நீர்க்குமிழிகள்

அன்புள்ள திரு ஜெயமோகன் அவர்களுக்கு,

வணக்கம்.

‘நீர்க்குமிழிகளின் வெளி‘ சிறந்த கட்டுரை. ரசித்துப் படித்தேன்.

நுகர்வோர் தேவைதான் தேவையை நிரப்புவோரின் போக்கை நிர்ணயிக்கிறது என்பது பொருளாதாரப் பாடம். டிமாண்டை பொருத்து சப்ளை அமைகிறது. பொருளாதார வளர்ச்சி நுகர்வோர் கூட்டத்தை உருவாக்கியுள்ளது. இந்தக்கூட்டம் உடனே கேளிக்கையை நாடுகிறது. பீர் பாட்டிலைத் திறந்தவுடன் நுரை தள்ளுவதைப் போல. நுரை விற்பவர்கள் பலர் தோன்றிவிட்டனர். காலப்போக்கில் நுரை அடங்கி விடும் என்ற நம்பிக்கை இருக்கிறது.

ஆனால் சிந்தனையாளர்கள் செய்யக்கூடியதென்ன? தேனில் குழைத்து மருந்தைக்கொடுக்க முடியுமா? ராமகிருஷ்ண பரமஹம்சர் கதைகள் மூலம் பெரும் கருத்துக்களை சொன்னார். இளையராஜா கர்நாடக சங்கீத இசையின் சாரத்தையும், மேற்கத்திய இசையின் கம்பீரத்தையும், நாட்டுப்பாடல்களின் எளிமையில் இணைத்து ஒரு சராசரி சினிமா ரசிகனின் இசை ஆர்வ வட்டத்தின் ஆரத்தை நீட்டியிருக்கிறார். மைக்கேல் சாண்டெல், டேனியல் டென்னட் போன்றவர்கள் தத்துவக் கோட்பாடுகள் சராசரி மாணவனை சென்றடையும் வகையில் நூல் எழுதி, வகுப்புகள் நடத்துகிறார்கள்.

சிந்தனையாளர்கள் சமூகத்தின் விளிம்புகளில் இருக்கலாம். ஆனால் அவர்களுடைய சிந்தனைகளின் சாரம் மைய நீரோட்டத்தில் சேர்ந்துவிட்டால் அந்த எச்சத்தால் தக்கார் ஆகி விடுவர்.

சுற்றுச்சூழலுக்காகப் போராடுபவர்கள் பிரதமராக வாய்ப்பில்லை. ஆனால் இப்போது ஆட்சிக்கு வரும் கட்சிகள் சுற்றுச்சூழலை தங்களுடைய கொள்கை அறிவிப்பிலும் செயல்பாட்டிலும் கண்டிப்பாக சேர்க்க வேண்டும் என்ற நிலை வந்திருப்பதே சுற்றுச்சூழல் ஆர்வலர்களுடைய உழைப்புக்குக் கிடைத்த வெற்றி.

இதுவும் கடந்து செல்லும். பொது வாழ்வில் சிந்தனையாளர்கள் போற்றப்படும் நாள் வரும்.

நன்றி.

– கே ஆர் வைகுண்டம்
மதுரை

முந்தைய கட்டுரைஏன் தமிழ்ச்சொற்கள்?
அடுத்த கட்டுரை‘வெண்முரசு’ – நூல் இரண்டு – ‘மழைப்பாடல்’ – 24