ஃபேஸ்புக், ஞாநி-கடிதம்

அன்புள்ள ஜெமோ,

நலமாக இருப்பீர்கள் என்று நம்புகிறேன்.

உங்கள் இணையமும் நூல்களும் பதிவை பற்றிதான் இருதினங்களாக சிந்தித்து கொண்டே இருந்தேன். பேஸ் புக், வீட்டில் “வாழும் நாகம்” போல் மெதுவாக வாழ்வில் நுழைந்து விட்டதோ என்று. இதற்கு முன்னும் அதை விட்டு விலகியிருக்கிறேன் என்றாலும் மொத்தமாக விலக முடிந்ததில்லை. விலகவேண்டிய அவசியம் இல்லை என்றே தோன்றி இருக்கிறது. ஏனெனில், அது ஒரு உலக செய்திகளின் சாளரமாக தோன்றியதே காரணம். இந்தியாவை விட்டு வெகு தூரத்தில் இருக்கும் எங்களுக்கு, சமூக வாழ்கை என்ற ஒன்று கிட்டத்தட்ட இல்லாத நிலையில், மெயின் நியுஸ் பத்திரிகைகள் கொடுக்காத சமூக செய்திகள், Window to the World ஆக பேஸ் புக் போன்ற சமூக வலைதளங்களே கொடுக்கின்றன. ஏன், நியுஸ் பார்ப்பதையே கிட்டத்தட்ட விட்டுவிட்டேன், அவை எல்லாம் பேஸ் புக்கே கொடுத்துகொண்டிருந்தது. அதில் இருந்து துண்டித்து கொள்வது கிட்டத்தட்ட சமூகத்தில் இருந்து துண்டித்து கொள்வது போல், இன்னும் குறுகிய, இறுக்கமான வாழ்வாக அமைந்து விடுமோ என்று பயந்தே அதில் மீண்டும் மீண்டும் இணைந்தேன். உண்மையில் அன்றாட இந்திய செய்திகள் அற்று வாழமுடியவில்லை. அவ்வாறு இருக்க கூடாது என்று நினைப்பதே காரணம். ஆனால் அப்படி நினைப்பதே ஒரு மாயையோ என்று இப்போது தோன்றுகிறது. சமகால சமூக நிகழ்வுகளில் இருந்து துண்டித்து கொள்வதால் ஒருவேளை இழப்பது ஒன்றும் இல்லை என்று கூட ஆகலாம். உங்கள் இந்த வார்த்தை //சமகாலத்தில் அரசியலில் இலக்கியத்தில் தொடர்ச்சியாக நூற்றுக்கணக்கான விவாதங்கள், அரட்டைகள் ஓடிக்கொண்டே இருக்கும். நாகர்கோயிலில் ஆயிரம் டீக்கடை இருந்தால் ஆயிரம் விவாதம் நிகழ்ந்துகொண்டிருக்கும். ஆயிரம் டீக்கடை விவாதத்தையும் பதிவுசெய்து அனைத்திலும் நாம் பங்குகொள்ளமுடியும் என்றால் அது ஒரு சமூகவலைத்தளம். அது நம்மை சமகாலவிவாதங்களுக்குள் மட்டுமே மூழ்கிவிடச்செய்கிறது. நிரந்தரமான, தொடர்ச்சியான எதிலும் ஈடுபட முடியாமல் வெறும் உடனடி அரட்டையில் நிறுத்திவிடுகிறது. அலைகளே எஞ்சுகின்றன, ஆழம் தென்படுவதில்லை. அலைகள் ஆழத்தை மறைக்கக்கூடியவை.// உண்மையாகவும் இருக்கலாம்…. அவ்வப்போது செய்து கொண்டிருந்ததை ஒரேடியாக செய்துவிட போகிறேன். சமூக வலைதளங்களில் இருந்து முழுவதுமாக விலக போகிறேன், என்ன, பேஸ் புக் இல்லாத நண்பகள் “தொடர்பில்லா நண்பர்களாகவே” இத்தனை காலங்களில் ஆகிவிட்டார்கள், இப்போது இருப்பவர்களும் தொடர்பு எல்லைக்கு அப்பால் சென்றுவிடுவார்கள் என்று நினைக்கிறேன்.

