‘வெண்முரசு’ – நூல் இரண்டு – ‘மழைப்பாடல்’ – 48

பகுதி பத்து : அனல்வெள்ளம்

[ 1 ]

அஸ்தினபுரியின் வரலாற்றில் அதற்கிணையானதொரு மழைக்காலமே வந்ததில்லை என்றனர் கணிகர். ஆறுமாதகாலம் மழை பிந்தியதுமில்லை. வந்தமழை மூன்றுமாதம் நின்று பொழிந்ததுமில்லை. புராணகங்கையில் நீர் ஓடியதைக் கண்ட எவருமே அஸ்தினபுரியில் வாழ்ந்திருக்கவில்லை. நூற்றைம்பதாண்டுகளுக்கு முன்பு அதில் நீர்பெருகியதை கணிகர்நூல்கள் குறிப்பிட்டன. அப்போது ஆமை ஒன்று அஸ்தினபுரியின் மாளிகைமாடத்தின் மீது ஏறியது என்றன.

மழை பொழியத் தொடங்கி ஒரு மாதமானபோது நாணல்களுக்குள் வாழும் எலிகளைப்போல மனிதர்கள் மழைத்தாரைகளுக்குள் வாழக்கற்றுக்கொண்டனர். தவளைகளைப்போல நீரில் துழாவி நடந்தனர். நீர்ப்பாம்புகள் போல நெளிந்தனர். நண்டுகள் போல வளைகளை மூடிக்கொண்டு சேற்றின் ஈரத்தில் துயின்றனர். மழைக்குள்ளேயே வணிகமும் தொழில்களும் நிகழ்ந்தன. மழைக்குள்ளேயே அவிப்புகையும் அடுபுகையும் எழுந்து நீர்ச்சரடுகளுக்குள் ஊடுருவிப் பரவின. வாழ்வின் ஓசைகள் வான்நீரில் பட்டுப் பரவின.

நகரின் அனைத்துப்பறைகளிலும் தோற்பரப்புகள் நெகிழ்ந்து தழைய, அனைத்து செய்தியொலிகளும் வெண்கலமணிகளாலேயே நிகழ்ந்தன. இருளுக்குள் வானம் ஒளியுடன் வெடித்து துடித்துக்கொண்டிருந்தது. விடிந்தபின் விடைகொண்ட ராத்ரிதேவியின் மெல்லிய மேலாடையே நீண்டு பகலாகிக்கிடந்தது. சூரியன் தோன்றியதையே கண்கள் மறந்தன. திண்ணைகளில் தோலாடைகளைப் போர்த்தியபடி அமர்ந்து பழம்பாடல்களை பாடக்கேட்டனர் நகர்மக்கள். காவலர்கள் தேன்மெழுகுபூசப்பட்ட பாய்மறைக்குள் பதுங்கி ஒடுங்கி அமர்ந்து இரவும் பகலும் கண்ணயரக் கற்றுக்கொண்டனர்.

வடக்குவாயில் காவல்மாடத்தின் மீது இரவில் மழைத்தாரைகளுக்கு அடியில் பெரிய தவளைபோல பாயுடன் ஒடுங்கி அமர்ந்திருந்த காவலன் காட்டுக்குள் யானைக்கூட்டம் ஒன்று கிளைகளை விலக்கி மரங்களைப் பெயர்த்து பாறைகளை உருட்டி வருவதாக கனவுகண்டான். யானைக்கூட்டம் மத்தகங்களால் கோட்டைமதிலை முட்டித்திறக்க முயல்வதைக் கண்டு திகைத்துக்கூச்சலிட்டுக்கொண்டு அவன் விழித்து எழுந்தபோது வடக்குவாயிலுக்கு அப்பால் இருட்டுக்குள் இலைகளின் அடிப்பக்கத்தில் நீரின் ஒளி தெரிவதுபோல உணர்ந்தான். கூச்சலிட்டபடி காவல்மாடத்துக்குள் ஓடிச்சென்று துயின்றுகொண்டிருந்த இணைக்காவலர்களை எழுப்பினான்.

அவர்கள் எழுந்து வந்து பந்தங்களைக் கொளுத்தி அவற்றுக்குப்பின்னால் இரும்புக் குழியாடிகளை நிறுத்தி ஒளிகுவித்து வீசி காட்டை நோக்கினர். வடபுலத்தின் அடர்காட்டுக்குள் செந்நிறமான மழைநீர் சுழித்துவந்து தேங்கிக்கொண்டே இருந்தது. மரங்களின் அடித்தூர்கள் நீருக்குள் காலூன்றி நின்றிருக்க நீர் எழுந்துகொண்டே இருந்தது. சிறுபுதர்களுக்குள் வாழும் முயல்களும் எலிகளும் நீரில் அலைகளெழுப்பியபடி நீந்திச்சென்று புதர்க்கிளைகளில் தொற்றி ஏறிக்கொள்வதைக் காணமுடிந்தது.

