முறையீடு

1இன்று அலுவலகம் சென்றுகொண்டிருந்த வழியில் ஓர் அழுகைக்குரலைக் கேட்டேன். கிட்டத்தட்ட ஒரு ஐந்துவயதுக்குழந்தை கூவி அழுவதுபோல. சுற்றுமுற்றும்பார்த்தேன். காலிமனையின் ஓர் ஓரத்தில் ஆறேழுமாதம் வயதுள்ள ஒரு தெருநாய் அமர்ந்து அழுதுகொண்டிருந்தது. சாதாரண ஊளை அல்ல. வலியும் துயரமும் நிறைந்த தேம்பல், முறையீடு, மன்றாட்டு.

அருகே நின்று  அதைக்கூர்ந்து பார்த்தேன். ஒரு பின்னங்கால் முழுக்க வெந்துபோய் சதை வழண்டு வெளுத்து பிய்ந்து தொங்கியது. யாரோ கொதிக்கக் கொதிக்க எதையோ அதன் மீது வீசியிருக்கிறார்கள். ஏதாவது வீட்டுக்குள் நுழைந்து  திருடி தின்றிருக்கும். இந்த காலனியில் அது பசியாற்றிக்கொள்ள வேறு வழியும் இல்லை.

நாட்டு நாய்களுக்கே உரிய கூரிய முகம். நரம்பு பரவி விடைத்த பெரிய காதுகள். வைக்கோல் நிறம். ஒல்லியான சிறு உடல். மோவாயும் அடிவயிறும் மட்டும் வெளுப்பு. வெந்த பின்னங்காலை தூக்கி வைத்துக்கொண்டு ஊன்றிய மூன்று கால்களும் வெடவெடக்க தலையை தூக்கி மூக்கை வானுக்கு எழுப்பி கண்மூடி அது அழுதது.

அங்கே நிற்க முடியவில்லை. தாண்டிச்சென்றேன். அழுகை தொடர்ந்து கேட்டது. விலகிச்செல்லச் செல்ல இன்னும் துல்லியமாகக் கேட்பதுபோல. என்ன ஒரு அழுகை! இத்தனை துக்கம் தோய்ந்த ஒரு அழுகையை நான் இதுவரைக்கும் கேட்டதில்லை.

எவருமே இந்த அழுகையை கேட்கப்போவதில்லை என்ற முழுமையான கைவிடலில் இருந்து எழுந்த அழுகை என்பதனாலா? அனுதாபத்துடன் ஒரு பார்வைகூட அதற்குக் கிடைக்கப்போவதில்லை. சக நாய்களிடமிருந்து, சகமனிதர்களிடமிருந்து… உறவும் நட்பும் துணையும் ஏதுமில்லாத பரிபூரணமான தனிமை. அம்பரவெளியின் எண்ணிநோக்க முடியாத விரிவின் கீழே ஒரு தன்னந்தனி உயிர்.

யாருக்காக அழுகிறது அது? யாரிடம் முறையிடுகிறது? அந்த முறையீட்டைக் கேட்க அங்கே மேலே எவரேனும் உண்டா? கருணையுடன் குனிந்து பார்க்கும் ஒருவர். எந்நிலையிலும் கைவிடாத ஒருவர்.

என் இருகைகளையும் பொருத்தி வைத்து ”கும்பிடுடா, சாமி காப்பாத்தூ.. சொல்லு… சாமீ…” என்று கற்றுத்தந்த அம்மா சென்று மறைந்து முப்பது வருடங்களாகிவிட்டன. மெல்லமெல்ல என் வானம் காலியாகி வந்ததை அம்மா அறிந்திருந்தாள். என்னையும் இப்பூமியையும் எல்லாம் ஒரு சிறு துளியென ஆக்கும் மகாவல்லமையின் அறியா விதிகளால் ஆளப்படும் வானமே என் தலைக்குமேல் உள்ளது என அவள் ஊகித்திருப்பாள். அம்மா, உனக்காகக்கூட ஒருமுறை பிரார்த்தனை செய்ய என்னால் முடியவில்லை.

அசிங்கம்பிடித்த அற்ப ஜீவி. எதற்காக இப்படி அடிவயிற்றை எக்கி அழுகிறது? அதை எவருமே கேட்கப்போவதில்லை என யார் அதனிடம் சொல்வது? எப்படி அந்த சப்பிய சிறு மண்டையின் எளிய தர்க்கத்துக்கு அதைப் புரிய வைப்பது.

