காந்திய தேசியம் 2

எப்போது அரசியலில் காந்தி நுழைகிறாரோ அப்போதே அவருக்கு எதிர்கால இந்தியா குறித்த மாபெரும் இலட்சியக்கனவு இருந்திருக்கிறது. 1909லேயே அவர் தன்னுடைய கொள்கைவிளக்க நூலான ‘ஹிந்த் ஸ்வராஜ்’ ஐ எழுதிவிட்டார். அந்நூலில் நாம் காந்தி தேசம் என்றும் தேசியம் என்றும் எதை உத்தேசித்தார் என்பதை துல்லியமாகவே வாசிக்கலாம். கடைசிவரை காந்தி அந்த இலட்சியத்தில் இருந்து பின்வாங்கவில்லை.

அந்தோனி பாரெல் தொகுத்த ‘காந்தி சுதந்திரமும் தன்னாட்சியும்’ [ Gandhi, Freedom, and Self-Rule, Anthony J. Parel] என்ற நூல் காந்தியின் தேசிய உருவகம் என்ன என்பதை அறிந்துகொள்ள மிகமிக முக்கியமான ஒரு வழிகாட்டி. அந்தோனி பாரெல் ஏற்கனவே காந்தியின் ஹிந்து சுயராஜ் நூலை விரிவான குறிப்புகளுடன் பதிப்பித்தவர்[ Hind Swaraj and Other Writings] ஹிந்துசுயராஜ் குறித்த ஒரு பலமுனை அலசல் என்று காந்தி சுதந்திரமும் தன்னாட்சியும் நூலைச் சொல்லலாம். ஏறத்தாழ இந்த ஆய்வில் விவாதிக்கவிருக்கும் எல்லா விஷயங்களும் அந்நூலில் சுருக்கமாக பேசபப்ட்டுவிட்டன.

தேசியத்தின் வருகை

இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் கீழைநாடுகளெங்கும் ஐரோப்பிய தேசியவாதம் ஓர் அலை போல வந்து பரவியது. ஆங்கிலம் கற்ற அனைத்து நடுத்தர வற்கத்தினரும் அந்தக் கனவால் தூக்கிச்செல்லப்பட்டார்கள். ஐரோப்பா உருவாக்கிக்கொண்ட நவீன தேசிய உருவகம் அவர்களை பிறநாடுகள் மீது அதிகாரம் செலுத்துபவர்களாகவும் செல்வ வளம் மிக்கவர்களாகவும் ஆக்குவதை அவர்கள் கண்டார்கள். ஆகவே அத்தகைய ஒரு தேசிய உருவகத்தை தாங்களும் அடைய விரும்பினார்கள்.

உதாரணமாக, ஹிட்லரின் மெய்ன் காம்ப் என்ற நூல் அதுவெளியான சில வருடங்களுக்குள்ளாகவே ப.ராமசாமி என்ற தேசியவாதியால் தமிழில் மொழியாக்கம் செய்யப்பட்டு மலேசியாவில் கொலாலம்பூரில் இருந்து வெளியாகியது. அன்று ஹிட்லர் சோர்ந்துகிடந்த ஒரு நாட்டுக்கு தேசியவாதம் மூல உணர்வூட்டி எழுப்பிய வீரநாயகனாகவே கருதப்பட்டார். இத்தாலிய தேசியவாதிகளான மாஜினி, கரிபால்டி போன்றவர்கள் இந்திய சிந்தனையில் ஆழமான பாதிப்பை உருவாக்குபவர்களாக இருந்தார்கள் அன்று.

ஐரோப்பிய தேசியவாதத்தை அதன் வெற்றிகளைக்கொண்டு மட்டுமே மதிப்பிடும்போக்கு என இதைச் சொல்லலாம். அதன் வரலாற்றுக்காரணங்களும் அதன் விளைவுகளும் ஆராயப்படவில்லை. அந்த வகையான தேசியமே ஒரே வழி என்று நம்பப்பட்டது. ஒருவகையில் அந்த நவீன ஐரோப்பிய தேசியக் கருத்தாக்கம் வழியாகத்தான் கீழைநாடுகளில் நவீன அரசியலே தோன்றியது.

இந்தியாவை எடுத்துக்கொண்டால் இங்கே இரண்டுவகையான ஆட்சிகள் இருந்தன. ஒன்று இந்தியாவின் பெரும்பாலான பகுதிகளில் நிலவிய மன்னராட்சி. இரண்டு பிற இடங்களில் பிரிட்டிஷாரின் நேரடி ஆட்சி. ஆனால் அதுவும்கூட மன்னராட்சியே. இங்கிலாந்து ராணியின் ஆட்சி. என்ன வேறுபாடு என்றால் மன்னராட்சியில் நிலப்பிரபுத்துவ மதிப்பீடுகள் ஆளும் கருத்தியலாக இருந்தன. ஆசாரங்கள் மரபுகள் மற்றும் நம்பிக்கைகளே ஆட்சியை நிறுவி காத்தன. பிரிட்டிஷ் இந்தியாவில் பிரிட்டிஷாரின் ஆயுத வலிமையும் அதன்மூலம் அவர்கள் அளித்த சட்டத்தின் ஆட்சிக்கு இந்திய நடுத்தர வர்க்கம் அளித்த ஆதரவும் அடிப்படையாக அமைந்தன.

