இந்தக் கருத்துக்களை முன்வைப்பதற்கு முன்பு என்னுடைய அரசியல்நிலைபாட்டை முன்வைத்துவிடுகிறேன். தேர்தலை ஜனநாயகத்தில் இயல்பாக நிகழும் ஒரு எளிய அரசியல்தலைமை மாறுதலாக மட்டுமே பார்க்கிறேன். அதன்மூலம் பொருளியல், சமூக மாறுதல்கள் ஏதும் நிகழப்போவதில்லை. மிக எளிமையான சில மாற்றங்கள் நிகழலாம். எழுத்தாளனாக நான் அவற்றில் நம்பிக்கை கொள்ளமுடியாது. நான் நம்பும் மாற்றம் வேறு.
அது சமூகத்தின் மனநிலையில், பண்பாட்டு அமைப்பில் உருவாகும் மாற்றம். இப்படிச் சொல்கிறேனே, ஒரு சமூகமே ஊழலால் நிறைந்திருக்கையில் ஊழலுக்கு எதிரான சமூகமனநிலை மாற்றமே உண்மையான மாற்றத்தைக் கொண்டுவர முடியும். ஆ.இராசா வாக்குசேகரிக்கச் செல்லும்போது ஓட்டுப்போட பணம் கோரி வரிவரியாக நிற்கும் மக்கள்தான் ஊழலுக்கு அடித்தளம், இராசா அல்ல. ஆகவே இராசா போய் இராணிவந்தாலும் ஊழல் செய்யாமல் இருக்கமுடியாது. நம் மக்கள் ஐந்துவருடம் ’எவன் சார் யோக்கியன்’ என்று பசப்புவார்கள், கொதிப்பார்கள். தேர்தல்காலத்தில் காசுகொடுத்தவனுக்கும் சாதிக்காரனுக்கும் மட்டுமே வாக்களிப்பார்கள்.. பரமஅயோக்கியன் என்று தெரிந்தே!இங்குள்ள உண்மையான ஊழல்மன்னர்கள் மக்களே.
ஆகவே தேர்தலை நான் எப்போதுமே பெரிதாக எடுத்துக்கொள்வதில்லை. இதுவரை எந்தத்தேர்தலைப்பற்றியும் கருத்துக்கள் தெரிவித்ததில்லை. சொல்லப்போனால் தேர்தல் நெருங்கும்போது செய்தித்தாள்களை முழுமையாக தவிர்த்துவிட்டு வேறெதிலாவது ஈடுபடுவது என் வழக்கம். நான் செய்தித்தாள்களை வாசித்து எழுபதுநாட்களாகின்றன. அரசியல் சார்ந்து நான் சொன்ன ஒரே கருத்து, ஊழல்ஒழிப்பை ஒரு முக்கியமான கோஷமாக முன்வைக்கும் ஆம் ஆத்மியின் வேட்பாளர்கள் பற்றியது. அவர்கள் பெறும் ஓட்டு ஊழலுக்கு எதிராக சற்றேனும் மக்கள் கசப்பு உள்ளது என அரசியல்வாதிகளுக்குக் காட்டுமே என எதிர்பார்க்கிறேன். ஆகவேதான் உதயகுமாருக்கும் பிறருக்கும் ஆதரவுகோரி அறிக்கையில் கையெழுத்திடும்படி நண்பர் ஸ்டாலின் ராஜாங்கம் கோரியபோது ஒத்துக்கொண்டேன். தேசிய அளவில் ஆம்ஆத்மி ஒரு பத்துலட்சம் வாக்கை பெறுமென்றால் அது ஒரு மாற்றத்துக்கான தொடக்கம் என நினைப்பேன். அவ்வளவுதான்.
