கு.ப.ராஜகோபாலனின் ஒரு பழைய கதையில் [கனகாம்பரம்- தொகுப்பு] ஒருவன் கும்பகோணத்தில் தன் நண்பனை தேடிச்செல்கிறான். நண்பனுக்கு அப்போதுதான் திருமணமாகியிருக்கிறது. இவன் அங்கே செல்லும்போது நண்பன் இல்லை. அவனுடைய இளம் மனைவி மட்டும் தனியாக இருக்கிறாள். பெரிய அழகி அவள். அவள் இவனை வரவேற்று காபி போட்டுக் கொடுக்கிறாள். கணவன் நாளைதான் வருவான் என்கிறாள். இவனுக்கு கும்பகோணத்தில் செல்வதற்கு ஓர் இடமில்லை. என்னசெய்வதென்று தெரியாமல் இருக்கையில் அவளே மாடியில் தங்கிக்கொள்ளலாம் என்று சொல்கிறாள். அவள் சமைத்துப்போட்டதைச் சாப்பிட்டுவிட்டு இவன் மாடியில் ஜமுக்காளத்தைப்போட்டு படுத்துக்கொள்கிறான். அவள் இவனுக்கு குடிக்க தண்ணீருடன் மாடி ஏறி வருகிறாள். இவனருகே சப்பணமிட்டு அமர்ந்து கருங்கூந்தலை மார்மேல் தூக்கிப்போட்டுக்கொண்டு அமர்ந்து பேசிக்கொண்டிருக்கிறாள்….
நல்லவேளையாக இந்தக்கதையை நான் வாசிக்கும்போது தல்ஸ்தோயின் நாவல்களை வாசித்திருந்தேன். கு.ப.ராஜகோபாலனிடம் மனசுக்குள் ‘வே, என்னவே இது?’ என்று கேட்டுக்கொண்டேன். கும்பகோணத்தில் 1940 வாக்கில் நடக்கும் கதை. என்ன யதார்த்தம் இது? யாருக்காக அவர் இதை எழுதினார்? இன்று ஒரு நுண்ணுணர்வுள்ள இலக்கியவாசகன் கு.ப.ராஜகோபாலனின் கதைகளின் முழுத்தொகுப்பை வாசிக்கநேர்ந்தால் ஐந்தாறு சிறுகதைகளை நல்லகதைகள் என்பான். இன்னும் சிலகதைகளை பரவாயில்லை என்பான். மிச்சகதைகள் ஏன் இலக்கியம் என்று சொல்லப்படுகின்றன, ஏன் கு.ப.ராஜகோபாலன் ஓர் இலக்கிய முன்னோடியாக கருதப்படுகிறார் என்று திகைப்பான். முக்கால்வாசிக்கதைகள் ‘அவன் மார்பில் அவள் சாய்ந்தாள்’ என முடியும் படைப்புகள். கு.ப.ராஜகோபாலனின் அந்தரங்கப்பகற்கனவில் ஊறி மிதந்துகிடக்கக்கூடியவை.
அன்று கு.ப.ராஜகோபாலன் பெரிதும் ரசிக்கப்பட்டமைக்கு இந்தவகையான கதைகளே காரணம். உண்மையான அனல் வீசிய பண்ணைச்செங்கான் போன்ற கதைகள் அல்ல. முக்கால்நூற்றாண்டு தாண்டி இன்று வாசிக்கையில் அவற்றை எழுதி வாசித்த சமூகப்பிரக்ஞையை நுணுக்கமாக ஆராய்வதற்கான மூலப்பொருட்கள் என்றவகையிலேயே இக்கதைகள் கவனத்துக்குரியவை என்று படுகிறது. ஆணும் பெண்ணும் ஓரக்கண்ணால் பார்த்துக்கொண்டாலே ஊரலர் எழும் சூழல். மிகமிக இளமையிலேயே வீட்டுக்காரர்கள் பார்த்து ஏற்பாடு செய்துவைக்கும் திருமணம். அந்த மனைவியுடன் தனியாக அமர்ந்து ஒருமணிநேரம் பேசுவதுகூட ஆபாசம் என வகுத்திருக்கும் குடும்ப மனச்சூழல். இளமையிலேயே தொடர்ந்து பிறக்கும், தொடர்ந்து இறக்கும் குழந்தைகள். பலவகையான நோய்கள். காதலே இல்லாத ஒரு சமூகம் கு.ப.ராஜகோபாலன் வாழ்ந்தது. மிருகங்களுக்குக் கூட இருக்கும் சல்லாபம் முழுக்க மறுக்கப்பட்ட காலம்.
