இளையராஜாவின் இசை,கடிதம்

ஆபிரகாம் பண்டிதர்

து.ஆ.தனபாண்டியன்

அன்புள்ள ஜெ

இளையராஜா பற்றி  சில விஷயங்களை உங்களிடம் பகிர்ந்துகொள்ள தோன்றுகிறது.

சமீப காலமாக ராஜாவை இசை அமைப்பாளராக கொண்ட படங்களின் இயக்குனர்கள் , படத்துக்காக பதிவு செய்யப்பட்ட பாடல்களில் ஒன்றிரண்டை தான் உபயோகிக்கிறார்கள். நிறைய உதாரணம் சொல்லலாம். நான் கடவுளில் கூட நான் மிக விருப்பத்துடன் கேட்ட ‘ஒரு காற்றில்’ பாடல அதன் female version ஆன ‘கண்ணில் பார்வை’ போன்ற பாடல்கள் உபயோகப்படுத்தப்படவில்லை. பழசிராஜாவிலும் ‘அம்பும் கொம்பும்’ இன்னொரு duet song கும் படத்தில் இல்லை என்று கேள்விப்பட்டேன்.

ஒரு காலத்தில் எல்லா பாடல்களையும் hit செய்த ஒரு மாபெரும் இசை அமைப்பாளரை இது மனம் நோக வைக்கும் காரியமாக தோன்றுகிறது. நந்தலாலா வுக்காக ஐந்து பாடல்கள் வாங்கிக்கொண்ட மிஷ்கின் மூன்றை மட்டுமே பயன்படுத்த போவதாக பகிரங்கமாக அறிவித்தார்.

 

நான் கடவுளில் உத்தம் சிங் இணை இசை அமைப்பாளராய் பணியாற்றியதாக பல இணைய இதழ்கள் எழுதின. சிங் ராஜாவின் உதவியாளர்களில் ஒருவர் என்பது பழைய செய்தி. ஆனால் அப்படத்தில் title song ம் காசி சம்பத்தப்பட்ட கட்சிக்கான இசையும் சிங் உடையது என்று அவ்விதழ்கள் எழுதின. என்ன வருத்தம் என்றால் பாலா தரப்பிலிருந்து ஒரு மறுப்பு இல்லை. எந்த அறிவிப்பும் இல்லை

வழக்கமாக ‘with the grand music of maestro ilayaraja’ என்று title இல எழுதும் பாலா நான் கடவுளில் அவ்வாறு செய்யவில்லை. பாடல்களும் சரியாக உபயோகப்படுத்தப்படவில்லை. இவ்விஷயங்கள் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?


Chandramohan Vetrivel,
New Delhi.

 

அன்புள்ள சந்திரமோகன்

எனக்கு சினிமாவின் இசை ,பாடல் போன்ற விஷயங்களில் எந்த சம்பந்தமும் இல்லை. வேடிக்கை பார்ப்பவர்களில் ஒருவன் மட்டுமே.பொதுவாக சினிமா குறித்து ஊடகங்களில் வரக்கூடிய சர்ச்சைகளை சினிமாக்காரர்கள் கண்டுகொள்வதில்லை. அவற்றுக்கு விளம்பர மதிப்புக்கு அப்பால் ஏதும் பொருள் இல்லை என அவர்கள் அறிவார்கள். ஆகவே அவர்கள் கவனிப்பதோ பதில் சொல்ல முயல்வதோ கிடையாது. அதுதான் சரி என நினைக்கிறேன்

ராஜாவின் பலகோடி ரசிகர்களில் ஒருவன் என்றமுறையில் எனக்கும் வருத்தம் அளிக்கும் நிகழ்ச்சிகள்தான் இவை. ஆனால் ராஜாவின் இசைக்கு மட்டும் அப்படி நிகழவில்லை என்பதே உண்மை. உன்னைப்போல் ஒருவனில் பாடல்கள் எப்படி பயன்படுத்தப்பட்டிருக்கின்றன என்று பார்த்தீர்கள் அல்லவா? மனுஷ்யபுத்திரன் எழுதி கமல்ஹாசன் பாடிய பாடல் கமல்ஹாசனாலேயே முன்னின்று வெளியிடப்பட்டு வெற்றியும் பெற்றது. படத்தில் ஏதோ பின்னணி ஓசையாக சில வரிகள் ஒலித்தன.

