‘வெண்முரசு’ – நூல் இரண்டு – ‘மழைப்பாடல்’ – 71

பகுதி பதிநான்கு : களிற்றுநிரை

[ 3 ]

சகுனி அரண்மனைமுற்றத்துக்கு வந்தபோது இருண்டகுகைக்குள் இருந்து மீண்ட உணர்வேற்பட்டது. வெளியே வெயில் கண்கூசும்படி நிறைந்து நிற்க காகங்கள் அதில் பறந்து கடந்துசென்றன. யானை ஒன்று பெரிய மரமேடை ஒன்றை துதிக்கையால் சுமந்தபடி சென்றது. சகுனி ரதத்தில் ஏறியபடி “அந்த யானை எங்கே?” என்று கேட்டான். “இளவரசே?” என்றான் சாரதி. “இன்று காலை இறந்த அந்த யானை?” “இளவரசே, அதை யானைமயானத்துக்கு கொண்டுசென்றிருப்பார்கள். வடக்குக் கோட்டை எல்லைக்கு அப்பால், புராணகங்கையில் அது உள்ளது… காட்டுக்குள்.”

‘செல்’ என சகுனி கைகாட்டினான். சாரதி ரதத்தைத் திருப்பி அரண்மனையின் பக்கவாட்டுச்சாலைக்குச் சென்று அங்கிருந்து வடமேற்கு நோக்கிச் சென்றான். பெருமூச்சுடன் ரதத்தில் அமர்ந்துகொண்ட சகுனி சாலையின் இருபக்கமும் நோக்கியபடியே வந்தான். மேற்கே ஏரி பெரும்பாலும் வற்றி அதைச்சுற்றி சேற்றுப்பரப்பு முதலைத்தோல் என வெடித்திருந்தது. வடக்குக்கோட்டத்தின் உப்பரிகையில் திரைச்சீலைகள் அசைந்தன. அப்பால் யாரோ அமர்ந்திருப்பதை கண்டான். அது ஒரு பெண்மணி என்று பின்னர் உணர்ந்தான்.

அது விதுரனின் அன்னை. அரண்மனையில் சமையல்பணிசெய்த சூதப்பெண். வியாசனின் விந்துவை ஏற்று ஞானியான மைந்தனைப்பெற்றவள். அவளுக்கு மனநிலைப் பிறழ்வு உண்டு என்று அறிந்திருந்தான். வருடக்கணக்காக ஒவ்வொருநாளும் அவள் ஒரே உப்பரிகையில்தான் அமர்ந்திருக்கிறாள். அவள் என்ன பார்க்கிறாள்? அவள் எப்போதைக்குமாக இழந்த புறவுலகையா? அவளுக்கும் தன் தங்கையருக்கும் என்ன வேறுபாடு? அவள் கட்டற்ற வாழ்க்கையை சிறிதுகாலமேனும் அறிந்திருக்கிறாள். அவர்கள் அதை அறிந்ததேயில்லை.

அரண்மனையின் கருவூலத்தில் பொன் இருக்குமென்றால் அதற்கு நிகராக செம்புநாணயங்களை வெளியிடலாமென்று பொருள்நூல் சொல்வதை அவன் அறிந்திருந்தான். அரசகன்னியர் கருவூலத்துப் பொன்னைப்போல. அவர்கள் அங்கே களஞ்சியத்து இருளில் காலாகாலமாக விழியொளிபடாமல் கிடந்தாகவேண்டும். அவர்கள் அங்கிருந்தால்தான் வெளியே அரசு நிகழமுடியும். இத்தனை பேர் வாழ முடியும். ஆனால்…

அவையெல்லாம் வெறும் சொற்கள் என சகுனி மீண்டும் தன்வசையுடன் எண்ணிக்கொண்டான். படியிறங்குமுன் சம்படையிடம் சொன்ன சொற்களை அவனே உறுதிப்படுத்திக்கொள்ள விழைகிறான். அர்த்தமற்றவை அவை. இன்னும் சிலநாட்கள்தான், சம்படையும் சொற்களற்றவளாக ஆகிவிடுவாள். அவளுக்கும் இவ்வாறு ஒரு உப்பரிகை கிடைத்துவிடும்.

வடக்குக்கோட்டையை ஒட்டிய யானைக்கொட்டிலில் அமைதிநிலவியது. யானைகள் அனைத்தும் அந்த மரணத்தை அறிந்து அந்தத் துயரில் மூழ்கி நிற்பதாகத் தோன்றியது. அது வெறும் தன்மயக்கா என்ற எண்ணம் அவனுக்கு எழுந்தது. யானைகள் காதாட்டுகின்றன, ஊசலாடுகின்றன, வழக்கம்போலத்தான் தெரிகின்றன…. அதன்பின்னர்தான் அங்கிருந்த நூற்றுக்கணக்கான யானைகள் எவையுமே இரையெடுக்கவில்லை என்பதை கண்டான். அவை துதிக்கையை நிலத்தில் வெறுமே துழாவியபடி மெல்ல ஆடிக்கொண்டு நின்றிருந்தன. ஆம், ஒன்றுகூட! அவன் விழிகளை ஓட்டி ஒவ்வொரு துதிக்கையாக, வாயாக பார்த்தான். அத்தனை யானைகளும் துதிக்கைமுன் குவிந்துகிடந்த உணவைத்தொடாமல்தான் நின்றுகொண்டிருந்தன.