இரு ஆட்சியிலும் உள்ள பொதுவான அம்சம் என்னவென்றால் குடிமைச்[ சிவில்] சமூகத்துக்கு அதிகாரத்தில் பங்களிப்பே இல்லை என்பதுதான். மக்கள் அரசியல்படுத்தபடவில்லை. தங்கள் சொந்த வாழ்க்கையின் மாறாத சக்கரச்சுற்றலில் அவர்கள் அப்படியே நூற்றாண்டுப்பழைய வாழ்க்கையை வாழ்ந்தனர். குடிமைச்சமூகத்தில் இருந்து கிளைத்த அரசியல்சமூகம் ஆட்சியுடன் ஒட்டிக் கொண்டு எல்லா நலன்களையும் அனுபவித்தது. பதிலுக்கு ஆட்சிக்கான அனுமதியை அது குடிமைச்சமூகத்தில் உருவாக்கி அளித்தது.

ஒருநவீன தேசியம் குடிமைச்சமூகத்தை அரசியல்படுத்தும் என்றும் அதன் மூலம் உருவாகும் அரசியல் மாற்றம் வலுவான தேசிய அரசை உருவாக்கும் என்றும் அன்றைய நடுத்தர வர்க்கத்தில் உள்ள சிலர் எண்ணியமையாலேயே ஐரோப்பிய நவீன தேசியவாதம் இங்கே கொண்டுவரப்பட்டது. அன்று உருவாகி வந்த இதழியல், பொதுக்கூட்டம் போன்ற நவீன ஊடகங்கள் அதற்கு உதவின. ஆகவே அது வேகமாக இந்தியாவில் பரவியது. இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் இந்திய அச்சு ஊடகங்களில் எல்லாம் எவரேனும் நவீன ஐரோப்பிய தேசியத்துக்காக குரல்கொடுத்திருப்பதைக் காணலாம்.

அத்துடன் ஏற்கனவே நவீனமயமாதல் இந்தியாவில் சிறிய அளவில் ஆரம்பித்தாகிவிட்டிருந்தது. அதை பிரிட்டிஷார் அவர்களின் சொந்த நிர்வாக வசதிக்காக உருவாக்கினார்கள். தரப்படுத்தப்பட்ட பொதுக்கல்வி, போக்குவரத்து வசதி, தகவல்தொடர்பு வசதி ஆகியவை இந்தியாவின் பிரிட்டிஷ் பகுதிகளில் நவீனமயமான சமூகம் ஒன்றை மெல்லமெல்ல கட்ட ஆரம்பித்தன. அத்துடன் தொழிற்சாலை உற்பத்திமுறை உருவாகி தொழிலாளர்வர்க்கம் என்ற ஒருங்கிணைக்கப்பட்ட உழைப்பாளி அமைப்பு உருவாகியது. இவையனைத்துமே நவீன தேசியத்தை நோக்கி தள்ளக்கூடிய அம்சங்கள்.

இரண்டு வகை தேசியங்கள்.

ஐரோப்பிய நவீன தேசியத்தில் இருந்து இரண்டு வகையான தேசிய உருவகங்கள் உருவாகி வந்தன என்று சொல்லலாம். ஒன்று, தாக்கும்தன்மை கொண்டதும், ஒற்றை அதிகார மையம் கொண்டதும், ஒற்றைப்பண்பாட்டை தன் அடிப்படையாக வலியுறுத்துவதுமான மையத்தேசியம். இறுக்கமான கட்டமைப்பு கொண்ட இந்த தேசியம் தன்னை ஒரு இயந்திரமாக உருவகித்துக்கொண்டது. இந்த தேசிய உருவகமே பதினெட்டாம் நூற்றாண்டில் சமூகம் மனம் இயற்கை பிரபஞ்சம் எல்லாவற்றையுமே இயந்திர விதிகளின்படி உருவகித்த ஐரோப்பிய இயந்திரவியல் காலகட்டத்தின் சிருஷ்டி எனலாம்.

வலுவான மையமே இதன் அடிப்படை. அந்த மையத்தை வலுப்படுத்தும் கூறுகளினால் ஆனதே இதன் ஒட்டுமொத்தக் கட்டமைப்பும். இந்த தேசியம் எப்போதுமே தீவிரமான இலக்குகள் கொண்டது. உலகை வெல்லுதல் முதல் ஐரோப்பாவில் முதலிடம் பிடித்தல் வரை. அந்த இலக்குக்கு ஏற்பவே அதன் எல்லா கூறுகளும் வடிவமைக்கப்பட்டிருக்கும். அந்த இலக்குக்கு ஒவ்வாத எதுவுமே தேவையற்றவையாக கருதப்படும். எப்படி ஓர் இயந்திரம் செயலாற்றலுக்காகவே அதன் வடிவத்தை அடைந்திருக்கிறதோ அப்படி செயலாற்றும் கூறுகளினால் மட்டுமே ஆனது இது.

