அன்பின் ஜெ..
ஆட்டத்தின், முதல் முக்கிய நகர்த்தல் துவங்கிவிட்டது எனத் தோன்றுகிறது.
அச்சம், பகைமை வளர்த்துப் போரில் சென்று நிற்கப் போவது தெளிவு. முரசத்தின், தோல் இறுக்கப் பட்டு விம்முகிறது.
பாரதப் பிரிவினையில், பாகிஸ்தானுக்குக் கொடுக்க வேண்டிய பணத்தை, கொடுக்க வேண்டி வலியுறுத்திய, (கொடுத்தால், அது போருக்குப் பயன்படும் என்னும் போதிலும்) அக்கிழவர், கொடுத்த அக்கணம், அறமென்னும் தராசில், பாரதம் அழுத்தமாக அமர்ந்து விட்டது.
பகைவனுக்கருள்வாய் நன்னெஞ்சே எனக் கவிஞன் பாடியதும் ஒரு அரசியல் பாடம்தான்.
“இவளுக்கு இன்று தேவை ஒரு மணிமுடி.. இவற்றை ஒரு அலகிலா ஊழ்நடனம் அளிக்குமென்றால், பார்த வர்ஷம் கண்டவர்களிலேயே மிகக் கொடூரமான ஆட்சியாளாராக இருப்பாள்”
தாயிழந்த, பொம்மைகளை வைத்து விளையாடிக் கொண்டிருந்த, தன் தந்தையின் சகோதரிகளால் bullying (மன்னிக்க, சரியான தமிழ் வார்த்தை கிடைக்கவில்லை) செய்யப் பட்டு தனிமைப் படுத்தப் பட்ட நம் காலக் கஷ்மீர இளவரசி கண்ணில் வந்து நிற்கிறாள்.
அழுகை முடிந்து, “அவர்கள் மீண்ட பின் மழை விடிந்த வானென இருக்கையில் ஒவ்வொரு சொல்லும் வீரியம் கொண்ட விதைகளாகுமென்றும் அவன் கணித்திருந்தான்” என்ன ஒரு நுட்பமான அவதானிப்பு.. அதன் மேல், எவ்வலவு பொருத்தமான உவமை..
அந்த குஜராத்தி, தென் ஆப்பிரிக்காவில், பல்வேறு பயணங்கள் வழியே அடையும் ஆன்ம முன்னேறங்களின் இறுதியாக, பிரம்மசர்யத்தைக் கைக்கொள்ளும் அக்கணம், அவர் பெரும் அரசியல் தலைவரில் இருந்து மகாத்மாவாக மாறுவதாகத் தோன்றுகிறது. மனைவியென்று ஒருவரும், அவர்களுக்கெனத் தனிக் கணங்கள் இருப்பதும் கூட, தன் சமூகத்திற்குச் செய்ய வேண்டிய தொண்டுகளுக்கு இடையூறாக இருக்கும் என்பது ஒரு பொதுநலன் நோக்கும் தலைமையின் உச்சகட்டப் பெருந்தன்மை. பீஷ்மரின் அத்துனை மேன்மைக்கும்,அஸ்தினாபுரம் ஒரு பெரும் அரசாகத் திரண்டெழுவதற்கும் இதுதானே அடிப்படை.
”பொய் கால்களற்ற மிருகம்; அரைப் பொய் மெய், நூறு கால் கைகள் கொண்ட கொலை மிருகம்”. அரசியல் தந்திரம் என்னும் பெயரில் இன்று உலகெங்கும் உலவுபவை இம்மிருகங்கள்தாம். அழிவுகளை உலகெங்கும் நிகழ்த்திக் கொண்டிருக்கின்றன. அதன் முன், எத்தனை பெரிய தியாகமும் அடிபட்டுப் போய் விடுகிறது. மனிதன் உருவாக்கிய ஆயுதங்களிலேயே மிகப் பலம் வாய்ந்தது இது.
பாலா