பகுதி பத்து : அனல்வெள்ளம்
[ 5 ]
பங்குனி மாதம் வளர்பிறை எட்டாம்நாள் திருதராஷ்டிரனுக்கு அஸ்தினபுரியின் மணிமுடி சூட்டப்படுமென பேரரசி சத்யவதியின் அறிவிப்பு முதிய பேரமைச்சர் யக்ஞசர்மரால் முறைப்படி வெளியிடப்பட்டது. கோட்டையின் கிழக்குவாயில் முன்னால் இருந்த பெருமன்றுக்கு காலைச்செவ்வொளி விரிந்த மங்கலவேளையில் நெற்றிப்பட்டமும் மணிப்படாமும் சத்ரமும் வெண்சாமரமும் அணிசேர்க்க பூத்த மலைமேல் கதிரவன் முளைத்ததுபோல பொன்னிற அம்பாரியுடன் அசைந்து அசைந்து வந்த முதுபெருங்கரிமேல் ஏறிவந்த தலைமை நிமித்திகன் அந்தத் திருமுகத்தை வாசித்து அறிவித்தான்.
அந்தச்செய்தி முன்னரே மக்களுக்குத் தெரிந்திருந்தது. அவர்களனைவரும் இன்று நாளை என அச்செய்தி முறையறிவிக்கப்படுவதற்காகக் காத்திருந்தனர். அரண்மனை முகடில் காஞ்சனம் இன்னொலி எழுப்ப அணிவேழம் நடைகொண்டபோதே ஊரெங்கும் செய்தி பரவிவிட்டது. மன்றுக்கு நடுவே யானை வந்து நின்றபோது அதைச்சுற்றி தோள்கள் நெரித்து தலைகள் அடர்ந்திருந்தன. தலைவேழம் நடுவே நிற்க பெருமுரசேந்திய யானையும் கொம்பூதிகள் அமர்ந்த யானையும் இருபக்கமும் நின்றன. பொற்கவசமணிந்த துதிக்கையும் முகபடாமணிந்த மத்தகமும் மணிப்பூக்கள் செறிந்த முறச்செவிகளும் அசைய அவை மலர்மரங்களென ஆடிநின்றன.
நிமித்திகன் செம்பட்டுத்தலைப்பாகையும் மணிக்குண்டலங்களும் செம்பட்டு மேலாடையும் சரப்பொளி ஆரமும் அணிந்திருந்தான். இடையாடைக்குமேல் புலித்தோலைச் சுற்றி வெண்கலக்குறடுகள் அணிந்து கோபுரம் விட்டிறங்கிய யட்சன் போலிருந்தான். பெருமுரசம் கோல்பட்டு அதிர்ந்தபோது மன்றில் நிறைந்திருந்த பேச்சொலிகளெல்லாம் அவிந்தன. யானை தன் துதிக்கையால் மண்ணைத் துழாவி விட்ட மண்பறக்கும் நெடுமூச்சின் ஒலி நெடுந்தொலைவுவரை கேட்டது. நிமித்திகன் யானைமேல் எழுந்து நின்று தன் பொற்கோலைத் தூக்கினான்.
உரத்த மணிக்குரலில் “விண்ணாளும் முழுமுதல்வனிலிருந்து உதித்தவன் பிரம்மன். பிரம்மனின் மைந்தர் முதல்மூதாதை அத்ரி. அத்ரியிலிருந்து பிறந்தவர் சந்திரன். சந்திரகுலத்தில் உதித்தவர் புதன். புதனின் மைந்தன் புரூரவஸ் வழிவந்த சந்திரகுலத்து பெருமன்னர்நிரை என்றும் அழியாதிருப்பதாக! விண்ணும் மண்ணும் நீரும் நெருப்பும் கோள்களும் ஆதித்யர்களும் வாழும் காலம்வரை அவர்கள் புகழ் வளர்வதாக! ஆம், அவ்வாறே ஆகுக!” என்றான். கூட்டம் கைகளைத் தூக்கி ‘ஆம் ஆம் ஆம்!’ என வாழ்த்தொலித்தது.