அந்தச் சமூகத்தின் அந்தரங்கமான பகற்கனவென்பது அழகிய இளம்பெண்ணுடன் சல்லாபம் செய்தல்தான். காமம் கூட இல்லை, சல்லாபம் மட்டுமே. 1942-இல் எழுதப்பட்டு பலவருடங்களுக்குப் பின்னர் மறுபதிப்பாகியிருக்கும் க.நா.சு.வின் ‘சர்மாவின் உயில் ‘ என்ற நாவல் இந்த மனநிலையை இன்னும் விரிவாக காட்டக்கூடியது. அன்றைய குடும்பச்சூழலை, ஏற்பாட்டுத்திருமணம் அளிக்கும் காதலற்ற குடும்ப வாழ்க்கையை, அதனுள் நிரந்தர பகற்கனவாக இருந்துகொண்டிருக்கும் காதலுக்கான தாகத்தை அதில் காணலாம்.
நவீனத் தமிழிலக்கியத்தின் அடித்தளம் என்று சொல்லத்தக்க மணிக்கொடி காலகட்டத்தை இன்று பார்க்கையில் அகவாழ்க்கைக்கான இந்த ஏக்கமே அதன் மைய ஓட்டமாக இருந்திருப்பதைக் காணமுடிகிறது. கு.ப.ராஜகோபாலன், மௌனி, ந.சிதம்பரசுப்ரமணியம், க.நா.சுப்ரமணியம் என்று அனைவருமே இதைத்தான் முக்கியமாக எழுதியிருக்கிறார்கள் என்று தோன்றுகிறது. உலகமெங்கும் உருவாகி வந்த புத்திலக்கியம் என்பது ஜனநாயக அரசியல்பிரக்ஞையையும், நவீன ஆன்மீகத்தேடலையும் சாரமாகக் கொண்டது. புத்துலகம் என்று அவை நினைத்த வரும்காலத்தின் அறவியலையும் அழகியலையும் தீர்மானிக்கும் அடித்தளங்கள் அவை. அந்தத் தேடலின் அலைக்கழிப்புகளையும் கொந்தளிப்புகளையும் வெளிப்படுத்தியவை. அந்தத் தளத்தில் செயல்பட்ட, அதனாலேயே இன்றும் முன்மாதிரியாக நிற்கக்கூடிய தனிக்கலைஞன் புதுமைப்பித்தன் மட்டுமே.
மற்றவர்களுக்கு என்ன ஆயிற்று? ஏன் மீண்டும் மீண்டும் அவர்கள் காதோரம் முடி இறங்கிய வட்டமுகமும் காந்தக்கண்களும் கொண்ட கட்டழகிகளைப்பற்றியே எழுதினார்கள்? ஏன் மனிதவாழ்க்கையின் ஒரு குறிப்பிட்ட காலகட்டத்தில் நிகழும் ஒரு குறிப்பிட்ட உணர்ச்சி மட்டும் அவர்களுக்கு மொத்த வாழ்க்கையாகத் தெரிந்தது? இந்திய மெய்ஞான மரபில் காதல் என்பது ஒரு பெரும் குறியீடு. பிரேமை என்பது கடவுளையும் இயற்கையையும் அறிவதற்கான ஒரு அழகிய வழி. ஆனால் இவர்களின் எழுத்தில் அந்த அம்சமே இல்லை. இது உள்ளூர எரியும் ஒரு தசைப்பரப்பில் தன் கற்பனையின் குளிர்ந்த தைலத்தை அள்ளி அள்ளிப்பூசிக்கொள்வது மட்டுமே.
