தேர்வு:மேலும் சில கடிதங்கள்

அன்புள்ள ஜெ:

‘ தேர்வு ‘ குறித்து உங்களுக்கு பல கடிதங்கள் வந்திருக்கும். நீங்கள் சொல்வது போல் இது வெறும் கல்விசாற் திட்டங்களின் பிரச்சனையோ  செயற்படுத்துதலில் உள்ள பிரச்சனையோ மட்டும் அல்ல.  இது ஒரு தத்துவப் பிரச்சனை.  ஒரு வடிவமைப்புப் பிரச்சனையும் (Design problem) கூட. நம் கல்விசாற் அமைப்புகளின் வடிவமைப்பில் இதற்குப் பெரும் பங்கு உண்டு.

நம் பள்ளிகளும் கல்லூரிகளும் ‘பரிட்சை’ என்ற ஒன்றைச் சுற்றியே இயங்குகின்றன. அதுவே இலக்கு. அதுவே முடிவு. ஆனால் இதில் கொடுமை என்னவென்றால் பரிட்சை என்ற இலக்கை நோக்கிச் செல்லும் பாதைகளும் கூட பரிட்சைகளினாலேயே ஆனவை. தினப் பரிட்சை, வாரப் பரிட்சை, திடீர்ப் பரிட்சை, மாதப் பரிட்சை, காலாண்டுப் பரிட்சை, அரையாண்டுப் பரிட்சை மற்றும் இறுதிப் பரிட்சை/செமஸ்டர் பரிட்சை.  பரிட்சையே இலக்கு. பாதையும் அதுவே. ஒரு கல்வி ஆண்டே பரிட்சைகளினால் ஆனது. பரிட்சை என்னும் விசையை சுற்றியே வகுப்புகள். அதைச் சுற்றியே கல்வியும் கற்றலும். நம் குழந்தைகளுள் உள்ள துறுதுறுப்புக்கும் புதியதை அறிய விழையும் இயல்பான துடிப்புக்கும் உள்ள முதல் தடையே பரிட்சைகள் தான்.   எத்தடைகளும் இன்றி  பெரும் சீற்றத்துடன் பாயும் அருவியை குப்பிக்குள் கிடத்தி  Fountain ஆக்கிய கதைதான். இவை வேலிகள். கல்விசாற் அமைப்புகளில் ஒருவர் சராசரியாக 16 முதல் 20, 22 வருடங்கள் வரை பயில்கிறார். 20 years is a long time! இத்தனை வருடங்களில் நாம் எத்தனையோ துறைகளில் ஆழங்களைத் தொடலாம். ஆனால் பரிட்சை என்ற வேலிகள் காலத்தை சிதறடிக்கின்றன. 20 வருடங்களும் கால் பரிட்சையும் அரை பரிட்சையும் செமஸ்டர் பரிட்சையுமாக சுருங்குகின்றன.

இதை மீறி வருபவர்கள் சிலராலேயே ஆழங்களைத் தொட முடிகிறது. கென் வில்பர் தனது 22 வயதில் Biochemistry முனைவர் பட்ட ஆய்வில் இருந்து வெளியேறி அடுத்த பத்து வருடங்களில் ஒரு உணவகத்தில் Dishwasherஆக வேலைப்பார்த்துக்கொண்டு 6 புத்தகங்களை எழுதினார். இதில் இந்த வேலிகளைப் பற்றி பல கோணங்களில் எழுதியிருக்கிறார். ‘No Boundary’ என்ற புத்தகதில் இதை பற்றி விரிவாக எழுதியுள்ளார்.

