ஒருங்கிணைதலின் தேசியம்௧
நேற்று ஒரு நண்பர் வீட்டுக்கு வந்து பேசிக்கோண்டிருக்கும்போது காந்தியைப்பற்றிய பேச்சு வந்தது. அவர் ஆர்.எஸ்.எஸ்.இயக்கத்தவர். அவ்வியக்கத்தைச் சேர்ந்த ஒரு அம்மையார் காந்தி பிரிட்டிஷாரின் கைக்கூலி என்றவகையில் ஒரு பெரிய நூல் எழுதியிருப்பதைச் சொன்னார். ‘இந்து அரசின் மறைவு :காந்தியும் அவரது சுதந்திரப் போராட்டமும்’ [Eclipse of the Hindu Nation: Gandhi and HIS Freedom Struggle , Radha Rajan] அந்நூலை தான் ஏற்றுக்கொள்ளவில்லை என்று சொன்ன அவர் ஆனால் அப்படி எண்ணும் ஏராளமானவர்கள் இருப்பதாகச் சொன்னார். இந்நூலைப் புகழ்ந்து ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தின் அமைப்புகள் கட்டுரைகள் எழுதித்தள்ளுகின்றன. ஆர்கனைசர் போன்ற அதிகாரபூர்வ இதகளில் கூட சாதகமான மதிப்புரைகள் வருகின்றன.
அந்நூலைப்பற்றி இணையத்தில் தேடி அதன் சுருக்கத்தை தெரிந்துகொண்டேன். ஒரு சராசரி பிராமண சாதியாதிக்க மனம் எப்படிச் செயல்படும் என்பதற்கான மிகச்சிறந்த உதாரணம் இந்நூல். இன்றும் என்றும் அழியாமல் இந்திய சிந்தனையில் இருந்துகொண்டிருக்கும்ம் கரியநிழலின் ஒரு கருத்துநிலை.
ஆனால் அதை ஒரு தரப்பாக நிறுத்திக்கொண்டுதான் நாம் இந்திய சிந்தனையை, இந்து ஞானமரபை, இந்திய அரசியலைப் பற்றிப் பேச முடியும். எப்படி ஐரோப்பிய சிந்தனையில் பாசிசம் கிரேக்கப் பண்பாட்டின் ஆரம்பம் முதலே இருந்துகொண்டிருக்கிறதோ அதேபோல இது இந்திய சிந்தனைமரபில் கலந்து என்றும் இருக்கிறது. இதையும் சேர்த்துத்தான் நாம் இந்தியப் பண்பாடு என்கிறோம்.
மதம் தேசியமாக மாறும் மந்திரம்
இந்நூலின் சாராம்சம் என்ன என்பதை என்னால் புரிந்துகொள்ள முடியும், ஏன் என்றால் இச்சிந்தனையின் மையத்தில்தான் நான் என் முதிரா இளமைப்பருவத்தில் சில வருடங்களைச் செலவழித்திருக்கிறேன். இதன் அடிப்படை நோக்கு என்பது சிலவகையான எளிமைப்படுத்தல்களில் இருந்து ஆரம்பிக்கிறது. அவற்றை இப்படிச் சுருக்கிச் சொல்லலாம்
1 தொல்பழங்காலம் முதல் இந்திய நிலப்பரப்பில் இருந்து வந்த பன்மைத்தன்மை கொண்ட பண்பாட்டுத்தேசிய உருவகத்தை நவீன ஐரோப்பாவில் உருவாகிவந்த ஒற்றைமைய அரசியல்தேசியமாக உருவகித்துக்கொள்வது.
2 பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதியில் தொடங்கிய இந்து மதச் சீர்திருத்த இயக்கங்களையும் அதன் நீட்சியாக உருவான இந்திய மறுமலர்ச்சியுகத்தையும் எல்லாம் ஒட்டுமொத்தமாக நவீன இந்து தேசியத்தின் உருவாக்கத்தின் வளர்ச்சிக்கட்டங்களாக பார்ப்பது.