சகுனி ரதத்தை நிறுத்தச்சொல்லி யானைகளையே பார்த்தான். யானை என்பது வெறும் மிருகமல்ல என்று தோன்றியது. ஒட்டகமோ கழுதையோ குதிரையோ அல்ல. அது ஒரு கரிய உடல் அல்ல. அது ஓர் ஆளுமை. ஒரு மனம். ஓர் ஆன்மா. அதுமட்டும் அல்ல. அதற்கப்பால். விண்ணகத்தெய்வங்களில் ஏதோ ஒன்று வந்து மண்ணில் யானைகளாக நடித்துக்கொண்டிருக்கிறது. அங்கே நிற்க அவன் அஞ்சினான். “ஓட்டு!” என்றான்.

புராணகங்கைக்குள் புதர்க்காடு முழுக்க பல்லாயிரம் மரக்குடில்கள் முளைத்து அவையெல்லாம் இணைந்து சிறிய ஊர்கள் போல மாறியிருந்தன. அனைத்திலும் காந்தாரப்படைவீரர்கள்தான் தங்கியிருந்தனர். அவர்களின் கழுதைகளும் ஒட்டகங்களும் குறுங்காட்டுக்குள் சிறிய மரங்களின் அடியில் நின்றும் கால்மடித்துக்கிடந்தும் வைக்கோல் மென்றுகொண்டிருந்தன. அவனுடைய ரதத்தைக் கண்டதும் காந்தார வீரர்கள் எழுந்து நின்று ஆயுதங்களை கையிலெடுத்து வாழ்த்துகூவாமல் மேலே தூக்கினர். அவன் கைகளை மெல்ல தூக்கி அதனை ஏற்றபடி முன்னால் சென்றான்.

புழுதிநிறைந்த சாலை குறுங்காட்டுக்குள் சென்று பின் கிளைபிரிந்தது. சரளைகற்களாலான சிறிய சாலை சென்ற மழையில் அரித்து ஓடைகளால் ஊடுருவப்பட்டுக் கிடந்தது. அதன்மேல் புதிய வண்டித்தடங்கள் சென்றன. சாலையின் மறு எல்லையில் இருந்தது யானைமயானம். அங்கே நிறையபேர் கூடியிருப்பதை காணமுடிந்தது. அவனுடைய ரதம் வருவதைக் கண்டதும் ஏவலர் முன்னால் ஓடிவந்து வணங்கினர்.

ரதம் நின்றதும் சகுனி இறங்கிக்கொண்டான். சால்வையைச் சுற்றியபடி அவன் சென்றபோது எதிரே யானக்கொட்டில் அதிபரான வைராடர் அவனை நோக்கி வந்து வணங்கினார். அவன் பின்னால் வந்தபடி “உபாலன் என்று அந்தப்பெருங்களிறுக்குப்பெயர் இளவரசே. நூறுவயதாகிறது” என்றார். “நூறு வயதா?” என்றான் சகுனி. “ஆம், அதுதான் யானைக்கு நிறைவயது. பொதுவாக யானைகள் எண்பதைத் தாண்டுவதில்லை. இது நூறை நிறைவுசெய்த நாள் இன்று…”

சகுனி வியப்பை வெளிக்காட்டாமல் திரும்பி நோக்கியபின் பார்வையைத் திருப்பிக்கொண்டான். “பீஷ்மபிதாமகரின் அன்புக்குரிய யானை… பிதாமகர் இன்று காட்டில் இருக்கிறார். எரியூட்டுவதற்கு முன் வருவார் என்றார்கள்” என்றார் வைராடர். “இளமையில் அவர்தான் உபாலனின் சோதரன் போலிருந்தார். அவர்கள் இணைந்து காட்டுக்குச்செல்வார்கள். ஆகவே அவர்தான் எரியூட்டவேண்டும்” என்றார்.

“எரியூட்டுவதா?” என்றான் சகுனி. “ஆம் இளவரசே. யானையின் இறப்பு எளிய மிருகமொன்றின் இறப்பல்ல. மண்ணில்பிறக்கும் அனைத்து யானைகளும் காட்டரசர்களே. ஆகவே ஒரு மாமன்னருக்குரிய அனைத்தும் யானைக்குச் செய்தாகவேண்டும். பிறந்த முதல்நாள் அதன் குருதி உறவாக தன்னை நிறுத்திக்கொள்ளும் ஒருவர் அதற்கு முதலினிமை அளிக்கவேண்டும். அன்றே பிறவிநூல் கணித்து எழுதுவார்கள். ஒன்பதாம்நாள் மாசுநீராட்டு நடக்கும். இருபத்தெட்டாம்நாள் முதலணி அணிவித்து பெயர்சூட்டப்படும். ஒவ்வொரு வருடமும் யானையின் பிறந்தநாளைக் கொண்டாடுவார்கள்” என்றார் வைராடர்.