இதற்கு இன்று காட்டப்படும் மிகச்சிறந்த உதாரணம் ஹிட்லரே. ஆனால் ஐரோப்பாவில் எல்லா நாடுகளிலும் எப்போதும் ஏதேனும் ஓர் அளவில் இந்தவகையான தேசியம் இருந்திருக்கிறது — பிரிட்டனைத்தவிர. பெரும்பான்மையான ஐரோப்பிய நாடுகளை நவீன காலகட்டத்துக்கு கொண்டுவந்தவர்கள் இந்த வகையான தேசிய உருவகத்தை மனதில் கொண்டவர்களே. உதாரணம் நெப்போலியன், பிஸ்மார்க், கரிபால்டி.

வலிமையான மையம் தேவை என்ற காரணத்தாலேயே இந்த வகையான தேசியம் சர்வாதிகார அரசமைப்பையே இயல்பாக நாடக்கூடியது.. பெரும்பாலான ஐரோப்பிய நாடுகளில் சர்வாதிகார ஆட்சி வலுவாக இருந்திருக்கிறது. அதற்கு வாய்ப்பே இல்லாதிருந்த நாடு என்றால் பிரிட்டன் மட்டுமே. ஹிட்லரும் முசோலினியும் இந்த மையத்தேசியக் கருத்தாக்கத்தை பயன்படுத்தியே ஆட்சியை பிடித்தார்கள். இவ்விருவருடைய எழுத்துக்களிலும் இத்தகைய தேசியத்தை விளக்கக்கூடிய, அறைகூவக்கூடிய ஏராளமான வாதங்கள் குவிந்து கிடக்கின்றன.

இந்த தேசியம் மைய அரசில் வரம்பில்லா அதிகாரத்தைக் குவிக்கக்கூடியது. ஆகவேதான் சர்வாதிகாரிகளை இது உருவாக்குகிறது. ஹிட்லரும், முசோலினியும், ஸ்டாலினும், முஸ்தபா கமால் பாஷாவும் இதன் சிருஷ்டிகளே. ஹிட்லர் முதலியோர் இவ்வகை தேசியத்தை பயன்படுத்தி உருவாக்கிய பேரழிவுக்குப் பின்னரும்கூட ஐரோப்பாவில் சார்ல்ஸ் டி கால்[பிரான்ஸ்] , பிரான்ஸிஸ்கோ பிராங்கோ [ஸ்பெயின்] மார்ஷல் டிட்டோ [யூகோஸ்லாவாகியா] போன்ற சர்வாதிகாரிகள் ஆட்சியில் நீடித்தனர், புதிதாக உருவாகியும் வந்தனர். இன்று ஐரோப்பா மேல் தோற்றத்தில் இந்தவகையான தேசிய உருவகத்தைவிட்டு வெளியே நகர்ந்துவிட்டதாக தோன்றினாலும்கூட இது ஐரோப்பிய உளவியலில் மிக வலிமையாக இருந்துகொண்டிருக்கும் ஒன்றுதான்.

இந்த மையத்தேசியத்தின் முக்கியமான சிறப்பியல்பு என்னவென்றால் இது மன்னராட்சிக்கு எளிதான மாற்றாக அமைய முடியும் என்பதே. மன்னராட்சிக்கு அடிப்படையாக இருக்கும் தேசிய பெருமிதம், அது சார்ந்த பண்பாட்டுக்கூறுகள் ஆகிய அனைத்தையும் இது அப்படியே பயன்படுத்திக்கொள்ள முடியும். பலநாடுகளில் மன்னராட்சி அப்படியே நவீன மையத்தேசியமாக உருமாற்றம் பெற்றது. மிகச்சிறந்த உதாரணம் ஜப்பான்.

விரைவாக முடிவெடுக்கும் சாத்தியம், ஈவிரக்கமில்லாமல் மாற்றங்களைக் கொண்டுவரும் தன்மை, முரண்பாடுகளை அடக்குமுறை மூலமே இல்லாமல்செய்யும் போக்கு ஆகியவற்றின் மூலம் இத்தகைய தேசியம் மிக எளிதாக கண்முன் தெரியும் பல சமூகச் சிக்கல்களை மேலோட்டமாகக் களைந்து பொருளாதார முன்னேற்றத்தையும் சமூக ஒற்றுமையையும் காட்ட முடியும். அந்த சர்வாதிகாரி உண்மையான மக்கள் நலம்நாடுபவராக இருந்தால் அந்த மாற்றங்கள், அதன் அழிவுகளுடனேயே, நல்ல விளைவுகளை அளிக்க முடியும். அதற்கு இன்றும் முஸ்தபா கமால் பாஷாவே உதாரணமாகக் காட்டப்படுகிறார். துருக்கி இன்றும் இஸ்லாமிய சீரழிவுப்போக்குக்கு செல்லாமல் வளமான அமைதியான நாடாக நீடிப்பது அவர் உருவாக்கிய வலிமையான அடிப்படைகளினால்தான்.