என் வரையில் தொடர்ந்து நீண்டகாலம் நடைபெறும் கருத்தியல் நடவடிக்கைகள், காந்தியப்போராட்டங்கள் வழியாக நிகழும் உண்மையான மாற்றத்தை மட்டுமே நம்புகிறேன். தேர்தல்காலத்தில் உச்சகட்ட பிரச்சாரங்கள் வழியாக இன்னார் வந்தால்தான் மீட்பு என்றும் இன்னார் வந்தால் பேரழிவு என்றும் செய்யப்படும் ஒட்டுமொத்தக்கூச்சல்களுக்கு அப்பால் நிற்கவே நான் விழைவேன். சமகாலத்து அரசியல்சார்ந்த, மதம்சார்ந்த மூளைச்சலவைகளை தாண்டிச்சிந்திப்பவனே எழுத்தாளனாகச் செயல்படமுடியும்.
*
நேற்று டெக்கான் கிரானிக்கிள் நாளிதழில் இருந்து அழைத்து ஜோ டி குரூஸ் விவகாரம் பற்றிச் சொல்லி என் கருத்தை கேட்டார்கள். ஜோவின் ஆழிசூழ் உலகு நாவலை நவயானா பதிப்பகம் வெளியிட ஒப்பந்தமிட்டு வ.கீதாவால் நாவல் மொழியாக்கமும் செய்யப்பட்டுள்ளது. ஜோ சில நாட்களுக்கு முன்பு மோடிக்கு ஆதரவு தெரிவித்திருக்கிறார். அதனால் அவரது நூலை வெளியிடமுடியாது என்று சொல்லி அப்பதிப்பகம் பின்வாங்கியிருக்கிறது.
நண்பர்களிடம் என்ன நடந்தது என்று கேட்டேன். அவர்கள் சில இணைப்புகளை அனுப்பியிருந்தனர். அதில் முக்கியமானது அ.மார்க்ஸ் ஜோ டி குரூஸ் பற்றி எழுதியது. ஓரு கூட்டத்தில் ஜோவைப் பார்த்ததும் அவருக்கு ‘அந்த ஆசாமியின்’ முகத்தில் கூட விழிக்கவேண்டும் என்று தோன்றவில்லையாம். தமிழ் தலைநிமிர்ந்து நோக்கவேண்டிய படைப்புகளை அளித்த ஒரு படைப்பாளியைப்பற்றி இப்படிச் சொல்ல தனக்கு என்ன குறைந்தபட்சத் தகுதி என்று அடிப்படை நேர்மையோ அழகுணர்வோ இல்லாத இந்த ஆசாமிக்கு தோன்றாதது நியாயம். வாசிக்கும் இலக்கிய வாசகர் நான்குபேருக்காவது தோன்றவேண்டாமா? இந்த ஆசாமியும் இவர்களுக்கு கீழே திரளும் வெற்றுக்கும்பலும் யாரென்றே தெரியாமலாகும் காலத்திலும் ஜோவின் புனைவுகள் வாழுமென அறிந்த பத்துபேராவது நம்மிடம் வேண்டாமா?
எந்த இலக்கியவாதி எதற்காக வசைபாடப்பட்டாலும் உடனே வந்து சேர்ந்து கும்மியிடிக்கும் ஒரு கும்பல் உடனே சேர்ந்துகொள்கிறது. எழுத்து-வாசிப்பு வாசனையே அற்றது. அவர்களை புரிந்துகொள்ள முடிகிறது. ஆனால் கூடவே பேசிக்கொண்டிருக்கும், கையெழுத்திட்டிருக்கும் முற்போக்கு எழுத்தாளர்களை பெண்ணியப்புயல்களை ஒன்று கேட்க விரும்புகிறேன். இந்து அடிப்படைவாதத்தை விட பத்துமடங்கு பிற்பட்டதும், இஸ்லாமிய சமூகத்தையே கண்கூடாக மிரட்டிக்கட்டுப்படுத்தி அழித்துக்கொண்டிருப்பதுமான கொலைகார இஸ்லாமிய அடிப்படைவாதத்தின் குரலாகச் செயல்படும் அ.மார்க்ஸ் போன்றவர்களிடம் அவர்கள் சில கேள்விகள் கேட்டிருக்கவேண்டாமா?