3. இந்து மதத்தை ஒற்றைமையமுள்ள ஒரு கட்டுமானமாக உருவகித்துக்கொள்வது
4. அந்த இந்து மதத்தை அப்படியே நவீன ஐரோப்பிய பாணியிலான இந்து தேசியமாக உருமாற்றி எண்ணிக்கொள்வது
5.இந்திய மக்களில் பெரும்பாலானவர்கள் இந்துக்கள் என்பதனால் அவர்கள் இந்து தேசியத்தின் மையப்படுத்தப்பட்ட அமைப்பை ஏற்கனவே ஏற்றுக்கொண்டுவிட்டார்கள் என்று எண்ணிக்கொள்வது.
இந்த ‘பஞ்சபிரமை’களில் அடிப்படையில் மேற்கொண்டு ஆதாரங்களைத் ‘திரட்டி’ இந்தியாவில் உருவாகி வந்த இந்து தேசியத்தை காந்திதான் கெடுத்தார் என்று வாதாடுகிறார்கள். காந்தி அப்படி கெடுப்பதென்றால் அது பிரிட்டிஷ் சதியாகத்தானே இருக்க வேண்டும்? ஆகவே காந்தி பிரிட்டிஷாரால் இந்திய அரசியலுக்குள் புகுத்தப்பட்ட ஓர் ஐந்தாம் படை என்கிறார்கள். கிட்டத்தட்ட எழுபதாண்டுக்கால வரலாறுள்ள இந்த ஓடையின் வழியாகவே ராதா ராஜனும் ஒழுகிச் செல்கிறார் என ஊகிப்பது எளிது.
இந்த ஒட்டுமொத்தச் சிந்தனையையே நான் ஒருவகை ‘பண்பாட்டுப் பண்டமாற்றுக் கொள்கை’ என்று சொல்வேன். எதை வேண்டுமானாலும் இந்து தேசியமாக மாற்றிக்கொடுக்கக் கூடிய ஒரு வங்கி இவர்களிடம் இருக்கிறது. இந்துஞான மரபை, பௌத்த-சமண மரபை, இந்தியப் பண்பாட்டை, இந்திய மறுமலர்ச்சியை, சைவத்தை, வைணவத்தை, சத்தியசாயிபாபாவை எதை வேண்டுமானாலும் கொடுங்கள் கச்சிதமாக இந்து தேசியமாக மாற்றி வெளியே நீட்டும்.
மேலே சொன்ன ஐந்துமே வரலாற்றுணர்ச்சி இல்லாத வெறும் மனப்பிரமைகள் மட்டுமே என்று ஊகிப்பதற்கு இந்திய வரலாற்றை ஒருமுறை மேலோட்டமாக வாசித்துப்பார்த்தாலே தெரியும். பழங்காலம் முதலே இந்திய நிலப்பகுதி ஒரு பண்பாட்டுத்தேசமாக உருவகிக்கப்பட்டிருக்கிறது. ‘ஆசேது ஹிமாசலம்’ என்று அதன் எல்லை வகுக்கப்பட்டிருக்கிறது. கங்கையும் காவிரியும் வரை அதன் நதிகள் அடையாளப்படுத்தப்பட்டிருக்கின்றன. தெற்கே இருந்து காசிக்கும் வடக்கிலிருந்து கன்யாகுமரிக்கும் அதன் தீர்த்தயாத்திரைகள் வகுக்கப்பட்டிருக்கின்றன.
