பகுதி பதின்மூன்று : தனிப்புரவி
[ 4 ]
அதிகாலையில் எழுந்ததும் அகத்தில் முதலில் முளைப்பது முந்தைய நாளிரவு சிந்தனைசெய்த கடைசிச்சொற்றொடர்தான் என்பதை விதுரன் உணர்ந்திருந்தான். ஆகவே ஒவ்வொருநாளும் அலுவல்களை முடித்து கண்கள் மயங்குவதுவரை அவன் காவியத்தைத்தான் வாசிப்பது வழக்கம். பீடத்திலிருக்கும் சுவடிக்கட்டில் ஏதேனும் ஒன்றை எடுத்து விரித்து அதன் சொற்களுக்குள் நுழைவான். ஒவ்வொரு கவிதைவரியையும் ஐந்துமுறை அகத்தில் சொல்லிக்கொண்டே கடந்துசெல்வான். அன்றைய அல்லல்கள், மறுநாளைய கவலைகள் அனைத்தின்மேலும் அழுத்தமான மணல்போல அச்சொற்கள் படியும்.
பலசமயம் அல்லல்களும் கவலைகளும் ஊடுருவித் திமிறி மேலெழும். ஆனால் திரும்பத்திரும்பச் செய்வது அகத்தை அதற்குப்பழக்கப்படுத்த மிகச்சிறந்த வழி என அவன் கண்டிருந்தான். எதையும் மூன்றாம் முறையாகச் செய்யும்போது மனம் அதை கவனிக்கத் தொடங்குகிறது. நான்காம் முறை இன்னும். ஐந்தாம் முறை அதில் அமைகிறது. அந்த கட்டாயத்திலிருந்து மனம் தப்பவே முடியாது. வெல்லப்பட்ட மனம் போல இனிய சேவகன் வேறில்லை.
அன்றும் பராசரரின் தேவிஸ்தவம். நாட்கணக்காக அதைத்தான் வாசித்துக்கொண்டிருந்தான். எப்போது அதைநோக்கிச் சென்றது அவன் விருப்பம்? அவனிடம் நெடுநாட்களாக இருக்கும் சுவடி அது. சூதரான லோகாக்ஷன் அளித்தது. முதலிரு சர்க்கங்களுக்கு அப்பால் வாசிக்காமல் தூக்கி பேழைக்கு அடியில் போட்டது. பின்னர் நூறுமுறையேனும் விரல்கள் அதைத் தொட்டுச்சென்றிருக்கின்றன. ஆனால் ஒருகணம் தயங்கி பின் இன்னொருநாள் என தாண்டிச்சென்றுவிடும் அவை. ஆனால் அன்று அவன் அதை எடுத்தான். அப்போது அவன் கண்ணிலிருந்தது ஒரு வெண்ணிறப்பாதம்!
‘தேவி, உன் விழிகள் ஒளியாலானவை. உன் உதடுகள் இசையாலானவை. உன் மார்புகளோ அமுதத்தாலானவை. ஆனால் அடியவன் உன் பாதங்களையே பேரழகாக எண்ணுகிறேன்.என் புன்தலையை தன் வாசல்படியாகக் கொண்டு மிதித்து உள்நுழைபவை அல்லவா அவை?’ எங்கு வாசித்த வரி அது? எங்கே? தொட்டுத்தொட்டுச் சென்ற விரல் அதை எடுத்தது. அச்சுவடிகளைத் தொட்டதுமே அதை அறிந்துகொண்டான். சுவடிக்கட்டு உயிருள்ள மென்சருமப்பரப்பு என அதிர்ந்துகொண்டிருந்தது.
பராசரரின் தேவிஸ்தவம் அவரது இறுதிக்காலத்தில் இயற்றப்பட்டது என்பார்கள். அதை அவர் இயற்றியிருக்கவே வாய்ப்பில்லை என்றும் அவரது முதிரா இளவயது மாணவர்களில் ஒருவரே இயற்றியிருக்கவேண்டும் என்றும் சொல்லும் சூதர்களையும் அறிஞர்களையும் அவன் கண்டிருந்தான். அது ஒரு ஞானியாலோ அறிஞனாலோ இயற்றப்பட்டதல்ல. வெறும் பித்துமட்டுமேயானது. மொழியெனும் நெய்க்குள் உறையும் அனலைப் பற்றவைத்து பெருநெருப்பாக்கி எழுப்பும் பித்து அது. ‘தேவி, உன் பாதங்களால் மூன்றுபடிகளைக் கடந்து என்னுள் வந்தாய். அவை மும்மூர்த்திகளின் சென்னிகள்!’
பராசரரின் பித்து ஒரு விடுதலைக்களியாட்டம். நினைவறிந்த நாள்முதல் சுமந்திருந்த அனைத்து ஞானத்தையும் கழற்றி காற்றில் வீசிவிட்டு நிர்வாணமாக நடனமிடும் பெருங்களியாடல் அது. அதை அறிந்த எந்த நூல்களைக் கொண்டும் புரிந்துகொள்ளமுடியாது. அனைத்து நூல்களையும் கடந்துசெல்லும் ஒரு கணமேனும் வாய்த்தாகவேண்டும். ஒரு கணமேனும் பித்தனாகியிருக்கவேண்டும்.
