ஜெ
நான் ஜோ டி குரூஸ் பற்றிய உங்கள் கட்டுரையை வாசித்தேன். நவயானா பதிப்பகம் நடத்தும் ஆனந்த் என்பவரும் ஆழிசூழ் உலகு நாவலை மொழியாக்கம் செய்த வ.கீதா என்பவர்களும் இடதுசாரி தலித்துக்கள் என்றும் அவர்கள் நிறைய தலித் நூல்களை வெளியிட்டுவருகிறார்கள் என்றும் சொன்னார்கள். அவர்களுடைய கொள்கைக்கு உகந்தது அல்லாத நூலை அவர்கள் எப்படி வெளியிடுவார்கள், ஆகவே ஜோ டி குரூஸ் மோடிக்கு ஆதரவு சொன்னபோது அவர்கள் நிறுத்தியது சரிதான் என்றார்கள். எனக்கும் அதுதான் சரி என்று தோன்றியது. உங்கள் கட்டுரையில் நான் அ.மார்க்ஸ் என்பவரை நீங்கள் தாக்கியிருப்பதை வாசித்தேன். அவரும் முற்போக்கு தலித் என்று தெரிந்துகொண்டேன்.அதன்பின் அவரது முகநூலை வாசித்தேன் அதில் அ.மார்க்ஸ் ஆனந்தைப்பற்றி இப்படி எழுதியிருக்கிறார்
மொத்ததில் நான் மிகவும் குழம்பிப்போனேன். இவர்களெல்லாம் யார் என்றும் ஏன் இதையெல்லாம் செய்கிறார்கள் என்றும் எப்படிப்புரிந்துகொள்வது?
சத்யநாராயணன்
அன்புள்ள சத்யநாராயணன்
நீங்கள் தெரிந்துகொள்ள எவ்வளவோ இருக்கிறது. அவ்வளவு எளிதாகப்புரிந்துவிடாது.
இப்படிச் சொல்கிறேன். ஓரளவு தெளிவாக இருக்கும். ஆனந்த், வ.கீதா முதலியோர் பிராமணர்களுக்குள் உள்ள முற்போக்குத் தலித்துக்கள். அ.மார்க்ஸ் காஞ்சா அய்லய்யா போன்றவர்கள் பிறபடுத்தப்பட்டோருக்குள் உள்ள முற்போக்குத் தலித்துக்கள். கெய்ல் ஓம்வெத் போன்ற வெள்ளைக்கார முற்போக்குத் தலித்துக்களும் உண்டு. தலித்துக்களை வாழ்க்கையில் முன்னேற்றி ஒளியேற்றி வைப்பது பற்றி இவர்களுக்குள் கடும்மோதல் நிலவுகிறது.
இவர்கள்தான் உண்மையான தலித்துக்கள். தலித்துக்கள் கொஞ்சம் கீழான தலித்துக்கள். சென்னையில் உள்ள ‘ஒரிஜினல் திண்டுக்கல் தலப்பாக்கட்டு பிரியாணி’ மாதிரி. திண்டுக்கல்லில் உள்ளது ஒரிஜினல் ஆகாது. அதற்கு பண ஓட்டம் கம்மி இல்லையா?
தலித்துக்கள் தங்களைத்தாங்களே முன்னேற்றிக்கொள்ள அவர்களுக்கு நிதி ஏதும் சென்றுசேர்ந்துவிடக்கூடாது என்பது உலகறிந்தது. அது அவர்களுக்குத் தீங்கை விளைவிக்கும் என்பதனால் இவர்கள் அந்த நிதியை நடுவே நின்று செவ்வனே கையாளுகிறார்கள். அயோத்திதாசருக்கு ஒரு மலர்போடுவதற்கோ அவர் பேரில் ஒரு கருத்தரங்கு போடுவதற்கோ தலித்துக்கள் தெருத்தெருவாக நன்கொடை கேட்டு அலைவதிலிருந்தே அவர்கள் துப்புக்கெட்டவர்கள் என்று தெரிகிறதல்லவா? ஆகவேதான் இவர்கள் உதவுகிறார்கள். கையில்லாதவர்கள் சாப்பிடமுடியாமல் கஷ்டப்படும்போது அவர்கள் தட்டில் இருந்து எடுத்துச் சாப்பிட்டு தட்டைக்காலிசெய்ய உதவுவது எவ்வளவுபெரிய தர்மம்!
