‘வெண்முரசு’ – நூல் இரண்டு – ‘மழைப்பாடல்’ – 24

பகுதி ஐந்து : முதல்மழை

[ 3 ]

புடவியையும் அதன் அலைகளாக காலத்தையும் அவ்வலைகளின் ஒளியாக எண்ணங்களையும் பிரம்மன் படைப்பதற்கு முன்பு அவன் சனந்தன், சனகன், சனாதனன், சனத்குமாரன் என்னும் நான்கு முனிவர்களை படைத்தான். தன் படைப்பின் முதற்கணங்களாகிய அப்பிரஜாபதிகளை நோக்கி பிரம்மன் ‘நீங்கள் விதைகளாகுக’ என்று ஆணையிட்டான்.

“தந்தையே, நான் என் முழுமையை இழக்க விரும்பவில்லை. சிதையாத விதைகள் முளைப்பதுமில்லை” என்றார் சனகர். “நான் என் அமைதியை இழக்க ஒப்பமாட்டேன். படைப்பென்பது நிலைகுலைவேயாகும்” என்றார் சனந்தர். சனாதனர் “படைப்பவனைவிட மேலான படைப்பு பொருளற்றது. தோற்கடிக்கப்படுவதை என் அகம் விழையவுமில்லை” என்றார். சனத்குமாரர் “படைப்பவன் பிறபடைப்பாளிகளுடன் ஒத்துப்போகமுடியாது. நான் என் தமையன்களுடன் முரண்கொள்ளமாட்டேன்” என்றார்.

சினம்கொண்டு எழுந்த முதல்தாதையின் நெரிந்த புருவங்களுக்கு அடியில் எரிந்த விழிகளிலிருந்து நெருப்புருவாக குழந்தை ஒன்று பிறந்தது. அதன் கைகால்கள் அனலாறுகளாக விண்ணில் ஓடின. அதன் தலைமுடி தழலாட்டமாக திசைகளில் பரவியது. அதன் விழிகள் ஆதித்யர்களாக சுடர்விட்டன. திசைகள் இடிபட பெருங்குரலில் அழுத அந்த மைந்தனைக் கண்டு பிரம்மனே அஞ்சி பின்னடைந்தான். அதன் தழலெரிவை விண்ணகமும் தாங்காதென்று எண்ணியதும் அவன் ‘இம்மகவு இரண்டாக ஆகக் கடவது’ என்றான்.

அந்த அனல்மகவு ஆண் பெண் என இரண்டாகப்பிரிந்தது. பிரிந்த இரு குழவிகளில் ஒன்று கீழ்த்திசையையும் இன்னொன்று மேல்திசையையும் முற்றாக நிறைத்திருந்தது. வானகமே எரிவெளியாக இருந்ததைக் கண்டு பிரம்மன் அந்த ஆண்மகவை பதினொரு சிறுமகவுகளாகப் பிரித்தான். பதினொரு தழல்மைந்தர்களும் செங்கதிர் விரியும் உடலும் கருங்கதிரென அலையும் குழல்களும் கொண்டிருந்தனர். அவர்கள் பதினொரு ருத்ரர்கள் என்று பிரம்மனால் அழைக்கப்பட்டனர். அவர்கள் பருவுலகுக்கு அனுப்பப்பட்டனர்.

அவர்களில் மன்யூ பருப்பொருளுக்குள் எரியும் அனலானான். மனு மானுடத்துக்குள் கனலும் உயிரானான். மகினசன் அறிவிலும் மகான் ஞானத்திலும் எரிந்தனர். சிவன் யோகத்தின் கனல். ருதுத்வஜன் தாவரங்களில் தளிராக எழுபவன். உக்ரரேதஸ் விலங்குகளின் விந்துவின் வெம்மை. பவன் வேர்களின் வெப்பம். காமன் வசந்தத்தின் தழல். வாமதேவன் மரணத்தின் தீ. திருதவிருதன் அழிவின்மையின் எரி.

