பகுதி பதினொன்று : முதற்களம்
[ 5 ]
விதுரன் வெளியே சென்றபோது யக்ஞசர்மர் அவன் பின்னால் வந்தார். “சூதரே, நீங்கள் ஆடவிருப்பது ஆபத்தான விளையாட்டு” என்றார். “அரசரை நான் ஒருமாதமாக ஒவ்வொருநாளும் கூர்ந்துநோக்கிக்கொண்டிருக்கிறேன். அவர் இருக்கும் நிலை காதல்கொண்டவன்போல. பித்தேறியவன் போல. மதம் கொண்டபின் யானை எவர் சொல்லையும் கேட்பதில்லை…”
விதுரன் தலையசைத்து “ஆம், நான் அறிவேன். யானை மதமிளகுவது. குரூரம் கொண்டது. அக்குரூரத்தை எளிய விளையாட்டாகச் செய்யும் வல்லமையும் கொண்டது. ஆனால் விலங்குகளில் யானைக்குநிகராக வழிபடப்படுவது வேறில்லை அமைச்சரே” என்றான்.
யக்ஞசர்மர் “தாங்கள் முதலில் பேசவேண்டியது காந்தார இளவரசியிடம். அவரால் மூத்தவரிடம் உரையாடமுடியலாம்” என்றார். “இல்லை, நான் அதைப்பற்றி முதலில் பேசவிருப்பது என் தமையனிடம்தான். வேறு எவரையும்விட இப்புவியில் எனக்கு அண்மையானவர் அவரே” என்றான் விதுரன். யக்ஞசர்மர் திகைத்து நோக்கி நிற்க புன்னகைசெய்தபின் அவன் அணியறையின் மறுபக்கத்துக்குச் சென்றான்.
வெளியே மகாமண்டபத்தில் வைதிகர் வேதமோதும் ஒலி கேட்கத்தொடங்கியது. அவையின் ஓசைகள் மெல்லமெல்ல அடங்கி அனைவரும் வேதமந்திரங்களை கேட்கத் தொடங்கியதை உணரமுடிந்தது. இன்னமும்கூட என்ன இக்கட்டு என்பது அவையினருக்குப் புரிந்திருக்காது, அவர்கள் எதிர்பார்த்திருக்கிறார்கள். அவ்வளவு எளிதில் அது முடிந்துவிடாதென அவர்கள் அறிவார்கள். சகுனி உள்ளே வந்ததுமே அவர்களுக்கு இக்கட்டு எங்குள்ளது என புரிந்திருக்கும். அவர்களை இப்போது பார்த்தால் ஒவ்வொரு விழியிலும் எரியும் ஆவலைக் காணமுடியும்.
விதுரன் கசப்பான புன்னகையுடன் எண்ணிக்கொண்டான். சாமானியர் தங்களுக்கே பேரழிவைக் கொண்டுவருவதானாலும்கூட தீவிரமாக ஏதாவது நிகழவேண்டுமென விரும்புகிறார்கள். அவர்களின் வாழ்க்கை எளியது, மீளமீள ஒன்றே நிகழ்வது, சலிப்பையே மாறாஉணர்வாகக் கொண்டு முன்னகர்வது. அவர்கள் வரலாறற்றவர்கள். அதை அவர்கள் அறிவார்கள். ஆகவே அவர்களின் அகம் கூவுகிறது, இடியட்டும், நொறுங்கட்டும், பற்றி எரியட்டும், புழுதியாகட்டும், குருதிஓடட்டும்… அது அவர்களின் இல்லங்களாக இருக்கலாம். அவர்களின் கனவுகளாக இருக்கலாம். அவர்களின் உடற்குருதியாக இருக்கலாம். ஆனால் ஏதோ ஒன்று நிகழவேண்டும். மகத்தானதாக. பயங்கரமானதாக. வரலாற்றில் நீடிப்பதாக… அந்தத்தருணத்தில் அவர்கள் இருந்தாகவேண்டும், அவ்வளவுதான்.
