பிரமிள் – வரலாற்றுக் குழப்பங்கள்

மதிப்புக்குரிய ஜெ:

“பிரமிள்” ஒரு கவிஞர், என்ற பிரமை “வரலாற்றுச் சலனங்கள்” என்ற கட்டுரைத் தொகுப்பின் வாயிலாக மாறியது. குறிப்பாக “பௌத்தமும், இந்து இயக்கமும்” என்ற தலைப்பில் இந்துத்துவ ஜாதீய நிர்ணயத்தை புத்தர் அழிவடையச் செய்ததை சுட்டுகிறார். அதன் பிறகு, சீரிய தொகுத்த அமைப்பு வாயிலாக, இந்துத்துவ பிராமணீய எழுச்சிகள் புத்தத்தை இழிவுபடுத்தி விரட்டியடித்தன. ஆயினும், ஜைனம் தங்கிய காரணத்தையும், பௌத்தம் இங்கு மறைந்து பிற மேலை நாடுகளில் தங்கிய காரணத்தையும் அளிக்கிறார். தங்களது சமீபமான ஒரு கட்டுரையில் கிருஷ்ணரும், ஆதி சங்கரருமே இந்திய “முக்கிய” தீர்க்க தரிசிகள் என்று குறிப்பிட்டிருந்தீர்கள். கிருஷ்ணரை மறுத்தார் புத்தர். புத்தரின் “monism” முன்னெடுத்துச் சென்று “அத்வைத”மாக நிறுவியது ஆதி சங்கரர்.

என்னுடைய அடிப்படைக் கேள்வி இதுதான். வைதீக மரபை மட்டுமே கொண்டாடும், இன்றைய “இந்து” என்று தன்னை அடையாளம் கண்டு கொள்ளும் ஒருவன், (போன வருடம் நான் Austin சென்றிருந்த பொழுது, “green card” பூஜைக்கு இவ்வளவு என்று அட்டவணை பார்த்தேன்), எந்த கொள்கையை கொள்ள வேண்டும்? பிரமிளின் கட்டுரையில் கீதையே திருத்தி எழுதப்பட்டதுதான் என்று சொல்கிறார்; ஆக, “Council of Nicaea”-வைப் போன்றதுதான் இந்துவாக பிறந்த நான் மறுப்பின்றி ஏற்றுக் கொள்ள வேண்டிய தீர்ப்பா?

நட்புடன்,
பாபு சுந்தரம்

அன்புள்ள பாபு சுந்தரம்,

உங்கள் கடிதத்துக்கு நீங்களே குழப்பத்தின் அடையாளம் என்று தலைப்பிட்டிருக்கிறீர்கள். உண்மைதான்.

முதல் விஷயம் நான் கிருஷ்ணரும் ஆதிசங்கரரும்தான் இந்தியாவின் முக்கியமான தீர்க்கதரிசிகள் என்று ஒரு தருணத்திலும் சொன்னதில்லை. நான் நேர்மாறாக பத்தாண்டுகளாகச் சொல்லிவரும் கட்டுரைகள் எப்படியும் நூறாவது இந்த இணையதளத்தில் இருக்கும்.

தத்துவம் சம்பந்தமான உங்கள் குழப்பங்களுக்கான காரணங்களை இந்தக் கடிதத்தில் இருந்து நான் ஊகிக்கிறேன். அவை பொதுவாக அனைத்து தத்துவ-பண்பாட்டு விவாதங்களிலும் இங்கே தட்டுப்படுபவை. காரணம் நாம் முறையாக விவாதிக்க கல்விநிலையங்களில் கற்றுக்கொள்ளவில்லை. நமக்கு அரட்டையையே விவாதமாக நிகழ்த்தித்தான் வழக்கம்.

ஒன்று பொதுவாகப் புரிந்துகொண்டு பொதுவாக நினைவில் வைத்திருத்தல். இவ்வாறுதான் சாதாரண செய்திகளை நாம் புரிந்துகொண்டு நினைவில் வைத்திருக்கிறோம். நடைமுறை வாழ்க்கைக்கு அதுவே போதும்.