மணிக்கொடி உருவாக்கிய இந்த முன்மாதிரி அன்று உருவாகிவந்த வணிக இலக்கியத்தில் அலைகளைக் கிளப்பியது. தமிழகத்தின் இந்த அந்தரங்கத்தேவையை பூர்த்திசெய்வது மிகமுக்கியமான ஒரு வணிகச்சேவைச்செயல்பாடாக அடையாளம் காணப்பட்டது. கு.ப.ராஜகோபாலனின் அதே வகை எழுத்தின் பல வடிவங்களை நாம் வணிக எழுத்தில் காணலாம். ஆர்வி, எல்லார்வி போன்ற ஆரம்பகால எழுத்தாளர்கள். பி.வி.ஆர், மகரிஷி போன்ற நடுக்கால எழுத்தாளர்கள், இந்துமதி, சிவசங்கரி, பாலகுமாரன் போன்ற சமகால எழுத்தாளர்கள் என வாழையடி வாழையாக இந்த வகை எழுத்தை இன்றுவரை கொண்டுவந்துசேர்த்திருக்கிறார்கள்.
தீவிர இலக்கியத்திலும் இந்த வகை எழுத்தின் தொடர்ச்சி எப்போதும் இருந்தது. கு.ப.ராஜகோபாலனின் சரியான தொடர்ச்சி என்று தி.ஜானகிராமனைச் சொல்லலாம். நுண்தகவல்கள் நிறைந்த அவரது அழகிய நடை, தஞ்சைச்சூழலின் விரிவான சித்தரிப்பு ஆகியவற்றுக்கு அப்பால் அவரது நாவல்களின் பெறுமானம்தான் என்ன? அவை காதலுக்கான தமிழ்மனத்தின் ஏக்கத்தை நுண்ணிய முறையில் தீர்த்துவைக்கும் எழுத்துதானே? தன் மிகச்சிறந்த உரையாடல்கள் மூலம் ஜானகிராமன் திரும்பத்திரும்ப எழுதுவது ஆண் பெண்ணுடன் கொள்ளும் அழகிய நுட்பமான சல்லாபத்தைத்தானே? யோசித்துப்பாருங்கள், ஜானகிராமனின் எழுத்து வழியாக உங்களுக்குள் சில அழகிகளும் அவர்களின் காதலர்களும் மட்டும்தானே நிறுவப்பட்டிருக்கிறார்கள். விவேகமும் ஞானமும் பொருந்திய எத்தனைபேரை அவரால் உருவாக்கமுடிந்திருக்கிறது? அடிப்படை இச்சைகளால் அலைக்கழியும் எந்த ஆன்மாவின் தவிப்பை நமக்குக் காட்டமுடிந்திருக்கிறது?
ஜானகிராமனைக் கொண்டாடி எழுதுபவர்களை நான் எப்போதும் கவனிக்கிறேன். அவர்கள் மீண்டும் மீண்டும் அந்த தித்திப்பைத்தான் சப்புகொட்டுகிறார்கள். உலகமெங்கும் மகத்தான எழுத்தின் ஆதாரமாக உள்ள அறவுணர்ச்சியும் சரி ஆன்மீக எழுச்சியும் சரி அவரது நாவல்களில் மிகக்குறைவு என்பதை அவர்கள் உணர்வதேயில்லை. ஜானகிராமனை இலக்கியச்சாதனையாளராக ஆக்குபவை அவரது சிறுகதைகள்தான். அவற்றில் அவர் நீதியின் சீற்றமும் மெய்யறிதலும் கொண்ட மகத்தான தருணங்களை புனைந்திருக்கிறார். பரதேசி வந்தான் அல்லது கடன் தீர்ந்தது அல்லது பாயசம் அல்லது மாப்பிள்ளைத்தோழன் போன்ற கதைகளை எழுதிய ஜானகிராமனையே நான் நவீன இலக்கியவாதியாக நினைக்கிறேன்.
