பகுதி ஒன்பது : மொழியாச்சொல்
[ 4 ]
பிருதை அறைக்குள் நுழைந்தபோது பாண்டு மஞ்சத்தில் படுத்திருப்பதைத்தான் பார்த்தாள். கதவை பின்னிருந்து அனகை மெல்ல இழுத்துச்சாத்தியபோது எழுந்த ஓசையில் அவன் தலையைத் தூக்கிப்பார்த்தான். உடனே நான்குநாகங்கள் நெளிவதுபோல அவனுடலில் கைகால்கள் இழுத்துக்கொண்டதைக் கண்டு குந்தி அருகே சென்றாள். அவன் கடைவாயில் வாய்நீர் நுரைத்து வழிய கண்கள் மேலேறி சிப்பிவெண்மை தெரிய தொண்டையில் பசுநரம்பு புடைத்து அசைந்தது. அவனுக்கு நரம்புப்பின்னல் நோய் என பிருதை அறிந்திருந்தாள். வெளியே சென்று வைத்தியர்களை அழைப்பதா என ஒரு கணம் சிந்தனைசெய்தபின் வேண்டாம் என முடிவெடுத்து அருகே பீடத்தில் அமர்ந்துகொண்டாள்.
நீரில் அமிழ்பவனைப்போல பாண்டு அசைவின்மை கொண்டு மஞ்சத்தில் படிந்தான். அவள் அவனையே நோக்கிக்கொண்டிருந்தாள். இரு வெண்புருவங்களுக்குக் கீழே பால்கொப்புளங்கள்போல இமைகள் அதிர்ந்துகொண்டிருந்தன. கண்ணீர் இருபக்கமும் வழிந்து காதுகளில் சொட்டிக்கொண்டிருந்தது. சின்னஞ்சிறு செவ்வுதடுகள். பால்நுரைத்துண்ட கைக்குழந்தையின் மேலுதடுபோன்ற மெல்லிய வெண்மயிர்பரவல்.
அவள் அகம் திகைத்து நெஞ்சில் கைவைத்து எழுந்துவிட்டாள். சாளரம் வழியாக வெளியே அசைந்துகொண்டிருந்த மரத்தின் இலைகளைப் பார்த்தாள். ஆனால் பொறிக்கப்பட்ட ஓவியம்போல அவ்வுதடுகளே அவள் கண்ணுக்குள் நின்றன. திரும்பி அவற்றைப் பார்த்தாள். நெஞ்சின் அதிர்வை உணர்ந்தபடி பார்த்துக்கொண்டே நின்றாள். பால்நுரை. அதை முதலில் கண்டு அடைந்த பெரும் மனக்கிளர்ச்சி. அதை மீண்டும் அடைந்து கண்கள் கசிய தொண்டை அடைக்க அவள் கால்தளர்ந்து பீடத்தில் அமர்ந்துவிட்டாள்.
அவன் விழியிதழ்கள் அதிர்ந்து பின் பிரிந்தன. நீர்படிந்த வெண்பீலிகள் கொண்ட செவ்விழிகள் முயல்களின் கண்களைப் போலிருந்தன. அவளை அடையாளம் கண்டதும் அவன் திகைத்து ஒரு கையை ஊன்றி எழமுயன்றான். அவள் புன்னகையுடன் “வேண்டாம்” என்றாள். “நான் இங்கே அமர்ந்திருக்கிறேன். ஓய்வெடுங்கள்” என்று மெல்லியகுரலில் சொன்னாள். அக்குரலிலும் புன்னகையிலும் இருந்த தாய்மை அவன் முகத்தில் உடனே எதிரொளித்தது. அவன் கண்கள் கனிந்தன. “எனக்கு மூச்சுத்திணறுகிறது” என்று அவன் சொன்னான்.