பிரிந்தெழுந்த அனல்மகளில் இருந்து பதினொரு ருத்ரைகள் உருவானார்கள். தீகை, விருத்தி, உசனை, உமை, நியுதை, சர்ப்பிஸ், இளை, அம்பிகை, இராவதி, சுதை, தீக்‌ஷை என்னும் அவர்கள் ருத்ரர்களின் துணைவிகளாயினர். பதினொரு ருத்ரர்களும் பருவெளியின் பதினொரு மூலைகளிலும் நின்றெரியும் தழல்களாயினர். வான்வெளியை முழுமையாகக் காணும் கண்கள் கொண்டவர்கள் மட்டுமே அவர்களனைவரையும் ஒரேசமயம் காணமுடியும்.

பாலைநிலத்துப் பாறை ஒன்றில் அமர்ந்து யோகத்தில் தன் அகக்குகைக்குள் ஆகாயத்தை எழுப்பிய மாமுனிவரான பிரகஸ்பதி பதினொரு ருத்ரர்களையும் அவர்களின் ருத்ரைகளுடன் கண்டார். பெருந்தழலை அறிந்த அவரது அகம் அமர்ந்திருந்த மானுட உடல் வெம்மைகொண்டு எரிந்து பொசுங்கியது. சாம்பல்குவையாக அவர் கிடந்தார். ஆயிரமாண்டுகாலம் அந்தச்சாம்பல் அங்கே கிடந்தது. பின்பு அங்கே பெய்த மழையால் அச்சாம்பல் கரைந்தோடி ஒரு சிறிய தடாகத்தை அடைந்தது.

அந்தத் தடாகத்தின் கரையோரமாக அவரது தலையின் நெற்றியோட்டின் மணி ஒரு விதையாக பதிந்து முளைத்தெழுந்தது. பிரகஸ்பதி மீண்டும் மானுட உடலைப்பெற்று நடந்து மறைந்தார். அச்சுனையின் கரைகளில் அவரது சாம்பல்துளிகள் நூற்றியெட்டு மரங்களாக முளைத்தெழுந்தன. அவை ருத்ராக்‌ஷ மரங்களாக மாறி அச்சுனையை சூழ்ந்து நின்றிருந்தன. அந்தச்சோலை ருத்ராணிருத்ரம் என்று அழைக்கப்பட்டது. அஷ்டவக்ரமாமுனிவர் அங்கே வந்து தவம் செய்தபோது அங்கே சுனைக்கரையில் நிறுவிய சிவக்குறி பயணிகளால் வணங்கப்பட்டது.

சமநிலத்தில் ருத்ராக்‌ஷமரங்கள் நிற்கும் ஒரே இடம் என்று அந்தச்சோலை அறியப்பட்டது. அங்கே ஒரே ஒரு மரம் ஒற்றைமுகமுள்ள சிவரூபமான ருத்ராக்‌ஷமணிகளைக் காய்த்தது. அம்மையப்பனின் வடிவமான இரட்டைமுகம் கொண்ட ருத்ராக்‌ஷங்கள் விளையும் மூன்று மரங்கள் அங்கே நின்றன. அக்னிவடிவமான மூன்றுமுக ருத்ராக்‌ஷங்களும் பிரம்மவடிவான நான்முக ருத்ராக்‌ஷங்களும் காலாக்னியின் வடிவமான ஐந்துமுக ருத்ராக்‌ஷங்களும் அறுமுகனின் ருத்ராக்‌ஷங்களும் ஏழுமுகம்கொண்ட காமதேவ ருத்ராக்‌ஷங்களும் எட்டுமுகம்கொண்ட கணபதிக்குரிய ருத்ராக்‌ஷங்களும் ஒன்பதுமுகம் கொண்ட பைரவனுக்குரிய ருத்ராக்‌ஷங்களும் அங்கே விளைந்தன.

