கண்ணகி நடந்த மதுரை

 கொற்றவை நாவலில்  மதுரையை எரித்தபின்னர் கண்ணகி வைகை வழியாக சென்று சுருளி ஆறுவழியாக மலை ஏறி இன்றைய மங்கலதேவி கோயில் இருக்குமிடத்தில் நின்றாள் என்றும், குறும்பர்கள் அவளைக் கண்டார்கள் என்றும், அவள் அங்கேயே பௌத்த துறவியாக இருந்து சமாதியடைந்தாள் என்றும் எழுதியிருக்கிறேன். அந்த ஊகங்களுக்கு ஏராளமான ஆதாரங்களைச் சொல்ல முடியும்.

 

அந்த மலைமேல் கண்ணகிக்குக் கோயில் இருப்பதும், அது வைகையின் வழியாக ஏறிச்செல்லக்கூடிய இடம் என்பதும், அக்காலகட்டத்தில் நீர்வற்றிய ஆற்றின் கரையே வழியாக பயன்பட்டது என்பதும் ஊகத்துக்கு முக்கியமான காரணங்கள். குறும்பர்களின் தெய்வமாகிய கண்ணகி கேரளத்தில் குறும்பா பகவதி எனப்படுகிறாள். அவள் கோயில்களில் குறும்பர்களுக்கு ஒருநாள் முக்கியமரியாதை அளிக்கப்படுகிறது. அன்று அவர்கள் குறும்பாட்டை கோயிலுக்கு பலியாகக் கொடுக்கிறார்கள்.

 

மங்கல மடந்தை கோயில்

கண்ணகி எரித்த மதுரை என்ன ஆயிற்று?  கொற்றவை அளிக்கும் சித்திரம் அது ஒரு மாபெரும் மக்கள் எழுச்சி. ‘அரைசியல் பிழைத்தோர்க்கு அறம் கூற்றாக’ வந்த ஒரு புரட்சி. அறத்தின் வடிவமாக, அறைகூவி எழுந்த முதற்குரலாக , கண்ணகி ஒலித்திருக்கலாம். அதன்பின் மக்கள் அந்த நிலத்தை விட்டு கூட்டம் கூட்டமாக  வெளியேறி வைகையின் மறுகரையில் குடியேறினார்கள் என்றும் அங்கே புதிய மதுரை உருவாகி வந்தது என்றும் எழுதியிருந்தேன். அதுதான் இன்றைய மதுரை.

 

பழைய மதுரை ஆற்றுக்கு மறுகரையில் குறுங்காட்டுக்குள் இடிபாடுகளாகக் கிடப்பதன் சித்திரம் கொற்றவையில் வரும். அங்கே கண்ணகியை உக்கிரமான கொற்றவை தெய்வமாக நிறுவி வழிபடுவதை பயணியாகிய சீத்தலை சாத்தன் பார்க்கிறான். அந்த இடமே பலவகையான சமூகப்புறனடையாளர்கள் வாழும் பகுதியாக இருக்கிறது. கண்ணகிக்கு அங்கே உதிரபலி கொடுக்கிறார்கள். மதுரை மக்கள் அப்பகுதியிலேயே செல்வதில்லை.

 

அந்தச்சித்திரம் ஏறத்தாழ உண்மைதான் என்று பல நண்பர்கள் சொல்லியிருக்கிறார்கள். நவம்பர் 30, 2009 அன்று மதுரைக்குச் சென்றிருந்தபோது நண்பர் முத்துராஜ் அவர்களின் வீட்டுக்குச் சென்றோம். குற்றவியல் வழக்கறிஞரான முத்துராஜ் மதுரையின் சிறுமொழிபு வரலாறுகளில் ஆர்வம் உடையவர். மறவர் சாதியைப்பற்றிய ஆய்வுகளைச் செய்துவருகிறார். பழைய மதுரை என்பது வைகைக்கு மறுபக்கம் உள்ள மணலூர் என்ற கிராமமே என்றார்.

 

அவர் கூடவர மணலூருக்குச் சென்றோம். மணலூர் வைகையின் கரையில் இருக்கிறது. பலநூறு வெள்ளங்களால் வண்டல் பரவிய மண் மிக வளமானது. ஆகவே இப்போது மொத்த ஊரும் வயலூராகவே இருக்கிறது. ஏதேனும் காலத்தில் மணல்வெளியாக இருந்திருக்கலாம். அங்கே மிகக்குறைவான வீடுகள்தான். மணலூரின் வயல்வெளிதான் பழைய மதுரை

 

அது பழைய மதுரை என்பதற்கான ஆதாரம் என்ன? அந்த ஊகம் உருவானதற்கு முதற்காரணம் பதினைந்துவருடங்கள் முன்பு வயலில் தோண்டிக்கொண்டிருந்தவர்கள் கண்டெடுத்த புராதனமான பெரிய பித்தளை சருவங்களும் வெண்கலச்சிலைகளும்தான். ஏராளமான பழைய மண்பாண்டங்கள் கிடைத்துள்ளன. அவை தொல்லியலாளர்வசம் ஒப்படைக்கப்பட்டன. ஆனால் விரிவான ஆய்வுகள் ஏதும் நிகழ்த்தப்படவில்லை.