பொதுவாக அன்னியநிதி என்பது பிராமண முற்போக்கு தலித்துக்களுக்கே கிடைக்கும். [இன்னும் சொல்லப்போனால் அய்யர்களுக்கு. அய்யங்கார்கள் அன்னியநிதியிலும் கர்நாடக சங்கீதத்திலும் ஒடுக்கப்படுவதற்கு எதிராக அணிதிரளவேண்டிய நேரம் நெருங்கிவிட்டது. அனைத்துலக அய்யங்கார்களே ஒன்றுபடுங்கள், நீங்கள் இழப்பதற்கு அக்கார அடிசிலன்றி வேறேதுமில்லை] பிற்படுத்தப்பட்ட முற்போக்கு தலித்துக்கள் கடுமையாக களத்தில் உழைத்தாலும்பிராமண முற்போக்குத் தலித்துக்களாகப் பார்த்து ஏதேனும் கிள்ளிக் கொடுப்பதைத்தான் எடுத்துக்கொள்ளமுடியும். அல்லது மானம்கெட்டு இஸ்லாமியத் தீவிரவாத மேடைகளிலெல்லாம் ஏறி நின்று கத்தவேண்டும். சிக்கல் அங்கேதான் ஆகவேதான் மார்க்ஸ் இப்படிச் சாத்துகிறார்.
நவயானா சர்வதேச உதவியுடன் தலித்துக்களை உய்விக்க போராடும் பிராமண முற்போக்குத் தலித் அமைப்பு. கிறித்தவச் சாயல் கொண்ட நூல்கள் அவர்களுக்கு நன்றாக உதவக்கூடியவை. ஆழிசூழ் உலகு ஏசுசபைப் பாதிரியார்களுக்குச் சமர்ப்பணம் செய்யப்பட்ட ஒரு நாவல். வழக்கம்போல முழுதாகப் படிக்காமல், அவசரப்பட்டு முடிவெடுத்துவிட்டார்கள். இப்போது அவர்கள் விலகிக்கொண்டிருப்பது அவர்களின் கொள்கைகளினால் அல்ல. எஜமானர்களின் கோபத்தை அஞ்சித்தான். அ.மார்க்ஸிடம் கேட்டால் அந்த ரகசியங்களைச் சொல்லக்கூடும்.
நீங்கள் எந்தச் சாதி என்று தெரியவில்லை. ஒரு அமைப்பை உருவாக்கி முறையான ‘பிராஜக்டு’களுடன் உரியமுறையில் முயன்றால் நீங்களும் தலித்துக்களை முன்னேற்ற உழைக்க முடியும். நல்ல வரும்படி உள்ள தொழில்.நீங்கள் பிறப்பால் தலித் அல்ல, நல்ல குடும்பப்பின்புலமும் படிப்பும் வருமானமும் உள்ளவர் என்றால் நீங்கள்தான் ஒரிஜினல் தலித்.
அதாவது தெள்ளத்தெளிவாகச் சொல்லவேண்டுமென்றால் அனைத்து தலித்துக்களும் தலித்தே, தலித்தல்லாதவர்கள் கூடுதல் தலித். அவ்வளவுதான்.
ஜெ
பின்னிணைப்பு
================
எச்சரிக்கை ‘அறிவுஜீவிப்’ பார்ப்பனர்கள் – அ.மார்க்ஸ்
19 July 2013 at 12:44 PM
இப்படியான ஒரு எச்சரிக்கையை அடிக்கடி செய்ய நேர்வது அப்படி ஒன்றும் மனதுக்கு உகந்த காரியமாயில்லை. எனினும் சமூக நகர்வுகளைக் கூர்ந்து கவனித்துக் கொண்டிருப்பவன் என்கிற வகையில் அதைத் தவிர்க்க இயலவில்லை.
‘வைதீகப் பார்ப்பானைக்கூட நம்பலாம், இந்த லௌகீகப் பார்ப்பானைத்தான் நம்பக் கூடாது’ எனப் பெரியார் ஈவெ.ரா அவர்கள் சொன்னதாகச் சொல்வார்கள். லௌகீகப் பார்ப்பனர்களையும் கூட நம்பிவிடலாம், இந்த அறிவுஜீவிப் பார்ப்பனர்களைத்தான் நம்பவே முடியாது என்று அதை அப்படியே திருத்திச் சொன்னால் இன்னும் பொருத்தமாக இருக்கும் என இப்போது தோன்றுகிறது.
சென்ற ஜூலை 13 ‘இந்து’ நாளிதழில் ஆனந்த் என்கிற மகா விஷ(ம)மான ஒரு நபரின் கட்டுரை வந்துள்ளது. எனது கட்டுரைகளைத் தொடர்ந்து வாசித்து வருபவர்களுக்கு இந்த நபரை விரிவாக அறிமுகப்படுத்த வேண்டிய தேவை இல்லை. சுமார் 10 ஆண்டுகளுக்கு முன் ‘அவுட்லுக்’ ஆங்கில இதழின் சென்னை நிருபராக இங்கு வாழ்ந்த நபர் இந்த ஆள். பெரியார் ஈ.வெ.ரா குறித்து இந்திய அளவில் அவதூறுக் கருத்துக்களைப் பரப்பிய இந்த நபருக்கு இங்கே உள்ள ஊழல் பேர்வழிகளும் அல்ல கைகள் சிலரும் துணை போனார்கள்.