தாய்மையை ஏற்று அதற்குள் முழுமையாக ஒடுங்கிக்கொள்வதற்கான பயிற்சியை அவன் முழுமையாகப் பெற்றிருக்கிறான் என்று பிருதை எண்ணிக்கொண்டாள். “சற்றுநேரம் கண்களை மூடிக்கொண்டிருங்கள்… அது ஓர் அதிர்ச்சி மட்டுமே” என்றாள். “என் மருத்துவனை அழைக்கமுடியுமா? அவனுடைய நஸ்யம் என்னை ஆறுதல்படுத்தும்.” குந்தி திடமான குரலில் “அது அகிபீனாவாக இருக்கும். அதை உட்கொள்ளவேண்டாம். அது நரம்புகளை மேலும் வலிவிழக்கவே செய்யும்” என்றாள்.
“நான்…” என அவன் தொடங்கியதும் “வேண்டாம்” என்று பிருதை உறுதியாகச் சொன்னாள். அவன் தலையை ஆட்டியபின் கண்களை மூடிக்கொண்டான். அவள் அவனருகே சென்று குனிந்து “உங்களுடைய நோய் உள்ளத்தில்தான். ஆகவே உடலை எண்ணவேண்டாம். உள்ளத்தை ஒருங்கமையுங்கள்… இங்கே அறைக்குள் என்ன நிகழ்கிறதென்பதை சிந்தையில் விரித்துக்கொண்டே இருங்கள். நரம்புகள் நெகிழ்வதை உணர்வீர்கள்.”
பாண்டு “ஆம்” என்றான். தலையை மெல்ல அசைத்துக்கொண்டு பெருமூச்சு விட்டான். அவனுடைய நெற்றியிலும் கழுத்திலும் நீலநரம்புகள் புடைத்திருந்தன. “நீ இங்கே வருவாய் என்றார்கள். அப்போதே…” என்றான். மஞ்சள்நிறமான பற்களால் சிவந்த உதடுகளைக் கவ்வியபடி “என்னால் தாளமுடியவில்லை” என்றான். இரு கைகளையும் இறுக முட்டிபிடித்து ‘ம்ம் ம்ம்’ என்றான். மெல்ல மெல்ல அமைதிகொண்டான். கண்களைத் திறந்து “என்னால் தாளமுடியவில்லை” என்றான். சிறிய விசும்பல் ஒன்று அவனிடமிருந்து வெளிவந்தது. அவன் உதடுகளைக் கடித்து அடக்கமுயன்றான். மழை அறையும் சாளரங்கள் போல உதடுகள் துடித்தன. பின்பு அவன் விம்மல்களும் மூச்சொலிகளும் கேவல்களுமாக அழத்தொடங்கினான்.
அவன் அழுதுமுடிப்பது வரை அவள் அவனையே நோக்கியபடி பீடத்தில் அமர்ந்திருந்தாள். அவன் நீள்மூச்சுக்களுடன் அழுது அடங்கி கண்மூடியபடி படுத்திருந்தான். இறுகி அதிர்ந்த நரம்புகள் தளர்ந்து அவிழ்ந்து பின் மீண்டும் இயல்பு நிலைக்கு வந்தன. கைகளால் கண்களைத் துடைத்தபின் கண்களைத் திறந்து அவளைப்பார்த்தான். பற்கள் தெரிய சிரித்து “நீ வெறுக்கும் நாடகத்தில் ஓர் அங்கம் முடிந்துவிட்டது” என்றான். “திறனிலியின் துயரம் போல அருவருப்பளிப்பது ஏதுமில்லை… எனக்கும்தான்” என்றான்.
“அது ஆண்களின் மனநிலை” என்றாள் பிருதை. “தன் கையில் மிகமிகத் திறனற்ற ஓர் உயிரை ஏந்தும்போதுதான் பெண்ணின் அகம் கனிவும் முழுமையும் கொள்கிறது.” அவன் அவள் கண்களைச் சந்தித்தான். அவள் அவன் மோவாயைச் சுட்டி “நான் என்ன நினைத்தேன் தெரியுமா?” என்றாள். புன்னகையுடன் “பால்நுரை படிந்த கைக்குழந்தையின் உதடுகள் என” என்றாள். பாண்டு சிரித்துக்கொண்டு “அப்படி அதைக் கடந்துசெல்ல உன்னால் முடிந்தால் நீ நல்லூழ் கொண்டவள்” என்றான்.