பெண்களை வீட்டில் அடைத்துவைக்க ஆணையிடும், அவர்களின் கல்வி வேலை உரிமைகளை நசுக்கி பத்தாம் நூற்றாண்டுக்குக் கொண்டுபோகத் துடிக்கும் அமைப்புகளின் பிரச்சாரகராகச் செயல்படும் இந்த ஆசாமியா முற்போக்கு ஜனநாயகம் பேசுவது? உலகமெங்கும் இஸ்லாமியர் உட்பட அப்பாவிகளைக் கொன்றொழிக்கும் கீழ்த்தர பயங்கரவாத அமைப்புகளின் கைக்கூலியா இங்கே மதச்சார்பின்மை பேசுவது? எளிய இஸ்லாமியர்களின் வாழ்க்கையையே கட்டைப்பஞ்சாயத்துக்கள் வழியாக கட்டுப்படுத்தி தண்டல்செய்யும் மதவெறி அமைப்புகளிடம் கைநீட்டி மேடையேறிப் பிழைக்கும் இவரா முற்போக்குமுகம்? இவரை முன்வைத்துப்பேச இவர்களுக்கு வெட்கமே இல்லையா?
*
வெட்கம் உண்டு. அதை அந்தரங்கமாகச் சொல்லவும்செய்வார்கள். ஆனால் காரணம் வேறு .அதுதான் ஜோ டி குரூஸ் நாவல் விவகாரத்தில் வெளிப்படுகிறது. இந்தியாவின் தேசிய மையஓட்ட அறிவியக்கத்தின் சில போக்குகளை நாம் புரிந்துகொள்ள வேண்டும். இந்தியாவுக்குச் சுதந்திரம் கிடைத்த சில ஆண்டுகளில் இங்கே உருவான தேசியஅறிவியக்கம் என்பது முழுக்கமுழுக்க இடதுசாரித்தனமானது. ஒன்று நேரடியான இடதுசாரிப் பார்வை. இரண்டு, லோகியா வகை சோஷலிஸ்டுகள் முன்வைத்த மென்மையான இடதுசாரிப்பார்வை, மூன்று ,நேருவின் காங்கிரஸ் சொன்ன ருஷ்யஆதரவு சார்ந்த இடதுசாரித்தனம்.
இம்மூன்றையும் சார்ந்த அறிஞர்கள் இந்தியாவின் சிந்தனையை முன்னெடுத்தனர். மகாலானோபிஸ் போன்றவர்கள் பொருளியல் திட்டமிடலில். பி.என்.ஹக்ஸர் போன்றவர்கள் கல்வியில். டி.டி.கோஸாம்பி போன்றவர்கள் வரலாற்றாய்வில். இந்தியாவின் கல்வி அமைப்புகள் முழுக்க இவர்களின் முழுக்கக்கட்டுப்பாட்டில் இருந்தன. ஆய்வு அமைப்புகள் அவர்களால் முழுமையாகவே கைப்பற்றப்பட்டிருந்தன. அரசு நிதிகள், அன்னியநிதிகள் முழுமையாகவே அவர்களால் ஆளப்பட்டன. அவை இன்று அவர்களின் மாணவர்களின் கட்டுப்பாட்டில் உள்ளன.
இந்தியக்கல்விநிறுவனங்களையும் பண்பாட்டமைப்புகளையும் இடதுசாரிச் சிந்தனைகளால் நிறைத்ததில் ஜவகர்லால் நேருவுக்கும் இந்திரா காந்திக்கும் கல்வி-பண்பாட்டு ஆலோசகராக இருந்த பி.என்.ஹக்ஸருக்குப் பெரும்பங்கு உண்டு.அவர் உறுதியான சோவியத் ஆதரவாளர், அல்லது சோவியத் அரசின் உறுதியான ஆதரவைப் பெற்றவர். அவர் காலகட்டத்தில் மெல்லமெல்ல உருவாகி , கால்நூற்றாண்டில் உறுதிப்பட்ட அந்த இடதுசாரி மேலாதிக்கமே இன்றும் நீடிக்கிறது.