விதுரன் அந்தச் சுவடிகளை நடுங்கும் கரத்தால் பிரித்து அச்சொற்களை கண்பூத்து வாசித்தான். காலம் ஒரு துளியாக முடிவின்மையின் நுனியில் ஊறிக் கனத்து நிற்கையில் அலகிலா இன்மையெனும் பெருங்கடலின் அலையிலியில் விஷ்ணு ஒரு ஆலிலைமேல் தன் காலின் கட்டைவிரல்நுனியைத் தானே சுவைத்துக்கொண்டு விழிமயங்கி துயின்றிருந்தார். குழந்தைக்குள் எழுந்த பசி கட்டைவிரலை உறிஞ்சிச் சுவைக்கச்செய்தது. தன்னைத் தானருந்துதலின் எல்லையை உணர்ந்த குழந்தை விடாய்கொண்டு கதறியழுதது.
மேல்கீழ்திசையிலா வெளியில் செவியெனெ ஆன்மாவென ஏதுமில்லையென்பதனால் குரலென்றும் ஒலியென்றும் பொருளென்றும் ஏதுமிருக்கவில்லை. அவ்வின்மையின் மையத்திலிருந்து குழந்தை கண்டடைந்த சொல் பிறந்து அதன் செவிகளாலேயே கேட்கப்பட்டது. ‘அம்மா!’ என்றது குழந்தை. அக்குரலெழுந்ததுமே அக்குரலால் திரட்டப்பட்டு அங்கிங்கெங்குமிலாதிருந்த அது அதுவாகிய ஒன்றாகியது. அம்மா என அழைக்கப்பட்டதனால் அது கனிந்து அன்னையாகியது. ‘ஆம் மகனே’ என்றது பெருங்கருணை. ‘இவையனைத்தும் நானே. நானன்றி முழுமுதன்மையானதென ஏதுமில்லை.’
சிலிர்த்துக் கண்கலங்கி கண்களைமூடிக்கொண்டான். சொற்களா அவை? சொற்கள் அப்படி நிகழுமா என்ன? மானுடன் உச்சரிப்பவை மானுடன் அறிந்துகொள்பவை அந்த முழுமையைக் கொள்ளுமா என்ன? ஒரு நா அதைச்சொல்லிவிடுமா என்ன? ஒரு மனம் அதைத் திரட்டிவிடுமா என்ன? ‘சர்வகல்விதமேவாஹம்! நான்யதஸ்தி சனாதனம்!’ நுரைக்குமிழ்களில் நிறையும் வானம் போல ஒன்றுநூறாகி நூறு பல்லாயிரமாகிப் பெருகியது அவ்வரி. சர்வகல்விதமேவாஹம்! நானே இவ்வனைத்தும். சர்வகல்விதமேவாஹம்! நானே நானே நானே! சர்வகல்விதமேவாஹம். ஆம் நான் மட்டுமே! ஆம் நான் மட்டுமே! சர்வகல்விதமேவாஹம்! நானன்றி பிறிதில்லை. சர்வகல்விதமேவாஹம்…
ஆப்தமந்திரம் விழிதிறக்கும் கணமென அதை அவன் அறிந்தான். இதுதான் அக்கணம். முடிவிலிச்சுருளாக இருள்வடிவம் கொண்டு கிடந்த அந்தப் பெருநாகம் விரிந்து எழுந்து படம்கொண்டு விழிகொண்டு நாகொண்டு விஷப்பல் கொண்டு இதோ என்னைத் தீண்டிவிட்டிருக்கிறது. என் அகமெல்லாம் அதன் நீலம். என் குருதி என் தசைகள் என் எலும்பு எங்கும் அதன் நீலம். என் எண்ணங்கள் என் கனவுகள் என் ஆன்மாவெங்கும் அதன் இருள்விஷக்கருநீலப்பேரொளிவெள்ளம்! ஆம். இதோ இங்கிருக்கிறேன். இதுவன்றி ஏதுமின்றி.. நீ இருக்கிறாய் நானன்றி வேறின்றி. நீயன்றி வேறில்லாமல் நானிருக்கும் இக்கணமென்ன என்று அறிவாயா? நீ அறியாதது ஏதுமில்லையல்லவா? சர்வகல்விதமேவாஹம். சர்வகல்விதமேவாஹம். சர்வகல்விதமேவாஹம். நீ மட்டுமே. நீ! நீ! நீ!
அம்மா என்னைப்பார் என்றது குழந்தை. அவள் விழிகள் திரண்டுவந்தன. என் மீது கருணைகொள் தாயே என்றது குழந்தை. அவள் சொற்கள் இனித்து மலர்ந்தன. அன்னையே என்னைத்தீண்டு என்றது குழந்தை. என்னை அள்ளி அணைத்துக்கொள் ஈன்றவளே என்றது. என்னை உன் மென்முலைகள் மீது அணைத்துக்கொள். என்னை உன் செந்நிற உதடுகளால் முத்தமிடு. என்னை உன் மடிச்சூட்டிலமரச்செய்து உச்சியை முகர்ந்துபார். என்னை சிறுகுருத்து நுனியில் உன் மெல்விரலால் தீண்டிச்சிரித்து என்னை ஆணாக்கு. இப்புடவியை நான் என் வலுவானதொடைகளில் இருந்து பிறப்பிக்கிறேன். கோடானுகோடி ஆதித்யர்களை. அவர்களைச் சுற்றிவரும் முடிவிலா கோள்களை. அக்கோள்களில் நிறையும் உயிர்க்குலங்களை. அவ்வுயிர்களின் எண்ணப்பெருவெளிகளை. அப்பெருவெளி குவிந்தறியும் பீடத்திலேறி நிற்கும் உன் பொற்பாதங்களை!
