2003ல் லோகித்தாஸ் கஸ்தூரிமான் படத்தை தமிழில் இயக்க முன்வந்தபோது அவருக்கு தமிழில் கூடவே உதவ ஓர் ஆள் தேவைபப்ட்டது. நானும் லோகியும் பாலக்காடு அருகே லக்கிடி என்ற ஊரில் உள்ள லோகியின்ளைல்லத்தில் இருக்கும்போது என்னிடம் கூடவே இருக்க முடியுமா என்றார். நான் அதற்கு என்னால் முடியாது என்றேன். என்ன செய்யலாம் என்று சிந்தித்து பலரிடம் ·போனில் பேசியபோது ஒரு நண்பர் மீரா கதிரவனைப்பற்றிச் சொன்னார்
மீராகதிரவன் பாலுமகேந்திராவின் கண்டுபிடிப்பு. தங்கர் பச்சானிடமும் உதவியாளராக பணிபுரிந்தவர். மலையாளப்படங்களில் ஆர்வம் கொண்டு அதற்காகவே மலையாளம் கற்றுக்கொண்டார். தரமான மலையாளத் திரைக்கதைகளை மொழியாக்கம் செய்ய வேண்டும் என்ற ஆசையில் லீனா மணிமேகலையின் கனவுப்பட்டறை வெளியிட்டாக எம்.டி.வாசுதேவன்நாயரின் ‘நிர்மால்யம்’, பத்மராஜனின் ‘பெருவழியம்பலம்’ அடூர் கோபாலகிருஷ்ணனின் ‘எலிப்பத்தாயம்’ போன்ற திரைக்கதைகளையும்ளாடூர் கோபாலகிருஷ்ணனின் ‘சினிமாவில் உலகம்’ என்ற நூலையும் மொழியாக்கம் செய்திருந்தார்.
லோகி அவரை பாலக்காட்டுக்கு வரச்சொன்னார். பார்த்ததுமே அவருக்கு மீரா கதிரவனை பிடித்துப்போயிற்று. ‘அதற்கு அவன் பெயர்தான் காரணம் என்று பொறாமைக்காரர்களும் அவதூறுக்காரர்களும் சொன்னால் நான் அதை மறுக்கப்போவதில்லை’ குறும்புச்சிரிப்புடன் தாடியை வருடியபடி சொன்னார் லோகி.
லோகி மீரா கதிரவனை தன்னுடனேயே வைத்துக்கொண்டார். கதைக்கருவை தமிழாக்கம் செய்யும் இடம் முதல் படத்தின் போஸ்டர்களை அச்சுக்குக் கொடுக்கும் தருணம் வரை கதிர் லோகியுடன் இருந்தார். இடம் பார்த்தல், படப்பிடிப்பு, ஒலிச்சேர்க்கை எல்லாவற்றிலும் ஆர்வத்துடன் ஈடுபட்டார். அந்தப்படத்தில் ஒஅல வசனங்களும் அவர் படம் எடுக்கும் இடத்தில் இருந்து எழுதியவையே.
காரில் லோகியுடன் மீரா கதிரவன் செல்லும்போது யாராவது கேரளத்தில் இருந்து தொலைபேசியில் அழைப்பார்கள். லோகி குறும்புச்சிரிப்புடன் கண்ணடித்தபடி சாதாரணமாக ‘சினிமாவுக்குப் போகிறேன்… கூட மீரா உண்டு’ என்பார். லோகிக்கு மீராகதிரவன் மேல் அபாரமான நம்பிக்கை இருந்தது. ‘சுள்ளென்று ஒரு பையன்..’ என்பார்.
கஸ்தூரிமானுக்குப் பின் சினிமாவில் கற்றுக்கொள்ள ஏதுமில்லை என்ற எண்ணம் ஏற்பட்டு மீரா கதிரவன் சினிமா வாய்ப்புக்காக முயல ஆரம்பித்தார். வழக்கமாக சினிமாவில் முயல்பவர்கள் தங்களுடைய இலட்சியப்படத்தை இரண்டாவது படமாக வைத்திருப்பார்கள். ஒரு வணிகப்படத்தை எடுத்து வெற்றி பெற்று அதன் பின் அந்தப்படத்தை எடுப்பதைப்பற்றி திட்டம் போடுவார்கள்.
ஆனால் உண்மையில் அந்த முதல் முயற்சிகள் பெரும்பாலும் தோல்வியாகவே அமையும். பின்னர் அந்த இலட்சியப்படத்தை எடுக்கவே முடியாது. ஆனால் யார் அந்த இலட்சியப்படத்தை முதல்படமாகவே எடுக்கிறார்களோ அவர்களே புதிதாக எதையேனும் உள்ளே கொண்டுவருகிறார்கள். வெற்றி பெறுகிறார்கள். முதல் முயற்சி தவறி இரண்டாவது ஒரு வாய்ப்பு கிடைப்பவர்கள் பாலாஜி சக்திவேல் போல வசந்தபாலன் போல சிலரே.
மீரா கதிரவன் முதலிலேயே அவரது இலட்சியப் படத்தை எடுக்க முயன்றார். அதற்காக திட்டமிட்டு செயல்பட்டார். சொந்த செலவில் படத்துக்கு ஒரு முன்னோட்டத்தை ஒளிப்பதிவு செய்தார். அந்த முன்னோட்டத்தைக் கண்டு மோஸர்பேயர் நிறுவனம் அவரை இயக்குநராக்கியது.
அவள்பெயர் தமிழரசியின் எல்லா நிலைப்படங்களும் அது எந்த அளவுக்கு வித்தியாசமான, காட்சியழகுள்ள, யதார்த்தமான படம் என்பதைக் காட்டுகின்றன. இன்று தமிழில் அதிகமாக எதிர்பார்க்கப்படும் படங்களில் ஒன்றாக உள்ளது அவள்பெயர் தமிழரசி. லோகியின் பல படங்கள் அடிவயிற்றில் கத்தி செருகப்பட்டதுபோல ஒரு ஆழமான உள்நடுக்கத்தை உருவாக்கக்கூடியவை. அவள்பெயர் தமிழரசி அத்தகைய கதை.
படத்தின் இசை வெளியீட்டுவிழா நவம்பர் 2 அன்று சென்னை சாந்தம் அரங்கில் நடைபெறுகிறது. நானும் பங்கேற்க வேண்டும் என்று மீரா கதிரவன் சொன்னார். இசைவெளியீட்டுவிழா என்பது ஓர் இனிய சிறு சடங்கு. சில நட்பு முகங்களை பார்க்கலாம்.
மீரா கதிரவனைப்போன்றவர்கள் உள்ளே நுழைவதே தமிழ் சினிமாவுக்கு வெற்றிதான். அவரது படங்கள் வெல்வதென்பது ஒரு புதிய அலையின் தொடக்கம்.