இந்திய சிந்தனை நவீனமானதற்கும் இந்தியாவில் ஜனநாயக அடிப்படைகள் நிறுவப்பட்டமைக்கும் இந்தியாவில் ஆசாரங்களையும் மதக்கெடுபிடிகளையும் தாண்டி சுதந்திர சிந்தனை மேலெழுந்ததற்கும் பெரும் பங்களிப்பாற்றிய மேதைகள் பலர் இடதுசாரிகளில் உண்டு. இவர்களை மேற்கோள் காட்டாமல் என்னால் பேசமுடிவதில்லை. எம்.என்.ராய், இ.எம்.எஸ், கெ.தாமோதரன் போன்றவர்களின் நேரடி மாணவர்களையே நான் என் வழிகாட்டிகளாகக் கொண்டிருக்கிறேன்.
ஆனால் இவர்களின் வழிவந்தவர்கள் மெல்லமெல்ல இந்த இடதுசாரி அரசியல் நம்பிக்கையை ஒரு அறிவுத்தள நிபந்தனை போல ஆக்கினர். அந்த அரசியல்சரிகளை ஏற்காதவர்களை ஒதுக்கவும் பழிவாங்கவும் தொடங்கினர். இந்தியப் பண்பாட்டுமரபு குறித்தும், இந்தியாவின் இனப்பன்மை குறித்தும், இந்து மெய்யியல் குறித்தும் இவர்கள் சொன்ன கருத்துக்கள் எளிமையான ஐரோப்பியச்சார்பு கொண்டவை. மேலோட்டமானவை. அவை உரியமுறையில் மறுக்கப்பட்டபோதும்கூட ஏற்கமறுத்து தங்கள் தரப்பை மதநம்பிக்கைபோல முன்வைத்தனர். எதிர்தரப்பை எதிரிகளாக எண்ணி வசைபாடினர்
ஒரு கட்டத்தில் இந்த இடதுசாரி முத்திரை என்பது வெறும் ஆள்சேர்ப்பு அடையாளம் மட்டுமாக ஆகியது.அமைப்புகளைக் கைப்பற்றிக்கொண்டு லாபங்களை பங்கிடுவதற்கான பொதுப்புரிதலாக மட்டுமே இடதுசாரித்துவம் மாறியது. அதன் மோசமான உதாரணங்களையே இன்று நாம் காண்கிறோம்.
நான் எழுதவந்த காலகட்டத்தில் இந்த இடதுசாரி மூர்க்கத்தை எதிர்த்தேன், என் ஆசிரியர்கள் பலர் இடதுசாரிகளாக இருந்தும்கூட. காரணம் நான் என் வாழ்க்கையில் உணர்ந்து என் எழுதில் முன்வைக்க விரும்பிய ஆன்மிகத்தளம் இந்த இடதுசாரி எளிமைப்படுத்தலுக்கு அப்பாற்பட்டது. அவர்களைத் தாண்டாமல் என்னால் எழுதமுடியாதென உணர்ந்தேன்
மூத்தோர் அன்றே என்னிடம் எச்சரித்தனர், என் ஒரு படைப்புகூட மொழியாக்கம் செய்யப்படாது என. ஒரு கருத்தரங்குக்கூட நான் அழைக்கப்படமாட்டேன், அரசாங்க அமைப்பு சார்ந்த ஒரு சிறிய விருதுக்குக்கூட நான் தேர்வுசெய்யப்படமாட்டேன் என. அதுவே இருபதாண்டுக்காலமாக என் நிலை.ஆனால் நான் என் கருத்துக்களில் தெளிவாகவே இருந்தேன்.அவை எனக்கு வாசகர்களை அளித்தன.