நீண்ட இடைவேளைக்குப்பின் நான் ஜானகிராமனின் இருநாவல்களை வாசித்தேன். மோகமுள் மற்றும் அன்பே ஆருயிரே. என்ன இது இத்தனை வளவளவென்று போகிறது என்ற எண்ணம் ஏற்பட்டது. இப்போது என் வாசிப்பு மாறிவிட்டதா என்ன? இல்லை, நான் வளர்ந்துவிட்டேன். நான் அவற்றை முதலில் வாசிக்கையில் என் வயது பதினேழு. அன்று அவற்றில் என்னைக்கவர்ந்தவை ஜிலுஜிலுவென ஓடும் உரையாடல்கள். ஆம், சல்லாபங்கள். சுற்றி சுற்றிப் பேசும் பெண்களின் சமத்காரங்கள், ஜாலங்கள். இன்று அவற்றை என்னால் தாங்கிக்கொள்ளவே முடியவில்லை. பேசிக்கொண்டே இருக்கிறார்கள். உண்மையிலேயே மக்கள் அப்படித்தான் பேசுகிறார்கள் என்றால்கூட அதற்கு இலக்கியமதிப்பென ஏதுமில்லை. ஓர் இலக்கிய ஆக்கத்தில் சொல்லப்படும் அனைத்துச் சொல்லுமே முக்கியமானவை. சாரமற்ற உரையாடல்களுக்கு நல்ல இலக்கியத்தில் இடமில்லை. அது முன்வைக்கவேண்டியது உண்மையை அல்ல, செறிவுபடுத்தப்பட்ட உண்மையை, அல்லது அதிஉண்மையை.
அவற்றை நான் ரசித்திருந்த அந்தக்காலத்தில் இருவர் என்னிடம் அதைச் சொல்லியிருக்கிறார்கள். மிகச்சிறந்த வாசகியான என் அம்மா ‘ஜானகிராமன் முதிரா ஆண்களுக்கான எழுத்தாளார்’ என்று சொன்னார். பின்னர் சுந்தர ராமசாமி ‘அவரோடது ஒரு ஜிலுஜிலுப்பு. காஞ்சிப் பட்டை மூஞ்சிமேல போட்டு இழுக்கிறது மாதிரி…. ஆனா அதுக்கு இலக்கியத்தில மதிப்பில்ல. எப்படிப்பட்ட பாறாங்கல்லா இருந்தாலும் உண்மைக்குத்தான் இங்க மதிப்பு’ என்றார். ஜானகிராமனின் நாவல்களில் அவைசென்றுசேரும் உண்மையின் தருணங்கள் உள்ளன. திரைவிலக்கி வெளிப்படும் மனித மனத்தின் ஆழங்கள் உள்ளன. ஆனால் அவை அந்த பகற்கனவின் ஜீராவால் மூழ்கடிக்கப்பட்டுள்ளன. இன்று அந்நாவல்களை இருபக்கமும் கையை வைத்து இறுக்கிப்பிழிந்து சாராம்சத்தை மட்டும் எடுக்கமாட்டோமா என்றிருக்கிறது.
லா.ச.ராமாமிருதத்தின் கடைசிக்கால சிறுகதை ஒன்றில் ஒரு பெண் கதைசொல்லியான முதியவரை முத்தமிட்டுச்செல்வதாக எழுதியிருந்தார். தினமணிக்கதிரில் அக்கதையை வாசித்த சுந்தர ராமசாமி சிரித்துக்கொண்டே சொன்னார் ‘முன்னாடின்னா இந்த முத்தம் வந்திருக்காது,.. அதுக்கான ஏக்கம் மட்டும்தான் இருக்கும். பரவாயில்லை, நாற்பது அம்பது வருசம் எழுதி இந்த இடம் வரை வந்து சேர்ந்துட்டார்.’ மீபொருண்மைத்தளம் சார்ந்த அதீதகற்பனைகளாலும் மன உணர்ச்சிகளை நேரடியாகத் தொட எழும் மொழியாலும் லா.ச.ராமாமிருதத்தின் கதைகளில் பல இலக்கியச்சாதனைகள். ஆனால் அவரது எழுத்திலும் சாராம்சமாக ஓடிக்கொண்டிருப்பது கு.ப.ராவையும் மௌனியையும் ஆட்டிப்படைத்த அந்த ஏக்கம் மட்டும்தானே?