சாமானியர்களின் உள்ளிருந்து இயக்கும் அந்தக் கொடுந்தெய்வம்தான் வரலாற்றை சமைத்துக்கொண்டிருக்கிறதா என்ன? வாளுடன் களம்புகும் ஷத்ரியனும் நூலுடன் எழும் அறிஞனும் யாழுடன் அமரும் சூதனும் அந்தச் சாமானியனுக்கான நாடகமேடையின் வெற்றுநடிகர்கள் மட்டும்தானா? இங்கே நிகழ்வதெல்லாம் யாருமற்றவனின் அகத்தை நிறைத்திருக்கும் அந்தக் கொலைப்பெருந்தெய்வத்துக்கான பலிச்சடங்குகளா என்ன?
அளவைநெறியற்ற எண்ணங்கள். இத்தருணத்தில் ஒருவனை வல்லமையற்றவனாக, குழப்பங்கள் மிக்கவனாக ஆக்குவதே அவைதான். இங்கே ஒன்றைமட்டும் நோக்குபவனே வெல்கிறான். அனைத்துமறிந்தவன் வரலாற்றின் இளிவரலாக எஞ்சுகிறான். மிதித்து ஏறிச்செல்லும் அடுத்த படியை மட்டுமே பார்ப்பவன்தான் மலையுச்சியை அடைகிறான். சிகரங்களை நோக்குபவனின் திகைப்பு அவனுக்கில்லை. அவனை சிகரங்கள் புன்னகையுடன் குனிந்துநோக்கி தங்கள் கைகளில் எடுத்துக்கொள்கின்றன.
அறைக்குள் திருதராஷ்டிரன் நிலையழிந்து அமர்ந்திருப்பதை விதுரன் கண்டான். அவனுக்கு நிலைமை புரிந்துவிட்டதென்று உணர்ந்துகொண்டான். அவன் கண்களைக் காட்டியதும் சஞ்சயன் தலைவணங்கி வெளியே சென்று வாயிலுக்கு அப்பால் நின்றுகொண்டான். அவனுடைய அந்த அகக்கூர்மையை அத்தருணத்திலும் விதுரன் வியந்துகொண்டான். இளமையிலேயே அனைத்தையும் நோக்கக்கூடியவனாக இருக்கிறான். அதனாலேயே தன் காலடியில் உள்ள படியை தவறவிடுகிறானா என்ன? அவனுக்கு தொலைதூரநோக்குகள் மட்டுமே வசப்படுமா? காலதூரங்களைத் தாண்டி நோக்கக்கூடியவனாக, அண்மைச்சூழலை அறியாத அயலவனாகவே அவன் எப்போதுமிருப்பான் போலும்!
அவ்வாறு விலகியலைந்த எண்ணங்கள் அத்தருணத்தின் தீவிரத்தை தவிர்ப்பதற்காக தன் அகம்போடும் நாடகங்கள் என விதுரன் எண்ணினான். ஓர் உச்சதருணத்தில் எப்போதும் அகம் சிறியவற்றில் சிதறிப்பரவுகிறது. ஆனால் அந்த அகநாடகங்களினூடாக அது உண்மையிலேயே தன்னை சமநிலையில் மீட்டு வைத்துக்கொண்டது. உணர்வுகளை வென்று, உடலை அமைதியாக்கி, முகத்தை இயல்பாக்கி அவனைக் கொண்டுசென்றது. “அரசே, மன்னியுங்கள், அலுவல்கள் ஏராளம்” என்றான் விதுரன். திருதராஷ்டிரன் அவனை நோக்கி செவி கூர்ந்து “நீ என்னிடம் எதையும் மறைக்கவேண்டியதில்லை. என்ன நிகழ்கிறது? யார் என் மணிமுடிசூட்டுக்கு எதிர்ப்பு தெரிவித்தது?” என்றான்.
