நீர் பங்கீடு

‘வெள்ளிமலை மக்கள் அமைதியான வழியில் பேச்சுவார்த்தை மூலம் பிரச்சினையை தீர்த்துக்கொள்ள முன்வரவேண்டும், மாவட்ட ஆட்சித்தலைவர் விண்ணப்பம்’ என்று ஒரு செய்தி படித்தேன். வெள்ளிமலை ஊரைச்சேர்ந்த நண்பர் ஒருவரிடம் கேட்டேன்.

”அந்த பணி போய் பள்ளீல சொல்லணும்…நடக்கப்பட்ட காரியமில்லை” என்றார் அவர் ஆவேசமாக”…எங்க வெள்ளத்தை எடுத்து அப்பிடி அவனுக குடிக்க வேண்டாம்… வெளையாடுதானுகவளா…?”

நான் சமாதானமாக ”குடிவெள்ளம்தானே…” என்றேன். ”அப்டி அவனுக எங்க வெள்ளத்த எடுத்து குடிச்ச வேண்டாம்…” என்று இறுதியாகச் சொல்லிவிட்டார்.

பிரச்சினை இதுதான். குமரிமாவட்டத்தில் குடிநீர்பிரச்சினை என்பது பொதுவாக எங்கும் இல்லை. இங்கே குடிநீர் இல்லை என்றால் தமிழகம் பாலைவனமாகிவிட்டது என்று பொருள். இரண்டு பருவக்காற்றுகளால் மழைபெறும் பசுமைப்பகுதி இது. ஆனால் இங்கும் கடுமையான குடிநீர் பிரச்சினை உண்டு. அது கடற்கரையில். மண்ணுக்குள் உப்புநீர் இருக்கும் நிலங்களில்.

இந்தச் சிக்கலைத் தடுக்கவும் சேர்த்துத்தான் இங்கே ஏ.வி.எம் கால்வாய் வெட்டப்பட்டது. [அனந்தவிக்டோரியா மெமோரியல்] மகாராஜா காலத்தில் படியளக்கும் ‘பொன்னுதம்புராட்டியான’ விக்டோரியா மகாராணியின் அறுபதாவது வயது நிறைவைக் கொண்டாடும் பொருட்டு அப்பெயர் சூட்டப்பட்டது.

குமரி மாவட்டத்தில் சமநிரப்பான நிலத்தை கடலோரமாகத்தான் காண முடியும். ஆகவே இந்த கால்வாய் கடலோரமாக வெட்டப்பட்டு  கன்யாகுமரி அருகே உள்ள மணக்குடி காயலையும் திருவனந்தபுரத்தையும் இணைத்தது. பல ஆறுகள் ஓடைகள் அதில் கலந்தன. கோட்டாறு கம்போளத்தில் இருந்து அரிசி மளிகை மூட்டைகளை இலகுவாக தோணிகளில் திருவனந்தபுரம் கொண்டு போக முடிந்தது. அதை விட முக்கியமாக இது கடற்கரையின் உப்புநீரை கட்டுபப்டுத்தியது.  ஏவிஎம் கால்வாய்க்கு இக்கரையில் எப்போதும் கிணறுகளில் நல்ல நீர் ஊறியது.

சுதந்திரம் கிடைத்து சாலைவழிப்போக்குவரத்து பெருகியதும் ஏவிஎம் கால்வாய் கைவிடப்பட்டது. ஒரு மாபெரும் சாக்கடையாக மாறியது. பல இடங்களில் அதை மறித்து மேடாக்கி வீடுகள் கட்டிக் கொண்டிருக்கிறார்கள். பல இடங்களில் கடற்கரை மக்களுக்கு கொசு காலரா என்று மரணத்தை அள்ளி வழங்குகிறது இந்தக் கால்வாய். ஐம்பது வருடம் முன்பு அவ்வப்போது மட்டும் தூர் வாரி ஆக்ரமிப்புகளை கட்டுப்படுத்தியிருந்தால் ஒருவேளை இப்பகுதிக்கு இது ஆலப்புழை படகுவழி போல சுற்றுலாப்பணத்தை கொண்டுவந்து கொட்டியிருக்கும்.

