இந்திய இலக்கியம் ஒரு விவாதம்

ele

 

ஞாயிற்றுக்கிழமை இணைப்பின் இலக்கியப்பக்கத்தில் டைம்ஸ் ஆ·ப் இண்டியா ஒரு புத்தக விமர்சனத்தை முழுப்பக்க அளவுக்கு வெளியிட்டது. அலன் மிசௌக்ஸ் [Allan Michaux] என்ற பெல்ஜிய எழுத்தாளர் எழுதிய  The Story Of An Indian Elephant Killed by Panegyric Fallacy என்ற நாவலை பற்றி மிருணாளினீ முக்கர்ஜீ எழுதிய மதிப்புரை. கொல்கொத்தா சாந்திநிகேதன ஆசிரியையான மிருணாளினீ முக்கர்ஜீ பெல்ஜியத்தில் நடந்த எழுபத்தியெட்டாவது சர்வதேசக் கவிதை மாநாட்டிற்கு கணவருடன் சென்று வந்தவரென்பதனால் Cajoling To The black Void என்ற தலைப்புள்ள அம்மதிப்புரை பெருமதிப்பு கொண்ட ஓர் உரையாகவே இருந்தது இயல்பே. காசிரங்கா காட்டில் தத்துவச் சிக்கலால் மாண்ட ஒரு யானையைப் பற்றிய நாவல் அது.

கதை மிகவும் எளிமையானது. காலூ என்ற யானையானது காசிரங்கா காட்டில் நாணல்களைத் தின்று தன்னிச்சையாக வளர்ந்து கொண்டிருக்கும்போது அந்தக் காட்டுக்குள் வழிதவறி வரும் எம்மா என்ற சிறுமியை அது சந்திக்கிறது. எம்மா ஒரு ‘முப்பெருக்கல்’ படத்தை தோழிகளுடன் பார்த்துவிட்டு சற்றே சரஸ் புகைத்து கண்ணயர்ந்தபோது கனவில் சிலலிங்கத்தைக் கண்டதனால் அந்த ஆன்மீக அனுபவத்தின் தாத்பரியத்தை அறியும்பொருட்டு இந்தியா வந்தவள். எம்மாவை காலூ தன் மீது ஏற்றிக் கொண்டு நாணல்காட்டுக்குள் செல்கிறது. அங்கே எம்மா ஒரு குடிசையை நாணலினாலேயே கட்டிக் கொண்டு வாழ்கிறாள். காலூவுக்கும் அவளுக்கும் ஆழமான நட்பு ஒன்று உருவாகிறது. உம்பே என்ற காட்டுப்பன்றி, ஒற்றைக்கொம்புள்ள காண்டாமிருகமான நோஸி, பிராட்டில் என்ற பேருள்ள பச்சைக்கிளி ஆகியோர் ஆகியோர் எம்மாவுக்கு நண்பர்களாக ஆகிறார்கள். லூசியன் என்ற கொடிய ராஜநாகம் எதிரியாக இருக்கிறது. அந்தக்காட்டில் உள்ள ஒரு ஆப்பிள் மரத்தில் இந்த நாகப்பாம்பு வழக்கமாகச் சுற்றிக் கொண்டு கிடந்து எம்மா அந்தப்பக்கமாகப்போகும்போது உஸ் உஸ் என்று ரகசியமாக அழைக்கிறது.

ஒருநாள் அந்த ஆப்பிள் மரத்தில் இருந்து பாம்பால் உதிர்க்கப்பட்ட ஆப்பிள் ஒன்றை எம்மா எடுத்து தின்றுவிடுகிறாள். உடனே அவள் தன் ஆடைகளை களைந்துவிட்டு நிர்வாணமாக காட்டுக்குள் ஓடுகிறாள். காட்டுமிருகங்கள் அவளுடன் இணக்கமாகின்றன. அவை பேசும் சொற்கள் அவளுக்குப் புரிய ஆரம்பிக்கின்றன. அவளிடமிருந்து காட்டுமிருகங்கள் உலக சிந்தனைகளைக் கற்றுக் கொள்கின்றன. அவர்களிடையே நிறைய உரையாடல்கள் நிகழ்கின்றன. காலூ யானை இந்திய மெய்ஞானத்தை நன்றாக அறிந்த ஒன்று. காரணம் அதன் தந்தை ஒரு கோயில் யானையாக இருந்தது. இந்நாவலின் சிறப்பே இப்பகுதியில் எளிமையாகவும் சற்றே நகைச்சுவை கலந்தும் அளிக்கப்பட்டுள்ள தத்துவ உரையாடல்களே என்று மிருணாளினீ முக்கர்ஜீ கருதுகிறார். குறிப்பாக உம்பே எதிலிலும் உள்ளார்ந்து கிடக்கும் பொருளை அகழ்ந்து எடுப்பதில் திறன் உடையதாக இருக்கிறது.

இச்சமயம் எம்மா பருவமடைகிறாள். இந்தக் காட்சி மிகுந்த கலைநயத்துடன் எழுதப்பட்டிருப்பதாக மிருணாளினீ முக்கர்ஜீ கருதுகிறார். அதன் பின்னர் அவள் ஒரு மரக்கிளை மேலே ஏறி மேற்கு திசையை நோக்கி எப்போதும் அமர்ந்திருக்கிறாள். அப்போது ஸ்டீவ் ஆதாக்ஸ் என்ற பேருள்ள ஓர் கிரேக்க இளைஞன் காசிரங்கா காட்டுக்குள் வழிதவறி வந்து அலையும்போது மரக்கிளையில் நிர்வாணமாக உட்கார்ந்திருக்கும் எம்மாவைக் காண்கிறான். அக்கணமே அவர்கள் பதினேழு பக்கத்துக்கு உறவு கொள்கிறார்கள்.

பின்பு காட்டு நீரோடையில் உடல்சுத்தம் செய்துகொண்டிருக்கும்போது ஆதாக்ஸ் அவளது பெயர் என்ன என்று கேட்கிறான். அவள் எல்லாவற்றையும் சொல்கிறாள். உடனே அவளை ஊருக்கு வரச்சொல்லி அவன் அழைக்க எம்மா மறுத்து விடுகிறாள். அவனை அவள் தந்திரமாகக் கூட்டிச் சென்று அந்த ஆப்பிளை உண்ணவைக்கவே அவனும் உடனடியாக ஆடைகளைக் கழற்றி வீசுகிறான். அவர்கள் அதன்பின்னர் சுமார் இருபது பக்கங்களுக்கு ஒருமுறை பல்வேறு துவாரங்கள் வழியாக மொழி நுட்பங்கள் கொண்ட உடலுறவை மேற்கொள்கிறார்கள். எஞ்சிய நேரத்தில் அவர்கள் காட்டுக்குள் பல்வேறு புழுக்கள் பூச்சிகள் பறவைகள் மற்றும் மிருகங்களுடன் உரையாடியபடி உற்சாகமாக வாழ்கிறார்கள். அவ்வப்போது லூசியன் செய்யும் இடர்கள் இருந்தாலும் அவர்கள் மகிழ்ச்சியாகவே இருக்கிறார்கள். அந்த காட்டுக்கு அவர்கள் ‘வால்டன்’ என்று பெயரிடுகிறார்கள்.