இவ்வாறு தத்துவத்தில் ஒருபோதும் செய்யமுடியாது. தத்துவத்தில் மிகச்சரியாகப் புரிந்துகொள்ளவேண்டியிருக்கிறது. ஆகவே தத்துவக்கூற்றுக்களை பெரும்பாலும் அதே சொற்களில் நினைவில் வைத்திருந்து திரும்பச் சொல்லவேண்டியிருக்கிறது. இல்லையேல் நம்முள் நாம் நமதுகோணத்தில் சிந்தனைகளை பதிவு செய்து வைத்திருப்போம். அந்தப்பதிவு நம் விருப்பத்துக்கும் நாம் ஈடுபடும் துறைகளுக்கும் ஏற்ப மாறிக்கொண்டே இருக்கும்.

அதேபோல மேற்கோள் காட்டும்போது கூடுமானவரை இந்தக் கட்டுரையில் இந்த வரி என்று மேற்கோள் காட்டவேண்டும். இப்போது நீங்கள் சுட்டிக்காட்டும் இவ்வரியை எங்கே எப்போது எச்சூழலில் சொன்னேன் என்று நான் திகைக்கவேண்டும். பிறகெப்படி அதை நான் விவாதிப்பது?

நான் சொன்னதை நீங்கள் எப்படி பிழையாகப் புரிந்துகொண்டிருப்பீர்கள் என ஒருவாறு ஊகிக்கிறேன். கிருஷ்ணனையும் ஆதிசங்கரரையும் வேதாந்த சிந்தனையின் இரு புள்ளிகளாகச் சொல்லியிருப்பேன். அதுவும்கூட அவர்கள் மட்டுமே என்று சொல்லியிருக்கமாட்டேன். ஒருபோதும் தீர்க்கதரிசிகள் என்ற சொல்லை பயன்படுத்தியிருக்கமாட்டேன். அது prophets என்ற சொல்லுக்கான தமிழாக்கம்.

இந்திய ஞானிகள் தீர்க்கதரிசிகள் அல்ல. இந்திய சிந்தனையாளர்களை தத்துவ அறிஞர்கள், ஞானிகள், யோகிகள் என்றெல்லாம் அவர்களின் இயல்புக்கு ஏற்ப திட்டவட்டமான பொருளில்தான் நான் கையாள்கிறேன். அச்சொற்களை என் கட்டுரைகளில் வரையறையும் செய்திருப்பேன்.

இரண்டு, சொற்களை எளிமையாக்கி பொதுவாக கையாளுதல். தெளிவாக வரையறை செய்யப்படாத சொற்களை தத்துவ-வரலாற்று விவாதத்தில் கையாளக்கூடாது. அது விவாதங்களை வழுக்கிச்செல்லவைக்கும்.

உதாரணமாக, இந்துத்வா என்ற சொல்லை இன்று சர்வசாதாரணமாக கையாள்கிறார்கள். அது இந்திய சுதந்திரப்போராட்ட காலத்தில் உருவான ஒரு நவீன அரசியல்தரப்பு. தெளிவான வரையறைகொண்டது. அச்சொல்லை இந்துமதம் இந்துப்பண்பாடு அனைத்துக்கும்போடுவது மிகப்பெரிய சிக்கல்களை உருவாக்கும்.

மூன்று, வரலாற்றுத் தரவுகள் இல்லாமல் கருத்துக்களைச் சொல்லுதல். பிரமிள் சொல்லிக்கொண்டே செல்கிறார். அவை அவரது எண்ணங்கள், அவ்வளவுதான். அதற்குமேல் எந்த மதிப்பும் அற்றவை.