இந்த மையத்தேசியம் தாக்கும் தன்மை கொண்டது. ஏனென்றால் இது உருவாக்கும் மையம் ஒரு செயல்நோக்கம் இல்லையேல் நீடிக்காது. அச்செயல்நோக்கம் உணர்வுபூர்வமானதாக இருக்கவேண்டுமென்றால் எளியவழி தேசிய எதிரிகளை கற்பனைசெய்து கொள்வதே. அந்த எதிரிக்கு எதிரான போரிலேயே உறுதியான மையத்தையும் அதை காத்து நிற்கும் அமைப்பையும் சாதாரணமாக உருவாக்க முடியும்.

அல்லது ‘உலகைவெல்லும்’ கனவு தேவை. தேசிய அடையாளத்தை ஊதிப்பெருக்கி, உலகின் தலைமைக்குடிகளாக ஒவ்வொருவரையும் கருதிக்கொள்ளச் செய்து, அதன் மூலம் உலகைக் கைப்பற்றும் கனவை ஓவ்வொரு மனதிலும் ஊட்டி, அதன் வழியாக அவர்களை மையம் நோக்கி திரட்ட முடியும். ஐரோப்பிய நவீன மையத்தேசியம் என்பது இவ்விரு சாத்தியங்களில் ஏதேனும் ஒன்றை அல்லது இரண்டையும் பயன்படுத்திக்கொண்டதாகவே இருக்க முடியும். ஹிட்லர் முதலில் தேசிய எதிரிகளை எதிர்கொள்வதற்காக மையத்தேசியத்தை முன்வைத்தார். பின் உலகை வெல்லும் கனவை உருவாக்கினார்.

மையத்தேசியத்தின் பிதாமகர் பிளேட்டோ. தகுதியான ஒரு உட்சமூகத்தால் தேர்வுசெய்யப்பட்டு தத்துவ வாதியால் தலைமை தாங்கப்படும் ஒரு முற்றதிகார அரசாங்கமே அறிவுபூர்வமானது என்று பிளேட்டோ என்ணினார். அவரது குடியரசு உலகம் முழுக்க உள்ள முற்றதிகார ஆட்சியாளார்கள் அனைவருக்குமே ஆதர்சமாக இருந்திருப்பதைக் காணலாம். உதாரணமாக ருஷ்யாவில் ஸ்டாலின் அனைத்ததிகார ஆட்சியின்போது ‘தத்துவ வாதியான ஆட்சியாளன்’ பிளேட்டோ கண்ட கனவு ஸ்டாலினால் நிறைவேறுகிறது என்று பிரச்சாரம்செய்யப்பட்டது.

ஸ்பெயின், பிரான்ஸ், பிரிட்டன், டென்மார்க், பெல்ஜியம் என எல்லா ஐரோப்பிய நாடுகளிலும் மையத்தேசியம் இருந்திருக்கிறது. அதுதான் காலனியாதிக்கமுறையை உலகம் மீது ஏற்றியது. உலக நாடுகளைச் சுரண்டி மேலும் மேலும் செல்வம் சேர்த்தது. ஐரோப்பா நவீனமயமானது இந்த மையத்தேசியங்கள் உருவாக்கிய செல்வ வளம் மூலமே. விளைவாக அங்கே கல்வி தொழில்நுட்பம் ஆகிய இரண்டும் வளர்ந்தன. அந்நாடுகளால் சுரண்டப்பட்ட நாடுகளில் உள்ள படித்த மக்கள் இந்த வெற்றிகளை மட்டுமே கண்டார்கள். இவ்வெற்றிகளுக்குக் காரணமான மையத்தேசிய உருவகத்தின் மீது ஆழமான நம்பிக்கை கொண்டார்கள்.

ஆனால் ஒரு மையத்தேசியம் பிற மையத்தேசியங்களுக்கு எதிரானதாகவே இருக்க முடியும். ஊன்உண்ணி மிருகங்கள் மந்தையாவதில்லை. ஆகவேதான் இரு உலகப்போர்கள் உருவாயின. உலக வளங்களை பங்கிடுவதில் மையத்தேசியங்கள் நடுவே உருவான பூசலே அந்த போர்களையும் பேரழிவுகளையும் உருவாக்கியது. அதை அந்த நாட்டு அறிஞர்கள் உணர்ந்தபோதிலும்கூட மையத்தேசிய கனவை சுமந்தலைந்த பிர உலக நாட்டு அறிவுஜீவிகள் அனேகமாக உணரவில்லை.

மேலும் மையத்தேசிய உருவகம் மேலும் இருபது வருடங்கள் ஐரோப்பாவில் ஆட்சி செலுத்தியது. 1960 களுக்குள் ஐரோப்பாவில் இருந்த பெரும்பாலான மையத்தேசியங்கள் சரிந்தன. உலகளாவிய நம்பிக்கையை ஏற்படுத்தியிருந்த கடைசி மையத்தேசிய அரசு ஸ்டாலினின் ருஷ்யாதான். 1954ல் குருஷேவ் பதவிக்கு வந்து ஸ்டாலினின் கொடுமைகள் வெளியே தெரிய ஆரம்பித்ததும் அந்த கனவும் சரிந்தது. ஆனாலும் அறிவுஜீவிகளில் ஒரு சாராரிடமும் மக்களில் கணிசமானவர்களிடமும் எப்போதும் மையத்தேசியம் என்ற கனவு எப்போதும் இருந்துகொண்டுதான் இருக்கிறது.