“யானையின் இறப்பும் அரசனின் இறப்பே” என வைராடர் தொடர்ந்தார். “யானை இறந்ததை முறைப்படி முரசறைந்து அறிவிக்கவேண்டும். சந்தனக்கட்டையிட்டு எரியூட்டவேண்டும். யானையின் தந்தையாகவோ மைந்தனாகவோ தம்பியாகவோ தன்னை நிறுத்திக்கொள்ளும் ஒருவர் முறைப்படி அனைத்துக்கடன்களையும் ஆற்றவேண்டும். மூன்றாம்நாள் நீர்க்கடனும் நாற்பத்தொன்றாம் நாள் உதகபலியும் செய்யவேண்டும். அன்று நீத்தார்விருந்து நிகழும். அதன்பின் வருடம்தோறும் நீத்தாருக்கான பலிநாளில் அந்த யானைக்காகவும் எள்ளும் நீரும் அளிக்கவேண்டும்.”

“யானை எங்கே?” என்றான் சகுனி. “இதோ” என்று வைராடர் சுட்டிக்காட்டினார். சகுனி திகைத்து கண்களை ஓட்டினான். “இதோ இதுதான்…” என வைராடர் கைகாட்ட இருவர் அங்கே ஈச்சைஓலைமட்டைகளால் மூடப்பட்டிருந்த குவியலை விலக்கிக் காட்டினர். சகுனி கண்கள் சுருங்க மெல்ல முனகினான். அங்கே யானையின் வயிறும் முதுகும் மட்டும் வெட்டப்பட்டு பெரிய பாறைபோல வைக்கப்பட்டிருந்தது.

சேவகர் பிற குவியல்களை விலக்கினர். அங்கே கால்கள் தனித்தனியாகவும் துதிக்கையும் மத்தகமும் தனியாகவும் ரம்பத்தால் அறுத்து விலக்கப்பட்டு வைக்கப்பட்டிருந்தன. யானையின் கால்கள் பெரிய வேங்கைமரத்தடிகளை தோலுடன் வைத்தது போலிருந்தன. “என்ன இது வைராடரே?” என்றான் சகுனி. அவன் குரலில் மெல்லிய நடுக்கம் இருந்தது.

“இதுவே வழக்கம்…” என்றார் வைராடர். “யானையை முழுதாக தூக்கி இங்கே கொண்டுவரமுடியாது. அத்தனை எடை தாங்கும் வண்டிகளே இங்கில்லை. பிறயானைகளைக்கொண்டு அதைத் தூக்கலாம்.  ஆனால் யானைகள் அதைச்செய்ய முன்வருவதில்லை. அவை நடுங்கிவிடும். இறந்த யானையை கைவிட்டுவிட்டு நெடுந்தூரம் விலகிச்செல்லும் வழக்கம் கொண்டவை அவை. அத்துடன் யானை ஓர் அரசன். வாள்போழ்ந்து எரியூட்டுவதே அதற்கான பீடு.”

“ஆகவே ரம்பத்தால் அறுத்து ஏழு துண்டுகளாக ஆக்கி தனித்தனியாக வண்டிகளில் கொண்டுவருவதே வழக்கம்” என்றார் வைராடர். ‘மூடுங்கள்’ என சகுனி சைகை காட்டினான். குமட்டல் எடுத்து உடலை உலுக்கியபடி திரும்பிக்கொண்டான். “இதற்கெனவே பயிற்சி பெற்றவர்கள் இருக்கிறார்கள். மாதங்கர் என்னும் குலம். இங்கே அவர்கள் இருபது குடும்பங்களாக இருக்கிறார்கள்” வைராடர் சொன்னார். “அவர்கள் மட்டுமே யானையை உரிய இடங்களில் ரம்பத்தால் அறுத்து துண்டுகளாக்க முடியும். யானையின் எலும்புகள் மிக வலுவானவை. மூட்டுகளை பிரிக்கவே முடியாது.”

அப்பால் சிதைகூட்டுவதற்கான பெரிய சந்தனத்தடிகளை வினைவலர் வண்டிகளில் கொண்டுவந்து அடுக்கிக்கொண்டிருந்தனர். நறுமணப்பொருட்களுடன் ஒரு வண்டி வந்து நின்றதும் வினைவலர் அதைநோக்கிச் சென்றனர். மரங்களுக்கு நடுவே சிதைமூட்டுவதற்கான பெரிய குழியை இருபது மாதங்கர்கள் தோண்டிக்கொண்டிருக்க கரையில் மூத்த மாதங்கர் தலைப்பாகையுடன் நின்றிருந்தார். “இது கங்கையின் பழைய பாதை. மண் மென்மையான வண்டல். ஆகையால் எளிதில் தோண்டிவிடமுடியும்” என்றார் வைராடர். அவர்கள் வெட்டிக்குவித்த மண் கருநிறத்தில் இருந்தது.