“நீரா?” என்றான் கிருதன் என்னும் காவலன். “ஆம்… மழைநீர்!” என்றான் காகன் என்னும் தலைமைக்காவலன். “நதிபோல இருக்கிறதே” என்றான் கிருதன். முதியவனாகிய காகன் “இது முன்னொருகாலத்தில் கங்கையாக இருந்த பள்ளம். கங்கை திசைமாறியபின் காடாகியிருக்கிறது. ஆகவேதான் இதற்கு புராணகங்கை என்று பெயர்” என்றான். நீர் ஏறிக்கொண்டே இருப்பதை அவர்கள் கண்டனர். நூற்றுக்கணக்கான முயல்களும் எலிகளும் பாம்புகளும் கீரிகளும் நீரில் நீந்தி மரங்களில் தொற்றிக்கொண்ட ஓசை மரங்கள் சொட்டும் ஒலியுடன் இணைந்து ஒலித்தது.

காகன் “உடனடியாக எவரேனும் சென்று அமைச்சரிடம் தெரிவியுங்கள்” என்றான். கிருதன் தன் குடைமறையை தலையிலிட்டுக்கொண்டு வேல்கழியை ஊன்றியபடி மழையால் அறைபட்ட சேறு கொந்தளித்துக்கொண்டிருந்த சாலை வழியாக ஓடினான். வடபுலத்துச் சோலைகளில் யானைகள் மழையில் நனைந்து கருங்குவைகளாக அசையாமல் நின்றுகொண்டிருந்தன. அவை அசையாமல் நிற்பதனாலேயே யானைத்தன்மையை இழந்துவிட்டிருந்தன. யானையென அறிந்திருந்தது அந்த உடலூசலைத்தான் என்று கிருதன் எண்ணிக்கொண்டான். அசையாத யானை என்பது பனிக்கட்டியாக ஆன நீர். அது நீரே அல்ல. அப்படியென்றால் யானை ஒவ்வொரு கணமும் மழை மழை என்றுதான் அசைகிறதா?

அவன் அமைச்சர் விப்ரரின் மாளிகையை அடைந்தான். மழைத்தாரைக்கு அப்பால் நெய்த்தீபங்களின் செவ்வொளிவிழிகளுடன் மாளிகையும் குளிரில் விரைத்து ஒடுங்கியிருந்தது. செய்தியைக்கேட்டதும் தலைமைக்காவலனான கலன் விப்ரரை எழுப்பலாமா வேண்டாமா என குழம்பினான். கிருதன் சொல்வதென்ன என்று அவனால் புரிந்துகொள்ள முடியவில்லை. புராணகங்கையில் நீர் வருகிறதென்றால் என்ன பொருள்? நகரின் அனைத்துத் தெருக்களும்தான் நீரால் நிறைந்து ஆறுகளாக ஓடிக்கொண்டிருக்கின்றன. கம்மியர் தெருவில் குதிரைகள் நீந்திச்செல்லுமளவுக்கு நீர் ஓடிக்கொண்டிருக்கிறது.

“முன்னர் அங்கே நீ மழைநீரை பார்த்ததில்லையா?” என்றான். கிருதன் “அங்கே இப்போது ஒரு பெரிய நதி கிளம்பி வந்திருக்கிறது” என்றான். “நதியா?” என்றான் கலன். “இன்னும் அது ஓடத்தொடங்கவில்லை” என்றான் கிருதன். தலையை கையால் சுரண்டியபடி சற்று சிந்தித்தபின் “வா நானே பார்க்கிறேன்” என்று சொல்லி கலன் தன் உடைவாளை எடுத்தணிந்துகொண்டு குடைமறையை அணிந்து குதிரையில் ஏறிக்கொண்டான். கிருதன் பின்னால் ஓடிவந்தான்.

நீர் சுழித்தோடிய தெருக்கள் வழியாக விரைந்து வடக்கு வாயிலை நோக்கிச் சென்றான். அதை நெருங்க நெருங்க அவனுக்குள் உள்ளுணர்வின் எச்சரிக்கை எழத்தொடங்கியது. குதிரை அந்த உள்ளுணர்வின் பருவடிவென கால்தயங்கி நின்று முகவாயை தூக்கியது. அவன் அதன் விலாவில் குதிமுட்களைக் குத்தி முன்செலுத்தினான். வடக்குவாயில் பெருங்கதவு மூடியிருந்தது. அதன் கனத்த தாழ்மரங்கள் குறுக்கும் நெடுக்குமாக பூட்டப்பட்டிருந்தன. தாழ்களின் இரும்புப்பட்டைகளும் குமிழ்களும் இருளுக்குள் பந்த ஒளியை அணையப்போகும் அனல்போல பிரதிபலித்தன. சிலகணங்கள் கழித்தே கலன் அவன் கண்டதென்ன என உணர்ந்தான். மூடியகதவின் பொருத்துக்கள், இடுக்குகள் வழியாக வாள்கள் போல நீர்ப்பட்டைகள் உள்ளே பீரிட்டுக்கொண்டிருந்தன.