நிமித்திகன் “ஆயுஷ், நகுஷன், யயாதி, புரு, ஜனமேஜயன், பிராசீனவான், பிரவீரன், நமஸ்யு, வீதபயன், சுண்டு, பஹுவிதன், ஸம்யாதி, ரஹோவாதி, ரௌத்ராஸ்வன், மதிநாரன், சந்துரோதன், துஷ்யந்தன், பரதன், சுஹோத்ரன், சுஹோதா, கலன், கர்த்தன், சுகேது, பிருஹத்ஷத்ரன், ஹஸ்தி என விரியும் ஆயிரமிதழ் தாமரை இப்பெருங்குலம். அஸ்தினபுரியை நிறுவிய மாமன்னர் ஹஸ்தியின் மைந்தனோ அஜமீடன். அவன் வழிவந்த ருக்ஷன், சம்வரணன், குரு ஆகியோரின் புகழோ அணையா விண்ணகப் பெருநெருப்பேயாகும். இன்று இந்நாட்டை ஆளும் குருவம்சத்தின் பெருமைக்கு பாரதவர்ஷத்தின் பெருமை ஒன்றே நிகராகும்” என்றான். ‘ஆம் ஆம் ஆம்’ என கூட்டம் பேரொலி எழுப்பியது.
“குருகுலத்தில் உதித்தவன் ஜஹ்னு. அவன் மைந்தனோ சுரதன். விடூரதன், சார்வபௌமன், ஜயத்சேனன், ரவ்யயன், பாவுகன், சக்ரோத்ததன், தேவாதிதி, ருக்ஷன், பீமன், பிரதீபன், சந்தனு என்னும் சக்ரவர்த்திகள் அவியிட்டு வளர்த்த வேள்வித்தீ இந்நகரம். இது என்றும் வாழ்க!” ‘ஆம் ஆம் ஆம்’ என்றனர் மக்கள். “சந்தனுவின் குலத்தை வாழ்த்துவோம். விசித்திரவீரியரின் பொன்றாப்பெரும்புகழை வாழ்த்துவோம். விசித்திரவீரியரின் மைந்தர்களான திருதராஷ்டிர மன்னரையும் இளையவர் பாண்டுவையும் வாழ்த்துவோம்! நம் வழித்தோன்றல்கள் என்றும் அவ்வாழ்த்தை தங்கள் நாவுக்கணியாக அணிவார்களாக! நம் மொழிகள் அவர்கள் புகழ்பாடி தொடங்குவதாக! நம் தெய்வங்கள் அவர்களை வாழ்த்தி அவி பெறுவதாக!” ‘ஆம் ஆம் ஆம்’ என ஒலித்தது கூட்டம்.
“அஸ்தினபுரியின் மைந்தர்களே, மாமன்னர் ஹஸ்தியின் குழந்தைகளே, நாம் நல்லூழ் கொண்டவர்களானோம். இதோ ஹஸ்தியின் அரியணை பெருமைகொள்ளவிருக்கிறது. பாரதவர்ஷத்தை ஆளும் அஸ்தினபுரியின் ஆட்சியை விசித்திரவீரிய மன்னரின் தலைமைந்தரும் காசிநாட்டு இளவரசி அம்பிகைதேவியின் மைந்தருமான திருதராஷ்டிரன் இந்திரன் கையில் மின்னல்படை என சூடப்போகிறார். அவரது நல்லாட்சியில் இந்நகரம் பொலியப்போகிறது. நம் குலங்கள் செல்வமும் வெற்றியும் புகழும் கொண்டு மகிழவிருக்கின்றன. ஆம் அவ்வாறே ஆகுக!”
கூட்டம் வாழ்த்தொலி எழுப்ப பெருமுரசங்களும் கொம்பும் முழங்கி அணைந்தன. “குடிகளே குலங்களே கேளுங்கள்! வரும் சைத்ரமாதம் வளர்பிறை எட்டாம் நாள் காலை முதற்கதிர் மண்தொடும் முதல் மங்கலநாழிகையில் பேரரசி வாழ்த்துரைகூற இளையவர் செங்கோலெடுத்தளிக்க பிதாமகர் மணிமுடியெடுத்துச் சூட்ட ஐம்பத்தைந்து ஷத்ரியப்பெருங்குடி மன்னர்களும் சூழ்ந்து அரிசியிட்டு வாழ்த்த திருதராஷ்டிரர் அஸ்தினபுரியின் அரியணை அமர்வார். ஹஸ்தியின் மணிமுடி அவர் தலையில் கைலாயத்தில் எழும் இளஞ்சூரியன் என அமையும். கீழ்த்திசை செங்கதிர் சூடியதுபோல அவர் கையில் குருவின் செங்கோல் நிறையும். இந்நகரம் பொலியும். இந்நாடு சிறக்கும். பாரதவர்ஷம் ஒளிபெறும். ஆம் அவ்வாறே ஆகுக!”