“கடந்துசெல்வது அல்ல…” என்றாள் பிருதை. “இத்தருணத்தில் நானறிந்த உண்மை இது.” பாண்டு “நான் நேரடியாகவே கேட்கிறேனே, என் கழுத்தில் நீ ஏன் உன் மணமாலையைப் போட்டாய்? அந்த மாலை அஸ்தினபுரியின் செல்வத்துக்காகவும் படைக்கலன்களுக்காகவும்தானே?” பிருதை அவன் கண்களை நோக்கி “ஆம்” என்றாள். “நான் மார்த்திகாவதியின் இளவரசியாக மட்டுமே என்னை உணர்பவள்.” பாண்டு சற்று கோணலாகச் சிரித்து “உண்மையை நேரடியாகச் சொன்னது மகிழ்வளிக்கிறது” என்றான்.
பிருதை “மகிழ்வளிக்கிறதா?” என கூர்ந்து நோக்கி கேட்டாள். பாண்டு “இல்லை… அதுதான் உண்மை. நீ சொல்வதுதான் உண்மை என்று எனக்குத்தெரியும். வேறென்ன சொல்லியிருந்தாலும் அது என்னை ஏமாற்றுவதென்றும் அறிவேன். ஆயினும் என்னை உனக்குப் பிடித்திருக்கிறதென்று சொல்லவேண்டுமென என் அகம் விரும்பியது.” அவன் உடனே அந்த தற்சிறுமையுணர்வை வென்று சிரித்தான். “சரிதான், அது என் பிழை அல்ல. மனிதர்களை அத்தனை சிறியவர்களாகப் படைத்த பிரம்மனின் பிழை அது.”
பிருதை புன்னகை செய்து “ஆனால் நான் இங்கே உள்ளே நுழைந்து உங்களை நோக்கியபின் உங்களை விரும்புகிறேன்” என்றாள். “என் ஆற்றலின்மையையா?” என்றான் பாண்டு. “அதை என்னால் புரிந்துகொள்ளமுடியவில்லை” என்று பிருதை சொன்னாள். “என்னைப்பற்றி உனக்கு என்ன தெரியும்?” என்று பாண்டு கேட்டான். “நீங்கள் உங்கள் அன்னை வைத்து விளையாடும் ஒரு பளிங்குப்பாவை” என்று பிருதை புன்னகையுடன் சொன்னாள். “அதை உங்கள் அளவில் எதிர்ப்பதற்காக ஓர் அங்கதத்தை சொல்லிலும் பாவனையிலும் வளர்த்துக்கொண்டிருக்கிறீர்கள்.”
சிரித்தபடி “அவ்வளவுதான்… என்னைப்பற்றி இதற்குமேல் ஏதும் சொல்வதற்கில்லை” என்றான் பாண்டு. “ஆகா, எனக்கே அனைத்து எடையும் விலகி இறகுபோல ஆகிவிட்ட உணர்வு ஏற்படுகிறது. இரண்டுவரிகளில் முழுமையாக வகுத்துவிடக்கூடிய ஓரு வாழ்க்கைக்கு நிகராக வேறேது இருக்கமுடியும்?” பிருதையும் சிரித்துக்கொண்டு “இரண்டுவரிக்குமேல் தேவைப்படும் வாழ்க்கை என ஏதும் மண்ணில் உண்டா என்ன?” என்றாள். “உண்டு” என்று பாண்டு சிரித்தான். “உனக்கு இன்னும் ஒரு சொல் தேவைப்படும் என நினைக்கிறேன்” கண்களில் குறும்புடன் “அந்த இரண்டுவரிக்குப்பின் ஆனால் என்ற ஒரு சொல்லையும் சேர்த்துக்கொள்ளலாம்.”