மையத்தேசியம் சார்ந்த கனவு யாரிடம் இருக்கிரது என்று பார்த்தால் உலகமெங்கும் சில பொதுத்தன்மைகள் உள்ளன.

1. மரபுகளை அப்படியே பேணவேண்டும் என எண்ணுகிற பாரம்பரியவாதிகள் இயல்பாகவே மையத்தேசியத்தை நோக்கிச் செல்கிறார்கள். அவர்களைப்பொறுத்தவரை மேலான வாழ்க்கை என்பது இறந்த காலத்திலேயே இருக்கிறது. பழைய பெருமையை மீட்பது என்பது இவர்களில் எப்போதும் இருக்கும் கனவு. அப்பெருமையை இழக்கக் காரணமான வரலாற்று எதிரிகள் அவர்கள் முன் எப்போதும் இருப்பார்கள்.

2.தேசியத்தை அரசியல், பொருளியல் ஆதிக்கத்துக்கான கருவியாகக் காண்பவர்கள் மையத்தேசியமே அதற்குச் சிறந்தது என்று எண்ணுகிறார்கள். மையத்தேசியம் இயல்பாகவே ராணுவத்தன்மை கொண்டது. ஒரு இயந்திரம் போல விரைவானது, கச்சிதமானது, தாக்கும்தன்மை கொண்டது. பிறநாடுகளை வெல்லத்தேவையான சுயபெருமிதக் கருத்தியலை அதனால் எளிதில் உருவாக்கிக் கொள்ள முடியும்.

3. தன்னுடைய சொந்த அறிவுத்திறன் மற்றும் நிர்வாகத்திறனில் அபரிமிதமான மதிப்பு கொண்டுள்ள அறிவுஜீவிகள் மையத்தேசியத்தை விரும்புகிறார்கள். சமூகத்தில் தாங்கள் உத்தேசிக்கும் மாற்றங்களை மையத்தேசியம் அளிக்கும் முற்றதிகாரம் மூலம் மிக எளிதாக மக்களிடையே பரப்பி சமூகத்தை தலைகீழாகத்திருப்பிவிடலாமென இவர்கள் நம்புகிறார்கள்.

4.சமூக இயக்கம் குறித்த இயந்திரவாதப் புரிதல்கள் உள்ள கோட்பாட்டாளர்கள். இவர்கள் சமூகத்தை திட்டவட்டமாக பகுத்து பிரித்து ஆரய்ந்து உறுதியான புரிதல்களை அடைய முடியும் என நம்புகிறார்கள். ஆகவே இவர்களுக்கு பழுதில்லாத செயல்பாடுள்ள தேசிய அமைப்பு தேவைபப்டுகிறது. அது மையத்தேசியமே.

ஐரோப்பாவில் உருவான இரண்டாவது வகையான தேசிய உருவகம் தாராளப்போக்குள்ள [லிபரல்] தேசியம். தாராளத்தேசியத்தின் வேர்களும் ஐரோப்பிய மறுமலர்ச்சியின்போதே உருவாகி வந்தவைதான். தாராளவாதம் என்பது ஐரோப்பிய சிந்தனையின் ஒரு முக்கியமான அடித்தளம்.

ஐரோப்பிய சிந்தனையில் ஆழமான பாதிப்பைச் செலுத்திய தனிமனித உரிமை என்ற கருதுகோளின் சிருஷ்டி இது. இன்றும் ஐரோப்பிய- அமெரிக்க சிந்தனையில் அடிப்படை இயக்க விசையாக இது உள்ளது.

தாராளவாதம் மேலைச்சிந்தனையில் அறிவொளிக்காலம் [Age of Enlightenment] முதல் ஆரம்பித்தது என்று சொல்வது மரபு. ஆனால் அதன் வேர்கள் கிரேக்க சிந்தனையில் உள்ளன. அரிஸ்டாடிலின் உலகியல்வாதம், ஞானத்தை ஒரு குறிப்பிட்டவகையான அறிதல்முறைக்குள் நிறுத்தாமல் எலலா அறிதல்களையும் தொகுத்து சிறந்ததை எடுக்கவேண்டும் என வாதிடும் தெரிவுவாதம் [ Eclecticism] பிரபஞ்சமும் இயறகையும் அளிக்கும் இயல்பான அறிவுடன் மனிதன் தன் சிந்தனையை பொருத்திக்கொள்ளவேண்டும் என வாதிடும் இயல்பறிவுவாதம் [ Stoicism] போன்றவற்றை இச்சிந்தனைகளின் அடிப்படைகளை அமைத்தவை என்கிறார்கள்.