ஆனால் இது இன்றைய நவீன தேசியம் அல்ல. அரசியல்,பொருளியல் மையம் கொண்ட ஒரு உறுதியான நிர்வாக அமைப்பையே நாம் நவீனதேசியம் என்கிறோம். அது ஐரோப்பாவில் பதினாறாம் நூற்றாண்டுமுதல் மெல்ல மெல்ல உருவாகி வந்தது. இந்தியாவின் பண்பாட்டுத்தேசியத்தை ஒரே அரசியல் தேசியமாக ஆக்க எப்போதும் மன்னர்கள் முயன்றுவந்திருக்கிறார்கள். அதற்காக இந்தியாவை வென்றடக்குவதென்பது ஓவ்வொரு அரசருக்கும் கனவே. ரகு இமயத்தையும் கேரளத்தையும் வென்றான் என்று காளிதாசன் சொல்லும்போது செங்குட்டுவன் இமயத்தை வென்றான் என்று நாம் சொல்கிறோம்
அசோகர் முதல் அக்பர் வரை அந்தக்கனவுக்காக முயன்றிருக்கிறார்கள். முழுமையாக அது சாத்தியமானதே இல்லை. இந்தியாவில் இந்த சிறப்பியல்பை நாம் எப்போதும் காணலாம். ஒருபோதும் மொத்த இந்தியாவும் ஒரே அரசியல் நாடாக இருந்ததில்லை. அதேசமயம் பெரும்பாலான காலகட்டங்களில் இந்திய நிலத்தின் பெரும்பகுதியை ஆண்ட பேரரசுகள்தான் இந்தியாவில் இருந்திருக்கின்றன. இந்தியாவை முழுமையாக கட்டுப்படுத்திய பிரிட்டிஷ் அரசுகூட இந்தியாவை முழுக்க ஒரே நாடாக ஆளவில்லை .
ஆகவே எப்போதுமே ஐரோப்பிய நவீனத் தேசியம்போல ஒரு அரசியல்-பொருளியல் நிர்வாக மையம் கொண்ட தேசியம் இங்கே இருந்ததில்லை. இங்கே இந்தியாவை பெரும்பாலும் வென்று ஆண்ட அரசுகள் முதல் சிறிய அரசுகள் வரை எல்லாமே மையமில்லா அரசுகளே. கூட்டரசு என்ற அமைப்பே என்றும் இருந்தது. பிரிட்டிஷ் அரசும் அத்தகையதே. காரணம் பன்மைத்தன்மை மிக்க இந்திய சமூகத்துக்கு ஏற்றதாக உருவாகி வந்த முறை அது.
இந்தியாவில் பத்தொன்பதாம் நூற்றாண்டில் உருவாகிவந்த மதச்சீர்திருத்த இயக்கங்களின் வேர்கள் பக்தி இயக்கத்தில் உள்ளன. பத்தாம் நூற்றாண்டுமுதல் தென்னிந்தியாவில் உருவாகி பின்னர் வடக்கே பரவிய பக்தி இயக்கம் என்பது சம்பிரதாய இந்து மதநோக்குகளுக்கு முற்றிலும் எதிரானது. அது பழமையை அப்படியே தக்கவைக்கவோ மீட்டெடுக்கவோ முயலவில்லை. பௌத்தம், சமணம், இஸ்லாம் என புதிய சிந்தனைகளை உள்வாங்கிக்கொண்டு பழமையின் சாரமாக இருந்த ஆன்மீகத்தை புதுப்பிக்க முயன்றது
ஆகவே பழைமையான மத அமைப்புகளுக்கு எதிராக இருந்தது பக்தி இயக்கம். அவற்றின் காலகட்டத்தை வைத்துப் பார்த்தால் அவை சாதி, மத, இன ஆசாரங்களை மீறுபவையாக இருந்தன. பக்தி இயக்கத்தவர் பெரும்பாலும் அனைவருமே புரட்சியாளர்கள். அக்கால இந்துசமூக பழமைவாதத்தின் கடுமையான ஒறுத்தலுக்கு ஆளானவர்கள். அந்த இயக்கத்தின் நீட்சியாக அமைந்த இந்துசீர்திருத்த இயக்கங்களிலும் அந்தப்புரட்சிகரம் உண்டு.
விவேகானந்தர் போன்ற ஒருவரின் சொற்களை பார்த்தாலே அதை தெரிந்துகொள்ள முடியும். அவரது பல வரிகள் இன்றும்கூட ஆசாரமான இந்துவை உடல் எரியச்செய்பவை. இந்து மதமரபுக்கும் இந்து பக்தி மற்றும் சீர்திருத்த மரபுகளுக்கும் மகத்தான முரணியக்கம் உண்டு. அந்த உண்மையை மழுப்பியே இந்து சீர்திருத்த இயக்கத்தை சனாதனமான இந்து தேசியத்தின் மறு எழுச்சியாகச் சித்தரிக்கிறார்கள். அதற்காக விவேகானந்தரையும் காஞ்சி சந்திரசேகர சரஸ்வதியையும் ஒரே வரிசையில் அமரச்செய்கிறார்கள்.
