இந்திய சுதத்திரப்போராட்டத்தை முன்னின்று நடத்தியபோது காந்தி கொண்டிருந்த தேசிய உருவகம் என்பது அவர் தென்னாப்ரிக்காவில் இருந்தபோதே உருவாக்கி வைத்திருந்த எதிர்காலத்திட்டங்களில் இருந்து உருவானது. அந்தத்திட்டத்துடன் தான் அவர் இந்தியாவுக்கு வந்தார். தன் வாழ்நாள் முழுக்க பல படிகளாக அதைத்தான் செயல்படுத்திக் கொண்டிருந்தார். அது அவரது கிராமசுயராஜ்யம் என்ற பெருந்திட்டமே. அது ஓர் இந்திய அரசை உருவாக்கும் திட்டம் அல்ல. முழுக்கமுழுக்க ஓர் அரசின்மையை உருவாக்கும் திட்டம் !
ஆகவேதான் அவர் ஒருபோதும் சுதந்திரம் பெறுவதற்காக வெள்ளையருடன் போரிடுவதை மட்டுமே தன் செயல்திட்டமாக வைத்திருக்கவில்லை. சிலசமயம் பார்க்கும்போது சுதந்திரப்போராட்டமே இரண்டாம்பட்சமானது என்ற எண்ணம் அவருக்கு இருந்ததோ என்ற எண்ணம் எழுகிறது. அவர் கிராமநிர்ம்மாணம், கதர், ஹரிஜன இயக்கம் போன்ற இயக்கங்களையே அடிப்படைச் செயல்பாடாக கருதியிருந்தார். அவரைப்பொறுத்தவரை சுதந்திரப்போராட்டம் என்பது நம்மை நாமே கட்டி எழுப்பும் பணியே ஒழிய பிறரை வெற்றிகொள்ளும் பணி அல்ல
காந்தி இந்தியச் சுதந்திரப்போராட்டத்தை முடிந்தவரை அதிகமாக மக்களைத்திரட்டி நடத்த எண்ணியமைக்குக் காரணமும் இதுவே. அவர் மக்களை அரசியல்படுத்தவும் அவர்களின் விதியை அவர்களே தீர்மானிக்கச்செய்யவும் விரும்பினார். அவருக்கு முன்பிருந்த எந்த சுதந்திரப்போராட்டத்தலைவருக்கும் அத்தகைய கனவு இருக்கவில்லை, அவர்கள் கல்வியும் விழிப்புணர்ச்சியும் கொண்ட சிறுபான்மையினரை திரட்டவே முயன்றார்கள். ஏன் காந்தியின் சமகாலத்து பிற தரப்பினர்கூட , மிகச்சிறந்த உதாரணம் அம்பேத்கார், வெகுமக்களை பெருமளவில் திரட்டி நடத்தும் இயக்கங்களில் ஆர்வம் கொண்டிருக்கவில்லை. காந்தியின் தேசிய உருவகம் கோடானுகோடி மக்களின் வாழ்க்கையை மொத்தமாக புதிதாகக் கட்டியெழுப்புவதாக இருந்தது.
காந்தியின் கனவு தேசியம்
இன்று இந்தியாவில் மிகச்சிலரே வாசித்திருக்கிற ஒரு நூலாக இருக்கிறது காந்தியின் ஹிந்து சுயராஜ்யம் என்ற குறிப்புடன் அந்தோனி பாரேல் அவரது ஹிந்து சுயராஜயா பதிப்பை வெளியிட்டார். உண்மைதான். அந்நூலை காந்தியர்களில் ‘கடும்போக்கு’ கொண்ட சிலர் ஒழிய பெரும்பாலானவர்கள் முன்வைப்பதில்லை.
அதற்குக் காரணம் ‘நவீன’ மனம் கோண்ட ஒருவருக்கு அந்நூல் மிக எதிர்மறையான ஒரு சித்திரத்தை அளித்துவிடும் என்பதே. நவீன கால நிர்வாகம்,அரசமைப்பு, உற்பத்தி-வினியோகமுறை, சமூக உறவுகள் ஆகியவற்றைப்பற்றி மட்டுமல்ல நவீன தொழில்நுட்பம் போக்குவரத்து ஆகியவற்றைப்பற்றிக்கூட எந்தப் புரிதலும் இல்லாமல் மிகவும் பழைமையான ஒரு மன உலகில் வாழ்ந்துகொண்டு உருவாக்கப்பட்ட பகற்கனவு என அந்நூல் அவனுக்குத் தோன்றக்கூடும்.
தென்னாப்ரிக்காவில் இருந்து வெளிவந்த ‘இந்தியன் ஒப்பீனியன்’ என்ற இதழில் தொடராக வெளிவந்தது இந்நூல். 1909ல் லண்டனில் இருந்து தென்னாப்ரிக்காவுக்கு செல்லும்போது வன்முறைசார்ந்த புரட்சிதான் சமூகத்தை உருவாக்குமா என்ற வினாவுக்கு பதிலாக தனக்குத் தோன்றியதை இந்நூலில் காந்தி சொல்கிறார். இந்தியாவில் அப்போது ஒரு வன்முறைப்புரட்சியை கொண்டுவந்து பிரிட்டிஷாரை வெல்வதைப்பற்றிய நம்பிக்கை நிலவியது. அந்த வழியே தென்னாப்ரிக்காவுக்கும் உகந்தது என்றும் சொல்லப்பட்டது. காந்தி அதை நம்பவில்லை. அதற்கான பதிலை அவர் தனக்குள் தேடுகிறார்.