இப்பொழுது இந்தியாவில் தேர்வுகளற்ற மாற்றுமுறைப் பள்ளிகள் பல பரவி வருகின்றன. இதிலும் ஏகப்பட்ட குளறுபடிகள். கிருஸ்துவப் பள்ளிகளில் காணப்படும் அடக்குமுறை ஒரு முனை என்றால் மாற்றுமுறைப் பள்ளியில காணப்படும் அறிவுத்துறைச் சார்ந்த ஃபாஸிசம் மற்றொரு முனை.ஒரு நல்ல மென்பொருள் வேலையை விட்டு விட்டு இந்த மாதிரி ஒரு மாற்றுமுறைப் பள்ளியில் ஆசிரியராகச் சேர்ந்த என் நண்பன் தலை தெறிக்க வெளியேறினான்.
அன்புடன் ,
அரவிந்த்

*********************

ஜெயமோகன் அவர்களுக்கு,

தேர்வு பதிவை பார்த்தவுடன் எனக்கு தோன்றியது இதுதான்,

குழந்தைகள் இப்பொழுது உயிருள்ளவர்களாகப் பார்க்கப்படுவதுதில்லை. வளர்ந்த பின் பணம் தரும் மரங்களாகப் பார்க்கப்படுகிறார்கள்.

சிறு வயதிலேயே சுய மதிப்பு இல்லாமல் வளர்த்துவதுதான் இப்போதைய போக்கு. குறிப்பாக ஆசிரியர்களாக உள்ள தந்தையர்கள். யோசித்தால், வாத்தியார் பிள்ளை மக்கு என சமீப காலங்களில் வந்ததில்லை. எப்பொழுது மனனம் தான் கல்வி என வந்ததோ அப்பொதே இது ஆரம்பித்தது.

தன்னுடைய குழந்தைகளை நம்பும் பொற்றோர்களால் வளர்க்கப்படும் குழந்தைகள் வாழ்க்கையில் வெற்றி பெறுகின்றன. குறிப்பாக முடிவுகள் எடுப்பது, எல்லாவற்றிக்கும் மற்றவர்களை சாராதிருத்தல் முதலியன தகுதிகள் உள்ளனவாக வளர்கின்றன.

தன்னுடைய பெண்ணை வேவு பார்ப்பது, தன்னுடைய மகனின் செலவுக்கு கணக்கு கேட்பது முதலியன சில அல்ல பல பெற்றொர்கள் செய்வது. கணக்கு என சொன்னவுடன் நேரு தன் தந்தைக்கு எழுதிய வாசகம் நினைவுக்கு வருகிறது.

“நீங்கள் என்னை நம்பினால் என்னிடம் கணக்கு கேட்கமாட்டீர்கள். என்னை நம்பாவிட்டாலோ நான் கணக்கு அனுப்பி பலனில்லை”

இது படிப்பிற்க்கு மட்டும் அல்ல, எல்லாவற்றிக்கும் தான் இதற்கு மேல் சொல்லத்தேவையில்லை என நினைக்கிறேன்.

நன்றி


ராஜசங்கர்

*******************

மதிப்பிற்குரிய ஜெயமோகன் அவர்களுக்கு…

வணக்கங்கள்..தங்களுடைய வலைப் பதிவில் தேர்வு என்ற கட்டுரைப் படித்தேன்…

மிகவும் நின்று நிதானித்து படித்ததில் நம் அனைவரின் வாழ்க்கையும் அஜிதனில் அடங்கியுள்ளது என உணர்ந்தேன்…

உண்மைதான். எதற்கும் பதட்டப் பட்டு திரிவதன் விளைவு குழந்தைகளின் மீது சிறு அக்கறைக் கூட பாராட்ட முடியாத அவலத்திற்கு நாம் உள்ளாகி இருக்கிறோம்..