ஆனால் அது தனக்குள் பொறிக்கப்பட்ட உயிரின் ஆதி ஆணையின்படித்தானே அந்த அழுகையை எழுப்புகிறது. இயற்கையில் பொருளற்றதும் தேவையற்றதுமான ஏதும் இல்லை என்கிறார்களே. இந்த அழுகையை மட்டும் எந்த ஆற்றல் உருவாக்கி அதன் ஆத்மாவுக்குள் பொருத்தி வைத்திருக்கிறது? ஒரு தீயறிவிப்பு ஒலி பொருத்தப்பட்டிருக்கிறதென்றால் அதைக் கேட்கவும் ஓரு காது எங்கேனும் இருக்கும் அல்லவா?

ஒரு டீயை வாங்கிக் குடிக்க முயன்றேன். விசித்திரமான ஒரு குமட்டல். எத்தனை அற்ப வாழ்க்கை! இப்படி ஒரு நிராதரவான நிலைதான் அதன் சாரமென்றால் அதைக் கொடுக்காமலேயே இருந்திருக்கலாமே. பரிபூரணமாகக் கைவிடப்பட்டவனின் அழுகையைப்போல இந்தப்பூமியில் அருவருப்பான ஏதேனும் உள்ளதா என்ன? இங்குள்ள அத்தனை அழகுகளையும் அது கறைப்படுத்திவிடுகிறது. அத்தனை உன்னதங்களையும் மலினப்படுத்திவிடுகிறது. அத்தனை தர்க்கங்களையும் பொருளிழக்கச் செய்துவிடுகிறது. எல்லாம் பொய், நான் மட்டுமே உண்மை என முன்னால் வந்து நிற்கிறது.

ஆம், அது மட்டுமே உண்மை. உள்ளூர அது தெரிந்ததனால்தான் உன் ஆத்மா சஞ்சலம் அடைகிறது.  உன்னால் அந்த அழுகையை சில நிமிடங்கள் கூட கேட்க முடியாமலாகிறது. தப்பி ஓடிவந்து இந்த டீக்கடை பெஞ்சில் அமர்ந்திருக்கிறாய். ஏனென்றால் அது உன் அழுகை. எத்தனையோ இரவுகளில் இருட்டு சூழ்ந்த பரிபூரணத்தனிமையில் நீ இதே போன்று உள்ளுக்குள் சென்று ஒலித்த கதறல்களாலும் கேவல்களாலும் அழுததில்லையா என்ன?

அப்போது நீ உணர்ந்த  அந்த கைவிடப்படுதலை அல்லவா இதோ நீ காண்கிறாய்? அந்த இடத்தில் இருந்து தப்பி ஓடித்தானே நீ சொற்களுக்குள் அபயம் புகுந்தாய்? இத்தனை ஆயிரம் பக்கங்கள் ஏன் எழுதுகிறாய்? தீ மீது வைக்கோல்போரை அள்ளி அள்ளி போட்டுக்கொண்டே இருக்கிறாய். வைக்கோல் அல்ல, மயிர். மயிர்சுட்டுக் கரியாகுமா என்ன? ஒரு பிடி விபூதிகூட இல்லாத தணல். அணையாத பெருஞ்சிதை.

ஆனால் வான்வெளியில் இருந்து எவரேனும் அதைக் கேட்கிறார்களா? அம்மா, இன்னும் நம்பும்படியான ஒரு வானத்தை நீ எனக்களித்திருக்கலாகாதா? என் மூளையின் கூர்மையை மழுங்கச்செய்யும் ஒரு முடிவற்ற விவரணையை எனக்களித்திருக்கலாகாதா? காலியான வானத்தின் கீழே மண்ணில் எல்லாமே தங்களை தங்கள் பொறுப்பில் வைத்திருக்க நேர்கிற பேரவலத்தை தாங்கமுடியாமல் உடைகின்ற என் நரம்புகள்.

ஆனால் இந்த அதிநுண் தருக்கமும் எனக்குள் பொறிக்கப்பட்டது மட்டும்தானே? அந்த அழுகையைப்போன்றே இதும் அறியப்படமுடியாதது, அதிபுராதனமானது, நிரந்தரமானது அல்லவா? யார் விளையாடுகிறார்கள் நம்முடன்? சுட்டுவிரலால் எறும்புகூட்டை பதறிக் கலைந்துச் சிதறச்செய்து குனிந்து நோக்கி ரசிப்பது யார்?

இத்தனை தூரம் தாண்டி எப்படிக் கேட்க முடியும் அந்த அழுகை? ஆனால் நுண்செவிகள் கேட்கும் அழுகை நேரடியாக மூளை நரம்புகளை அதிரச்செய்கிறது. அதற்கு காதுகளில் அதை ஏந்துவது இன்னமும் எளிது. எழுந்து திரும்பிச்சென்றேன். அது இந்நேரம் உணர்ந்திருக்கும் என எண்ணினேன். இந்நேரம் அழுகையை நிறுத்திவிட்டு தன் புண்ணை தானே நக்க ஆரம்பித்திருக்கும். தன்னுடைய சொந்த நாக்கின் மென்மையான இதமான கருணையால்.

