பகுதி பன்னிரண்டு : விதைநிலம்
[ 4 ]
அம்பாலிகை வெறியாட்டெழுந்தவள் போல குழல்கலைந்து ஆட, ஆடைகள் சரிய, ஓடிவந்து சத்யவதியின் மஞ்சத்தறை வாயிலை ஓங்கி ஓங்கி அறைந்து கூச்சலிட்டாள். “என் மகனைக் கொன்றுவிட்டாள்! யாதவப்பேய் என் மகனை கொன்றுவிட்டாள்!” என்று தெறித்து காலடியில் விழப்போகின்றவை போல கண்கள் பிதுங்க அலறினாள். சத்யவதி திகைத்து கதவைத் திறந்தபோது அப்படியே அவள் கால்களில் விழுந்து பாதங்களைப்பற்றிக்கொண்டு அம்பாலிகை கதறினாள். “என் மைந்தனைக் கொன்றுவிட்டாள் பேரரசி. யாதவப்பேய் என் மைந்தன் உயிரைக்குடித்துவிட்டது. நான் இனி ஒரு கணம் உயிர்வாழமாட்டேன்… இந்த அரண்மனையைக் கொளுத்தி அந்நெருப்பில் நானும் எரிவேன்.”
“என்ன ஆயிற்று?” என்று பின்னால் ஓடிவந்த சாரிகையிடம் சத்யவதி கேட்டாள். “அரசர் நோயுற்றிருக்கிறார். ஆதுரசாலையில் இருந்து மருத்துவர்கள் சென்றிருக்கிறார்கள்” என்றாள் சாரிகை. “இல்லை, அவன் வாழமாட்டான். அவன் இறந்துவிடுவான். நான் அறிவேன். அவன் இறந்துவிடுவான்!” என்று அம்பாலிகை அலறினாள். வெறிகூடி மார்பில் ஓங்கி ஓங்கி அறைந்தபடி சரிந்து பக்கவாட்டில் விழுந்து உடலை இறுக்கிக்கொண்டாள். அவளுடலில் மெல்லிய வலிப்பு வந்தது.
சத்யவதி “அரசியை என் அறைக்குள் கொண்டுசென்று பூட்டு” என்று சியாமையிடம் சொன்னாள். “மருத்துவரிடம் சொல்லி அவளுக்கு அகிபீனா புகையூட்டச் சொல்” என்று ஆணையிட்டபடியே இடைநாழி வழியாக விரைந்தாள். தன் அகவிரைவை உடல் அடையவில்லை என மூச்சிரைத்தபடி உணர்ந்து நின்றுகொண்டு சுவரைப்பற்றிக்கொண்டாள். அம்பாலிகையைத் தூக்கி அறைக்குள் போட்டு பூட்டிவிட்டு சியாமை பின்னால் ஓடிவந்து சத்யவதியைப் பிடித்துக்கொண்டாள்.
பாண்டுவின் அறைக்குள் மருத்துவர் அருணர் நாடிநோக்கிக் கொண்டிருந்தார். சத்யவதியைக் கண்டதும் எழுந்து “அகிபீனா அளித்திருக்கிறேன் பேரரசி. சற்று நேரத்தில் நரம்புகள் விடுபட்டு துயிலில் ஆழ்ந்துவிடுவார். உயிருக்கு இனிமேல் இக்கட்டு ஏதுமில்லை” என்றார். சத்யவதி பாண்டு அருகே அமர்ந்து அவன் கைகளை தன் கைகளுக்குள் எடுத்துக்கொண்டாள். மறுபக்கம் தரையில் அமர்ந்திருந்த குந்தி பாண்டுவின் இன்னொரு கையை தன் கைகளுக்குள் வைத்திருந்தாள். பாண்டுவின் கை ஈரமான நீர்ப்பாம்புபோல குளிர்ந்து உயிரசைவுடன் இருந்தது. தசைகளுக்குள் நரம்புகளின் அதிர்வை உணரமுடிந்தது.
“நான் அரசியை எச்சரித்தேன் பேரரசி…” என அருணர் சொல்லத்தொடங்கியதும் சத்யவதி “அரசி சொல்லுக்கு அப்பால் இங்கு ஆணை வேறு இல்லை” என்றாள். அருணர் திகைத்தபின் அரைக்கணம் குந்தியைப் பார்த்துவிட்டு தலைவணங்கினார். சற்றுநேரம் கழித்து முனகியபடி பாண்டு திரும்பிப்படுத்தான். அவன் கடைவாயில் வழிந்த எச்சிலை குந்தி மெதுவாகத் துடைத்தாள். சத்யவதி எழுந்துகொண்டு “நாளை நிமித்திகரை வரச்சொல்” என சியாமையிடம் சொன்னாள்.