நிற்க,

உதயகுமாரின் சொத்துவிவரம் பற்றி நீங்கள் வெளியிட்ட பதில் மிகவும் தேவையான மற்றும் முக்கியமான ஒன்று என்று நினைக்கிறேன். அது எந்த ஒரு தனிநபரின் கேள்வியும் அல்ல, இணையம் முழுவது அவரை தூற்ற இன்னொரு காரணம் கிடைத்ததாக துள்ளும் நம் மக்களின் கீழ்மையின் பிரதிபலிப்புதான் அது (அறியாமை என்று சொல்லமாட்டேன்). “எனக்காக பல வருடங்களாக உழைக்கிறாயா, உன்னிடம் இருக்கும் எல்லாவற்றையும் என்னிடம் கொடு, உன்னிடம் இருக்கும் கடைசி காசுவரைக்கும் கொடுத்துவிட்டு, உனது உழைப்பையும், அறிவு செயல்பாடுகள் அனைத்தையும் கொடு, பின் நான் யோசிக்கிறேன், உனக்கு ஆதரவு கொடுக்கலாமா வேண்டாமா என்று” என்ற அயோக்கியத்தனத்தின் வெளிப்பாடுதான் அது. ஞாநி தனது சொத்து விபரங்களை தேர்தல் அறிக்கையில் வெளியிட்ட பின், பல பல கோடிக்கு சொத்துள்ள சில நண்பர்கள் என்னிடம் கேட்டது, “ஒ ஞாநியிடம் 1.7 கோடி உள்ளதாமே. அப்ப நான் எதுக்கு அவருக்கு தேர்தல் செலவுக்கு பணம் கொடுக்க வேண்டும்”, என்று. (இவ்வளவிற்கும் அவரது வேண்டுகோள், ஒருவரிடம் இருந்து 1000 ரூபாய் மட்டுமே) பல வருடங்களுக்கு முன் சென்னையில் இருந்த அவரது வீட்டை விற்று, அதில் வந்த பணத்தில் வாங்கி போட்ட நிலத்தின் இன்றைய மதிப்புதான் அது. அதன் மதிப்பு கிட்டதட்ட 1 கோடியில் இருந்ததில் இருந்து எனக்கு தெரியும், எதுவும் செய்யாமலேயே அதன் மதிப்பு வளர்ந்து கொண்டுதான் இருக்கும். அதையும் விற்க, முழுவதும் “வெள்ளை” பணமாக கொடுத்து வாங்குவதற்கான ஒரு நல்ல “பையரை” ரொம்ப நாட்களாக தேடி கொண்டிருக்கிறார், இன்னும் கிடைத்தபாடில்லை. 1.7 கோடி என்றஉடன், எதோ வீட்டில் சாக்கு மூட்டையில் கட்டி வைத்திருக்கிறார் என்று நினைப்பார்கள் போல. வேறு என்ன சொல்ல.

நன்றி, ஜெமோ.

சரவணன் விவேகானந்தன்

அன்புள்ள சரவணன்,

மிக எளிதாகக் கடந்துசெல்லக்கூடிய சிக்கல்தான் இது. இணையத்தை பயன்படுத்தலாம். அதில் நீங்கள் வாசிக்கவிரும்பும் இணையதளங்களை மட்டும் தேர்வுசெய்து வைத்துக்கொள்ளலாம். அன்றாடச்செய்திகளுக்கும் பிறசெய்திகளுக்கும் ஜூனியர்விகடனில் இருந்து சவுக்கு வரை தளங்கள் உள்ளன அல்லவா? வரையறுக்கப்பட்ட நண்பர்கள் கொண்ட உரையாடல்களங்களும் உவப்பானவையே

அத்துடன் ஒன்றுண்டு, உங்களுக்கு ஆர்வமுள்ள துறையில் ஒருவாரத்துக்கு ஒரு நூலேனும் வாசிக்கவேண்டும் என்ற நிபந்தனையை உங்களுக்காகப் போட்டுக்கொள்ளுங்கள். அதுவே உங்களை மீட்டுவிடும்.

நான் எழுதியவை ஒன்றும் அபூர்வ செய்திகள் அல்ல. சென்ற இரண்டாண்டுகளில் தொழில், கல்வி தளங்களில் தீவிரமாக இருக்கும் என் நண்பர்கள் பலரும் தாங்களே உணர்ந்து சமூகவலைத்தளங்களில் இருந்து விலகிவிட்டிருக்கிறார்கள்

ஜெ

Life without Facebook? A blessing

முந்தைய கட்டுரைகதைச் சதுரங்கம்
அடுத்த கட்டுரைஜோ டி குரூஸ், அ.மார்க்ஸ், நவயானா ஆனந்த்- எளிய விளக்கம்