இந்துமதம் என்றுமே ஒற்றைக்கட்டுமானமாக இருந்ததில்லை. இந்து ஞானமரபுக்குள் இருந்த ஆறுவகை மதங்களும் ஆறு தரிசனங்களும் தனித்தனியாகவே செயல்பட்டன. ஒன்றுடன் ஒன்று விவாதித்தன. அவை அனைத்தும் ஒத்துக்கொள்ளும் மையம் என ஏதும் இல்லை. அது ஒரு ஞானவிவாதக்களம் மட்டுமே. காலப்போக்கில் அவை இருமதங்களாகி பின் ஒருமதமாக கருதப்பட்ட போதும்கூட இந்துமதத்துக்குள் அந்தப்பன்மை எப்போதுமே இருந்துகொண்டிருக்கிறது. அதை ஆபிரகாமிய மதங்களைப்போல ஒற்றைமையக் கட்டுமானமாக இவர்களே உருவகித்துக்கொள்கிறார்கள்.
‘நான் நாத்திகன் ஆனால் இந்து, இதை உங்களால் மறுக்க முடியுமா?’ என்று ஒருமுறை ஜெயகாந்தன் கேட்டார். ‘நான் வேதவிரோதி, ஆனால் இந்து’ என்று ஒருவன் சொன்னால் ‘நான் கண்ணனையும், ராமனையும் ஏற்றுக்கொள்ள மாட்டேன். ஆனால் நான் இந்து’ என ஒருவன் சொன்னால் ‘நான் மறுபிறப்பையும், பாவபுண்ணியங்களையும், வேள்வியையும், வழிபாட்டையும், வேத இதிகாச மரபுகளையும் ஏற்றுக்கொள்ளவில்லை. ஆனால் நான் இந்து’ என ஒருவன் சொன்னால் இந்துமதம் என்றால் என்ன என்று அறிந்தவர் அதை மறுக்க மாட்டார். ஆனால் இவர்கள் மறுப்பார்கள். அதிகாரம் கிடைத்தால் அந்த இயல்பான பன்மையை அழிக்க நேரடி வன்முறையிலும் ஈடுபடுவார்கள்.
இந்த ஒற்றைமையமுள்ள இந்து மதம் அப்படியே இந்துதேசியமாகவும் இருக்கிறது என இவர்களே எண்ணிக்கொள்கிறார்கள். ஒருகாலத்திலும் இந்து மதத்துக்கு உறுதியான நிர்வாக அமைப்பு இருந்ததில்லை என்றும் அந்த சுதந்திரமே அதன் மகத்துவமும் வலிமையும் ஆகும் என்றும் இவர்கள் அறிவதில்லை. இந்துமதம் ஒருவருக்கு மிக அந்தரங்கமான ஞானத்தேடலையே திறந்து வைக்கிறது. அவரை ஒரு கூட்டமாக ஆக்குவதில்லை. மேலும் மேலும் தனியனாகவே ஆக்குகிறது. அதற்கும் தேசியம் போன்ற உலகியல் விஷயங்களுக்கும் நேர்தொடர்பே இல்லை
இந்த அறியாமையில் இருந்து, ஆதிக்க நோக்கில் இருந்து, பழமைவாதத்தில் இருந்து உருவான ஒரு போக்குக்கு காந்தி துரோகியாக, ஐந்தாம்படையாக, அயோக்கியனாக தெரியவில்லை என்றால் அவரது இருப்பே அர்த்தமில்லாத ஒன்றாக ஆகிவிடும் என்று எனக்குப் படுகிறது. ராதா ராஜன் போன்றவர்களின் வாயில் இருந்து காந்திக்குக் கிடைக்கும் பாராட்டுதான் காந்திக்கு பெரும் களங்கம்.