இடதுசாரிகளுக்கு எதிரான வலதுசாரி அரசியல் என்பது இங்கே எண்பதுகளுக்குப்பின்னரே தேசிய அளவில் சற்றேனும் வலிமை பெற்றது. அதாவது இந்திரா நெருக்கடி நிலையைக் கொண்டுவந்தபோது அதற்கு எதிராக இடதுசாரி அரசியலின் சில பிரிவுகளுடன் கைகோர்த்துக்கொண்டபின்னரே வலதுசாரி அரசியலுக்கு சற்றேனும் தேசிய இடம் உருவாகியது. மெல்ல அது வளர்ந்து இன்று தேசிய அளவில் ஒரு மறுபக்கமாக உள்ளது.
ஆனால் அதற்கான அறிவுத்தளம் உருவாகவே இல்லை. இன்றுகூட தேசிய அளவிலான அனைத்து இலக்கிய- பண்பாட்டு அமைப்புகளும், அனைத்து கல்விநிறுவனங்களும் முற்றிலும் இடதுசாரிகளின் பிடியில்தான் உள்ளன. சென்ற பாரதிய ஜனதா ஆட்சியின்போது அவற்றை கைப்பற்ற சில மெல்லிய முயற்சிகள் நிகழ்ந்தபோது அனைத்து ஊடகங்களிலும் ‘கல்வியை காவிமயமாக்குகிறார்கள்’ ‘கலாச்சாரத்தை காவிமயமாக்குகிறார்கள்’ என்றெல்லாம் கூச்சலிட்டு அவற்றை முறியடித்தனர் இடதுசாரிகள். அன்றைய பாரதிய ஜனதா ஆட்சி கூட்டணிபலத்தால் நீடித்த ஒன்று. மேலும் அறிவதிகாரத்தின் முக்கியத்துவமும் வலதுசாரிகளுக்குத் தெரியவில்லை. போனால்போகிறது என்று விட்டுவிட்டர்கள்.
அத்துடன் இந்திய அறிவியக்கம் என்பது பாதிக்குமேல் அன்னியநிதியால் செயல்படுவது. அன்னியநிதியை அளிக்கும் பல்கலைகள் மற்றும் கலாச்சாரக்குழுமங்களுடன் தொடர்புடையது. இதழியல்துறையை பல்வேறு நிதிக்கொடைகள் மற்றும் கருத்தரங்க அழைப்புகள் வழியாக அன்னிய பண்பாட்டமைப்புகள் கட்டுப்படுத்துகின்றன. ஐம்பதாண்டுகளுக்கும் மேலாக வேரூன்றி இருக்கும் இந்த பெரும் வலைப்பின்னலை எளிதில் கட்டுப்படுத்தமுடியாது.
இந்தியாவின் வலதுசாரி அமைப்பான பாரதியஜனதாக் கட்சியும் ஆர்.எஸ்.எஸ் அமைப்பும் அடிப்படையில் அறிவார்ந்த அடித்தளம் அற்றவை. வெறும் தொண்டர் அரசியல் கொண்டவை. அறிவார்ந்த செயல்பாடுகள் மேல் ஈடுபாடோ அறிவுஜீவிகள் மேல் மரியாதையோ அறிவியக்கம் பற்றிய நவீன நோக்கோ , கருத்துக்களில் விரிந்த பார்வையோ, அடிப்படைச் சமநிலையோ அவர்களுக்கு இல்லை. தங்கள் கோஷங்களை எதிரொலிப்பவர்களை மட்டுமே அவர்களால் ஏற்றுக்கொள்ளமுடியும்.