இருவரும் சேர்ந்து சிரித்தார்கள். பாண்டுவின் முக்கியமான இயல்பொன்றை பிருதை உணர்ந்தாள். எந்தத் தடையும் இல்லாமல் பளிங்குமலை உடைந்து சரிவதுபோல சிரிக்க அவனால் முடியும். அச்சிரிப்பை எதிரில் இருப்பவரிடமும் அவனால் உருவாக்க முடியும். அவள் அப்படிச் சிரித்தது சிறுமியாக இருக்கும்போதுதான் என எண்ணிக்கொண்டாள். “நீ ஒரு சூழ்மதியாளர் என்றார்கள். அதனுடனும் ஆனால் சேரும் என்று சற்றுமுன் தெரிந்துகொண்டேன்” என்றபின் அவன் மீண்டும் சிரித்தான்.
“நான் உங்களுக்கு மாலையிட்டபோது என்ன நினைத்தீர்கள்?” என அவள் பேச்சை மாற்றினாள். பாண்டு “நான் சொல்வதைக்கேட்டு நீ வியப்புறமாட்டாய் என அறிவேன்” என்றான். “நீ என் கழுத்தில் மாலையிட்டபோது அது எனக்கு அதிர்ச்சியாக இருக்கவில்லை. அதை நான் எதிர்பார்த்திருந்தேன். உன் காலடிகள் ஒவ்வொருவரையாக தாண்டி வர வர நீ என்னை நோக்கி வந்து என் கழுத்தில் மாலையிடுவதை நான் முழுமையாகவே கற்பனைசெய்துவிட்டிருந்தேன்.”
“ஆம், அதில் வியப்புற ஏதுமில்லை” என்றாள் குந்தி. “ஏன்…? நான் அழகற்றவன், ஆண்மையும் அற்றவன்” என்றான் பாண்டு. “உடலைச்சார்ந்தா உள்ளம் இயங்குகிறது?” என்று பிருதை சொன்னாள். பாண்டு துள்ளி எழுந்து மஞ்சத்தில் கால்மடித்து அமர்ந்துகொண்டான். “முற்றிலும் உண்மை… இந்த நொய்ந்த வெள்ளுடல் நானல்ல. இது எனக்குக் கிடைத்திருக்கிறது. நான் இதுவல்ல. நான் உள்ளே வேறு… வேறு யார்யாரோ…”
“யார்?”என்றாள் பிருதை. “எப்படிச் சொல்வேன்?” என பாண்டு கணநேரம் திகைத்தான். துள்ளி எழுந்து நின்று உளவிரைவால் கைகளை விரித்தான். “நானென்பது ஆறுபேர். ஆறு பாண்டுக்கள். ஒருவன் அளவில்லாத கொடையும் பெருந்தன்மையும் கொண்டவன். எச்சிறுமைக்கும் அப்பால் தலைதூக்கி நிற்கும் ஆண்மகன். அவனாக நான் ஆயிரம் வாழ்க்கையை வாழ்ந்திருக்கிறேன். இன்னொருவன் அறமே உருவானவன். ஒவ்வொன்றிலும் என்றுமுள நெறியைத்தேடி அவ்வண்ணம் வாழ்பவன். அவனாகவும் நான் ஆயிரம் முறை வாழ்ந்திருக்கிறேன்.”
“இன்னும் நால்வர்…” என்றான் பாண்டு. அன்னையிடம் தன் வீரவிளையாட்டுக்களைச் சொல்லும் சிறுவன் போல சற்றே மோவாயைத் தூக்கி திக்கித் திணறிய சொற்களுடன் “மூன்றாமவன் நிகரற்ற உடலாற்றல் கொண்டவன். மரங்களை நாற்றுக்களைப்போலப் பிடுங்குபவன். பாறைகளை வெறும் கைகளால் உடைப்பவன். கட்டற்ற காட்டுமனிதன். சூதும் சூழ்தலும் அறியாதவன். நான்காமவன்…” அவன் முகம் சிவந்தது. பிருதை புன்னகைசெய்தாள்.
“நான்காமவன் இந்திரனுக்கு நிகரான காமம் கொண்டவன். என்றுமிறங்காததது அவன் கொடி. இந்த பாரதவர்ஷமெங்கும் அலைந்து அவன் மகளிரை அடைகிறான். காந்தாரத்தில் காமரூபத்தில் இமயத்தில் தெற்கே பாண்டியத்தில்… பலவகையான பேரழகியர். மஞ்சள்வண்ணத்தவர். செம்பொன்னிறத்தவர். மாந்தளிர் நிறத்தவர். நாகப்பழத்தின் நிறத்தவர்… அவனுக்கு காமம் நிறைவடைவதேயில்லை.”
