வேதாந்தம், தமிழிலக்கியம்: கடிதங்கள்

அன்புள்ள ஜெயமோகன்,சமீபத்தில் நான் வாசித்த தமிழ் கட்டுரைகளில் முக்கியமானது உஙக்ளுடைய ‘ வேதாந்த மரபும் இலக்கியப் போக்குகளும் ‘ ஒரு பக்கம் விரிவான தகவலறிவும் மறுபக்கம் நுண்ணிய மூலக் கருத்துக்களும் கொண்ட கட்டுரை அது. அதன் இரு கருத்துக்களைப்பற்றி விரிவாகவே சிந்தனைசெய்துகொண்டிருக்கிறேன். ஒன்று, அத்வைதவேதாந்தத்தின் சாரமாகிய ‘வெளியே இருப்பவை எல்லாமே உள்ளே இருப்பவற்றின் விரிவே’ என்ற நோக்கு அடிப்படையில் தமிழ்ப் பண்பாட்டில் உருவான ஒன்றே என்பது. இரண்டு; மணிமேகலையில் அளவைவாதி என்று குறிப்பிடப்படுபவர் வேதஞானத்தை தன்னுள் அடக்கிய வேதாந்தியே என்பது.என் கேள்வி என்பது ஏன் இந்தக் கட்டுரையை நீங்கள் இணையத்தில் வெளியிட வேண்டும் என்பதுதான். இதை இணையத்தில் படிப்பது சிரமம். நான் அச்சிட்டுதான் படித்தேன். நீளமான ஆழமான கட்டுரைகளை இணையத்தில் படிப்பது பொதுவாக சோர்வூட்டும் விஷயம். அதிகபட்சம் 3 பக்கம் அளவுள்ள கட்டுரைகளே இணையத்துக்கு ஏற்றவை. இதை நீங்கள் அச்சு இதழ்களில் வெளியிட்டிருக்க வேண்டும். [தமிழாக்கம்]

திவாகர்

 

அன்புள்ள திவாகர்,

உங்கள் கடிதம் நீங்கள் அமெரிக்காவில் தமிழ் நாட்டைப்பற்றி ஒன்றும் தெரியாமல் இருப்பதையே காட்டுகிறது. இந்தக் கட்டுரையை தமிழில் எவரும் வெளியிட மாட்டார்கள். என்னிடம் கட்டுரை கேட்டு காத்திருக்கும் இதழ்கள்கூட பிரசுரிக்காது. இது ஒரு நடைமுறை உண்மை. அமெரிக்காவில் நிகழும் ஒரு சாதாரண விஷயத்தைப்பற்றி நாலைந்து ஞாயிறு மலர் கட்டுரைகளை தொகுத்து ஒரு பதினெட்டு பக்க கட்டுரையை எழுதி அனுப்பினால் எல்லா சிற்றிதழ்களும் ஆர்வத்துடன் போடுவார்கள். இதுதான் இங்குள்ள நிலைமை.

ஏன்? அமெரிக்கா, ஐரோப்பா சம்பந்தமான விஷயங்கள் அனைத்துமே ‘நவீன உலகம் சார்ந்தவை’ என்ற மனப்பிரமை நம்மில் உள்ளது. இது நூற்றைம்பது வருடங்களாக மெல்லமெல்ல உருவாகி ஆழமாகப் பதிந்து விட்டிருக்கும் ஒன்று. இந்திய சிந்தனை மரபு சார்ந்த அனைத்துமே பழமையானவையாக ,காலாவதியானதாக கருதப்படுகின்றன. அவற்றில் நிகழும் புதுச்சிந்தனைகளைக் கூட அப்படித்தான் நோக்குகிறார்கள். எந்தச் சிற்றிதழிலாவது நீங்கள் இவ்வகைப்பட்ட எந்தக் கட்டுரையையாவது கண்டதுண்டா?

நம் எழுத்தாளர்களில் மேலைநாட்டு விஷயங்கள் மேல் விசித்திரமான மோகம் கொண்டவர்களே அதிகம். அதில் அவர்களுக்கு தேர்வோ சுயமான ருசியோ கூட இருப்பதில்லை. அதிகமான தகவல்களை தெரிந்திருப்பதே அதிகமான தேர்ச்சி என்பது போல ஒரு வகை எண்ணம். இந்திய ஞான மரபு குறித்து — எதிர்மறையாகவேனும்– குறிப்பிடும்படி தெரிந்திருப்பவர்கள் அனேகமாக யாருமில்லை. வாசகர்களும் அப்படித்தான். அவர்கள் மேலைநாட்டைப்பற்றி மட்டுமே தெரிந்துகொள்ள ஆசைப்படுகிறார்கள். ஆகவே இதழ்கள் அப்படி இருக்கின்றன.