ராதா ராஜன் ஆங்கிலத்தில் பேச ஆரம்பித்திருக்கும் அதே பழைய குரல்தான். அக்குரல் ஏன் காந்தியை எதிரியாகக் கருதுகிறது என்பதற்கு வரலாற்றுக் காரணம் ஒன்று உண்டு. இந்தியாவின் உருவாக்கத்தில் தொகுப்புசக்தியாக செயல்பட்ட மூன்று கருத்தியல்கள் உண்டு. பிராமண-ஷத்ரிய கூட்டுக்கருத்தியல் முதலானது. சமண-பௌத்த கருத்தியல் இன்னொன்று. பக்தி இயக்கத்தின் கருத்தியல் மூன்றாவது.
பிராமண-ஷத்ரிய கருத்தியல் பிற அனைத்தையும் உள்ளிழுத்து சாரம்சப்படுத்தும் தன்மை கொண்டது. அதனூடாக அதிகார அடுக்கை உருவாக்குவது. வன்முறையம்சம் உடையது. இரண்டாவது, போதிக்கும் தன்மை கொண்டது, அதனால் குறைவான அளவிலேயே உள்ளிழுக்கும் தன்மை கொண்டது. அதேசமயம் உரையாடலை சார்ந்தது, அகிம்சைநெறி கொண்டது. மூன்றாவதாக, பக்தி இயக்கம். அது ஏற்கனவே இருந்த அதிகார அடுக்கை மாற்றியமைக்கும் போக்கு கொண்டது. பெருந்திரளாக மக்களைக் கூட்டும் தன்மை கொண்டது. அது சமண-பௌத்த கருத்தியல்களை உள்வாங்கிக்கொண்டு புதிதாக பிறந்து வந்தது. அதுவும் உரையாடல் தன்மைகொண்டதே.
இந்திய அரசியலின் ஒரு காலகட்டத்தில் பிராமண-ஷத்ரிய கூட்டுக்கருத்தியல் பாலகங்காதர திலகரின் தலைமையில் அரசியலாதிக்கத்தை கைக்கொள்ளும் நிலை இருந்தது. அந்த பிராமணா -ஷத்ரிய கருத்தியல் என்பது இவர்கள் சொல்வதுபோல இந்து மரபின் அல்லது இந்து தேசியத்தின் முழுமையான தரப்பு அல்ல. இந்திய மரபின் ஒரு சிறு தரப்பு மட்டுமே. இந்து மதம் என நாம் இன்று சொல்வதன் பெரும்பகுதி பக்தி இயக்கத்தின் சிருஷ்டியாகும்.
அந்த பிராமண-ஷத்ரிய கூட்டுக்கருத்தியலுக்கு எதிராக சமண-பௌத்த மரபு மற்றும் பக்தி மரபின் பிரதிநிதியாக வந்தவர் காந்தி. பிராமண-ஷத்ரியக் கருத்தியலை மொத்தமாக அரசியல் தளத்தில் இருந்து ஓரம்கட்டியவர். அவர் வாழ்நாள் முழுக்க போராடியது அதனுடன்தான். கொல்லப்பட்டதும் அதனால்தான்.
மேலே சொன்ன அந்த பிராமண-ஷத்ரியக் கருத்தியல் என்பதில் ஷத்ரியர் என்பவர்கள் நேரடியாக அனேகமாக இடம்பெறவில்லை என்பதையும் கவனிக்கவேண்டும். ஷத்ரிய வீரியம் என்ற கருத்துக்கூறு அதில் பிராமணர்களால்தான் முன்வைக்கப்பட்டது. ஆகவே அது ஷத்ரிய தர்மத்தைப்பேசும் பிராமணியக் கருத்தியலே. அது காந்தியை தன் எதிரியாகக் கருதுகிறது. இந்தியாவின் ஷத்ரிய வீரியத்தை அழித்த பனியா என அவரை நினைக்கிறது. வெறுக்கிறது, வசைபாடுகிறது, அவதூறு செய்கிறது.