இந்நிலையில் காணாமல்போன இருவரைப்பற்றியும் செய்தி பரவுகிறது. இந்திய அரசு அவர்களை தேடி அலைகையில் லூசியன் அவர்களை காட்டுக்குள் இட்டுவந்து காட்டிக் கொடுக்கிறது. இவ்வாறாக அரசுக்கு அவர்களைப்பற்றிய தகவல் கிடைக்கிறது. அவர்களை ஊருக்குத் திரும்பவேண்டுமென அனைத்து தரப்பினரும் விடுத்த விண்ணப்பத்தை அவர்கள் நிராகரித்துவிடுகிறார்கள். மனித நாகரீகம் என்பது தோற்றுப்போன ஒன்று என்று எம்மா சொல்கிறாள். ஆதாக்ஸ் சொல்லும் பதிலில் பதினெட்டு பக்கங்களுக்கு நாணல் பற்றி வரும் விவரணை ஆழமான கவித்துவமும் குறியீட்டுத்தன்மையும் உடையதாகும் என்று மிருணாளினீ முக்கர்ஜீ எழுதிச்செல்கிறார்.

இதன்பின்னர்தான் மனிதநாகரீகத்தின் சிறப்பையும் வெற்றிகளையும் அவர்களுக்கு சொல்லிப்புரியவைக்கும் முகமாக யுனெஸ்கோ ஏற்பாட்டில் தத்துவஞானிகள் காசிரங்கா காட்டுக்குக் கிளம்பிச்செல்கிறார்கள். உண்மையில் நாவல் இங்கேதான் தொடங்குகிறது. முதல் எட்டு அத்தியாயங்கள் இந்த தத்துவ ஞானிகளைப்பற்றியும் அவர்களின் இந்தியப் பயணங்களைப்பற்றியும் உள்ள விரிவான வருணனைகள்தான். அவர்கள் காட்டில் எம்மாவைச் சந்திக்கும் இடம் தீவிரமான இலக்கிய அனுபவத்தை அளிக்கிறது என்று மிருணாளினீ முக்கர்ஜீ சொல்கிறார். எம்மா அந்த தத்துவ ஞானிகள் தன்னிடம் பேசுவதை விட தன்னுடைய ஞானகுருவான காலூவிடம் பேசுவதே பொருத்தமானது என்று தெரிவிக்கிறாள்.

இதன்பின்னர்தான் உச்சகட்டம். காலூவுக்கும் மேலைத்தத்துவ ஞானியருக்கும் இடையேயான நாற்பதுபக்க விவாதம் இந்நாவலின் சிகரம் என மிருணாளினீ முக்கர்ஜீ [கை விரல் மடக்கி] எண்ணுகிறார். இதில் எல்லா தத்துவ அடிப்படைகளும் விரிவாகப்பேசப்படுகின்றன. தத்துவ ஞானிகள் விரிவாக முன்வைத்த கருத்துக்களை ஜென் சாயல் கொண்ட சுருக்கமான பிளிறல்கள் மூலம் எதிர்கொண்ட காலூ மெல்ல மெல்ல அந்த மேலைநாட்டினர் வலையில் விழுவதை நுட்பமாக ஆசிரியர் சுட்டிக் காட்டுகிறார். அதற்கு லூசியன் அவர்களுக்கு உதவிசெய்கிறது. அவர்கள் காலூ ஒரு அவதூதர் மற்றும் சித்தபுருஷர் என்று அதை நம்ப வைக்கிறார்கள். அத்தகையோர் எதையும் தர்க்கபூர்வமாக விவாதிப்பதில்லை, அவர்கள் தங்களையே ஒரு மாபெரும் குறியீடாக ஆக்கிக் கொள்கிறார்கள் என்று சொல்கிறார்கள்.

கிரேக்க சட்டச்சபை போல ஆளுக்கு ஆள் பேசி தர்க்கபூர்வமாக இப்படி நிறுவியதையே ஆசிரியர் தருக்கப்பிழை என்கிறார் என்பது தெளிவு. ஆனால் அதை உணராத காலு தன்னை பிள்ளையார் போல அமரவைக்க முயல்கிறது. பிருஷ்டத்தில் அமர்ந்து முன்கால்களைத்தூக்கி துதிக்கையைச் சுருட்டி அது காட்சிதர முயன்றபோது மலக்குடலுக்குள் மற்ற குடல்கள் அனைத்தும் போய் செருகிக்கொள்ள அப்படியே விழுந்து மரணமடைகிறது. மேல்நாட்டு தத்துவஞானிகள் வெற்றிக் களிப்புடன் ஊருக்குச் செல்கிறார்கள். கீழ்நாட்டு தத்துவ ஞானிகள் அதற்கு உடனே கோயில் கட்டுகிறார்கள்.

மனம் உடைந்த எம்மாவும் ஆதக்ஸும் காசிரங்கா காட்டிலிருந்து மலையேறிச் செல்லும் இடத்தில் நாவல் முடிகிறது. அவர்கள் மேலும் ஏறிச்செல்லவேண்டிய பனி படர்ந்த இமய மலைமுடிகளைக் காண்கிறார்கள். ஆதக்ஸ் அதை எம்மாவுக்குச் சுட்டிக் காட்டுகிறான். அவள் அவனை அணைத்துக் கொள்கிறாள். ”அங்கே…இனிமேல்…” என்று அவன் சொல்ல ”ஆம் அன்பே, இனிமேல் அங்கே…”என்று அவள் சொல்கிறாள். அப்போது அவர்கள் அறியாமல் அவர்களை லூசியனும் பின் தொடர்ந்து சென்று கொண்டிருக்கிறது. நாவல் முடிகிறது.