விதுரன் அவன் அருகே அமர்ந்துகொண்டு “அரசே, இன்றுகாலை வடபுலத்திலிருந்து ஆயர்குலத்து குடிமூத்தார் சிலர் இங்கே வந்திருந்தார்கள். அவர்களின் நிலத்தில் புவிபிளந்து அனலெழுந்திருக்கிறது” என்றான். திருதராஷ்டிரன் கூர்ந்து செவியை முன்னால் நீட்டி “அதனாலென்ன?” என்றான். தீய செய்தியை முறித்து முறித்துக் கொடுப்பதன் வழியாக அதன் நேரடியான விசையை பெரிதும் குறைத்துவிடமுடியுமென விதுரன் கற்றிருந்தான். உடைந்த செய்தித்துண்டுகளை கற்பனையால் கோக்கமுயல்வதன் வழியாகவே எதிர்த்தரப்பு தன் சினத்தை இழந்து சமநிலை நோக்கி வரத்தொடங்கியிருக்கும்.
“அவர்கள் ஆயர்கள். ஆயர்களுக்கும் வேளிர்களுக்கும் நிலம் இறைவடிவேயாகும்” என்றான் விதுரன். “ஆம், அறிவேன்” என்றான் திருதராஷ்டிரன். “அரசே, நிலம்பிளப்பதென்பதை மாபெரும் அமங்கலமாகவே அவர்கள் எண்ணுகிறார்கள்.” திருதராஷ்டிரன் சொல்லின்றி மூச்செழுந்து நெஞ்சு விரிந்தமைய கேட்டிருந்தான். “முடிசூட்டுவிழாவன்று இத்தகைய அமங்கலம் நிகழ்ந்ததை அவர்கள் பெருங்குறையாக எண்ணுகிறார்கள்” என்றான் விதுரன். திருதராஷ்டிரன் “அவர்கள் இங்கே வந்திருக்கிறார்களா?” என்றான். “ஆம் அரசே, வந்திருக்கிறார்கள்.” திருதராஷ்டிரன் தலையைச் சுழற்றி கீழ்த்தாடையை நீட்டி பெரிய பற்களைக் கடித்தபடி “எப்போது?” என்றான்.
“காலையிலேயே வந்துவிட்டார்கள். அவர்களை நான் உடனே சிறையிட்டு அச்செய்தி எவரையும் எட்டாமல் பார்த்துக்கொண்டேன்” என்றான் விதுரன். “அப்படியென்றால் என்ன நிகழ்கிறது?” என்று திருதராஷ்டிரன் கேட்டான். “ஆனால் அவர்கள் இங்கு வருவதற்குள்ளேயே தங்கள் குலக்குழுவினரைச் சந்தித்திருக்கிறார்கள். அவர்களெல்லாம் முடிசூட்டுவிழவுக்கென சிலநாட்கள் முன்னரே இங்கு வந்து தங்கியிருந்திருக்கிறார்கள்.”
விதுரன் எதிர்பார்த்ததுபோலவே திருதராஷ்டிரன் அச்செய்தித்துண்டுகளை மெதுவாக இணைத்து இணைத்து முழுமைசெய்துகொண்டான். அவ்வாறு முழுதாகப்புரிந்துகொண்டதுமே அவன் பதற்றம் விலகி அகம் எளிதாகியது. அது அவன் உடலசைவுகளில் தெரிந்தது. பெரிய கைகளை மடிமீது கோத்துக்கொண்டு “ஆகவே என் முடிசூடலை எதிர்க்கிறார்கள், இல்லையா?” என்றான்.
“ஆம் அரசே, அவர்கள் தங்களை ஏற்கவியலாதென்று சொல்கிறார்கள். அவர்கள் தங்கள் கோல்களை உங்கள் முன் தாழ்த்தி வணங்கினாலொழிய தாங்கள் முடிசூடமுடியாது.” திருதராஷ்டிரன் பற்களைக் கடித்தபடி “விதுரா, அவர்களில் ஒருவன் மட்டும் கோல்தாழ்த்தவில்லை என்றால் என்ன செய்யவேண்டுமென்கிறது நூல்நெறி?” என்றான். “அவன் குலத்தை தாங்கள் வெல்லவேண்டும். அவனைக் கொன்று அக்கோலை பிறிதொருவனிடம் அளிக்கவேண்டும்.”
