இன்று மதியம் உணவுக்குப்பின் அலுவலகத்தில் தூங்கிக் கொண்டிருந்தபோது மூன்றுபேர் என்னைப் பார்க்க வந்தார்கள். ஒரு சினிமாக்குழு. இயக்குநர் வ.கௌதமனை நான் முன்பு ஒருமுறை சத்தித்திருக்கிறேன். லோகித்தாஸ் கஸ்தூரிமான் படத்தை எடுத்துக்கொண்டிருக்கும்போது பரணி ஒலிப்பதிவரங்கத்தில் வைத்து அவரைச் சந்தித்து பேசிக்கொண்டிருந்தேன்.
கௌதமன் இலக்கிய ஆர்வமுள்ளவர். இலக்கியங்களை சினிமாவாக ஆக்கும் மலையாளப்பாணியை தமிழுக்குக் கொண்டுவரவேண்டும் என்று விரும்பினார். அதற்காக நீல.பத்மநாபனின் தலைமுறைகள் நாவலின் உரிமையை வாங்கி வைத்திருந்தார். அதற்கான திரைக்கதை எழுதியது 1997ல். அன்றில் இருந்து அதற்காக முயற்சிசெய்துவந்திருக்கிறார்.
நடுவே ஒருபடம் இயக்கினார். ‘கனவே கலையாதே’ என்ற அந்தப்படத்தை அவர் எண்ணியதுபோல இயக்க முடியவில்லை. முதல்பட இயக்குநருக்கு அம்மாதிரி சிலசமயம் ஆகும். அந்தப்படம் தோல்வி அடைந்தது. முதல்படம் தோல்வியடைவதென்பது மிக அபாயமகரமானது, அதற்கான காரணம் என்னவாக இருந்தாலும் அதன் விளைவு இயக்குநருக்குத்தான். முதல்படம் கிடைக்க எத்தனை வருடங்களாகிறதோ அதைவிட இருமடங்கு காலமாகும் அடுத்தபடம் கிடைக்க.
கௌதமன் மனம் தளராமல் முயன்றார். நான் முதலில் சந்திக்கும்போது ஒரு தயாரிப்பாளர் அமைந்து படத்தை தொடங்கும்நிலையில் இருந்தார். அந்த திரைக்கதையைப் பற்றியே பேசிக்கொண்டிருந்தார். ஆனால் அம்முயற்சி தட்டிப்போயிற்று. ‘எப்டியும் எடுத்திருவேன் சார்’ என்று அழுத்தமாகச் சொன்னார்.
அதன் பின் மக்கள் தொலைக்காட்சியில் இரு தொடர்களை இயக்கினார். முதல் தொடர் ஆட்டோசங்கர். இரண்டாவது தொடர் அவருக்கு பெரும் புகழைப்பெற்றுத் தந்த சந்தனக்காடு. வீரப்பனைப்பற்றியது அது. அதன் காட்சியமைப்புகளை பாலா மிகவும் பாராட்டிச் சொன்னார். திரைப்படங்களுக்குரிய நேர்த்தியுடன் எடுக்கப்பட்ட தொடர் அது
மேலும் பல தொடர்களுக்கு முன்னணி தொலைக்காட்சிகளில் வாய்ப்பு வந்தும்கூட அதை உதறிவிட்டு கௌதமன் தலைமுறைகளை படமாக்குவதிலேயே குறியாக இருந்தார். இப்போது படம் ஆரம்பித்துவிட்டார். ‘மகிழ்ச்சி’ என்ற பேரில் தலைமுறைகள் திரைப்படமாகிறது. சீமானும் கௌதமனும் முக்கியமான கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள்.
நீலபத்மநாபன் 12 வருடங்களாக கௌதமன் தன் நாவாலைப் படமாக்கும் நாளுக்காக காத்திருந்தார். அவருக்கு இது படமாகுமா என்ற ஐயம் எப்போதும் இருந்தது. சூழலை அவர் அறிவார். ஆனால் ‘அந்த தம்பி நல்ல பையனாக்கும் தெறமையானவன்’ என்று சொல்வார்.
நாகர்கோயில் சுற்றுவட்டங்களில்தான் மகிழ்ச்சி வரும் நவம்பர் 3 முதல் எடுக்கப்படுகிறது. தக்கலை அருகே உள்ள இரணியல்தான் கதைக்களம். நீலபத்மநாபனின் மாஸ்டர்பீஸ் என்று சொல்லப்படும் இந்நாவல் 1958ல் வெளிவந்தது. வந்ததுமே அதை க.நா.சு தமிழின் முதல் யதார்த்தநாவல் என்று கொண்டாடினார். மிக யதார்த்தமாக மிகையே இல்லாமல் எழுதப்பட்ட நாவல் அது. கூனன்கானிபாட்டா போன்ற அற்புதமான கதாபாத்திரங்கள் கொண்டது. ஒளிப்பதிவாளரும் கவிஞருமான செழியனும் கூடவே வந்திருந்தார். அடூர் கோபாலகிருஷ்ணன் படங்களின் கலை இயக்குநரான
இலக்கியத்தின் திரைவடிவங்கள் எப்போதுமே புதிய ஒன்றை உள்ளே கொண்டுவருகின்றன. கௌதமனிடம் எதிர்பார்ப்போம்