நமது வரலாற்றாய்வு,கண்ணகி

‘கொற்றவை நாவலில் நான் மதுரையை எரித்தபின்னர் ‘

 

அய்யா,
நீங்கள்தான் மதுரையை எரித்தீர்களா? அதற்கு பிறகுதான் கண்ணகி மதுரையை விட்டுச்சென்றார்களா? வரலாற்று முக்கியத்துவமிக்க இந்த தகவலை அளித்தமைக்கு தமிழ் கூறும் நல்லுலகம் என்றென்றும் கடமைப்பட்டிருக்கிறது.

அரவிந்தன் நீலகண்டன்.

*

அன்பின் ஜெயமோகன்,

மங்கலமடந்தை கோவிலுக்கும் கடற்கரையோரம் நிறுத்தப்பட்டிருக்கும் கண்ணகிக்கும் இருக்கும் ஆழ்ந்த வேறுபாட்டை அந்த இருப்புகைப்படங்கள் மூலம் அருமையாகக் கொண்டு வந்திருக்கிறீர்கள்.

 

மேலும் நாம் ஒரு பெரும் பாரம்பரியத்தின் சந்ததிகள் நாம் நடக்கும் மண் பல ஆயிரம் ஆண்டுகளின் வரலாற்றை தன்னுள் கொண்டிருக்கிறது என்பதையும் நாம் எப்படி அந்த உணர்வற்றவர்களாக மாற்றப்பட்டிருக்கிறோம் என்பதையும் படிக்கும் போது பெரும் ஆதங்கம் ஏற்படுகிறது, நிறுவன வரலாற்றாராய்ச்சி என்பது நிதி சார்ந்தது. அது தனது அரசியலுக்கு தேவையில்லாதவரை மாற்றுக்கதையாடல்களை மாற்றுப்போக்குகளை உதாசீனம் செய்யும். அதன் அரசியலின் இறுதி நோக்கங்கள் நம் கண்ணுக்கு என்றைக்கும் புலப்படாது…நம் சந்ததிகள் அகதிகளாக புலம் பெயரும் வரை.

 

இந்நிலையில் தனிப்பட்ட உள்ளூர்வாசிகள் தங்கள் தங்கள் வரலாற்றை மீட்டெடுப்பதும் அதனை நம் மண்ணும் மரபும் சார்ந்து கோர்வைப்படுத்துவதும் மிகவும் அவசியமானவை. தாங்கள் காட்டியுள்ள முத்துராஜ், செந்தீ நடராசன், எஸ்.ராமச்சந்திரன், கணேசன் நாடார், அ.கா.பெருமாள் போன்றவர்களின் பங்களிப்புகள் அவ்விதத்தில் முக்கியமானவை – இவர்களின் சித்தாந்த நிலைபாடுகளுடன் ஒருவர் ஒத்துபோகாவிட்டாலும் கூட இவர்களின் கடின உழைப்பும் நேர்மையான தரவுகளை முன்வைக்கும் பங்களிப்புகளுமே வெறுப்பியலும் அரசியலும் சாராத நம் மண் சார்ந்த ஒரு குவிமையமற்ற வரலாறு மேல் எழும்பும் எனும் நம்பிக்கையை அளிக்கிறது. நன்றி.

அரவிந்தன் நீலகண்டன்.

 

88888888888888

அன்புள்ள அரவிந்தன்

வரலாறுகளை எழுத எவருடைய தயவும் தேவை இல்லை. ஒரு மக்கள்கூட்டம் தங்கள் வரலாற்றை உண்மையாக உருவாக்கிக்கொண்டால் நிகழ்காலம் கூடவே வரும்

கொற்றவை நாவலில் நான் தானே மதுரையை எரித்தேன்?

கண்ணகி சிலை என்பது  கண்ணகியைப்பற்றிய மரபார்ந்த கற்பனையை மாற்றுவதாக அமைந்திருந்தது. ஒரு நாடக- சினிமா கதாபாத்திரம்போல.  என் நோக்கில் அது ஒரு தெய்வச்சிலையாக- புத்த தாராதேவி சிலைக்கு  சமானமாக அமைந்திருக்க வேண்டும்

ஜெ

 

8888888888

 

அன்பின் ஜெயமோகன்,

 

வரலாறுகளை எழுத எவருடைய தயவும் தேவை இல்லை.