தன் கைகளை படீரென ஓங்கியறைந்துகொண்டு திருதராஷ்டிரன் எழுந்தான். “என்னை எதிர்க்கும் அனைவரையும் நான் கொல்கிறேன். அது நூல்நெறிதானே?” என்றான். விதுரன் அவன் முகத்தில் தெரிந்த வெறியை அச்சத்துடன் நோக்கி அவனையறியாமலேயே சற்று பின்னகர்ந்தான். “அனைவரையும் கொல்கிறேன். அந்தக்குலங்களை கருவறுக்கிறேன். குருதிமீது நடந்துசென்று அரியணையில் அமர்கிறேன். அது ஷத்ரியர்களின் வழியல்ல என்றால் நான் அவுணன், அரக்கன், அவ்வளவுதானே? ஆகிறேன்…” என்றான் திருதராஷ்டிரன்.
“அரசே, தங்களை எதிர்ப்பவர்கள் அனைத்து ஜனபதங்களும்தான். அவர்கள் அனைவரையும் தாங்கள் அழிக்கமுடியாது. ஏனென்றால் நமது படைகளே அவர்களிடமிருந்துதான் வந்திருக்கின்றன. மேலும் அவர்களுடன் சேர்ந்து வைதிகர்களும் தங்களை எதிர்க்கிறார்கள்” என்றான் விதுரன். “அவர்கள் சிறிய இளவரசரை அரியணை அமர்த்தும்படி சொல்கிறார்கள்.”
திருதராஷ்டிரன் திகைத்து பின் எழுந்துவிட்டான். “அவனையா? என் அரியணையிலா?” பின்பு உரக்கச்சிரித்து “அந்த மூடனையா? அவன் கையில் நாட்டையா கொடுக்க நினைக்கிறார்கள்? விலைமதிப்புள்ள விளையாட்டுப்பாவையைக்கூட அவனை நம்பி கொடுக்கமுடியாது.” விதுரன் “ஆம் அரசே, அவர் விழியுடையவர் என்கிறார்கள். தங்களைப்போல அமங்கலர் அல்ல என்கிறார்கள். ஆகவே அவரை தெய்வங்கள் ஏற்கும். நிலமகள் ஒப்புவாள் என்கிறார்கள்” என்றான்.
திருதராஷ்டிரன் பாம்புசீறுவதுபோல மூச்சுவிட்டான். “இதற்குப்பின்னால் சூழ்ச்சி ஏதும் உள்ளதா?” என்றான். “இல்லை அரசே, அவ்வண்ணம் தோன்றவில்லை. சூழ்ச்சியால் எவரும் நிலப்பிளவை உருவாக்கிவிடமுடியாதல்லவா?” விதுரன் சொன்னான். “விதுரா, எனக்கு ஏதும் புரியவில்லை. நான் என்ன செய்யவேண்டுமென நினைக்கிறாய்? காந்தாரத்துப்படைகளைக்கொண்டு அஸ்தினபுரியை கைப்பற்றலாமா?”
விதுரன் “அரசே இந்நகரை மட்டும் கைப்பற்றி நாம் என்ன செய்யப்போகிறோம்? அயல்நாட்டுப்படைகளைக்கொண்டு நகரைக் கைப்பற்றினால் நம் மக்கள் நம்மை புறக்கணித்து நம் எதிரிகளிடம் சேர்ந்துகொள்வார்களல்லவா?” என்றான். “நம் எதிரிகள் குவிந்துகொண்டே இருக்கிறார்கள் அரசே. வெளியே தங்கள் முடிசூட்டுவிழாவுக்கு வந்து அமர்ந்திருக்கும் ஒவ்வொருவரும் உங்கள் குருதியைக்குடிக்க நினைக்கும் ஓநாய்கள். காந்தார இளவரசியை தாங்கள் அடைந்ததை எண்ணி துயில்நீத்தவர்கள். நம் அரசு சற்றேனும் வலுவிழக்குமெனில் நாம் அவர்களுக்கு இரையாவோம். ஒரு ஜனபதத்தின் அழிவைக்கூட நம்மால் தாங்கிக்கொள்ளமுடியாதென்பதே உண்மை.”