முதுநிமித்திகர் கபிலரும் அவரது மூன்றுமாணவர்களும் மறுநாள் மாலை அரண்மனைக்கு வந்தனர். பாண்டு மதியத்திலேயே துயிலெழுந்துவிட்டதாக சேடி வந்து தெரிவித்தாள். அவனருகே அம்பாலிகை கண்ணீருடன் அமர்ந்திருப்பதாகவும் அவனை தன் அந்தப்புரத்துக்கே கொண்டுசெல்லப்போவதாகச் சொல்லிக்கொண்டிருப்பதாகவும் சொன்னாள். “எழுந்ததும் அவனை என்னை வந்து பார்க்கச்சொல்” என சத்யவதி ஆணையிட்டாள். “குந்தியும் மாத்ரியும் வரவேண்டும்.”
மாலையில் பாண்டு நீராடி வெண்ணிற ஆடை அணிந்து சத்யவதியின் அரண்மனைக்கு வந்தான். அவனுடன் அம்பாலிகையும் வந்தாள். அம்பாலிகை இரவெல்லாம் அழுதமையால் வீங்கிக் கனத்த இமைகளுடன் வெளிறிய கன்னங்களுடன் சிவந்த மூக்குடன் இருந்தாள். நெற்றியருகே கலைந்த குழல்கற்றைகளில் வெண்ணிறமுடிகள் கலந்திருந்தன. செம்மை படர்ந்த கண்களில் கண்ணீர் எஞ்சியிருப்பது போலத் தெரிந்தது. பாண்டு வந்தபோது கபிலர் சத்யவதியின் முன் பீடத்தில் அமர்ந்திருந்தார். அவனைக்கண்டதும் எழுந்து தலைவணங்கினார்.
தூவிமஞ்சத்தில் சாய்ந்திருந்த சத்யவதி “கபிலர் நிமித்தநூலை பரத்வாஜமுனிவரிடமிருந்து கற்றவர். அவர் அறியாத ஏதுமில்லை” என்றாள். பாண்டு அவரை தலைவணங்கிவிட்டு பீடத்தில் அமர்ந்தான். அவனருகே அம்பாலிகை நின்றுகொண்டாள். மைந்தனின் உடலை தொட்டுக்கொண்டிருக்க அவள் விழைவது தெரிந்தது. ஆனால் அவள் அருகே நிற்பதை பாண்டு விரும்பவில்லை என்று அவன் உடலசைவுகள் காட்டின. அவள் அவன் சால்வையை தன் கைகளால் மெல்லத் தொட்டாள். பின் அதன் நுனியை கையிலெடுத்துக்கொண்டாள். பாண்டு சால்வையை இயல்பாகப் பற்றுவதுபோல பிடித்து தன் உடலில் சுற்றிக்கொண்டான். அம்பாலிகை கையை அவனைத் தொடும்பொருட்டு அனிச்சையாக நீட்டி பின் சாளரத்தின் கதவைப்பற்றிக்கொள்வதை சத்யவதி கண்டாள்.
குந்தியும் மாத்ரியும் சேர்ந்தே வந்தனர். அறையைக் கண்டதும் அனைத்தையும் அறிந்துகொண்ட குந்தி சத்யவதியையும் அம்பாலிகையையும் வணங்கிவிட்டு தரையில் அமர்ந்துகொண்டு மாத்ரியிடம் அமரும்படிச் சொன்னாள். அம்பாலிகை நின்றுகொண்டிருந்ததைப் பார்த்து திகைத்த மாத்ரி ஆறுதல்கொண்டவள் போல அருகே அமர்ந்துகொண்டாள். அம்பாலிகை அவர்கள் இருவரையும் வெறுப்பில் சுருங்கிய முகத்துடன் மாறிமாறி நோக்கியபின் பார்வையை திருப்பிக்கொண்டாள்.
மாத்ரி அந்த வெறுப்பால் வருத்தம் கொள்வதை சத்யவதி கண்டாள். அவளுடைய பெரிய விழிகளில் நீர் நிறைந்தது. அவள் அண்ணாந்து அம்பாலிகையையே நோக்கிக்கொண்டிருந்தாள். மீண்டும் மாத்ரியை நோக்கிய அம்பாலிகை வாயை கடுமை தெரிய இறுக்கியபடி தலையைத் திருப்பினாள். மாத்ரி கண்ணீர் சொட்ட தலையைக்குனிந்து குந்தியின் தோள்களுக்கு அப்பால் பதுங்கிக்கொண்டாள்.