ஹிந்து சுயராஜ்யம் தன்னுடைய கொள்கைகளின் முழுவிளக்கமும் கொண்ட மையநூல் என்று காந்தி கருதினார். 1921ல் அந்நூலின் ஆங்கிலப்பதிப்புக்கு அவர் எழுதிய முன்னுரையில் ”என் கருத்தில் இந்நூலை ஒரு குழந்தைக்கும் வாசிக்கக் கொடுக்கலாம். இது வெறுப்புக்குப் பதிலாக அன்பின் நற்செய்தியை குழந்தைக்கு கற்பிக்கும். வன்முறையை தியாகத்தால் இடமாற்றம் செய்யும்” என்று எழுதினார்
தன் நூலில் ‘நவீன பண்பாடு’ குறித்து ஆழமான கண்டனம் இருப்பதாக காந்தி சொல்கிறார். அது முதல்வாசிப்பில் ஏற்க முடியாததாக தோன்றலாம் என்றும் சொல்கிறார். ஆனால் தனக்கு தன் கருத்துக்களில் ஆழமான நம்பிக்கை இருப்பதாகவும் இன்று இந்தியா இந்நூலில் உள்ள விஷயங்களுக்காக முதிர்ச்சி கொண்டிருக்கவில்லை என்றாலும் அது சாத்தியமாகும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவிக்கிறார். தன்னுடைய தேசிய விடுதலைப்போராட்டம் என்பது இந்த கிராமசுயராஜ்யக் கனவை சாத்தியமாக்கும் நோக்கம் கொண்டதே என அவர் அம்முன்னுரையில் திட்டவட்டமாகவே சொல்கிறார்.
அந்நூலின் அரசியல் செயல்திட்டத்தில் அகிம்சையை மட்டுமே தற்போது தன்னால் சோதனைசெய்துபார்க்க முடிந்திருக்கிறது என்று சொல்லும் காந்தி அதுவும் போதிய அளவுக்கு நடைமுறை வெற்றியை அளிக்கவில்லை என்று வருந்துகிறார். இந்தியாவின் சுதந்திரப்போராட்டத்தைப் பயன்படுத்திக்கொண்டு தன்னுடைய சொந்தப் பொருளியல் திட்டங்களை அமல்படுத்த தான் முயல்வதாகவும், அரசியலிலும் பொருளியலிலும் மதக்கருத்துக்களை புகுத்துவதாகவும், தான் செய்வது ஓர் அபாயகரமான ஆட்டம் என்றும் எழுந்த குற்றச்சாட்டுகளுக்கு தன்னுடைய திடமான அரசியல் பொருளியல் நம்பிக்கை இது என்றும், இதற்காகவே தான் அரசியலில் ஈடுபடுவதாகவும் காந்தி பதில் சொல்கிறார்.
ஹிந்து சுயராஜ்யத்தின் பொருளியல் அரசியல் கொள்கைகளை பிறிதொரு தருணத்திலேயே விரிவாகப் பேசவேண்டும். ஆனால் இன்று அந்நூலைப் படிக்கையில்கூட சாதாரண வாசகனுக்கு அதிர்ச்சியே உருவாகும். இவர் என்ன அரசாங்கம் அமைக்க வழிசொல்கிறாரா இருக்கும் அரசாங்கங்களைக் கலைத்து அராஜகம் உருவாக வழி சொல்கிறாரா என அவன் திகைப்படையக்கூடும். அதிஉணர்வாளர்களுக்கு [Excentrics] மட்டுமே உரிய ஒரு வகை கட்டற்ற எண்ணப்பாய்ச்சல் கொண்ட நூல் இது.
அன்றைய சூழலில் இந்திய அரசியல் தளத்தில் செயலாற்றிய எவருக்கும் நேரு,படேல்,சுபாஷ்,அம்பேத்கார் அனைவருக்குமே, இது ஒரு அந்தரங்கமான கிறுக்குத்தனம் என்றே தோன்றியிருக்கும். இவர்கள் எவருமே அரசின்மைவாதிகள் அல்ல என்பதே முக்கியமான காரணம். இவர்கள் எண்ணிக்கொண்டிருந்தது அரசுருவங்களைப் பற்றி. இவர்கள் எவருமே அதிஉணர்வாளர்களுமல்ல. ஆகவே தங்கள் காலகட்டம் தங்களுக்கு அளிக்கும் எண்ணங்களின் இயல்கையை தாண்டிச்சென்று சிந்திக்க இவர்களால் முடியவும் இல்லை.
எனக்கு என்ன தோன்றுகிறது என்றால் பிராமணியம் தொடர்பான கசப்பு ஒரு மனப்பீடிப்பு போல ஈ.வே.ரா அவர்களை அழுத்தியிருக்காவிட்டால் அவர் காந்தி சொன்னவற்றை சட்டென்று புரிந்துகொண்டிருக்கக் கூடும் என்று. இந்திய அரசியலில் அக்காலத்தில் அவர்தான் காந்தியைப்போல அரசின்மைவாதி. எல்லா எல்லைகளுக்கும் செல்லக்கூடிய அதிஉணர்வாளர்.
காந்தி ஹிந்து சுயராஜ்யம் வழியாக முன்வைக்கக்கூடிய தேசிய உருவகத்தை சுருக்கமாக இவ்வாறு சொல்கிறேன். அதை விரிவாக நூல்கள் வழியாகவே கற்க வேண்டும். காந்தியைப் பொறுத்தவரை முதல்பெரும் விழுமியம் என்பது சுதந்திரம். சுதந்திரம் என்பது பொறுப்புடன் இணைந்தது. பொறுப்பு என்பது தனிமனித ஒழுக்கம் மற்றும் சமூக நெறிகள் ஆகியவற்றை பேணுவதே. இத்தகைய முழுமையான சுதந்திரம் சாத்தியமாகக்கூடிய ஒரு சமூக அமைப்பை அவர் கற்பனைசெய்கிறார்.
ஒரு மனிதன் தன் வாழ்க்கையை தானே தீர்மானிக்கக்கூடியவனாக இருக்க வேண்டும். அதற்கு அவன் தன் சமூகத்தை தானே தீர்மானிக்கும் உரிமையுடன் இருக்க வேண்டும். மேலைநாடுகளில் இருந்த எளிமையான வாக்குரிமையை காந்தி இங்கே முக்கியமானதாக கருதவில்லை. தன்னை அடக்கியாளவேண்டிய சக்தி எது என்பதைத் தீர்மானிக்கவே அந்த வாக்குரிமை உதவுகிறது அவனுக்கு. அவனால் புரிந்துகொள்ள முடியாத, அவனால் நேரடியாகத் தொடர்புகொள்ள முடியாத ஒரு பெரிய அமைப்பின் பிரிக்கமுடியாத உறுப்பாக அவன் இருக்கும்போது அவனுக்கு உண்மையில் சுதந்திரம் என்பதே இல்லை.