திருதராஷ்டிரனின் சிந்தையின் வழிகளெல்லாம் அடைபட்டன. அவன் தலையைச் சுழற்றினான். தன் தொடைமேல் கைகளை அடித்துக்கொண்டான். பற்களைக் கடித்துக்கொண்டு உறுமினான். எண்ணியிருக்காமல் பெருங்குரலில் “பிதாமகர் என்ன சொல்கிறார்? அவரை இங்கே வரச்சொல்” என்று கூவினான். உரக்க “நான் அவரை இப்போதே பார்க்கவேண்டும்” என்றான். விதுரன் “அரசே, பொறுங்கள்” என்றான்.
கைகளைத்தூக்கியபடி திருதராஷ்டிரன் “அவரை வரச்சொல்… உடனே வரச்சொல்” என்றான். “அரசே, பிதாமகருக்கு இந்த இக்கட்டு இன்னும் தெரியாது. அவரும் பேரரசியும் அவையில் இருக்கிறார்கள். இன்னமும்கூட அங்கிருக்கும் அயல்நாட்டரசர்களுக்கும் பிறருக்கும் ஏதும் தெரியாது. தெரியாமலிருப்பதே நமக்கு நல்லது” என்றான் விதுரன்.
“பிதாமகர் வந்து எனக்கு பதில் சொல்லட்டும். இந்த அரசு என்னுடையதென்று சொன்னவர் அவர். என்னை பாரதவர்ஷத்தின் தலைவனாக்குகிறேன் என்று அவர் என்னிடம் சொன்னார்…” என்று திருதராஷ்டிரன் கூவினான். விதுரன் “அரசே, இன்னும்கூட எதுவும் நம் பிடியிலிருந்து விலகவில்லை. குடித்தலைவர்கள் இளையமன்னரை மணிமுடியேற்கவேண்டுமென்று சொல்கிறார்கள். அவரிடம் அவர்கள் சென்று அரியணை அமரும்படி கோரியிருக்கிறார்கள்” என்றான்.
“அவன் என்ன சொன்னான்?” என்று திருதராஷ்டிரன் தாடையை முன்னால் நீட்டி பற்களைக் கடித்தபடி கேட்டான். “முடிவெடுக்கவேண்டியவர் தாங்கள் என்றார் இளையவர். தங்களிடம் கோரும்படி சொன்னார்.” திருதராஷ்டிரன் தன் கைகளை மேலே தூக்கினான். புதிய எண்ணமொன்று அகத்தில் எழும்போது அவன் காட்டும் அசைவு அது என விதுரன் அறிவான். “அவன் மறுக்கவில்லை இல்லையா? நான் என் தமையனுக்கு அளித்துவிட்ட நாடு இது என்று அவன் சொல்லவில்லை இல்லையா?”
“அரசே, கடமை வந்து அழைக்கும்போது எந்த ஷத்ரியரும் அவ்வகைப் பேச்சுக்களை பேசமாட்டார். அரசகுலமென்பது நாட்டை ஆள்வதற்காகவே. நாடென்பது மக்கள். மக்களுக்கு எது நலம் பயக்குமோ அதைச்செய்யவே ஷத்ரியன் கடன்பட்டிருக்கிறான். அவர் தங்களுக்கு அளித்தது குலமுறை அவருக்களித்த மண்ணுரிமையை. இன்று மக்கள்மன்று அவருக்களிக்கும் மண்ணுரிமை வேறு. அது முழுமையானது. அதை ஏற்கவும் மறுக்கவும் அவருக்கு உரிமை உண்டு. அதை ஏற்று அம்மக்களை காப்பதே ஷத்ரியனின் கடமையாகும்” என்று விதுரன் சொன்னான்.
“அப்படியென்றால் அவன் மண்மீது ஆசைகொண்டிருக்கிறான். இந்த மணிமுடியை விரும்புகிறான்…” என்றான் திருதராஷ்டிரன். “சொல், அதுதானே உண்மை?” விதுரன் பேச்சை மாற்றி “ஆனால் அவர் உங்கள்மீது பேரன்பு கொண்டவர். உங்களை மீறி எதையும் அவர் செய்யவிரும்பவில்லை. ஆகவே அவர் ஒருபோதும் இந்நாட்டை ஆளப்போவதில்லை” என்றான். “ஆகவேதான் நான் ஒரு வழியை சிந்தித்தேன். அதை தங்களிடம் சொல்லவே இங்கே வந்தேன்.”