மாத்ரியைக் காண சத்யவதியின் நெஞ்சில் மெல்லிய வலி எழுந்தது. இருபதாண்டுகளுக்கு முன் அம்பாலிகை அப்படித்தான் இருந்தாள் என்று எண்ணிக்கொண்டாள். இன்று நரைகலந்த குழலும் ஆழ்ந்த வரிகளோடிய முகமும் மெலிந்த உடலுமாக நிற்கும் அவளை அந்த அழகியபேதைப்பெண்ணாக எண்ணிக்கொள்ளவே முடியவில்லை. இன்னும் இருபதாண்டுகாலத்தில் இந்த வெண்ணிறமான கொழுத்த சுருள்முடிச்சிறுமி இதேபோல இன்னதென்றிலாத ஆங்காரமும் கசப்புமாக இப்படி வெறுமையைப்பற்றிக்கொண்டு நிற்பாளா என்ன?
நிமித்திகர் தன் சிறுசந்தனப்பெட்டியில் இருந்து வெண்சுண்ணக்கட்டியை எடுத்து தன் முன்னால் போடப்பட்ட பீடத்தில் பன்னிரு திகிரிக்களத்தை வரைந்தார். அதன் முனைகளில் மூன்று வண்ணங்கள் கொண்ட சிறிய கல்மணிகளை வைத்து அதை நோக்கியபடி சிலைத்து அமர்ந்திருந்தார். கனவிலிருப்பவர் போல அக்கற்களை இடம்மாற்றிக்கொண்டே இருந்தவர் எழுந்து வடமேற்கு மூலையை நோக்கிச் சென்றார். அவரது அசைவில் நிழலாடக்கண்டு அங்கிருந்த பீடத்தின் மீது வைக்கப்பட்டிருந்த மயிற்பீலிக்கற்றையில் இருந்து ஒரு பெரியபல்லி தாவிக்குதித்தது.
சத்யவதி கூர்ந்து நோக்கினாள். அது இணைப்பல்லி. விழுந்த அதிர்விலும் இரு பல்லிகளும் பிரியவில்லை. ஒன்றுடன் ஒன்று ஒட்டியவையாக இரட்டைத்தலைகொண்டவைபோல அமர்ந்திருந்தன. பின்னர் எட்டுகால்கொண்ட ஒரே உடலென ஓடி பீடத்துக்கு அடியில் சென்று மறைந்தன. பல்லிகள் விழுந்த இடத்தில் அறுந்துக்கிடந்த ஒற்றைவால்நுனி ஒன்று நெளிந்து நெளிந்து துடித்துக்கொண்டிருந்தது. கபிலர் குனிந்து அதை நோக்கியபின் திரும்பி வந்து தன் நிமித்தக்களத்தை நோக்கத் தொடங்கினார்.
நெளிந்துகொண்டிருந்த வால்நுனியையே மாத்ரி நோக்கிக்கொண்டிருந்தாள். அவள் உடல் நடுங்கியது. குந்தியின் உடலுடன் மேலும் ஒட்டிக்கொண்டு அவள் தோள்களை இறுகப்பிடித்துக்கொண்டாள். குந்தி நிமித்திகரின் முகத்தையே நோக்கினாள். கபிலர் கண்களைத் திறந்து “பேரரசி, அரசருக்கு இப்பிறவியில் காமத்தின் இன்பம் இல்லை” என்றார். அம்பாலிகையின் கையின் வளையல்கள் ஒலித்தன. சத்யவதியும் குந்தியும் அதை நோக்கியபின் பார்வையைத் திருப்பிக்கொண்டனர். “அதன் காரணத்தை விளக்குங்கள் நிமித்திகரே” என்றாள் அம்பாலிகை.
“பேரரசி, ஊடும்பாவுமாக செயல்களும் விளைவுகளும் பின்னிநெய்துள்ள இவ்வாழ்க்கை வலையை சம்சாரம் என்றனர் மூத்தோர். இதில் ஒவ்வொருசெயலுக்கும் முன்னால் முடிவிலி வரை காரணங்கள் உள்ளன. ஒவ்வொரு செயலுக்கும் பின்னால் முடிவிலி வரை விளைவுகளும் உள்ளன” என்றார் கபிலர். “நாம் நனவில் அறிவது சிறிது. கனவிலறிவது மேலும் சற்று. சுஷுப்தியிலும் துரியத்திலும் அறிவது இன்னும் சற்று. அறிவதெல்லாம் அறியமுடியாமையின் திவலைகளை மட்டுமே.” சத்யவதி தலையசைத்தாள்.