இந்நாவலின் மிகமுக்கியமான சிறப்பம்சம் இது கீழைஞானமரபு மற்றும் கீழைத் தொன்மமரபு ஆகியவற்றில் ஆழமாக வேரூன்றி முழுக்க முழுக்க இந்தியத்தன்மையுடன் எழுதப்பட்டிருப்பதுதான் என்று மிருணாளினீ முக்கர்ஜீ விரிவாகவே விளக்குகிறார். ஆப்பிளைத் தின்றபின் எம்மா தன் உடைகளை ஒவ்வொன்றாகக் களையும் இடமும் சரி, எம்மா பருவம் அடையும் இடமும் சரி கீழைநாட்டு தாய்த்தெய்வ வழிபாட்டு மரபின் நுண்ணிய அர்த்த தளங்களை தன்னகத்தே கொண்டுள்ளன என்று விளக்கும் மிருணாளினீ முக்கர்ஜீ அதற்கு ஆதரவாக டி.டி.கோஸாம்பி,, ஏ.எல்.பாஷாம் ,ரொகவேந்திரோ சொர்க்கோர் போன்ற இந்தியவியலாளர்கள், அகேகானந்த பாரதி போன்ற தாந்த்ரீக ஆய்வாளர்கள், டி.ஏ.கோபிநாதராவ் போன்ற இந்திய சிற்பவியல் நிபுணர்கள் ஆகியோரை விரிவாகவே துணைக்கு அழைக்கிறார். ”சென்ற நூறாண்டுகால இந்தியப் புனைகதை எழுத்தில் எந்த ஒரு படைப்பும் இந்நாவலைப்போல் இந்திய மெய்ஞானமரபுக்குள் நுழைந்துசென்றது இல்லை” என்ற அவரது வரியை உடனடியாக அந்நூலை வெளியிட்ட ‘கோல்டன் பால்ம்’ பதிப்பகம் தன் அடுத்த பதிப்பின் பின்னட்டைக் குறிப்பாக எடுத்துக் கொண்டது.

 

[2 ]

 

தொடர்ந்து இந்திய ஆங்கில இதழ்களில் ஆறுமாதகாலத்துக்கு அந்நாவலைப்பற்றிய கட்டுரைகள்,ஆசிரியரின் பேட்டி, வாழ்க்கை வரலாறு ஆகியவை வெளிவந்தன. அவர் டெல்லி வந்து தாஜ்மகாலின் முன்னாலும், ஒரு கறுப்புப் பிச்சைக்காரக் குழந்தை அருகிலும் கறுப்புக்கண்ணாடியுடன் நின்று புகைப்படம் எடுத்துக் கொண்டு ஜனாதிபதி, பிரதமர் ஆகியோரையும் சந்தித்துவிட்டு, நெருக்கியடித்த நிருபர்களுக்கு ”காந்தி இந்தியாவின் ஆன்மா” என்று பேட்டி கொடுத்துவிட்டு பாங்காக்குக்கு [ பட்டாயாவுக்கு]பறந்துசென்றார்.

ஆங்கில ஞாயிறு இணைப்புகள் சிற்றிதழ்களின் வழிவிளக்குகளாகையால் இந்திய மொழிகளில் யானைப்புரட்சி ஆரம்பமாகியது. ‘எழுத்துவட்டம்’ சிற்றிதழில் ‘மாண்ட மிருகம்-அலன் மிசௌக்ஸின் நாவலில் தென்னகப் பண்பாட்டுக்கூறுகள்’ என்ற தலைப்பில் அந்நாவலைப்பற்றி வி.எஸ்.துரைராஜ் மிக நீளமான ஒரு கட்டுரையை எழுதினார். அதில்நாவலின் ஒட்டுமொத்த சுருக்கத்தைக் கொடுத்துவிட்டு அந்நாவலின் சிறப்புகளை விரிவாக விளக்கியிருந்தார். அலன் மிசௌக்ஸின் நாவல் பலவகையிலும் தமிழுக்கு முக்கியமானது என்று சொன்ன வி.எஸ்.துரைராஜ் அதற்கு சொல்லியிருந்த காரணங்களில் முக்கியமானது, காளை போன்ற வெண்ணிற மிருகத்திற்குப் பதிலாக யானை என்ற கரிய மிருகத்தை கதைநாயகனாக எடுத்துக் கொண்டதன் வழியாக ஆலன் மிசௌக்ஸ் இந்திய மெய்யியலின் ஆன்மா திராவிட சிந்தனையே என்பதையே வலியுறுத்துகிறார் என்பது.

மேலைநாடு கீழைநாடு இரண்டின் சிந்தனைகளும் ஆக்கபூர்வமான ஓர் உரையாடலில் ஈடுபடவேண்டுமென்பதே ஆலன் மிசௌக்ஸ் முன்வைக்கும் கருத்து என்பதை ஆழமாக விவாதித்து பதிவுசெய்யும் வி.எஸ்.டி அவர்கள் ஆனால் நாவலின் உச்சமென்பது எம்மாவும் ஆதாக்ஸும் நாகரீகத்தை விட்டு அடுத்தபடிக்கு நிர்வாணமாக நடந்துசெல்வதே என்றும் இது பௌத்தம் கூறும் நிர்வாணத்தையே சுட்டுகிறது என்றும் குறிப்பிட்டார். இதுவரை எண்பத்திமூன்று உலகப் பெரும்படைப்புகளைப் பற்றி மாபெரும் கட்டுரைகளை எழுதியிருக்கும் வி.எஸ்.டி அவர்கள் தமிழில் வந்த எந்தப் படைப்பைப்பற்றியும் குறிப்பிடும்படி எதுவும் எழுதாமைக்குக் காரணம் அவை எதுவும் இலக்கிய ரீதியாக தேறவில்லை என்பதே. தேறுவனவாக இருந்திருந்தால் அவற்றைப்பற்றி ஆங்கிலத்தில் எழுதப்பட்ட கட்டுரைகள் உசாத்துணையாகக் கிடைத்திருக்குமே என்பதுதான் அவர்தம் தரப்பாகும்.

ஏறத்தாழ எல்லா இந்தியமொழிகளிலும் இந்நாவலைப்பற்றிய கட்டுரைகள் வந்தன. மலையாளத்தில் கெ.எஸ்.ஸ்ரீவத்ஸன் ‘ஆனையுடே ஆத்ம நொம்பரங்ஙள்’ என்றபேரில் மாத்ருபூமியின் எட்டு இதழ்களிலாக ஒரு கட்டுரையை எழுதினார். கன்னடத்தில் ஹொசனூர் நாகலிங்கையா எழுதிய கட்டுரை அதைவிடபெரியது. கட்டுரைகள் வர வர கட்டுரைகள் எழுதுவது மேலும் மேலும் எளிதாகியபடியே சென்று கட்டுரை எழுதுவதிலிருந்து கட்டுரையாசிரியர்கள் விலகி நிற்கவே முடியாது என்ற இக்கட்டுநிலை ஏற்பட்டது. விளைவாக இந்திய நகரங்களில் எல்லாம் நாவலின் ‘வைக்கோல்கூழ்த்தாள்’ பதிப்புகள் சகாய விலையில் கிடைக்கப்பெற்றன. பழைய புத்தகக் கடையில் மேலும் சகாயமாக. அவற்றில் முதல் பக்கத்திலேயே எந்தெந்த பக்கங்களில் பசுமை உள்ளது என்ற குறிப்பு பரோபகாரிகளால் அளிக்கப்பட்டிருந்தது.