 

அப்படி இருந்தால் நன்றாக இருக்கும் ஆனால் அப்படி இல்லை என்பதுதான் உண்மையோ?

 

ருவாண்டாவிலும், இலங்கையிலும், இந்தியாவிலும்  காலனிய கதையாடல்கள் பெற்ற அங்கிகாரத்தை அந்த  கதையாடல்களை தவறென சுட்டிக்காட்டிய அந்நாட்டு வரலாற்று ஆராய்ச்சியாளர்கள் பெறவில்லை அல்லவா? அந்த கருத்துக்களே காலம் கடந்து இன்று நம் முன் வைக்கப்படுகின்றன.

உதாரணமாக சிங்களம் தமிழின் சகோதர  மொழி  என்றும் இலங்கை அரச வம்சத்தில் தமிழ் சிங்களர் என இருவரும் இருந்திருக்கிறார்கள் என்பதும் முன்வைக்கப்பட்டும் அது அலட்சியப்படுத்தப்பட்டுள்ளது.

 

இன்றைக்கு இந்திய   அகழ்வாராய்ச்சியாளர்கள் ஆரியப்படையெடுப்பு தொன்மத்தின் பல அடிப்படைகளை உடைத்துள்ளனர். அதே சமயம்  அகழ்வாராய்ச்சியாளர் திலிப் சக்ரபர்த்தி சொல்கிறார்

 

‘மேலைநாட்டைச் சாராத விஷயங்களை ஆராயும் மேலைநாட்டு கல்வித்துறை சார்ந்த தொல்பொருளாய்வு மிக விரைவாக மூன்றாமுலகம் குறித்த எந்த ஒரு  சூழலைப்பற்றியும் ஆழமாக ஆராய்வதில் ஆர்வமற்ற  இயல்பை அடைந்துகொண்டிருக்கிறது.  மூன்றாமுலக நாடுகளை ஆராயும் மேனாட்டு ஆய்வாளர்களைப் பொறுத்தவரை அதீத துறையொதுக்கம் என்பதே வழிமுறையாக  இருப்பது தெரிகிறது. மூன்றாமுலகத்தின் தரவுகளின் அடிப்படையில் தங்கள் சொந்தக் கோட்பாடுகளை பரிசீலிக்கும் ஆர்வம் மட்டுமே அவர்களிடம் உள்ளது. இதை அவர்கள் விரிவான அறிவியல் முறைமைப்படிச் செய்கிறார்கள். கீழ்நாடுகளில் நெடுங்காலமாகவே உருவாகி வலுப்பெற்று வந்திருக்கும் அறிவுத்தளம் இந்தவகையான கல்வித்துறை ஆய்வுகளுக்கு ஒரு பொருட்டாகவே படுவதில்லை.  உள்ளூர்க்காரர்கள் அதிகாரிகளைச் சமாளிக்கவும் உள்ளூர்பிரச்சினைகளை தீர்க்கவும் மட்டுமே பயன்படுத்தப்படுகிறார்கள். அவர்களும் வெட்கமில்லாமல் ‘ ஆதரவுப்பணம்’ என்று நான் கருதும்  ‘ஆய்வுப்பயண உதவித்தொகை’யில் பங்கைப் பெற்றுக்கொள்கிறார்கள். கருத்தரங்குகள்,ஆய்வுப்பட்டறைகள்,ஆய்வரங்குகள் போன்றவை இந்த நிதியாதாரங்களின் பிரிக்கமுடியாத பகுதிகள்.   

 

