தேவசகாயம் பிள்ளை

அன்புள்ள அய்யா

மறை சாட்சி தேவ சகாயம் பிள்ளையின் வாழ்க்கை வரலாற்றை தங்களின் பார்வையில்,தங்களின் வரிகளில் தெரிந்து கொள்ள ஆவலாய் உள்ளேன்.

தயவு செய்து எனக்காக அவரின் வாழ்க்கை வரலாற்று கட்டுரை எழுதுமாறு வேண்டுகிறேன்.

நன்றி.

ப கோபால கிருஷ்ணன்

 

அன்புள்ள கோபாலகிருஷ்ணன்,

அனறைய திருவிதாங்கூர் அரசு இரண்டு அதிகாரமையங்கள் கொண்டிருந்தது. மார்த்தாண்டவர்மா மகாராஜா அரசுப்பொறுப்புக்கு வர பேருதவி புரிந்தவரும் படைத்தலைவரும் அமைச்சருமான ராமய்யன் தளவாய் என்னும் சோழிய பிராமணர் தலைமையில் ஒரு தரப்பு. மார்த்தாண்ட வர்மாவின் நண்பரும் , தலைமைப் படைதளபதியுமான பெனடிக்ட் டி லென்னாய் தலைமையில் இன்னொரு தரப்பு. இருவருமே அரசருக்கு மிக நெருக்கமானவர்கள். k

டி லென்னாய் கத்தோலிக்கர். அவரது காலகட்டத்தில் திருவிதாங்கூரில் மிகபெப்ரிய அளவில் கிறித்தவ மதமாற்றம் நிகழ்ந்தது.இங்குள்ள முக்கியமான அனைத்து கத்தோலிக்க ஆலயங்களும் திருவிதாங்கூர் அரசால் அன்பளிப்பாக அளிக்கப்பட்ட நிலத்தில் கட்டப்பட்டவை. கத்தோலிக்கர்கள் அவரால் மிகப்பெரிய அளவில் பேணப்பட்டனர். பின்னர் ஆங்கிலேயர் திருவிதாங்கூர் அரசை கட்டுப்படுத்த ஆரம்பித்த காலம் வரை திருவிதாங்கூரில் அரசிலும் ஆட்சியிலும் கத்தோலிக்கர்களின் செல்வாக்கு நீடித்தது

ராமய்யனுக்கும் டிலென்னாயுக்குமான பூசல் அவர்கள் இருவரின் இறுதிக்காலம் வரை நீடித்தது. டிலென்னாய் பெரும்பாலான போர்களில் திருவிதாங்கூரை வழிநடத்தியவர். திருவிதாங்கூர் ராணுவம் அவரது கட்டுப்பாட்டில் இருந்தது. ராமய்யன் ஆலயநிர்வாகத்தைக் கையில் வைத்திருந்த பிராமணர்களுக்கும் நிலவுடைமையாளர்களான நாயர்களுக்கும் ப் பிரியமானவராக இருந்தார். ஆகவெ இருதரப்பும் சற்றும் சளைக்கவில்லை

ராமய்யன் தளவாய் சற்று முன்னதாகவே உயிர்துறந்தார். ஆனல் அவரை மையம்கொண்டு உருவான சோழிய பிராமணர்-நாயர் கூட்டு தொடர்ந்து திருவிதாங்கூரில் வலிமையான அதிகார சக்தியாகவே இருந்து மன்னரின் மரணத்துக்குப்பின்னரும் நீடித்தது. அக்கூட்டு உடைந்ததன் விளைவாக அவர்கள் இரு சாராருக்கும் இடையே நடந்த போர்தான் தளவாய் வேலுத்தம்பியின் காலத்தைய அரசியல்.

திருவிதாங்கூரின் இக்கால அரசியல் வரலாற்றை ராமய்யந் டி லென்னாய் என்னும் இருமுனைப்போரை பின்புலமாகக் கொண்டு புரிந்துகொள்வதே வரலாற்றுணர்வுடன் செய்யவேண்டியது.

டி லென்னாய் குளச்சல் போரில் மார்த்தாண்டவர்மாவிடம் சரணடைகிறார். அருகே ராமய்யன் தளவாய் நிற்கிறார். இதன்பின் டி லென்னாய் மன்னரின் நெருக்கமான நண்பரானார். பத்மநாபபுரம் ஓவியம்

தேவசகாயம்பிள்ளை என்னுடைய தாயின் சொந்த ஊரான நட்டாலத்தைச் சேர்ந்தவர். புகழ்பெற்ற நாயர்குடும்பத்தில் 1712ல் பிறந்தவர். இயற்பெயர் நீலகண்டபிள்ளை. அன்றைய திருவிதாங்கூர் அரசின் வரிவசூல் பொறுப்பில் இருந்தார். ராமய்யன் தளவாயை மையமாகக் கொண்ட அதிகாரக்குழுவின் முக்கியமான உறுப்பினர்.