கலன் குதிரையைத்திருப்பி நீர்ச்சுழிப்புகளை பாய்ந்துகடந்து அமைச்சரின் மாளிகையை அடைந்து இறங்கி உள்ளே ஓடி அவரது துயிலறை வாயிற்கதவைத் தட்டினான். அவர் நெகிழும் உடையுடன் வந்து பதறி “என்ன? என்ன?” என்றார். “வெள்ளம்! புராணகங்கை நகருக்குள் நுழையவிருக்கிறது” என்றான் கலன். அச்சொற்களைக் கேட்டதுமே முழு உயிர் கொண்டு மஞ்சத்தில் உடன் துயின்ற கணிகையிடம் உடனடியாக அவள் குடிக்குத்திரும்பச் சொல்லிவிட்டு மேலாடையை மஞ்சத்தில் இருந்து எடுத்தணிந்தவாறே வெளியே விரைந்தார். செல்லும்போதே ஆணைகளை வெளியிட்டுக்கொண்டிருந்தார்.

அவர் வடக்குவாயிலை அணுகுவதற்குள்ளேயே அரண்மனையின் தெற்கு மூலையில் பெரிய மரத்தூண்களுக்குமேல் தொங்கிய தசகர்ணம் என்னும் பெரிய கண்டாமணி முழங்கத்தொடங்கியது. இரட்டை ஒலிகளாக அதன் முழக்கம் எழுந்ததுமே நீரொலிக்குள் மானுடக்குரலொலிகள் எழுந்து ஓங்க அஸ்தினபுரி துயிலெழுந்தது. அது வெள்ளம் நெருப்பு ஆகியவற்றை மட்டுமே சுட்டும் மணியோசை என அனைவரும் அறிந்திருந்தனர்.

சிறிய இல்லங்களில் வாழ்ந்தவர்கள் பதறியும் கூவியும் திகைத்துநின்றும் மீண்டும் பரபரப்பு கொண்டும் தங்கள் உடைமைகளை அள்ளி மூட்டைகளிலும் மரப்பெட்டிகளிலும் சேர்த்துக்கொண்டனர். குழந்தைகளைத் தூக்கியபடி முதியோரைப் பற்றியபடி அருகிருந்த உயரமான மாடமாளிகைகளுக்கோ காவல்மாடங்களுக்கோ சென்றனர். ஆலயமுகடுகள் கோட்டைவீட்டு நிலைகள் எங்கும் அவர்கள் ஏறிக்கொண்டனர். ஏறமுடியாத முதியவர்களை கைப்பிடித்து தூக்கினர். பொருட்களை நனையாத உயரங்களில் அடுக்கினர். ஆண்கள் முழங்கால் மூழ்கும் நீரில் ஓடிச்சென்று கன்றுகளை கட்டவிழ்த்து விட்டனர்.

நகர் முழுக்க குதிரைகளில் விரைந்த அரசவீரர்கள் மக்கள் உயரமான இடங்களுக்குச் செல்லும்படி கூவி ஆணையிட்டனர். எங்கு செல்வதென்றறியாமல் தெருக்களில் முட்டிமோதியவர்களை வழிகாட்டியும் அதட்டியும் கைகளைப்பற்றி இழுத்தும் ஆற்றுப்படுத்தினர். ‘எந்தப் பசுவும் கட்டுக்குள் இருக்கலாகாது… வணிகர்களின் கழுதைகள் கட்டவிழ்க்கப்பட்டிருக்கவேண்டும்’ என்று ஆணையிட்டபடி காவலர் தலைவர்கள் குதிரைகளில் கடந்துசென்றனர்.

கோட்டையின் மேற்கு மூலையில் கட்டப்பட்டிருந்த ஜலமந்திரம் அவர்கள் அறிந்த நாள்முதல் பயனற்றே கிடந்தது. மரத்தாலான அந்தக்கட்டடத்தின் முகப்பில் வருணன் கௌரி, வருணானி, சர்ஷணி என்னும் துணைவியருடன் அமர்ந்திருக்கும் சிலை இருந்தது. மேற்குத்திசை அதிபனாகிய வருணனின் சிறிய ஆலயம் அதற்கு அப்பால் சிவந்த கற்களால் கட்டப்பட்டிருந்தது. கனத்த மரங்களால் கட்டப்பட்டிருந்த ஜலமந்திரத்தின் பன்னிரண்டு அடுக்குகளிலும் மென்மரத்தைக் குடைந்து செய்யப்பட்ட சிறுபடகுகளும் மூங்கில் முடைந்து களிமண்ணும் தேன்மெழுகும் பூசப்பட்டுச் செய்யப்பட்ட பரிசல்களும் அடுக்கப்பட்டிருந்தன. படைவீரர்கள் ஜலமந்திரத்தில் ஏறி படகுகளையும் பரிசல்களையும் சித்தமாக்கினர்.