கபிலர் தன் மாணவர்களில் ஒருவனை திகிரிக்களத்தின் முன்னால் அமரச்செய்தார். “சுகுணா, உன்னில் இருந்து ஒழுகிச்செல்வன எதையும் தடுக்காதே” என்றார். அவன் நெற்றிப்பொட்டைக் கூர்ந்து நோக்கியபடி அவர் அமர்ந்திருக்க அவன் அவர் விழிகளை நோக்கி மடியில் வைத்த கைகளுடன் மலர்முறைப்படி அமர்ந்திருந்தான். அவன் கண்கள் மெல்ல மூடின. கழுத்தின் நரம்புகள் சற்று அசைந்தன. கபிலரின் பிற இரு மாணவர்களும் சற்று அப்பால் கைகளை மடியில் வைத்து ஊழ்கத்திற்கு அமர்வதுபோல அமர்ந்து பார்த்துக்கொண்டிருந்தனர்.
சீடனாகிய சுகுணன் பெருமூச்சுவிட்டு “ஓம்” என்றான். கபிலர் “யாருடைய வரவென நான் அறியலாமா?” என்றார். “என் பெயர் கிந்தமன். காசியபகுலத்தில் குஞ்சரர் என்னும் முனிவருக்கு அப்சரகன்னியில் பிறந்தவன்” சீடனின் வாயிலிருந்து நடுவயதான ஒருவரின் குரல் எழுந்ததைக் கண்டு மாத்ரி திகைத்து மூச்சை இழுத்தாள். “தாங்கள் எதற்காக இங்கு வந்தீர்கள் என அறியலாமா?” என்றார் கபிலர். சுகுணன் “நான் இங்கு அழைக்கப்பட்டேன். இங்கே விழுந்துள்ள விதியின் முடிச்சொன்றை நான் அவிழ்க்கவேண்டுமென விதியே ஆணையிட்டது” என்றான்.
“தங்கள் சொற்களுக்காகக் காத்திருக்கிறோம் முனிவரே” என்றார் கபிலர். சுகுணன் “சந்திரகுலத்தில் விசித்திரவீரிய மன்னரின் மைந்தனாகப்பிறந்த இம்மன்னர் பாண்டு எனக்கு பெரும் தீங்கொன்றை இழைத்தார்” என்றான். பாண்டு திகைப்புடன் எழுந்துகொண்டான். “முதிரா இளமையில் கூதிர்காலத்தில் இமயமலையின் அடிவாரத்திலுள்ள பிங்கலவனம் என்னும் குறுங்காட்டில் அஸ்தினபுரியின் இளவரசரான பாண்டு தன்னுடைய இருபது வேட்டைத்துணைவர்களுடன் யானைமீதமர்ந்து வேட்டைக்குச் சென்றிருந்தார்” என்று சுகுணன் சொன்னதும் பாண்டு அச்சம் குடியேறிய கண்களுடன் அமர்ந்துகொண்டான்.
“அந்த வேட்டையில் பாண்டுவால் ஓடும் செந்நாய்களையோ துள்ளும் மான்களையோ பதுங்கும் முயல்களையோ வேட்டையாடமுடியவில்லை. அவரது விழிகளுக்கு கூர்மையில்லை. அவரது அம்புகள் விழிகளைத் தொடரவும் முடியவில்லை. தன்னால் வேட்டையாடமுடியாதென்று அவர் உணர்ந்தார். ஒருவேட்டைமிருகமாவது கையிலில்லாமல் கானகத்திலிருந்து திரும்பக்கூடாதென அவர் எண்ணியபோது பசும்புதர்களுக்கு அப்பால் இரண்டு மான்கள் நிற்பதைக் கண்டு வில்குலைத்தார்.”
“அப்போது வேட்டைத்துணைவனான குங்குரன் என்ற முதியவன் அரசே, அவை இணைமான்கள், அவற்றைக் கொல்ல வேட்டைத்தெய்வங்களின் ஒப்புதலில்லை என்றான். மிகவும் இளையவராகிய பாண்டு சினத்துடன் திரும்பி அதை நான் அறிவேன், ஆனால் இன்று ஒருவேட்டையேனும் இல்லாமல் திரும்புவதைவிட இந்தப்பாவத்தைச் செய்யவே விரும்புகிறேன் என்று கூவியபடி தன் வில்லை நாணேற்றி தொடர்ச்சியாக ஐந்து அம்புகளால் அந்த மான்களை வீழ்த்தினார்.”