சுதந்திரத்தைப் பறிக்கும் இன்னொரு முக்கியமான அம்சமாக காந்தி எண்ணுவது உலகியல் இன்பங்கள் மீதான பேராசை. அந்த ஆசையினால்தான் இந்தியா மேலைநாட்டினருக்கு அடிமையானது என்று காந்தி எண்ணுகிறார். நுகர்வு வெறி இயற்கையை அழிக்கிறது. பெருந்தொழில்நுட்பங்களை கொண்டுவருகிறது. பெரிய அளவில் ஆற்றலை தேவையாக்குகிறது. ஏராளமான மூலப்பொருட்கள் அதற்கு தேவையாகின்றன. ஆகவே மூலப்பொருட்களுக்கான மோதல் உருவாகிறது.
நுகர்வும் போரும் ஒன்றுடன் ஒன்று பிரிக்கமுடியாதவை என்பது காந்திய தரிசனம். அதாவது பெருமளவில் நுகர்வைக் கொண்ட ஒருசமூகம் போரிட்டபடியேதான் இருக்க முடியும். போர் பெரிய ராணுவங்களையும் அந்த ராணுவங்களை நிர்வகிக்கும் பெரிய அரசுகளையும் உருவாக்கும். அந்த அரசில் எளியமனிதன் வெறும் வரிகொடுக்கும் குடிமகனாக மட்டுமே இருக்க முடியும். அவனுக்கு சுதந்திரமும் நிறைவும் இருக்காது. நவீனப் பண்பாடு என்பது உடலை மகிழ்வித்து ஆன்மாவை அழிப்பது என்றார் காந்தி.
ஆன்ம விடுதலை என்பது காந்தியைப் பொறுத்தவரை அறிவார்ந்தது அல்ல. அதை செயல்மூலமே ஒருவர் அடைய முடியும். உடல்சார்ந்த உழைப்பை காந்தி மீளமீள வற்புறுத்துவது அதில் உள்ள படைப்பூக்கம் மனித அகத்தை விடுதலைசெய்வது என்பதனாலேயே. ஒரு மனிதனுக்கு அறிவார்ந்த வளர்ச்சியும் தொழில்கள் மூலம் பெறும் ஆன்மீக மலர்ச்சியும் சேவை மூலம் பெறும் கருணையும் தேவைப்படுகிறது. ஆகவே பெருந்தொழில்கள் மூலம் வேலைப்பாகுபாடு நிகழ்வதை காந்தி நிராகரித்தார். அது மனிதனை சமூகத்தில் இருந்தும் உழைப்பில் இருந்தும் அன்னியப்படுத்தும் என்றார். அதன் விளைவாக செய்தொழிலில் அவனுக்கு இன்பம் இருக்காது, ஆகவே அவன் போலியான கேளிக்கைகளை நோக்கிச் செல்வான்
இவ்வாறாக மையப்படுத்தபப்ட்ட அரசு, ராணுவம் ,பெருவணிகம், போர்கள், பெருந்தொழில்நுட்பம், நுகர்வு ஆகியவற்றை ஒரே விஷயத்தின் வேறுபட்ட முகங்களாகக் காணும் காந்தி ஒட்டுமொத்தமாக இவற்றை நிராகரித்துவிட்டு ஒரு சமூக அமைப்பை உருவாக்க முடியும் என்று எண்ணுகிறார். அதுவே அவர் முன்வைத்த கிராமசுயராஜ்யம். அதையே எதிர்கால இந்தியாவின் தேச அமைப்பாக அவர் தன்னுடைய ‘ஹிந்து ஸ்வராஜ்’ என்ற நூலில் எழுதினார்.
காந்தி உருவகிக்கும் சமூகம் தன்னிறைவு கொண்ட சிறிய கிராமங்களை அடிப்படை அலகாகக் கொண்டது. அந்த மக்கள் தங்களுக்குத் தேவையான பொருத்தமான தொழில்நுட்பத்தை மட்டும் அங்கே பயன்படுத்திக்கொள்ளலாம். அந்த மக்களின் தேவைக்குரிய அனைத்தையும் அங்கே உருவாக்கிக் கொள்ள முடியும். அங்குள்ள பொருட்களால் வீடு கட்டலாம். அங்குள்ள நிலத்தில் உணவை உருவாக்கலாம். உடையை அவர்களே நெய்துகொள்ளலாம். ஒருவரை ஒருவர் சுரண்டுவதையும் அடக்கியாளுவதையும் அவர்கள் தவிர்த்தார்கள் என்றால் அவர்களுக்குத்தேவையான அனைத்தையுமே அவர்கள் அங்கே உருவாக்கிக் கொள்ளலாம்.
இந்த தன்னிறைவான கிராமங்கள் ஒன்றுடன் ஒன்று தேவையான அளவுக்கு மட்டும் வணிக உறவுகளை உருவாக்கிக் கொள்ளலாம். அதன் மூலம் அவை தங்களிடம் இல்லாதபொருட்களையும் அறிவையும் பிறரிடம் இருந்து பெற்றுக்கொள்ளலாம். ஒரு கிராம மக்கள் கண்டிப்பாக தங்கள் கிராமத்தைப்பற்றியும், சூழலைப்பற்றியும் நன்றாக அறிந்திருக்க வேண்டும் என்று காந்தி எண்ணினார். அங்குள்ள வேளாண்மை மற்றும் தொழில்களுக்கான வாய்ப்புகளை அவர்கள் கற்றிருக்க வேண்டும். புதிய இயல்கைகளை அவர்கள் கண்டுபிடிக்கவேண்டும்.
தன் சொந்த மண்ணைப்பற்றி தெரியாமல் வாழ்வதை அறியாமை என்று காந்தி எண்ணினார். தன் மண்ணைப்பற்றி ஒருவன் உண்மையிலேயே அறிந்திருப்பான் என்றால் அவனால் தேவையான அனைத்தையும் அங்கிருந்து உருவாக்கிக் கொள்ளமுடியும். குறைந்த செலவில் நல்ல வீடுகளை கட்ட முடியும். நல்ல உடைகளை உருவாக்க முடியும். இந்த அறிதல்கள் பல்லாயிரம் வருடங்களாக பாரம்பரியமாக கைமாற்றப்பட்டு வந்தவை. அவற்றை தொழில்முறைபகுப்பான வருணாசிரமமும் சாதிமுறையும்தான் அறுபடாத தொடர்ச்சியாக நீடிக்கச் செய்தன என்று நம்பிய காந்தி ஏற்றத்தாழ்வு இல்லாத ஒரு வர்ணாசிரம முறை என்பது அறிவு தலைமுறைமாற்றத்தால் அறுபடாமல் நீடிப்பதற்கு இன்றியமையாதது என்றார்.