இந்தச்சூழலில் இந்தியாவில் உள்ளூர் ஆராய்ச்சியாளர்கள் குறிப்பாக கல்லூரி ஆராய்ச்சியாளர்கள் சர்வதேச கூட்டாளிகளுக்காக ஒருவரோடொருவர் போட்டிபோடுகிறார்கள். ஷாரி கிளேர்க் [Sharri Clark] எழுதிய ஒரு கட்டுரை அமெரிக்க தொல்லியலாய்வுகள் எந்த தரத்தில் உள்ளன என்பதற்கு  உதாரணமாக அமையக்கூடியது. ஹரப்பா சுடுமண் சிற்பங்களைப்பற்றிய அந்த ஆய்வுக்கட்டுரையில் ஏறத்தாழ 60 அபூர்வமான ஆய்வாளர்களின் பெயர்கள் மேற்கோளாக தரப்பட்டுள்ளன. அவற்றில் மூன்றே மூன்றுதான் கீழைநாட்டு ஆய்வாளர்களின் பெயர்கள். இவ்வாறு எத்தனை உதாரணங்களை வேண்டுமானாலும் அளிக்க முடியும். கீழைநாட்டு தொல்லியல் குறித்து எழுதும் முதல் உலக ஆய்வாளர்கள் முதல் உலகைச்சேர்ந்த தங்கள் சக ஆய்வாளர்களுக்காகவே அவற்றை எழுதுகிறார்கள். அவர்கள் மனத்தில் அவர்கள் கீழைநாட்டினரைவிட மேலான அறிவுத்திறன் கொண்டவர்கள் என்ற எண்ணமும் உள்ளது. இன்றைய முதல் உலக ஆய்வுச்சூழலில் உள்ள பொதுவான மனநிலை என்பது காலனியாதிக்க நாட்களில் இருந்ததை விடவும் காலனியாதிக்க நோக்கு கொண்டது என்பது வருத்தம் அளிப்பது

 

ஆனால் இந்தியாவில் செயல்படும் முதல் உலகத் தொல்லியலாளர்களுடன் பணியாற்றும் இந்திய தொல்லியலாளர்களின் நடுவே இந்த நவ காலனியாதிக்கவாதம் இன்னும் வலுவாக உள்ளது .  ஒரு மூத்த இந்திய தொல்லியளாரர் சொன்னார், இந்தியத் தொல்லியலில் சூரியன் எப்போதுமே மேற்கேதான் உதிக்கிறது என. இன்னொரு மூத்த ஆய்வாளர் சரித்திரகாலத்திற்கு முந்தியே இந்தியா ஐரோப்பிய காலனியாக இருந்ததைப்பற்றி எழுதினார். இன்னொருவர் சிந்து சமவெளி நாகரீகம் என்பது மெசபடோமியாவுடனான அதன் வணிகத்துக்குக் கடன்பட்டது என்று எழுதினார். இந்த மூன்று இந்திய மூத்த ஆய்வாளர்களுக்கும் பொதுவாக ஒன்று உண்டு. அவர்கள் அனைவருமே புகழ்பெற்ற தொல்லியல் ஆராய்ச்சி மற்றும் கல்விநிறுவனங்களின் இயக்குநர்களாக இருக்கிறார்கள்! ‘’

 

இன்றைக்கு உள்ளுர் ஆராய்ச்சி ஏறக்குறைய நிறுவன ஆராய்ச்சிகளுக்கு நிகராக எழுவதே ஒருவிதத்தில் இணையம் அளிக்கும் ஜனநாயகப்படுதல்தான். இல்லையா?

 

 

அன்புள்ள அரவிந்தன்

 

ஏறத்தாழ பத்து வருடம் முன்பு திலீப் சக்ரபர்த்தி சொல்லும் இதே வரிகளை நான் மேலைநாட்டு சமூகவியல் ஆய்வுகளையும் அவற்றின் இலக்கியத்தாக்கத்தையும் குறித்து சொல்லும்போது சொல்லியிருக்கிறேன் — ஒரு விரிவான கட்டுரையில். கடந்த பல வருடங்களாகவே கீழை நாடுகள் மேலைநாட்டு ஆய்வாளர்களுக்கு வெறும் தகவல்களாக மாறிவிட்டிருக்கின்றன. இத்தகவல்களைக் கொண்டு அவர்களுக்குப் பிடித்தமான கோட்பாடுகளை பரிசீலித்துப்பார்க்க மட்டுமே அவர்கள் விழைகிறார்கள். அவை உண்மையை நெருங்குவதே இல்லை என்பதுடன் நமது நேரான பார்வையையும் பெரிதும் சிதைத்து விடுகின்றன.

