மீண்டும் மலேசியா 1

மலேசியாவில் கூலிம் என்ற ஊரில் தியான ஆசிரமம் என்னும் அமைப்பை நடத்திவரும் சுவாமி பிரம்மானந்த சரஸ்வதி அவர்களை நான் ஐந்தாண்டுகளுக்கு முன்னர்தான் அறிமுகம் செய்துகொண்டேன். சுவாமி அவர்கள் அத்வைத மரபினரான சுவாமி தயானந்த சரஸ்வதியின் நேரடி மாணவர். என் எழுத்துக்களை இணையத்தில் வாசித்து எனக்கு அறிமுகமானார். என்னை நாகர்கோயிலில் தேடிவந்து சந்தித்தார். நான் அறிந்தவர்களிலேயே ஆன்மீக வல்லமையின் முதல் அடையாளமான எளிமையும் நேரடித்தன்மையும் கொண்டவர் அவர். சந்திக்க நேர்ந்ததையே ஓர் ஆசியாக நான் எண்ணுபவர்களில் ஒருவர்.

சுவாமி பிரம்மானந்தா

சுவாமி அவர்கள் மலேசியாவில் ஓர் அறிவுலக மையமாக செயல்பட்டுவருபவர். அனைத்துத் தரப்பினருக்கும் நெருக்கமானவர். அனைவரையும் இணைப்பவர். தொடர்ந்து என் எழுத்துக்களை வாசித்து எதிர்வினையாற்றுவார். அவரது அழைப்பின் பேரில்தான் நான் சென்ற 2010-இல் மலேசியா சென்றேன். அதன்பின் அவர் நண்பர்களுடன் எங்கள் ஊட்டி குருகுல சந்திப்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்டார்.

ஊட்டிநிகழ்ச்சியைப்போல ஒன்றை மலேசியாவில் நடத்தவேண்டும் என்று சுவாமி விரும்பினார். அதற்காக என்னை அழைத்துக்கொண்டே இருந்தார். இருமுறை ஒத்திப்போடப்பட்ட அப்பயணம் இந்த மாதம் அமைந்தது. சிங்கப்பூரில் இருந்து திரும்பியபின் உடனே மலேசியா. விமானநிலையத்திலேயே குடியிருப்பது போல ஓர் உணர்வு. ஊட்டிசந்திப்பு நிகழ்ச்சிக்கு அங்கிருந்து மூன்றுபேர் வழக்கமாக வருவதனால் இந்தியாவில் இருந்தும் மூன்றுபேர் சென்றால் நன்றாக இருக்குமெனத் தோன்றியது. நண்பர்களிடம் சொன்னபோது ஈரோடு கிருஷ்ணனும் திருப்பூர் ராஜமாணிக்கமும் வருவதற்கு ஒப்புக்கொண்டார்கள்.

வல்லினம் குழு

16-3-2014 அன்று திருச்சியில் இருந்து ஏர் ஏஷியா விமானத்தில் கிளம்பவேண்டும். நான் முந்தையநாளே கன்யாகுமரி எக்ஸ்பிரஸில் கிளம்பி திருச்சி வந்துவிட்டேன். திருச்சி நண்பர் விஜயகிருஷ்ணன் அங்கே ஓட்டலில் அறை போட்டிருந்தார். ராஜமாணிக்கமும் கிருஷ்ணனும் கிளம்பி இரவில் வந்துசேர்ந்தனர். நற்றிணை, தமிழினி வெளியிட்ட என் நூல்களை மூன்று பெட்டிகளிலாக கட்டிக்கொண்டோம். இரவு நெடுநேரம் வரை பேசிக்கொண்டிருந்தமையால் அதிகாலையில் அரைத்தூக்கத்தில் கிளம்பினோம். விஜயகிருஷ்ணன் அவரது காரில் கொண்டுவந்து ஏற்றிவிட்டார்.

ஏர்ஏஷியாவில் நான் முதல்முறையாகப் பயணம்செய்கிறேன். கிட்டத்தட்ட பறக்கும் நகரப்பேருந்து. கொலாலம்பூரில் அதன் விமானநிலையம் சென்னை கோயம்பேடு பேருந்துநிலையமேதான். விமானம் இறங்கி நெடுந்தூரம் பல பாதைகள் வழியாக முண்டியடித்துக்கொண்டு கூட்டம் கூட்டமாக நடக்கவேண்டும். வழியில் மோட்டார்கள் குறுக்காகச் செல்லும். பாதுகாப்புகள் என ஏதுமில்லை. ஒருவேளை உலகிலேயே பாதுகாப்பு ஏற்பாடுகள் குறைவான விமானநிறுவனம் ஏர்ஏஷியாவாகத்தான் இருக்கும்.

