சிங்கப்பூரில் சில தினங்கள்…

தொடர்ந்து வெண்முரசை எழுதிக்கொண்டிருந்த நாட்களில் ஒன்றில்தான் சித்ராவிடமிருந்து அழைப்பு வந்தது, சிங்கப்பூர் வரமுடியுமா என. சித்ரா ரமேஷ் சிங்கப்பூர் எழுத்தாளர். திண்ணையில் அவரது எழுத்துக்களை நண்பர்கள் வாசித்திருக்கலாம்.

2006ல் சித்ராவின் முயற்சியின்பேரில் சிங்கப்பூர் தமிழ் எழுத்தாளர் கழகம் என்னை அழைத்து நான் முதல்முறையாகச் சிங்கப்பூர் சென்றேன். அன்று அவரது இல்லத்தில் நானும் அருண்மொழியும் சிலநாட்கள் தங்கியிருந்தோம். சித்ராவும் அவர் கணவர் கே.ஜே..ரமேஷும் என்னுடைய நண்பர்கள். அவரை அவரது மகள் பரதநாட்டிய அரங்கேற்றத்தின் போதும் மகன் திரும்ணத்தின்போதும்தான் சென்னையில் மீண்டும் சந்தித்திருக்கிறேன். ஆனால் தொடர்ந்து தொலைபேசியில் பேசிக்கொண்டிருந்தோம்.

சித்ராவும் நானும்

ஏழாண்டுகளுக்குப்பின் மீண்டும் சிங்கப்பூர் செல்லும்படி ஓர் அழைப்பு சித்ரா ரமேஷிடமிருந்து வந்தது. அவர்கள் சிங்கப்பூரில் நடத்திவரும் வாசகர் வட்டம் என்னும் அமைப்பின் 25 ஆவது ஆண்டுவிழாவில் தலைமைதாங்கி பேசும்படி. ரெ.பாண்டியனால் தொடங்கப்பட்ட அவ்வமைப்பு அடுத்த கட்டத்தில் என் நண்பர் சுப்ரமணியம் ரமேஷால் நடத்தப்பட்டது. இப்போது சித்ரா, ஷாநவாஸ் போன்றவர்களால் நடத்தப்படுகிறது. ஒருபயணம் மனநிலையையும் உடல்நிலையையும் மாற்றியமைக்கும் என்று தோன்றியது.

26 அன்று சென்னைசென்றேன். 27 இரவில் எனக்கு விமான. கே.பி.வினோத் என்னைக் கொண்டு சென்று விமானநிலையத்தில் விட்டார். தவறுதலாக கீழ்த்தளத்தில் இறக்கிவிடப்பட்ட நான் மின்தூக்கி வழியாக மேலே சென்றேன். என்னுடன் அங்கே பணியாற்றும் துப்புரவுத்தொழிலாளர் சிலரும் வந்தனர். ஒரு தொழிலாளி அப்போதுதான் மணம் முடித்திருந்தார். அவரது இளம் மனைவியை விமானநிலையத்தைக் காட்ட கூட்டிவந்திருந்தார். இவையெல்லாமே பார்வையிலேயே தெரிந்தன.

ஷாநவாஸ்

தடித்த மஞ்சள்கயிறும் பெரிய மூக்குத்தியும் அணிந்திருந்த அந்தப்பெண் மனக்கிளர்ச்சி தாளாமல் சிரித்துக்கொண்டே இருந்தாள். அவளை கணவன் சிரிக்கக்கூடாது என ரகசியமாக அதட்டி கிள்ளினான். அவளால் சந்தோஷத்தை சிரிப்பாக மாற்றாமலிருக்கமுடியவில்லை. மறுபக்கம் திரும்பிக்கொண்டு மேலும் சிரித்தாள். அவள் கணவன் கையால் அவளை பிடித்தபோது அவன் தோளை மெல்லக் கடித்தாள். கண்களில் சிரிப்பை அடக்கியதன் கண்ணீர்.