மாதங்கர்கள் ஏதோ கூச்சலிட முதியமாதங்கர் கைகளைத் தூக்கி வைராடரை அருகே அழைத்தார். “என்ன?” என்றான் சகுனி. “இது கங்கை வழிந்த பகுதி… வண்டலில் மூழ்கிப்போன பலபொருட்கள் கிடைப்பதுண்டு. பெரும்பாலும் தொன்மையான படகுகள். சிலசமயம் உலோகக்கலங்களும் பெட்டகங்களும் கிடைத்துள்ளன” என்றார் வைராடர். சிரித்தபடி “மாமன்னர் பிரதீபரின் காலத்தில் ஒரு பெரிய பெட்டகம் நிறைய பொன்நாணயங்கள் கிடைத்தன என்றார்கள். ஆகவே ஆங்காங்கே பலர் தோண்டிப்பார்ப்பதும் உண்டு…” என்றார்.

குழியை அணுகி அள்ளிக் குவிக்கப்பட்ட ஈரமான வண்டல்மேல் ஏறி விளிம்பை அடைந்து உள்ளே நோக்கினார்கள். புதியமண்ணின் வாசனை மூக்கை நிறைத்தது. மண்புழுக்கள் நெளியும் கரிய மண் சேறாக வழுக்க சகுனி மெல்லக் காலெடுத்து வைத்து அதன்மேல் ஏறினான். “பெட்டகமா?” என்றார் வைராடர். “தெரியவில்லை. உலோகத்தில் மண்வெட்டி பட்டது.”

வைராடர் “ஆழமாகச் செல்லுங்கள்” என்றார். அவர்கள் தோண்டிக்கொண்டிருக்க “அமைச்சரே அது இரும்பு… இரும்பாலான கனமான ஏதோ ஒரு பொருள்” என்றார் ஒரு மாதங்கர். “இரும்பா?” என்றார் வைராடர் ஆர்வமிழந்து. “அனேகமாக கங்கையில் சென்ற ஏதேனும் படகின் நங்கூரமாக இருக்கும்… எதுவாக இருந்தாலும் மேலே எடுங்கள்!” மாதங்கர்கள் அந்தப் பொருளின் நான்குபக்கங்களிலும் மண்ணை அள்ளத்தொடங்கினர். மண் விலக விலக அதன் வடிவம் மெல்லத் துலங்கி வந்தது. பெரிய உருளை போலிருந்தது. “அது நங்கூரம்தான் அமைச்சரே. அந்தப் பெரிய உருளைக்கு நீளமான தண்டு இருக்கிறது” என்றார் முதுமாதங்கர்.

கொஞ்சம் கொஞ்சமாக சுற்றிலும் ஆழமாக்கி அதை தனித்து எடுத்தனர். கருப்பையை திறந்துகொண்டு ஒரு குழந்தை பிறவிகொள்வதுபோலிருப்பதாக சகுனி எண்ணிக்கொண்டான். அதன் நீளமான தண்டில் கயிறுகளைக் கட்டி மேலே கொண்டுவந்து பத்துபேர் மேலிருந்து இழுத்து தூக்கத்தொடங்கினர். அவர்களின் மூச்சொலிகளும் ஒத்தொலிகளும் எழுந்தன.

அவர்கள் இழுக்க இழுக்க அந்தப் பெரும் எடை அசைவில்லாமலேயே இருந்தது. மாதங்கர்களின் விசையொலிகள் உரத்து உரத்து எழ, வடங்கள் தெறித்து ஓசையிட, ஏதோ ஒரு கணத்தில் அது அசைந்து மண்ணிலிருந்து விரிசலிட்டு எழுந்தது. கூச்சலுடன் அதைத் தூக்கி புரட்டிப்போட்டனர். சகுனி திகைப்புடன் அமர்ந்து குனிந்து பார்த்தான். முதியமாதங்கர் “நங்கூரமெனத் தோன்றவில்லை. நிறைய சிற்பவேலைப்பாடுகள் உள்ளன” என்றார்.

“டேய் அதன் மண்ணை விலக்குங்கள்” என்றார் மாதங்கர். அவர்கள் அதன் மண்ணை அகற்றத்தொடங்கினர். வைராடர் “நங்கூரத்திலேயே சிற்பவேலைப்பாடுகள் செய்திருப்பார்கள் அன்று. நமக்கென்ன தெரியும்?” என்றார். அதற்குள் சகுனி கண்டுகொண்டான், அது ஒரு மிகப்பெரிய கதாயுதம். அவன் கண்ட எடைமிக்க கதைகளைவிட மும்மடங்கு பெரியது. “கதை போலிருக்கிறது” என்றார் மாதங்கர். “கதையா? இந்த அளவிலா? அந்த மனிதன் என்ன இருபதடி உயரமா இருந்தான்?” என்றார் வைராடர்.

ஓவியம்: ஷண்முகவேல் [பெரிதுபடுத்த படத்தின்மீது சொடுக்கவும்]
ஓவியம்: ஷண்முகவேல்
[பெரிதுபடுத்த படத்தின்மீது சொடுக்கவும்]

“அமைச்சரே அது கதாயுதமேதான்” என்றான் சகுனி. “அதைத் தூக்கி மேலே வைக்கச் சொல்லுங்கள்!” அவர்கள் அதைத்தூக்கி மேலே போட்டபோது மண்ணை அறைந்த ஒலியே அதன் எடையைக் காட்டியது. “இதென்ன, கந்தர்வர்கள் சுற்றிய கதையா?” என்றார் மாதங்கர். “அனேகமாக இது ஏதோ சிலையின் கையில் இருந்திருக்கிறது. அனுமனின் சிலையாக இருக்கலாம்” என்றார் வைராடர். “அச்சிலை இருபதடி உயரமாவது இருந்திருக்கும்.”