இதைத்தொடர்ந்து இந்திய மொழி இலக்கியங்களில் இந்நாவலின் செல்வாக்கு வெளிப்படையாக தெரிய ஆரம்பித்தது. விமரிசகர் குலசேகரன் ”…பின் நவீனத்துவ சொல்லாடல்களும் மாற்றுஅரசியல் மற்றும் மெய்யியல்சார் மறுவாசிப்புகளும் கொண்ட இப்பிரதியானது இந்திய சனாதன மற்றும் மறுமீட்சி சனாதன கட்டமைப்புகளுக்கு எதிரான ஓர் அமைப்புசார்ந்த மீள்நோக்காகவும் அவை கட்டமைக்கும் புதிய கலாச்சார மற்றும் சமூகவியல் கருதுகோள்களுக்கு எதிரீடாகவும் அமையும் அதேசமயம் ஊடுபிரதித்தன்மை மூலம் புதிய வாசிப்பின்பங்களை கட்டமைத்து அக்கட்டமைப்புகளினூடாக கட்டமைப்புகளுக்கு எதிரான கட்டமைப்பு ஒன்றை கட்டியெழுப்புவதாகவும் அமையும்போதே நாம் நின்று வாசிக்கும் தளங்களின் அடியில் ஓடும் தொன்மக் கட்டமைப்புகளின் பொய்மையையும் சுட்டிக்காட்டுவதாக அமைந்து பக்தின் சொல்லும் களியாட்டக்கோட்பாட்டின் அடிப்படையில் எழுந்து நவசசூரிய முற்கோள்களை மீறிச்செல்கிறது….” என்று நீளும் ஒரு கட்டுரையை எழுதி இதேபோன்ற பிரதிகளை எழுதாமல் நமது எழுத்தாளர்கள் மூளைசெத்துப்போய் கிடப்பதைப்பற்றி மனவருத்தம் கொண்டிருந்தார்.

[3 ]

இதையொட்டி டெல்லியில் சாகித்ய அக்காதமியால் ஏற்பாடுசெய்யப்பட்ட ‘ Elephant-Indian New Writing’ சிறப்புக் கருத்தரங்கில் தமிழின் சார்பாக இருவர் கலந்துகொண்டார்கள். காதல் கதைகளும் சுயமுன்னேற்ற நூல்களும் எழுதுபவரான பிரபல எழுத்தாளர் சுதாசுந்தரி மற்றும் சிவகாசியைச் சேர்ந்த மயிலேறும்பெருமாள். மதுரைப் பல்கலையின் முனைவர் மாணிக்கவேலு அவர்களின் மொழியில் ‘மண்ணின் மணம் கமழும் எழுத்துக்குச் சொந்தக்காரரான’ மயிலேறும்பெருமாள் முதன் முதலில் விமானத்தில் ஏறுபவரானதனால் தன்னை நோக்கிக் கும்பிட்ட விமானப்பணிப்பெண்ணுக்கு பெட்டியை தரையில் வைத்துவிட்டு ”வணக்கம்மா…ரொம்ப சந்தோசம்…”என்று உரக்கப்பதில் சொல்லி அவளை திடுக்கிட வைத்தார். அதன் பின்னர் பயணம் முழுக்க அந்தப்பெண்ணை திரும்பிப் பார்த்து மேலும் உரக்க ”வணக்கம்மா …எடம் போட்டாச்சு..” என்றும் ”சாப்பிட்டீங்யளா? நான் சாப்புட்டாச்சு!” என்றும் கேட்டதோடல்லாமல் இறக்கும்போது ‘சொல்லிட்டுப்போக’ தேடி அவளை அஞ்சி கழிப்பறையுள் பதுங்கும்படிச் செய்தார். ஏஸி அறையில் குளிரை குறைக்கத் தெரியாமல் முண்டாசு கட்டி கம்பிளி போர்த்திக் கொண்டு டிவி பார்த்து ”இவிங்ய இந்தூரிலே இந்தியில கிரிக்கெட் வெளயாடுறாய்ங்க போல” என்று எண்ணிக் கொண்டார்.

சுதாசுந்தரி விமானத்திலேயே பிறந்து வளர்ந்தவர். அனுமதி கிடைத்தால் வடநாட்டு ரயில் பயணிகளைப்போல ஓரமாக ஸ்டவ் வைத்து சப்பாத்திசுடவும் தயங்காதவர். வந்திறங்கியதுமே அவர் நகரின் முக்கிய அரசியல்வாதிகளையெல்லாம் தொலைபேசியில் அழைத்து தன் வருகையை அறிவித்துவிட்டு அலாரம் வைத்துவிட்டு தூங்கச்சென்றார். அதிகாலையில் எழுவது அவரது இளமையின் ரகசியம் — நான்குமணிநேரம் ஒப்பனைக்குச் செலவிடுவார்.

இந்தியா இண்டர்நேஷனல் கட்டிடத்தின் குளிரூட்டப்பட்ட கருத்தரங்க அறையில் விவாதம் தொடங்கியது. சாகித்ய அக்காதமியின் செயலரும் மலையாளிகளால் செல்லமாக ‘டூரிங் பொயட்’ என்று அழைக்கப்பட்டவருமான சரத்சந்திரன் அவர்கள் அன்றுகாலை புதாபெஸ்டிலிருந்து வந்திறங்கி குளித்து சந்தனப்பொட்டு போட்டு தட்டுவேட்டி கட்டி சுடச்சுட கட்டன் சாயாவுடன் அமர்ந்து ”புதாபெஸ்டிலே புதிய மஞ்ஞு’ என்ற தலைப்பில் பதிநான்கு பக்க அளவுக்கு ஒரு கவிதை எழுதி மாத்ருபூமிக்கு அனுப்பிவிட்டு எழுந்து சூட் அணிந்து சந்தனப்பொட்டை துடைத்துவிட்டு காரில் ஏறி கருத்தரங்குக்கு வந்து, வந்த வேகத்திலேயே ”….கிமு ஆறாம் நூற்றாண்டில் புஷ்கரநகரத்துக் கவிஞனான பிரதாபகேசன் எழுதிய அமரசந்தேசம் என்ற காவியத்தில் குழியில் விழுந்த யானையை பழக்கும்பொருட்டு அதன் முன் வைதீகர் கூடிபெரிய ஒலியுடன் வேதமந்திரங்களை உச்சரித்து அதன் வயிற்றைக் கலக்கும் வழக்கம் இருந்த தகவல் நமக்குக் கிடைக்கிறது…” என்று தன் கட்டுரைப் பேருரையை ஆரம்பித்தார். அவர் அதை எண்பத்தியெட்டாம் முறையாக பேசுகிறார் என்பதுடன் அக்கட்டுரை ஏற்கனவே மலையாளத்திலும் இன்டியன் ரைட்டிங் என்ற அக்காதமி இதழிலும் வெளியாகியது என்பதும் குறிப்பிடத்தக்கது.