விமானநிலையத்தில் மலேசிய எழுத்தாளரான நவீனின் உறவினர் என் பெயர் எழுதிய அட்டையுடன் காத்திருந்தார். நவீன் அவர்கள் ஏற்பாடுசெய்திருந்த இலக்கியவெளியீட்டு விழாவுக்கான ஏற்பாடுகளில் இருப்பதாகச் சொன்னார். காரில் நிகழ்ச்சி நடந்த கிராண்ட் பசிஃபிக் ஓட்டலுக்குச் சென்றோம். அங்குதான் எங்களுக்குத் தங்கும் அறையும் ஏற்பாடாகியிருந்தது. வசதியான விடுதி. தமிழர்கள் அதிகம் புழங்கும் லிட்டில் இண்டியா என்னும் பகுதியில் இருந்தது. அதைச்சுற்றி தென்னிந்திய உணவுவிடுதிகள்தான்.

அறைக்குச் சென்று சற்று ஓய்வெடுத்தபின் நேரடியாகவே நூல்வெளியீட்டுக்கூட்டத்துக்குச் சென்றுவிட்டோம். அங்கே ஏற்கனவே விழா நடந்துகொண்டிருந்தது. மேடையில் கவிதைநூலை விமர்சிப்பவர்கள் அமர்ந்து உரையாடிக்கொண்டிருக்க மலேசிய எழுத்தாளர் தயாஜி நிகழ்ச்சியை ஒருங்கிணைத்துக்கொண்டிருந்தார். கெ.பாலமுருகனின் ‘தூக்கிலிடப்பட்டவர்களின் நாக்குகள்’ நவீன் எழுதிய ‘வெறிநாய்களுடன் விளையாடுதல்’ ஆகிய கவிதைநூல்கள் வெளியிடப்பட்டன. அங்கேயே சிற்றுண்டி ஏற்பாடுசெய்யப்பட்டிருந்தது.

கவிதை மேடை

அந்நிகழ்ச்சிக்கு ஒரு சிறிய பின்னணி இருந்தது. மலேசிய இலக்கியச்சூழல் இரண்டு தரப்புகளால் ஆனது. மலேசிய எழுத்தாளர் சங்கம் நீண்ட மரபுள்ளது. அரசின் நிதியுதவிகள் உள்ளது. ஆனால் அதன் இலக்கியநோக்கு அமெரிக்கா முதல் ஆஸ்திரேலியா வரை தமிழ்ச்சங்கங்கள் எந்த இலக்கியநோக்கு கொண்டிருக்கின்றதோ அதுதான்.

ஆனால் நூல்களை அதை வாசிக்கக்கூடிய, நவீன இலக்கிய நோக்குள்ள புதிய தலைமுறை ஏற்றுக்கொள்ளாமலிருப்பதும் கடுமையாக விமர்சிப்பதும் ஆச்சரியமில்லை. இது தொடர்ச்சியாக சிறுமோதல்களை அங்கு உருவாக்கியபடியே இருக்கிறது.

நான் 2006-இல் முதல்முறையாக மலேசியா சென்றபோது மலேசிய எழுத்தாளர் சண்முக சிவா மற்றும் நவீனைச் சந்தித்தேன். அன்று அவர் காதல் என்ற இலக்கியச்சிற்றிதழை நடத்திக்கொண்டிருந்தார். சிங்கப்பூரில் இலக்கியவாசகர் என்றால் அவர் இந்தியாவில் இருந்து பணியின்பொருட்டு அங்கே சென்றவரோ அங்கே குடியுரிமை பெற்றவரோதான். சிங்கப்பூரில் வாழும் தமிழர்களை இலக்கிய ஆர்வத்துடன் பார்ப்பது மிக அபூர்வம்.