ஒரு விமானநிலையம் பேரனுபவமாக ஆகிறது. பயணம் செல்லச்செல்ல ஆச்சரியப்படுவது குறைந்துவருகிறதா என்ன? அப்படித்தான் ஆகவேண்டும். ஆனால் எனக்கு இயற்கைச்சூழல்களும் மனித முகங்களும் திகட்டுவதேயில்லை. ஒவ்வொரு மனிதரும் ஒரு கதையுட்ன் செல்கிறார்கள் என்று தோன்றும் — தேன் துளியுடன் செல்லும் தேனீ போல. விமானநிலையம் முகங்களின் கொப்பளிப்பு.

முன்பெல்லாம் இந்திய விமானநிலையங்களில் சீனமுகங்கள் அதிகம் தென்ப்படுவதில்லை. இப்போது பாதிக்குப்பாதி. விரைவில் உலகமெங்கும் அவர்கள் பெருகிவிடுவார்கள் என்று தோன்றியது. விமானநிலையத்தின் சம்பிரதாயங்கள். விசித்திரமான வெளிச்சம். தூக்கக் கலக்கம். ஒவ்வொரு வெளிநாட்டுப்பயண நினைவாக எழுந்துவந்ததது. நான் 2000 த்தில் கனடா சென்றது என் முதல் வெளிநாட்டுப்பயணம்.

சிங்கப்பூர் ஏர்லைன்ஸின் விமானத்தில் நான் காலை ஆறரை மணிக்கு சிங்கப்பூரில் இறங்கினேன் – எனது உடலின் நேரம் நான்கரை மணி.விமானநிலையத்தில் சற்று முன்பு பெங்களூரில் இருந்து வந்திறங்கிய கே.ஜே.ரமேஷும், சிங்கை நண்பர்கள் ஷாநவாஸும் சரவணன் விவேகானந்தனும் வந்திருந்தனர். காரில் சித்ராவின் இல்லத்துக்குச் சென்றோம். அங்கே சிறிது ஓய்வு

விழாவில்

வந்திறங்கியதுமே நிகழ்ச்சிகள். சிங்கப்பூர் தொலைக்காட்சி நிலையத்துக்குச் சென்று ஒரு பேட்டி கொடுத்தேன். இந்தியத் தொலைக்காட்சிகளில் தோன்றுவதை தவிர்ப்பது என் வழக்கம். இங்கே என்னை தெருக்களில் என் வாசகர்கள் அல்லாதவர்கள் அடையாளம் கண்டுகொள்ளக்கூடாதென்ற எண்ணம். வெளிநாடுகளில் தேவையில்லை.

மகாலிங்கம், சபா இருவரையும் அங்கே சந்தித்தேன். மகாலிங்கம் என்னை பேட்டி எடுத்தார். சிலகாலம் அவர் இங்கே புதியபார்வை தொலைக்காட்சியில் பணியாற்றியிருக்கிறார். சுருக்கமான அப்பேட்டி சிஙப்பூரின் தேசிய தொலைக்காட்சி செய்தித்தொகுப்பில் வெளியாகியது.

இராம கண்ணபிரான்

மதியம் கிராண்ட் சான்ஸ்லர் என்னும் விடுதிக்குச் சென்றுசேர்ந்தேன். அங்கே சிறிது ஓய்வெடுத்தேன். சரவணன் விவேகானந்தன் உயிரியலில் ஆய்வுசெய்பவர். வாசகர் வட்டத்தைச்சேர்ந்தவர்.காரைக்குடி அருகே அவரது சொந்த ஊருக்கு வந்திருந்தபோது நாங்கள் சந்தித்திருக்கிறோம். நான் சிங்கப்பூரில் இருந்த ஐந்துநாட்களும் என்னுடனேயே சரவணன் இருந்தார், பகலும் இரவும். தொடர்ந்து பேசிக்கொண்டே இருந்தோம். இலக்கியம் முதல் சாதியரசியல் வரை.

