். அது தன்னைத்தானே கொன்றுகொள்ள ஆரம்பிக்கும்.
வன்முறையற்ற போராட்டம் உண்மையில் கடினமானது, கவர்ச்சியும் பரபரப்பும் இல்லாதது. தொடர்ச்சியான சுயமேம்படுத்தல் மூலம் தன் குறைபாடுகளை களைந்தபடியே இருக்கும் ஒரு சமூகத்திற்கு உரியது அது. அதன் பலன்கள் மிகமெல்ல காலப்போக்கில்தான் கிடைக்கும். ஆகவே வெற்றிகள் சுடச்சுட கண்ணில் படாது. ஒரு காலகட்டத்துக்குப் பின்னர்தான் வெற்றிகள் கிடைத்துள்ள விஷயமே போராடியவர்களுக்கே தெரியவரும். ஆனால் அது உறுதியான வெற்றிகள் கொண்ட ஒரு பாதை. முக்கியமாக கிளையில் உள்ள பலாபழத்தைக் காட்டி கையில் உள்ள களாப்பழத்தையும் பறிக்கும் பாதை அல்ல.
1996 ல் நான் சர்வோதயப் போராளி ஜெகன்னாதனை சந்தித்து ஒரு பேட்டி எடுத்திருக்கிறேன். கிருஷ்ணம்மாள் உடனிருந்தார். அப்போது அவர்கள் இறால்பண்ணைகளுக்கு எதிராகப் போராடிக் கொண்டிருந்தார்கள். அப்போது உச்சநீதிமன்ற தீர்ப்பு அவர்களுக்குச் சாதகமாக வந்திருந்தது. அதைப்பற்றி நான் தினமணிகதிரில் ஒரு கட்டுரை எழுதியிருந்தேன். பேட்டியில் தீர்ப்¨ப்பபற்றி நான் உற்சாகமாகச் சொன்னேன். ஜெகன்னாதன் உற்சாகம் காட்டவில்லை. இது ஒரு படி மட்டுமே என்றார்.தன்னுடைய போராட்டமுறையை அவர் விளக்கினார்
அப்போது இங்குள்ள சில இடதுசாரி அமைப்புகளும் இறால்பண்ணைகளுக்கு எதிரான போராட்டத்தை நடத்தின. அவர்களின் போராட்டம் வேறுவகை. ‘இறால்பண்ணை அழிப்புப் போர்’ என்று தெருத்தெருவாக பயங்கரமாக எழுதிப்போடுவார்கள். கடைசியில் ஒரு இருபது முப்பதுபேர் இருநூறடிதூரம் கோஷமிட்டுச் சென்று கைதாகி விடுதலை அடைந்து அடுத்த வேலைக்குச் சென்றுவிடுவார்கள். அவர்களின் அப்படிப்பட்ட ஒரு போராட்டத்தை நானே கண்டேன் – பதினெட்டு பேர். உண்மையில் அது ஒரு பொறி. எளிய விவசாயிகள் அதில் சிக்கினால் நக்சலைட் முத்திரை குத்தி போலீஸ் அவர்களை வேட்டையாடி ஒழித்துவிடும். உண்மையில் அரசாங்கம் ஒரு சிறிய காரணத்துக்காக, ஒரே ஒரு வன்முறைச் சம்பவத்துக்காக, காத்திருந்தது. வன்முறை வாசகங்களை அவர்கள் தங்களுக்கான வாய்ப்பாகவே கண்டார்கள்.
ஜெகன்னாதனின் வழிமுறை நேர் எதிரானது. அவர் முடிந்தவரை பெண்கள் குழந்தைகள் உட்பட சம்பந்தப்பட்ட அனைவரையும் போராட்டங்களில் பங்குபெற வைத்தார். ஆகவே போராட்டங்களை மிக எளிமையான அடையாள நிகழ்வுகளாக மாற்றினார். சட்டம் அளிக்கும் எல்லா வாய்ப்புகளையும் பயன்படுத்திக் கொண்டார். நீதிமன்ற வழக்குகள் தொடர்ந்து தீர்ப்புபெறுதல் அதில் ஒரு பகுதி. பின்னர் அந்த தீர்ப்பை அமுல் செய்வதற்கான போராட்டம். அப்போராட்டம் மூலம் அந்த மக்களின் சமூக உட்சிக்கல்களை தீர்க்க முயன்றார். அதற்கான சிறிய சபைகளை உருவாக்கினார். உண்மையில் அந்தப் போராட்டம் மூலம் உருவான குழுக்கள் தொழிற்குழுக்களாக ஆகி இன்று மகளிர் சு ய உதவிக் குழுக்களாக நீடிக்கின்றன.
ஜெகன்னாதன் வன்முறை என்றோ அத்துமீறல் என்றோ அரசாங்கத்தால் அப்போராட்டம் வர்ணிக்கப்பட சிறு வாய்ப்¨ப்பம் அளிக்கவில்லை. அம்மக்கள் தங்கள் தொழிலையும் வாழ்வையும் விட்டுவிட்டு போராட வரச்சொல்லவில்லை. தொடர்ச்சியாக வருடக்கணக்காக அப்போராட்டத்தை முன்னெடுத்தார். ஆதரவளிக்கும் எல்லா சக்திகளையும் உள்ளே இழுத்தார். முடிந்தவரை எதிரிகளை உருவாக்காமல் பார்த்துக் கொண்டார். அதிகார மமதை கொண்ட அதிகாரிகளுடன் கூட நல்லுறவை தக்கவைத்துக் கொண்டார். அப்போராட்டத்தை தொடர்ச்சியாக தேசிய அமைப்புகளின் கவனத்தில் வைத்திருந்தார். அந்தப்போராட்டத்துக்கு மேதாபட்கர், சுந்தர்லால் பகுகுணா ஆகியோர்கூட வந்திருக்கிறார்கள்.