திருதராஷ்டிரன் தலையசைத்தான். “இளவரசர் பாண்டுவிடம் தங்களை வந்து சந்தித்து ஆசிபெறும்படிச் சொல்கிறேன். தாங்கள் அவர் நாடாள்வதற்கான ஒப்புதலை வழங்குவீர்கள் என்று அவர் எண்ணுவார். அதற்காகவே வந்து தங்கள் தாள்பணிவார். தாங்கள் அந்த ஒப்புதலை அளிக்கவேண்டியதில்லை. தாங்கள் ஒப்பாமல் ஆட்சியில் அமர்வதில்லை என்று அவர் முன்னரே சொல்லிவிட்டமையால் அவருக்கு வேறுவழியில்லை.”
திருதராஷ்டிரனின் தோள்கள் தசைதளர்ந்து தொய்ந்தன. இருக்கையில் நன்றாகச் சாய்ந்து தன் கைகளை மடித்து அதன்மேல் தலையை வைத்துக்கொண்டான். “அவர் இங்கே வரும்போது நீங்கள் உங்கள் எண்ணத்தை அவரிடம் தெரிவியுங்கள்.” திருதராஷ்டிரன் நிமிர்ந்து உருளும் செஞ்சதைவிழிகளால் பார்த்தான். “அவருக்கு உங்கள் ஒப்புதல் இல்லை என்றும் நீங்களே அரியணை அமரவிருப்பதாகவும் சொல்லுங்கள். அத்துடன் அவருக்கு அஸ்தினபுரியின் குடித்தலைவர்கள் அளித்த மண்ணுரிமையையும் உங்களுக்கே அளித்துவிடும்படி கோருங்கள். அது ஒன்றே இப்போது நம் முன் உள்ள வழி.”
திருதராஷ்டிரன் அதை புரிந்துகொள்ளாதவன் போல தலையை அசைத்தான். “அரசே, இளவரசர் அஸ்தினபுரியின் குடிகள் அளித்த மண்ணுரிமையையும் தங்களுக்கே அளித்துவிட்டால் குடித்தலைவர்களுக்கு வேறுவழியே இல்லை. அவர்கள் உங்களை ஏற்றாகவேண்டும். இல்லையேல் அரியணையை அப்படியே விட்டுவைக்கலாம். தாங்கள் இரு வேள்விகள் செய்து இப்பழியை நீக்கியபின் மீண்டும் அரியணை ஏறமுடியும்” என்றான் விதுரன்.
திருதராஷ்டிரன் தலைகுனிந்து அமர்ந்திருக்க விதுரன் எழுந்து வெளியே சென்றான். வாயிலைத் திறந்து வெளியே நின்றிருந்த சஞ்சயனிடம் “இளவரசர் பாண்டுவை அரசர் அழைக்கிறார் என்று சொல்லி அழைத்துவா” என்று ஆணையிட்டான். திரும்பி திருதராஷ்டிரனைப் பார்த்தான். கருங்கல்லில் வடித்த சிலைபோல அவன் அசைவில்லாமல் அமர்ந்திருந்தான். அவன் நகைகளில் மின்னிய நவமணிகள் அவன் உடலெங்கும் விழிகள் முளைத்து ஒளிவிடுவதைப்போலத் தோன்றின.
அப்பால் வேதநாதம் எழுந்துகொண்டிருந்தது. அக்னியை, இந்திரனை, வருணனை, சோமனை, மருத்துக்களை அசுவினிதேவர்களை அழைத்து அவையிலமரச் செய்கிறார்கள். மண்ணில் மானுடராடும் சிறுவிளையாட்டுக்கு தெய்வங்களின் ஒப்புதல். அவை சிறுவிளையாட்டுகளென அவர்கள் அறிந்திருப்பதனால்தான் தெய்வங்களை அழைக்கிறார்கள்.