சங்குசக்கரகதாபத்ம சோபிதம்! பராசரரின் சொற்கள் புரவிக்கூட்டமென பாய்ந்தோடின. பதினாறு பெருந்தடக்கைகளில் ஒளிவிடும் படைக்கலன்களுடன் அன்னை தோன்றினாள். ரதி, பூதி, புத்தி, மதி, கீர்த்தி, திருதி, ஸ்மிருதி, சிரத்தை, மேதா, ஸ்வாதா, ஸ்வாகா, க்ஷுதா, நித்ரா, தயா, கதி, துஷ்டி, புஷ்டி, க்ஷமா, லஜ்ஜா, ஜ்ரும்பா, தந்திரி என்னும் இருபத்தொரு சக்திரூபங்கள் விண்ணிலெழுந்தன. அவை இணைந்து ஒன்றாகி அன்னையாகின. நகையொலி எழுப்பிக் குனிந்து அம்மகவை அள்ளி எடுத்து முலைக்குவைமேல் அணைத்துக்கொண்டன.
பராசரரின் சொற்கள் வழியாக துயிலணைவது ஆன்மாவின் அனைத்து கங்குகளுக்கும் மேல் குளிர்நீரைக் கொட்டி அணைப்பது போல. அன்னையின் சேலைநுனியைச் சுழற்றி வாயிலிட்டுக்கொண்டு தூங்கும் குழந்தையின் அடைக்கலம்போல. முதல்நாள் இரவில் சுருதை துயிலத்தொடங்கியபின் விதுரன் மெல்ல எழுந்து வந்து சுவடியைத் தொட்டான். அவள் மெல்ல புரண்டு ‘ம்?’ என்றாள். மெலிந்த மாந்தளிர்த்தோள்கள். சிறிய கருங்கண் முலைகள். மலர்ச்சருகுபோன்ற சிறிய உதடுகள். முத்தமிடுகையில் இணைப்போரை மறுத்துச் சரணடைபவை. “நான் சற்று வாசித்துக்கொள்கிறேன். நெடுநாள் வழக்கம்” என்றான். அவள் தலையசைத்தாள்.
அவன் சிலசொற்களை வாசித்தபின் நிமிர்ந்து நோக்கினான். அவள் தன் நீண்ட கூர்விழிகளால் பார்த்துக்கொண்டே கிடந்தாள். அவன் சுவடிகளை மூடிக்கொண்டான். “என்ன?” என்றான். அவள் இல்லை என தலையசைத்தாள். மேலுமிரு வரிகளை வாசித்தபின் அவன் சுவடிக்கட்டைச் சுருட்டி மூடிக்கொண்டு எழுந்து வந்து அவளருகே மஞ்சத்தில் படுத்துக்கொண்டான். “விளக்கொளி உனக்கு கண்களை உறுத்துகிறது போலும்…” என்றபின் அவள் தோளைத் தொட்டு “உறங்கு” என்றான்.
அவள் பெருமூச்சுடன் திரும்பிப் படுத்தாள். அவன் அச்சொற்களையே நினைத்துக்கொண்டிருந்தான். ‘தேவி, உன் பாதங்கள் பட்ட மண் பேறுபெற்றது. அதில் மலர்கள் விரிகின்றன. உன் பாதங்கள் படாத மண்ணோ பெரும்பேறு பெற்றது. அதில் கனவுகள் மலர்கின்றன.’ அவன் பெருமூச்சுவிட்ட ஒலிகேட்டு தோள் மெல்ல அசைவதைக் கண்டான். அவளை அழைத்து ஏதாவது சொல்லவேண்டுமென எண்ணினான். ஆனால் அப்போது அவளுக்கான ஒரு சொல்லையும் உள்ளிருந்து எடுக்கமுடியவில்லை.
அவளுடைய நீள்மூச்சு ஒலிக்கத்தொடங்கியபின் அவன் மெல்ல எழுந்து அறைக்கதவைத் திறந்து மறுபக்கம் இருந்த சுவடியறைக்குள் சென்றான். அங்கே பெரிய ஆமாடப்பெட்டியைத் திறந்து உள்ளே சுவடிகளுக்கு நடுவே இருந்த சிறு தந்தப்பேழையை எடுத்து அதைத்திறந்தான். அதற்குள் அஸ்வதந்தம் என்னும் அந்த வைரக்கல் இருந்தது. அறையிருளில் அது ஒரு கூழாங்கல்போலத்தான் தெரிந்தது. ஆனால் சற்றுநேரத்தில் திறந்தகதவுக்கு அப்பாலிருந்த நெய்விளக்கின் ஒளியை வாங்கி சுடர்விடத்தொடங்கியது. காமத்தால் சிவந்த விழிகள் போல.
அவன் அதை மீண்டும் மூடிவைத்துவிட்டு எழுந்து சென்று சாளரத்தருகே நின்றான். வெளியே நகரத்தெருக்கள் மீன்நெய்ப்பந்தங்கள் எரியும் ஒளியுடன் ஒழிந்துகிடந்தன. அவற்றில் வழிந்தோடுவதென்ன? நினைவுகளின் சரடுகள். காலைமுதல் அங்கே மிதித்துச்சென்ற பாதச்சுவடுகளை காற்று மெல்லமெல்ல வருடி அழித்துக்கொண்டிருந்தது. இன்னும் சற்றுநேரத்தில் பனியில் குளிர்ந்து புத்தம்புதியவைபோல அவை வெயிலில் விழித்தெழும்.