கூட்டம் வாழ்த்தொலி எழுப்பும் கணம் ஓங்கிய குரல் ஒன்று “நிறுத்துங்கள்!” என்று கூவியது. ஆங்காங்கே எழுந்த வாழ்த்தொலிகள் தயங்கி மறைந்தன. தன் யோகதண்டை தரையில் ஓங்கி ஊன்றி அதன் கணுக்கள் மேல் கால்வைத்து ஏறி கூட்டத்தின் மேலெழுந்த சார்வாகன் ஒருவன் வலக்கையைத் தூக்கி உரக்க “நிமித்திகரே, இதை மக்களுக்கு அறிவிக்கிறீரா இல்லை ஆணையிடுகிறீரா?” என்றான். நிமித்திகன் திகைத்து கீழே புரவிகளில் நின்ற காவலர்தலைவனைப் பார்த்தபின் “இது பேரரசியின் அறிவிப்பு” என்றான்.
“இந்த முடிவை எடுக்க பேரரசி கூட்டிய மன்றுகள் என்னென்ன? எந்த குலமூத்தாரையும் குடித்தலைவர்களையும் அவர் சந்தித்தார்?” என்றான் சார்வாகன். அவனுடைய சடைமுடி தோளில் திரிகளாகத் தொங்கியது. தாடியும் சடைத்திரிகளாக மார்பில் விழுந்து கிடந்தது. பெருச்சாளித்தோல் கோவணம் அணிந்து உடலெங்கும் வெண்சாம்பல் பூசியிருந்தான். சிவமூலிப்புகையால் பழுத்த கண்கள் கங்குகள் போல எரிந்தன. “மன்னனை மக்களுக்கு அறிவிக்கிறீர்கள் நிமித்திகரே. இங்குள்ள இருகால் மாக்கள் அதைக்கேட்டு கை தூக்கி கூவுகிறார்கள்.”
“சார்வாகரே, இது அரசாணை. நான் இதை அறிவிக்கும் பொறுப்பு மட்டும் கொண்டவன். நீங்கள் உங்கள் எண்ணங்களை அமைச்சரிடம் தெரிவிக்கலாம்” என்றான் நிமித்திகன். “அமைச்சர் எங்கிருக்கிறார்? விழியிழந்தவனுக்கு யாழ் வாசித்துக்காட்டுகிறாரா என்ன?” காவலர்தலைவன் “வாயை மூடு நீசனே. அரசநிந்தனையை நான் சற்றும் பொறுக்கமாட்டேன்” என்றபடி வேலுடன் முன்னால் பாய்ந்தான்.
“இங்கே இவர் செய்தது மக்கள் நிந்தனை. அதை நானும் பொறுக்கமுடியாது!” என்றான் சார்வாகன். காவலர்தலைவன் “மூடு வாயை” என்று கூவியபடி வேலைத்தூக்கினான். ஆனால் கூட்டத்தைக் கடந்து அவனால் சார்வாகனை எட்டமுடியவில்லை. “அஹ்ஹஹ்ஹா! மூடா, இதோ நான் ஏறி நிற்பது என் யோகதண்டு. நான் இதைவிட்டிறங்கினால் இந்தப்பெருங்கூட்டத்தில் ஒருவன். உன் ஒற்றை ஈட்டி இக்கூட்டத்தை என்ன செய்யும்?”
“இவர்கள் அரசகுடிகள்… அஸ்தினபுரியின் மக்கள்” என்றான் காவலர்தலைவன். “அப்படியென்றால் நீ கண்ட அரசநிந்தனையை அவர்கள் ஏன் காணவில்லை?” என்றான் சார்வாகன். காவலர்தலைவன் பொறுமை இழந்து தன் குதிரைமேல் பாய்ந்தேறி அதை குதிமுள்ளால் உதைத்தான். குதிரை முன்காலைத் தூக்கி கூட்டம் மீது பாயத்தொடங்கியபோது கூட்டத்துக்கு அப்பால் சோமரின் குரல் கேட்டது “சிருங்கா நில்… நான் பேசுகிறேன் அவரிடம்.”