பெரும்பாலை நிலத்தைத் தாண்டி அஸ்தினபுரியின் மணக்குழு ருத்ராணிருத்ரத்தை அடைந்ததும் பலபத்ரர் வந்து காந்தாரி இருந்த வண்டியை அணுகி வணங்கினார். “அரசி, இந்தச் சோலையில் பாலைநிலத்தின் வெம்மையின் அதிபர்களான பதினொரு ருத்ரர்களும் குடிகொள்வதாக புராணங்கள் சொல்கின்றன. இங்கே அவர்களுக்கு பலிகொடுத்து வணங்கி நாம் முன்னே செல்லலாம்” என்றார். காந்தாரி “அவ்வாறே ஆகுக” என்றபின் தன் தங்கையருடன் இறங்கினாள்.

சிறிய இலைகளும் கனத்த அடிமரங்களும் கொண்ட ருத்ராக்‌ஷமரங்களின் வேர்கள் பாறைகளைக் கவ்வி உடைத்து மண்ணைத்துளைத்து நின்றிருந்த சோலைக்கு நடுவே வெண்மணல் குழிக்குள் சற்றே நீர் ஊறித்தேங்கிய சுனை கிடந்தது. ருத்ராக்‌ஷமரங்கள் இலைகளைப் பெரும்பாலும் உதிர்த்து வெற்றுக்கிளைகளை விரித்து நின்றன. கிளைநுனிகளில் மட்டுமே சற்றேனும் பசுமை இருந்தது. பலபத்ரர் “இவ்வருடம் கோடை சற்று கடுமை” என்று சொன்னார்.

விதுரன் “இங்கே மழை பெய்வதில்லையா?” என்றான். “பாலைநிலத்தில் மழை பெய்யப்போவதுபோன்று காற்று கனிந்து வரும். ஆனால் நுண்வடிவ நீரை மழைத்துளியாக்கும் கனிவு வானுக்கு இருப்பதில்லை. இங்குள்ள வானம் அடங்கா விடாய்கொண்டது. நீர்த்துளிகளை அதுவே உறிஞ்சி மேலே எடுத்துக்கொள்கிறது” என்றபின் அங்கே வண்டிகளில் இருந்து குதிரைகளை அவிழ்த்துக்கொண்டிருந்த பணியாளிடம் “இங்கே மழைபெய்து எவ்வளவு காலமாகிறது?” என்றார். விழித்த வெண்விழிகளுடன் அவன் திகைத்து நோக்க பலபத்ரர் மீண்டும் கேட்டார்.

அவன் உலர்ந்த உதடுகளை நாவால் ஈரப்படுத்திவிட்டு “நெடுங்காலம்…” என்றபின் “என் மனைவியை நான் மணம்செய்துகொண்டதற்கு முந்தையவருடம் மழை இருந்தது. என் மகனுக்கு ஏழு வயதாகிறது” என்றான். பலபத்ரர் புன்னகையுடன் அவனை போகும்படி சைகை காட்டிவிட்டு “பார்த்தீர்களல்லவா? எட்டுவருடங்களுக்கும் மேலாக இங்கே மழை இல்லை” என்றார். விதுரன் திகைப்புடன் அந்த மரங்களை நோக்கியபின் “அப்படியென்றால் இந்தச்சுனைநீர் எங்கிருந்து வருகிறது?” என்றான்.

“வடக்கே உயர்ந்திருக்கும் இமயத்தின் தொடர்ச்சியான பாறை இந்த மணல்வெளிக்கு அடியில் சரிந்து கூர்ஜரக் கடற்கரை நோக்கிச் செல்கிறது. அந்தப்பாறையின் பரப்பில் எங்கோ பெரிய விரிசல் ஒன்று இருக்கலாம். மலைநீர் அதன் வழியாக ஊறிவரக்கூடும். மண்ணுக்குள் நரம்புகள் போல கண்காணாநதிகள் ஓடுகின்றன. அவற்றைப்பற்றி நீர்நூல்கள் விரிவாகவே பேசுகின்றன” என்றார் வழிகாட்டியான சூதப்பாடகர். “இமயத்தின் அடிவாரத்தில் மழை பெய்யும்போது இச்சுனை நிறையும் என நினைக்கிறேன். அந்த நீரை நம்பித்தான் இந்த மரங்கள் வாழ்கின்றன.”

