உதயகுமார், மதமாற்றம்- கடிதங்கள்

அன்புள்ள ஜெ,

அன்னிய நிதி மூலம் சமூகசேவை என்ற போர்வையில் மதமாற்றம் நடந்தால் கூட பரவாயில்லை என்றும், ஆனால் அரசியல் செயல்பாட்டாளர்கள் அத்தகைய நிதியைப் பெறுவது மட்டுமே ஆட்சேபத்திற்குரியது என்றும் நீங்கள் கூறுவது வினோதமாக இருக்கிறது.

அந்த மதமாற்றங்களின் உண்மையான நோக்கம் அரசியலும் அதிகாரம விழைவுமே அல்லவா? தங்கள் விசுவாசிகளின் எண்ணிக்கையை திட்டமிட்டு படிப்படியாக அதிகரித்து அதன் மூலம் இந்திய சமூகத்தில் பிளவுகளையும் பரஸ்பர வெறுப்புணர்வுகளையும் கலாசார அழிவுகளையும் உண்டாக்குவது *மட்டுமே* அன்னிய நிதி மூலம் செய்யப்படும் மதமாற்றங்களின் நோக்கம். இந்தியாவை உடைப்பதும் அந்த உடைந்த துண்டுகளில் கர்த்தரின் சாம்ராஜ்யத்தையோ அல்லது அரபு ஆதிக்கத்தையோ நிலைநிறுத்துவதும்தான் அவர்களது இலட்சியம். ஆனால், மதம் என்ற போர்வைக்குள் புகுந்து கொண்டு செயல்படும் இந்த சக்திகளை வெளிப்படையாக விமர்சிப்பதும் தோலுரிப்பதும் அவ்வளவு எளிதல்ல.

ஆனால் அரசியல் கட்சிகளின் அன்னிய நிதி சதி வேலைகளை வெளிப்படையாக தேர்தல் களத்தில் பேசி அம்பலமாக்க முடிகிறது. அந்த வகையில் அர்விந்த் கேஜ்ரிவால் கட்சி ஆரம்பித்து நேரடியாக அரசியல் களத்தில் குதித்தது ஒட்டுமொத்தமாக இந்திய சமூகத்திற்கு மிகவும் நல்லது. ஜனநாயக ரீதியாக அவர்கள் தேர்தலில் அடிவாங்குவதும் தோற்கடிக்கப் படுவதும் முக்கியமானதும் கூட.

அன்புடன்,
ஜடாயு

அன்புள்ள ஜடாயு

இதற்கு நான் சொல்லும் பதில் ஒன்றே. அந்த மதமாற்றத்தை எதிர்ப்பதற்கு மிகச்சிறந்த வழி அவர்கள் செய்யும் சேவையை பலமடங்கு வீச்சுடன் நீங்கள் செய்வதே. மதமாற்றம் நிகழ்கிறது ஆகவே சேவை தேவை இல்லை என்று சொல்வது வெறும் அரசியல். மனிதாபிமானம் அல்ல

ஜெ

அன்புள்ள ஜெ,

உதயகுமாரின் சொத்துவிவரத்தை பார்த்தீர்களா? ஐந்தரைக் கோடி. நேர்மையானவர்கள் என்றீர்கள். இதற்கு பதில் சொல்லவேண்டியவர் நீங்கள்தான்

சென்பகமூர்த்தி

அன்புள்ள செண்பகமூர்த்தி,

முதல்கடிதம் என நினைக்கிறேன். நன்றி

இந்தவிஷயத்தில் மிதமிஞ்சித் தாண்டிக்குதிப்பவர்களை அசடுகள் என்று சொல்லமாட்டேன், சொந்த அயோக்கியத்தனத்தை மறைக்கும் சில்லறை அயோக்கியர்கள் என்று மட்டுமே சொல்வேன். மன்னிக்கவும்.

நானறிந்தவரை உதயகுமாரின் குடும்பம் குமரிமாவட்டத்தின் ஓர் உயர்நடுத்தர வர்க்கப் பின்புலம் கொண்டது. அவர் வெளிநாடுகளுக்குச் சென்று படித்திருக்கிறார், ஊரில் முக்கியமான பள்ளி ஒன்றை நிறுவி நடத்தி வருகிறார், அவரைப்போன்ற சமூகப்பின்புலம் கொண்ட குடும்பத்தில் மணம்புரிந்துகொண்டிருக்கிறார், தொடர்ந்து அமெரிக்கப் பல்கலைகளில் வகுப்புகள் நடத்தி வருகிறார் என்பதிலிருந்தே இந்தச் சொத்து அவருக்கு மிகச் சாதாரணமானது என எவரும் ஊகிக்கமுடியும்,

குமரியில் சற்று நிலம் வைத்திருப்பவர் எவரிடமும் சிலகோடிகள் மதிப்புள்ள சொத்து இருக்கும். இங்குள்ள ஒருவீடே சாதாரணமாக ஒருகோடி ரூபாய் மதிப்புள்ளது. குமரிமாவட்டக் கணக்கில் உதயகுமாரின் சொத்து என்பது ஒரு நடுத்தர நில உடைமை மட்டுமே.

அதேசமயம் இச்சொத்துக்கள் கையிருப்புச் செல்வம் அல்ல. அவை ஊகச்செல்வம் மட்டுமே. விற்று காசாக ஆக்குவதற்கு நாளாகும், பொறுமையும் தேவை. ஐந்துகோடி ரூபாய் மதிப்பில் சொத்துள்ள ஒருவர் மாதச்செலவுக்கு பணமில்லாமலும் இருக்கக்கூடும்.

ஒருவர் முதல்முறையாக தன் சொத்துக்களின் உண்மையான மதிப்பை வெளியே சொல்கிறார். நம்மூர் ஊழல் அரசியல்வாதிகளைப்போல போலிக்கணக்கு காட்டாமல். உதயகுமார் வெளியிட்ட அவரது சொத்துக்கணக்கைப் பார்க்கையில் அவரது தந்தைவழிச் சொத்திலும் ஈட்டிய சொத்திலும் பாதியை ஏற்கனவே அவர் காலிசெய்துவிட்டாரா என்ற எண்ணமே எனக்கு வந்தது.

சற்றேனும் வேறு கணக்கு உள்ள ஒருவர் ஒரு மத்திய அமைச்சரை நோக்கி நீதிமன்ற அறைகூவல் விடுக்க முடியாது. ஒருவர் சொத்து வைத்திருந்தாலே அது திருடியதாகத்தான் இருக்கவேண்டும் என்பது திருடர்களின் வாதம்.

ஜெ

முந்தைய கட்டுரை‘வெண்முரசு’ – நூல் இரண்டு – ‘மழைப்பாடல்’ – 48
அடுத்த கட்டுரை‘வெண்முரசு’ – நூல் இரண்டு – ‘மழைப்பாடல்’ – 49