சுகுணன் சொன்னான் “அந்த மான்கள் அம்புபட்டு அலறிவிழுந்தபோது அவற்றின் குரல் மானுடக்குரல் போலவே இருக்கிறது என்று பாண்டு நினைத்தார். வேட்டைத்துணைவர்களும் அவ்வண்ணமே நினைத்தனர். உண்மையில் அது மானுடனாகிய நானும் என் துணைவியாகிய கௌசிகையும்தான்.” பாண்டு நடுங்கும் கைகளை ஒன்றுடன் ஒன்று கோத்துக்கொண்டு வெளுத்த உதடுகளுடன் அமர்ந்திருந்தான். சாளரத்திரைச்சீலைகள் காற்றில் பறந்து அமைந்தன.
“முற்பிறவியில் நான் தித்திரன் என்னும் முனிவனாக இருந்தேன். ஐந்துவயதிலேயே ஞானம்தேடி கானகம் சென்று கடுந்தவம் செய்து உடல்துறந்து விண்ணகமேகினேன். ஏழு பிரம்ம உலகங்களை என் தவத்தால் கடந்து நான் விண்ணளந்தோன் வாழும் வைகுண்டத்தின் பொற்கதவம் முன் நின்றேன். அங்கே காவல்நின்றிருந்த ஜயனும் விஜயனும் என்னை அதிலிருந்த சின்னஞ்சிறு துளைவழியாக உள்ளே செல்லும்படி ஆணையிட்டனர். நான் உடலைச்சுருக்கி நுண்வடிவம் கொண்டு உள்ளே நுழைந்தேன். என் இடதுகையின் கட்டைவிரல் மட்டும் உள்ளே நுழையாமல் வெளியே நின்றுவிட்டது.”
”திகைத்து நின்ற என்னை நோக்கி ஜயவிஜயர் முனிவரே உங்கள் ஆழத்தின் அடித்தட்டில் முளைக்காத விதை ஏதோ ஒன்று உள்ளது. அனைத்தும் முளைத்துக் காய்த்துக் கனிந்தவர்களுக்கன்றி வைகுண்டத்தில் இடமில்லை என்றனர். நான் என் அகத்தை கூர்ந்து நோக்கியபோது என்னுள் கடுகை பல்லாயிரத்தில் ஒன்றாகப் பகுத்தது போல சின்னஞ்சிறு காமவிழைவு எஞ்சியிருப்பதைக் கண்டேன். அதை நிறைக்காமல் என்னால் உள்ளே நுழையமுடியாதென்று உணர்ந்தேன். முனிவரே இங்கே ஒருகணமென்பது மண்ணில் ஏழு பிறவியாகும். சென்று வாழ்ந்து நிறைந்து மீள்க என்றனர் ஜயவிஜயர்.”
“நான் காட்டில் நீத்த உடல் மட்கி மறைந்த மண்மீது அமர்ந்து தவம்செய்த குஞ்சரர் என்னும் முனிவரின் சித்தத்தில் குடியேறி அவர் விந்துவில் ஊறி பாத்திவப் பிந்துவாக ஆனேன். காமம் எழுந்து விழிதிறந்த குஞ்சரர் அந்தவனத்தில் மலருண்ண வந்த சதானிகை என்னும் அப்சரகன்னி ஒருத்தியைக் கண்டார். அவளை நான் அவருடலில் இருந்து அழைத்தேன். அவ்வழைப்பைக்கேட்டு அவள் அருகே வந்தாள். அவளுடன் அவர் இணைந்தபோது நான் என் உருவை மீண்டும் அடைந்தேன். கிந்தமன் என்ற மகனாகப் பிறந்து அவரது தழைக்குடிலில் வளர்ந்தேன்.”
“என் முதிராஇளமையில் ஒருநாள் தந்தை சொற்படி ஊழ்கத்தில் இருக்கையில் வைகுண்டவாயில் முன்னால் ஒரு எளிய கற்பாறையாகக் கிடந்த தித்திரனை நான் கண்டேன். நான் யாரென்று உணர்ந்தேன். என் இடக்கையின் கட்டைவிரலை என் தவத்தால் அழகிய இளம்பெண்ணாக ஆக்கிக்கொண்டேன். அவளுக்கு கௌசிகை என்று பெயரிட்டு என் துணைவியாக்கினேன். அவளுடன் காமத்தை முழுதறியத் தலைப்பட்டேன். ஒருபிறவியிலேயே எழுபிறப்பின் இன்பத்தையும் அறிந்து கனிய எண்ணினேன்.”