இன்று கடற்கரைமுழுக்க குடிநீர் பஞ்சம். அங்கே மிக நெருக்கமாக வாழும் மக்கள் குடிநீருக்காக அலைவதைக் கண்டால் மனம் கலங்கும். சின்னஞ்சிறு குழந்தைகள் வரை குடிநீருக்காக குடங்களுடன் நள்ளிரவிலும் திரிவார்கள். அதிலும் கடும் உடலுழைப்புள்ள மக்கள் நீருக்கும் சேர்ந்து காவல் கிடந்து வசைபாடி சண்டையிட்டு பிடித்து நிரப்ப வேண்டும். அவர்களுக்கு அவ்வபோது சில்லறை குடிநீர்த் திட்டங்கள் நிறைவேற்றப்படும். குறைந்தது, திட்டங்களாவது போடுவார்கள். அப்படிப்பட்ட ஒரு திட்டம்தான் வெள்ளிமலை கூட்டுக் குடிநீர் திட்டம்.

எளியதிட்டம். வெள்ளிமலை பகுதியில் பேச்சிப்பாறை கால்வாய் நீராலும் குளங்களாலும் நீர் நிறைந்த பகுதியில் ஒரு ஆழ்குழாய் கிணறுகளை அமைத்து அந்நீரை கடியபட்டிணம் கடற்கரைப்பகுதிக்குக் கொண்டு செல்லுதல். இதுகூட வருடம் முழுக்க அல்ல. பேச்சிப்பாறை நீர் வராத சில மாதங்களில் மட்டும். அதை வெள்ளிமலை பகுதி மக்கள் ‘பல்லும் நகமும்’ பயன்படுத்தி  எதிர்க்கிறார்கள்.

”வெள்ளிமலையிலே தண்ணிக்கு என்ன பஞ்சம்? குடுத்தா என்ன?”என்றேன். ”சார் என்ன சொல்லுதீக? இண்ணைக்கு தண்ணி இருக்கு… நாளைக்கு தண்ணிக்கு நம்ம சந்ததிகள் கேட்டா என்ன உத்தரம் சொல்லுகது? இல்லேண்ணாலும் அது என்னத்துக்கு நம்ம தண்ணிய அவன் குடிக்கணும்?”

கூட இருந்த இன்னொரு வெள்ளிமலைக்காரர் அடுத்த நியாயத்தைச் சொன்னார். ”அவன் கடலிலே மீம்பிடிக்கான்.சும்மாவா குடுக்கான்? ஒரு சாளை இந்நேற்று ஒரு ரூவா சொல்லுதான். அம்மையாண உள்ளது, செறுவெரலு கனம் இல்ல…அதில பாதி தலை..மிச்சம் வாலு”

”அது அவங்க பிடிக்கப்பட்டதுல்லா?” என்றேன். ”அவன் கடலில மீன்பிடிக்கான்…இது மண்ணில எடுக்கப்பட்ட வெள்ளம்…பொறவு?” என்றார் அந்த நண்பர். அதற்குப் பதில் சொல்ல என்னால் முடியவில்லை.

”இண்ணைக்கு நாம பாவம்பாத்து குடுப்போம்.நாளைக்கு அவன் அவகாசமும் பேசிட்டு வந்து நிப்பான். தேவையா, இல்ல கேக்கேன். பாதி வெள்ளம் எங்க அம்மைக்க ஆமக்கனுக்க சொத்தாக்கும்ணுட்டு லாப்பாயிண்டு பேசுவான்…”

”இந்த மண்ணு தமிழ்நாட்டு சர்க்காருக்குள்ளதாக்குமே…நாமெல்லாம் சர்க்கார் பிரஜைகள்லா?”என்றேன்.