இந்து மத அமைப்புக்குள் பல நூற்றாண்டுகளாக பிராமணியக் கருத்தியலுக்கும் பிற பெரும்பான்மையினரின் கருத்தியலுக்கும் இடையே போராட்டம் நடந்து வந்துள்ளது. இதை ஒரு கருத்துப்போராட்டம் என்றே சொல்லவேண்டும். ஆகவே இது உரையாடலும் கூட. பிராமணியக் கருத்தியலில் பக்தி இயக்கம் ஆழமான மாற்றங்களை செய்தது. பக்தி இயக்கத்தை பிராமணக் கருத்தியலும் பாதித்தது.
இந்த முரணியக்கம் இல்லாத தளம் இல்லை. ஆர்.எஸ்.எஸ் போன்ற அமைப்புகளுக்குள்ளேயே கூட. ஆகவேதான் ஒருபக்கம் காந்தியை தன் பிரார்த்தனையில் மகாத்மா என்று பாடுகிற ஆர்.எஸ்.எஸ்ஸின் ஒருபிரிவே ராதா ராஜனை தூக்கிப்பிடிக்கிறது. ராதாராஜன் போராடுவது ஆர்.எஸ்.எஸ்சுக்குள் உள்ள அந்த மறு குரலுடன், காந்தி மீது மதிப்புள்ள குரலுடன், மட்டுமே.
மேலும் உள்ளவை, அரசியல் காரணங்கள். இன்று இந்தியாவில் தலித்துக்களானாலும் சரி, கம்யூனிஸ்டுக்களானாலும் சரி, திராவிட இயக்கமானாலும் சரி, தங்கள் சொந்த இயலாமைக்கும் தோல்விக்கும் காந்தியின் சதி என்று சொல்வதே வாடிக்கை. இந்திய தலித் சமூகத்தின் பன்மைத்தனமையை , பண்பாட்டு ஊடுபாவுகளை கொஞ்சமும் கணித்தறியாமல் ஒற்றைப்படையான ஓர் அரசியலியக்கமாக அவர்களை திரட்ட முயன்று தோல்வியடைந்த அம்பேத்கார் அந்தத் தோல்விக்கு காந்தியையே காரணம் காட்டினார். காந்தி இந்திய நடைமுறை அரசியலில் பழங்கதையாகி விட்ட இன்றும் அவர்களால் ஒருங்குதிரள முடியவில்லை என்ற யதார்த்தமே அவருக்குப் பதிலாக நிற்கிறது.
அதேபோல பன்மைத்தன்மை கொண்ட இந்து ஞானமரபு மனிதனை அந்தரங்கமான ஞானத்தேடல்கொண்டவனாக மட்டுமே ஆக்கும் என்ற உண்மையையும், இந்து சமூகத்தின் இயல்பான பன்மைத்தன்மையையும் புரிந்துகொள்ளாமல் மூர்க்கமான ஒற்றைமையமாக்கலை தங்கள் ஒரே செயல்திட்டமாகக் கொண்டு முக்கால் நூற்றாண்டு போராடித்தோல்வியின் விளிம்பில் நிற்கும் இந்துத்துவ இயக்கங்களும் காந்தியையே அதற்கு குறை கூறுகின்றன.
மேலும் இந்திய மக்களை காந்தியில் இருந்து பிரிக்காமல் காங்கிரஸில் இருந்து அவர்களை பிரிக்கமுடியாது என்ற அரசியல் திட்டமும் இவர்களுக்கு உள்ளது. காந்திக்கு பாதுகாப்பு அவரது சத்தியமே ஒழிய ஊழலில் மூழ்கிய காங்கிரஸ் அல்ல என்பதை இவர்கள் புரிந்து கொள்ளவில்லை.
தேசியத்தின் இருமைத்தன்மை
இச்சூழலில்தான் காந்தி எண்ணிய தேசிய உருவகம் என்ன என்பதைப் பார்க்க வேண்டியிருக்கிறது. அதன் வேர்கள் என்ன, அதன் எதிர்காலச் சாத்தியங்கள் என்ன? குறிப்பாக இன்றைய சூழலில் காந்திய தேசியம் எவ்வாறு பொருள்படுகிறது?