பதினாறாம் நூற்றாண்டுவரை ஐரோப்பாவில் இருந்து வந்த இரண்டு மையக்கருத்தோட்டங்களுக்கு எதிராக அவை உருவாயின. ஒன்று பிறப்பிலேயே மன்னர்களுக்கும் பிரபுக்களுக்கும் மண்ணையும் மக்களையும் ஆளும் ‘புனித உரிமை’கள் உள்ளன என்ற எண்ணம்.[ Divine Right]. இரண்டு, ஒரு மதநம்பிக்கையாளனின் ஆத்மா தேவாலயத்துக்கு ஒப்புக்கொடுக்கப்பட்டிருக்கிறது என்ற கருத்து.

அவற்றை எதிர்த்து பதினாறாம் நூற்றாண்டின் இறுதியில் ஐரோப்பிய நாடுகளில் உருவானதே அறிவொளிக்காலம் என்று சொல்லலாம். அறிவொளிக்காலம் தனிமனிதன் சுதந்திரமான ஆன்மீகத்தேடலுக்கும் , தன் ஆளுமையை முழுமைசெய்துகொள்ளுதலுக்கும் உரிமை கொண்டவன் என வாதிட்டது. ஒவ்வொரு தனிமனிதனும் கரணிய ஞானம் [Reason] கொண்டவன், அவனது செயல்களுக்கு அதன் மூலம் அவனே பொறுப்பேற்றுக்கொள்ள வேண்டும், சமூகம் என்பது அத்தகைய சுதந்திரமான தனிமனிதர்களால் ஆனதாக இருக்கவேண்டும், அரசு அவர்களின் கரணியஞானத்தின் மலர்தலுக்கு இடமளிப்பதாக இருக்கவேண்டும் என்றது.

கரணிய ஞானத்தை மானுட சாரமாக முன்வைத்தவர் இமானுவேல் காண்ட். அறிவொளிக்காலத்தின் ஒரு கட்டமாக கரணியஞானக் காலகட்டம் [Age of Reason] உருவாகி வந்தது. அதிலிருந்து பின்னர் பகுத்தறிவுக்காலகட்டம் [Age of Rationality] உருவாகியது. நவீன அறிவியல் சிந்தனைகளுக்கான தத்துவ அடிப்படையை இதுவே உருவாக்கி அளித்தது. மார்க்ஸியம் உட்பட உள்ள சமூகவியல், அரசியல் கோட்பாடுகளுக்கு விதைநிலமாக அமைந்தது.

பதினேழாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் வாழ்ந்தவரான பிரிட்டிஷ் தத்துவசிந்தனையாளர் ஜான் லோக் [John Locke] தாராளவாதத்தின் தந்தை என்று சொல்லப்படுகிறார். சமூகநலனால் மட்டுமே தனிமனித உரிமை எல்லை வகுக்கப்படவேண்டும் என்பதே அவரது சிந்தனையின் சாரம் எனலாம். சமூகம் என்பது சுதந்திரமான தனிமனிதர்கள் தங்கள் பொதுநன்மைக்காக உருவாக்கிக்கொள்ளும் ஓர் அமைப்பே.

தனிமனிதனின் மனத்தைப்பற்றிய லோக்கின் கருத்துக்கள் விரிவான சிந்தனைகளுக்கு தளம் அமைத்தன. எந்த தனிமனிதனும் சமூகத்தின் சிருஷ்டியே என்று லோக் சொன்னார். இன்றுவரை மேலைச்சிந்தனையின் ஒரு முக்கியமான கருத்தோட்டமாக இது உள்ளது. ஒவ்வொரு மனிதனும் ‘வெற்றுத்தாளாக’ [tabula rasa] பிறக்கிறான் என்றும் சூழலே அவனது எல்லா சிந்தனைகளையும் ஆளுமையின் தனித்தன்மையையும் உருவாக்குகிறது என்று அவர் சொன்னார். இது ஆதிபாவம் முதலிய கிறித்தவ சிந்தனைகளுக்கு மாற்றாக அமைந்தது.

தனிமனிதனின் ஆளுமையை முழுமையாக விரிவடையச்செய்வதாக அமையும் ஒரு சமூக அமைப்புக்காக லோக் வாதாடினார். ஆகவே சுதந்திரம் என்பதே சமூகத்தின் இலட்சியமாக இருக்கவேண்டும். ஒவ்வொரு தனிமனிதனுக்கு சமூகத்துடன் ஒரு கடமைப்பாடு உள்ளது. ஒரு சமூகமாக மனிதர்கள் கூடி வாழ்வதென்பது அச்சமூகத்தின் அனைத்து உறுப்பினர்களும் பொதுவாகவே கொள்ளும் ஒரு புரிந்துணர்வின் அடிப்படையிலேயே ஆகும். அதில் அச்சமூகத்தின் கூட்டுநலன்களுக்கு எதிராக இல்லாமலிருப்பத்தான் அதன் சாரம்.