ஆங்கிலத்தில் எழுதிய கட்டுரை ஒன்றில், “பெரியார் என்றால் தமிழ் நாட்டில் இப்போது யாருக்கும் தெரியாது. ‘பெரிய ஆறு’ என்றுதான் அச்சொல்லைத் தமிழ் மக்கள் புரிந்து கொள்கிறார்கள்” என எழுதிய நபர் இந்த ஆனந்த். தன்னைச் ‘சிறியவன் ஆனந்த்’ என்பதாகத் அழைத்துக்கொண்டு’ ஊழல் அல்லகைகள் துணையுடன் தமிழ்ச் சூழலில் திரிந்த இந்த நபருக்கு நான் எழுதிய பதில்களில் இந்த நபரை ‘லிட்டில் ஆனந்த்’ என ‘மொழி பெயர்த்து’ எழுதுவது வழக்கம். என்னைத் தவிர விடுதலை ராசேந்திரனும்கூட இந்த நபரின் விஷ(ம)த் தனத்தைக் கண்ண்டித்து எழுதியதாக ஞாபகம்.
ஒருமுறை கெய்ல் ஒம்வெத் மதுரை வந்திருந்தார். மதுரையில் அவருக்கு ஒரு கருத்தரங்கம். நானும் பேசினேன். பெரியார் ஈ.வெ.ரா குறித்து மிக விரிவாகவும் பாராட்டியும் பேசினார் கெய்ல். அடுத்த நாள் சென்னையில் நாங்கள் ஒரு கூட்டம் ஏற்பாடு செய்திருந்தோம். திண்ணியத்தில் தலித் தோழர்கள் சிலரின் வாயில் மலம் திணித்த கொடுமையைக் கண்டித்த கூட்டம் அது. திருவல்லிக்கேணி கிரெசென்ட் பள்ளி வளாகத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த அந்தக் கூட்டத்தில் திண்ணியத்திலிருந்து வந்திருந்த பாதிக்கப்பட்ட தோழர்களும் பங்கேற்க இருந்தது. கெய்லும் அதில் பங்கேற்க இசைந்திருந்தார். மதுரையிலிருந்து நான் அவரை ரயிலில் அழைத்து வந்தேன். நகரில், அவருக்கு ஒரு அறையும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. எக்மோரில் இறங்கியபோது அங்கே இந்த நபர் லிட்டில் ஆனந்த் நின்றிருந்ததோடு கெய்லை வற்புறுத்தித் தன் வீட்டிற்கும் அழைத்துச் சென்ற போது, சரி ஏதோ விஷமம் நடக்கப் போகிறது என நான் ஊகித்தது அடுத்த நாள் உறுதியாயிற்று.
அடுத்த நாள் கெய்ல் எங்கள் கூட்டத்தில் பேசியபோது, முதல் நாள் பேசியதற்கு முற்றிலும் நேர்மாறாகப் பேசினார். பெரியார் ஈ.வெ.ரா மற்றும் திராவிட இயக்கத்தை அவர் சாடினார்.
தாழ்த்தப்பட்டோருக்கு எதிராக இழைக்கப்படும் அநீதிகள் என்பன இன்று இந்திய அளவில் நடை பெறுகின்றன. கவுரவக் கொலைகளும் இன்று இந்திய அளவில் நடை பெறுகின்றன.
ஆனால் அதை ஏதோ தமிழகத்திற்கே உரித்தான ஒரு நடைமுறையைப் போல உருவகித்து, எல்லாவற்றிற்கும் திராவிட இயக்கமே காரணம் என்பதுபோல சொல்லாடல் ஒன்றை ஆங்கில ஊடக அதிகாரத்தின் துணையுடன் உருவாக்க ஆனந்தும் அல்லகைகளும் முயன்றனர். ஏற்கனவே இது போன்ற அரசியல் ம.பொ.சி. பெங்களூர் குணா போன்றோரால் மேற்கொள்ளப்பட்டதை இவர்கள் இந்த வகையில் பயன்படுத்திக் கொண்டனர்.
இதனால் பார்ப்பனர்களுக்கு என்ன பயன்?
தமிழ்ச் சூழலில் தந்தை பெரியாரும், திராவிட இயக்கமும் கட்டமைத்த பார்ப்பன ஆதிக்க எதிர்ப்பை ஒழிப்பதே இவர்களின் அடிப்படை நோக்கமாக இருந்தது.