எம்.கெ.குமார் நூல் வெளியீடு

மாலையில் சிறிய ஒரு ஊர்சுற்றல். இரவில் என் விடுதிக்கு சிங்கைநண்பர்கள் வந்தனர். கவிஞர் நெப்போலியன் வந்திருந்தார். சிங்கையில் நான் சந்தித்த உற்சாகமான நண்பர்களில் ஒருவர். பிரியமும் உற்சாகமுமாக பேசும் அவரது குரலும் தோற்றமும் என்னை மிகவும் கவர்ந்தன. இங்கே சில சினிமாக்களில் பாடல்கள் எழுதியிருக்கிறார். காணாமல்போன கவிதைகள் என்ற கவிதைத் தொகுதியை வெளியிட்டிருக்கிறார்.
சிங்கை தொலைக்காட்சியில் பணியாற்றும் சதக்கத்துல்லா வந்திருந்தார். வைக்கம் முகமதுபஷீர் பற்றி நிறைய பேசிக்கொண்டோம்.

மறுநாள் மாலை ஐந்தரை மணிக்கு சிங்கப்பூர் நூலகக் கட்டிடத்தில் வாசகர் வட்ட வெள்ளிவிழா. சித்ரா ரமேஷ் எழுதிய ‘ஒருநகரத்தின் கதை’ என்னும் வரலாற்றுநூல், எம்.கே.குமார் எழ்திய ‘சூரியன் ஒளிந்தணையும் பெண்’ என்னும் கவிதைநூல், ஷாநவாஸ் எழுதிய ‘அயற்பசி’ என்னும் பண்பாட்டாய்வுநூல் மூன்றும் வெளியிடப்பட்டன. நிறைந்த அரங்கில் ஓர் உற்சாகமான விழா.

அறையில் உரையாடல்

வழக்கமாகச் சொற்பொழிவுகளுக்குக் குறிப்புகள் எடுத்துக்கொள்ளும் நான் அன்று மேடையேறுவதற்குச் சிலநிமிடங்களுக்கு முன்புவரை எந்த எண்ணமும் அற்றவனாக இருந்தேன். சொல்லப்போனால் அத்தனை பேச்சுகளுக்கும் நடுவே நான் வெண்முரசைப்பற்றித்தான் நினைத்துக்கொண்டிருந்தேன்.

அறைக்கு வந்து பேசிக்கொண்டிருந்த நண்பர்கள் பன்னீர்செல்வம் ஈஸ்வரன், கணேஷ் ஆகியோருடன் பேசிக்கொண்டே சென்றபோது திருக்குறளுக்கு ஓர் உரை எழுதவேண்டும் என நான் எங்கோ எழுதியிருந்ததைச் சுட்டிக்காட்டி ‘ஏற்கனவே பல உரைகள் உள்ளனவே ஏன் புதிய உரை?’ என கணேஷ் கேட்டார். அதற்கு நான் சொன்ன பதிலையே விரிவாக பேசலாமென முடிவெடுத்தேன்.

உரை

தயாரிப்பில்லாமலும் என்னால் பேசமுடியும் என எனக்கே தெரிந்தது. ‘மொழியில் உறையும் ஞானம்’ என அவ்வுரையை நானே தலைப்பிட்டுக்கொண்டு தலைப்பையே அதன் கட்டமைப்பாக ஆக்கிக்கொண்டேன். நல்ல உரை என்று நண்பர்கள் சொன்னார்கள்

மறுநாள் சிங்கப்பூர் வாசகர் வட்டம் சார்பில் வாசகர்களுடன் ஒரு கலந்துரையாடல் ஏற்பாடாகியிருந்தது. அதில் நான் வாசகர்கள் கேட்ட வினாக்களுக்குப் பதில் சொன்னேன். பெரும்பாலானவர்கள் வெண்முரசை தொடர்ந்து வாசித்துக்கொண்டிருப்பது தெரிந்தது. வெண்முரசு சார்ந்தே பல வினாக்கள் அமைந்திருந்தன.

