டம்மி

இரண்டு வருடத்துக்கு முன்பு நவம்பரில் காசிக்குச் சென்றோம். நான் கடவுள் படப்பிடிப்பின் முதற்கட்டத்துக்காக. அந்நாட்கள் இப்போதும் இனிய நினைவாக உள்ளன. சினிமா வந்து சென்றுவிட்டது. பொதுவாகவே சினிமாக்களுக்கு குறைவான ஆயுள்தான். அபூர்வமாகவே சில படங்கள் காலம் கடந்து நினைக்கப்படுகின்றன. நான் கடவுளில் உள்ள பாடல்கள் என்றும் நீடிக்கும். கூடவே அப்பாடல்கள் நினைவூட்டும் அந்த நாட்கள் எங்கள் மனங்களில்.

காசி என்பது ஒரு நகரமல்ல, ஒரு படித்துறை. வரணாசி என்று மகாபாரதம் குறிப்பிடும் அந்த புராதன கங்கைக்கரை பிறைவளைவு. பனாரஸ் என்ற பெருநகரம் எங்கோ கிடக்கிறது. அங்கே நான் சென்றதே இல்லை. மீண்டும் மீண்டும் இந்தப்படித்துறைக்கே நான் செல்கிறேன். பனாரஸில் உள்ளது வாழ்க்கை. காசியில் உள்ளது மரணம் ஊடறுக்கும் வாழ்க்கை.

ஒவ்வொரு நாளும் மரணத்தை நினைவு கூராமல் காசியில் வாழ முடியாது. பிணங்கள் மக்கள் பெருக்கில் மிதந்து மணிகர்ணிகா கட்டம் நோக்கி வந்து கொண்டே இருக்கின்றன. ஆங்காங்கே தங்கி இளைப்பாறுகின்றன. எரியும் சிதையருகே தங்கள் இடத்துக்காகக் காத்துக் கிடக்கின்றன. பிணங்களின் அபாரமான தனிமையை காசியில் உணர முடியும். கூடவே கதறி அழும் உறவினர் இருக்கலாம். நண்பர்கள் இருக்கலாம். ஆனால் கால வடிவமான கங்கையின் கரையில் பிணம் தன்னந்தனியாகவே கிடக்கும்

பிணங்கள் ஏன் அச்சுறுத்துகின்றன? வெறும் ஒரு பொருளாக மாறிவிட்ட உடம்பை நம் பிரக்ஞை ஒப்புக்கொள்ள மறுக்கிறது. அது ஒரு மனிதன். ஆனால் மனிதனுமல்ல. அது வேறு ஒன்று. முதன் முதலாக காசியில் என்னருகே ஒரு சைக்கிளில் கொண்டுசெல்லப்பட்ட பிணத்தின் கால் என்மீது மோதியபோது அடைந்த அச்சமும் அருவருப்பும் நினைவிருக்கிறது.

சிங்கப்புலியும் நானும், ஆர்தர் வில்ஸனின் உதவியாளர் ரதீஷ் எடுத்த படம்

ஆனால் பார்க்கப் பார்க்க அந்த அருவருப்பு விலகியது. படுக்க வைக்கப்பட்டிருந்த ஒரு பிணத்தின் சரிகைப் போர்வை விலகி தொடை தெரிந்த போது கையில் டீக்கோப்பையுடன் எழுந்து போர்த்திவிட்டிருக்கிறேன்.படிப்படியாக பிணம் ஒரு யதார்த்தமாக நம் நெஞ்சுக்குள் இடம்பிடித்துவிடும் காசியில்

நான் கடவுள் படத்துக்காக ஏராளமான டம்மி பிணங்கள் செய்தோம். அவற்றைத்தான் படத்தில் சுமக்கிறார்கள். ஆரம்பத்தில் அந்த டம்மி பிணங்களும்  படப்பிடிப்புக் குழுவினரை அச்சுறுத்தின. அவற்றின் அருகே வரமாட்டார்கள், அமர மாட்டார்கள். டம்மி பிணம் என்று தெரிந்தால் கூட தொடமாட்டார்கள்.

பின்னர் மெல்ல மெல்ல அச்சம் விலகியது. டம்மி பிணத்தருகே அமர்ந்து டீ சாப்பிட்டார்கள். டிபன் சாப்பிட்டார்கள். அரட்டை அடித்தார்கள். அதன் பின் நிஜமான பிணத்தருகே சாதாரணமாக நின்று சிரித்துப் பேசிக் கொண்டார்கள். டீ குடித்தார்கள். போர்த்தப்பட்டிருப்பது ஆணா பெண்ணா என்று சாதாரணமாக அவதானித்தார்கள்.

உண்மையில் அதைத்தான் தந்திரீகம் செய்கிறது. பிணங்களுக்கு நிகரான டம்மி பிணங்களை உருவாக்குகிறது அது. வைக்கோலில் மண்ணில்செய்யப்பட்ட உடல்களை வைத்து சடங்குகளைச் செய்கிறது. அச்சம் அகன்ற பின்னர் பிணங்களை வைத்தே செய்கிறது. பிணங்களை அகமனதுக்கு அறிமுகம் செய்கிறது.

ஆனால் பிணம் என்பதேகூட ஒரு டம்மிதானே? மரணத்தின் போலி வடிவம்தானே? அதை பழகிக்கொண்டால் மரணத்தைப் பழகிக்கொள்ளலாகாதா? அதுதான் தாந்த்ரீகத்தின் வினா.

அதிகாலை வேளையில் சூடான டீயைக் குடித்த பின் இயக்குநர் சிங்கம் புலியும் நானும் சுடுகாட்டு பின்னணியில் ஒரு டம்மிப் பிணமருகே அமர்ந்து சுவாரஸியமாக எதைப் பேசிக் கொண்டிருப்போம்? சிங்கம்புலி எதையுமே வேடிக்கையாக ஆக்கக்கூடியவர். அனேகமாக ஏதாவது சினிமா வேடிக்கையாக இருக்கும். சினிமா என்பது வாழ்க்கையின் டம்மி அல்லவா?

மறுபிரசுரம் முதற்பிரசுரம் Nov 8, 2009

முந்தைய கட்டுரை‘வெண்முரசு’ – நூல் எட்டு – ‘காண்டீபம்’ – 49
அடுத்த கட்டுரைவெண்முகில் நகரம்