தங்கள் பதிவில் உள்ள சிறுபான்மையினர் கல்விக் கூடங்கள் குறித்த தங்கள் அவதானிப்பில் நான் முரண்பாடு கொள்கிறேன்..கல்வி என்பது எங்கோ மாய உலகில் மறைந்து கிடக்கும் அதிசயமாய் மறைத்து வைக்கப் பட்டிருந்த காலத்தில் …ஊரின் ஓரத்தில் ஒதுங்கிக் கிடந்த சேரிகளில் வெண்ணிற ஆடைகளோடு நுழைந்து கல்வி அளித்து, சுகாதாரம் போதித்து, மருத்துவம் தந்தது பாதிரிமார்கள்தான்.அவர்களுடைய நோக்கம் தங்கள் மதத்தை பரப்ப சேவையை கருவியாக பயன்படுத்துவதாக இருக்கலாம்..அதனாலென்ன…எந்த மதம் இறந்தால் என்ன..? எந்த மதம் பிறந்தாலென்ன..?

சூத்திரன் நாவிற்குள் பைபிளால் சரஸ்வதி அமர்ந்ததுதான் அதில் நடந்த நன்மை..

மற்ற படி அஜிதன் எதிர்கொண்ட சிக்கலான வாழ்வியல் முரண்கள் -எனக்கும் ஏற்பட்டு இருக்கிறது..எந்த ஆசிரியரும் மாணவனை மனிதனாகக் கூட நினைப்பதில்லை..அவர்களுக்கு தங்கள் பணி குறித்து இருக்க வேண்டிய நியாயமான அக்கறை இல்லை..அடித்தால்…அவமதித்தால் தரையில் கிடப்பதைக் கூட மாணவன் தலையில் ஏற்றி வைத்துக் கொள்வான் என்று நினைத்துக் கொள்வார்கள் போல..

தங்களுடைய பதிவு எனக்கு சமீபத்தில் வெளிவந்த அமீர்கானின் தாரே ஜமீன் தார் என்ற திரைப் படத்தை நினைவுப் படுத்தியது…

நம் நாட்டு குழந்தைகளுக்கான கல்வி முறை மாற்றி அமைக்கப் பட வேண்டும் என்பதான தங்களுடைய அக்கறையில் நானும் பங்கேற்கிறேன்….

எனது 4 வயது மகனை என் மனைவி பள்ளிக்கு அனுப்பும் போது போர்க் களத்திற்கு செல்லும் மான் போல தயார்ப் படுத்தி அனுப்பவது எனக்கு மிகுந்த கோபத்தை உண்டாக்கும் செயலாகவே தெரிகிறது.ஏனென்றால் அவன் டாக்டராகணுமாம்…சொல்லி சொல்லி வளர்க்கிறாள் என் மனைவி.

என் குழந்தை ஒரு டாக்டராகவோ, ஒரு பொறியாளராகவோ ஆக்க எனக்கு துளி கூட விருப்பமில்லை என  என் மனைவியுடன் சண்டை போட்டு இருக்கிறேன்..

பிறகு என்னதாண்டா அவனை செய்ய போற..? என்று கோபமாய் கேட்ட என் தந்தையை பார்த்து அவனுக்கு சினிமா பிடித்திருக்கிறது..அதனால அவன நடிகனாக்கப் போறேன் என்று வெறுப்பாய் பேசி விட்டு வந்திருக்கிறேன்…

என்ன உலகம் இது…

ஒழுங்கமைவுகள் என்பதன் பேரில் குழந்தைகள் மீது அறிவிக்கப் படாத ஒரு யுத்தத்தையே ஏற்படுத்தி இருக்கிறது இந்த கல்வியும் சமூகமும்…

இங்கு எந்த குழந்தைக்கும் ஓடி ஆட அனுமதி இல்லை…காலில் இறுக்கிக் கட்டிய காலணிகளோடு…கழுத்தில் இறுக்கும் டைகளோடு..பொங்கி வழியும் புத்தகங்களோடு ..வானுயர்ந்த மதில்களை உடைய கல்விக் கூடம் என்ற சிறையில் அடைக்க  அவர்களை அழைத்து போக போலீஸ் வேன் போல ஒரு வேன்…

எல்லாக் குழந்தைகளின் உதடுகளிலும் புன்னகை இறந்து கிடக்கிறது…

ஏதாவது செய்து …இந்த  குழந்தைகளின் மகிழ்வை,பால்யத்தை மீட்டே ஆக வேண்டும்….