”மயிராக்கும்…பிரஜையும் பிண்ணாக்கும் பேசிட்டு வரட்டும்…வாரியலால சாத்துவோம்…எங்க ஊருல உள்ள எல்லா கட்சியும் இப்பம் ஒண்ணாக்கும்..ஒற்ற துள்ளி வெள்ளம் குடுக்க முடியாதுண்ணு நிக்கோம்..அதில தீமூக்கா, ஆத்தீமூக்கா. தேத்தீமூக்கா,பாஜாக்கா எல்லாவனும் உண்டு…”

”செவப்பனுக?”

”அவனுக அம்மைக்க தாலி அறுத்தானுக…” என்றார் நண்பர் ”அவனுக கொள்கைபேசி நிண்ணு களிக்கானுக..சவிட்டி எல்லெடுக்கணும்…”

”அப்பம் இதே கட்சிகள் அங்க கடப்பொறத்துலே என்ன செய்யானுக?”

”அங்க உள்ள இதே கட்சிக்காரனுக வெள்ளம் கொண்டுவாண்ணு சொல்லி போராட்டம் செய்யானுக” என்றார் அவர் ”அதிப்பம், ஓட்டுல்லா?”

”இருந்தாலும் இது சரியில்லை…இப்பம் காவேரி தண்ணிய கர்நாடகக் காரன் தரமாட்டேங்கான்…அது மாதிரில்லா இது இருக்கு..நாமெல்லாம் ஒரு ஸ்டேட்டு. ஒரு சனம்…”

”அதுக்காச்சுட்டி நம்ம தண்ணிய அவன் குடிச்சுப்போடுவானா?”

ஒன்றும் புரியவில்லை. இதை எப்படி சமாளிப்பார்கள்? எனக்குத் தெரிந்த அதிகாரியிடம் கேட்டேன்.” …அப்டியே போட்டிருவோம்…ஆறுமாசம் கழிஞ்சா எல்லாவனும் விட்டுட்டு வேற சோலிக்கு போவானுக…”

”போகல்லேண்ணா?”

”அப்பம் திட்டம் அம்பிடுதான்..அப்டி பல திட்டங்கள் தமிழ்நாட்டிலே பாதியிலே நிக்கிது…கேட்டிருப்பீய காரைக்குடிக்கு தண்ணி விடமாட்டோம்ணுட்டு திருப்பத்தூர் காரனுக அஞ்சுவருசம்  நிண்ணு போராடினானுக..பழ.கருப்பையாண்ணு ஒரு காங்கிரஸ்காரரு காரைக்குடியிலே தண்ணிகேட்டுச் சாகக்கெடந்தாரு…”

நண்பரிடம் ஜெயிக்காமல் விட்டு வர அப்போது மனம் வரவில்லை. ”…நீங்க சொல்லுத ஒரு காரியம் கரெக்டாக்கும்”என்றேன் ”நம்ம தண்ணிய அவனுகளுக்கு குடுக்கப்பிடாது…அப்பிடிப்பாத்தா இந்த தண்ணியில பாதியும் பேச்சிப்பாறை தண்ணியாக்கும். நாளைக்கு காணிக்காரனுக அதை குடுக்க மாட்டேண்ணு சொன்னானுகண்ணா?”

”சவிட்டி எல்லை எடுத்துப்போடணும்…சொல்லீருவானா?” என்றார் நண்பர் ஆவேசமாக.

”நீரு சொல்லிக் குடுக்காம இருந்தா போரும்..அல்லாம அவனுக எங்ககூடி கேக்குதது” என்றார் நண்பரின் நண்பர்

முந்தைய கட்டுரைவேதாந்தம், தமிழிலக்கியம்: கடிதங்கள்
அடுத்த கட்டுரைவேதாந்தம் தமிழிலக்கியம்: இன்னுமிரு கடிதங்கள்