டி லென்னாயின் தொடர்பாலும் சில பாதிரிமார்களுடன் கொண்ட உறவாலும் கிறித்தவத்தின் கொள்கைகளை ஏற்று நீலகண்டபிள்ளை மதம் மாறினார்.அன்றைய கத்தோலிக்க மையமான நெல்லை மாவட்டம், வடக்கன் குளத்தில் பங்குத் தந்தை பரஞ்சோதி நாதர் எனப்படும் பாப் தீஸ்க் புட்டாரி அவரை லாசரஸ் ஆக மாற்றி ஞானஸ்நானம் செய்து வைத்தார். லாசரஸ் தமிழில் தேவசகாயம். பிள்ளையின் மனைவி பெயர் த்ரேசா என்று மாறியது. நீலகண்டபிள்ளை ம்தம் மாறிய நாள் மேமாதம் 17, 1745.

இது ராமய்யனின் அதிகார மையத்துக்கு விடப்பட்ட அறைகூவலாகவே கொள்ளப்பட்டது.தேவசகாயம்பிள்ளை மீது பலவ்கையான குற்றச்சாட்டுகள் பரப்பப்பட்டன. பலமுறை ஊழல், மதம்சார்ந்த பாரபட்சம் முதலிய குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன. அவருக்கும் பிராமணர்களுக்கும் பலமுறை நேருக்குநேஎர் விவாதங்களும் பூசல்களும் நிகழ்ந்தன.

1749 பெப்ரவரி 23ல் தேவசகாயம் பிள்ளை கைது செய்யப்பட்டார். உதயகிரிக்கோட்டையில் விசாரணை நடந்தது. அவர்மீது கிறித்தவர்களுக்குச் சலுகை காட்டினார் என்றும் , வனச்செல்வத்தில் ஊழல் செய்தார் என்றும், போர்ச்சுக்கல் கப்பல்காரர்களுடன் ரகசிய உறவு கொண்டிருந்தார் என்றும் குற்றம்சாட்டப்பட்டது. விசாரணைக்குப்பின் இன்று ஆரல்வாய்மொழி அருகே காற்றாடிமலை என்று அழைக்கப்படும் மலைப்பகுதிக்குக் கொண்டுசெல்லப்பட்டு 1752 ஆம் ஆண்டு ஜூன் 14ல் சுட்டுக் கொல்லப்பட்டார்.

இது டிலென்னாய் மீதான ராமய்யனின் வெற்றி. கடைசிக்காலத்தில் டிலென்னாயின் அதிகாரம் படிப்படியாக குறைவடைவதை நாம் அக்காலவரலாற்றில் காணலாம். டி லென்னாயின் மரணத்துக்குப்பின் அவரது குடும்பம் திருவிதாங்கூரை துறந்து பாண்டிச்சேரிக்குச் சென்றுவிட்டது என்பது அதை உறுதிசெய்கிறது. டிலென்னாயின் அதிகாரச்சரிவின் தொடக்கமாக அமைந்தது அவரது நெருக்கமான நண்பராகிய தேவசகாயம் பிள்ளையின் கொலை. டி லென்னாயும் அன்று மன்னருக்கு நெருக்கமாக இருந்த பிற கத்தோலிக்கர்களும் அதைத் தடுக்கமுடியவில்லை. அவர்களின் விண்ணப்பங்கள் வீணாயின.

இந்த வரலாற்றுக்கு இரு பக்கங்கள் உண்டு. தேவசகாயம்பிள்ளை போர்சுக்கல் ஒற்றர்,வரிவசூலில் ஊழல் செய்தவர், அரசருக்கு எதிராக சதிசெய்தவர் என திருவிதாங்கூரில் அரசத்தரப்பு சொல்லிவந்தது. சமீபத்தில் அவருக்கு புனிதர் பட்டம் அளிக்கப்படும் முன்னெடுப்புகள் தொடங்கியதும் அவர் நாயர் சாதியினர் என்பதனால் பிற சாதியை சேர்ந்த கத்தோலிக்கர்களும் சீர்திருத்தக் கிறித்தவச் சபையினரும் கூட அந்த குற்றச்சாட்டுகளை பொதுவெளியில் முன்வைக்கத் தொடங்கினர். இன்றும் அவற்றை யாராவது சொல்லிக்கொண்டுதான் இருக்கிறார்கள்.