இதுவே காந்திய வழிமுறை. ”ஏழைகளுக்கு காந்திய வழிமுறை மட்டும்தான் ஒரே வழி…வேறு வழி என்றால் அவர்கள் மேலும் கொடுமையான சக்திகளின் கைப்பாவைகளாகத்தான் ஆவார்கள், அல்லது கூண்டோடு அழிக்கப்படுவார்கள்”என்றார் ஜெகன்னாதன்.
*
கா.ஆறுமுகத்தின் இந்த நூல் அத்தகைய புரிதல் அவர்களிடம் இருப்பதன் அடையாளமாகவே எனக்குப் படுகிறது. ‘பலிக்குப் பலி அனைவரையும் குருடாக்கும் என்பதை கருத்தில்கொண்டு எழுதப்பட்ட நூல்’ என இதன் சமர்ப்பணம் குறிப்பிடுகிறது. ‘கம்போன் மேடான் கலவரத்தில் தங்கள் உயிரை பணயம் வைத்து மலாய்காரர்களை எதிர்த்து இந்திய வம்சாவளியினர்ளைக் காத்த மலாய்காரர்களுக்கு’ இந்த நூல் சமர்ப்பணம்செய்யப்பட்டுள்ளது. மிக முக்கியமான ஒரு மனநிலை இது. இன்று இண்டிரா·ப் அமைப்பின் போராடங்களில் இந்த மனநிலை காணக்கிடைக்கிறது. அது தொடரும்வரை அவர்களுக்கு வெற்றி உறுதிதான்.
நேர் மாறாக இந்தியாவிலும் தமிழகத்திலும் இன்று மதவெறி ,இனவெறி ,பிராந்தியவெறிக் குரல்கள் எழுந்து கொண்டிருக்கின்றன. அக்குரல்கள் மலேசிய உரிமைப்பிரச்சினையை எளிதில் மதப்பிரச்ச்சினை அல்லது மொழிப்பிரச்சினையாக ஆக்கி மிகையான உணர்ச்சிக்கொந்தளிப்புகளுக்குள் தள்ளிவிடக்கூடும். புண்பட்ட மனம் வெறுப்பை எளிதில் வாங்கிக் கொள்ளக்கூடியது.
மலேசியர்கள் இதில் இந்தியர்களிடம் மட்டுமே மிகமிக கவனமாக இருக்க வேண்டும் என்று தோன்றுகிறது. குறிப்பாக செயற்கையான வீராவேசப்பேச்சுகளை துப்பும் நமது அரைவேக்காட்டு மேடைப்பேச்சளர்கள் மேல் மலேசியத் தமிழர்களுக்கு இருக்கும் பற்றை நினைக்கும்போது இதை வலுவாகவே சொல்லவேண்டும். தமிழ்நாட்டில் உள்ள மொழிச்சிறுபான்மையினர் இனச்சிறுபான்மையினரை துரத்தியடிக்கவேண்டும் என்று இங்கே பேசும் ஒருவர் மலேசியாவுக்குச் சென்று அங்கே சிறுபான்மை உரிமைக்குக் குரல்கொடுப்பதில் என்ன அறம் இருக்க முடியும்? அத்தகைய குரல்கள் ஒலிக்கையில் ஒருபோரட்டம் அதன் தார்மீகத்தை முற்றிலும் இழந்துவிடுமல்லவா? இந்தக் கணத்தில் போலி ஆவேசக்குரல்களை எந்த அளவுக்கு மலேசிய இந்தியர் தவிர்க்கிறார்கள் என்பதிலேயே அவர்களின் எதிர்காலம் உள்ளது.
மலேசியாவில் நிகழ்வது ஜனநாயக உரிமைகளுக்காக ஜனநாயக முறையில் நிகழும் ஒரு உரிமைப்போராட்டம். அது இனப்போர் அல்ல. மதப்போரும் அல்ல. அரசியல் போராட்டங்கள் அரசியல் களத்தில் நீண்டகாலப்போராட்டங்கள் மூலம் வெல்லப்படவேண்டியவை. அதை அப்படியெ புரிந்துகொள்ளும் முதிர்ச்சி அவர்களுக்கு இருப்பதையே இந்நூலும் காட்டுகிறது.
இதன் ஆசிரியர் கா.ஆறுமுகம் ஒரு பொறியாளர். சட்டத்துறையிலும் பட்டம் பெற்றவர். வன்முறை நடந்த பகுதியில் பத்துவருடங்கள் வாழ்ந்தவர். பல்வேறு சமுக இயக்கங்களில் பங்கேற்று வருபவர். சிறுகதைகளும் கட்டுரைகளும் எழுதுகிறார்.
SEMPARUTHI PUBLICATIONS SDN BHD [409768-U]
NO 3,JALAN YAP AH SHAK
50300 KUALALUMPUR