திரும்பியபோது அரையிருளில் அவன் அன்னையின் நிழலுருவைக் கண்டான். அவள் அந்த வடக்குமூலை உப்பரிகையில் அமர்ந்து வெளியே பார்த்துக்கொண்டிருந்தாள். அவளுடைய கூந்தலிழைகள் காதருகே சிதறிப்பரந்து நின்றன. கண்கள் இரு சிறு வைரக்கற்கள் போல வெளியே விரிந்த பந்தங்களின் ஒளியை மின்னிக்காட்டிக்கொண்டிருந்தன.
மறுநாள் காலையில் கண்விழித்தெழுந்தபோது விதுரன் புன்னகையுடன் தன் அகம் இருப்பதை உணர்ந்தான். அந்த வைரத்தைப்பற்றிய எண்ணம்தான் என்று அறிந்ததும் எழுந்து கைகளை விரித்துப் பார்த்தபின் தன்னருகே சுருதை இருந்த இடத்தைப்பார்த்தான். அவள் துயின்ற தடம் மெத்தையில் சிறிய குழியாகத் தெரிந்தது. அதை மெல்ல கைகளால் வருடினான். புன்னகையுடன் அந்தக்குழியை நிரப்பிய அவளுடைய பாவனையுடலை கைகளால் வருடினான்.
உணர்வு தீண்ட திரும்பியபோது அவள் வாயிலில் நின்றிருந்தாள். குளித்த ஈரக்கூந்தல் மெல்லிய தோள்மேல் பரவியிருக்க சுரிகுழல்கள் காதோரம் நீர்த்துளி சொட்டி நிற்க பனிபடர்ந்த வாழைப்பூமடல்போன்ற முகத்துடன் விரிந்த விழிகளுடன். விதுரன் புன்னகைசெய்து “நீ இருக்கிறாயா என்று பார்த்தேன்” என்றான். அவள் சட்டென்று விம்மி கைகளில் முகம்பொத்திக்கொண்டாள். அவன் திகைத்தபின் எழுந்து சென்று அவள் தோள்களைக் கைகளால் பற்றி அவள் முகம்மூடிய கைகளை விலக்கி குனிந்து அவள் முகத்தை நோக்கி “என்ன இது?” என்றான்.
அவள் அழுதபடி அவன் மார்பில் முகம்புதைத்துக்கொண்டாள். அவளுடைய மெல்லிய கழுத்து மயிர்சிலிர்த்து அதிர்வதை நோக்கியபடி அவள் பின்தலையையும் நீண்ட கூந்தலையும் வருடியபடி “என்ன இது?” என்று பொருளில்லாமல் கேட்டுக்கொண்டிருந்தான். அவள் நிமிர்ந்து கண்களைத் துடைத்து அழுகையால் சற்றே வீங்கிய கீழிமையுடன் “எனக்கும் பீடமிருக்கிறது அல்லவா?” என்றாள். “எங்கே?” என்றான் அவன் படபடப்புடன். “இந்த இடம்போதும்… எனக்கு எப்போதுமே அரண்மனைகளில் மிகச்சிறிய இடம்தான்… அவ்வளவு போதும்.”
“என்ன சொல்கிறாய்?” என்றான் விதுரன். “இனிமேல் சொல்லமாட்டேன். ஒருபோதும்” என்றபின் புன்னகைசெய்தாள். அவளுடைய பற்கள் எத்தனை சீரானவை என அவன் நினைத்துக்கொண்டான். “தங்களை எழுப்பவேண்டுமென்று என்னிடம் சொன்னார்கள். தங்கள் அன்றாடப்பணிகள் என்னால் தாமதமாகிவிடும் என்று கிரிஜை சொன்னாள்” என்றாள். விதுரன் பெருமூச்சுவிட்டு “நான் உன்னிடம் என்ன சொல்ல? ஒன்றுமட்டும் சொல்கிறேன். இவ்வாழ்நாளில் ஒருபோதும் உன் நெஞ்சு வருந்தும் எதையும் நான் அறிந்து செய்யமாட்டேன்” என்றான்.
ஒவ்வொருநாளும் அந்த மணியை எண்ணிக்கொண்டு துயின்று எண்ணிக்கொண்டு விழிப்பது வழக்கமாயிற்று. முதலில் இரவில் அதை எடுத்துப்பார்த்துக்கொண்டிருந்தான். பின்னர் அதை நினைப்பதே போதுமென்று மாறியது. அவன் நினைவில் அந்த மணி வளர்ந்து பெருகியது. கண்களைமூடிக்கொண்டு அதைப் பார்த்தபடியே படுத்திருக்க முடியுமென்றாயிற்று. ‘யா தேவி, சர்வபூதேஷு சக்தி ரூபேண சம்ஸ்திதா’ தொன்மையான வணக்கம். அனைத்துலகிலும் ஆற்றல்வடிவாக நிறைந்தவளே தேவி!
பாண்டுவும் தேவியரும் காட்டுக்குள் சென்று முனிவர்களைக் கண்டுகொண்டார்கள் என்றும் அங்கே தவக்குடிலமைத்துத் தங்கியிருக்கிறார்கள் என்றும் ஒற்றர்கள் சொன்னார்கள். ஒவ்வொருநாளும் திருதராஷ்டிரன் அவனை அழைத்து “எப்படி இருக்கிறான்? என்ன செய்கிறான்? எப்போது அவன் திரும்புவான்?” என்று கேட்டுக்கொண்டிருந்தான். “அரசே, அவரது கண்களுக்கும் சருமத்துக்கும் இமயமலைச்சாரலின் குளிர்க்காடுகளன்றி வேறெவையும் உகந்தவையல்ல. அங்கே அவர் நிறைவாகவே இருக்கிறார்” என்றான் விதுரன்.