பிருதை வாய்பொத்திச் சிரித்தபோது அவள் முகமும் கழுத்தும் சிவந்தன. “என்னைப்பற்றி என்ன நினைக்கிறாய்?” என்றான் பாண்டு. “இயல்பான கனவுகள்தானே என்றுதான்” என்றாள் பிருதை. “ஆம், அவை இயல்பானவை. ஆனால் அவையும் எனக்குப் போதவில்லை. பெரும்புரவியறிஞனாக ஆகவேண்டும். மண்ணிலுள்ள அனைத்துப்புரவிகளையும் அறிந்து கொள்ளவேண்டும் என்று எண்ணுவேன். முக்காலத்தையும் அறியும் நூலறிஞனாக ஆகி பாரதவர்ஷத்தின் ஒவ்வொருவருக்கும் சென்றதும் வருவதும் பார்த்துக்குறிக்கவேண்டும் என நினைப்பேன்…”
“ஆறுமுகம்” என்று பிருதை சிரித்தாள். “ஆம், என் இறைவடிவம் ஆறுமுகவேலனேதான். அஸ்தினபுரியில் என் அரண்மனைக்குள் எனக்காக சுப்ரமணியனின் சிறிய ஆலயமொன்றை அமைத்திருக்கிறேன்.” பிருதை “சுப்ரமணியனுக்கு தேவியர் இருவர்” என்றாள். “ஆம், அதுவும்தான்” என்றான் பாண்டு. “காட்டுமகள் ஒருத்தி, அரசமகள் ஒருத்தி.” பிருதை சிரித்துக்கொண்டு “இதையெல்லாம் உங்கள் அன்னையிடம் சொல்வீர்களா என்ன?” என்றாள். பாண்டு விழிகளைத் தாழ்த்தி “இல்லை… இவை எனக்குள் மட்டுமே இருப்பவை. நான் இப்போது எப்படி இத்தனை எளிதாக உன்னிடம் சொன்னேன் என்றே தெரியவில்லை” என்றான்.
அவள் “சொல்வதற்காகத்தானே துணைவி?” என்றாள். “சொல்லாவிட்டாலும் நீ எனக்குள் உள்ள அனைத்தையும் அறியத்தான் போகிறாய். உன்னைப்போன்றவர்களை எதிர்கொள்ள ஒரே வழிதான். அப்படியே மண்ணில் குப்புற விழுந்து சரணடைவது… பிருதை, அஸ்தினபுரியில் இருவர்தான் உன்னெதிரே நிற்கமுடியும். பிதாமகர் பீஷ்மர் விண்ணளந்த பெருமானுக்கு முன் நிற்கக்கூடியவர். அவரை நீ ஒருபோதும் முற்றறியவோ முந்திச்செல்லவோ இயலாது. ஆகவே உன் சதுரங்கக் களத்தில் உனக்கு எதிரே அமரக்கூடியவன் என் தம்பி விதுரன் மட்டுமே.”
பிருதை இயல்பாக கூந்தலை ஒதுக்கியபடி “அஸ்தினபுரியின் அரசரே அவர்தான் என்கிறார்கள்” என்றாள். “ஆம், அவன் பாரதவர்ஷத்தையே ஆளும் திறன்கொண்டவன். பார்ப்பதற்கு வியாசரைப்போலவே இருக்கிறான் என்கிறார்கள். ஆகவே பேரரசிக்கும் பிதாமகருக்கும் அவன் மேல் பெரும் பற்று உள்ளது… இங்கே வந்தபின்னர்தான் சுயம்வர மண்டபத்தில் யாதவர்களும் இருப்பதைக் கண்டேன். அப்படியென்றால் விதுரனையும் அமரச்செய்திருக்கலாம்.”