குனிந்து அந்த கதாயுதத்தைப் பார்த்த சகுனி “இதன்மேல் எழுத்துக்கள் ஏதேனும் உள்ளனவா என்று பாருங்கள் வைராடரே” என்றான். “இது எங்கிருந்தது, எப்படி இங்கே வந்தது என்று பார்க்கவேண்டும்.” வைராடர் ஆணையிட வினைவலர் நீர்கொண்டு அதைக் கழுவினர். அவர்கள் நார்போட்டு தேய்த்து நீரூற்ற அதன் நுண்ணிய சித்திரச்செதுக்குகள் மீதிருந்த கரிய மண் கரைந்து வழிந்தது. “துருப்பிடிக்கவேயில்லை…. பழைமையான உருக்கிரும்பு” என்றார் வைராடர்.

யானைக்குட்டி ஒன்று கால் ஒடுக்கி துதிக்கை நீட்டி கிடப்பதுபோல அது கரிய பளபளப்புடன் கிடந்தது. அதன் செதுக்குவேலைப்பாடுகள் அனைத்துமே யானைச்சித்திரங்கள் என்று சகுனி கண்டான். யானைகளை மணிகளாகக் கொண்ட மாலைபோல. “எழுத்துக்களேதும் இல்லை” என்றார் வைராடர். மாதங்கர் ஒருவர் அருகே வந்து “அமைச்சரே நேரமாகிறது…”என்றார். வைராடர் “ஆம், நமக்கு பணிகள் இருக்கின்றன. பிதாமகர் எங்கிருக்கிறார்?” என்றார்.

“அவர் வந்துகொண்டிருக்கிறார் என்றார்கள். இன்னும் மூன்றுநாழிகையில் வந்துவிடுவார். நாம் இன்னும் குழியைத் தோண்டி முடிக்கவில்லை. சிதையடுக்கவே நான்குநாழிகைநேரம் தேவை. இருட்டுவதற்குள் எரியூட்டவேண்டுமென்று நூல்நெறி.” வைராடர் “ஆம் பணிகள் நடக்கட்டும்” என்றபின் திரும்பி “தாங்கள் இங்கே இருக்கிறீர்கள் அல்லவா இளவரசே?” என்றார். “இல்லை. என்னால் இதைப்பார்க்க முடியாது” என்றான் சகுனி.

அவன் திரும்பி தன் அரண்மனைக்குச் செல்லத்தான் எண்ணினான். ரதத்தில் ஏறியபின்னரே தன் அகம் நிலையழிந்திருப்பதை உணர்ந்தான். சிலகணங்கள் கண்மூடி நின்றுவிட்டு, “அரண்மனைக்கு… புஷ்பகோஷ்டத்துக்கு” என்றான். காற்று அவன் குழலையும் ஆடையையும் பறக்கச்செய்தது. பெருமூச்சுவிட்டுக்கொண்டு காற்றில் தன் அகத்தின் எடையை கரைக்கமுடியுமா என்று பார்த்தான். ஏன் நான் நிலைகொள்ளாமலிருக்கிறேன்? நான் காத்திருக்கும் ஒன்று நிகழப்போகிறது. நான் விரும்புவதெல்லாம் விரும்பியவண்ணம் நடக்கின்றன. ஆனால்…

ஆனால், நான் கண்ட அந்தச் சதுரங்க ஆட்டக்காரனை நினைவுகூர்ந்தால் அவன் விழிகள் மட்டும் நினைவுக்கு வருகின்றன. அவை நரியின் விழிகள். என் எதிரே ஆடிக்கொண்டிருந்தது ஒரு நரி என்ற மனமயக்கே என்னிடம் உள்ளது. ஆடும்போது அது உவகையை அளித்தது. விழித்ததும் அச்சத்தை அளிக்கிறது. அச்சமா? எனக்கா? எதன்மேல்? அரசன் அஞ்சுவது ஒன்றையே, விதியை. அத்தனை அரசுசூழ்நர்களும் ஆடிக்கொண்டிருப்பது விதியுடன் மட்டுமே.

புஷ்பகோஷ்டத்தில் திருதராஷ்டிரனின் சேவகன் வணங்கி அவனை வரவேற்றான். “அரசர் என்ன செய்கிறார்?” என்றான் சகுனி. “சூதரான தீர்க்கசியாமருடன் இருக்கிறார்” என்றான் அவன். சகுனிக்கு அச்சொல்லே கல் ஒன்று நெஞ்சில் விழுந்தது போலிருந்தது. அவன் அங்கே வரும்போது அவரும் வந்திருப்பதில் ஏதோ தொடர்பிருப்பதுபோல. புன்னகையுடன் என்ன இப்படி அஞ்சிக்கொண்டிருக்கிறேன் என எண்ணிக்கொண்டான். தீர்க்கசியாமர் ஒவ்வொருநாளும் அரண்மனைக்கு வந்து திருதராஷ்டிரனுக்கு கல்விபயிற்றி வருபவர்…