கண்களில் கண்ணீருடன் “அவன் இங்கே அருகே எங்கோ இருக்கிறான் என்றால் என்னால் அவனைச் சந்திக்காமலிருக்கமுடியும் விதுரா… அத்தனை தொலைவுக்கு அப்பால் அவன் இருக்கையில் நான் அவனையே எண்ணிக்கொண்டிருக்கிறேன்” என்றான் திருதராஷ்டிரன். “அவர் திரும்பி வரும்போது வரட்டும் அரசே… அவரது மகிழ்வையல்லவா நாம் முதன்மையாகக் கருதவேண்டும்?” என்று விதுரன் சொன்னான். “ஆம், நானும் இமயமலைச்சாரலுக்குச் சென்றாலென்ன?” என்றான் திருதராஷ்டிரன். “தங்களால் இமயத்தைப் பார்க்கமுடியாதே!”
திருதராஷ்டிரன் பெருமூச்சுடன் “ஆம்” என்றான். தன்னருகே அமர்ந்திருந்த சஞ்சயனின் தோள்களைத் தொட்டு “இவன் சொற்கள் வழியாக நான் அந்த வனத்தைக் காண்கிறேன். அங்கே உயர்ந்த தேவதாருக்களின் அடியில் என் இளையோன் கட்டியிருக்கும் குடிலை. அங்கே விளையாடும் மான்களையும் மயில்களையும்…” விதுரன் சஞ்சயனை நோக்கி புன்னகைசெய்தான். “நான் அனைத்தையும் காண்கிறேன் அமைச்சரே. என் விழிகள் இரண்டு. ஒன்று காவியத்தில்” என்றான் சஞ்சயன்.
மிகவிரைவிலேயே அனைத்தும் தங்கள் பழகிய பாதையைக் கண்டடைந்தன. திருதராஷ்டிரன் இசையிலும் சத்யவதி அமைச்சுப் பணிகளிலும் நகரம் அதன் அன்றாடக் கொண்டாட்டங்களிலும் மூழ்கினர். பீஷ்மர் ஒருநாள் காலையில் வழக்கம்போல அவரது மாணவன் ஹரிசேனனிடம் சொல்லிவிட்டு காட்டுக்குச் சென்றுவிட்டார். சுதுத்ரியின் கரையில் எங்கோ அவர் இருப்பதாக ஒற்றர்கள் சொன்னார்கள்.
சகுனி மட்டும்தான் நாண்தளராத வில் போன்றிருந்தான். ஒவ்வொருநாளும் ஒவ்வொரு கணமும் தன் உச்சநிலையிலேயே அவனிருப்பதுபோலத் தோன்றியது. அதிகாலையில் பீஷ்மரின் ஆயுதசாலைக்குச் சென்று காலைமுதிர்வது வரை அவன் வில்வித்தை பயின்றான். மாலையில் தன் படைகளை முழுமையாக நேரில் பார்த்து தளகர்த்தர்களிடம் பேசியபின் மீண்டும் ஆயுதசாலைக்குச் சென்று இரவு கனக்கும்வரை பயின்றான். அவன் சுவடிகளை வாசித்துக்கொண்டும் தனக்குத்தானே பகடையாடியும் இரவெல்லாம் விழித்திருப்பதாகச் சொன்னார்கள் ஒற்றர்கள். “அவர் துயில்வதேயில்லை அமைச்சரே. அங்குள்ள நம் ஒற்றர்கள் அவர் துயில்வதை ஒருமுறைகூடக் கண்டதில்லை.”
அஸ்தினபுரியின் கோட்டைமேல் நின்று வடக்கிலும் தெற்கிலும் குறுங்காடுகளை அழித்துக்கொண்டு காந்தாரப்படைகளின் குடியிருப்புகள் நீண்டு விரிந்திருப்பதைக் கண்டபோது விதுரன் பெருமூச்சுவிட்டான். நகரம் முழுமையாகவே சூழப்பட்டுவிட்டது. எக்கணமும் அவ்விருபடைப்பிரிவுகளும் பெருகி இரு வாயில் வழியாகவும் நகருக்குள் நுழைந்துவிடமுடியும். “கலிங்கத்துச் சித்திரவதைமுறை ஒன்று உண்டு பேரரசி. கைகள் பிணைத்து பீடத்திலமர்த்தப்பட்ட குற்றவாளியின் இருகாதுகளிலும் இரு கூரிய ஊசிகளை செலுத்தி குத்தாமல் நிறுத்திவிடுவார்கள். அவன் தலையை சற்றேனும் அசைத்தால் காதுக்குள் ஊசி புகுந்துவிடும். அஸ்தினபுரியின் நிலை அதுதான்.” சத்யவதி அதைக்கேட்டு பெருமூச்சுவிட்டாள்.