“என் இனிய துணைவி கௌசிகையும் நானும் ஊர்வன நீந்துவன பறப்பன நடப்பன என்னும் நால்வகை உயிர்களாகவும் வடிவெடுத்து காமத்தை அறிந்துகொண்டிருந்தோம். மானாக அந்த அழகிய பிங்கலவனத்தில் துள்ளிக்குதித்தும், தழுவியும் ஊடியும், சுனைநீர் அருந்தியும், நறும்புல்தளிர்களை உண்டும் மகிழ்ந்தோம். இணைசேர்ந்து முழுமையை அறிந்துகொண்டிருந்த கணத்தில் பாண்டுவின் அம்புபட்டு எங்கள் காமத்தவம் கலைந்தது. உடலும் உள்ளமும் பிரிந்து நாங்கள் விழுந்தோம். எங்கள் உடல்களை பாண்டுவின் வேட்டைக்குழு எடுத்துச்செல்வதை அந்தக் காட்டின் காற்றுவெளியில் நின்றபடி திகைத்து நோக்கிக்கொண்டிருந்தோம்.”
பாண்டு எழுந்து கைகளை வீசி “நான் ஓர் அரசனுக்குரிய செயலையே செய்தேன்! வேட்டையும் போரும் அரசனுக்குப் பாவமல்ல” என்று சிதறிய குரலில் கூவினான். சீற்றத்துடன் அவனைநோக்கித் திரும்பிய சுகுணன் “ஆம், அது நெறி. ஆனால் அந்நெறிதான் இணைசேர்ந்திருக்கும் உயிர்களையும் துயிலில் இருக்கும் உயிர்களையும் கொல்லலாகாது என்று விலக்குகிறது. புணரும் உயிரின் விந்துவில் வாழும் உயிர்களை அழிக்க எவருக்கும் உரிமை இல்லை. கனவில் எழும் மூதாதையரைக் கலைக்கவும் எவருக்கும் உரிமை இல்லை” என்றான். அந்தச்சீற்றத்தைக் கண்டு பாண்டு முகம் சிவக்க கண்கள் நீர் நிறைய அப்படியே அமர்ந்துவிட்டான்.
“காமமும் கனவும் அனைத்துயிருக்கும் உரிமைப்பட்டவை. காமத்திலும் கனவிலும் உயிர்களின் அகம் பெருகுகிறது. அப்போது ஓர் உடலை அழிப்பவன் இரு அகங்களை அழிக்கிறான். அவன் அந்த இரண்டாவது அகத்திற்கான பொறுப்பை ஏற்றே ஆகவேண்டும். நீ பிழைசெய்துவிட்டாய். ஆகவே என் சாபத்தை நீ அடைந்தேயாகவேண்டும்.” பாண்டுவின் கண்களில் இருந்து கண்ணீர் திரண்டு கன்னங்களில் வழிந்தது. அவன் உதடுகளை அழுத்தியபடி கைகூப்பினான்.
வளையலோசை கேட்டு குந்தி நிமிர்ந்து அம்பாலிகையைக் கண்டாள். அவள் கண்களில் தெரிவதென்ன என்று அவளால் புரிந்துகொள்ளமுடியவில்லை. அறியாத விண்ணாழத்தில் இருந்து மண்ணுக்குவந்த தெய்வம் போல அவள் தோன்றினாள். நகைக்கிறாளா அழுகிறாளா என்று அறியமுடியாதபடி முகம் விரிந்திருக்க உதடுகள் இறுக்கமாக ஒட்டியிருந்தன.
“அன்று அந்தக் காற்றுவெளியில் நின்றபடி நான் தீச்சொல்லிட்டேன். நீ ஒருநாளும் காமத்தை அறியமாட்டாய் என்றேன். காமத்தை உன் உடலும் உள்ளமும் அறிந்துகொண்டிருக்கும். தீப்பற்றிக்கொள்ளாத அரணிக்கட்டை போல உன் அகம் முடிவில்லாது உரசிக்கொண்டிருக்கும். அவ்வெம்மையில் நீ தகிப்பாய். என்னைப்போலவே உன் உள்ளம் கவர்ந்த தோழியையும் நீ அடைவாய். ஆனால் அவளுடன் கூடும்போது அக்காமம் முதிராமலேயே நீ உயிர்துறப்பாய்.”
