மகரந்தங்கள் மறையும் புயல்

அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு,

உங்கள் ‘யார் அறிவுஜீவி’ கட்டுரையில் சென்ற நூற்றாண்டின் பத்து இந்திய அறிவுஜீவிகளை கொடுத்தது போல் தற்போது உள்ள அறிவுஜீவிகளை உங்களிடம் கேட்கலாம் என்று இருந்தேன். ஆனால் ‘புயலும் மகரந்தங்களும்’ படித்த பின்பு அப்படி தற்போது பத்து அறிவுஜீவிகள் இருப்பார்களா என்பதே சந்தேகத்துக்கு உரியதாய் தெரிகிறது. இருக்கும் வரைக்கும் நீங்கள் சொன்னால் நல்லது.

புயலும் மகரந்தங்களும்’ கட்டுரையில் நீங்கள் சொல்வது போல் வந்துகுவியும் தகவல்கள் இதற்கு ஒரு காரணமாக இருக்கலாம். அதோடு கேளிக்கை விஷயங்களிலேயே மக்கள் அதிக நேரம் செலவழிப்பதும் ஒரு காரணமாக இருக்கலாம் என்று நினைக்கிறேன். இதை நீங்களே பல முறை சொல்லி இருக்கிறீர்கள். என் சிறு வயது நினைவுகளை வைத்தே கீழிருப்பவையை ஊகிக்கிறேன்.

சில வருடங்களுக்கு முன் சின்னத்திரையே மக்கள் நேரத்தை அதிகம் செலவிடும் ஊடகங்களாக இருந்தன. அரசாங்கத் தொலைக்காட்சி மட்டும் இருந்த வரையில் மக்கள் பார்க்க வேண்டியதை தொலைக்காட்சி சேனலே முடிவு செய்தது. பொழுதுபோக்கு விஷயத்திற்கு கொடுக்கப்பட வேண்டிய முக்கியத்துவம் மட்டுமே கொடுக்கப்பட்டது. மற்ற தகவல், கலை, செய்திகளுக்கும் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது. ஆனால் தனியார் தொலைக்காட்சி வந்த பிறகு பொழுதுபோக்கு அம்சங்களையே அதிகமாக ஒளிபரப்ப ஆரம்பித்தது. மற்றபடி கட்சி சார்புள்ள செய்திகளும். இதற்குப் பிறகு மக்கள் அலுப்பு கொடுக்கும் ஆனால் பயனுள்ள அரசாங்கத் தொலைக்காட்சியை பார்க்கத் தேவையில்லை. மக்களுக்கு விருப்பம் போல் பார்க்க பல தனியார் சேனல்களும் தோன்றியது. இங்குதான் மக்களுக்கு பயனுள்ள நிகழ்ச்சிகள் மறைந்து மக்கள் விரும்புகின்ற/கவரும் நிகழ்ச்சிகள் ஒளிபரப்பப்பட ஆரம்பித்தது. இதன் தாக்கம் அன்றிருந்த எல்லா ஊடகங்களிலும் இருந்திருக்கலாம். மேலும் வாசிப்புப் பழக்கமும் குறைந்தது. அதனால் மக்களின் பொது சிந்தனையை மாற்றும் சிந்தனைகளோ, தகவல்களோ அவர்களை அண்டாமல் போனது.

நீங்கள் சொல்வது போல் தொண்ணூறுகளுக்கு மேல் அந்தப் புதிய சிந்தனை தடைப்பட்ட காலத்தில்தான் இந்த மாற்றங்களும் நிகழ்ந்தன. இன்றும் அதே நிலைமைதான். சின்னத்திரை, இணையம் எதிலும் என்ன பார்க்க வேண்டும் என்பதை மக்களே தீர்மானிக்கிறார்கள். நல்லதுதான். ஆனால் அவர்கள் பார்ப்பது மீண்டும் கேளிக்கைதான். ஒரு தேடல் இல்லாத எவரும் அந்தத் திசையில் இருந்து மாறுவதில்லை.

உங்கள் கருத்துக்களை கேட்க ஆவல்.

நன்றி,
ஹரீஷ்

அன்புள்ள ஹரீஷ்,

உலகிலேயே செய்திப்பெருக்கம் நிறைந்த அமெரிக்காவில் எவரும் எதையும் தெரிந்துகொள்வதேயில்லை என்று ஓர் ஆய்வுசொல்கிறது. அமெரிக்கா உலகநாடுகளில் செய்யும் படையெடுப்புகள் கூட சராசரி அமெரிக்கர்களுக்குத் தெரியாது, தெரிந்தவர்கள்கூட மிக எளிமையான அரசு சார் ஒற்றைவரிகளையே சொல்கிறார்கள் என்பதையும் நான் கவனித்திருக்கிறேன். நான் சொல்வது இந்த முரண்பாட்டைப்பற்றித்தான்.

இன்று செய்திகள் இரவும் பகலும் கொட்டிக்கொண்டிருக்கின்றன. பிரேக்கிங் நியூஸ் வெடித்துக்கொண்டே இருக்கிறது. ஆனால் எத்தனைபேருக்கு அரசியல் பற்றிய தெளிவு இருக்கிறது? செய்திகளைப் பார்ப்பவர்கள் அவற்றையே வெறும் கேளிக்கையாக ஆக்கிக்கொள்கிறார்கள். செய்தி ஊடகங்களில் தோன்றும்தோறும் நம் முக்கியத்துவம் குறைகிறது என உணர்ந்தபின்னர் அதை தவிர்க்கலாமென நான் முடிவெடுத்தேன்

ஜெ

கருத்துக்களும் தகவல்களும்

முந்தைய கட்டுரைவெண்முரசு வெளியிடும் நேரம்
அடுத்த கட்டுரை‘வெண்முரசு’ – நூல் இரண்டு – ‘மழைப்பாடல்’ – 27