 

அந்த வயல்வெளியின் நான்கு எல்லைகளிலும் நான்கு எல்லைக்காவல் தெய்வங்கள் உள்ளன. அவை சதுக்கப்பூதங்களோ காவல்பூதங்களோ ஆக இருந்திருக்கலாம். இப்போது பலமுறை புதுக்கிக் கட்டி அய்யனார், கறுப்பசாமி கோயில்களாக உள்ளன. அதுதான் பழைய மதுரையின் எல்லையை ஊகிப்பதற்கான தடையம். பழைய மதுரை கிட்டத்தட்ட மூன்று கிலோமீட்டர் நீளமும் இரண்டு கிலோமீட்டர் அகலமும் உடையதாக இருந்திருக்கலாம்.

 

நெடுங்காலம் பொட்டலாக கிடந்த அந்தப்பகுதியில் பலரும் மெல்லமெல்ல குடியேறி விவசாயம் செய்ய ஆரம்பித்தது முப்பது நாற்பதுகளில்தான். சுதந்திரத்துக்குப் பின்னர் அறுபது எழுபதுகளில்தான் நிலப் பட்டா கொடுக்கப்பட்டிருக்கிறது. அங்கே ஆழமாக உழுபவர்கள் பல கற்சிலைகள் மண்பாண்டங்களைக் கண்டடைந்துள்ளார்கள். ஏராளமான மேடுகள், அனேகமாக கட்டிட இடிபாடுகள், இருந்திருக்கின்றன. விவசாயத்துக்காகச் சமப்படுத்தப்பட்டனவாம்.

 

ஆனால் அந்த இடம் ஆழமான வண்டல்படுகைகளால் மூடப்பட்டிருக்கிறது. ஆகவே தொல்லியல் ஆய்வுசெய்வதாக இருந்தால் பத்தடிக்கும் மேலான தோண்டித்தான் செய்ய வேண்டும். அப்படி ஏதும் செய்யப்பட்டதில்லை. பொதுவாகவே தமிழக வரலாற்றில் போதுமான அளவு தொல்லியல் கவனம் விழுந்ததில்லை என்பதே உண்மை.

 

வயல்வெளி வழியாகச் சென்று வெண்கலப்பாத்திரங்கள் எடுக்கப்பட்ட இடத்தை அடைந்தோம். எடுத்தவரே கூட வந்து இடத்தைக் காட்டினார். வயலுக்கு அப்பால் உள்ள ஏரியில் சில கற்சிலைகள் கிடைத்ததாகவும் அவற்றை எடுத்தவருக்கு சில பிரச்சினைகள் ஏற்பட்டதனால் திருப்பிக் கொண்டுபோய் போட்டுவிட்டதாகவும் சொன்னார்.

 

நாலடி ஆழத்தில் வரப்புக்காக தோண்டப்பட்ட அந்த இடத்தில் ஏராளமான மண்பாண்ட ஓடுகள் உடைந்து கிடந்தன. சாதாரண பானையோடுகள் அல்ல என்பது தெரிந்தது. அவற்றில் கருமையும் சிவப்பும் கலந்திருந்தது. இலுப்பை எண்ணை கலந்த மண்ணால் பாண்டங்கள் செய்வதென்பது இரண்டாயிரம் வருடத்துக்கு முன்புள்ள வழக்கம். இலுப்பை எண்ணைதான் கருமையாக ஓட்டின் பாதியில் தேங்கி நிறம் கொடுக்கிறது.

 

கண்ணகி நடந்த மண். கண்ணகியை கண்டவர்களின் கை பட்ட கலம். ஒரு துண்டு மண்பாண்ட ஓட்டை நினைவுக்காக எடுத்துக்கொண்டு திரும்பினோம்

 

 

 

மங்கல மடந்தை கோயில் , எம்.ஏ.சுசீலாவின் பதிவு

 http://masusila.blogspot.com/2009/05/2.html

முந்தைய கட்டுரைகாந்திய தேசியம் 3
அடுத்த கட்டுரைகாந்திய தேசியம் 4