அந்த கடமைப்பாட்டை மீறாதவரை அவனுடைய தனிமனித உரிமைகளை சமூகம் தடுக்கக் கூடாது. ஒவ்வொரு தனிமனிதனின் அனுமதியுடன்தான் சமூக அதிகாரமும் அரசாங்கமும் உருவாக்கப்படவேண்டும் என்று லோக் வாதிட்டார். இதை அவர் ஆளப்படுபவனின் அனுமதி [consent of the governed.] என்றார். நவீன ஜனநாயகத்தின் அடிபப்டை விதி என்பது இதுவே. தனிமனிதர்கள் அளிக்கும் ஒட்டு மொத்த அனுமதியினாலேயே சமூக விதிகள் நிலைநிற்கின்றன, அவற்றுக்கு எந்த புனிதமும் இல்லை என்ற இச்சிந்தனை மேலைநாட்டு அரசியலில் மிகப்பெரிய பாதிப்புகளைச் செலுத்திய ஒன்றாகும்.

தனிமனித அடிப்படை உரிமைகள் இயற்கையே மனிதனுக்கு அளித்தவை என்று இச்சிந்தனைகள் வாதிட்டன. ஆகவே சுயமாகச் சிந்திக்கவும் தன் விருப்பபடி வாழ்க்கையை அமைத்துக்கொள்ளவும் அவனுக்கு உரிமை இருக்கிறது. அது பிறர் உரிமையை தடுக்காதவரை அதன் மீதான கட்டுப்பாட்டை விதிப்பது இயற்கைக்கு மாறான செயல் என்றனர் இவர்கள். இன்றுவரை இந்திய அரசியல் சட்டம் உட்பட அனைத்திலும் ஆழமான பாதிப்பைச் செலுத்தியிருக்கும் கருத்துநிலை இது. அடிபப்டை உரிமைகள் என்று நம் அரசியல்சட்டம் இதையே சொல்கிறது

ஏறத்தாழ ஒரு நூற்றாண்டுக்காலம் இதுசம்பந்தமாக மிக விரிவான விவாதங்கள் நடந்துள்ளன. சிந்தனைச்சுதந்திரம், கருத்து தெரிவிக்கும் சுதந்திரம், ஆன்மீக சுதந்திரம், இன்பநாட்டத்துக்கான சுதந்திரம் ஆகியவற்றை சமூகம் தன் உறுப்பினர்களுக்கு உறுதிப்படுத்த வேண்டும் எனப்பட்டது. பிரெஞ்சுப்புரட்சியின் அடிப்படையாகக் கூறப்பட்ட சுதந்திரம் சமத்துவம் சகோதரத்துவம் ஆகியவையும் சரி அமெரிக்க புரட்சியின் அடிபப்டை வார்த்தைகளான பலரிலிருந்து ஒன்று [ E pluribus unum] ஆகியவை நவீன தாராளவாதச் சிந்தனைகளின் கவித்துவ வெளிப்பாடுகளே.

லோக்கின் சிந்தனைகளையே வால்ட்டேர் ரூஸோ போன்றவர்கள் பிரான்சில் வளர்த்தெடுத்தார்கள். அதுவே பிரெஞ்சுப்புரட்சிக்கும் அமெரிக்கப் புரட்சிக்கும் வழிவகுத்தது. அச்சிந்தனைகளை உலகமெங்கும் கொண்டு செல்வதற்கு பிரெஞ்சு,அமெரிக்கப் புரட்சிகளைப் பற்றிய கிளர்ச்சியூட்டும் எழுத்துக்கள் காரணமாயின.

இந்தியாவில் ஆங்கிலக் கல்வி பரவலானபோது கூடவே ஆங்கில இலக்கியம் வழியாக தாராளவாதச் சிந்தனைகளும் அறிமுகமாயின. குறிப்பாக அக்கால மாணவர்களில் ஷெல்லி உருவாக்கிய பாதிப்பு மிக ஆழமான ஒன்று. இந்தியப் பல்கலைகழகங்களில் தத்துவதில் மிக அதிகமாக ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டவர் லோக் தான் என்று சொல்லப்படுகிறது. பிரிட்டிஷ் தாராளவாதம் எந்த அளவுக்கு இந்திய சிந்தனைகளை தொடர்ந்து பாதித்தது என்பதற்கான உதாரணமாக இதைச் சொல்லால்லாம்.

லோக் ஐரோப்பாவில் நிரூபணவாதத்துக்கான அடிப்படைக்கோட்பாடுகளை அமைத்தவர். தாராளவாத நோக்கு என்பது பத்தொன்பதாம் நுற்றாண்டின் அறிவியல் நோக்காக இருந்த நிரூபணவாதத்தில் இருந்து பிரிக்க முடியாத ஒன்றாகும்.தா¡ராளவாதம், தனிமனித உரிமை, கரணிய நோக்கு ஆகியவை ஒரே கருத்தின் மூன்று பட்டைகள் என்றும் சொல்லல்லாம்.