“உங்கள் தமையரின் துணைவி பேரழகி என்றார்கள்” என அப்பேச்சை வெட்டி திருப்பிக்கொண்டு சென்றாள் பிருதை. “ஆம்… பாரதவர்ஷத்தின் பேரழகிகளில் அவளும் ஒருத்தி என்கிறார்கள். வெண்பளிங்கு நிறம் கொண்டவள். அவள் கண்கள் மீன்கொத்தியின் குஞ்சுகள் போல மின்னும் நீலநிறம் கொண்டவை என்கிறார்கள்” என்றான் பாண்டு. ‘விழியிழந்தவருக்கு பேரழகி ஒருத்தி மனைவியாக வருவதில் ஒரு அழகிய நீதி உள்ளதென்று எனக்குப்படுகிறது.”
“என்ன?” என்றாள் பிருதை. அவள் தன்னுள் சொற்களை தெரிவுசெய்யத்தொடங்கினாள். “அழகென்பது பார்க்கப்படுவதற்காக மட்டுமே உள்ளது என்பது எவ்வளவு மடமை. அது தன்னளவில் ஒரு முற்றிருப்பு அல்லவா? நான் ஓவியங்களை வரைந்ததும் என் அன்னை கேட்பாள், அவற்றை மனிதர்கள் பார்க்கவேண்டுமல்லவா என. ஏன் பார்க்கவேண்டும்? பார்ப்பதன் மூலம் ஓவியம் வளர்வதுமில்லை தேய்வதுமில்லை. சுவைகள் மண்ணில் முடிவில்லாது கிடக்கின்றன. கடலின் உப்பை நாக்கு உருவாக்கவில்லை. நாக்கால் அறியப்படாவிட்டாலும் உப்பின் முடிவின்மை அங்குதான் இருக்கும்.”
அவன் நிறுத்திக்கொண்டு “என்ன சொல்கிறேன் என்றே தெரியவில்லை. ஆனால் ஒரு பேரழகு கண்களால் தீண்டப்படவில்லை என்பதில் மகத்தான ஏதோ ஒன்று உள்ளது என்று எனக்குத் தோன்றியது. ஆழ்கடல்களைப்போல. தூய்மையான ஏதோ ஒன்று…” அவன் உளஎழுச்சியுடன் “அப்படித்தான் காந்தாரநாட்டு இளவரசியைப்பற்றி சொல்லிக்கொள்கிறார்கள். தூயவள், மிகமிகத் தூயவள் என்று. அவளுடைய கன்னிமையின் வல்லமையால்தான் அவள் காலடிகள் நகரில் பதிந்த அன்று வானமே பேரருவியெனக் கொட்டியது என்கிறார்கள் சூதர்கள்.”
“நாம் ஒருமுறை மதுவனத்துக்குச் செல்லவேண்டும்” என்று பிருதை சொன்னாள். “இங்கே திருமணத்துக்கு என் தந்தை சூரசேனர் வரவில்லை. நாம் அங்கே சென்று அவரைப் பார்ப்பதே முறை.” பாண்டு அவள் பேச்சை அப்படியே திருப்பிக்கொண்டுசெல்வதை உணர்ந்து சிலகணங்கள் திகைத்தபின் “ஆம், செல்வோமே. அதற்கென்ன?” என்றான். “நான் ஓர் இளவரசி அல்ல. யாதவப்பெண். காடுகளில் ஆநிரை மேய்த்துக்கொண்டிருந்தவள். அதை அங்குசென்றால்தான் நீங்கள் அறியமுடியும்” என்றாள் பிருதை சிரித்தபடி. “நானும் ஆநிரைகள் மேய்ப்பதென்றாலும் செய்கிறேன்” என்று அவன் சொன்னான்.
“எங்கள் நெறிகளும் முறைமைகளும் வேறு” என்று குந்தி சொன்னாள். “ஷத்ரியப்பெண்களைப்போல நாங்கள் அந்தப்புரத்து கூண்டுப்பறவைகளல்ல. ஆண்களின் கைப்பாவைகளுமல்ல.” பாண்டு இடைபுகுந்து “ஆம், அறிவேன். காந்தாரத்திலும் அப்படித்தான் என்றார்கள். காந்தார இளவரசியின் விளையாட்டே புரவியில் பாலைநிலத்தில் நெடுந்தூரப்பயணங்கள் செய்வதுதான் என்றனர்.”