ம.பொ.சி, குணா ஆகியோர் இதன் மூலம் இந்தியச் சமூக உருவாக்கத்தின் அடிப்படை முரண்பாடுகள் குறித்து, திராவிட இயக்கத்திற்கு எதிரான ஒரு “மாற்றுச் சிந்தனையை” (!) முன் வைத்தனர். அதாவது இந்தியச் சமூகத்தின் அடிப்படை முரண்பாடு சாதி அடிப்படையிலானது அல்ல என்பதுதான் அவர்கள் முன்வைத்த “மாற்றுச் சிந்தனை”. அடிப்படைச் சமூக முரண்பாடு சாதி அடிப்படையிலானது இல்லை என்றால் பின் வேறு எந்த அடிப்படையிலானது?
மொழி அடிப்படையிலானது என்றனர் குணா வழியினர். அதாவது தமிழ்ச் சூழலில் மூன்றில் ஒரு பங்கினராக உள்ள மொழிச் சிறுபான்மையினரே எல்லா இழிவுகளுக்கும் காரணம் என்றனர். அந்த வகையில் “வந்தேறி வடுகர்கள்” என்கிற கருத்தாக்கத்தையும் உருவாக்கினர். அவர்களின் கணக்குப்படி காலங்காலமாகப் பாலியல் சுரண்டல்களுக்கு ஆட்படுத்தப்பட்ட தேவதாசியரும் வந்தேறி வடுகர்கள்தாம். முன்னாள் முதல்வர் கருணாநிதியும் வந்தேறி வடுகராம்!!!. “அம்பேத்கராம் மராட்டியரை” தமிழக தலித்கள் வழிகாட்டியாகக் கொள்ளக் கூடாது எனவும் “வடுகரான” அருந்ததியருக்கு இட ஒதுக்கீடு அளிக்கக் கூடாது எனவும் குணா எழுதினார். அவர் வழியினர் இன்றளவும் அதை மறுத்தாரில்லை..
இதில் தமக்குச் சாதகமானவற்றை ஆனந்த் கும்பல் கைவசப் படுத்திக் கொண்டது. அம்பேத்கரை வழிகாட்டியாகக் கொள்ளக் கூடாது என்று இந்த நூற்றாண்டில் சொல்லிக் கொண்டிருக்க இயலாது. எனவே அந்த அம்சத்தை விட்டுவிட்டு மற்ற அம்சங்களைக் கையிலெடுத்துக் கொண்டது. இன்றளவும் இவர்கள் அருந்ததியருக்கான உள் ஒதுக்கீட்டை மறைமுகமாகவும் நேரடியாகவும் எதிர்த்து வருவது குறிப்பிடத் தக்கது. மற்றபடி பெரியார் எதிர்ப்பு, எல்லாவற்றிற்கும் திராவிட இயக்கங்களே காரணம் என்பவற்றை இவர்கள் உயர்த்திப் பிடிக்கின்றனர். ஊதிப் பெருக்கினர்.
தலித்கள் மீதான வன்கொடுமைகள் நடைபெறும்போது லிட்டில் ஆனந்த் முதலான பார்ப்பன அறிவுஜீவிகளும், அவர்களின் அல்லகைகளும் உடனடியாக அச்சூழலை உச்சபட்சமாகப் பயன்படுத்திக் கொள்வதை நீங்கள் காணலாம். (1) காலங்காலமாகப் பாதிக்கப்பட்ட மக்களின் உணர்வுக் கொந்தளிப்புகளின் இடையில் புகுந்து கொண்டு இவர்கள் “தீவிர சாதி எதிர்ப்பு” பேசுவார்கள். பாதிக்கப்பட்ட மக்களைக் காட்டிலும் உச்சபட்சமாக ஆவேசம் காட்டுவார்கள். (2) ஆனால் பார்ப்பன எதிர்ப்பு மட்டுமல்ல இந்துத்துவ எதிர்ப்பும் தேவை இல்லை என்பார்கள். (3) பிற எத்தகைய சமூக அநீதிகள் நடைபெறும்போதும் அவர்களின் மனச்சாட்சி கிஞ்சித்தும் கிலேசப் படாது.
இப்போது லிட்டில் ஆன்ந்தின் ஜூலை 13 தேதிய இந்து நாளிதழ்க் கட்டுரையை இன்னொரு முறை படித்துப் பாருங்கள். இத்தகைய பார்ப்பன அறிவு ஜீவிதத்தின் கொடூரம் புரியும்.
http://www.thehindu.com/opinion/op-ed/no-pink-chaddis-for-pmk/article4909282.ece
=====================