சகுனி உள்ளே சென்றபோது தீர்க்கசியாமர் ஏதோ பாடி முடித்திருந்தார். சகுனியின் காலடிகளைக்கொண்டே அவனை உணர்ந்துகொண்ட திருதராஷ்டிரன் புன்னகையுடன் திரும்பி “காந்தாரரே வருக… தங்களைப்பற்றித்தான் நான் காலையிலேயே எண்ணிக்கொண்டிருந்தேன்” என்றான். தீர்க்கசியாமர் முகத்தை வான் நோக்கித் திருப்பிவைத்து புன்னகையுடன் எதையோ கேட்பவர் போலிருந்தார். அவர் முகம் மலர்ந்து களிகொண்டிருப்பதைக் கண்டு சகுனி சற்று வியந்துகொண்டான். “தங்கள் கல்வியை குலைக்க விரும்பவில்லை அரசே” என்றான் சகுனி.

“கல்வியா? நான் தீர்க்கசியாமருடன் எப்போதும் விளையாடிக்கொண்டல்லவா இருக்கிறேன்?” என்றான் திருதராஷ்டிரன். “ஆனால் இன்று நானறிந்த அனைத்தும் இவர் சொன்னவைதான். குருநாதரென நான் பணியவேண்டிய காலடிகள் பிதாமகருடையதும் இவருடையதும்தான்.” தீர்க்கசியாமர் திருதராஷ்டிரன் சொன்னதையும் கேட்டதாகத் தெரியவில்லை. பேரிசை ஒன்றில் கரைந்து நிற்கும் யட்சன் போல அமர்ந்திருந்தார். அந்த நிலைகொண்ட பெருங்களிப்பு சகுனியை திகைக்கச் செய்தது. எங்கே இருக்கிறார் அவர்?

“தீர்க்கசியாமர் சற்றுமுன் தட்சிணத்து செவ்வழிப்பண்ணை வாசித்தார். வாசிப்பின் வழியாக அங்கே சென்றுவிட்டார். பண்களை சமைத்து மண்ணுக்கு அனுப்பும் முடிவிலிக்கு. அவராகவே இறங்கிவந்தால்தான்” என்றான் திருதராஷ்டிரன் சிரித்துக்கொண்டே. “அருள்பெற்ற மானுடன்” என்றான் சகுனி. “ஆம்… இன்று இந்த அஸ்தினபுரியில் துயரென்பதையே அறியாதவர் இவர் மட்டும்தான்.” சகுனி மீண்டும் தீர்க்கசியாமரைப் பார்த்தபின் பார்வையை திருப்பிக்கொண்டான்.

“நேற்று என் சாளரத்துக்குக் கீழே ஒரு மதகளிறு வந்து நின்று பிளிறியது” என்றான் திருதராஷ்டிரன். “அதற்கு என்ன ஆயிற்றென்றே தெரியவில்லை. வயதானது. அதை நான் கேட்டதுமில்லை.” சகுனி “முதுமையில் மானுடர் நிலையழிவதுபோல யானைகளுக்கும் நிகழும்போலும்” என்றான். “இருக்கலாம்… அது அப்போதே இறந்துவிட்டது என்றார்கள். காலையில் அதன் உடலை அங்கிருந்து வாள்போழ்ந்து கொண்டுசென்றார்கள் என்று அறிந்தேன்.”

சகுனி மெல்லிய ஐயமொன்றை அடைந்தான். அதை பொன்னகையை ஊதிப்பொருத்தும் பொற்கொல்லர்கள் போல சொற்களாக ஆக்கினான். “நேற்று தங்களுடன் அந்தச்சூதப்பெண் இருந்தாளா அரசே?” என்றான். திருதராஷ்டிரன் உரக்கச்சிரித்து “இல்லை… நல்லவேளை. மூத்தஅரசி காந்தாரிதான் இருந்தாள்…” என்றான். சகுனி அதற்குமேல் கேட்கவிரும்பவில்லை. அவன் எண்ணிய ஒன்று உறுதிசெய்யப்பட்டதுபோல அமைதியாக இருந்தான். “காந்தாரத்து அரசியின் சித்தம் நிலையழிந்திருக்கிறது சௌபாலரே. அவள் அச்சமூட்டும் கனவுகளில் வாழ்கிறாள். அங்கே பெருநாகங்களும் யானைகளும் நிறைந்துள்ளன. நேற்று கேட்ட யானையின் பிளிறலைக்கூட அவள் தன் கனவுக்குள் ஒலிப்பதாகவே பொருள்கொண்டாள்” என்றான்.