தன் காயங்களை தன் கைகளால் அல்லவா மனிதன் அத்தனை இதமாக வருடிக்கொள்ள முடியும். தன் நெஞ்சை தன் கைகளால் அல்லவா அத்தனை உறுதியுடன் பற்றிக்கொள்ள முடியும். அழுகையை நெஞ்சில் பொறித்த ஆற்றல் வாய்க்குள் ஒரு நாக்கைப்படைத்திருக்கிறதென நாய் இந்நேரம் உணர்ந்துவிட்டிருக்கும். அந்த ஆறுதலுடன் அது சுருண்டுவிட்டிருக்கும்.

ஆனால் இல்லை. நெருங்க நெருங்க அந்த தீனக்குரலை மீண்டும் கேட்டேன். அதே கொடுந்துயர முறையிடல். கொஞ்சமும் தளராமல், நம்பிக்கை இழக்காமல். மிருகங்களின் பிடிவாதமும் நம்பிக்கையும் நமக்கு வருவதே இல்லை. அவற்றை தர்க்கம் குறுக்கிட்டு பலவீனப்படுத்துவதில்லை.

சனியனே நிறுத்து என கூவியபடி ஓடிச்சென்று ஓங்கி  மிதிக்க வேண்டுமென தோன்றியது. முட்டாள்தனத்தின் எல்லையில் நின்று கொண்டு கழுத்து புடைக்க அது ஊளையிட்டுக் கொண்டிருந்தது அந்தப் பொருளற்ற பிறவி. அருகே சாலையில் சென்று நின்ற என்னை உணரவில்லை. அழுகையே அதை நிறைத்திருந்தது. அழுகைக்காக மட்டும் படைக்கப்பட்ட ஒரு கருவி போலிருந்தது.

என் காதுகள் தெறித்தன. ஒன்றே ஒன்றுதான் நான் செய்யக்கூடுவது. இந்தக் கல்லை தூக்கி அதன் மண்டையில்போட்டு அதை சிதைத்துவிடலாம். அக்குரலை நிறுத்திவிடலாம். ஆனால் ஒருபோதும் என்னால் முடியாது அது. என்ன செய்வதென்றறியாமல் அங்கே நின்றேன். சட்டென்று ஓர் எண்ணம் வந்தது. புதருக்குள் சென்று என் பைக்குள் இருந்து உணவுப்பாத்திரத்தை எடுத்து தயிர்சாதத்தை அதன் முன் கொட்டினேன்.

நீர்கட்டிய கண்களால் என்னைப் பார்த்தது. உணவை நாசி நீட்டி முகர்ந்தது. சட்டென்று ஒரு எம்பு எம்பி அருகே வந்து அள்ளி அள்ளி சாப்பிட ஆரம்பித்தது. பசியடங்கும் போதையில்  சிறிய கண்கள் மூடிக்கொண்டன. லப் சப் என்ற ஒலி. காட்டை உண்ணும் தீயின் ஒலி போல. இத்தனை கண்ணீர் எனக்குள் இருப்பதை எப்போதுமே உணர்ந்ததில்லையே நான்!

அவ்வளவுதான். இனி நான் என் வழிக்குச் செல்லமுடியும். தூங்க முடியும். புண் அழுகி நீ சாகலாம். எனக்கு ஒன்றுமில்லை. அது பிரபஞ்சப்பெருவிதியின் ஒரு துளிதான் எனக்கு. அவ்வளவுதான். எத்தனை எளியது! எத்தனை சர்வ சாதாரணமானது!

நானும் அறிந்திருக்கிறேன் இந்தக் கருணையை. அதன் நுனியைப் பற்றி நெஞ்சோடு சேர்த்துக்கொண்டு நம்பிக்கையுடன், ஆறுதலுடன் தூங்கியிருக்கிறேன். எங்கோ யாரோ இருக்கிறார்கள். கேட்கிறார்கள்.

எளிய உயிரே, ஆனால் அந்த மாபெரும் கருணையாளன் இப்படி சல்லிகளை அலட்சியமாக வீசிவிட்டுச் செல்லவேண்டுமா என்ன? திரும்பி ஒரு புன்னகையாவது செய்யலாகாதா?

மறுபிரசுரம் முதற்பிரசுரம் நவம்பர் 2009

முந்தைய கட்டுரைபறவையின் இறகொன்றில் படர்ந்திருக்கும் ஞானம்(விஷ்ணுபுரம் கடிதம் பன்னிரெண்டு)
அடுத்த கட்டுரை‘வெண்முரசு’ – நூல் ஆறு – ‘வெண்முகில் நகரம்’ – 62