கூட்டம் வழிவிட சோமர் தன் புரவியைச் செலுத்தி யானையருகே வந்தார். புரவிமேல் அமர்ந்தவாறே “சார்வாகமுனிவருக்கு தலைவணங்குகிறேன். இந்நகர மக்கள் தங்கள் நகர்நுழைவால் வாழ்த்தப்பட்டிருக்கிறார்கள்” என்றார். “நீர் அமைச்சர் சோமர் என நினைக்கிறேன்” என்றான் சார்வாகன். “ஆம்… தங்கள் அருளாசியை நாடுகிறேன்.” “என் ஆசி அதை நாடும் அனைவருக்கும் உரியதுதான். அமைச்சரே, இங்கே அறிவிக்கப்பட்ட இச்சொற்கள் எந்த முறைப்படி எடுக்கப்பட்டன?”
“சார்வாகரே, இவை பேரமைச்சர் யக்ஞசர்மரின் சொற்கள். பேரரசியின் ஆணைப்படி முன்வைக்கப்பட்டவை. அமைச்சர் விதுரர் தலைமையில் முதன்மை நெறியாளர் கூடி எடுத்த முடிவுகள் இவை.” “மன்றுசூழப்பட்டதா? அதுதான் கேள்வி… மன்றுசூழப்பட்டதா?” என்று சார்வாகன் கேட்டான். “இல்லை” என்றார் சோமர். “ஏனென்றால் விசித்திரவீரியரின் முதல்மைந்தர் திருதராஷ்டிரன் அரியணை ஏற்பதென்பது நூலும் முறையும் வகுத்த மரபேயாகும். மரபு மீறப்படும்போது மட்டுமே முறைப்படி முன்னரே மன்றுசூழப்பட்டிருக்கவேண்டும்.”
“இங்கு மரபு மீறப்பட்டிருக்கிறது” என்றான் சார்வாகன். “விழியிழந்தவன் எப்படி அரசாளமுடியும்? இவ்வரியணையில் அல்ல பாரதவர்ஷத்தின் எந்த அரியணையிலாவது எப்போதாவது விழியிழந்தவன் அமர்ந்த வரலாறுண்டா?” சோமர் “இல்லை. ஆனால் அதற்கும் நம் முன்னோர் வகுத்த நூல்கள் நெறி காட்டுகின்றன. சுக்ரரின் அரசநீதியும் பிரஹஸ்பதியின் ஷாத்ரஸ்மிருதியும் லகிமாதேவியின் விவாதசந்த்ரமும் விழியிழந்தவன் மன்னனாகலாமென்கின்றன. மன்னனுக்கு அமைச்சே விழிகள் சுற்றமே செவிகள் படைகளே தோள்கள் என்கின்றன அவை. நம் மன்னர் சுற்றமும் அமைச்சும் படைகளும் கொண்டவர். அதுவே போதுமானது” என்றார்.
“அமைச்சரே, சொல்லை எத்திசைக்கும் திருப்பமுடியும். நான் அதைக் கேட்கவில்லை. இது இயல்பான அரசேற்பு அல்ல. இங்கே ஒரு முறைமீறல் உள்ளது. அதை மக்கள் மன்று ஏற்றாகவேண்டும். நூல்கள் சொல்வது எதுவாக இருந்தாலும் சரி அதை இக்குலமும் குடியும் ஏற்றாகவேண்டும். அது நிகழ்ந்திருக்கிறதா?” சோமர் திகைத்து “அனைத்தும் முறைப்படி நிகழ்ந்துள்ளன” என்றார். “மக்கள் மன்று ஏற்காத மன்னன் இந்த பாரதவர்ஷத்தை ஆண்டதில்லை. நீங்கள் விழியுடையவர்கள் மீது விழியிலாத ஒருவனை சுமத்துகிறீர்கள்.”
“சார்வாகரே, விழியிழந்தவன் அரசனாகக்கூடாதெனச் சொல்லும் ஒரு நூலை நீங்கள் இங்கே சுட்டிக்காட்டலாம்” என்றார் சோமர். “நான் உன்னுடன் நூல்விவாதம் செய்ய வருவேனென எண்ணினாயா? மூடா, நூறுஆயிரம் நூல்களை எரித்தெடுத்த நீறைத்தான் இதோ என் உடலெங்கும் பூசியிருக்கிறேன் நான். விழியிழந்தவனும் மனிதனே. அவனும் வாழ்வதற்கு உரிமை கொண்டவனே. உண்ணவும் உடுக்கவும் மகிழவும் மைந்தரைப் பிறப்பிக்கவும் அவனுக்கும் இயற்கையின் ஆணை உள்ளது. ஆனால் இங்குள்ளோர் அனைவரும் விழியுடன் இருக்கையில் விழியிழந்த ஒருவன் மன்னனாகக் கூடாது. அது ஒருபோதும் நலம் பயக்காது.”