தாராள அரசை ஆதரிப்பவர்கள் எத்தகைய இயல்புடையவர்கள் என்பதை பொதுவாக கீழ்க்கண்டவாறு வகுக்கலாம்

1. நிரூபண வாத அறிவியல் நோக்கில் ஆழமான நம்பிக்கை கொண்டவர்கள். எந்த ஒரு விஷயத்தையும் தெளிவாக புறவயமாக நிரூபித்தாலொழிய ஏற்க மறுப்பவர்கள். ஆகவே இவர்கள் மரபு சார்ந்த எந்த விஷயத்தையும் ஏற்பதில்லை.மரபான அதிகாரத்தை உருவாக்கும் நம்பிக்கைகள் ஆசாரங்கள் படிமங்கள் எதிலும் இவர்கள் ஒன்றுவதில்லை. நிரூபணவாதம் என்பது ஓர் உண்மையை பகுப்பாய்வுசெய்வதற்கான தனிமனிதனின் உரிமையைச் சார்ந்தே செயல்படுவது. தனிமனித அறிவுக்கு உண்மையை பகுப்பாய்வு செய்து அறியும் ஆற்றல் உண்டு என்ற நம்பிக்கையின் அடிப்படையில் எழுவது. ஆகவே அதை தனிமனித சுதந்திரம் என்பதில் இருந்து பிரிக்க முடியாது

2. பன்மைத்தன்மையிலும் உரையாடலில் நம்பிக்கை கொண்ட இலட்சியவாதிகளான சிந்தனையாளர்கள். ஞானம் என்பது ஒற்றைப்படையானதல்ல என்றும் வாழ்க்கையின் எல்லா தளங்களிலும் எல்லாவகையான மக்களிடமும் ஏதோ ஓரு வகையில் ஞானம் உள்ளது என்றும் எல்லாவகையான அறிதல்களும் ஏதேனும் வகையில் முக்கியமானவையே என்றும் இவர்கள் நம்புகிறார்கள். அத்தகைய பலவகையான ஞானங்கள் ஒன்றுடன் ஒன்று உரையாடுவதன் மூலமே மானுட ஞானம் என்பது உருவாகிறது என்று நம்புகிறார்கள். அதற்கான சிறப்பான சூழல் உருவாவதர்கு தாராள அரசே உதவிகரமானது என்று இவர்கள் நினைக்கிறார்கள்.

3 மானுட அறிதலின் எல்லைகளைப் பற்றிய பிரக்ஞை உள்ள அறிவுஜீவிகளும் தாராள அரசையே ஏற்கிறார்கள். நாம் அறிந்தவற்றை மட்டும் வைத்து எல்லாவற்றையும் மதிப்பிட்டுவிடமுடியாது என்றும் வரலாற்றின் இயல்பான பரிணாமப்போக்குக்கு தடையாக நம் குறுகிய ஞானம் ஆகிவிடலாகாது என்றும் எண்ணுகிறார்கள். ஆகவே எல்லாவகையான சாத்தியங்களுக்கும் இடமிருக்கக் கூடிய, எது வரலாற்றின் தேவையோ அது நிகழ்வதற்கான வாய்ப்பளிக்கக்கூடிய ஓர் அரசே தேவை என இவர்கள் எண்ணுகிறார்கள்.

4. மனிதனின் கடைசிக்குறிக்கோள் இவ்வுலக இன்பமே என்று எண்ணுகிறவர்களுக்கும் தாராளவாத அரசே உவப்புடையதாக இருக்கிறது. மனிதனை ஏதேனும் ஒரு இலட்சியத்திற்காக உருவாக்கப்பட்டவன் என்றோ ஏதேனும் ஒரு கருத்துக்காக அவன் வாழவும் சாகவும் விதிக்கப்பட்டவன் என்றும் இவர்கள் நம்புவதில்லை. இன்பநாட்டம் என்பது மனிதனின் ஆதார இயல்பு. அதற்கான சமூக அனுமதியை அவனுக்கு முழுமையாக அளிப்பது தாராள அரசே என்று இவர்கள் நினைக்கிறார்கள்.

தாராளவாத அரசு என்பது இன்று உலகமெங்கும் பரவலாக உள்ள அரசு வடிவம் எனலாம். நலம்நாடி அரசும் தாராளவாத அரசும் ஒன்றே எண்ணம் உலகமெங்கும் நிலவுகிறது. ஜனநாயகம் தாராளவாதம் இரண்டும் ஒரே நாணயத்தின் இரு பக்கங்கள் என்ற எண்ணமும் எங்கும் உள்ளது. ஆகவே நடைமுறையில் எபப்டி இருந்தாலும் பெரும்பாலான அரசுகள் தங்களை தாராளவாத அரசுகளாகச் சொல்லிக்கொள்ள வேன்டிய நிலையில் உள்ளன.

அதுவே மானுடம் கண்ட அரசு வடிவங்களில் ஆகச்சிறந்தது என்ற எண்ணம் இன்று உலகம் முழுக்கவே வலுவாக உள்ளது. அந்த அரசை மேலும் தாராளமானதாக ஆக்க என்ன செய்யலாம் என்ற அளவிலேயே அரசியல் சிந்தனைகள் இன்று முன்னெடுக்கப்படுகின்றன. பிறிதொருவகையிலான அரசுக்கான தேட்டம் எங்குமே இல்லை என்றே சொல்லவேண்டும்.

[மேலும்]

முந்தைய கட்டுரைபசும்பொன்
அடுத்த கட்டுரைபசும்பொன்: கடிதங்கள்