தெற்குவாயிலுக்கு அப்பால் இருபக்கமும் காந்தாரர்களின் குடில்கள் செறிந்த குடியிருப்புகளைத் தாண்டிச்சென்ற செம்மண்பாதை நீத்தார்காடு நோக்கிச் சென்றது. அங்கிருந்த பித்ருதீர்த்தம் என்னும் நீள்வட்டக் குளத்தைச்சுற்றி அடர்ந்த சோலையாக இருந்தது அது. அங்கேதான் அரசகுலத்தவர் சிதையேற்றப்பட்டார்கள். அதற்கப்பால் பன்னிரண்டு சிறிய சோலைகளாக அஸ்தினபுரியின் அனைத்துக்குடிகளுக்கும் தனித்தனியாக இடுகாடுகளும் சுடுகாடுகளும் இருந்தன. அஸ்தினபுரியில் வாழ்ந்தவர்களில் விஸ்வகர்மர்கள் மட்டுமே நீத்தாரை மண்ணடக்கம் செய்தனர்.
விதுரன் கோட்டைமேல் நின்று அந்தச்சோலையைப் பார்த்தபின் கீழே இறங்கிவந்தான். அங்கே நின்ற வீரன் அவனை வணங்கியதும் அவனுடைய புரவியைக் கைகாட்டி வாங்கி அதில் ஏறிக்கொண்டான். பெருநடையாக காந்தாரக்குடியிருப்புகளைக் கடந்தான். காந்தாரப்படைகள் அதற்குள் மெல்ல அஸ்தினபுரியின் சோம்பல் வாழ்க்கைக்குள் வந்துவிட்டிருப்பதை விதுரன் கண்டான். அவர்கள் காடுகளில் வேட்டையாடிப்பிடித்த முயல்களையும் உடும்புகளையும் பாம்புகளையும்கூட சுட்டுத் தின்றுகொண்டிருந்தனர். பகலிலேயே ஈச்சங்கள் அருந்திக்கொண்டிருந்தனர். சிலர் மட்டுமே மண்ணில் வேலைசெய்தனர்.
அப்பால் சோலைக்குச் செல்லும்பாதையில் சற்று தூரம் சென்றதுமே விதுரன் அங்கிருந்த ஓசையின்மையை உணர்ந்தான். பறவைகளும் காற்றும் ஓசையிட்டன. நெடுந்தொலைவில் காந்தாரர்களின் முழக்கம் மெல்லக்கேட்டது. ஆயினும் அங்கு ஓசையின்மையே மூடியிருந்தது. மதியவெயிலில் சற்றே வாடிய மரங்களின் இலைகள் காற்றில் சிலுசிலுத்தன. வெயிலுக்காக கிளைகளுக்குள் ஒண்டிக்கொண்ட பறவைகள் அவ்வப்போது கலைந்து எழுந்து வானில் சுழன்று திரும்ப அமைந்தன. ஒரு முயல் மண்சாலைக்குக் குறுக்காகப் பாய்ந்துசென்றது.
அரசர்களின் சுடுகாட்டில் மன்னர்களின் சிதைகளிருந்த இடத்தில் கட்டப்பட்ட சிற்றாலயங்களும் கருங்கல்லால் ஆன பலிபீடங்களும் சருகுகள் மூடி நிழலில் குளிர்ந்துகிடந்தன. சந்தனுவின் பீடம்மீது ஒரு பச்சோந்தி கால்களைப் பரப்பி வாலைவிடைத்துத் தூக்கி விரைந்தோடி நின்று தலையை ஆட்டியபடி நிறம் மாற்றிக்கொள்ளத் தொடங்கியது. பிரதீபரின் பீடம்மீது சிதல்புற்றுகளின் செந்நிறமான வேர்ச்சரடுகள் எழுந்து பரவத்தொடங்கியிருந்தன. காற்று கடந்து வந்தபோது சருகுகள் ஓசையுடன் இடம் மாறின.
அப்பால் நிதிவைசியர்களின் சுடுகாடு. அதற்கப்பால் கூலவாணிகர்களின் சுடுகாட்டிலிருந்து புகை எழுந்தது. அங்கே எவரோ நிற்பதைப்போலிருந்தது. விதுரன் குதிரையை மெல்லத்தட்டி மரங்களின் வேர்களைக் கடந்து சென்று அதற்குள் நுழைந்தான். முந்தைய நாள் வைத்த சிதை வெந்து தணிந்து மெல்லிய நீலப்புகையை மட்டும் விட்டுக்கொண்டிருந்தது. அதனருகே ஒருவன் நின்று ஏதோ செய்துகொண்டிருந்தான். சாம்பல் படர்ந்த மெல்லிய முதுகில் சடைக்கற்றைகள் சரிந்துகிடந்தன. பெருச்சாளித்தோலால் ஆன கோவணம் அணிந்திருந்தான்.
அது வெட்டியானல்ல என்று விதுரன் உணர்ந்தான். சற்றே தயங்கினான். புரவியின் ஒலிகேட்டு அவர் திரும்பினார். முகமும் உடம்பும் வெண்நீறால் மூடப்பட்டிருந்தன. தாடியும் சடைவிழுதுகளாக மார்பில் கிடந்தது. “வருக அமைச்சரே” என்றார் அவர் கரியபற்களைக் காட்டிச் சிரித்தபடி. “அஸ்தினபுரியின் மாபெரும் சமையலறைக்கு வருக!” குதிரையில் இருந்து இறங்கி மண்டியிட்டு “வணங்குகிறேன் மாமுனிவரே” என்றான் விதுரன். “நல்லூழுடன் இரு!” என்று அவர் மெலிந்த கரிய கைகளால் வாழ்த்தினார்.