சரவணன் விவேகானந்தனும் மனைவியும்

இந்தப்பயணத்தில் ஊர்சுற்றுவதற்கு நிகராகவே நண்பர்களையும் சந்தித்துக்கொண்டிருந்தேன். சரவணன் விவேகானந்தனின் ஆய்வுக்கூடத்துக்குச் சென்றேன். சிங்கப்பூர் நண்பர் பரணி இல்லத்துக்கு மதிய உணவுக்குச் சென்றேன். பரணி நண்பர் ஷாஜி, பிரபஞ்சன் போன்றவர்களை முன்னர் சிங்கப்பூருக்கு அழைத்து விழா எடுத்திருக்கிறார். சிறநத வாசகர்.

அதற்கு அடுத்தநாள் காலை கணேஷ் அவர்களின் செட்டிநாடு உணவகம் சென்று சாப்பிட்டேன். ஷாநவாஸின் பரோட்டா சிறப்பு உணவகம் சென்றேன். [உயிர்மை வெளியீடாக ஷாநவாஸின் முதல் நூல் ‘முட்டைபரோட்டாவும் சாதாரண பரோட்டாவும்’ வெளிவந்துள்ளது]

பரணி குடும்பத்துடன்

அழகுநிலா, பாரதி மூர்த்தியப்பன் ,சித்ரா ரமேஷ் ஆகியோருடன் சென்று சைதன்யாவுக்கு ஒரு மெல்லிய தங்கச்சங்கிலி வாங்கினேன் – மூன்று பெண்கள் சேர்ந்து செய்த தெரிவு.சைதன்யாவுக்கு பொதுவாக நான் எதுவும் வாங்கிக்கொடுப்பதில்லை. சொல்லப்போனால் எவருக்குமே எதுவுமே வாங்குவதில்லை. அவர்கள்தான் எனக்கு வாங்கி பரிசளிப்பது வழக்கம்.

சைதன்யாவுக்கு நான் வாங்கிய முதல்நகை அது. கத்தரிப்பூ நிறமான செவ்வந்தி கல் [Amethyst] கொண்ட் சிறிய தொங்கல் கொண்டது. வீட்டுக்கு வந்து அதை அவளுக்குக் கொடுத்தபோதுதான் நகைகள் எல்லா பெண்களுக்கும் பரவசம் அளிப்பதைப் புரிந்துகொண்டேன். கப்ரியேல் கர்ஸியா மார்க்ஸ்யூஸையும் லத்தீனமேரிக்க எழுத்துக்களையும் வாசித்து தன்னை அறிவுஜீவி என்று பந்தாவாக நினைத்துக்கொள்ளும் பதினேழுவயதுக்காரியையும்கூட

கலந்துரையாடல்

சிங்கப்பூரின் நுரையீரல் என்று சொல்லப்படும் புகிட் திமா என்ற சிறிய குன்று நகர்நடுவே உள்ளது. அங்கே ஓர் இயற்கையான காட்டை பராமரிக்கிறார்கள். காலையில் ஒரு காலைநடைசெல்லலாமா என்று நண்பர் கேட்டார். அவரே காலையில் வந்து அழைத்துச்சென்றார். உற்சாகமான நடை. இரவு இரண்டு மணிவரை பேசிக்கொண்டிருந்தபின் காலை ஆறுமணிக்கே கிளம்பி சென்றிருந்தபோதிலும்கூட நடையை மிகவும் ஊக்கமூட்டுவதாக உணரமுடிந்தது

ஆனால் காடு ஒருவகையில் உயிரற்றும் இருந்தது. குரங்குகள் இருந்தன. பறவைகள் மிகமிகக்குறைவு. பெரும்பாலானவை பழமோ கொட்டைகளோ விளைவிக்காத மரங்கள். பறவைகள் சிங்கப்பூரை அழுக்காக்குகின்றன என்று நகரெங்கும் பறவைகளே இல்லாமல் செய்திருக்கிறார்கள். பறவைகளை அங்கே உருவாக்கப்பட்டுள்ள பறவைக்காப்பகத்தில் வலைக்கூண்டு போட்ட வானில்தான் காணமுடியும்.