விப்ரர் வடக்குக் கோட்டைவாயிலை அடைந்து காவல்பீடம் மீது ஏறிக்கொண்டு பார்த்தார். கதவின் இடைவெளிகள் வழியாக பீரிட்ட நீர் நெடுந்தூரத்துக்கு வீசியடித்தது. அவர் சிலகணங்கள் திகைத்து நின்றபின் கதவைத்திறக்குமாறு ஆணையிட்டார். அந்த ஆணையைப் பெற்ற காவலர்தலைவன் ஒருசில கணங்கள் திகைத்தான். பின்பு தலைவணங்கி தன் இடையிலிருந்த சங்கை எடுத்து ஒலித்தான். காவலர்கள் ஓடி வாயிலைத்திறக்கும் நான்கு யானைகளை கொட்டிலில் இருந்து அழைத்து வந்தனர்.

முழங்கால் மடிப்பு வரை புதைந்த சேற்றில் மெல்ல அசைந்து வந்த யானைகள் தாழ்களைத் திறக்கும் சங்கிலிகளை துதிக்கைகளால் பற்றிக்கொண்டு அடுத்த ஆணைக்காகக் காத்து நின்றன. காவலன் மீண்டும் சங்கு ஊதியதும் கோட்டைமேலிருந்த பெரிய கண்டாமணி மும்முறை ஒலித்தது. யானைகள் சங்கிலிகளை இழுக்க மேலே இருந்த பெரிய இரும்புச்சக்கரங்கள் உருண்டு கீழே தாழ்மரங்கள் மெல்ல எழுந்து விலகின. அவை விலக விலக கதவுகள் அதிர்ந்து இரு கதவுகள் நடுவே உள்ள பொருத்து பெரியதாகி அதனூடாக கிடைமட்டமாக ஒரு அருவி விழுவதுபோல நீர் பீரிட்டுப்பாய்ந்து தெறித்துவிழுந்தது.

முதல் இரு தாழ்மரங்கள் விலகியதும் ஆயிரம் யானைகளால் உந்தப்பட்டதுபோல கதவு அதிர்ந்து இறுகியது. இரண்டாவது இரு தாழ்மரங்கள் பாதி விலகுவதற்குள்ளாகவே பெரும் உறுமலுடன் கோட்டைக்கதவு திறந்து பக்கவாட்டில் கோட்டைச்சுவரில் மோத வெள்ளம் வெடித்து எழுவதுபோல உள்ளே வந்தது. கோட்டைச்சுவரில் ஒரு பெரிய துதிக்கை முளைத்தது போல வெள்ளப்பெருக்கு நீண்டு யானைகளை தூக்கிச்சுழற்றி எடுத்துக்கொண்டு நகருக்குள் சென்றது.

EPI_98
ஓவியம்: ஷண்முகவேல்
[பெரிதுபடுத்த படத்தின்மீது சொடுக்கவும்]

பெருகிய நீர் உள்ளே விரிந்திருந்த களமுற்றத்தில் விரிந்ததும் விரைவழிந்து நாற்புறமும் பரவியது. கோட்டைவாயில் வழியாக அவர் அதுவரை கண்டிராத ஒரு புதிய நதி நகருக்குள் புகுவதை விப்ரர் பார்த்துக்கொண்டிருந்தார். நீரில் வந்த மரங்களும் புதர்களும் சுழித்து கட்டடங்களில் முட்டித் தயங்கின. கைவிடுபடைக்கலங்களின் பெருமேடைகளில் தங்கின. பெரிய மரங்கள் சில கோட்டைவாயிலில் முட்டி நின்று நீரின் அழுத்தத்தை வாங்கி நீரைப் பிரித்தன. பின் மெல்லமெல்ல திசைமாறி சரிந்து உள்ளே வந்து நீர்விரைவில் கலந்து சென்றன.