இந்தியச் சூழலில் தேசியம் குறித்த எந்த விவாதத்தையும் இரு வகையில் பிரித்து அடையாளப்படுத்தியபின்னரே முன்னெடுக்கவேண்டியிருக்கிறது. இது அந்தந்தத் தேசியக் கருதுகோள்களின் இயல்புகளை அறியவும் அவற்றை ஒப்பிடவும் இன்றியமையாதது. அவற்றை இரண்டு இருமைகளாக உருவகித்துக்கொள்ளலாம். ஒன்று, ‘கூட்டுத்தேசியம் X பிரிவினைத்தேசியம்’ என்ற முரண்பாடு. இரண்டு, ‘பாரம்பரிய தேசியம் X இலட்சியவாத தேசியம்’ என்ற முரண்பாடு.
பல்வேறு இன,மத,மொழி அடையாளங்கள் கொண்ட மக்களை ஒன்றாகத்திரட்டி அவர்கள் அனைவரும் சமமான உரிமையுடன் பங்குகொள்ளும் ஒரு தேசத்தை உருவகிப்பதே கூட்டுத்தேசியமாகும். அதற்கு நேர் எதிரான விசையாக அமைவது பிரிவினைத்தேசியம். தங்கள் சாதி மதம் இனம் மொழி அடிப்படையில் பிரிந்து செல்ல வேண்டும், தனித்துச் செயல்பட வேண்டும் என்ற நோக்கம் கொண்டது பிரிவினைத்தேசியம். பெரும்பாலான நேரங்களில் இது எதிர்மறையாகவே செயல்படுகிறது. கூட்டுத்தேசியத்தை உடைத்து தன் பங்கை எடுப்பதிலேயே இதன் செயல்முறை உள்ளது.
தேசியத்தின் வேர்களை தொன்மையில் இருந்து, பாரம்பரியத்தில் இருந்து , வரலாற்றில் இருந்து உருவகித்துக்கொள்வது பாரம்பரியத்தேசியம். இவர்களின் எல்லா தேசிய அடையாளங்களும், தேசியக் கனவுகளும் சென்றகாலத்தில் இருந்தே உருவாகின்றன. ஆகவே இவர்களுக்கு வரலாறு என்பது முக்கியமான ஆதாரம். வரலாற்றுவாதத்தை உருவாக்குதலே இவர்களின் முக்கியமான கருத்தியல் செயல்பாடு. தங்களுடைய தனித்தன்மையை, தேசிய அடையாளத்தை வரலாறு வழங்குகிறது என்பதே இந்த தேசிய உருவகத்தின் சாராம்சமான தரிசனம்.
மாறாக தேசியத்தின் எதிர்காலச் சாத்தியங்களையே அதன் நியாயங்களாக முன்வைப்பதே இலட்சியவாதத் தேசியம். எப்படி வாழ்ந்தோம் என்று பேசுவதற்குப் பதிலாக எப்படி வாழவேண்டும் என்ற கனவில் இருந்து உருவான தேசியம் அது. அதன் எல்லா தர்கங்களும் எதிர்காலத்தச் சார்ந்தவை. இலட்சியவாதமே அதன் நோக்குகளை தீர்மானிக்கிறது.
நம் சூழலில் தேசியம் குறித்து அறிவார்ந்த கோணத்தில் பேச முன்வருபவர்களேகூட தேசியம் என்பதை இவ்வாறு குண அடிப்படையில் பிரித்துப் புரிந்துகொள்ளாமல் மட்டையடியாக கருத்துச் சொல்வதைக் காண்கிறேன். கடந்த ஐம்பதாண்டுகளில் தேசியம் என்ற உருவகத்தின் பல்வேறு சாத்தியங்களைப்பற்றி மிக விரிவாகபேசும் நூல்கள் வெளிவந்துள்ளன. அவற்றை உள்வாங்காமல் போகிறபோக்கில் கருத்துச் சொல்வதனால் எந்தப் பயனும் இல்லை.
