ஐராவதம் என்ற பேரில் எழுதிய சுவாமிநாதன் அவர்களின் ஓரிரு கதைகளை நான் கணையாழி போன்ற இதழ்களில் வாசித்திருக்கிறேன். சிலகதைகளைப்பற்றி குறிப்பிட்டிருக்கிறேன். மெல்லிய கிண்டல் கொண்ட அக்கதைகள் எனக்குப்பிடிக்கும். அவர் மறைந்த செய்தியை அவரது நண்பர் எழுதிய அஞ்சலிக்கட்டுரை வழியாக அறிந்தேன். எழுதியவரின் மைந்தர் அதை அனுப்பியிருந்தார்.
முதலில் அந்தப்படத்தைப்பார்த்ததும் எனக்கு அதிர்ச்சி. அவரை நான் நாலைந்து முறை சந்தித்திருக்கிறேன். சுவாமிநாதன் என சும்மா அறிமுகம் செய்துகொண்டு என் கதைகள் நாவல்கள் பற்றி பேசியிருக்கிறார். ஐராவதம் என சொன்னதில்லை. கடைசியாக நான் சென்னையில் குறுந்தொகைபற்றி பேசியகூட்டத்துக்கும் வந்திருக்கிறார்.
அத்துடன் இன்னொரு அதிர்ச்சி, அவரது ஆளுமை பற்றி இக்கட்டுரை அளிக்கும் சித்திரம். அவரது கதைகள் அறிவார்ந்த ஒரு தெனாவெட்டு கொண்டவை. நக்கலும் நையாண்டியும் உடையவை. அவரை மிதப்பான ஒரு பேராசிரியராகவே என் அகம் எண்ணிக்கொண்டுவிட்டது. அவர் தனியாகப்பயணம்செய்ய அஞ்சுபவர், தனிமையும் கூச்சமும் கொண்டவர் என இக்கட்டுரை காட்டுகிறது.
வியப்புதான். எழுத்து என்பது என்ன? எழுத்தாளன் தன் இடைவெளிகளை நிறைத்துக்கொள்வதுதானா? அதனால்தான் ஆளுமையில் பெரும் இடைவெளிகளை உணர்பவர்கள் எழுதுகிறார்களா?
என் நண்பன் ஐராவதம் சொல்வனம் கட்டுரை
ஐராவதம் என்றொரு எழுத்தாளர் சுரேஷ் கண்ணன்