அடுத்த தலைமுறையில் இந்த பகற்கனவு எழுத்து இன்னும் சல்லிசாக ஆகிவிட்டதோ என்றுதான் ஐயப்படவேண்டியிருக்கிறது. சமீபத்தில் வண்ணநிலவனின் இரு நாவல்களை மீண்டும் வாசித்தேன். கடல்புரத்தில், கம்பாநதி. ஒருவகையான அற்பப்புனைவுகள் என்றுதான் சொல்லவேண்டும். ஆனால் அவை ஒருகாலத்தில் இங்கே இலக்கியச்சூழலில் சப்புகொட்டி ரசிக்கப்பட்டிருக்கின்றன நினைக்கையில் ஆச்சரியமே எழுகிறது. முன்னோடிகளின் எழுத்தில் அவர்களின் மொழித்தேர்ச்சியாலும் நுணுக்கமான மானுட அக அவதானிப்புகளாலும் கலையாக ஆன காமம்சார்ந்த பகற்கனவுத்தளம் இவர்களின் சில்லறை அனுபவங்களும் சூம்பிப்போன அழகுணர்வும் கொண்ட எழுத்துலகில் ஒருவகை சிறுமையெழுத்தாக நின்றுவிட்டிருக்கிறது. கள்ள உறவுகளைக் கண்காணிக்கும் ஓரக்கண் பார்வையாக அதை மாற்றிக்கொள்வதன் மூலமே அவர்கள் சுவாரசியத்தை தக்கவைத்துக்கொண்டிருந்திருக்கிறார்கள். உள்ளே செல்லாமல் தெருவில் நின்று பாதி திறந்த சன்னல் வழியாகப்பார்த்துவிட்டு கடந்துசெல்லும் எழுத்துக்கள் இவை.
அதிருஷ்டவசமாக இந்த ஜீரா இலக்கியச்சூழலில் எப்போதும் உரிய இடத்தில் வைக்கப்பட்டது. முதல்தலைமுறையில் புதுமைப்பித்தன் மட்டும் இந்தவகை பகற்கனவு எழுத்தை சமன் செய்தார். அடுத்த தலைமுறையில் சுந்தர ராமசாமியும் அசோகமித்திரனும் ப.சிங்காரமும் கி ராஜநாராயணனும் கு.அழகிரிசாமியும் ஜி.நாகராஜனும் பலகோணங்களில் இப்பகற்கனவுகளை உடைத்துத் திறந்து பரிசீலிப்பவர்களாக இருந்தனர். அடுத்த தலைமுறையில் நீதி உணர்ச்சியுடன் பேசிய நாஞ்சில்நாடனும் அடித்தள மக்களின் குரலாக எழுந்த பூமணியும் அதை முன்னெடுத்தனர். தமிழிலக்கியத்தின் மையப்பெருங்குரல் புதுமைப்பித்தனிடமிருந்து மேலெழுந்தது நம் நல்லூழ்தான்.
மிக ஆர்வமூட்டும் ஒரு அவதானிப்பை நான் அடைந்தது புதுமைப்பித்தனின் வாசிப்புப்பழக்கம் பற்றி தொ.மு.சி.ரகுநாதன் சொன்னதைக் கேட்டபோது. புதுமைப்பித்தன் ஆங்கிலப்பாலியல் நூல்களை வாசிப்பதில் பேரார்வம் கொண்டிருந்தார். அவரே தமிழில் ஒன்று எழுதவும் செய்தார். அதை நண்பர்களிடம் தனிச்சுற்றுக்கு விட்டார். அதைப்பற்றி அவரது நண்பரான மீ.ப.சோமு சங்கடம் கொண்டபோது ‘தமிழனுக்கும் போர்னோகிராஃபி வேணுமே ஓய்’ என்று சொல்லி சிரித்தார். புதுமைப்பித்தனின் விபரீத ஆசை போன்ற கதைகளில் கு..ப.ராஜகோபாலனும் வழிவந்தவர்களும் தொடக்கூட அஞ்சும் பாலியல்சித்தரிப்பு உள்ளது. அதாவது புனைவுக்குத்தேவை என்றால் எதையும் சொல்ல புதுமைப்பித்தனால் முடியும். சும்மா தொலைவில் நின்று சப்புக்கொட்டுவது அவருக்கு உடன்பாடல்ல,