மேலே சொன்ன பிரிவினைகளுக்குள் ஒரு தொடர்பு இருப்பதைக் காணலாம். கூட்டுத்தேசியம் என்பது பெரும்பாலும் இலட்சியவாத தேசியமாகவே இருக்க முடியும். இறந்தகாலத்துக்குச் சென்றால் பல்வேறு இன,மத,மொழி குழுக்கள் ஒன்றுடன் ஒன்று போரிட்டு ஆதிக்கம் செலுத்தி ஆதிக்கத்தை எதிர்த்து கொண்டிருந்த சித்திரமே கிடைக்கும். ‘நாம் ஒன்றாக இருக்கவேண்டும்’ என ஒரு தேசியவாதி சொன்னாரென்றால் அதற்கான காரணங்களை அவர் இறந்தகாலத்தில் தேட முடியாது, எதிர்காலத்திலேயே தேட வேண்டும்.
மாறாக பிரிவினைபேசும் எவருக்கும் வரலாறு கச்சிதமாகக் கைகொடுக்கும். எந்த மதமும் இனமும் மொழியும் இனக்குழுவும் தன்னை ஒரு தனித்தேசியமாக உணரும் என்றால் அதற்கான காரணங்களை வரலாற்றில் கண்டுகொள்ளலாம். காரணம் மக்கள் பிரிந்து போரிட்ட வரலாற்றால் ஆனதே மானுட பரிணாமம்.
பிரிவினைத்தேசியம் சார்ந்த உணர்வுகளை மக்களிடையே உருவாக்குவது எளிது. காரணம் அவை எதிர்மறை உணர்வுகள். எதிரி தூலமாக கண்ணெதிரே தெரிகிறான். அவற்றைச் சுட்டிக்காட்டி கசப்புகளை மிக எளிதில் உருவாக்கலாம். ஒரு நவீன இந்திய தேசியத்தை உருவாக்க அரைநூற்றாண்டு ஆகியது. ஐந்தே வருடங்களில் பாகிஸ்தானிய பிரிவினைத் தேசியத்தை உருவாக்க அவர்களால் முடிந்தது. ‘சகமனிதன் உன் எதிரி’ என்று எங்கும் எப்போதும் மனிதர்களிடம் சொல்லலாம், நம்ப வைக்கலாம்.
அதேபோல இறந்தகாலத்தில் வரலாற்றின் காரணங்களைக் கண்டடைவதும் அதைப் பரப்புவதும் எளிது. இறந்தகலாம் என்றுமே ஒரு கனவுபூமி. அங்கே எல்லாவகை பிரமைகளுக்கும் இடமிருக்கிறது. பெருமிதங்களை, காழ்ப்புகளை, கசப்புகளை அங்கிருந்து எப்போது வேண்டுமானாலும் தோண்டிக்கொண்டுவரமுடியும். எப்படியும் தர்க்கப்படுத்தி முன்வைக்க முடியும்.
ஆனால் மக்களை அவர்களின் பேதங்களை மறந்து ஒருங்கிணைக்கச் செய்வது மிகமிகக் கடினமானது. ஏனென்றால் குழுக்களாகப் பிரிவதும் சகமனிதர்களை வெறுப்பதும் மனிதனின் இயல்புகளில் முக்கியமானவை. அவ்வியல்புக்கு எதிராக அவர்களைக் கொண்டுசெல்ல உணர்ச்சிகரமான இலட்சியவாதம் தேவை. அந்த இலட்சியவாதத்தின் சுருதி இறங்க இறங்க அதை மேலெழுப்பிக்கொண்டே இருக்கும் கடும் முயற்சி தேவை. அப்போதும்கூட எக்கணமும் அது கைநழுவிச்சென்றுவிடும் அபாயம் உள்ளது.
காந்தி இந்தச் சவாலை முன்னெடுத்த தலைவர். அவரது தேசியம் என்பது மகத்தான இலட்சியவாத கருத்துக்களின் அடிப்படையில் அமைந்தது. அவரது தேசியம் என்பது நேற்றில் இருந்து கிளைத்தது அல்ல. நாளைகுறித்த கனவுகளில் இருந்து கிளைத்தது. அவர் மக்களை அக்கனவின் அடிப்படையில் ஒருங்கிணைக்க முயன்றவர்
[மேலும்]