சார்வாகன் தொடர்ந்தான் “ஏனென்றால் அவன் சித்தத்தில் எப்போதும் வாழ்வது அவனுக்கும் பிறருக்கும் இருக்கும் வேறுபாடாகவே இருக்கும். அந்த இடைவெளியை நிறைக்கவே அவன் அனைத்தையும் செய்வான். மக்கள் நலம்நாட அவனுக்கு நேரமிருக்காது. ஒருபோதும் அவன் தன் மக்களை நம்பமாட்டான். அவர்கள் தன்னை ஏற்கவில்லை என்றே எண்ணுவான். ஆகவே அவர்களை கண்காணிப்பான். அமைச்சரே, ஐயம் கொண்டவன் ஐயத்துக்குரியவற்றை மட்டுமே காண்பான். ஆகவே அவன் காலப்போக்கில் மக்களை வெறுப்பான். தன்னை நிலைநிறுத்த மக்களை வதைப்பான்…”
“ஆட்சியாளன் என்றும் மக்களில் ஒருவனாகவே இருந்தாகவேண்டும்” என்றான் சார்வாகன். “தேவர்களுக்கு தேவனும் அசுரருக்கு அசுரனுமே அரசர்களாக முடியும். மூடர்நாட்டில் மூடனே நல்ல ஆட்சியாளன். மூடர்களை வழிநடத்தும் அறிவாளன் பேரழிவையே உருவாக்குவான். அறிஞர்களை வழிநடத்தும் மூடன் உருவாக்கும் அழிவும் அதுவும் நிகரே. ஆம், விழியுடையவர்களை விழியிழந்தோன் ஆளமுடியாது. நடப்பவர்களை முடமானவன் வழிநடத்தமுடியாது. அது தீங்கு.”
அங்கிருந்த மொத்தக்கூட்டமும் திகைத்து நிற்பதை சோமர் கண்டார். “சார்வாகரே, உங்கள் அறமுரைத்தலை முடித்துவிட்டீர்கள் என எண்ணுகிறேன். இங்கு நீர் சொன்ன சொற்களை நான் அமைச்சரிடம் தெரிவிக்கிறேன்” என்றார். சார்வாகன் “தெரிவித்தல் உங்களுக்கு நல்லது. எனக்கு நாடில்லை. வேந்தும் கொடியும் இல்லை. என்னை படைகளும் கோட்டையும் காப்பதில்லை. என் கப்பரையில் உங்கள் நாணயங்கள் விழுவதுமில்லை. இந்த நகரம் அழிந்து இங்கொரு வெண்ணீற்று மலை எஞ்சுமென்றால் அதில் ஒரு கை அள்ளி என் உடலில் பூசி மகிழ்ந்து நடனமிடுவேன். ஏனென்றால் ஆக்கமும் அழிவும் மகிழ்வே. வாழ்தலும் இறப்பும் மகிழ்வே. உண்டலும் குடித்தலும் உவத்தலும் ஓய்தலும் என ஓடும் வாழ்வின் ஒவ்வொரு துளியும் அமுதே. நெடுநீர்வழிப்படும் புணையெனப்போகும் இவ்வாழ்வில் பெரியோரென்றும் சிறியோரென்றும் எவருமில்லை. ஆதலால் யாதும் ஊரே, யாவரும் கேளிர்!” என்றான்.
வாழ்த்தொலிகளில்லாமல் பனிக்கட்டி உருகுவதுபோல அந்தக்கூட்டம் கரைவதை சோமர் பார்த்தார். அவர் கைகாட்ட பெருமுரசுகளும் கொம்புகளும் முழங்கின. வீரர்கள் தங்கள் படைக்கலங்களைத் தூக்கி அஸ்தினபுரிக்கும் குருகுலத்துக்கும் பேரரசிக்கும் பீஷ்மருக்கும் திருதராஷ்டிரனுக்கும் வாழ்த்தொலி கூவினர். சோமர் நகர் வழியாக குதிரையில் செல்லும்போது படைவீரர்கள் மட்டும் வாழ்த்தொலி எழுப்புவதைக் கேட்டுக்கொண்டே சென்றார். எப்படி அதற்குள் அச்செய்தி நகரமெங்கும் பரவியது என்று வியந்துகொண்டார்.