இன்னொருபக்கம் கத்தோலிக்கர்கள் தேவசகாயம்பிள்ளையை ஒரு புனிதராகக் கட்டமைக்கத் தொடங்கினர். அவரது கதையை அப்படியே வழக்கமான கிறித்தவப்புனிதர்களின் கதைகளின் அதே பாணியில் அமைத்தனர். சாமானியர்களை திகைக்கச்செய்யும் உச்சகட்டச் சித்திரவதைகள் புனிதர்களின் கதைகளில் எப்போதும் உண்டு. ஆகவே அவரை மன்னர் மாதக்கணக்கில் சாட்டையாலடித்தும், காயங்களில் மிளகு அரைத்துப்பூசியும், குடிநீர் கொடுக்காமல் வதைத்தும் செய்த நூற்றுக்கணக்கான சித்திரவதைகளை விரிவாகவே உருவாக்கினர். அவரை நாடெங்கும் கொண்டுசென்று முச்சந்திகளில் வைத்து வதைத்தார்கள் என்றெல்லாம் கதைகள் சொல்லப்பட்டன. அவை தேவாலயங்களில் நாடகமாகப் போடப்பட்டன.

தேவசகாயம் பிள்ளை செய்த அற்புதங்கள் கட்டமைக்கப்பட்டன. உதாரணமாக உதயகிரி அருகே அவர் தன் கால்முட்டால் ஒரு கரும்பாறையை முட்டி குழி செய்து அதில் அற்புத நீரூற்றை உருவாக்கினார், அதன் வழியாக பிதா அவருக்கு குடிநீரை அளித்தார் என்னும் தொன்மம் உள்ளது. முட்டிடிச்சான் பாறை என அது மிகப்பெரிய புனிதத் தலமாக இன்றுள்ளது. அவர் ஒரு வேப்ப மரத்தில் ஏழுமாதங்கள் கட்டப்பட்டிருந்தா என்றும் அந்த வேம்பு பூத்தது என்றும் சொல்லப்படுகிறது. இப்படி ஒரு பன்னிரண்டு புராணக்கதைகள் உள்ளன.

தேவசகாயம்பிள்ளை ஊழல்வாதியாக அரசத்துரோகியாக இருந்திருக்க வாய்ப்பில்லை. அவர் உண்மையான மனமாற்றம் அடைந்து மதம் மாறினார், அதில் உறுதியாகவும் இருந்தார். அதற்காக உயிர்விட்டார். அவ்வகையில் நோக்கினால் அவர் ஒரு புனிதரே.

அதேசமயம் கத்தோலிக்கர் சித்தரித்துள்ளபடி அவரை மிகக் கொடூரமாக வதைப்பதெல்லாம் அன்று சாத்தியமல்ல. அன்றும் திருவிதாங்கூரின் படைத்தலைவர் கத்தோலிக்கரான டி லென்னாய்தான்.பீரங்கிப்படை கத்தோலிக்கவீரர்களால் ஆனது. கத்தோலிக்க பாதிரியார்களும் வணிகர்களும் அரசுடன் மிகநெருக்கமானவர்களாகவே இருந்தனர். தேவசகாயம்பிள்ளை மரணத்துக்குப்பின்னரும்கூட குமரிமாவட்ட கத்தோலிக்க பாதிரிமார்கள் மார்த்தாண்டவர்மாவுக்கு நெருக்கமானவர்களாக இருந்ததை அரண்மனை ஆவணங்கள் தெளிவாகவே காட்டுகின்றன.அன்றைய அதிகாரப்போட்டியில் அவர் பலியானார் என்பதே உண்மை.

திருவிதாங்கூரில் மட்டுமல்ல அன்று இந்தியாவெங்கும் சித்திரவதையும் கொலையும் சாதாரணமான தண்டனைகள்.திருவிதாங்க்கூரில் முக்கியமான நாயர் தளபதிகள் வதைத்துக் கொல்லப்பட்ட செய்திகள் மிகச்சாதாரணமாக உள்ளன. பிற்காலத்தில்கூட தளவாய் வேலுத்தம்பி பலரை யானைகாலடியில் போட்டு கொலைசெய்திருக்கிறார்.

ஊழல் என்பது கொலைக்குரிய குற்றமாக கருதப்பட்டது. உண்மையில் கத்தோலிக்கர்கள் தேவாலயம் கட்ட தேவசகாயம்பிள்ளை மலையில் இருந்து தேக்குமரங்களை வெட்டிக்கொண்டு சென்று கொடுத்து உதவினார். அவரது மதநம்பிக்கை அதை அனுமதித்தது. அதை உரிய ஆதாரங்களுடன் பிடித்து பெரும் ஊழலாகச் சித்தரித்து அவரை கொலைசெய்தது மறு தரப்பு. இதுவே வரலாறு. இது அக்கால வரலாற்றின் ஒரு பகுதி அவ்வளவுதான்

இன்று கத்தோலிக்க புராணங்கள் தேவசகாயம்பிள்ளையை அவர்களின் வழக்கமான தொன்மக்கட்டமைப்புக்குள் கொண்டு சென்றுவிட்டனர். இது க்னாயி தாமஸை புனித தாமஸாக கட்டமைக்கும் அவர்களின் தொன்ம உருவாக்க முயற்சிக்குச் சமானமானது.