அவர் முடிக்கும் வரை அரங்கில் அமைதி நிலவியது. மயிலேறும்பெருமாள் சட்டென்று ”இங்கிலீசிலேல்லாய்யா பேசுறாய்ங்ய?” என்று புரிந்துகொண்டு சுதாசுந்தரியைப் பார்க்க அவரது முகத்தில் பரதநாட்டியத்தின் மிகையான அபிநய பாவங்கள் மேலும் மிகையாக வெளிப்படக்கண்டு வியந்து வாயைத் திறந்து மூடமறந்தார். சட்டென்று ‘தெருவில் வாரானோ என்னைத் திரும்பிப் பாரானோ’ என்ற பாவமும் அதைத் தொடர்ந்து ‘சுவாமியை வரச்சொல்லடீ’ என்ற பாவமும் வரக்கண்டு பீதியடைந்து மற்றவர்களைப் பார்த்தார். அவர்களில் மூன்று பெண்கள் கடுமையான ஒப்பனைக்கு உள்ளே அவர்கள் பாட்டுக்கு அமர்ந்திருக்க ஒரிய எழுத்தாளரான ஹரிணி மகாபாத்ரா பாஞ்சாலிபோல விரித்திட்டிருந்த மாபெரும் கூந்தலைக் கண்டு மேலும் பீதியடைந்து சரத்சந்திரனின் பொன் கட்டிய பல்லையே பார்க்க ஆரம்பித்தார்.

சரத்சந்திரன் ஏராளமான கனைப்புகளுக்கு நடுவே பேசி முடிந்ததும் சுதாசுந்தரி எழுந்து ”ஓ மை காட்! மை காட்! ஐ ரியலி காண்ட் பிலீவ் திஸ்…சரத்…யு டிட் எ ஸ்ப்ளெண்டிட் ஜாப் யார்! ” என்று பரவசமான குரலில் கூவ சரத்சந்திரன் ”ஹஹஹ தேங் யூ”என்றார். ஹரிணி மகாபாத்ரா மார்பில் கை வைத்து தலையை சரித்து ”சரத்.. யூ ஆர் ஏ டேர்ட்டி பேட் பாய் யூ நோ… ஹவ் யூ டு ரைட் ஆல் தீஸ் கிரேட் ஐடியாஸ் இன் சச் ஏ ப்யூடி·புல் லேங்வேஜ்…ஓ நோ!” என்றபின் மொத்த முடியையும் வாரி பின்னால்போட்டாள். ‘கம்மத்தட்டைய காய வைக்கிற மாதிரில்லா இருக்கு…’ என்று எண்ணினார் மயிலேறும்பெருமாள்.

உடனே வங்க எழுத்தாளர் அமித் பானர்ஜி தோளில் சால்வையும் வாயில் வெற்றிலையும் பைஜாமா குர்த்தாவும் சீவாத நரைத்த தலையுமாக எழுந்து தொண்டையைக் காற, மயிலேறும்பெருமாள் ‘பாட்டுக்கச்சேரி உண்டோ’ என்று எண்ணி அதேபோன்ற தோற்றத்துடன் இருந்த மேலும் மூவரை நோக்க அமித் பானர்ஜி உரத்த குரலில் ”யூ நோ மிஸ்டர் சொரொத்சொந்த்ரா யூ ஆர் எ ·பூல் அன் இடியட்!” என்று ஆரம்பித்தார். இந்தியாவில் உயர்தர இலக்கியம் இருக்கும்போது யாரோ ஒரு பெல்ஜியத்தான் எழுதிய அரைவேக்காட்டு எழுத்தை நாம் ஏன் கொண்டாடவேண்டும்? இந்த அடிமுட்டாள்தனத்துக்கு சாகித்ய அக்காதமி பல லட்சம் பணத்தை அள்ளி வீசுகிறது. இலக்கியத்தின் அடிப்படை விதிகள் கூட இவர்களுக்குத் தெரியவில்லை. இலக்கியம் என்பது முதன்மையாக பொங்ளோ மொழியில் எழுதப்பட்டிருக்கும். கொல்கொத்தோவில் வெளியிட்டிருப்பார்கள். உதாரணமாக இந்த வருடமே யானையைப்பற்றி ஏழு நாவல்கள் வெளியாகியிருக்கின்றன. அவற்றில் மிகச்சிறந்த நாவலாக அமித் போந்த்யோபோத்யோய் எழுதிய ‘கஜத்வேஷ்’ கொண்டாடப்படுகிறது.

சுதாசுந்தரி ”வாட் ஏ மார்வலஸ் ஸ்பீச்…அமித் யூ டிட் இட் எகெய்ன்! ஓ!” என்று சொல்லி முடிப்பதற்குள் தோளில் சால்வையும் வாயில் வெற்றிலையும் பைஜாமா குர்த்தாவும் சீவாத தலையுமாக ஓர் ஒல்லி இளைஞன் எழுந்து ”அமித்-தா நீங்கள் ஒரு விஷயத்தை கவனிக்கவில்லை. நீங்கள் பதினேழுவருடம் முன்பே செத்துவிட்டீர்கள். கொல்கொத்தாவில் உங்களுக்கு நாங்கள் சமாதி கட்டி அங்கே மலர் வளையமும் வைத்து வருகிறோம்… ‘அபய் சஞ்சார்’ வெளிவந்த மறுநாள் காலை இலக்கிய உலகம் அதை அறிவித்தது. இங்கே உங்களுடைய ஆவிதான் சத்தம் போடுகிறது என்றால் அதற்கு இன்டியன் கா·பி ஹவுஸிலே பொரித்த சால மீனின் தலையையும் நாட்டுச்சாராயத்தையும் படைத்து நாங்கள் சாந்திசெய்ய கடமைப்பட்டிருக்கிறோம். ஆகவே வாயை மூடுங்கள், கொல்கொத்தாவில் இந்த ஆண்டே நான்கு நாவல்கள் வெளிவந்துள்ளன. அபய்குமார் சர்க்கார் எழுதிய  ‘கஜவிராஜித்’ அதில் உச்சகட்ட சாதனை என்று விமரிசகர்கள் கொண்டாடுகிறார்கள்…” என்றான். சுதாசுந்தரி ஆனந்த பரவசத்துடன் ”ஓ அபய்…! யூ ஆர் சச் ஏ டார்லிங்! ”என்றார்.