சிங்கப்பூர் காட்டில்…

சிங்கப்பூரின் மூத்த எழுத்தாளனாரன் இராம கண்ணபிரான் அறைக்கு வந்தார். என்னுடைய பல படைப்புகளை அவர் வாசித்திருந்தது வியப்பளித்தது. பள்ளி ஆசிரியராக இருந்து ஓய்வுபெற்றவர். சிங்கப்பூரின் நேற்றைய சித்திரம் பற்றி அவர் பேசியது ஆர்வமூட்டுவதாக இருந்தது. தொடர்ந்து மூன்றுநாட்களும் இரவில் நண்பர்கள் அறையில் பார்க்கவந்தனர். இரண்டு மணிவரை அறையில் நெருக்கியடித்துக்கொண்டு அமர்ந்து இலக்கியம் அரசியல் கலை என பேசிக்கொண்டே இருந்தோம்.

நூலக அதிகாரியான திருமதி புஷ்பலதா இரவில் சிங்கப்பூரைச் சுற்றிக்காட்டினார். இரவில் ஓங்கிய கட்டிடங்கள் வானை மறைக்கும் நகரம் ஹாலிவுட் சினிமாக்களில் உலவும் உணர்வை அளித்துக்கொண்டிருந்தது. நான் வாழ்வது ஒரு அரைக்கிராமத்தில் என்பதனால் பெருநகரம் உருவாக்கும் வியப்பும் திகைப்பும் இன்னும் குறையாமலிருக்கிறது போலும் என நினைத்துக்கொண்டேன்

மறுநாள் சரவணனுடன் சென்று சிங்கப்பூரின் கடல்முகத்தைப் பார்த்தேன். ஆறுவருடம் முன்பு பார்த்த அதே இடம். ஆனால் அங்கே அந்த சிங்கமுகச் சின்னம் மற்றும் டுரியன் ப்ழவடிவிலான கூடம் மற்றும் சில கட்டிடங்களை மட்டுமே என்னால் அடையாளம் காணமுடிந்தது. புதியதாக கட்டப்பட்ட பிரம்மாண்டமான கஸினோ அப்பகுதியின் அடையாளமாக ஆகியிருந்தது. இரு பெரும் கட்டிடங்களுக்குமேல் கப்பல் ஒன்று அமர்ந்திருப்பதுபோன்ற அமைப்புள்ளது

அஞ்சப்பரில் கடைசி நாள் உணவு

கடைசிநாளில் யூசுப் ராவுத்தரும் அவரது மனைவி ஆயிஷாவும் வந்திருந்தனர். ஆனந்தி என்ற வாசகி என் குழுமத்தைச்சேர்ந்த எம்.ஏ.சுசீலாவின் மாணவி. வெண்முரசுவை தொடர்ந்து ஆழ்ந்து வாசித்துவருவதாகச் சொன்னார். சித்ரா ரமேஷின் தம்பி ராம்ஜியும் அவரது துணைவியும் விடுதிக்கு வந்திருந்தனர்.

மணிவேலன் சிங்கப்பூரில் கட்டுமானத் தொழிலில் இருக்கிறார். சிறந்த வாசகர். சுரேஷ் என்னும் நண்பர் வந்திருந்தார். கடைசிநாள் அனைவரும் அஞ்சப்பரில் உணவுண்டுவிட்டு சிங்கப்பூரின் தாவரவியல்பூங்காவுக்குச் சென்றிருந்தோம் . அங்கே உருவாக்கப்பட்டுள்ள பிரம்மாண்டமான செயற்கை மரங்கள் அறிவியல்புனைகதை உலகுக்குள் நுழைந்ததுபோன்ற பிரமையை எழுப்பின.