அவனுடைய சொற்களால் எங்கோ சீண்டப்பட்டு பிருதை “நான் சொல்லவருவது ஒன்றுள்ளது” என்றாள். அவன் முகம் எச்சரிக்கை கொள்ள கண்கள் விரிந்தன. அதைக்கண்டபோதுதான் அச்சொற்றொடர் பிழையானது என அவள் அறிந்தாள். அவள் பேச்சை ஏன் யாதவர்களின் குலமுறைக்குள் கொண்டுசெல்கிறாள் என்ற எச்சரிக்கையை அவன் அடைந்துவிட்டான். “என்ன சொல்லவிருக்கிறாய்?” என்று பாண்டு கேட்டதுமே அவனுடைய அகம் செல்லும் வழிகளனைத்தும் அவளுக்குத்தெரிந்தன.மின்னல் சிடுக்கென கணத்தில் கோடிக்கிளைகளை அது விரித்துவிட்டிருந்தது.
பிருதை பாண்டுவின் கண்களை நோக்கி “என் புதல்வியே மார்த்திகாவதியை ஆளும் உரிமை கொண்டவள். புதல்வி இல்லையேல் புதல்வன்” என்றாள். பாண்டு ஐயம் விலகாமல் “ஆம்” என்றான். “எந்தநிலையிலும் மார்த்திகாவதி அஸ்தினபுரியின் கிளைநாடாக இருக்காது. அதன் மீது அஸ்தினபுரி எந்த ஆதிக்கத்தையும் செலுத்த முடியாது” என்றாள் பிருதை. பாண்டுவின் உடல் முறுக்கமிழப்பதை காணமுடிந்தது. புன்னகையுடன் “அஸ்தினபுரி என்றுமே ஆதிக்கம் செலுத்த விழையும் நாடல்ல” என்றான்.
ஏன் பின்வாங்கினோமென்று குந்தி வியந்துகொண்டாள். சொல்லியிருக்கவேண்டிய தருணம், அவள் கூட்டிச்சேர்த்த சொல்முனை அது. அங்குசெல்லும் பாதையை திறந்தும் விட்டாள். அடுத்தகணம் பாண்டு கேட்ட வினா அவள் எண்ணியவற்றை உறுதிசெய்தது. “சல்லியரின் மாத்ரநாட்டிலும் இந்த முறைமைகள் உண்டா என்ன?” அவள் தன் கண்களை அவன் கண்களுடன் நேரடியாக நிலைக்கச்செய்து “மாத்ரர்கள் ஷத்ரியர்கள் அல்லவா? அங்கே மூத்த மைந்தனல்லவா முறைமன்னன்?” என்றாள். பாண்டு கண்களை விலக்கி “ஆம், ஆனால் ஒவ்வொரு ஷத்ரியகுடியும் ஒவ்வொரு பழங்குலத்திலிருந்து வந்தது” என்றான்.
ஏன் பின்வாங்கினாளென அவள் அப்போது உணர்ந்தாள். அவன் அக்கணத்தில் எண்ணிய சித்திரம் அவளை வெறும் பெண்ணாக நிறுத்தியது. அதை அவள் ஏற்க சித்தமாகவில்லை. “காந்தாரர்கள் பஷுத்துரர்களின் குருதிவழி கொண்டவர்கள். லாஷ்கரர்கள் என்னும் ஏழுபெருங்குலக்குழுதான் அவர்களை இன்றும் ஆள்கிறது. ஆயினும் அவர்களின் கற்பொழுக்கநெறிகள் ஷத்ரியர்களைப்போலவே உள்ளன” என்றான் பாண்டு. இன்னொரு அலை வந்து அவள் எண்ணியவற்றை அடித்து மேலும் விலக்கிக் கொண்டு சென்றதைப்போல உணர்ந்தாள்.