நீரில் புரண்டுசென்ற நான்குயானைகளும் மூழ்கி எழுந்து துதிக்கையை நீருக்குமேல் தூக்கியபடி நீந்தி மறுபக்கம் தங்கள் கொட்டில் நோக்கிச் சென்றன. கட்டவிழ்த்துவிடப்பட்ட யானைகள் பெருகிவந்த நீரில் நீந்தியபடி மேடான இடம் நோக்கிச் செல்ல யானைகளின் தலைவியான காலகீர்த்தி துதிக்கை தூக்கி பிளிறி யானைமகவுகள் நலமாக இருக்கின்றனவா என்று வினவியது. அனைத்து அன்னை யானைகளும் பதிலுக்குப் பிளிறி அவை நலமே என்று அறிவித்தன. யானைக்கொட்டிலை பாதி நிறைத்த நீர் மேலும் சற்று உயர்ந்தது. மகாமுற்றத்திலிருந்து பிரியும் அனைத்துச்சாலைகளையும் கிளையாறுகளாக ஆக்கியபடி நீர் நகரை நிறைத்தது.

நீர் தங்கள் இல்லங்களின் உப்பரிகை விளிம்புகளில் வந்து மெல்லிய நாக்கால் நக்கி ஒலிப்பதை அரையிருளில் நகர்மக்கள் கண்டனர். நீரில் மிதந்துவந்த எதையும் தொடவேண்டாமென்றும் நீர் விளிம்புக்குச் செல்லவேண்டாமென்றும் அவர்கள் மைந்தர்களை எச்சரித்தனர். கழிகளால் நீரில் மிதந்துவந்து கரைக்கழிகளைப் பற்றி தொற்றி ஏறமுயன்ற பாம்புகளை அவர்கள் தள்ளி மீண்டும் நீரிலேயே விட்டார்கள்.

தெற்குக் கோட்டைவாயில் வழியாக நீர் பெருகி வெளியே சென்றது. நீரில் வந்த மரங்களும் புதர்களும் நகரால் அரித்துநிறுத்தப்பட, வெறும் நீர் அலையலையாக வெளியே சென்று அங்கே ஓடிய புராணகங்கையின் மறுபக்கப் பள்ளம் வழியாகச் சென்று அப்பால் விரிந்த காட்டுக்குள் புகுந்தது. மழை விடியற்காலையிலேயே நின்றுவிட்டது. மெல்லிய காலையொளியில் நகரம் முழுக்க நிறைந்திருந்த செந்நிறமான நீரைக் கண்டு குழந்தைகள் உவகை கொண்டு குதித்தன. நகர்மாளிகைகள் மரக்கலங்கள் போல, இல்லங்கள் படகுகள் போலத் தோன்றின. நீரின் ஒளியால் நகரம் மேலும் துலக்கமுற்றது.

நகர்த்தெருக்களில் படகுகள் ஓடுவதை முதியவர்கள் திகைத்து வாய்மேல் கைகளை வைத்து நோக்கினர். படகுகளிலும் பரிசல்களிலும் படைவீரர்கள் ‘யாவரும் நலமா? உணவு தேவைப்படுபவர்கள் யார்? தனித்துச்சிக்கிக்கொண்டவர்கள் உளரா?’ என்று கூவியபடியே சென்றனர். உப்பரிகையில் நின்றபடி கீழே சுழித்தோடிய வெள்ளத்தைப்பார்த்த குழந்தைகள் நான்கு யானைகள் அந்த நீரில் மகிழ்வுடன் நீந்தித்திளைத்துச் செல்வதைக் கண்டு கூவி ஆர்த்து துள்ளிக்குதித்தனர்.

மதியம் மழை முழுமையாகவே நின்றுவிட்டது. காற்றில் நீர்ப்பிசிறுகள் மட்டும் பறந்துகொண்டிருந்தன. நகர்த்தெருக்களில் ஓடிய நீரின் ஒளியலைகள் கட்டடங்களின் சுவர்களில் ததும்பின. அஸ்தினபுரிக்கு அயலான மலைச்சேற்றின் வாசனை நீரிலிருந்து எழுந்தது. மாலைக்குள் நீர் பாதியாகக் குறைந்தது. இரவெல்லாம் நீர் குறைந்தபடியே இருந்தது. குழந்தைகள் கண் துயில பெரியவர்கள் அச்சமும் மனக்கிளர்ச்சியுமாக பேசிக்கொண்டே இரவைக் கழித்தனர்.

மறுநாள் காலை விடிந்தபோது தெருக்களில் கணுக்காலளவே நீர் ஓடிக்கொண்டிருந்தது. குழந்தைகளை வீடுகளில் விட்டுவிட்டு ஆண்களும் பெண்களும் தெருவிலிறங்கி தங்கள் இல்லங்கள் சரியாமலிருக்கின்றனவா என்று பார்க்கச்சென்றனர். அஸ்தினபுரியின் இல்லங்களெல்லாமே ஆழமாக மரங்களை நட்டு அந்த அடித்தளம் மீது எழுப்பப்பட்டவையாதலால் ஓரிரு வீடுகளே சரிந்திருந்தன. இல்லங்களுக்குள் எல்லாம் நீர் சுழித்தோடிக்கொண்டிருந்ததைக் கண்டனர். ‘இல்லங்களுக்குள் நுழையாதீர். பாம்புகளும் தேள்களும் குடிகொண்டிருக்கலாம்’ என எச்சரித்தபடி காவலர்கள் குதிரைகளில் சென்றனர்.