அரசுசூழ் மன்றில் விதுரன் இல்லை. அவன் திருதராஷ்டிரனின் அவையிலிருப்பதாகச் சொன்னார்கள். சோமர் அரண்மனையின் வலப்பக்க நீட்சியாகிய புஷ்பகோஷ்டம் நோக்கிச் சென்றார். செல்லும்போதே விதுரனிடம் சொல்லவேண்டிய சொற்களைத் திரட்டிக்கொண்டு நடந்தார். திருதராஷ்டிரனின் இசைக்கூடத்தில் யாழிசை கேட்டுக்கொண்டிருந்தது. சோமர் மிக மெல்ல நடந்தார். குறடுகளைக் கழற்றிவிட்டு மரவுரிமெத்தை விரிக்கப்பட்டிருந்த தரையில் ஓசையில்லாமல் நடந்து உள்ளே சென்றார். இசைக்கூடத்தின் நடுவே இருந்த தடாகத்தில் சூரிய ஒளி விழுந்து அதன் ஒளியலை மரக்கூரையில் நடமிட்டுக்கொண்டிருந்தது. பெரிய பீடத்தில் திருதராஷ்டிரன் தன் இரு கைகளையும் மார்பின்மீது கட்டிக்கொண்டு தலைகுனிந்து அமர்ந்து இசைகேட்டுக்கொண்டிருந்தான்.
அவனருகே இன்னொரு பீடத்தில் விதுரன் அமர்ந்திருந்தான். இசைமேடையில் இளைய சேடிப்பெண் ஒருத்தி யாழ்மீட்டிக்கொண்டிருந்தாள். அவள் சூதப்பெண் போலத் தெரியவில்லை. அரண்மனையில் சேவையாற்றும் வைசியப்பெண் என்று அவள் ஆடைகள் காட்டின. முலைகள் மேல் தொய்ந்துகிடந்த பொன்மணியாரமும், வலக்கொண்டையாகக் கட்டப்பட்டிருந்த கூந்தலில் பொன்னாலான தாமரைமலரும் காதுகளில் அலரிமலர் வடிவில் பொற்தோடுகளும் அணிந்திருந்தாள். நீலப்பட்டாடை அணிந்து கால்களை மடித்து அமர்ந்து மெல்லிய சிவந்த விரல்களால் யாழ்நரம்புகளை வருடிக்கொண்டிருந்தாள்.
சோமர் அமர்ந்துகொண்டார். அவள் காந்தாரத்தில் இருந்து அரசியருடன் வந்த வைசியப்பெண் என்று அவருக்குத்தெரிந்தது. அவள் திரும்பத்திரும்ப ஒரே இசையைத்தான் மீட்டுகிறாள் என்று தோன்றியதும் அவர் சலிப்புடன் மெல்ல அசைந்தார். விதுரனின் விழிகள் வந்து அவர் விழிகளைத் தொட்டுச்சென்றன. அவள் மெல்லிய குரலில் யாழுடன் இணைந்து பாடத்தொடங்கினாள். காந்தாரத்தின் அபப்பிரம்ஸ மொழி. அது தெரிந்த சொற்களை புதியவகையில் உச்சரிப்பதுபோலக் கேட்டது. அவ்விசையில் பாலைவன வண்டுகளின் ரீங்காரமும் பாலைநிலத்துப்பாறைகளில் மணல்பொழியும் ஒலியும் ஓநாயின் மெல்லிய முனகலும் எல்லாம் கலந்திருப்பதுபோலத் தோன்றியது. சோமர் மீண்டும் நெளிந்தமர்ந்து கொட்டாவி விட்டார்.
இசை நீண்டு நீண்டு சென்றுகொண்டே இருந்தது. இதை எதற்காக ரசிக்கிறார்கள் என சோமர் எண்ணினார். ஒரு பெரிய வெண்கலப்பாத்திரத்தில் மழைத்துளிகள் விழுவதுபோன்ற ஓசை. அதை அமர்ந்து ரசிப்பதென்றால் ஒருவகை குழந்தைத்தனம்தான் அது. ஆனால் விழியிழந்த அரசனால் வேறென்ன செய்யமுடியும்? அவனது கரியபேருடலில் அந்த இசை குளத்துநீரில் காற்று அலையெழுப்புவதுபோல எதிர்வினையை உருவாக்கிக்கொண்டிருந்தது. இந்த மனிதன் இனி இந்நகரின் அரசன். இவன் என்ன எண்ணுகிறான் என்றே எவரும் அறியமுடியாது. இறுக மூடப்பட்ட ஒரு கற்சுவர்சிறைக்குள் வாழ்பவன். அவனுக்கு இம்மக்களும் நெடுந்தூரக்குரல்கள் மட்டும்தானே?