“தாங்கள் சார்வாகர் என நினைக்கிறேன்” என்றான் விதுரன். உடனே உள்ளுணர்வு எழ “தாங்கள் மூத்தவர் மன்னராகக்கூடாது என்றீர்கள் என அறிந்தேன்” என்றான். “ஆம்… நீ என்னை சபைக்கு அழைத்தாய். காணிக்கைப்பொருட்களுடன் யக்ஞசர்மர் என்னைக் காணவந்தார்.” உரக்கச்சிரித்து “நான் அவரிடம் சொன்னேன் அப்பொருட்களை அவரது கையில் இருந்து பெற்றுக்கொள்ளமாட்டேன் என்று. அவர் வாயில் இருந்து நானே அதை எடுத்துக்கொள்வேன்…” என்றார். மீண்டும் சிரித்து “அதைப்பெறுவதற்கொரு முறைமை உள்ளது. அவர் இந்தச்சிதையில் பிணமாகக் கிடக்கவேண்டும் முதலில்” என்றார்.
“தாங்கள் வந்திருக்கலாம்” என்றான் விதுரன். “சிறுவனே, நீ என்னை ஏன் வரச்சொன்னாய் என்று அறியமுடியாதவனா நான்? திருதராஷ்டிரன் முடிசூட வைதிக பிராமணர்களின் எதிர்ப்பிருக்கக்கூடும் என்று நீ எண்ணினாய். நான் வந்து எதிர்த்தால் என்னை எதிர்ப்பதற்காக அவர்கள் திருதராஷ்டிரனை ஆதரிப்பார்கள் என்று கணக்கிட்டாய்… அல்லவா?” விதுரன் புன்னகையுடன் “ஆம்” என்றான். “உங்கள் வரவே என் வேலையை எளிதாக்கிவிடுமென எண்ணினேன்.”
“நான் அந்தக்கணக்குக்காக வராமலிருப்பவன் அல்ல” என்றார் சார்வாகன். “முந்தையநாள் மாலையிலேயே நான் என்ன நிகழுமென்பதை அறிந்துவிட்டேன். இங்கே எலிகள் அஞ்சி வளைக்குள் சென்றன. ஊர்வனவெல்லாம் நிலையழிந்தன. நிலம்பிளக்கப்போவதை உணர்ந்தேன். அதுவே போதுமானதென்று உய்த்துக்கொண்டேன்.” சிரித்தபடி அவன் தோளில் கையை வைத்து “சதுரங்கம் ஆர்வமூட்டும் ஆட்டம். அதிலுள்ள மிகப்பெரிய குறை என்னவென்றால் நாம் தோற்பதை நம்மால் விரும்பமுடியாது என்பதுதான்” என்றார்.
“தோற்க விழைபவனால் ஆடமுடியுமா என்ன?” என்றான் விதுரன். அருகே கல்லில் அமர்ந்தபடி “இளைஞனே, ஆடு. எவரும் உன்னை வெல்லமுடியாதென்பதற்காக அல்ல. உன்னை வெல்லும் தகுதிகொண்டவன் எவன் என்று அறிவதற்காக மட்டும்” என்றார். விதுரன் தலைவணங்கினான். அவர் குனிந்து அந்த சிதைக்குழியில் இருந்து எதையோ குச்சியால் தோண்டி மேலே எடுத்தார். அது ஒரு பெருச்சாளி. தீயில் வெந்த கிழங்குபோல தோலுரிந்து வெடித்து ஊன் உருகி சொட்டிக்கொண்டிருந்தது அது. “இது இன்று என் உணவு… பாவம் வாழ்நாளெல்லாம் தேடித்தேடி இது உணவுண்டது எனக்காகத்தான்.”
விதுரன் தன் மனமறுப்பை முகத்தில் காட்டாமலிருக்க முயன்றபடி “நாம் விதியை எப்படி அறியமுடியும்? நம் சிற்றறிவில் குடிகொள்ளும் தெய்வங்களின் ஆணையை செய்துகொண்டிருக்கிறோம்…” என்றான். “அப்படிச் சொல்வது எளிது… அனைவரும் அதையே சொல்கிறார்கள்… அதை நம்பவும் கடைப்பிடிக்கவும் முடிந்தால் நன்று” என்றார் சார்வாகன். “உணவைப் பகிர்ந்துண்ணவேண்டும்… நீ விரும்பமாட்டாய் என நினைக்கிறேன்.” விதுரன் “ஆம்” என்றான். “நன்று” என்று சொன்னபின் அவர் அதை சிறிய குச்சியால் உடைத்து வெம்மை ஆறுவதற்காகப் பரப்பினார்.
“நீங்கள் ஏன் நல்லுணவை அருந்தலாகாது?” என்றான் விதுரன். “நல்லுணவென்பது என்ன?” என்றார் சார்வாகன். “உடலுக்கு நலம்பயப்பது, சுவையானது” என்று விதுரன் சொன்னான். “இது என் உடலுக்கு நலம் பயக்கிறது. நான் இதை உண்ணத்தொடங்கி ஐம்பதாண்டுகளாகின்றன. என் வயது எண்பத்தேழு” என்றார் சார்வாகன். “சுவை என்றால் அது வெறும் மனப்பழக்கம்” என்றபடி அதை அவர் உண்ணத்தொடங்கினார். “எதற்காக நீங்கள் இங்கே இப்படி வாழவேண்டும்?” என்றான் விதுரன்.