மறுநாள் முற்றிலுமாகவே நீர் நின்றுவிட்டது. மென்மையான சேறு நகரமெங்கும் படிந்திருந்தது. தோலுரிக்கப்பட்ட ஊன் போன்ற கதுப்பு. நீரில் ஊறிய பட்டுபோன்ற சுழிப்பு. மக்கள் தங்கள் இல்லங்களுக்குச்சென்று தூய்மைப்படுத்தத் தொடங்கினர். அரச ஆணைப்படி காடுகளிலிருந்து நாகர்கள் வந்திறங்கினர். அவர்கள் வீடுகளுக்குள் சென்று சாளரத்து அழிகளிலும் தாழ்களிலும் சுற்றியிருந்த பாம்புகளை கழிகளால் தட்டிச் சீறச்செய்து அவை பாய்ந்தோடும்போது அங்கே ஓலையாலான கூடைகளைக் காட்டி பிடித்து பெரிய கூடைகளிலாக்கிக் கொண்டனர். அவர்கள் சுமந்துசென்ற கூடைகளின் இடுக்குகள் வழியாக வழிந்த பாம்புகள் ஓட்டைக்கலங்களில் இருந்து கரிய திரவம் வழிவதுபோலத் தோன்றின.

பிடிபட்ட பாம்புகளை தலையில் சுமந்து வண்டிகளில் ஏற்றி மீண்டும் வடபுலக்காட்டுக்குள்ளேயே கொண்டுசென்று விட்டனர். கூடைகளில் இருந்து அவை நான்குபக்கமும் பாய்ந்திறங்கி இலைத்தழைப்புக்குள் மறைந்தன. நகருக்குள் புகுந்த எலிகளை பானைப்பொறிகளை வைத்து பிடித்தனர். வீடுகளுக்குள் எல்லாம் செங்களி போல சேறு படர்ந்திருந்தது. அவற்றை பலகைகளால் தள்ளிச் சேர்த்து அள்ளி வெளியே கொட்டினர். சேற்றுப்பரப்புகளில் சிறிய குமிழிகள் வெடித்த துளைகளுக்குள் சிறு பூச்சிகள் அதற்குள்ளாகவே வாழத்தொடங்கியிருந்தன. சேற்றுக்கதுப்பில் பூச்சிகள் ஓடிய வரிகள் விழுந்திருந்தன. யானைச்சருமம் போல சேற்றில் நீர் ஊறி ஓடிய வரிகள் தெரிந்தன.

நகரம் தன்னை தூய்மைசெய்துகொள்ள பத்துநாட்களாகியது. அதன்பின் மழை பெய்யவில்லை. வானம் முழுமையாகவே வெளுத்து வெள்வெயில் நகர்மீது பரவிப்பொழிய நெடுநாட்களாக ஒளியைக் காணாத முதியவர்களின் கண்கள் கலங்கி நீர்வழிந்தது. இரண்டுநாட்களிலேயே எஞ்சிய சேற்றையெல்லாம் மென்மணல்போல ஆக்கியது வான்வெம்மை. நாலைந்துநாட்களுக்குள் மழை பெய்ததெல்லாம் தொலைதூர நினைவாக மாறும்படியாக வெயில் எழுந்து நின்றது. நகரின் அனைத்து நீரோடைகளிலும் சுழித்தோடிய தெள்நீரில் மழைநீரின் குளுமையும் சேற்றுச்சுவையும் எஞ்சியிருந்தன.

காட்டுக்குள் இருந்து வெண்சுண்ணமண்ணை அள்ளி ஒற்றைமாட்டுவண்டியில் சுமையேற்றிய காடவர்கள் நகருக்குள் தெருத்தெருவாக வந்து கூவி விற்றனர். தேன்மெழுகையும் கொம்பரக்கையும் விற்கும் களியரும் தெருக்கள் தோறும் அத்திரிகளையும் கழுதைகளையும் சுமைகளுடன் ஓட்டியபடி கூவியலைந்தனர். நகர்மக்கள் கூரையிடுக்குகளை களிமண்ணையும் தேன்மெழுகையும் கலந்து அடைத்தனர். வெண்மண்ணையும் அரக்கையும் மெழுகையும் கலந்து தங்கள் இல்லச்சுவர்களில் பூசி புதுவண்ணமேற்றினர். நீலக்கல்லையும் செந்நிறக்கல்லையும் அரைத்து எடுத்த சாயங்களுடன் மெழுகை உருக்கிச்சேர்த்த கலவையைப் பூசி தூண்களையும் கதவுகளையும் வண்ணம்கொள்ளச்செய்தனர். வசந்தம் பூத்த காடு போல் நகரம் தன்னை புதுப்பித்துக்கொண்டே இருந்தது.