அத்துடன் அவர்களிடமிருக்கும் அறிவுப்புலம் என்பது மிகமிகப் பழைமையானது. பெரும்பாலும் பிராமண மேட்டிமைவாதம்தான் அது. அவர்கள் நாளை அதிகாரத்துக்கு வந்தால்கூட மிகப்பழைமையான நோக்குள்ள சில பிராமணர்களை கல்வியமைப்புகளில் கொண்டுசென்று நிறுவி அவர்களை உளறவிட்டு தங்களை கேலிக்குரியவர்களாக ஆக்கிக்கொள்வார்கள். இன்றையநிலையில் அதற்கப்பால் செல்ல அவர்களால் இயலாது
இது இந்தியாவின் பெரும்பாலான எழுத்தாளர்களுக்குத் தெரியும். ஆகவே அவர்கள் இந்தியாவின் இடதுசாரி அறிவுத்தளத்துக்கான ‘கப்பங்களை’ ஒழுங்காகக் கட்டிவிடுவார்கள். அப்படிக் கட்டுபவர்களுக்கே இங்கே கருத்தரங்க அழைப்புகள், விருதுகள், அங்கீகாரங்கள், நிதியுதவிகள், மொழியாக்கவசதிகள் கிடைக்கும்.ஏன் நூல்களுக்கான நூலக உத்தரவுகள்கூட இடதுசாரிகளின் தடையில்லாச் சான்றிதழ் பெற்றவர்களுக்கே கிடைக்கும்.சென்ற ஐம்பதாண்டுக்காலத்தில் சாகித்ய அக்காதமியின் விருதுகளும், நிதிகளும் எவருக்குக் கிடைத்துள்ளன என்ற பட்டியலைப் பார்த்தால் இது தெளிவாகவே விளங்கும்.
சிறந்த உதாரணம் அம்பை ஜோ டி குரூஸ் பற்றிச் சொல்லியிருப்பது. ஜோவின் நாவல் மிகச்சிறந்தது என்றும் அதற்கான விருதுக்குழுவில் இருந்தபோது அந்நாவலின் தகுதியினால் அதை அளித்ததாகவும் சொல்லும் அவர் ஜோ இன்று மோடியை ஆதரித்திருப்பதனால் அவ்விருதை அளித்தமைக்காக வெட்குவதாகவும், அது முன்னரே தெரிந்திருந்தால் விருதை அளித்திருக்கமாட்டோம் என்றும் சொல்கிறார்.ஆக, இங்கே விருதுகளுக்கும் அங்கீகாரங்களுக்கும் பிரசுரத்துக்கும் நிதியுதவிக்கும் இடதுசாரி சாதக அரசியல் நிலைபாடு என்பது ஒரு முக்கியமான நிபந்தனை.
அதை அறிந்திருப்பதனால்தான் அந்தவகை ‘வெற்றிகளுக்கான’ சபலங்கள் கொண்ட எழுத்தாளர்கள் இடதுசாரி அரசியல் சரிகளின் கீழே திரள்கிறார்கள். உள்ளுக்குள் மோடிக்கு ஓட்டுப்போடக்கூட அவர்கள் நினைக்கலாம். ஆனால் இந்தியச்சூழலில் வேறுவழியில்லை.
*
இந்தப்பின்னணியில்தான் ஜோ டி குரூஸின் நாவல் நிறுத்தப்பட்டதை நாம் புரிந்துகொள்ளவேண்டும். ஜோவுக்கு அவர் இடதுசாரி -இஸ்லாமிய அடிப்படைவாதக் கூட்டுக் கருத்தியலுக்கு கப்பம் கட்டவில்லை என்பது தெரியாமல் சாகித்ய அக்காதமி முதலியவை கொடுக்கப்பட்டுவிட்டன. நூல் மொழியாக்கமும் செய்யப்பட்டுவிட்டது. காரணம் அவர் கத்தோலிக்கக் கிறித்தவர் என்ற அடையாளம். இன்று அவர் உண்மையில் கப்பம் கட்டவில்லை என்று தெரிந்ததும் கொதிக்கிறார்கள்
ஜோ டி குரூஸின் நாவலை பதிப்பகம் நிறுத்தியிருக்கிறது. அவர் தங்கள் அரசியல் நிலைபாடுகளை ஏற்கவில்லை என்கிறார்கள். அவர் அப்படி அவர்களுக்கு வாக்களித்திருக்கிறாரா என்ன? அவரது நூலை அவர்கள் வெளியிட்டால் அவர் எஞ்சியவாழ்நாளெல்லாம் அவர்களின் கருத்தியல்அடிமையா என்ன? சரி, நூலை இவர்கள் வெளியிட்டுவிட்டிருந்தால் என்ன செய்வார்கள்?