உதாரணமாக, இந்தக் கடிதத்திலேயே நீங்கள் சொல்லும் வரி ‘இந்துத்துவ ஜாதீய நிர்ணயத்தை புத்தர் அழிவடையச் செய்ததை’. பௌத்தம் பிராமண மதத்தின் ஜாதியமேலாதிக்கத்தை எதிர்த்தது. ஷத்ரிய, பிராமண கூட்டமைப்பின் ஆதிக்கத்தை வென்றது. வைசிய ஆதிக்கத்தை உருவாக்கியது.

ஆனால் இந்தியச் சாதியமைப்பில் பௌத்தம் பெரிய மாற்றமெதையும் கொண்டுவரவில்லை. ஏனென்றால் சாதி என்பது மதம்சார்ந்த ஓர் அமைப்பு அல்ல. மதத்தால் உருவாக்கப்பட்டதுமல்ல. இந்தியாவின் தொல்குடிகள் தங்களை ஆதிக்கம் மற்றும் நிலவுடைமை அடிப்படையில் மேல்கீழாக அடுக்கிக்கொண்டதன் விளைவு அது. மதம் அந்த அடுக்குமுறையை தத்துவார்த்தமாக விளக்கவும், சடங்குகள் வழியாக நிலைநாட்டவும் மட்டுமே செய்கிறது.

பௌத்தமும் அதையே செய்தது. வடகிழக்கில் பௌத்தம் புதிய சாதிய அடுக்குமுறையை நிலைநாட்டவும் செய்தது. சென்ற இடங்களிலெல்லாம் அங்கிருந்த சமூக மேல்கீழ் அடுக்குமுறையை பௌத்தம் நிலைநாட்டியிருக்கிறது.

அதேபோல இந்துத்துவ பிராமணீய எழுச்சிகள் புத்தத்தை இழிவுபடுத்தி விரட்டியடித்தன என்னும் வரி. பௌத்தம் பின்வாங்கியது பக்தி இயக்கத்தின் விளைவாக என்பது வரலாறு. பக்தி இயக்கம் இந்திய வரலாற்றின் மாபெரும் சூத்திர எழுச்சி. பௌத்தத்தின் கடைசி அழிவை உருவாக்கிய பெரும்தாக்குதல் பக்தியார் கில்ஜியால் நிகழ்த்தப்பட்ட கொலைவெறியாட்டம் என்பதும் வரலாறே.

ஆக, இந்த மூன்று பிழைகளே உங்கள் குழப்பத்துக்கான அடிப்படை. அது கூடாதென நீங்களே முடிவெடுத்து விலக்கத் தொடங்கியபின்னரே நீங்கள் சொல்லும் சொற்களையும் தெளிவாக வரையறை செய்துகொள்வீர்கள். அப்போதுதான் உண்மையான தத்துவ விவாதம் தொடங்கமுடியும்.

*

பிரமிளின் தத்துவ, வரலாற்று ஆய்வுகள் மேல் எனக்கு பெரிய மதிப்பில்லை. இதை முன்னரே விரிவாக எழுதியிருக்கிறேன். அவர் இருந்தபோது எழுதியிருக்கிறேன், அவரிடம் விவாதித்திருக்கிறேன். அவர் தான் பேசியவிஷயங்களை முறையாக வாசித்தவர் அல்ல. உதிரிக்கட்டுரைகளாக ஆங்காங்கே வாசித்தவர் மட்டுமே. அவற்றைக்கொண்டு அவர் தாவல்களை நிகழ்த்தி முழுமுற்றான முடிவுகளை வரலாற்றாசிரியர்களைவிட தீவிரமாக அறிவிக்கிறார்.