 

 

 இப்போது தமிழ் அறிவுத்தளத்தில் எழுதப்படும் அரசியல் – சமூகவியல் கட்டுரைகளைப் பார்த்தாலே இது புரியும். உடலரசியல் , கோட்பாட்டழித்தல் என்றெல்லாம் எத்தனை வேகாத கோட்பாடுகள் மிதந்துகிடக்கின்றன. இவற்றைக்கொண்டு அப்படி என்ன புதிய உண்மைகளை கண்டடைந்து விட்டார்கள் என்றால் ஏதுமில்லை. வெறுமே ஆழமான ஆய்வை நிகழ்த்திவிட்டதாக ஒரு போலிப்பெருமிதம் மட்டும் சம்பந்தப்பட்டவருக்கு வருகிறது, அவ்வளவுதான்

 

உண்மையில் தமிழ்ச்சூழலில் கருத்துக்கள் சார்ந்த ஆய்வுகளே நடக்கவில்லை. அ.கா.பெருமாள் , ஆ.சிவசுப்ரமணியம், செ.இராசு போன்றவ வெகுசிலர் தகவல்களை திரட்டுவதில் கடுமையாக உழைக்கிறார்கள். அத்தகவல்களை அவர்களின் நூல்களில் இருந்து பெற்று மேலைநாட்டு ஆய்வாளர்கள் தங்கள் கோட்பாடுகளை அப்படியே போட்டுப்பார்த்து கட்டுரைகளை எழுதுகிறார்கள். அவற்றை நம் முதிரா அறிவுஜீவிகள் அள்ளி விழுங்கி திருப்பிக் கக்குகிறார்கள். நம் பண்பாட்டைப்பற்றியும் நம் வரலாற்றைப்பற்றியும் நாம் அசலாக செய்வதற்கு ஏராளமான ஆய்வுக்களங்கள் உள்ளன. அவை தீண்டப்படுவதே இல்லை

 

என்று நம் தாழ்வுணர்ச்சியை விட்டு, நம் வரலாற்றை நாமே ஆராய்ச்சிசெய்யவும் கொள்கைகளை உருவாக்கவும் முடியும் என நம்புகிறோமோ அப்போதுதான் நாம் பண்பாட்டுத்தளத்தில் வாழ ஆரம்பிக்கிறோம்

ஜெ

 

அன்புள்ள அரவிந்தன்,

திலீப் சக்ரவர்த்தியின் வரிகளை மீண்டும் வாசிக்கையில் சோர்வுருவாக்கும் ஓர் அம்சம் கண்ணில் பட்டது. அவர் இன்றுள்ள நம் ஆய்வுகள் இப்படி பரிதாபகரமான போலிகளாக இருப்பதற்குக் காரணம் மேலைநாட்டு நிதியாதாரங்கள் மேல் உள்ள மோகம் மட்டுமே என்று சொல்கிறார். இந்த உண்மையை மீள மீள இணைய விவாதங்களில் நாமெல்லாம் பேசிக்கொண்டிருக்கிறோம். கருத்தரங்க அழைப்புகளும் உதவித்தொகைகளுமே இங்கே நம் கருத்தை தீர்மானிக்கின்றன. பல்வேறு வகை ஆய்வுமையங்களாக  இந்த நிதியாதார மையங்கள் நம் ஆய்வுத்துறையில் ஊடுருவிச் செயல்படுகின்றன

நான் பலமுறைச் சொல்லிய ஒன்றை மீண்டும் சொல்கிறேன், ஒரு ஆய்வாளர் மேலைநாட்டின் ஏதேனும் ஒரு பல்கலையில் பட்டம் பெற்றிருந்தால், ஏதேனும் நிதியுதவிபெற்றிருந்தால், கண்டிப்பாக அவன் இந்தியா ஒரு நாடே அல்ல, இதை உருவாக்கியவர்கள் பிரிட்டிஷார், இது உடைந்தாகவேண்டும் என்ற அரசியல் நிலைபாடையே எடுப்பார். சலிக்காமல் அத்தனை ஆய்வுகளிலும் அதையே சொல்லிக்கொண்டிருப்பார். அதற்கான எந்த தரவுகளையும் அளிக்கமாட்டார். இந்தியாவை பிரிட்டிஷார் என்றுமே முழுக்க ஒரே அரசியல் பிராந்தியமாக ஆண்டதில்லை என்ற எளிய உண்மைகூட அவர் காதுகளில் நுழையாது. இதற்கு விதிவிலக்காக அமைபவர்கள் மிகமிகமிகச் சிலரே