வானோங்கிய கட்டிடங்கள் எனக்கு பெரிய மன எழுச்சியை அளிப்பதில்லை. ஆனால் சிங்கப்பூரின் கட்டிடங்களுக்கு முன் நிற்கையில் தொழில்நுட்பமும் நவீன அழகியலும் இணைந்து உருவான ஒரு புதிய உலகை சந்திப்பதன் நிறைவை அடைந்தேன். அங்கே தெரிந்த மனிதர்களில் இருக்கும் நிற-இனக்கலவை உருவாகிவரும் புதிய மானுடமாக இருக்கும் என எண்ணிக்கொண்டேன்.

சிங்கப்பூர் அருண்மொழி கால் வைக்கும் முதல் அன்னியநாடு. அவளுக்கு அன்று அது ஒரு பெரிய பரவசத்தை அளித்தது. நவீன நிர்வாகவியல், நவீன அறிவியல் இரண்டும் இணையும்போது உருவாகும் விளைவுக்கு அந்நகரம் ஒரு சான்று. ஏராளமான இந்தியர்களுக்கு அவர்கள் காணும் ‘முதல் உலக’ மாதிரியும் அதுதான். இப்போதும் எனக்கு அந்த வியப்பு எஞ்சியிருந்ததை உணர்ந்தேன்

கணேஷின் உணவகத்தின் கல்லாவில்

ஆனால் அங்கே காற்றுமாசுபாடு இருப்பதை என் நுரையீரல் எனக்குக் காட்டியது. டெல்லி,பெங்களூர் போன்ற நகரங்களில் வெளிக்காற்றுக்கு வந்தேன் என்றால் குமரியின் தூயகாற்றுக்குப் பழகிப்போன என் நுரையீயல் கோபம்கொள்ளும். தும்மல் வந்தபடியே இருக்கும். சென்னை ஓரளவு பரவாயில்லை என்றாலும் சென்னையிலும் நான் கூடுமானவரை வெளிக்காற்றுக்கு வருவதில்லை. தூசு,புகை போன்றவை உண்மையில் பெரிய காற்றுமாசுபாடுகள் அல்ல. ரசாயன மாசுபாடுதான் சிக்கலானது.

சிங்கப்பூரில் சமீபத்தில் தமிழ்மக்கள் கலவரம்செய்த லிட்டில் இந்தியா பகுதியில்தான் நான் தங்கியிருந்தேன். ஞாயிறன்று அங்கே பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட கட்டுமானத் தொழிலாளர்கள் கூடி எங்கும் தலைகளாகத் தெரிந்தது. ஒவ்வொரு குழுவும் ஒவ்வொரு ஊர். அங்கே கூடி அரட்டை, சீட்டு போடுவது என ஒரு சமான இந்தியாவை உருவாக்கிக்கொண்டிருந்தனர்.

வழியனுப்ப வந்தவர்கள்

மார்ச் 4 ஆம் தேதி விமானநிலையத்துக்கு ஏராளமான நண்பர்கள் வந்து என்னை வழியனுப்பினர். விமானநிலையத்துக்குள் நுழையும் கணம் வரை பேசிக்கொண்டிருந்தேன், விசிஷ்டாத்வைதம் பற்றி அதி தீவிரமான உரையாடலை பாதியில் விட்டுவிட்டு உள்ளே நுழைந்தேன்.

[மேலும் படங்கள் ]

முந்தைய கட்டுரைமுதற்கனல் சிறப்புப்பதிப்பு
அடுத்த கட்டுரை‘வெண்முரசு’ – நூல் இரண்டு – ‘மழைப்பாடல்’ – 13