அதுதான் உலகமெங்கும் உள்ள நிலை. ஆனால் மலேசியாவில் அங்கே பிறந்து வளர்ந்த தலைமுறை இலக்கிய ஆர்வத்துடன் இருந்ததையும் அவர்கள் நவீனத்தமிழிலக்கியத்தை கூர்ந்து வாசித்திருப்பதும் எனக்கு பெருமகிழ்ச்சியையும் நம்பிக்கையையும் அளித்தன. அதை அப்போதே பதிவும் செய்திருக்கிறேன்.

அந்நம்பிக்கை மேலும் வலுப்பெறும் சூழலே இன்றுள்ளது. நவீனை மையமாக்கி வல்லினம் என்னும் இலக்கியக்குழு அங்கே தீவிரமாகச் செயல்பட்டு வருகிறது. வல்லினம் குழுவைச்சேர்ந்த தயாஜி என்ற இளைஞர் எழுதிய ‘கழிவறையும் அதன் பழிவாங்கும் வழிமுறையும்” என்னும் கதை மலேசியாவில் கடும் கண்டனத்தை எழுப்பியது. அது ஆபாசமாக எழுதப்பட்டிருப்பதாக குற்றம்சாட்டப்பட்டு.

அதன் விளைவாக தயாஜி அவர் பணியாற்றிய வானொலி நிறுவனத்தில் இருந்து பணிநீக்கம் செய்யப்பட்டார். அதையொட்டி தமிழ்ச்சங்கத்தினருக்கும் வல்லினம் குழுவினருக்கும் மோதல்கள் இருப்பதாகச் சொன்னார்கள்.

வல்லினம் விழா

வல்லினம் குழுவே பலமுனைகளில் தாக்குதல்களை சந்தித்துக்கொண்டிருந்தது. வல்லினம் அச்சிதழ் வெளிவரமுடியாமல் சட்டச்சிக்கல்கள் உருவாயின. ஆகவே நண்பர்கள் இணைந்து பறை என்னும் சிற்றிதழைக் கொண்டு வந்திருந்தனர். அதன் வெளியீடும் அங்கே நடந்தது. அந்நிகழ்ச்சியை வல்லினம் அமைப்பு மலேசியாவின் எந்த ஊடகத்தின் துணையும் இல்லாமல் பேஸ்புக் மூலமாகவே ஏற்பாடு செய்திருந்தது. அரங்கு நிறைந்த கூட்டம். அனேகமாக அனைவருமே இளைஞர்கள். பாதிக்குமேல் பெண்கள். அத்தனை இளைஞர்களைப்பார்ப்பது உற்சாகமளிப்பதாக இருந்தது.

நிகழ்ச்சியில் நான் தமிழ்க்கவிதைமரபைப் பற்றிப் பேசினேன். கவிதை என்னும் குறியீட்டமைப்பு எப்படி மொழிக்குள் ஒரு தனிமொழியாக உருவாகி பல காலகட்டங்களிலாக பரிணாமம் கொண்டு நவீனக்கவிதை என்னும் வடிவம் நோக்கி வந்தது என விளக்கும் உரை. அதன் பின் அறைக்குச் சென்று ஓய்வெடுத்தோம்.

மறுநாள் இன்னொரு விடுதிக்கு மாறவேண்டியிருந்தது. தயாஜி என்னையும் கிருஷ்ணனையும் ஒரு வாடகைக்காரில் ஏற்றி அந்த ஓட்டுநரிடம் ஓட்டலின் பெயரையும் இடத்தையும் சொல்லி அனுப்பினார். அவரும் ராஜமாணிக்கமும் புத்தகங்களுடன் அவரது காரில் பின்னால் வந்தனர். ஆனால் அந்த மலேசிய ஓட்டுநர் வழக்கமாக தமிழர்கள் தங்கும் விடுதி ஒன்றுக்கு எங்களைக் கொண்டுசென்று விட்டுவிட்டார். நாங்களும் இறங்கிவிட்டோம்.

ஒருமணிநேரம் காத்திருந்தபின்னரும் தயாஜி வரவில்லை. விடுதியில் எங்கள் பேரிலோ தயாஜிபேரிலோ அறை பதிவுசெய்யப்படவில்லை. எங்களிடம் செல்பேசி இல்லை. தயாஜியின் செல்பேசி எண்ணை கேட்டு வைத்துக்கொள்ளவும் இல்லை. நவீனை தொலைபேசியில் அழைத்தபோது அவர் பதிலளிக்கவில்லை. கொஞ்சம் தடுமாறியபின் திரும்பி பழைய ஓட்டலுக்கே வந்து காத்திருந்தோம்.