என்னுடைய அக்கட்டுரையை எழுத என் ஒட்டு மொத்த கல்வியை தவிர்த்து நோக்கினால் கூட ஒரு மாதம் ஆகியிருக்கிறது. பலருடன் பல கோணங்களில் விவாதித்தும் இருக்கிறேன். ஆனால்  ஐரோப்பாவின் பரபரப்பான விஷயம் ஒன்றைப்பற்றி அதே போல ஒரு கட்டுரையை ஒரே நாளில் எழுதி விடமுடியும்– கருத்துக்களும் தகவல்களும் எங்கும் கிடைக்கும். இதற்கு இருக்கும் வரவேற்பும் மதிப்பும் என் கட்டுரைக்கு இருக்காது என்னும்போது அவற்றை எங்கே எதிர்பார்க்க முடியும்?

ஆகவே இணையத்தில் மட்டுமே இவை வெளியாக முடியும்.வேறு வழியில்லை. வசதிப்பட்டவர்கள் படித்தால் போதும். பிறகு எப்போதாவது நூலாக வரக்கூடும். அவ்வளவுதான்.

****

அன்புள்ள ஜெ,

தமிழிலக்கியத்தில் வேதாந்தம் பற்றிய கட்டுரையில் ஜெயகாந்தனைப் பற்றி ஏதாவது எழுதுவீர்கள் என எதிர்பார்த்தேன்…

நாராயணன் அச்வின்

அன்புள்ள அச்வின்,

ஜெயகாந்தனை நான் வேதாந்தச் சாயல் கொண்ட சிந்தனையாளராக எண்ணவில்லை. அவர் பாரதியின் வேதாந்த  வரிகளை அடிக்கடி மேற்கோள் காட்டுவது உண்டு என்பது உண்மையே. பொதுவாக அகவயமான நோக்கு கொண்ட எவரிலும் ஓரளவு வேதாந்த சார்பு உண்டு. ஆனால் ஜெயகாந்தனின் கருத்துக்களின் ஊற்றுமுகம் திருவள்ளுவர், சித்தர்கள், வள்ளலார், பாரதி என்றே முறைப்படி வகைப்படுத்த முடியும். ஜெயகாந்தனின் நோக்கில் உலகியல் சார்ந்த ஓர் அறவுணர்வு உண்டு. அதை அவர் குறளில் இருந்து பெற்றுக் கொண்டிருக்கிறார். அதுவே அவரது சாரம். அவரில் அறவுணர்வு ஓங்கி நிற்கும் அளவுக்கு தத்துவ நோக்கு ஓங்கி நிற்கவில்லை என்றே எனக்குப் படுகிறது. இதைப்பற்றி விரிவாக விவாதிக்கலாம்

********

அன்புள்ள ஜெயமோகன்,

பாரதியின் காலகட்டத்தில் சுத்த அத்வைதம் தமிழக சிந்தனையில் ஆழமான செல்வாக்கு செலுத்தும் ஒன்றாக இருந்து வந்தது. அதற்கு ராமகிருஷ்ண இயக்கமும் ஒரு முக்கியமான காரணம். வ.வெ.சு.அய்யர் உள்ளிட்ட பலரும் அத்வைதிகளே. பாரதி காலகட்டத்தில் வாழ்ந்த , இன்று அறியப்படாத பல இலக்கியவாதிகள்  சுத்த அத்வைத நோக்கை வெளிப்படுத்தி பாரதிக்கு வழிகாட்டியாக இருந்துள்ளார்கள். குறிப்பாக தென்காசி கடையத்தைச் சேர்ந்த ‘அக்கா’ என்று அழைக்கபப்ட்ட பெண் கவிஞர்ஆவுடையக்கா. இவர் ஒரு துறவி.புரட்சிகரமான சமூக சீர்திருத்தக் கருத்துக்களையும் சுத்த வேதாந்தக் கருத்துக்களையும் நிறைய எழுதியிருக்கிறார்அவரைப்பற்றி மதுரை பேராசிரியர் சு.வெங்கடராமன்  எழுதியிருக்கிறார். பாரதியின் அத்வைத சார்பு பற்றி பெ.சு.மணி எழுதிய கட்டுரைகளும் முக்கியமானவை…

ராமலிங்கம்

அன்புள்ள ராமலிங்கம் அவர்களுக்கு,

பாரதியின் வேதாந்த நோக்கு விரிவான ஆய்வுக்கு உரியது. குறிப்பாக அவர் வேதாந்தத்தில் இருந்து பின்னர் சக்தி வழிபாட்டுக்கு நகர்ந்தது, உபாசனை முதலியவற்றில் ஈடுபட்டது, அவரது பல்வேறு ஆன்மீக வழிகாட்டிகள் பாதிப்புகள் முதலியவற்றை விரிவாகவே ஆராயலாம். என் கட்டுரை ஒரு கோடிகாட்டல் மட்டுமே.ஆவுடையக்கா பற்றி ஏற்கனவே நான் அங்கிங்காக எழுதியிருக்கிறேன். விரிவாக எழுதுமளவுக்கு ஆழ்ந்து படித்ததில்லை. நூல்கள் கிடைப்பதில்லை.

வேதாந்த மரபும் இலக்கியப் போக்குகளும்

 

முந்தைய கட்டுரைதேர்வு
அடுத்த கட்டுரைநீர் பங்கீடு