அப்பட்டமான மிரட்டல் இது. மிரட்டல் நூலைவெளியிடமாட்டோம் என்றல்ல. இனி இந்திய இடதுசாரிகளால் ஆளப்படும் அனைத்து ஊடகங்களும், அனைத்துக் கல்வியமைப்புகளும், அனைத்து அரசுசார் பண்பாட்டமைப்புகளும், அனைத்து சர்வதேச இலக்கியத் தொடர்புகளும் ஜோவுக்கு மறுக்கப்படும் என்பதே இந்த மிரட்டலின் சாராம்சம்.
இம்மிரட்டல் ஜோவுக்கானது மட்டும் அல்ல. அவர்கள் கோருவது இலக்கியவாதியின் விசுவாசப் பிரகடனம். அப்பிரகடனத்தில் கையெழுத்திடாவிட்டால் என்ன ஆகும் என ஜோ டி குரூஸுக்கு ஒரு அவமதிப்பை நிகழ்த்திக்காட்டி எச்சரிக்கிறார்கள். தமிழ் எழுத்தாளர்களில் உள்ள எளிய எழுத்தாளன் கூட இதன் உள்ளடக்கமென்ன என்பதை அறிவான். அதை ஏற்காவிட்டால் இந்தியாவில் எளிய இலக்கிய அங்கீகாரம் என்றுகூட அவன் எதிர்பார்க்க ஏதுமில்லை என்று அவனுக்குத்தெரியும்.
எவ்வளவு பெரிய கீழ்மை. நான் உனக்கு பிச்சைபோட்டிருக்கிறேன், பொறுக்கிக்கொண்டு காலம் முழுக்க நன்றிவிசுவாசத்துடன் இருக்கவேண்டியதுதானே என்கிறார்கள். இந்தியமொழிகளில் எழுதும் எழுத்தாளர்கள் இவர்கள் தின்னும் பிரியாணியில் இருந்து எடுத்துவீசப்படும் எலும்புகளுக்காக வால்குழைக்கும் நாய்களென எண்ணுகிறார்கள்.
தன் கொள்கையில் உறுதி கொண்ட எழுத்தாளன் மோடிக்கு எதிராக இறங்கி வேலைசெய்யட்டும். அது நிமிர்வு. யூ.ஆர்.அனந்தமூர்த்தி மோடிக்கு எதிராகக் கருத்துச் சொன்னபோது அவருக்கு எதிராக ஒருவர் என்னிடம் கேட்ட வினாவுக்கு இவ்விடையையே நான் அளித்தேன். ஆனால் எழுத்தாளன் அற்பச்சுயநலங்களுக்காக கும்பல் சேர்ந்து கூச்சலிடுவானென்றால் அது சிறுமையின் உச்சம். [தன்னை அனந்தமூர்த்தியுடன் கூலி மார்க்ஸ் ஒப்பிட்டுக்கொள்வதைப்போல அனந்தமூர்த்திக்கு ஓர் அவமதிப்பு வேறில்லை]
ஜோ ஒரு துறைமுகவியலாளர். ஐந்தாண்டுகளுக்கு முன்னர் நான் அவரைச் சந்தித்தபோதே அவர் குஜராத் அரசின் துறைமுகநிர்வாகம் குறித்து பெருமதிப்பு கொண்டிருப்பதைச் சொன்னார். அதனடிப்படையில் அவர் மோடிக்கு ஆதரவு தெரிவிக்கிறார். அது பிழையாக இருக்கலாம். பிறரால் ஏற்கக்கூடாததாகவும் இருக்கலாம். அவருக்கு ஓர் அரசியல் நிலைபாடு எடுக்க எல்லா உரிமையும் உள்ளது. அதன்பொருட்டு அவர் மிரட்டப்பட்டு அவமதிக்கப்பட்டு ஒதுக்கப்படுவாரென்றால் அதுதான் ஃபாசிசம் என்பது.