தமிழில் புதுமைப்பித்தனின் காலகட்டத்தில்தான் பாலியல் எழுத்து அறிமுகமாகிறது – வாசிப்பு தொடங்கும் காலகட்டமும் அதுவே. லண்டனில் அச்சாகும் பாலியல் நூல்களை இறக்குமதிசெய்து தபால் வழியாக அனுப்பி விற்கும் தொழில் இருபதுகளில் தமிழில் ஆரம்பித்தது. சில ஆண்டுகளிலேயே அது மிகப்பெரிய தொழிலாக மாறியது. ஆனந்தவிகடன் இதழின் அதிபர் எஸ்.எஸ்.வாசன் அந்தத் தொழிலில் மிகப்பெரிய வெற்றியை அடைந்தபின்னர்தான் ஆனந்த விகடனை தொடங்கினார். அவரே பின்னர் தமிழில் அத்தகைய பல நூல்களை எழுதியுமிருக்கிறார். அவற்றை அன்றைய கணக்கில் மிகப்பெரும் பணம் செலவுசெய்து வாங்கியவர்களை நம்மால் ஊகிக்கமுடியும். மரபின் கட்டுப்பாடுகளுக்கு ஒருபக்கம் ஆட்பட்டு மறுபக்கம் புதிய ஆங்கிலக் கல்வியால் வெளியுலகையும் அறிய நேரிட்டு அந்த இக்கட்டால் கடுமையான பாலியல் வறட்சிக்கு ஆளான படித்த நடுத்தரவர்க்கத்தினர்தான்.
பின்னர் தமிழில் பாலியல் எழுத்து எப்போதும் இருந்துள்ளது. பிரபலமான சரோஜாதேவி வரிசை கீழ்மை எழுத்துக்களை பள்ளிவாழ்க்கையின் ஒரு கட்டத்தில் அனைவருமே வாசித்து வந்திருப்பார்கள். எண்பதுகள் அந்த தளத்தில் பெரிய அலை நிகழ்ந்த காலகட்டம். ஒளிநாடா மூலம் வீட்டிலேயே சினிமா பார்க்கமுடியுமென்ற தொழில்நுட்ப வளர்ச்சி வந்ததும் நீலப்படங்கள் சாதாரணமாக ஆயின. அதன்பின் தொண்ணூறுகளின் இறுதியில் இணையம் நீலப்படங்களை எங்கும் கிடைப்பதாக ஆக்கியது. எல்லாவகையான நீலப்படங்களையும் பார்க்கமுடிந்தது. ஓரளவு கற்பனையும் வாசிப்பும் கொண்டவர்களுக்கு பாலியலெழுத்தும் காட்சிகளும் மிகமிக விரைவிலேயே சலித்துப்போயின.
இன்று தமிழில் ஒரு சிறுசாரார் இணையதளங்களில் அவர்கள் பார்க்கும் பாலியல்காட்சிகளை முதிர்ச்சியற்ற சொற்களில் திரும்பப்புனைந்து இலக்கியம் என முன்வைத்துவருகிறார்கள். கொஞ்சமேனும் வாசிப்புப்பழக்கமும் அதன் விளைவான முதிர்ச்சியும் கொண்டவர்களுக்கு இவை அசட்டுத்தனமாகவே தெரியும். ஆனால் இன்றும்கூட கு.ப.ராஜகோபாலனின் எழுத்தில் இருந்து இன்பக்கிளுகிளுப்பைப் பெற்றுக்கொண்டவர்களின் வாரிசுகள் அதே மனநிலையின் வளர்ந்தவடிவில் நீடிக்கிறார்கள். பெரும்பாலும் கட்டுப்பாடுகள் நிறைந்த நடுத்தரக்குடும்பங்களில் இருந்து தொழில்கல்விகற்று பொதுவெளிக்கு வந்த ஒருவகை அசட்டு இளைஞர்கள் இவர்கள். பாலியல்மீறல்களை ஏதோ பெரிய சமூகப்புரட்சி என நினைத்து உத்வேகம் கொள்கிறார்கள். தங்கள் வீடுகளில் பேசிக்கொள்ள முடியாத ஒரு விஷயத்தை கதையில் வாசித்தால் மயிர்கூச்செறியும் முதிராமனங்கள். கொஞ்சம் தெருவில் நடந்து நான்கு குடிசைப்பகுதிகளைச் சுற்றிவரக்கூட சுதந்திரமில்லாத எளிய வாழ்க்கை வாழ்பவர்கள்.