உடனே மற்ற இரு சால்வைக்காரர்களும் எழுந்து ஒருவரோடொருவர் சத்தம்போட ஆரம்பித்தார்கள். வெற்றிலைச் சாறு தெறிப்பதிலிருந்து காத்துக்கொள்ள பிறர் முடிந்தவரை தலை தாழ்த்தி அமர்ந்திருக்க சரத்சந்திரன் தன் அடுத்த கருத்தரங்குக்கான உரையை ஒரு தாளில் கவனமாக எழுதிக் கொண்டிருந்தார். ஹரிணி மகாபாத்ரா மெல்ல தன் கைப்பையைத் திறந்து ஏதோ பார்க்கும்பாவனையில் லிப்ஸ்டிக் வரியை சரிசெய்ய மயிலேறும்பெருமாள் ”சண்டைபோடுதானுக, ஒருத்தனும் சமாதானம் செய்யியதாக காணல்லியே … எந்திரிச்சி வெலக்கி போடலாம்ணாக்க எளவு இவனுகளுக்க பாசையும் தெரியல்லியே…பாப்பம். கையை கீயை நீட்டினானுகண்ணாக்க எந்திரிச்சி நல்ல சாத்தூர் சாத்து நாலு சாத்திப்பிடவேண்டியதுதான்…” என்று எண்ணிக் கொண்டார். ஆனால் சட்டென்று யாரும் எதுவும் சொல்லாமலேயே சண்டை முடிந்து நால்வரும் அமர்ந்து கொண்டார்கள். சரத்சந்திரன் அடுத்தபடியாக காசி பல்கலை பேரசிரியரூம் நாவலாசிரியருமான சிவ்சங்கர் ஜா பேசுவார் என்று சொன்னார்.

சிவ்சங்கர் ஜா எழுந்ததும் ஒரு குரல் ”சிவ்சங்கர் தும் ஜா..” என்று சொன்னது. சிவ்சங்கர் ”அந்தக் குரலை நான் அறிவேன். நான் இப்போது லண்டனில் எட்டுமாதம் இலக்கியப் பயிற்சி வகுப்புக்காக சென்றதனால் ஏற்பட்ட பொறாமையால் இந்தக்குரல் எழுகிறது. அந்தக் கும்பலை நான் சந்திக்க வேண்டிய இடத்தில் சந்திப்பேன். இப்போது நான் லண்டனில் வெளியான என் நாவலின் மொழிபெயர்ப்பை இங்கே ஆளுக்கு ஒரு பிரதி அளிக்க விரும்புகிறேன்…இதை நீங்கள் படித்து உங்கள் மொழியில் மொழிபெயர்த்தால் இந்திய ஒருமைப்பாடு வளரும்…இந்தியாவெங்கும் இந்தி இலக்கியம் பரவுவதும் இந்தி எழுத்தாளர்கள் ஒன்றும் அறியாதவர்களாக இருப்பதுமே இந்திய ஒற்றுமைக்கு அவசியம் என்று மகாத்மா காந்தி சொல்லியிருக்கிறார்…” என்று சொல்லிக் கொண்டிருக்கும்போதே புத்தகங்கள் அனைவருக்கும் வழங்கப்பட்டன. அனைவருமே அதன் பிரசுரகர்த்தர் பெயரை மட்டும் பார்த்தபின் வைத்துக் கொண்டார்கள். சுதாசுந்தரி மட்டும் ”ஷிவ் ,யூ டிட் இட் யார்!”என்றார். சிவ்சங்கர் தன் லண்டன் அனுபவங்களை விரிவாகச் சொல்லிக் கொண்டிருக்கும்போது நேரம் தாண்டிவிட்டதனால் அமரச்செய்யப்பட்டார்.

சிவ்சங்கர் பேசிக் கொண்டிருக்கும்போதே வங்க எழுத்தாளர் நால்வரும் வெளியே போய் வராந்தாவில் நின்று ஒருவரை ஒருவர் கட்டிப்பிடித்தபடி உரக்கச் சிரித்துப் பேசி முதுகில் அறைந்து குலாவிக் கொண்டிருந்தார்கள். அடுத்து பேசவந்த கன்னட எழுத்தாளர் ஹெக்கள்ளி அப்பய்யா ”..அந்த நாவலில் யானை வருவது சரி, வெள்ளைக்காரி ஏன் வருகிறாள்? சரி, அவளே தவறிப்போய் வந்துவிட்டாள், ஏன் வெள்ளைக்காரன் வருகிறான்?. எதற்கெடுத்தாலும் வெள்ளைக்காரர்களை மேற்கோள் காட்டுவது ஒரு மனநோய். லண்டனில் போய் ஆங்கிலம் படித்தால் உள்ளூர் மாத்வர்கள் கிரேக்கர்கள் ஆகிவிடுவார்களா?” என்றார். உடனே கன்னட எழுத்தாளர் டி.கெ.நாகார்ஜுனா எழுந்து ”மைசூரில் கிணறுகளை இறைத்து சுத்தம் செய்து நெடுநாளாகிறது. தவளைகளின் தொடைக்கறி ஜப்பானில் மிக விரும்பி உண்ணப்படுகிறது” என்றார். ஒருவரை  ஒருவர் அவர்கள் தாக்கிக் கொள்ளும்போது கன்னட தலித் எழுத்தாளரான சிவ்வப்பா எழுந்து அவர்கள் இருவரையும் தாக்க அவரக்ள் இருவரும் ஒன்றாகி அவரைத்தாக்கினார்கள். வாய்ச்சண்டை முற்றி அழுத்தமான கன்னடச்சொற்கள் பறக்க ஆரம்பிக்க சரத்சந்திரன் எழுந்து, ”தனிப்பட்ட தாக்குதல்கள் வேண்டாமே” என்றார்.

தெலுங்கு [சமையல்] எழுத்தாளரான சீதாதேவி தன் மொழியில் எழுதும் எண்பத்தியெட்டு குறிப்பிடத்தக்க இளம் எழுத்தாளர்களின் பெயர்களைச் சொல்லி முடிப்பதற்குள் மலையாள எழுத்தாளர் நடுவட்டம் கேசவனை பேசக்கூப்பிடுவிட்டார்கள். நடுவட்டம் எழுந்து ”நாம் இங்கே யானையைப்பற்றி பேச ஆரம்பிக்கும் முன் நான் யானைகளின் சொந்தம் நாட்டிலிருந்து வருபவன் என்பதைச் சொல்லிக் கொள்ள ஆசைப்படுகிறேன். தகழி சிவசங்கரப்பிள்ளையிடம் மார்ஷல் டிட்டோ இருமுறை சொன்னார், மிஸ்டர் தகழி நீங்கள்தான் உலகிலேயே மிகபெரிய எழுத்தாளர், நீங்கள் சட்டை போடாமலிருப்பதில் இருந்து அதை தெரிந்துகொண்டேன் என்று…” என்று சொல்ல உருது எழுத்தாளர் அப்துல் சமீர் கான் ”மலையாளத்தில் மூத்த எழுத்தாளர்கள் சட்டை போடுவதில்லை என்பதனால் அவர்களின் அக்குள்கள் அவர்களின் எழுத்துக்களைவிட மலையாளிகளுக்கு நன்கு அறிமுகமானவையாக இருக்கும்” என்று சொல்லி ”… எனக்கு வைக்கம் முகமது பஷீரின் அக்குள்கள் பிடிக்கும். அவற்றை மொழிபெயர்க்க வேண்டிய தேவையும் இல்லை…” என்று சொல்ல அவையில் சிரிப்பொலி பரவியது