சிறிய தொழில்குழுக்கள் தொழில்ஞானத்தை சிறப்பாக பேணுவதை அவர் அவதானித்தார். இந்தியச் சூழலில் தொழிற்குழுக்களே சாதியாக இருக்கின்றன என்றார். பிற்பாடு பல்லாயிரம் வருடத்து வரலாறுள்ள சாதி தன்னுடைய ஏற்றத்தாழ்வு மனநிலையை ஒருபோதும் தவறவிடாது என உணர்ந்த காந்தி சாதி அடிப்படையிலான தொழிற்குழுக்கள் தேவையில்லை என்றார். எல்லாசாதியினரும் தங்களை தொழிலாளர்களாக உருவகித்துக்கொள்ளும் ஒரு உற்பத்திமுறை தேவை என்றார்.
காந்தியின் கிராமசுயராஜ்யத்தின் சிறப்பு என்னவென்றால் அங்கே பகிர்வுப்பரவல் [வினியோகம்] மிக எளிமையாகவும் நேரடியாகவும் நடைபெறுகிறது என்பதே. உற்பத்தியும் பகிர்வுப்பரவலும் ஒரே இடத்தில் ஒரே காலத்தில் நிகழ்கின்றன. எது தேவையோ அது மட்டுமே உற்பத்தி செய்யப்படுகிறது. உற்பத்திசெய்பவர்கள் நேரடியாக தேவையானவர்களுக்குக் கொடுக்கிறார்கள். ஆகவே பெரிய அளவிலான பண்டப்போக்குவரத்து தேவையில்லை. ஆகவே காந்தி பெரிய அளவிலான போக்குவரத்தை தவிர்க்கவேண்டும் என்றார். ‘உடனடியாக ரயில்கள் தேவையில்லை என்று சொல்லமாட்டேன், ஆனால் அவை இல்லாமலாகும் என்றால் அது நல்லதே’ என்றார்!
இந்த தன்னிறைவுள்ள கிராமங்கள் தங்களை தாங்களே ஆட்சிசெய்கின்றன. அவை வெளியே இருந்து அதிகமாகப் பெறுவதில்லை. ஆகவே அவை அதிகமாகக் கொடுக்கவும் வேண்டியதில்லை. அவை சேர்ந்து ஒட்டுமொத்த ஆட்சியமைப்புகளை உருவாக்கலாம். அத்தகைய ஒரு மைய அமைப்பே காந்தி உருவகித்த மத்திய அரசு. அதற்கு ராணுவமோ காவல்துறையோ உளவமைப்போ தேவையில்லை. அதற்கு பிரம்மாண்டமான ‘அரசு இயந்திரம்’ தேவை இல்லை. ஏனென்றால் அது பெரிய அளவில் எதையும் நிர்வாகம்செய்வதில்லை. ஆகவே அது முற்றிலும் அகிம்சை அரசாக இருக்கும்.
காந்தியின் இந்த கிராமசுயராஜ்யத்தை பற்றி கேட்டதுமே ஒரு ‘நவீன’ மனம் ”என்ன அபத்தம் இது!’ என்றே எதிர்வினை ஆற்றும். தான் வாழ்ந்துகொண்டிருப்பது மிகுந்த தர்க்கபூர்வமான ஓர் உலகில் என்றும் காந்தி ஒரு கிறுக்குக் கனவுலகில் வாழ்ந்து அபத்தங்களைச் சொல்லிக்கொண்டிருந்தார் என்றும் எண்ணும்.
ஆனால் கிராமசுயராஜ்ய கோட்பாட்டை காந்தியப் பொருளாதாரம் என்ற தளத்தில் விரிவடையச்செய்தவரான பொருளியல் மேதை ஜே.சி.குமரப்பா ஒருமுறை சொன்னார், நவீனமனம் ஒரு போதும் தான் வாழும் உலகின் பேரபத்தங்களைப் பார்ப்பதில்லை என. உதாரணமாக பெரும்பாலான நவீன அரசுகள் ஆட்சியமைப்பை தக்கவைத்துக்கொள்ளவும் நடத்திச்செல்லவும்தான் மிகப்பெரும்பாலான பணத்தைச் செலவிடுகின்றன. அரசு இயந்திரம் எதற்காகச் செயல்படுகிறது என்றால் வரி வசூல் மற்றும் நிதி நிர்வாகத்துக்காக. அந்த வரி எதற்காக என்றால் அரசு இயந்திரத்தை செயல்படச்செய்வதற்காக! எவ்வளவு தர்க்கபூர்வமாக இருக்கிறது இல்லையா?
இன்னொரு உதாரணம், இன்றைய நவீன அரசுகள் வளர்ச்சித்திட்டங்களுக்காகச் செலவிடுவதை விட பலமடங்கு ராணுவத்துக்குச் செலவிடுகின்றன. உலகமெங்கும் ராணுவத்துக்குச் செலவிடப்படும் தொகை உலகமெங்கும் உள்ள வறுமையை ஐந்தே வருடங்களில் ஒழித்துவிடும். ஏன் ராணுவத்துக்குப் பணம் செலவிடப்படுகிறது, அமைதிக்காக! ஏன் அமைதி கெடுகிறது, வறுமையினால்!
காந்தியின் கிராமசுயராஜ்யம் என்ற கருதுகோள் வளர்ச்சி, சுதந்திரம் எல்லாவற்றையும் கீழிருந்து, சாதாரண மனிதனில் இருந்து கணக்கிட ஆரம்பிப்பதன் மூலம் உருவாவது. சோஷலிசம் உள்ளிட்ட பிற அரசமைப்புகளின் கருதுகோள்கள் அனைத்துமே வளர்ச்சி, சுதந்திரம் போன்றவற்றை மேலிருந்து, மையத்தில் இருந்து கணக்கிடுகின்றன. கன்யாகுமரி மாவட்டத்தில் ஏரியை தோண்ட டெல்லியில் பணம் அனுமதிக்கபப்ட்டு பம்பாய் நிறுவனம் வரவேண்டும் என்ற நிலை யாருக்குச் சாதகமனாது? கணக்குகளின்படி தேசம் முன்னேறிக்கொண்டே இருக்கும், பட்டினியும் பெருகிக்கொண்டே இருக்கும் என்பதே இதன் விளைவாகும்.