நூல் பெறுபவர் பாண்டியன் அருகே தினேஸ்வரி

நல்லவேளையாக நாங்கள் அங்கே வந்திருக்கலாமென எண்ணி தயாஜி அங்கே வந்து சேர்ந்தார். அவர் பதறிப்போயிருந்தார். எனக்கு நினைவில்கொள்ள ஒரு நல்ல நிகழ்ச்சி என்றுதான் தோன்றியது. வெளிநாடுகளில் மிதமாகத் தொலைந்துபோவது ஒரு நல்ல கேளிக்கை.

சற்று ஓய்வெடுத்தபின் தயாஜியின் வண்டியில் பத்துமலை முருகன் கோயிலுக்குச் சென்றோம். பத்து என்றால் மலாய் மொழியில் குகை. மலேசியாவின் பெரும்பாலான மலைகள் சுண்ணாம்புக்கல்லால் ஆனவை. சுண்ணாம்புக்கல் மலைகளில் பெரும்பாலும் ஆழமான குகைகள் இருக்கும். மழைநீரால் மென்மையான சுண்ணாம்புப்பகுதிகள் கரைந்து ஓடுவதனால் உருவாகும் குகைகள் அவை. அவற்றுக்குள் விதவிதமான கூம்புவடிவங்களில் ஸ்டால்கமைட் பாறைத்தொங்கல்கள் வினோதமான சிற்பவடிவுகளை உருவாக்கியிருக்கும். பத்துமலைக்குகைகள் நெடுங்காலமாகவே இந்துக்களுக்குரியவை. அங்கே நிறுவப்பட்ட முருகன் கோயில் இன்று பல சிறிய கோயில்களுடன் ஒரு வளாகமாக மாறியிருக்கிறது.

கே. பாலமுருகன்

எந்தக்கலையழகும் இல்லாத சிற்பங்களும் ஒழுங்கற்ற கட்டட அமைப்பும் கொண்ட அழுக்கான இடம் பத்துமலைக்கோயில் வளாகம். அனேகமாக மலேசியாவில் நாம் காணக்கூடிய மிக அழுக்கான இடம் அதுதான். ஆங்காங்கே குப்பைகள் இடிபாடுகள். ரத்தச்சிவப்பும் பொன்வண்ணமும் கலந்து பூசப்பட்ட கான்கிரீட் சிற்பங்கள் மழையில் கறுத்து கம்பிகள் துருத்தி நிற்கின்றன.

மலேசியத்தமிழரின் அடையாளமாகக் கருதப்படும் பிரம்மாண்டமான முருகன் சிலை பத்துமலைக்கோயிலுக்கு வெளியே உள்ளது. எந்த அழகும் அற்ற மொத்தையான சிலை. கண்கூசவைக்கும் பொன்னிறச்சாயம் பூசப்பட்டது. தமிழரின் மகத்தான சிற்பப்பாரம்பரியத்தை, தமிழ் நிலமெங்கும் செறிந்திருக்கும் பேரழகுகொண்ட சிற்பத்தொகைகளை அறிந்த ஒருவர் அச்சிலையை நோக்கி மனம் வருந்தாமலிருக்கமுடியாது.

ஆனால் அங்கே நாங்களிருந்த நேரம் அந்த மாபெரும் குகையில் இருந்த திறப்பு வழியாக சட்டென்று ஒளியுடன் பெய்த ஒரு சிறு மழையை வாழ்நாளெல்லாம் மறக்கமுடியாது. மேலே இருந்த காட்டில் நின்ற மரங்களின் பழுத்த சிறிய இலைகள் பொன்னிறத்தகடுகளாக பறந்திறங்கின. மழைத்துளிகள் ஒளியின் பிசிறுகள் போல மிதந்து மெல்ல இறங்கின. ஒரு மகத்தான கலைப்பிரகடனம்போன்ற மழை. கான்கிரீட்டில் கடவுளைக் காணவேண்டாமென கடவுளே வந்து சொன்னதுபோல…

நவீன்

பத்துமலை அருகே ஒரு ஓட்டலில் தென்னிந்திய உணவு என சகிக்கமுடியாத ஒன்றை உண்டோம். பொதுவாக கோயிலைச்சுற்றி இருக்கும் உணவகங்களில் உணவு வாயில் வைக்கும் தரத்தில் இருப்பதில்லை. ஒருநாள் வாடிக்கையாளர்கள் மட்டுமே வருவார்கள் என்ற தைரியம் அளிக்கும் அலட்சியம். தமிழகம் முழுக்க பொதுவாகக் காணப்படும் அந்த மனநிலையை கொலாலம்பூரிலும் கண்டது நிறைவளித்தது.