எழுத்தாளன் எதையும் சொல்லலாம். எதையும் சிந்திக்கலாம். அந்தச் சுதந்திரத்தையே இந்தியா வழங்கியிருக்கிறது. காந்தியின், அம்பேத்கரின், நேருவின் இந்தியா. எந்த அடிப்படையைக் கொண்டு நேற்று எம்.எஃப் ஹூசெய்னின் கருத்துச் சுதந்திரத்தை ஆதரித்தேனோ அதே அடிப்படையைக் கொண்டு இப்போது ஜோவை ஆதரிக்கிறேன். ஹுசெய்னை ஆதரித்துக்கொண்டு தஸ்லிமா நஸ்ரினுக்கு கொலைமிரட்டல் விடுப்பவர்களின் மேடையில் முழங்கும் போலிகளுக்கும் கூலிகளுக்கும் நான் சொல்வதை உணரமுடியாது. நான் பேசுவது அடிப்படைநேர்மையும் நுண்ணுணர்வும் கொண்டவர்களிடம்.
எழுத்தாளன் எதைச்சொல்லவும் உரிமைகொண்டவன். சமயங்களில் அவன் சொல்வது பிழையாக இருக்கலாம், கிறுக்குத்தனமாகவும் அத்துமீறலாகவும் இருக்கலாம். ஒழுக்கமீறலாகவோ அறமீறலாகவோகூடத் தோன்றலாம். ஆனால் அவன் வெற்று அரசியல்குண்டர்களால் கட்டுப்படுத்தப்படுவானென்றால் அங்கே சிந்தனையும் கலையும் அழியத்தொடங்குகின்றன. இது இன்னும் சீனாவோ சவூதி அரேபியாவோ ஆகவில்லை என்று மட்டும் இந்தக்கும்பலுக்குச் சொல்லவிரும்புகிறேன்.
*
கடைசியாக. இன்னும் சிலநாட்களில் தேர்தல்முடிவுகள் வரும். மோடி வெல்லலாம். வென்றால் என்ன ஆகும்? ஒன்றும் ஆகாது. அதே காங்கிரஸ் ஆட்சி வேறு முகங்களால் செய்யப்படும். இடதுசாரி அறிவுத்தளம் மெல்ல தன் குரலை அடக்கும். அவர்கள் கட்டிப்பிடித்து உறிஞ்சி உண்டுகொண்டிருக்கும் நிதிகளிலும் பதவிகளிலும் மோடி கைவைக்காதவரை அமைதியாகவும் இருப்பார்கள். தொட்டால் லபோதிபோ என கூச்சலிடுவார்கள். பெரும்பாலும் மோடி கையை வைக்கப்ப்போவதில்லை. ஒருவேளை வலுவாக மோடி செயல்பட்டால், மோடியை வெல்லமுடியவில்லை என்றால் மோடி ஒன்றும் அவ்வளவு கெட்டவரில்லை என்று ஆரம்பிப்பார்கள்.
ஒருவேளை அப்போது என்னைப்போன்றவர்கள்தான் மோடிக்கு எதிராக ஏதாவது சொல்லவேண்டியிருக்கும். இப்போதிருப்பதுபோல அனைத்து அதிகாரங்களுக்கும் வெளியேதான் அப்போதும் நாங்கள் நின்றுகொண்டிருப்போம்.
==================================================================================================