இங்கே திட்டங்கள் ஒளிவிடத்தான் செய்யும், விளைவுகள் ஒன்றுமிருக்காது. கேரள காந்தியவாதியான பேராசிரியர் எம்.பி.மன்மதன் ஒருமுறை சொன்னார் ”சராசரி இரண்டடி ஆழமுள்ள ஏரியில் நாலடி உயரமுள்ள பசு மூழ்கிச்செத்தது என்றால் இந்த வளர்ச்சிவாதிகள் சண்டைக்கு வருவார்கள். புள்ளிவிவரங்களை எடுத்து வீசுவார்கள்”
இன்றைய இந்திய தேசியமும் காந்தியும்
காந்தி அன்றைய இந்திய தேசவிடுதலைப்போரில் ஈடுபட்டவர்கள் முன்வைத்த இருவகை தேசிய உருவகத்தையும் திட்டவட்டமாக நிராகரிக்கிறார். 1909ல் காந்தி லண்டனில் வினாயக் தாமோதர் சவார்க்கரை இரண்டாம் முறையாகச் சந்தித்து விரிவான விவாதித்தார். பண்பாட்டு தேசியத்தை முன்வைத்த சாவர்க்கர் ஒரு ராணுவ மைய அரசு இந்தியாவில் அமையவேண்டும் என்ற கனவில் இருந்தார். 1909ல் லண்டனில் அரசுச்செயலர் வில்லியம் கர்ஸான் வைல் [William Curzon-Wyllie] சாவர்க்கரின் மாணவரான மதன்லால் திங்ராவால் கொல்லப்பட்டார். இந்தத் தருணத்தில் லண்டனுக்கு தென்னாப்ரிக்க போராட்டம் குறித்த பேச்சுவார்த்தைக்காக வரும் காந்தி அன்றைய பிரிட்டிஷ் அரசின் கடும் மனகசப்பைப் புறக்கணித்து கண்காணிப்புகள் நடுவே சாவார்க்கரின் நண்பர் சியாம்ஜி கிருஷ்ண வர்மாவின் அறையில் தங்க முடிவெடுத்தார்.
ஏற்கனவே 1906 சாவர்க்கரைச் சந்தித்த போது காந்தி தன்னுடைய அகிம்சைப்போராட்டத்துக்கு அவரை இழுக்க முனறு தோற்றார். 1909ல் வன்முறைப்போராட்டத்துக்கான மனநிலை உச்சநிலையில் காணப்பட்டது. இந்திய தேசிய காங்கிரஸை கைப்பற்றி நேரடிப்புரட்சிக்கு இட்டுச்செல்லும் வழிகள் பேசப்பட்டன. அச்சந்திப்புக்குப் பின்னர் தென்னாப்ரிக்காவுக்கு திரும்பும்போதுதான் கில்டொமான் கேஸில் [[Kildoman Castle] கப்பலில் பயணம் செய்யும்போது காந்தி தன்னுடைய ஹிந்து சுயராஜ்யத்தை எழுதினார். அந்நூல் திட்டவட்டமாகவே சாவார்க்கரின் ஹிந்து மையத்தேசியத்தை நிராகரிப்பது. இந்திய அரசியலில் இன்றுவரை அந்த ஹிந்துமையத்தேசியத்துக்கு எதிராக விளங்கும் அரசியல் நிலைபாடு அந்தப்பயணத்தில் காந்தி உருவாக்கி வாழ்நாள் முன்வைத்ததே. அதற்காகவே அவர் உயிர்த்தியாகமும் செய்தார்.
அதே வீச்சில் காந்தி நேருவின் தாராளவாத அரசுருவகத்தையும் நிராகரிப்பதை நாம் காணலாம். முப்பத்தெட்டு வருடங்களுக்குப்பின்னர் இந்தியா சுதந்திரத்தை நெருங்கிக்கொண்டிருந்த போது வருங்கால இந்தியா எப்படி அமையவேண்டும் என்ற தன் கனவை கிராமசுயராஜ்யம் என்ற அடிப்படையிலேயே காந்தி முன்வைத்தார். காங்கிரஸின் அடுத்தகட்ட தலைவர்கள் கிட்டத்தட்ட அனைவருமே அதற்கு எதிரானவர்கள் என்று காந்தி அறிந்திருந்தார். ஜனநாயகவாதி, மதச்சார்பற்றவர், இலட்சியவாதி என்ற அடிப்படையில் காந்தி நேருவை தன் வாரிசாக முன்னிறுத்தினார். ‘என் குரலில் இனி நேரு பேசுவார்’ என்ற காந்தியின் வரியே பிறகு நேருவுக்கு அசைக்க முடியாத வலிமையை உருவாக்கி அளித்தது
ஆனால் நேருவுக்கு கிராமசுயராஜ்யம் என்ற திட்டத்தில் இம்மிகூட ஆர்வம் இல்லை என்பதையும் அதை அவர் ஒரு அபத்தமான, கிறுக்குத்தனமான கனவாக மட்டுமே கருதுகிறார் என்றும் காந்தி புரிந்துகொண்டிருந்தார். நேருவின் கனவு பெருந்தொழில்கள், உயர்தொழில்நுட்பம், மையநிர்வாகம் கொண்ட ஒரு தாராளவாத அரசைச் சார்ந்தவையாக இருந்தன. ஆனாலும் காந்தி தன் கிராமசுயராஜ்ய திட்டத்தை சுதந்திரத்துக்குப் பின்னால் உருவாகும் தேச நிர்மாண திட்டத்தில் சேர்ப்பதற்காக நேருவை கேட்டுக்கொண்டார். நேரடியாக விவாதிப்பதை நேரு தவிர்க்கிறார் என்று புரிந்ததும் மீண்டும் மீண்டும் காந்தி நேருவுக்கு அதுகுறித்து கடிதங்கள் அனுப்பினார்.