நவீன் பள்ளியில் இருந்து விடுப்பு எடுத்துக்கொண்டு வந்து சேர்ந்தார். அவரது வீடு அருகேதான். கொலாலம்பூர் நகரைச் சுற்றி வந்தோம். மாலையில் தமிழ்ச்சங்கத்தின் நிகழ்ச்சி. மலேசியாவின் மூத்த எழுத்தாளரான ரெ.கார்த்திகேசு அதை ஒருங்கிணைத்திருந்தார். அந்திம காலம் போன்ற நாவல்களை எழுதிய பேரா.கார்த்திகேசு என் விஷ்ணுபுரம் நாவலைப்பற்றி அக்காலத்தில் ஒரு விமர்சனக்கட்டுரை எழுதியிருக்கிறார். அவர் எங்கள் விடுதிக்கு வந்து அழைத்துச்சென்றார்.

பத்துமலை முருகன்

தமிழ்ச்சங்க நிகழ்ச்சியில் தமிழ்ச்சங்கத்தைச்சேர்ந்த எவருமே கலந்துகொள்ளவில்லை. முந்தையநாள் நாளிதழில் செய்தியை வாசித்துவிட்டு வந்த என் வாசகர்கள் ஆறுபேர் மட்டுமே அரங்கில் இருந்தனர். நல்லவேளையாக இருவரை நான் அழைத்துச்சென்றிருந்தேன். ஆனால் சம்பந்தமில்லாத ஒரு கூட்டத்தைவிட என் எழுத்துக்காக வந்திருந்த ஏழுபேர் அபாரமான உற்சாகத்தை அளித்தனர். குறைவான கூட்டம் சம்பிரதாயத்தன்மைகள் அற்ற ஒரு உள்ளறை உரையாடலின் இயல்பைக் கொண்டிருந்தது. தமிழிலக்கியத்தின் அற உள்ளடக்கம் குறித்து நான் ஆற்றியது என் மிகச்சிறந்த உரைகளில் ஒன்று.

இரவில் நவீன் வந்து எங்களை காரில் ஏற்றிக்கொண்டு இரட்டைக்கோபுரங்களைக் காட்டினார். ஒளியுமிழ்ந்த வானுயர் கட்டங்களினூடாக நகரைச்சுற்றி வந்தோம். மலேசியாவுக்கு நான் வருவது இது ஐந்தாவது முறை. ஒவ்வொருமுறையும் இரட்டைக்கட்டடங்களை பார்த்துவருகிறேன். நான் பார்த்த வானுயர் கட்டடங்களில் கலையழகு மிக்க கட்டடம் இதுவே. நவீனத்தோற்றம் கொண்ட புர்ஜ் கலீஃபா அடுத்தபடிதான்.

இத்தகைய பெருநகரங்கள் நாம் இங்குள்ளவரல்ல என்ற விலக்கத்தையும் கூடவே மானுடசாதனையின் உயரங்களையும் ஒருங்கே காட்டக்கூடியவை. இத்தனை பெரிய கட்டடங்களையும் தெருக்களையும் இவ்வளவு பேராற்றலுடன் கட்டி எழுப்ப மனிதனால் முடிந்திருக்கிறது. கொலாலம்பூர் முதலிய பெருநகரங்களில் நிறைந்திருக்கும் பல இன மக்களின் முகங்களும் மானுடம் மானுடம் என மனதை எழுச்சி கொள்ளச்செய்பவை.
[மேலும்]

முந்தைய மலேசியப்பயணம் பாலமுருகன் கட்டுரை


பாலமுருகனின் நாவல் நவீன்

மலேசியா 2010

முந்தைய கட்டுரை‘வெண்முரசு’ – நூல் இரண்டு – ‘மழைப்பாடல்’ – 32
அடுத்த கட்டுரை‘வெண்முரசு’ – நூல் இரண்டு – ‘மழைப்பாடல்’ – 33