அவருக்கு உடல் சிலிர்த்தது. சார்வாகன் சொன்னவை ஒவ்வொரு சொல்லாக எண்ணத்தில் விரிந்தன. அவன் அஸ்தினபுரியின் அரசனானால் அவனுக்கும் மக்களுக்குமான உறவென்ன? ஆம், விதுரன்தான் நாடாளப்போகிறான். பீஷ்மர் இருக்கிறார். ஆனால் அவனுடைய இருண்ட உலகில் எவரேனும் மந்தணப்பாதைகள் வழியாகப்புகுந்துவிட்டால்? அவன் விதுரனை விலக்கிவிட்டால் என்ன நிகழும்? முதுமையில் செவிகேளாமலாகும் யானை கொலைவெறிகொள்ளும் என்று மதங்கநூல் சொல்லும். பாகனை புரிந்துகொள்ளமுடியாதென்பதனாலேயே அது கொல்லத் தொடங்கிவிடும்.
எண்ணங்களை அவரால் விலக்க முடியவில்லை. எண்ணங்கள் அவருக்குள் முன்னரே உறைந்திருந்த ஐயங்களை தொட்டுத்தொட்டு மீட்டன. விதுரன் இங்கே இனி நீடிக்கமுடியாது. விழியிழந்தவனின் இருண்ட உலகுக்குள் நுழைய ஒரே வாயில்தான். அவன் அரசியான காந்தாரி. அவள் தம்பி அந்த வாயில் வழியாக அவனுள் நுழையமுடியும். ஆம், அரசாளப்போவது விதுரன் அல்ல. திருதராஷ்டிரன் அல்ல. சகுனிதான். அன்று அவர் வெளியிட்ட அறிவிப்பின் உள்ளடக்கம் அதுவே. கோட்டைப்புறத்து மயானத்தில் சாம்பல்பூசி சிவமூலிப்புகை இழுத்து ஒடுங்கிக்கிடக்கும் சார்வாகன் அறிந்த உண்மை நாற்பத்தைந்தாண்டுகாலம் மதிசூழ்கை கற்ற அவர் எண்ணத்தை அடையவில்லை.
இசை நின்றது. திருதராஷ்டிரன் பெருமூச்சுகள் விட்டபடி தலையை அசைத்தான். அந்த வைசியப்பெண் எழுந்து திருதராஷ்டிரனை வணங்கினாள். “பிரகதி,.. நீ இங்கேயே இரு… இந்த இசை என் செவிகளில் இருந்து எப்போது மறைகிறதோ உடனே நீ மீண்டும் இதை இசைக்கவேண்டும்” என்றான் திருதராஷ்டிரன். “என்ன ஒரு மகத்தான இசை… காற்றும் நெருப்பும் சேர்ந்து நடனமிடும் இசை… பாலைவனங்களில் மட்டும் பிறக்கும் இசை…” திரும்பி கைகளை நீட்டியபடி “விதுரா!” என்றான். “அரசே” என்றான் விதுரன்.
“நான் முடிசூடியதுமே ஒரு பெரும் இசைச்சபை கூடவேண்டும். தென்னகத்தில் இருந்து அனைத்துப் பண்களையும் பாடும் பாணர்களை வரவழைக்கவேண்டும். காந்தாரத்திலும் அதற்கப்பால் பெரும்பாலைநிலத்திலும் இருந்து இசைவாணர்களை வரவழைக்கவேண்டும். இருசாராரும் இங்கே என் அவையில் இருந்து பாடவேண்டும். இரு பாடல்முறைகளும் ஒன்றாகவேண்டும். பெருமழைநிலத்தின் இசையும் அனல்மண்ணின் இசையும் ஒன்றாகட்டும். அது சிவசக்தி லயம்போலிருக்கும்… ஆம். அதுதான் நான் உடனே செய்யவேண்டியது… இது என் ஆணை. குறித்துக்கொள்!”