என்ன நிலைமை என்றால் இப்போது படங்களுக்குப் பாடல் தேவையில்லை என்ற நிலை வந்துகொண்டிருக்கிறது. சரியான மசாலாப் படங்களுக்கு மட்டும் பாட்டு போதும் என்ற நிலை. திரைக்கதையமைப்பு மேலும்மேலும் ஹாலிவுட் பாணியை நோக்கிச் சென்றுகொண்டிருக்கிறது என்பதே காரணம். பாடல்களைச் சேர்த்தாலும் துருத்திக் கொண்டு நிற்கும்.  ‘மாண்டேஜ்’ காட்சிகளை இணைப்பதற்காக மட்டுமே பாடல் தேவையாகிறது. உன்னைப்போல் ஒருவனில் பாட்டு இருந்தால் எப்படி பொருந்தாமல் இருந்திருக்கும் இல்லையா?

ஆனாலும் பாட்டு தேவை. ஏனென்றால் ஒரு படத்தை படம் வெளியாவதற்கு முன்  ஊடகங்களில் முன்னெடுத்துச்செல்லும் விசையே பாடல்கள்தான். அவை படத்துக்கான டிரெயிலர் போல அமைகின்றன. வானொலியிலும் தொலைக்காட்சியிலும் படத்தை கொண்டுசெல்ல பாடல்கள் இன்றியமையாதவை.ஆகவே பாடல்களை பதிவுசெய்கிறார்கள். கடைசி படத்தொகுப்பில் பாடல்களை வெட்டிவிடுகிறார்கள்.
‘நான் கடவுள்’ , ‘பழசிராஜா’ இரண்டிலும் நிலைமை வேறு. இரண்டுமே தேவைக்குமேல் நீளமாக எடுக்கப்பட்டுவிட்ட படங்கள். நான்கடவுள் மூன்றுமணிநேரம் இருந்தது கடைசி வடிவம். அதை வெட்டிச்சுருக்கியபோது பாடல்கள் வெளியே போயின. ‘கண்ணில் பார்வை’ பாட்டு இருந்திருந்தால் அம்சவல்லியின் தனிப்பட்ட வாழ்க்கையும் அந்தரங்கமான ஆசைகளும் பதிவாகி படத்தின் உச்சகட்டம் இன்னும் வலுவாக அமைந்திருக்கும் என்பது என் எண்ணம்.

பழசிராஜா வரலாற்றுக்கதை. வரலாற்றின் சங்கடம் உங்களுக்கு தெரியும். இன்றைய நிலையில் வீரபாண்டிய கட்டபொம்மனை எடுத்தால் என்ன ஆகும் சிந்தனைசெய்து பாருங்கள். வீரன் சுந்தரலிங்கம் அதில் இரண்டே ·ப்ரேம்களில் ஒரு தூதனாக வருகிறார். எவ்வளவு பிரச்சினை எழும்? அதேதான் பழசிராஜாவுக்கும். சாதி,மதச் சமநிலைகளைப் பேணவே எம்.டி.வாசுதேவன் நாயர் பாடுபட்டார். ஏனென்றால் அவர் கேரளத்தின் ஒரு பண்பாட்டுத்தலைவர்.

விளைவாக எந்த வரலாற்றையுமே விட முடியவில்லை. நான்குமணிநேரம் இருந்தது கடைசிப்பிரதி. ஆகவே படத்தில் இரு பாடல்கள் விடப்பட்டன. ‘அம்பும் தும்பும்’ என்ற பழங்குடிப்பாடல் மிக முக்கியமானது. ஆதிவாசிகளின் சிறப்பான தாளவாத்தியங்களை அழகாகப் பயன்படுத்தி அமைக்கப்பட்ட அப்பாடல் சிறப்பாக எடுக்கவும்பட்டிருந்தது. அது விடுபட்டமையால் பத்மபிரியா நடித்த நீலி கதாபாத்திரத்தின் முழுமை கொஞ்சம் குறைந்தது. ஆனால் வேறு வழியில்லை. இப்போதே படம் மூன்றேகால் மணிநேரம்.