அதாவது பணம் கொடுத்து நம் அறிவுஜீவிகளை வாங்குகிறார்கள். மிகமிகச் சொற்பமான பணம். இந்த ஆய்வுலக் கூலிப்படை நம்முடைய அனைத்து வரலாற்றாய்வுகளையும் சீரழித்துவிட்டிருக்கிறது. நம்மைப்பற்றி மேற்குலகம் ஒத்துக்கொள்ளக்கூடியதே நம் வரலாறாக இருக்க முடியும் என்று நாமே நம்ப ஆரம்பித்துவிடுகிறோம். தென்னாட்டில் மூன்று தமிழாராச்சி சங்கங்கள் இருந்திருக்கலாம் என்று ஒருவர் சொன்னால் அவரை ஆய்வு அடிப்படை அறியா மூடன் என்பார்கள். தாமஸ்தான் இந்திய சிந்தனையை உருவாக்கினார் என்றால் ஆராயவேண்டிய கருத்து என மோவாயை வருடுவார்கள். இந்த கூலிப்படைக்கு மேலைநாட்டு ஆய்வுத்தளத்தில் அடியாட்கள் என்பதற்கு அப்பால் எந்த மதிப்பும் இருப்பதில்லை என்பதும் வெளிப்படை. தமிழ் ஆராய்ச்சியில் நாம் இந்த அன்னியக்கூலிப்படைக்கு எதிராக ஓயாத போரில் ஈடுபட்டாகவேண்டியிருக்கிறது, ஏதேனும் சுயமாகச் சிந்தனைசெய்ய.

இதற்கு ஒரு மறுபக்கமும் உண்டு. சென்ற பல வருடங்களாக நம் வரலாறு, சமூகவியல், இலக்கிய தளங்களில் முதல்தர மூளைகள் உள்ளே வருவதே இல்லை. அவர்களெல்லாம் அறிவியலும் தொழில்நுட்பமும் கற்கப் போய்விடுகிறார்கள். நம்  பண்பாட்டுக் கல்வித்துறையில் கழிவுகள் வந்து தேங்கி உறைந்துவிட்டிருக்கின்றன. கல்லூரிகளுக்குச் சென்று அங்குள்ள ‘அறிவுஜீவிகளிடம்’ பேசினால் குமட்டல் வருகிறது. இந்த புழுக்கள் என்ன அறிவு விவாதம் நிகழ்த்திவிட முடியும்? எந்தவகையில் இன்று நடக்கும் பண்பாட்டு படையெடுப்பை எதிர்கொள்ள முடியும்? இன்று ஒரு முதல்தர மாணவன் உண்மையான ஆர்வத்துடன் பண்பாட்டுக் கல்விக்கு வந்தால்கூட என்ன வாய்ப்பு இருக்கிறது? ஏதுமில்லை. இந்த புழுக்களைக் கடந்து உள்ளே வர முடியாது. வந்தாலும் இவர்களுடன் போராடிக்கொண்டிருக்க வேண்டும். லஞ்சம் கொடுக்காமல் வேலை வாய்ப்பே சாத்தியமில்லை. லஞ்சம் கொடுத்து பேராசிரியரான  ஒருவன் ஒரு மேலைநாட்டு கருத்தரங்குக்கு அழைத்து ஒருலட்சம் ரூபாய் கௌரவக்கூலி கொடுத்தால் எதைத்தான் சொல்ல மாட்டான்?

இதற்கு எதிராக இன்று தேவைப்படுவது தனிநபர்கள் தங்கள் ஆர்வத்தால் நிகழ்த்தும் விரிவான ஆய்வுகள். குறைந்தபட்சம்  பொது அறிவுத்தளத்திலாவது ஒரு மெல்லிய எதிர்ப்பை தக்கவைத்துக்கொள்ள அது உதவும். இந்த கூலிப்படையின் செயல்பாடுகளை பொதுவாசகன் அறிந்திருக்கிறான் என்ற நிலையாவது நீடிக்கும். என்றாவது நிலைமை மாறவேண்டும் என்றால் இப்போது இதுவே வழி

ஜெ

 

முந்தைய கட்டுரைகாந்திய தேசியம் 5
அடுத்த கட்டுரைகாந்திய தேசியம் – 6