யானையின் துதிக்கை சீறுவதுபோல பெருமூச்சுவிட்டபடி தீர்க்கசியாமர் அசைந்து அமர்ந்தார். “அலைகள்! முடிவேயற்றவை” என்றபின் குரல்கேட்ட திசைநோக்கி புன்னகைபுரிந்தார். திருதராஷ்டிரன் “குருநாதரே, நேற்றிரவு ஒரு பெருங்களிறு இவ்வரண்மனை முற்றத்தில் அலறியபடி உயிர்துறந்தது… அதன் நிகழ்குறி என்ன என்று சொல்லமுடியுமா?” என்றான். தீர்க்கசியாமர் புன்னகையுடன் திரும்பி “களிறுகளும் நாகங்களும் மட்டுமே நிலத்தின் அதிர்வை முதலில் அறிகின்றன…” என்றார். சகுனி திரும்பிப்பார்த்தான். அதை உணர்ந்ததுபோல திருதராஷ்டிரன் புன்னகையுடன் “அவரது பேச்சு எப்போதும் அப்படித்தான்… அவர் வேறேதோ வழியில்தான் நம்முடன் பேசுவார்” என்றான்.

“குருநாதரே, ஒருகளிறு இறப்பது எதையாவது சுட்டுகிறதா?” என்றான் திருதராஷ்டிரன் மீண்டும். தீர்க்கசியாமர் சிரித்து “பூக்கள் தும்பிகளால் சமன்செய்யப்படுகின்றன” என்றார். ஒரேகணத்தில் சகுனி அவர் சொல்வதைப்புரிந்துகொண்டு அகம் அதிர்ந்தான். மெல்லியகுரலில் “யார் வரவிருக்கிறார்கள்?” என்றான். “யானைவண்டு சிக்கிக்கொண்டால் சிலந்தியே தன் வலையை அறுத்துவிடும்” என்றார் தீர்க்கசியாமர். மீண்டும் தன் யாழை எடுத்து அதன் நரம்புகளைச் சுண்டியபடி முகத்தை வான் நோக்கித் திருப்பி புன்னகைபுரிந்தார்.

சகுனி அவரை மெல்லத் தொட்டு “தீர்க்கசியாமரே, நான் கேட்கும் இறுதி வினா இது… நேரடியாகவே கேட்கிறேன். அவனுடைய வருகையின் முன்னறிவிப்பு என்ன?” என்றான். தீர்க்கசியாமர் திரும்பி “யார் வருகிறார்கள்?” என்றார். “நீங்கள் இப்போது சொன்னீர்களே?” என்றான் சகுனி. “நானா?” சகுனி தன்னை அடக்கிக்கொண்டு “ஆம்” என்றான். “நானா சொன்னேன்?” என்றார் தீர்க்கசியாமர் வியப்புடன். “ஆம்…” என்ற சகுனி தலையை அசைத்து “சரி அதைவிடுங்கள். இப்போது இந்த யாழை மீட்டி எதையாவது பாடுங்கள்” என்றான்.

“இந்த யாழ் இப்போது பாடாமல்தானே இருக்கிறது?” என்றார் தீர்க்கசியாமர். “நீங்கள் அதை வாசியுங்கள்…” சகுனி தன்னுள் எழுந்த எரிச்சலை அடக்கிக்கொண்டு சொன்னான். “நான் வாசிப்பதற்கு இந்த நரம்புகளில் பாடல் இருக்கவேண்டும்… கையை வைத்து அதை எடுப்பேன்…” என்றார் தீர்க்கசியாமர். “ஆலயவாயிலின் கதவு தெறித்துத் திறந்து விழுகிறது. அதன்பின் தேவன் எழுந்தருள்கிறான்.” சகுனி தன் பரபரப்பை அடக்கிக்கொண்டான். ஆம், அதைத்தான் அவரது வாய் சொல்கிறது. அதை குலைத்துவிடக்கூடாது. “சொர்க்கத்துக்கு இட்டுச்செல்லும் நாவாய் அது… மீண்டும் ஆலயத்தை அடைந்தபின் மூடிக்கொள்ளும்…” என்றார் தீர்க்கசியாமர்.

அவர் விரல்கள் யாழில் ஓடத்தொடங்கின. “ஆ,.. இது கலிங்கப் பண்!” என்றான் திருதராஷ்டிரன். “நீருக்குள் இருந்து யானை எழுந்து வருவதுபோல வருகிறது குருநாதரே.” யாழ் அதிரத்தொடங்கியதும் திருதராஷ்டிரன் கைகளைக்கூப்பியபடி தலையை மேலே தூக்கி பரவசம் நிறைந்த முகத்துடன் அமர்ந்திருந்தான். இசை பாறைகள் வழியாக இழியும் மலையருவி போல பொழிந்தபடியே இருந்தது. ஒருநாழிகை கடந்ததும் சகுனி எழுந்துகொண்டான். “நான் வருகிறேன்” என மெல்லச் சொல்லி தலைவணங்கி இறுதியாக தீர்க்கசியாமரை ஒருமுறை நோக்கிவிட்டு வெளியே சென்றான்.

ரதத்தில் ஏறிக்கொண்டு “மாளிகை” என்றான். அகம் ‘அபத்தம்… மூடத்தனம்’ என்னும் சொற்களை திரும்பத்திரும்பச் சொல்லிக்கொண்டே இருந்தது. அச்சம் தன்னம்பிக்கையை அழித்துவிடுகிறது. இன்னதென்றறியாத அச்சம் தன்னிலையையே அழித்துவிடுகிறது. என்னவானேன் நான்? சகுனி என இருந்தது எதுவோ அது சிதறிவிட்டிருக்கிறது… இந்த அற்பமாயங்களை நோக்கி தன் சிந்தை திரும்பமுடியும் என்று சிலமாதங்களுக்கு முன்பு சொல்லியிருந்தால் அவன் சிரித்திருப்பான்.