அவரது பெரும்பாலான கூற்றுக்கள் அறுபது எழுபதுகளில் அதிகம் பேசப்பட்ட டி.டி.கோஸாம்பி, தேபிபிரசாத் சட்டோபாத்யாய போன்றவர்களின் கருத்துக்களின் எளிய நீட்சிகள் மட்டுமே. அவற்றில் பெரும்பாலான கருத்துக்கள் இன்று தொல்லியல்சான்றுகளாலும் விரிவான சமூகவியல் மொழியியல் ஆய்வுகளாலும் முழுமையாகவே மறுக்கப்பட்டுவிட்டன. ஆகவே பிரமிளின் கருத்துக்களை இன்றைய வாசகன் பொருட்படுத்தத் தேவையில்லை. கோஸாம்பி போன்றவர்களை அவர்களின் சிந்தனைகளில் இன்று நீடிப்பதென்ன, எஞ்சுவதென்ன என்ற அடிப்படையிலேயே அணுகவேண்டும்.

பிரமிளின் அரைகுறை ஒற்றைவரிகளுக்குச் செல்வதற்கு முன்பு ஒட்டுமொத்த வரலாற்று ஓட்டத்தைப்பற்றிய ஒரு முன்வரைவை உருவாக்கிக் கொள்வது மிக அவசியமானது. அதன்பின் வரலாற்றை பொருளியல், சமூகவியல் விசைகளின் விளைவாக விரிவாக புரிந்துகொள்ளவேண்டும்.

பிரமிளின் கட்டுரைகள் ஒருவகையில் மட்டுமே முக்கியமானவை. ஏற்கனவே வரலாற்றையும் மதத்தையும் அறிந்தவனுக்கு, அவரது திரிபுகள் அரைகுறைத்தனங்கள் ஆகியவற்றை அடையாளம் காணமுடிந்தவனுக்கு, ஒரு கவிஞராக அவர் வெளிப்படும் பல வரிகள் அதிர்வுகளை உருவாக்கும். ஒற்றை மின்னல்கள் என அவற்றைச் சொல்லலாம். அவை அவன் சிந்தனையைத் தீண்டி எழுப்பும். சில புதிய திறப்புகளை அளிக்கும்.

ஜெ

தத்துவம், மதம்


மனிதாபிமானமும் தத்துவமும்


மதகளின் தொகுப்புத்தன்மை


இந்தி சம்ஸ்கிருதம் தமிழ்


இந்துமதம் சம்ஸ்கிருதம் பிராமனர்


நான் இந்துவா

கலாச்சார இந்து

மண்ணும் ஞானமும்


இந்துமதம் நாத்திகம் ஆத்திகம்


பௌத்தமே உண்மை ஒரு கடிதம்

பௌத்தமும் அகிம்சையும்

உணவும் விதியும்


புத்தர் வரலாற்றில் சில கேள்விகள்சாங்கியமும் வேதங்களும்


இருபுரிச்சாலை

இங்கிருந்து தொடங்குவோம்


பக்தி ஞானம் கடிதம்


வேதாந்தமரபும் இலக்கியமும்

தத்துவத்தைக் கண்காணித்தல்
தத்துவக்கல்வியின் தொடக்கத்தில்

வரலாறு

வரலாற்றெழுத்தும் மையக்கருத்தும்

வரலாற்ரெழுத்தின் நான்கு மாறுதல்கள்

சாதி

சாதியும் ஜனநாயகமும்

சாதியாதல்


மன்னர்களின் சாதி


சாதிவர்ணம் முக்குணங்கள்


எந்த அடையாளம்

சாதி இரு கேள்விகள்

சாதியும் [படைப்பும்

சாதிபற்றி மீண்டும்

சாதியும் பெரியாரும்


அய்யா பெரியார் -கை.அறிவழகன்

வைக்கமும் காந்தியும் 1
வைக்கமும் காந்தியும் 2
பெரியார்-ஒருகடிதம்
அறுவை சிகிழ்ச்சைக்கு கடப்பாரை : ஈ வே ரா வின் அணுகுமுறை

முந்தைய கட்டுரைஅறம் -ஜெசீலாவின் மதிப்பீடுகள்
அடுத்த கட்டுரை‘வெண்முரசு’ – நூல் இரண்டு – ‘மழைப்பாடல்’ – 78