ஆனால் நேரு விவாதத்துக்கே வரவில்லை. அதில் விவாதிப்பதற்கே ஏதுமில்லை என்றே அவர் எண்ணினார். இந்தியாவுக்குத் தேவையானது பெருமுதலீடு, பெருந்தொழில், பெருந்திட்டங்கள் என்பதில் அவர் ஐயமற்றிருந்தார். அவர்முன் முன்னுதாரணங்களாக ஸ்டாலினின் சோவியத் ருஷ்யாவும் தியோடர் ரூஸ்வெல்ட்டின் அமெரிக்காவும் இருந்தன. காந்தி அவரது இறப்புக்குச் சிலநாட்கள் முன்னால் வரை கிராமசுயராஜ்யத்துக்காக நேருவிடம் வாதாடியதை, ஏன் மன்றாடியதை, நாம் அக்கடிதங்களில் காண்கிறோம். கிராமசுயராஜ்யம் தவிர எந்த ஒரு அமைப்பும் இந்தியாவின் எளிய விவசாயிகளை அன்னியப்படுத்தும் என்றும், அவர்களை பெருமுதலாளிகளிடம் அடிமைப்படுத்தும் என்றும் கடிதங்களில் காந்தி வாதிடுகிறார்.
காந்தி 1948ல் கொல்லப்பட்டது மிகவசதியான ஒரு திருப்பம். அஷிஸ் நந்தி அவரது கட்டுரை ஒன்றில் கோட்ஸே காந்தியை கொன்றாலும்கூட அக்காலகட்டத்தில் வாழ்ந்த பலரது ஆழ்மன விருப்பே அவர் வழியாக நிறைவேறியது என்று சொல்கிறார். நேருவுக்கு அதற்குள்ளாகவே காந்தி ஒரு பெரும்தடையாக மாறிவிட்டிருந்தார். காந்தியின் கைராட்டை, கிராமநிர்மாணம் போன்றவற்றை நேரு எப்போதுமே பெரிதாக எடுத்துக்கொண்டது இல்லை. அவை மக்களை திரட்டுவதில் ஆற்றும் மகத்தான பங்களிப்பைக் கண்டு அவற்றை சகித்துக்கொண்டார் என்றுதான் சொல்லவேண்டும்.
ஆனால் நாடு விடுதலையடையும் தருணத்தில் காந்தி அவரது கிராமசுயராஜ்ய கொள்கைகளை அவ்வளவாக முன்வைக்கமாட்டார் என நேரு நினைத்திருக்கலாம். ஆனால் காந்திக்கு அவரது வாழ்க்கையின் மையப்பணியே அதுவாகத்தான் இருந்தது. நேரு காந்தியை சமாளிக்க முடியாமல் திணறினார். பிற்பாடு கனடாவின் பிரதமராக ஆனவரும் நோபல் பரிசுபெற்ற அமைதிப்பேச்சுவார்த்தையாளருமான லெஸ்டர் பியர்ஸனிடம் [ Lester B. Pearson] நேரு காந்தியை ‘கிழட்டு சுயஏமாற்றுக்காரர்’ [ Old hypocrite] என்று சொன்னதாக அவர் தன் சுயசரிதையில் குறிப்பிட்டிருப்பதாக லாயிட் ரூடால்ப் அவரது பின் நவீனத்துவ காந்தி என்ற நூலில் சொல்கிறார்.
இருக்கலாம். காந்தி அவரது கடைசிக்காலத்தில் இந்தியப்பிரிவினையின்போது வெடித்துக்கிளம்பிய மாபெரும் வன்முறையைச் சமாளிக்க தன்னுடைய மொத்த கவனத்தையும் திருப்பியமையால்தான் கிராமசுயராஜ்யம் குறித்த காந்தியின் அழுத்தத்தை எதிர்கொள்ளாமல் நேரு தப்ப முடிந்தது. அரசியல் நிர்ணய சபை நடவடிக்கைகள் வலுப்பெறுவதற்குள் காந்தி கொல்லவும்பட்டார். மேலும் சிலவருடங்கள் காந்தி உயிருடன் இருந்திருந்தால் நேருவின் இந்திய உருவாக்கத்துக்கு எதிராக காந்தி உண்ணாவிரதம் இருந்திருப்பார். நேருவால் அதை சமாளிக்க முடிந்திருக்காது. காந்திக்குப் பின்னர் காந்தியப்பொருளாதாரத்தைப் பற்றிப் பேசியவர்களான ஜெ.சி.குமரப்பா போன்றவர்களை நேரு முன்னேற்றத்துக்குத் தடையாக அமையும் முட்டாள்கள், பழமைவாதிகள் என வெறுத்து ஒதுக்கினார்.
நேரு உருவாக்கிய பொருளாதார-சமூகக் கட்டமைப்பு எப்படிப்பட்டது என்பதை விரிவாகவே விவாதிக்கவேண்டும். அவரது கோட்பாடு கலப்புப் பொருளாதாரம் எனப்பட்டது. ஒருபக்கம் பிரசாந்த சந்திர மகாலானோபிஸ் [Prasanta Chandra Mahalanobis] வடிவமைத்த மையப்படுத்தப்பட்ட பொருளியல் மற்றும் சோஷலிச கனவுகள் கொண்ட நலத்திட்டப்பணிகள். மறுபக்கம் தாராளவாத நோக்குள்ள சமூக அரசியல் கட்டமைப்பு. நேருவின் குழப்ப மனநிலையை இது மிகச்சரியாகவே பிரதிநிதித்துவம் செய்தது. நேரு மன அளவில் ஒரு தாராளவாதி. தாராளவாதச் சமூகமே சிறந்த குடியாட்சிமுறையை உருவாக்கும் என நம்பினார். ஆகவே பாராளுமன்ற அரசியல், நிர்வாகம் போன்றவற்றில் தாராளவாதத்தை மேற்கொண்டார்
ஒரு சமூகம் தன்னுடைய உட்கூறுகளின் இயல்பான முரணியக்கத்தால் முன்னகர்வதே தாராளவாதப் பொருளியலின் அடிப்படை. ஆனால் நேரு நேற்மாறான சோவியத் பாணி மையப்பொருளாதார முறையை நம்பினார். மூலதனத்தை குவித்து பெருந்தொழில்களை உருவாக்கினார். அதன் பொருட்டு நேரு அதிகாரம் அனைத்தையும் மையத்தில் குவிக்கும் அரசை வடிவமைத்தார். அதன் விளைவாக அதிகார வர்க்கம் அபரிமிதமான வலிமையைப் பெற்றது. லைசன்ஸ் ராஜ் எனப்படும் அமைப்பு உருவாகியது. அது தாராளவாதத்துக்கே எதிராக அமைந்தது. ஆகவே தாராளாவாத முகம் கொண்ட அதிகாரவற்க அரசே அவரால் உருவாக்கபப்ட்டது.