சரத்சந்திரன் ”அது உண்மைதான்…” என்று தீவிரமாக சொல்லி முன்றாமுலகநாடுகளில் கிபி பதினாறாம் நூற்றாண்டுவாக்கில் எப்படி சட்டை அறிமுகமாயிற்று என்றும் அதற்கு பக்தி இலக்கியத்தில் உள்ள இடமென்ன என்பதைப்பற்றியும் சட்டைகள் புழக்கத்துக்கு வந்த ஆரம்ப நாட்களில் ஒருநாள்விட்டு ஒருநாள் மட்டும் சட்டைப்பை இருக்கும் சட்டைகள் புழக்கத்திலிருந்ததாகத் தெரிகிறது என்றும் விளக்கியபோது மேலும் ஏதேனும் சொல்லப்போய் அவரைச் சீண்டுவது உசிதமல்ல என்று அவை கண்டுகொண்டது. மயிலேறும்பெருமாள் மட்டும் ”எல்லாவனும் இங்க்லீசிலே பேசுதானுக. ஆனா ஆளுக்கொருமாதிரில்லா பேசுதானுக…. இங்கிலீசும் தண்ணிக்கேத்தாப்ல மாறும்போல…”என்று எண்ணிக்கொண்டார். சிந்தி எழுத்தாளர் அவர் எழுதிய கவிதை ஒன்றை பாடி முடித்ததும் மதிய உணவுக்கு விடப்பட்டது.

ப·பே முறையில் உணவுகளை எடுத்து உண்ணுவது மயிலேறும்பெருமாளுக்கு அவமானமாகப் ப்பட்டது. ”பொம்பிளையாளுக எடுத்து குடுக்கணும் ஆம்பிளைக திங்கணும்… அது மொறை. சரி காலம்கெட்டுக் கிடக்கு” என்று எண்ணிக் கொண்டு முதலில் கண்ட சோற்றை அள்ளிப்போட்டுக் கொண்டு ”நிண்ணுட்டு திங்கணுமாம்.போற போக்கப்பத்தா நிண்ணுட்டு ரெண்டுக்குப் போறதுக்கும் வளி கண்டுபிடிச்சிருவானுக போல” என்றபடி மற்ற உணவுக்குவியல்களை ஒவ்வொன்றாக பார்த்தார். அடிவயிற்றை கலங்கடிக்கும் ஒரு மஞ்சள் திரவத்தை சற்றே அள்ளி விட்டுக் கோண்டு அது என்ன என்று தெரியாமல் தட்டின் மூலையில் ஒதுக்கிவிட்டு குல்லாபோட்ட ஆளிடம் ”சாம்பார்…வெயர்?” என்று என்று கேட்க அவன் ”ஸெர், திஸ் இஸ் சாம்பார்…”என்று அதே மஞ்சள் திரவத்தை மேலும் இரு கரண்டி அள்ளி சோற்றில் விட்டுவிட்டான்.

தன்னந்தனியாக நின்று ”ஒரு தனி ஒலகம்போல… எளவு, சந்தையில தரகு பேசுற சத்தமாட்டுல்லா இருக்கு!” என்று எண்ணிக் கொண்டபோது ஹரிணி மகாபாத்ரா அவரை கண்டு லிப்ஸ்டிக் வரிவரியாக வெடித்து விரிய சோழிப்பற்களைக் காட்டி சிரித்தபடி அருகே வந்து ”ஹாய்…”என்றாள். மயிலேரும் பெருமாள் ”என்ன கேக்கா, எளவு வெள்ளை யானை மாதிரி நாலஞ்சு குண்டிகளோடல்லா இருக்கா?” என்று எண்ணிக் கொண்டு ”வணக்கம். குட்மார்னிங்” என்றார். ”அயம் ஹரிணி மகாபாத்ரா…” என்று அவள் சொன்னாள். ‘பாத்திரமா?’ என்று வியந்த மயிலேறும்பெருமாள் மறுசிந்தனை அடைந்து ‘ஒருகணக்கிலே செரியாத்தான் இருக்கு ‘ என்று உள்ளூர மகிழ்ந்துகொண்டார். ”ஐயாம் மயிலேறும் பெருமாள்…” ”ஓ,மையி..மயிரேர்..ஐயம் ஸாரி” என்றாள் அவள். ”கெடுத்தாளே” என்று எண்ணி ”நோ நோ மயிரேறும் பெருமாள் இல்லை. அது போக்கத்தவனுக சொல்லுறது. மீ மயிலேறும்பெருமாள்” என்றார். ”ஐ ஸீ…”என்று ஆரம்பித்து பத்துமுறை தலைமுடியை தள்ளும் வரை அவரிடம் பேசிவிட்டு அடுத்த ஆளைநோக்கிச் சென்றாள். ”இவ மதிச்சு வந்து பேசுதா. மண்ணுக்க மதிப்பு அவளுக்குத்தெரியுது. நம்மூருகாரி எட்டிப்பாக்குதாளா பாரு?” என்றார் மயிலேறும்பெருமாள் தனக்குள்.

மதிய உணவு முடிந்ததுமே மீண்டும் வங்க மொழி எழுத்தாளர் ஒருவர் பேச மிச்சம் மூன்றுபேரும் எழுந்து ஓங்கிக் கத்தி கைநீட்டிப் பாய்ந்து ரகளைசெய்துவிட்டு உடனே சால்வைகள் சரிய தழுவிக் குலாவிக் கிளம்பிச் சென்றார்கள். அடுத்து மைதிலி மொழி எழுத்தாளர் ஒருவர் தட்டித்தடுமாறி எதையோ மைதிலியிலேயே படித்து முடிக்க பாதிப்பேர் மெல்லிய குரட்டை ஒலியுடன் தூங்க தமிழுக்காக பேச சுதாசுந்தரி எழுந்தார். எழுதிக் கோண்டு வந்திருந்த நீண்ட கட்டுரையை ஏராளமான மெய்ப்பாடுகளுடன் படித்தார். ‘இந்திய ஒருமைப்பாடு கிராமங்களில்தான் இருக்கிறது என்றார் காந்திஜி. ஏனென்றால் கிராமங்களில் யானைகள் நிறைய இருக்கின்றன. யானை நமது தேசியபெருமிதமாகும்…’ என உரை சென்றுகொண்டிருக்க சிவ்சங்கர் உரக்க ”சுதா, இது ஜனாதிபதி உரை போல் இருக்கிறது…” என்று சொல்ல அரங்கமே உரக்கச்சிரித்தபோது சுதாசுந்தரி நன்றிப் பரவசத்துடன் பரதநாட்டியதாரகை போல குனிந்து வணங்கி அமர்ந்தார்.