தமிழில் அந்த இஸ்லாமியப்பாடலும் இருக்காது. அப்படத்திலேயே மிகச்சிறப்பாக எடுக்கப்பட்ட பாடல்.பெரும்பொருட்செலவில் செட் போட்டு பலநூறுபேரை பங்கெடுக்க வைத்து எடுக்கப்பட்டது. ஆனால் தமிழில் படம் மூன்றேகால் மணிநேரம் ஓடுவது சாத்தியமல்ல.

நான் அறிந்த வரை ஹரிஹரன் இளையராஜாவின் தீவிர ரசிகர். ஏனென்றால் முறைப்படி இசை கற்றவர். இசைப்படங்கள் எடுத்தவர். அவரே இசையமைக்கும் அளவுக்கு ஞானம் உள்ளவர். பாடல்கள் விடுபடுவது அவருக்கு சற்றும் உகக்கவில்லை. மேலும் அப்பாடல்களை மிகக் கடுமையான உழைப்பில் எடுத்திருந்தார். ‘ஆழியடங்கம் அமைத்தவனல்லே’ என்ற இஸ்லாமியப்பாடல் மட்டும் ஒருமாதம் எடுக்கப்பட்டது.அது ஹரிஹரனுக்கும் ஒரு ‘மாஸ்டர் பீஸ்’ ஆனால் சினிமா என்பதே கடைசியில் வெட்டுத்தொகுப்பு மேடையில் உருவாவது. அங்கே இயக்குநர் கூட பின்னால்சென்றே ஆகவேண்டும்.

அவற்றையும் மீறி இளையராஜா நான்கடவுளையும் பழசிராஜாவையும் தூக்கி நிறுத்தியிருக்கிறார் என்பதே உண்மை–பின்னணி இசையில் உணர்ச்சிகளை நிறுத்திக்காட்டியிருக்கிறார். உணர்வுத் தொடர்ச்சியை உருவாக்கியிருக்கிறார். நான் கடவுளில் பாடல்களைப்போலவே அருமையான இடங்கள் பின்னணி இசையில் பலமுறை வந்துசென்றன. அதேதான் பழசிராஜாவிலும். அவை சாதாரண ரசிகனால் கவனிக்கப்படுவதில்லை. பலமுறை பார்ப்பதால்தான் என் போன்ற எளிய ரசிகன் கவனத்தில் வருகின்றன.

‘நான்கடவுளில்’ எல்லா இசைத்துணுக்கும் இளையராஜாவுடையதே. இணை இசை என்பதெல்லாம் பிழை. ராஜாவிடம் எவருமே அப்படி வேலைசெய்ய முடியாதென தெரிந்தவர்கள் அறிவார்கள். பாட்டில் என்ன இருக்கிறது என்பது கடைசி ஒலிப்பதிவின்போதே தெரியவரும். அதுவரை பாடகனும் ஓர் இசைக்கருவி போலத்தான்.

ஜெ

நன்றி ஜெ.
நீங்கள் சொல்வது உண்மை தான். பாடல்களே இல்லாத படங்கள் தான் தற்போதைய தேவை. எனினும் western classic  இசையில் தேர்ந்த ஒரு இசை அமைப்பாளருக்கு சரியான வேலை வைக்குமாறு இங்கு யாரும் படம் எடுப்பதில்லை. வெஸ்டர்ன் மட்டுமல்ல ராஜா முக்கியமான மூன்று இசை வகைகளிலும் தேர்ந்தவர். அவருக்கு சரியான தீனி தற்போது கிடைப்பதில்லை என்று எனக்கு வருத்தம்.
ஹிந்தி இல பால்கி ராஜாவை சிறப்பாக பயன்படுத்துகிறார். அமிதாபின்
‘பா’  படத்தின் trailer (or teaser) மியூசிக் கேட்டீர்களா? கண்ணில் கண்ணீர் வருகிறது.

I want him to be given good movies.

தங்கள் பதிலுக்கு நன்றி ஜெ.

Chandramohan Vetrivel,
New Delhi.

முந்தைய கட்டுரைகாந்தி, புதிய கடிதங்கள்
அடுத்த கட்டுரைகுடும்பவிடுமுறை:கடிதங்கள்