நேருவின் கொள்கைகள் காரணமாக சாதகமும் பாதகமுமான விளைவுகள் உருவாயின. இந்தியா சுதந்திரம் அடைந்தபோது மாபெரும் பஞ்சங்களின் பிடியில் இருந்தது. உணவு உற்பத்தி கொஞ்சம்கூட போதாதநிலையில் இருந்தது. நேருவின் பிரம்மாண்டமான பாசனநிர்மாணத்திட்டங்கள் வேளாண்மைநிலத்தைப் பெருக்கி உணவுற்பத்தியை இரட்டிப்பாக்கி உணவுத்தன்னிறைவை உருவாக்கின. நாடு முழுக்க சாலைகள், மின்சாரம்,செய்தித்தொடர்பு போன்ற அடிப்படைக்கட்டுமானங்கள் உருவாயின. இன்று நாம் காணும் நவீன இந்தியாவின் அடித்தளம் நேருவால் உருவாக்கப்பட்டதே.
இந்தியா இன்றும் ஜனநாயக நாடாக திகழ்வதற்கான அடிப்படைகளையும் உருவாக்கியவர் நேருவே. ஜனநாயகத்துக்கான அடிப்படை மனநிலைகளை அவர் தொடர்ச்சியாக முன்வைத்தார். அவரும் அம்பேத்காரும் உருவாக்கிய அரசியல் சட்டம் ஜனநாயகப் பாதுகாப்பு நிறுவனங்களுக்கு சட்டபூர்வமான பாதுகாப்பளித்தது. சுதந்திர இந்தியாவில் அவற்றின் பங்களிப்பு மிகவும் முக்கியமான ஒன்றாகும்.
ஆனால் எதிர்விளைவுகள் பல நேருவின் கலப்புப் பொருளாதாரத்தால் உருவாயின. இந்திய இயற்கைச்செல்வம் நேருவின் காலத்திலேயே மாபெரும் கட்டுமானத்திட்டங்களால் பெருமளவு அழிக்கப்பட்டுவிட்டது. அதன் விளைவுகளை இந்தியா இன்று அனுபவிக்கிறது. கட்டுப்படுத்தப்பட்ட தொழில்துறை நெடுங்காலம் இயல்பான வளர்ச்சி இல்லாமல் தேங்கி நின்றது. விளைவாக பதுக்கல் ,கள்ளவணிகம் , முற்றுரிமை வணிகம் போன்றவை உருவாகி இந்தியப்பொருளாதாரத்தை மேலும் தேங்கச்செய்தன.
அனைத்தையும்விட முக்கியமாக, இந்தியாவில் சுதந்திரத்துக்குப் பின் உருவான அதிகாரிகள்வர்க்கம் இந்நாட்டின் மாபெரும் சாபக்கேடாக இன்றும் நீடிக்கிறது. ஒருபக்கம் அவர்களுக்கு சோஷலிசபாணியில் முற்றதிகாரங்கள் அளிக்கப்பட்டன. மறுபக்கம் அவர்கள் தாராளவாத அரசியலமைப்பில் அதன் சட்டங்களால் பாதுகாக்கப்பட்டார்கள். அதாவது எதையும் செய்யலாமென்ற அதிகாரமும் எதிலிருந்தும் தப்பிவிடலாம் என்ற சுதந்திரமும் அவர்களுக்கு அளிக்கப்பட்டது. அவர்கள் மேலிருந்துகொண்டு அடிமட்டம் வரை இந்தியநிர்வாகத்தை முழுமையாகச் சீரழித்து ஊழல்மயமாக்கினார்கள். இன்று இந்தியா சந்திக்கும் மாபெரும் சவாலே இந்தக் கும்பலை எப்படி அகற்றுவது என்பதுதான்.
இந்தவிஷயத்தில் நேருவை திட்டவட்டமாக எச்சரித்தவர் ராஜகோபாலாச்சாரியார். ராஜாஜி தேர்ந்த நிர்வாகி என்று பெயரெடுத்திருந்தும்கூட அதிகாரிகளைக் கட்டுப்படுத்துவதற்காக வாதிட்டார். மைய அதிகாரத்தால் கட்டுப்படுத்தப்படாத சுதந்திரச் சந்தையே அதிகாரிகளின் ஆதிக்கத்தை தடுக்கும் என்று சொன்னார். அதாவது உண்மையான தாராளவாதத்துக்காக கோரினார். அக்கோரிக்கை முற்றாக உதாசீனம் செய்யப்பட்டது.
ஆக, காந்தியின் மறைவுக்குப் பின்னர் இந்தியாவில் உருவானது காந்தி கனவு கண்ட தேசியம் அல்ல. இந்த அரசமைப்பின் வெற்றிகளுக்கும் தோல்விக்கும் நேருவும் அம்பேத்காரும் மகாலானோபிஸ¤ம் தான் காரணமானவர்கள். இன்றைய இந்தியா சரியான பொருளில் காந்தி தேசம் அல்ல. 1951ல் இந்திய அரசியல்நிர்ணயசபை அரசியல் சட்ட முன்வரைவை சமர்ப்பித்தபோது அதில் இருந்த காந்தியவாதிகள் ஆழமான அதிருப்தியை அடைந்தார்கள். மகாவீர் தியாகி போன்ற உறுதியான காந்தியவாதிகள் அது காந்தியத்துக்கு கட்டப்பட்ட சமாதி என்றே சொனனர்கள்.