ஆனால் இது பொதுவாக மதங் வரலாறுகளின் இயல்பு. சமணர்கள் அப்பரை கல்லைக்கட்டி கடலில் விட்டதும் சுண்ணாம்புக்காளவாயில் போட்டதும் இதேபோன்ற கதைகளே. முறையான ஆவணங்கள் கொண்ட சமகால வரலாறே இப்படி தொன்மமாக மாறி உண்மை மறைந்திருக்கும்போது அப்பர் சம்பந்தர் கதைகளைப்பற்றியெல்லாம் சொல்லவே தேவையில்லை. தொன்மங்கள் மற்றும் ஓரப்பார்வைகளில் இருந்து வரலாற்றை மீட்டு அறிவதற்கு சமநிலையும் முழுமைநோக்கும் தேவை.

உதாரணமாக கத்தோலிக்க வரலாறுகளில் ராமய்யன் சாதிவெறி பிடித்த ஒருவகை காட்டுமிராண்டியாக சித்தரிக்கப்படுகிறார். ஆனால் திருவிதாங்கூரில் உள்ள அனைத்து ஆலயங்களில் இருந்து ம் நம்பூதிரிகளை துரத்தி அவற்றை அரசுக்குக் கீழே கொண்டுவந்தவர் அவர். திருவிதாங்கூரின் சந்தைகளையும் சாலைகளையும் ஒழுங்குபடுத்தி வறுமையை ஒழித்தவர். பல போர்களில் முன்னின்று போராடி திருவிதாங்கூரை உருவாக்கியவர்.தன்னலமேயற்றவர். திருமணம்கூட செய்துகொள்ளாமல் மிகமிக எளிமையாக குடிலில் வாழ்ந்து மறைந்தவர். அதேசமயம் அரசின் எதிரிகளை கூண்டோடு ஒழித்தவர். அவர்கள் பிராமணர்கள் என்றாலும் கருணை காட்டலாகாது என வாதிட்டவர். மார்த்தாண்டவர்மா மீது தனிப்பட்ட பெரும்பாசம் கொண்டவர்.

அதேபோல தேவசகாயம் பிள்ளையை சொல்லொணாக் கொடுமைகள் புரிந்தவர் என்று சித்தரிக்கப்படும் மார்த்தாண்டவர்மா கொடுத்த நிலம் இல்லையேல் திருவிதாங்கூரின் கத்தோலிக்க தேவாலயங்களில் பாதிப்பங்கு இருந்திருக்காது. பல வழக்குகளில் மார்த்தாண்டவர்மா கொடுத்த நிலத்துக்கான ஆவணங்களையே கத்தோலிக்கர் இன்றும் காட்டுகிறார்கள்.

ஆயுதங்களுக்காகவும் கடல்வணிகத்துக்காகவும் கத்தோலிக்கர்களை நம்பியிருந்த மார்த்தாண்டவர்மா அவர்களை பேணி ஆதரித்தார் என்பதே வரலாறு. அவருக்கு ஆலோசகர்களாகவும் மருத்துவர்களாகவும் கிறித்தவப்பாதிரியார்கள் இருந்திருக்கின்றன. அவரது ஆதரவின்றி அவர்கள் இங்கே பரவியிருக்கவும் இயலாது.ஆனால் மதவரலாறு எப்போதும் மறுதரப்பை பண்படாதவர்களாகவே காட்டும். அவற்றைத்தாண்டித்தான் சமநிலையுள்ள வரலாறு எழுதப்படவேண்டும்

தேவ சகாயம் பிள்ளையின் வரலாறு 1858ல் ‘வேத சாட்சியான தேவ சகாயம் பிள்ளை சரித்திரம் ‘ எனும் நூலாக கத்தோலிக்கர்களால் எழுதப்பட்டது. இதை அ.கா.பெருமாள் கண்டெடுத்து பதிப்பித்துள்ளார். ஆனால் இன்றும் கிடைக்கும் திருவிதாங்கூர் ஆவணங்களின் அடிப்படையில் சரியான வரலாறு இன்னும் எழுதப்படவில்லை

ஜெ


வேத சாட்சி தேவ சகாயம் பிள்ளை வரலாறு – அ.கா.பெருமாள் , யுனைட்டெட் ரைட்டர்ஸ் வெளியீடு, டிசம்பர் 2004

முந்தைய கட்டுரை‘வெண்முரசு’ – நூல் இரண்டு – ‘மழைப்பாடல்’ – 30
அடுத்த கட்டுரை‘வெண்முரசு’ – நூல் இரண்டு – ‘மழைப்பாடல்’ – 31