அரண்மனையை புதுப்பிக்க கலிங்கச் சிற்பியர் வந்து சேர்ந்தனர். அவர்கள் மாடக்குவைகளை வெண்ணிறமேற்றி மேகக்கூட்டங்கள் போலாக்கினர். செந்நிற மரப்பலகைகளில் மெழுகேற்றி மெருகூட்டினர். சுவர்களில் புதுச்சுண்ணம் சேர்த்தனர். புதிய திரைச்சீலைகளையும் பாவட்டாக்களையும் பட்டத்தூண்களையும் பதாகைகளையும் கட்டினர். அப்போது பணித்ததுபோல அரண்மனை வளாகம் எழில் கொண்டு எழுந்தது. பழையன கழிந்து புதியவை எழுந்து அஸ்தினபுரி மலர்ந்தது.

அரசகுலத்தின் இரு இளவரசர்களுக்கும் மணவினை முடிந்து தேவியர் நகர்புகுந்துவிட்டனர். மழைக்காலம் முடிந்துவிட்டதனால் மூத்தவருக்கு பட்டம் சூட்டும் விழவு நிகழுமென மக்கள் எதிர்பார்த்தனர். அரச அறிவிப்பு எத்தினத்திலும் வெளியாகுமென்று சந்தைகளிலும் மன்றுகளிலும் திண்ணைகளிலும் பின்கட்டுகளிலும் பேச்சு நிகழ்ந்தது. ஐம்பத்தைந்து ஷத்ரிய மன்னர்களும் பாரதவர்ஷத்தின் தொலைதூரத்து அரசர்களும் நகர்புகுவார்கள் என நிமித்திகர் கூறினர். அதற்கேற்ப அஸ்தினபுரியின் அனைத்துக் கட்டடங்களையும் பழுதுபார்க்கும்பணி இரவுபகலாக நிகழ்ந்துகொண்டிருந்தது.

காந்தாரத்தில் இருந்து இளவரசர் சகுனி தன் தமக்கை அரியணையமரும் விழவைக் கொண்டாடுவதற்காக பரிசில்களுடன் வருவதாக அரண்மனைச்செய்தி நகருக்குள் பரவியது. ‘காந்தாரம் செல்வக்கருவூலம்… அவர் கொண்டுவரும் செல்வத்தால் நம் களஞ்சியங்கள் நிறையப்போகின்றன’ என்றனர் மூத்தார். ஒவ்வொருநாளும் புதிய செய்திகள் வந்துகொண்டிருந்தன. ஆயிரம் யானைகளில் செல்வம் வருவதாக முதலில் சொன்னார்கள். அவை யானைகள் அல்ல ஒட்டகவண்டிகள் என்று பின்னர் செய்தி வந்தது. ஆயிரமா, யார் சொன்னது, ஐந்தாயிரம் வண்டிகள் என்று சொன்ன சூதனை திகைத்து நோக்கி வாய்திறந்து நின்றனர் நகர்மக்கள்.

சகுனி எல்லைபுகுந்துவிட்டார் என்ற செய்தி வந்ததும் நகர்மக்கள் கிளர்ச்சிகொண்டனர். மறுநாள் அவர் நகர் நுழையக்கூடுமென்று வணிகர்கள் சொன்னார்கள். கணிகர் நாள் நோக்கி மறுநாள் கதிர் எழுவதற்கு முன்னும் அந்தி சாய்ந்தபின்னும் மட்டுமே நற்தருணம் உள்ளது என்றனர். அந்தியில் செல்வம் உள்ளே வருவதற்கு நூல் முறை இல்லை என்பதனால் சகுனி அதிகாலையில்தான் நகர்நுழையக்கூடுமென்றனர். ஒவ்வொரு நாழிகைக்கும் ஒரு செய்தி என வந்துகொண்டிருந்தது. மன்றுகள் முழுக்க அதைப்பற்றி மட்டுமே பேசப்பட்டது.