ஆனால் அந்த போக்கு காந்தி இருக்கும்போதே ஆரம்பித்துவிட்டது. 1947ல் இந்திய தேசியக்கொடி வடிவமைக்கப்பட்டபோது முன்னர் இருந்த இந்திய தேசியக்கொடியில் இருந்த கைராட்டை நீக்கம்செய்யப்பட்டு அசோகச் சக்கரமாக ஆக்கப்பட்டது. அது அம்பேத்காரின் விருப்பம் என்று சொல்லப்படுகிறது. ராட்டை நீக்கம்செய்யப்பட்டது காந்தியைப் புண்படுத்தியது. அது இல்லாத கொடியை தன்னால் இந்தியதேசியக்கொடியாக ஏற்கமுடியாது என்றார் அவர். ஆனால் ராட்டையின் சக்கரம்தான் அந்த கொடியில் இருக்கிறது என்று அவரிடம் சாக்குபோக்குதான் சொன்னார்கள்.
இந்திய அரசியல் நிர்ணய சபையில் கிராமசுயராஜ்யம் குறித்த கோரிக்கை எழுந்ததுமே அம்பேத்கார் அதை தீவிரமாக நிராகரித்தார். காந்தியின் கிராமசுயராஜ்யம் என்பது தன்னிறைவு கொண்ட ஒரு நவீன அரசின்மைச் சமூகத்தின் அடிப்படை அலகாக அமையும் கிராமம். ஆனால் அம்பேத்கார் அதை பழைய நிலப்பிரபுத்துவ சமூக அமைப்பின் அடிப்படை அலகாக அமையும் கிராமம் என்று எடுத்துக்கொண்டார். மூடநம்பிக்கையும் சாதிவெறியும் பழமைவாதமும் கலந்து தேங்கிநாறும் ஓர் அமைப்பு என அம்பேத்கார் கிராமங்களை எண்ணினார். அவற்றை மையப்படுத்தப்பட்ட உற்பத்திமுறை மூலம் நவீனத்தொழில்நுட்பம் மூலம் உடைத்து வீசவேண்டும் என்று அறைகூவினார். அதுவே நேருவின் கருத்தும். அவர்கள் உருவாக்கிய அரசே இங்கே இன்றும் நீடிக்கிறது.
ஆனால் இந்த தேசத்தின் முகப்படையாளமாக காந்தி இன்றும் நீடிக்கிறார். ஆகவே சாமானியர்கள் இன்றுள்ள இந்திய தேசியத்தின் சிற்பி என்று காந்தியையே எண்ணுகிறார்கள். சாதாரண விவாதங்களில் இன்றுள்ள தேசக்கட்டுமானமும் அரசியல் சூழலும் ‘காந்தி வாங்கிக்கொடுத்த சுதந்திரம்’ என்று பேசபப்டுகிறது. இந்த தேசத்தின் எல்லா சரிவுகளுக்கும், குறைகளுக்கும் அவரே காரணமாக காட்டப்படுகிறார்.
இந்திய தேசியத்தையும் காந்தியையும் வேறுபடுத்திப் பார்ப்பது ஒருவகையில் சாத்தியமில்லைதான். ஆனால் காந்தி கண்ட இந்தியா இதுவல்ல. காந்தியின் இந்தியா அடித்தள மக்களில் இருந்து , நிர்வாகத்தின் கீழ்நுனியில் இருந்து மேலே செல்வதாகும். இன்றைய இந்தியா டெல்லியில் இருந்து கீழே இறங்கி வருகிறது. இந்த தலைகீழ் வேறுபாடு மிகமிக முக்கியமானது.
காந்தி சுதந்திரத்திற்குப் பின் காங்கிரஸ் அடித்தளக் கட்டுமானப் பணிகளில் ஈடுபடும் ஓர் அமைப்பாக தன்னை மாற்றிக்கொள்ள வேண்டும் என்றும் அரசியல்கட்சியாகச் செயலாற்றக்கூடாது என்றும் சொன்னார். இதை அவர் ‘ஒரு பேச்சுக்காகச்’ சொல்லவில்லை என்பதை வரலாற்றைப் பார்த்தால் தெரிந்துகொள்ளலாம். 1919ல் இந்திய அரசாங்க சட்டம் மூலம் இந்தியர்கள் ஆட்சியில் பங்கெடுக்கும் முறை பரிந்துரைக்கப்பட்டபோது காந்தி அதற்கு எதிராக கிராமநிர்மாண திட்டங்களுக்கு காங்கிரஸை திருப்பினார். அதேபோல 1932ல் வகுப்புவாரி அறிவிக்கைக்குப் பின் தேர்தலரசியல் முன்னேழுந்தபோது அவர் காங்கிரஸை ஹரிஜன இயக்கம் நோக்கி கொண்டுசென்றார்.
காந்தி உருவாக்க எண்ணிய இந்தியாவை தொழில்நுட்பத்துக்கு எதிரானதும் பெருமூலதனக்குவிப்புக்கு எதிரானதும் தனிமனிதர்களின் அகச்சான்றை நம்பி அமைக்கப்பட்டதுமான ஓர் பன்மைச்சமூகம் என்று சொல்லலாம். அதாவது காந்தியின் தேசிய உருவகம் என்பது வருங்காலம் சார்ந்து உருவாக்கப்பட்டது. அதன் இலட்சிய சமூகம் எதிர்காலத்தில்தான் இருந்தது. அந்த இலட்சிய சமூகத்துக்குத்தான் காந்தி ராமராஜ்யம் என்று பெயரிட்டார்.
அந்தப்பெயரை அவர் தன் வைணவ பக்தி மரபில் இருந்து எடுத்துக்கொண்டார். அது அவரது இலட்சியக்கனவின் பெயர் மட்டுமே. மற்றபடி ராமர் காலத்து சமூக அமைப்பை மீண்டும் கொண்டுவரவேண்டும் என்று அவர் சொல்லவில்லை. அச்சமூக அமைப்பு எப்படி இருக்கும் என்றும் அவர் அறிந்திருக்கவில்லை. அவரது சமூக உருவகம் எந்த தொல்பழங்காலத்தையும் நோக்கி ஏங்குவதாக அமையவில்லை. அது மேலைநாட்டு அறிவுச்சூழலில் பிறந்த அரசின்மைவாதத்தின் அரிய கனிகளில் ஒன்று.
[மேலும்]