“ஆணை” என்றான் விதுரன். “பிரகதி, உனக்கு நான் எந்தப் பரிசும் அளிக்கப்போவதில்லை. நீ இங்கே எப்போதுமிருக்கவேண்டும்” என்றான் திருதராஷ்டிரன். பிரகதி வணங்கி பின்னகர்ந்து யாழை எடுத்துக்கொண்டாள். “விதுரா, மூடா, இன்னும் எத்தனை நாளிருக்கிறது மணிமுடிசூட்டு நாளுக்கு?” விதுரன் “அரசே, இன்னும் நாற்பது நாட்களிருக்கின்றன” என்றான். “ஏன் அத்தனை தாமதம்? அறிவிப்பு இன்று வெளியாகிவிட்டதல்லவா?” “ஆம், அரசே. முடிசூட்டுவிழாவுக்கு அனைத்து ஷத்ரியகுலங்களும் வந்தாகவேண்டுமல்லவா?” “அவர்களை விரைந்து வரச்சொல்லலாமே!” விதுரன் ஒன்றும் சொல்லவில்லை.
“விதுரா, நான் கலிங்கத்திலிருந்து எனக்கான பட்டுத்துணிகளை கொண்டு வரச்சொல்லியிருந்தேனே?” என்றான் திருதராஷ்டிரன். “அரசே, அதற்காக ஒரு சிற்றமைச்சரே சென்றிருக்கிறார். தங்களுக்காக பீதர்களின் உயர்தரத்துப் பட்டாடைகளைக் கொண்டுவரச்சொல்லி தேவபாலத்துக்கும் ஆளனுப்பியிருக்கிறேன். திருவிடத்தில் இருந்து மணிகளும் பாண்டியத்து முத்துக்களும் வருகின்றன.” திருதராஷ்டிரன் நிறைவின்மையுடன் தலையை அசைத்து “விரைவாக வரச்சொன்னாயா? அவர்கள் வந்துசேர தாமதமாகிக்கொண்டே இருக்கும். தாமதித்துவந்தபின் காரணங்கள் சொல்பவர்களை கசையாலடிக்கத் தயங்கமாட்டேன் என்று சொல்!” என்றான்.
“நான் பார்த்துக்கொள்கிறேன்” என்றான் விதுரன். “நகைகள் வந்ததும் என்னை கூட்டிச்சென்று காட்டு… எங்கே வியாஹ்ரதத்தர்?” விதுரன் “அவர் மதியம் வரை அலுவலில் இருப்பார். பின்மாலையில் உங்களை வந்து சந்திப்பார். தற்போது தாங்கள் சற்று ஓய்வெடுக்கலாம்” என்றான். அவன் கைகாட்ட ஓரமாக நின்ற அணுக்கச்சேவகன் திருதராஷ்டிரனின் கைகளைப் பற்றிக்கொண்டான். தன் பெரிய கைகளை அவன் தோளில் வைத்தபடி திருதராஷ்டிரன் உள்ளே சென்றான்.
விதுரன் திரும்பி மெல்ல “மக்கள் வாழ்த்தொலி எழுப்பவில்லை, அல்லவா?” என்றான். “ஆம்… ஆனால்…” என சோமர் தொடங்க “நான் இங்கிருந்தே கேட்டேன். மக்களின் வாழ்த்தொலிகள் அலையலையாக எழுந்தமரும். படைவீரர்களின் ஒலிகள் சீரான படைநகர்வின் ஒலி போலக்கேட்டன” என்றான். “ஒரு சார்வாகர் பெருமன்று முன் எழுந்து நின்றுவிட்டார் அமைச்சரே” என்றார் சோமர்.
“பேரமைச்சர் யக்ஞசர்மர் தன் உதவியாளர்களுடன் சார்வாகர் தங்கியிருக்கும் சுடுகாட்டுக்கே நேரில் சென்று பணிந்து காணிக்கை வைத்து அவரையும் முடிசூட்டுவிழவுக்கு அழைக்கவேண்டும். பேரமைச்சரே சென்ற செய்தியை நாட்டுமக்கள் அனைவரும் அறியவும் வேண்டும்” என்றான் விதுரன். சோமர் திகைப்புடன் நோக்க விதுரன் புன்னகையுடன் “மன்றில் அவரது அவச்சொல் ஒலிக்கட்டும். மன்றில் முழுதணிக்கோலத்தில் மூத்தவர் வந்தமர்கையில் அச்சொற்களை அவர் சொன்னாரென்றால் அதுவே குடித்தலைவர்களும் குலமூத்தாரும் மன்னரை ஏற்பதற்கு தூண்டுதலாகும்” என்றான்.