என் துயரத்திற்கான ஆறுதல்- அஜிதனின் வெற்றியும், மதிப்பெண்ணும்…

அந்த வகையில் எளிமையாய் படித்து, வலிமையாய் தேர்ந்த அஜிதனுக்கு என் வாழ்த்துக்களும் …பாரட்டுகளும்….

தங்கள் ..

மணி.செந்தில்குமார்,

வழக்கறிஞர்.

கும்பகோணம்.

***********************

அன்புள்ள ஜெயமோகன்
வணக்கம்.  அஜிதன் தேர்வு எனக்கு மிகுந்த மகிழ்ச்சியளiக்கிறது. பிள்ளைகளுக்கு நாம் அளiக்கும் சுதந்திரமும் அவர்களுக்குள் உருவாகும் கனவும் அவர்களை மேன்மக்களாக ஆக்கும் என தொடர்ந்து பலரிடமும் சொல்லிவந்த விஷயத்துக்கு ஒரு நிரூபண இளைஞனாக வளர்ந்து நிற்கும் அவனைப்பற்றி படிப்பதில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன்.  அவன் சராசரிச் சிறுவனாக இருக்கிறான் என்று நீங்கள் கவலைப்பட்ட தருணங்களiல் நான் சொன்ன சமாதான வார்த்தைகள் என் மன ஆழத்திலிருந்தே efசான்னவை. பலவிதமான சிரமங்களுக்கிடையே பாறைகளுக்கிடையே வளர்ந்த செடிபோல அவன் உயிர்ப்பாற்றலோடும் உறுதியோடும் உயர்ந்து எழுந்து நிற்பதை அறிந்து என் உள்ளம் நிறைவுகொள்கிறது. மதிப்பெண்கள் அளவுகோல் அல்ல என்றாலும் அப்படிப் பயன்படுத்தக் கற்பித்துவிட்ட உலகில், அதன் வழியிலேயே தன் திறமையை அவன் நிரூபித்துவிட்டான். இவ்வரிகளை எழுதும்போது ஆனந்தத்தில் என் கண்கள் பனிக்கின்றன. அவனுக்குக் கடவுளiன் ஆசிகள் பரிபூரணமாக கிடைக்கவேண்டும் என்று மனமார வேண்டிக்கொள்கிறேன். உடனே இந்தச் செய்தியை அமுதாவுக்குத் தொலைபேசியில் சொன்னேன். அவளும் இதைக்கேட்டு மிகவும் மகிழ்ந்தாள்.  தன் வாழ்த்துகளை அஜிதனுக்கும் உங்களுக்கும் சொல்லச்சொன்னாள். நேற்று பகலிலிருந்தே தேர்வு வெற்றிச் செய்திகளும் வாழ்த்துப்பரிமாற்றமும் தொடங்கிவிட்டன. வளவனூரில் என் நண்பன் பழனியின் மகன் 91 விழுக்காடு.  புதுச்சேரியில் இன்னொரு நண்பன் மகள் 95 விழுக்காடு. பிஞ்சுமனங்களiல் முளைவிட்டிருக்கும் கனவின் வேகத்தையும் தீவிரத்தையும் தன்னம்பிக்கையையும் கண்டு என் மனம் நிறைந்து தளும்புகிறது.
அன்புடன்
பாவண்ணன்
***************************

அன்புள்ள ஜெயமோகன்!

தங்கள் திருவளர்செல்வன் அஜயனின் தேர்வு முடிவுகள் குறித்த தங்கள் பதிவை வாசித்தேன். பல இடங்களில் அஜயனோடு என்னை ஒப்பிட்டுப் பார்த்துக் கொள்ள முடிந்தது.

சில பகுதிகளை வாசித்தபோது கண்களில் நீர்கோர்த்தது. பல இடங்களை வாசித்தபோது பிரமித்தேன். சில இடங்களில் வாய்விட்டு சிரித்தேன்.