பாண்டு கைகூப்பியபடி “நான் அச்செயலைச் செய்யும்போதே அதன் விளைவையும் அறிந்திருந்தேன் என இன்று உணர்கிறேன் முனிவரே. அது நோயுற்ற குழந்தையின் வன்மம். இயலாத உடலில் கூடும் குரூரம். என் அகம் மீறிச்செல்ல விழைந்துகொண்டிருந்த வயது அது. என் உடலின் எல்லைகளை என் அகத்தின் எல்லைகளை நான் கற்பனையால் கடந்துசென்றுகொண்டிருந்தேன். அந்த விசையால் அறத்தின் எல்லைகளையும் கடந்துசென்றிருக்கிறேன். கடந்துசெல்லும்போது மட்டுமே நான் இருப்பதை நான் உணர்ந்தேன். எனக்கும் வலிமையிருக்கிறது என்று அறிந்தேன்.”
தலையை தன் கைகளில் சேர்த்து முகம் குனித்து தளர்ந்த குரலில் பாண்டு தொடர்ந்தான் “அந்த நாளை இன்றும் நினைவுகூர்கிறேன். இணைசேர்ந்து நின்ற மான்களை நான் ஏன் கொன்றேன்? வேட்டைக்காக மட்டும் அல்ல. அது மட்டும் அல்ல. அவை நின்றிருந்த இன்பநிலைதான் அதற்குக் காரணம். ஆம், அதுதான். அவற்றைக்கொல்ல நான் எண்ணிய கணம் எது? அவற்றில் அந்த ஆண்மான் உடலின்பத்தில் திளைத்து தன் பெரிய பீலிகள் கொண்ட இமைகளைத் தாழ்த்தி கண்மூடியது. அதைக்கண்ட கணமே நான் என் அம்புகளை எடுத்துவிட்டேன்.”
“அம்புகள் ஒன்றன் மீது ஒன்றாக மான்களைத் தைத்தன. ஐந்து அம்புகள். முதல் அம்பு என் கையை விட்டெழுந்தபோது என் அகம் குற்றவுணர்வு கொண்டு சுருண்டது. ஆனால் அடுத்த அம்பு அக்குற்றவுணர்ச்சியைச் சிதறடித்தது. என் உடல் உவகையில் அதிர்ந்தது. அதுவும் ஒரு காமம் என்பதைப்போல. அடுத்தடுத்த அம்புகள் வழியாக நான் இன்பத்தின் உச்சம் நோக்கிச் சென்றேன். என் கண்கள் கலங்கி உடல் சிலிர்த்துக்கொண்டிருந்தது. பாவம் போல பேரின்பம் வேறில்லை என அன்று அறிந்தேன். ஏனென்றால் பாவம்செய்பவன் தன்னைப் படைத்த சக்திகளை பழிவாங்குகிறான்.”
“அம்புகள் தசையில் சென்று குத்திநிற்பதை, அந்தத் தசைகள் அதிர்ந்து துடிப்பதை, குருதி மெல்லத்தயங்கி ஊறிக்கசிவதை, அம்பின்விசையில் நிலைதடுமாறி அவை எட்டுகால்களும் மாறிமாறி ஊன்ற சரிந்து மண்ணில் விழுவதை அவற்றின் இளமையான வால்களும் விரிந்த காதுகளும் துடிப்பதை நீள்கழுத்துக்கள் மண்ணில் எழுந்து விழுந்து அறைபடுவதை ஓடுவதைப்போல குளம்புகள் காற்றில் துழாவுவதை இத்தனைநாளுக்குப்பின்னும் கனவு என துல்லியமாக நினைவுறுகிறேன்.”
“அப்போதும் அவற்றின் உடல் இணைந்திருந்தது” என்றான் பாண்டு. “ஆம், அதை நான் மறக்கவேயில்லை. ஒவ்வொரு முறை நினைவுகூரும்போதும் என் உடலை அதிரச்செய்வது அதுதான். அவை இணைந்தே இறந்தன. நான் நேற்று மாத்ரியுடன் இருக்கையில் என் அகம் முழுக்க நிறைந்திருந்த காட்சியும் அதுவே. நினைவிழந்து சரிவதற்கு முன் நான் இறுதியாக எண்ணியது அதைப்பற்றித்தான்.”