‘மரத்தில் கூட்டில் குஞ்சுகளை வைத்தபின்
உவகையுடன் அதைச்சுற்றி பறக்கும் இணைப்பறவைகளைப்போல
எங்களைக் காப்பவர்களே, அசுவினிதேவர்களே,
உங்களை வாழ்த்துகிறேன்’
விதுரன் நிலைகொள்ளாமல் மறுபக்க வாயிலையே பார்த்துக்கொண்டிருந்தான். காலம் தேங்கி அசைவிழந்து நிற்க அதில் எண்ணங்கள் வட்டவட்டமான அலைகளைப்போல நிகழ்ந்துகொண்டிருந்தன.
‘இந்திரனே எங்கள் அவியை எப்போது ஏற்றுக்கொள்வாய்?
எந்த வேள்வியால் நீ மானிடரை உனக்கு ஒப்பாகச்செய்வாய்?’
விண்ணகத் தெய்வங்கள் குனிந்து நோக்கி புன்னகைக்கின்றன போலும். எளியவனாக இருப்பது எத்தனை பாதுகாப்பானது. அருளுக்குப் பாத்திரமாக இருப்பதற்கான பெருவாய்ப்பு அல்லவா அது!
பாண்டுவும் சஞ்சயனும் வருவதை விதுரன் கண்டான். பாண்டு அருகே நெருங்கி “தமையனார் என்னை அழைத்ததாகச் சொன்னான்” என்றான். “இளவரசே, தாங்கள் மூத்தவரை வணங்கி அருள் பெறவேண்டும்” என்றான் விதுரன். “ஏன்? அவர் முடிசூடியபின்னர்தானே அந்நிகழ்வு?” “ஆம், அது அஸ்தினபுரியின் அரசருக்கு நீங்கள் தலைவணங்குவது. இது தங்கள் தமையனை வணங்குவது. இன்னும் சற்று நேரத்தில் அவர் மன்னராகிவிடுவார். பிறகெப்போதும் உங்கள் தமையன் அல்ல.” பாண்டு புன்னகை செய்தபடி “ஆம், அதன்பின் அவரது உணவு அமுதமாகவும் ஆடை பீதாம்பரமாகவும் ஆகிவிடுமென சூதர்கள் பாடினர்” என்றான்.
“வாருங்கள்” என விதுரன் உள்ளே சென்றான். பாண்டு அவனுடன் வந்தான். அவனுடைய காலடியோசையைக் கேட்ட திருதராஷ்டிரனின் உடலில் கல் விழுந்த குளமென அலைகளெழுந்தன. “இளையவனா?” என்றான். “ஆம் மூத்தவரே, தங்கள் வாழ்த்துக்களைப் பெறுவதற்காக வந்திருக்கிறேன்” என்றான் பாண்டு. “இளையவரே, அருகே சென்று அவர் பாதங்களைப் பணியுங்கள்” என்றான் விதுரன். “அவர் தங்களிடம் சொல்லவேண்டிய சில உள்ளது. அவற்றையும் கேளுங்கள்.”
பாண்டு முன்னால் சென்று மண்டியிட்டு திருதராஷ்டிரனின் கால்களைத் தொட்டான். திருதராஷ்டிரனின் பெரிய கைகள் இருபக்கமும் செயலிழந்தவை போலத் தொங்கின. பின்பு அவன் பாண்டுவை இருகைகளாலும் அள்ளி தன் மார்புடன் அணைத்துக்கொண்டான். தலையைத் திருப்பியபடி “விதுரா, மூடா, என் இளவல் நாடாள விழைந்தான் என்றால் அவன் மண்ணைப் பிடுங்கி ஆளும் வீணனென்றா என்னை நினைத்தாய்? உடல், உயிர், நாடு, புகழ் என எனக்குரியதனைத்தும் இவனுக்குரியதேயாகும்” என்றான்.