அடுத்தது மயிலேறும் பெருமாளின் முறை. அவருக்கு வியர்வையில் உள்ளங்கை வழவழத்தது. நாற்காலி வழுக்கியது. இத்தனைக்கும் அவர் அங்கே பேசுவதாக இல்லை. தமிழிலக்கியத்தில் யானைகளின் நிலையை சங்கம் தொட்டு பாரதிவரை விரிவாக ஆராய்ந்தபின் நவீன இலக்கியத்துக்கு வந்து யானை பற்றிய நூற்றுக்கணக்கான தகவல்கள் கொண்ட மாபெரும் கட்டுரையை அவர் பத்துநாள் உழைத்து எழுதியிருந்தார். காட்டில் யானை பிருஷ்டத்தை உரசி பளபளபபக ஆக்கிவைத்திருக்கும் மரத்தில் பிள்ளையார் செய்து அதை வீட்டில் நிலையில் பொருத்தினால் அந்த வீட்டில்செல்வம் பெருகும் போன்ற பல தகவல்கள் அதில் கொட்டிக்கிடந்தன. அதை ஒருவாரம் முன்னரே சுதாசுதரியிடம் கொடுத்து ஆங்கிலத்தில் அதை மொழிபெயர்த்துச் சொல்லமுடியுமா என்றும் கேட்டிருந்தார். அதை அழகாகச் சுருக்கிச் சொல்லலாம் என்று அவர் ஆலோசனை சொன்னார். சுதாசுந்தரி மயிலேறும் பெருமாளின் கட்டுரையின் பிரதி ஏதும் கையில் இல்லாமல் படுவேகமாக ஆங்கிலத்தில் எட்டு சொற்றொடர்கள் சொல்லி தேங்க்யூ என்றதும் சபை கைதட்டியது.

”எல்லாத்தையும் சொல்லிட்டியளா?” என்று மயிலேறும் பெருமாள் கேட்க ”சொல்லிட்டேன்..கேட்டீங்கள்ல?” என்றாள் சுதாசுந்தரி. ஆங்கிலம் எத்தனை சுருக்கமான மொழி என்று மயிலேறும் பெருமாள் எண்ணிக் கொண்டார். மாலையில் சரத் சந்திரன் ”இந்த கருத்தரங்கில் வெற்றிகரமாக மீண்டும் ஒருமுறை பண்பாடுப்பரிமாற்றம் நடந்துள்ளது…” என்று சொல்லிக் கோண்டிருக்கையில் நடுவட்டம் அவரை நோக்கி கட்டைவிரலைக் காட்டி தாகம்சம்பந்தமாக ஏதோ சைகைசெய்தார். அவர் புருவம் மட்டுமசைத்து பொறு என்றபடியே பேசி முடித்தார். சுதாசுந்தரி ”சரத்,யூ லிட்டில் ராஸ்கல், யு டிட் இட் அகெய்ன்…டியர்…” என்று சொன்னாள். ”சச் எ நைஸ் மீட்டிங் சரத்” என்று மகாபாத்ரா முடியை மொத்தமாகப் பின்னாள் தள்ளினாள்.

அவர்களுக்கெல்லாம் ஆளுக்கு ஒரு துணிப்பை அளிக்கப்பட்டது. ”சூப்பர் பை!”என்று மயிலேறும்பெருமாள் எண்ணிக் கொண்டார். எல்லாரிடமும் சொல்லிக் கொண்டு போக முடியாவிட்டாலும் அந்த பெரும்பாத்திரத்திடமாவது ஒரு சொல் சொல்ல வேண்டுமென மயிலேறும்பெருமாள் ஆசைப்பட்டாலும் அவளவரை கண்களால் சந்திக்கவேயில்லை. பையுடன் ஊருக்குக் கிளம்பினார். அந்தப்பை அவர் முதல்முறை மளிகை வாங்கும்போதே அறுந்து தெருவில் பருப்பும் உளுந்துமாகக் கொட்டியது. அத்துடன் அவர் சின்னவனுக்கு பாலிகா பஜாரில் வாங்கிய சட்டை அவன் கைதூக்கியதுமே அக்குள் கிழிந்தது. ‘முமுமுகம்’ சிற்றிதழில் தன் டெல்லி பயணம் பற்றி மயிலேறும்பெருமாள் ‘ஆனைமேலே அம்பாரிமேலே ஆடு’ என்று ஒரு கட்டுரை எழுதினார். ஒருவழியாக அது ஆறுமாதம் கழிந்து அச்சேறும்போது அலன் மிசௌக்ஸ் பற்றி யாருக்குமே நினைவிருக்கவில்லை. யானையைப்பற்றியும்தான்.

எயிட்ஸ் ஒழிப்புக்கு வாய்வழிப்புணர்ச்சி சிறந்த வழியாகுமா என்பதை ஆராய்வதற்காக ஆம்ஸ்டர்டாமில் நடந்த பண்பாட்டுக் கருத்தங்குக்காக சுதாசுந்தரி சென்றுவிட்டிருந்தார். சரத்சந்திரன் தன் சொந்த கிராமமான ஆதிரப்புழைக்குப் போன அனுபவம் பற்றி ஒரு பயணக்கட்டுரை எழுதி வெளியிட்டார். மிருணாளினீ முக்கர்ஜீயின் அடுத்தகட்டுரை வெளியாயிற்று. அமெரிக்க இந்திய எழுத்தாளரான சுசித்ரா சர்க்கார் எழுதிய நாவல் ஒன்று புலம்பெயர்ந்த இந்தியர்களின் அடையாளப்பிரச்சினைகளை இந்திய-ஐரோப்பியப் பண்பாட்டுப் பின்புலத்தில் விரிவாகப்பேசுவதை அவர் அதில் விளக்கியிருந்தார். சுசித்ரா சர்க்கார் கிண்டர்கார்ட்டன் படித்துக் கொண்டிருக்கிறார் என்பதும் அவரது தந்தை அமெரிக்காவில் நியூயார்க் டைம்ஸ் இதழில் உதவி ஆசிரியர் என்பதும் குறிப்பிடத்தக்கவை.

 

மறுபிரசுரம்/ முதற்பிரசுரம் Jun 10, 2008

இந்து தத்துவ மரபு – ஒரு விவாதம்

மேலைத்தத்துவம் ஓரு விவாதம்

 

முந்தைய கட்டுரையானைடாக்டர்,மயில்கழுத்து -கடிதங்கள்
அடுத்த கட்டுரைஉரைகள்