இவர்களுக்காக எழுதப்படும் இன்றைய மென்பாலியல் எழுத்துக்களையும் நான் கு.ப.ரா மரபின் வரிசையில்தான் சேர்ப்பேன். எழுபதாண்டுகளுக்கு முன் கு.ப.ராவின் விஸ்வேஸ்வரன் கும்பகோணம் அக்ரஹாரத்தில் அடுத்தவன் மனைவியை ஆறடி தூரத்தில் தனியாகப்பார்த்து அடைந்த கிளர்ச்சியைத்தான் இவர்களின் புனைவுகளில் விஸ்வா ஹாங்காங்குக்கு போய் சான்ட்விச் மஸாஜைப் பற்றி கேள்விப்பட்டு அடைகிறான். என்றுமுள நந்தமிழ் ஏக்கம்!
என்னுடைய தலைமுறையின் எல்லா எழுத்தாளர்களும் கு.ப..ராஜகோபாலன் உருவாக்கிய மனச்சிக்கலை முழுமையாகத் தாண்டிவந்தவர்கள் என்பதை ஆச்சரியத்துடன் காண்கிறேன். அந்த மாற்றம் எப்படி நிகழ்ந்தது? இளமையில் நாங்களெல்லாருமே இந்த பகற்கனவை மாந்திக்களித்தவர்கள்தான். இதல்ல எழுத்து என எங்கோ உணர்ந்தோமா? வரலாறாக விரியாத ஒன்றை, உள்ளும் புறமும் கண்ணிகளாக வளராத ஒன்றை அற்ப எழுத்து என்று அறிந்தது என்னை இவர்களிடமிருந்து விடுதலை செய்தது. நான் அதற்கு தல்ஸ்தோய்க்கும் தஸ்தயேவ்ஸ்கிக்கும் பஷீருக்கும் புதுமைப்பித்தனுக்கும் கடமைப்பட்டிருக்கிறேன்.
இன்றைய எழுத்தில் நேரடியான ஆய்வுநோக்குடன் அல்லது நுணுக்கமான அங்கதத்துடன் அல்லது விரிவான வரலாற்றுப்பார்வையுடன் ஆண்பெண்ணுறவைப் பார்க்கும் பார்வை நிகழ்ந்திருப்பது ஓர் இலக்கியச் சாதனை என்று ஐயமில்லாமல் சொல்ல முடியும். கோணங்கி, சுரேஷ்குமார இந்திரஜித், யுவன் சந்திரசேகர், எஸ்.ராமகிருஷ்ணன், பெருமாள்முருகன் என ஒவ்வொரு புனைகதையாளரும் ஒவ்வொரு வகையில் அதைக் கையாள்கிறார்கள். ஓரக்கண்பார்வையின் அற்பத்தனம் கொண்ட எழுத்தாளர் என எவருமில்லை.
இன்றைய இளம் எழுத்தாளர்களில் ஆண்பெண் உறவை எழுதுபவர்களில் முக்கியமானவர்களான வா..மு.கோமு, கீரனூர் ஜாகீர் ராஜா, எஸ்.செந்தில்குமார், லட்சுமி சரவணக்குமார், சந்திரா என அனைவரிலும் உள்ளது இந்த விடுதலை அளிக்கும் அழகுகளும் சிக்கல்களும் என்று சொல்லமுடியும். குறிப்பாக வா.மு.கோமு அப்பட்டமான பாலியலெழுத்தின் உதாரணமாகச் சொல்லப்படக்கூடியவர். ஆனால் அது பாலியல் மீதான ரகசிய அரிப்பாக அல்ல, அதை ஒரு மானுட நிலைமையாகக் கண்டு ஆராயும் கூர்மையாகவே அவரில் வெளிப்படுகிறது. கு.ப.ராஜகோபாலன் முதல் வா.மு.கோமு வரையிலான ஒரு கோடு சென்ற முக்கால் நூற்றாண்டில் நம் அகம் வளர்ந்து வந்ததன் வரைபடமாக அமையும்.
[இலங்கையில் இருந்து வெளிவரும் சமகாலம் இதழில் எழுதும் கட்டுரைத்தொடர்]