பாண்டு திகைத்து திரும்பி விதுரனை நோக்கி ஏதோ சொல்ல வாயெடுக்க விதுரன் “அரசே, தங்கள் பெருங்கருணை என்றும் அவருடனிருக்கட்டும்” என்றான். தன் பரந்த பெரிய கைகளை பாண்டுவின் தலைமேல் வைத்து திருதராஷ்டிரன் சொன்னான் “நான் அஸ்தினபுரியின் அரசாட்சியை, ஹஸ்தியின் அரியணையை, குருவின் செங்கோலை உனக்கு அளிக்கிறேன். உன் புகழ்விளங்குவதாக. உன் குலம் நீள்வதாக. நீ விழைவதெல்லாம் கைகூடுவதாக. ஓம் ஓம் ஓம்!”
திகைத்து நின்ற பாண்டுவிடம் “இளவரசே, மூத்தவரை வணங்கி ஆம் என்று மும்முறை சொல்லுங்கள்” என்றான் விதுரன். பாண்டு “மூத்தவரே தங்கள் ஆணை”என்று சொன்னான். அவனை எழுந்துகொள்ளும்படி விதுரன் கண்களைக்காட்டினான். திருதராஷ்டிரன் “விதுரா மூடா, என் முடிவை நிமித்திகனைக்கொண்டு அவையில் கூவியறிவிக்கச் சொல். மாமன்னன் ஹஸ்தியின் கொடிவழிவந்தவன், விசித்திரவீரியரின் தலைமைந்தன் ஒருபோதும் கீழ்மைகொள்ளமாட்டான் என்று சொல்” என்றான்.
இருக்கையில் கையூன்றி எழுந்து திருதராஷ்டிரன் “இளையோன் அரசணிக்கோலம் பூண்டு அரியணைமேடை ஏறட்டும். வலப்பக்கத்தில் பிதாமகரின் அருகே என் பீடத்தை அமைக்கச்சொல்” என்றான். “ஆம் அரசே. தங்கள் ஆணை” என்றான் விதுரன். திருதராஷ்டிரன் “சஞ்சயா, என் ஆடைகள் கலைந்திருக்கலாம். அவற்றைச் சீர்ப்படுத்து” என்றான். “ஆணை அரசே” என சஞ்சயன் அருகே வந்தான்.
திகைப்புடன் நின்ற பாண்டுவை கையசைவால் வெளியே கொண்டுசென்றான் விதுரன். பாண்டு “என்ன இது இளையவனே? என்ன நடக்கிறது?” என்றான். அக்கணம் வரை நெஞ்சில் ததும்பிய கண்ணீரெல்லாம் பொங்கி விதுரனின் கண்களை அடைந்தன. இமைகளைக்கொண்டு அவற்றைத் தடுத்து தொண்டையை அடைக்கும் உணர்வெழுச்சியை சிறிய செருமலால் வென்று நனைந்த குரலில் அவன் சொன்னான். “அரசே, கொலைவேழத்தின் பெருங்கருணையை ஒருவன் மட்டிலுமே அறிவான். ஒவ்வொருநாளும் அதன் காலடியில் வாழும் எளிய பாகன்.”
அவையில் வேள்வியின் இறுதி மந்திரங்கள் ஒலிக்கத்தொடங்கின.
இனிய பாடல்களைப் பாடுங்கள்
வாழ்த்துக்களை எங்கும் நிறையுங்கள்
துடுப்புகள் துழாவும் கலங்களை கட்டுங்கள்
உழுபடைகளை செப்பனிடுங்கள்!
தோழர்களே! மூதாதையும் வேள்விக்குரியவனுமாகிய
விண்நெருப்பை எழுப்புங்கள்!
ஏர்களை இணையுங்கள்,
நுகங்களைப் பூட்டுங்கள்,
உழுதமண்ணில் விதைகளை வீசுங்கள்!
எங்கள் பாடலால்
நூறுமேனி பொலியட்டும்!
விளைந்த கதிர்மணிகளை நோக்கி
எங்கள் அரிவாள்கள் செல்லட்டும்!
பாண்டு அந்த வேண்டுகோளை தன்னுள் நிறைத்து இருகைகளையும் தலைக்குமேல் கூப்பி வணங்கினான்.