பீதாசலத்தின் மலைப்பாறைகளுக்கு நடுவே நாகசூதன் சொன்னவற்றை சகுனி நினைவுகூர்ந்தான். பொருளற்ற ஒரு பழங்கதை. ஆனால் ஒவ்வொரு முறை அகம் விழிப்பை இழந்து கனவில் மூழ்கும்போதும் அந்தக்கதை நினைவுக்கு வந்துகொண்டிருந்தது. பொருளற்றவைதான் அதிகம் சிந்திக்கச் செய்கின்றன. பொருள் என்பதுதான் என்ன? நாமறிந்தவைதான் பொருள் கொண்டவை. அறியாதவற்றைநோக்கித் திறப்பதெல்லாமே பொருளற்றவையாகத் தெரிகின்றன. திறக்கும் கதவு…

ஒருகணத்தில் அவன் திகைத்தவன்போல ரதமேடையில் எழுந்து நின்றுவிட்டான். தீர்க்கசியாமர் சொன்ன சொற்களுக்கு என்னபொருள்? முன்னரே வந்திருப்பது வரப்போகிறவனின் ஆலயத்தின் கதவு மட்டும் அல்ல. அவனை சொர்க்கத்துக்குக் கொண்டுசெல்லும் நாவாயும்கூட. சொர்க்கத்துக்கு. அப்படியென்றால் அவனைக்கொல்லப்போகும் படைக்கலமா அது? அத்தனைபெரிய கதையை ஏந்தும் கரங்கள் இனிமேல் பிறந்துவருமா?

பித்து, வெறும் பித்து என்று தனக்குள் சொல்லிக்கொண்டு தலையை ஆட்டினான் சகுனி. அர்த்தமேயற்ற நினைப்புகள். அச்சம்கொண்ட ஆற்றலற்றவர்கள் தேடும் புகலிடங்கள். ஆனால் அவன் சாரதியிடம் “யானைமயானத்துக்குப் போ!” என ஆணையிட்டான். ரதம் திரும்பி வடக்குவாயில் நோக்கிச்செல்லும்போது சலிப்புடனும் குழப்பத்துடனும் ரதபீடத்தில் அமர்ந்து தன் தலையை கைகளால் தாங்கிக்கொண்டான். வாழ்க்கையில் முதன்மையானது என என்றென்றும் அவன் நினைவுகூரக்கூடிய தருணங்களில் எல்லாம் அவன் அகநிலையழிதலையே உணர்ந்திருக்கிறான். உவகையின் நிறைவை அல்ல. ஒருவேளை அனைவருக்கும் அப்படித்தானா?

வடக்குவாயில்முன்னால் உள்ள யானைக்கொட்டில் நடுவே இருந்த களமுற்றத்தில் வீரர்கள் கூடி எதையோ செய்துகொண்டிருப்பதை ரதம் சற்று கடந்து சென்ற பின்னரே அவன் உணர்ந்தான். ரதத்தை நிறுத்தி அப்பக்கமாகத் திரும்பச் சொன்னான். இறங்கியபோதுதான் அவர்கள் செய்துகொண்டிருப்பதென்ன என்று உணர்ந்தான். அங்கே அனுமனின் ஆலயத்திற்கு முன்னால் இருந்த உயரமான கல்பீடத்தில் அந்த கதாயுதத்தை தூக்கிவைத்து நிறுவிக்கொண்டிருந்தனர்.

அவனைநோக்கிவந்த காவலர்தலைவன் தலை வணங்கி “இங்கே இதை நிறுவலாமென்று பீஷ்மபிதாமகர் சொன்னார் காந்தாரரே. தற்போது இந்த பீடத்தில் அமைக்கிறோம். நாளையே கல்சிற்பிகளைக்கொண்டு முறையான பீடம் அமைக்கப்படும்” என்றான். சகுனி குனிந்து சிறிய ஆலயத்திற்குள் மலையைத் தூக்கியபடி வால் சுழன்றெழ நின்றிருந்த அனுமனின் செந்தூரம்பூசப்பட்ட சிறிய சிலையைப் பார்த்தான். பெருமூச்சுடன் திரும்பிக்கொண்டான்.

மீண்டும் ரதத்தில் ஏறி “மாளிகைக்குச் செல்!” என ஆணையிட்டுவிட்டு ரதபீடத்தில் அமர்ந்துகொண்டான். ரதம் வடக்குச்சாலையை அணுகும்போது கடைசியாகத் திரும்பி அந்த கதாயுதத்தைப் பார்த்தான். அங்கிருந்து பார்க்கையில் அது குழந்தை விளையாடிவிட்டுச்சென்ற சிறிய விளையாட்டுச்செப்பு போலிருந்தது.

முந்தைய கட்டுரைநூஹ் நபிக்கு வழங்கப்பட்ட வேதம்
அடுத்த கட்டுரைநண்பர்களுக்கு…