சத்யவதி “தவசீலரே, வரமருளவேண்டும். பாவங்களனைத்தும் பொறுத்தருளப்படும் பேருலகைச் சேர்ந்தவர் நீங்கள். தங்கள் சினம் தணியவேண்டும். என் குழந்தைக்கு தங்கள் அருளாசி வேண்டும்” என்று கைகூப்பினாள். “பேரரசி, அக்கணத்துக்கு அப்பால் நான் சினமேதும் கொள்ளவில்லை. அக்கணமெனும் மாயையை கடந்ததுமே வாழ்வும் மரணமும் ஒன்றே என்றறிந்துவிட்டேன். ஆனால் பிழையும் தண்டனையும் ஒரு நிறையின் இரு தட்டுகள். அவை என்றும் சமன்செய்யப்பட்டிருக்கவேண்டும். அவற்றை மீற தெய்வங்களாலும் ஆகாது” என்றான் சுகுணன்.
சுகுணன் “நேற்றைத் திருத்த எவராலும் இயலாது என்பது வாழ்வின் பெருவிதி. அதை அறிபவர் கூட நாளையைத் திருத்த இக்கணத்தால் முடியும் என்ற பெருவிந்தையை அறிவதில்லை” என்று தொடர்ந்தான். “உங்கள் சிறுமைந்தனுக்கு என் அருளாசிகளை அளிக்கிறேன். அவன் மைந்தரால் பொலிவான். இழந்த காமத்தின் பேரின்பத்தை பலநூறுமடங்காக பிள்ளையின்பத்தால் நிறைப்பான். போர்முதல்வனும் அறச்செல்வனும் ஞானத்தவத்தவனும் சென்றடையும் முழுமையின் உலகையும் இறுதியில் சென்றடைவான். அவனுடன் காமநிறைவடையாத பெண் எவளோ அவள் அவனை அவ்வுலகுக்கு வழிகாட்டி அழைத்துச்செல்வாள். தன் பொற்கரங்களால் அவனுடைய அனைத்து வாயில்களையும் அவளே திறந்துகொடுப்பாள். ஆம், அவ்வாறே ஆகுக!”
அவனை அமரச்செய்திருந்த விசை அறுபட்டதுபோல கைகளை பின்னால் ஊன்றி சுகுணன் சரிந்தான். மல்லாந்து விழுந்து இரு கைகளையும் மெல்ல அறைந்துகொண்டான். பின்பு மெல்ல பெருமூச்சுகளுடன் கண்விழித்தான். “சுகுணா… சுகுணா… என் குரலைக் கேட்கிறாயா?” என்றார் கபிலர். “ஆம், குருநாதரே” என்றான் சுகுணன். “எழுந்திரு” என்றார் கபிலர். சுகுணன் எழுந்து அமர்ந்து புதிய விழிகளைப் பெற்றவன் போல அவையை நோக்கினான்.
அம்பாலிகையின் வளையல்கள் ஒலித்தன. “நிமித்திகரே, இங்கே சொல்லப்பட்டதை வைத்து நோக்கினால் காமத்தில் ஈடுபடாதவரை என் மைந்தன் உயிருக்கு ஆபத்தில்லை அல்லவா?” என்றாள். குந்தி நிமிர்ந்து அம்பாலிகையின் முகத்தை நோக்கினாள். யார்முகம் இது என அவள் அகம் மீண்டும் துணுக்குற்றது. கபிலர் “ஆம், அவ்வாறும் சொல்லலாம்” என்றார். “ஆம், அதுதான் முனிவர் சொன்னதன் பொருள். அவன் இனிமேல் வாழ்நாள் முழுக்க காமத்தை துறப்பான். முழுவாழ்வையும் இம்மண்ணில் சிறப்புற நிறைவும் செய்வான்” என்றாள் அம்பாலிகை.
சத்யவதி பெருமூச்சுடன் “ஆம், விதி அதுவென்றால் அவ்வண்ணமே ஆகட்டும்” என்றாள். அம்பாலிகை குந்தியையோ மாத்ரியையோ நோக்காமல் “அந்த நெறியை கடைப்பிடிக்கவேண்டியவர்கள் அரசியர். தங்கள் மங்கலங்கள் அழியாமல் காக்கும்பொறுப்பு அவர்களுக்குரியது” என்றாள். குந்தி எவரும் காணாமல் தன் இடக்கையால் மாத்ரியின் கைவிரல்களைப்பற்றி அழுத்தினாள். சத்யவதி மீண்டும் உரக்கப் பெருமூச்சுவிட்டாள்.