“இப்படியும் வாழலாமென்பதற்காக” என்று அவர் சிரித்தார். “அங்கே நடந்துகொண்டிருக்கும் நாடகத்தில் நான் இல்லை என்பதற்காக.” அவன் அவர் தவிர்க்கிறார் என நினைத்தான். “நானும் அங்குதான் இருந்தேன். உங்கள் நூல்களைக் கற்றேன். உங்கள் நெறிகளைப் பயின்றேன். உங்கள் வழிகளில் நடந்தேன். அப்போது அறிந்தேன், உண்மை என ஒன்று இருந்தால் அது அனைவரும் அறியக்கூடியதாக இருக்காது என்று. அவ்வாறு இருந்திருந்தால் அனைவருமே அதை அறிந்திருப்பார்கள்.”
“உண்மை என்பது என்ன? எப்போதும் அது இருந்துகொண்டிருக்கிறது. அது பொய்யால் மறைக்கப்பட்டிருக்கிறது. அந்தப்பொய்யை உருவாக்குவது எது? எது இந்நகரை, இந்த அரசை, இந்த வாழ்க்கையை, இந்த தெய்வங்களை உருவாக்குகிறதோ அதுதான். மானுடன் தனியானவன். ஒவ்வொருநாளும் பேரியற்கைமுன் தன்னந்தனியாக நிற்கக் கடமைப்பட்டவன். அந்தத் தனிமையை அவன் அஞ்சத் தொடங்கியபோதுதான் இவையனைத்தும் உருவாயின” அவர் நகரை சுட்டிக்காட்டினார். நெடுந்தொலைவில் ஒரு வண்டுபோல அது ரீங்கரித்துக்கொண்டிருந்தது.
“நான் அதிலிருந்து விலக விரும்பினேன். இன்னொருமனிதனின் துணையில்லாமல் வாழவேண்டுமென எண்ணி காட்டுக்குச் சென்றேன். ஒவ்வொருநாளும் என் உணவை என் கைகளால் தேடிக்கொண்டேன். வான்கீழே மண்மீது நின்றேன். என்னுள் உறைந்த ஒவ்வொன்றையும் அழித்தேன். இன்னொருவனில்லாமல் என் அகம் நின்றபோதே நானறிந்தேன் எது உண்மை என. அதுவே நானறிந்த முழு உண்மை.”
“அதை நான் காமம் என்கிறேன். விருப்பு. இருத்தலுக்கும் இன்பத்துக்குமான விழைவு. அதுவன்றி அனைத்தும் மானுடனின் தனிமையாலும் அச்சத்தாலும் உருவானவை. எவன் திரும்பிநின்று தன் விழைவை கண்ணுடன் கண்கோர்த்து நோக்கும் வல்லமைகொண்டிருக்கிறானோ அவனே உண்மையை நோக்கி முதல் அடி எடுத்துவைக்கிறான். கருணை என்றும் கடவுளென்றும் அன்பென்றும் அறமென்றும் ஆயிரம் சொற்களால் அவன் திரட்டிவைத்திருக்கும் அனைத்தும் உண்மைமேல் கவிந்திருக்கும் மாசு மட்டுமே.”
“அழிவற்ற சார்வாக ஞானம் இருமுனைகொண்ட கூர்வாள். அது பிறரது பொய்மையை வெட்டும். தன்னுடைய பொய்மையையும் வெட்டும். அதை ஏந்தி இந்த மக்கள் நடுவே வந்து நிற்கிறேன். என் இலக்கு ஒன்றே. என் மெய்ஞானத்தை இங்கே இயன்றவரை சொல்வது. அதற்காகவே இங்கே இருக்கிறேன். இடுகாடும் காடே” என்றார் சார்வாகன். “அனைத்துத் துயரங்களுக்கும் காரணம் விழைவின் மேல் மானுடன் பூசிக்கொள்ளும் மாசுகள்தான். அதைக்களைந்து உண்மையைக் காண்பதே ஞானம். அதுவே மகிழ்வுக்கான வழி. உண்மையின் மகிழ்வே வீடுபேறு எனப்படும்.”
விதுரன் பெருமூச்சுடன் “தங்கள் அறவுரை என்னை வழிநடத்தட்டும் உத்தமரே” என வணங்கி எழுந்தான். “உன் விழைவை கண் கூர்ந்து பார்… அஞ்சாதே” என்றார் சார்வாகன். “மானுடனின் மாசுகளனைத்தும் சொற்களென அவனுடன் இருக்கின்றன. சொற்களில் சிக்கிக்கொண்டவன் மீள்வதேயில்லை. அழகிய சொற்கள் அழகியபொய்கள். மகத்தான சொற்கள் மகத்தான பொய்கள். ஞானம் எப்போதும் கரும்பாறைகளைப்போல பெரும்பருவுருவம் கொண்டது. இங்கு இப்போது இதோ என நிற்பது. மானுடமாசுகளோ மேகம் போன்றவை. உருமயங்குபவை. அவை வெண்ணொளியும் பொன்னொளியும் கொள்ளலாம். மலையையே மறைக்கவும் கூடும். ஆனால் மலை என்றும் அங்குதான் இருக்கும்… இளைஞனே, சொற்களை எரித்த நீறை பூசிக்கொள். அதுவே விடுதலை…”
“முயல்கிறேன் சார்வாகரே. மறையின்றி தன் விழைவுகளை நோக்குவது ஒரு பெரும் யோகம் என்று இப்போது தங்கள் சொற்களைக் கேட்கும்போது உணர்கிறேன்.” மீண்டும் தலைவணங்கி அவன் புரவியை நோக்கிச் சென்றான்.