கருக்கிருட்டிலேயே கிழக்குக்கோட்டைவாயிலுக்கு முன்னால் பெருங்கூட்டம் திரண்டிருந்தது. குதிரைகளில் ஏறிய படைவீரர்கள் ‘பாதையை மறிக்காதீர். பாதையின் எல்லைக்கற்களுக்கு அப்பால் மட்டுமே நில்லுங்கள்!’ என்று கூவியபடி மீண்டும் மீண்டும் சாலைகளில் குளம்படி ஓசை சிதற விரைந்துகொண்டிருந்தார்கள். முரசுமேடைகளிலும் காவல்மாடங்களிலும் மன்றுத்தூண்களிலும் மாளிகைமுகடுகளிலும் பந்தங்கள் செவ்வொளி அலைய ஒளிவிட்டுக்கொண்டிருந்தன. கைவிடுபடைகளின் வேல்நுனிகளில் பந்த ஒளிகள் ஆயிரம் செவ்விழிகளாகத் திறந்து இமைத்துக்கொண்டிருந்தன.

மூடிய கோட்டைக்கதவுக்குப் பின்னால் திரண்டிருந்த அஸ்தினபுரியின் மக்கள் கிளர்ச்சியுற்ற குரலில் பேசிக்கொண்டும் கூவிக்கொண்டும் காத்திருந்தனர். கோட்டைக்கதவின் பொருத்துக்களின் இடைவெளிகள் வழியாக மறுபக்கம் எரிந்த பந்தங்களின் செவ்வொளிக்கற்றைகள் பீரிட்டு வந்து குருதிதோய்ந்த வாள்கள் போல இருளில் நீட்டி நின்றன. பெருமுரசங்களின் அருகே கோல்காரர்கள் காத்து நின்றனர். ‘விதுரர்! விதுரர்!’ என ஒரு குரல் ஒலித்தது. விதுரனின் ரதம் அப்பால் வருவதை அங்கே எழுந்த வாழ்த்தொலிகள் காட்டின. மக்கள் விதுரனை வாழ்த்தி கூவினர்.

விதுரன் வந்து கோட்டையின் மூடிய வாயிலுக்கு முன் ரதத்தில் இருந்து இறங்கி நின்றுகொண்டான். அமைச்சர்கள் விப்ரரும் லிகிதரும் சோமரும் படைத்தலைவர்கள் உக்ரசேனரும் சத்ருஞ்சயரும் வியாஹ்ரதத்தரும் தங்கள் ரதங்களில் வந்து இறங்கி விதுரனின் இருபக்கமும் நின்றுகொண்டனர். அவர்களின் ரதங்கள் அப்பால் கொடிகள் மென்காற்றில் அலைய வரிசையாக அணிவகுத்து நின்றன. படைவீரர்கள் கைகாட்ட வாழ்த்தொலிகள் அமைந்தன. கொடிகளும் சுடர்களும் காற்றில் படபடக்கும் ஒலி கேட்குமளவுக்கு அமைதி நிலவியது. குதிரை ஒன்று பர்ர் என செருக்கடித்தது.

கோட்டைமேல் ஒரு விளக்கு சுழன்றது. விப்ரர் கையைக் காட்டினார். அவர் முன் ஆணைகாத்து நின்ற காவலர்தலைவன் தன் இடையில் இருந்த சங்கை எடுத்து ஊத வீரர்கள் கூச்சலிட்டபடி ஓடினர். கோட்டைவாயிலைத்திறக்கும் நான்கு யானைகள் பாகன்களால் கொண்டுசெல்லப்பட்டன. அவை தலையை ஆட்டி, துதிக்கை துழாவி முன்னால்சென்றன. பிரம்ம முகூர்த்தத்துக்கு முன்னால் அஸ்தினபுரியின் கோட்டைவாயில் திறக்கப்படுவதில்லை, சகுனிக்காக விதிகள் தளர்த்தப்படுகின்றன என ஒரு முதியவர் சொன்னார். பிறர் வியப்புடன் தலையசைத்தனர்.

யானைகள் கனத்த சங்கிலிகளை இழுத்ததும் மேலே இருந்த இரும்புச்சக்கரங்கள் உலோக ஓலத்துடன் சுழன்றன. கதவை மூடியிருந்த பெருந்தாழ்மரங்கள் மெல்ல விலகின. அஞ்சிய உதடுகளில் சொல் பிறப்பதுபோல கதவுகள் விலகி இடைவெளியிட்டன. இரும்புக்கீல்கள் பேரொலி எழுப்ப கதவு விரியத்திறந்தது. அப்பாலிருந்து காட்டுத்தீ பெருகி நகருக்குள் இறங்குவதுபோல பல்லாயிரம் நெய்ப்பந்தங்களின் ஒளி உள்ளே நுழைந்தது. பந்தங்களை ஏந்திய குதிரை வீரர்கள் சூழ்ந்துவர பெரிய வண்டிகளும் ரதங்களும் வந்தபடியே இருந்தன.

முந்தைய கட்டுரைஇன்று சென்னையில்
அடுத்த கட்டுரைஉதயகுமார், மதமாற்றம்- கடிதங்கள்