நான் தேர்வில் வெற்றிவாய்ப்பை இழந்த கதையை என் வலையில் எழுதியிருந்தேன் (http://madippakkam.blogspot.com/2008/05/2.html). வெற்றிவாய்ப்பை இழந்ததை பெரிய விஷயமாக நான் கருதாதது போல எழுதியிருந்தாலும், அது ஏற்படுத்திய பாதிப்புகள் பல ஆண்டுகளுக்கு மனரீதியாக என்னை பின் தொடர்ந்தது.

நீங்கள் தங்கள் மகனுக்கு தந்த கட்டற்ற சுதந்திரம் தான் அவனை இன்று சாதிக்க வைத்திருக்கிறது என்று நம்புகிறேன்.

உங்களுக்கல்ல… அஜயனுக்கு மட்டுமே உரித்தான என்னுடைய அன்பு வாழ்த்துக்கள்!!!!

//என் அப்பா என் விருப்பத்தை மீறி என்னை வணிகவியல் பாடத்தில் சேர்த்தார். நான் அதில் ஒரு முறைகூட தேர்ச்சி பெறவில்லை, படிப்பை முடிக்கவும் இல்லை.//

என்னையும். நான் வெற்றிவாய்ப்பை இழக்க என் அப்பாவும் ஒரு காரணம்

அன்புடன்

கிருஷ்ணகுமார், சென்னை

*******************************

திரு ஜெமோ அவர்களுக்கு,

இலவசக்கொத்தனார் என்ற பெயரில் வலைப்பதிந்து வருகிறேன். பல்வேறு எழுத்துக்களையும் படித்து வருகிறேன்.  இன்று தாங்கள் எழுதிய தேர்வு என்ற பதிவினைப் படித்தேன். என்ன சொல்வது எனத் தெரியாமல் திகைத்து நிற்கின்றேன். ஒரு சிறிய குழந்தையின் வாழ்க்கையை எவ்வளவு எளிதாகப் பாழ் அடித்திருக்க முடியும். அவன் நலத்தையும் முன்னேற்றத்தையும் கருத்தில் கொள்ளாமல் தான் நினைத்தபடி அவன் நடக்கவில்லை என்பதற்காக அவனை மூளை வளர்ச்சி இல்லாதவன் எனப் பட்டம் கட்டும் சமூகம் என்ன ஒரு சமூகம். இவர்கள் புகட்டும் கல்வியால் என்ன அறிவு வரப் போகின்றது? என்றெல்லாம் என் மனம் கொதிக்கின்றது.

அவற்றை எல்லாம் தாங்கி அஜிதனின் மேல் நம்பிக்கை வைத்து இன்று அவன் நன்றாக வாழ்வில் பிரகாசிப்பதைப் பார்த்து பெருமிதத்தோடு இருக்கும் உங்களுக்கு என் வாழ்த்துகள். உங்களைப் போன்ற பெயர் பெற்ற எழுத்தாளர்களுக்கு கடிதம் எழுதி பழக்கமில்லை. ஆனாலும் இந்தப் பதிவினைப் படித்த பின் எழுதாமல் இருக்க முடியவில்லை. இந்த நள்ளிரவிலும் எழுதியே ஆக வேண்டும் என்ற உந்துதலில் எழுதுகிறேன். மீண்டும் என் வாழ்த்துகள்.

இப்படிக்கு

ராஜேஷ்

பிகு: என் மகனும் பள்ளியில் சரிவர எழுதுவதில்லை.


88888888888888

தேர்வு

தேர்வு:சில கடிதங்கள் 

கொட்டடிகள் வேதபாடங்கள்: ‘தேர்வு’ குறித்து…

முந்தைய கட்டுரைதேர்வு:சில கடிதங்கள்
அடுத்த கட்டுரைஉயிர்மை இந்த இதழில்…