சுனைக்கு வடக்காக கிழக்குநோக்கிய நிலையில் நீளமான கல்பீடத்தின் குழிகளில் பதினொரு ருத்ரர்களும் சிவந்த நீள்கற்களாக பதிட்டை செய்யப்பட்டிருந்தனர். அவர்களின் ருத்ரைகள் நீலநிறக்கற்களாக அவர்களுக்குக் கீழே கிடைமட்டமாக பதிக்கப்பட்டிருந்தனர். ருத்ரர்களுக்கு மேல் பெரிய வெண்ணிறக் கல்லால் ஆன சிவக்குறி இருந்தது. சோலை முழுக்க சருகுகள் உதிர்ந்து காற்றால் அள்ளிக் குவிக்கப்பட்டு மரத்தடிகளிலும் பாறைக்குவைகளிலும் குவிந்துகிடந்தன. அவற்றின் மேல் மெல்லிய மணல் பொழியும் ஒலி கேட்டுக்கொண்டிருந்தது.

VENMURASU_EPI__74_
ஓவியம்: ஷண்முகவேல்
[பெரிதுபடுத்த படத்தின்மீது சொடுக்கவும்]

அங்கேயே தங்கியிருந்த பூசகராகிய முதியசூதர் பித்து நிறைந்த கண்களும் சடைமுடிக்கற்றைகளும் மண்படிந்த உடலும் கொண்டிருந்தார். அவர் பீஷ்மரையோ பிறரையோ வணங்காமல் காய்ந்த புல்வரம்பு போலிருந்த புருவங்களுக்குக் கீழே வெந்த செங்கல் போன்றிருந்த கண்களால் ஏறிட்டுப்பார்த்து “மகாருத்ரர்கள் தங்கும் இடம் இது. அவர்கள் அனலுருவானவர்கள். காய்சினத்து தாதையர். கானகத்தை ஆள்பவர்கள்” என்றார். அவருடைய நகங்கள் காகங்களின் அலகுகள் போல கருமையாக நீண்டிருந்தன. பலபத்ரர் “பூசனைநிகழட்டும் சூதரே” என்றார்.

முதுசூதர் ருத்ரபீடங்கள் மேல் பரவியிருந்த சருகுகளையும் மண்ணையும் அள்ளி அகற்றி தூய்மை செய்தார். சுனைநீரை அள்ளிவந்து கல்நிலைகளைக் கழுவினார். வண்டிக்குள் இருந்த மரப்பெட்டியில் இருந்து எடுக்கப்பட்ட உலர்ந்த துளசி இலைகளையும் ஈச்சைப்பழங்களையும் படைத்தார். “குருதிபலி வழக்கம் உண்டு” என்று முதுசூதர் பலபத்ரரிடம் சொன்னார். பலபத்ரர் பீஷ்மரை நோக்க “இப்போது நம்மிடம் குருதி இல்லை” என்று பீஷ்மர் சொன்னார்.

பலபத்ரர் “ஆம்… இப்போது மலரும் பழங்களும் போதும்… மீண்டும் வரும்போது ருத்ரர்களுக்கு குருதியளிப்போம்” என்றார். முதியசூதர் ஏதோ சொல்ல வந்தபின் சடைக்கற்றைகள் அசைய தலையை அசைத்து “அவ்வாறே ஆகுக” என்றார். கிருஷ்ண யஜுர்வேதத்தின் தைத்ரிய சம்ஹிதையில் உள்ள ஸ்ரீருத்ரமந்திரத்தைச் சொன்னார். அதன் இருபகுதிகளான நமகம் மற்றும் சமகத்தை அவர் தன் ஓநாய்க்குரலில் சொல்லி முடித்ததும் பீஷ்மரும் விதுரரும் பிறரும் தங்கள் ஆயுதங்களை ருத்ரர்கள் முன் வைத்து வணங்கினர்.

திருதராஷ்டிரன் ஒரு வீரன் தோளைப்பற்றியபடி வந்து ருத்ரர்கள் முன் விழுந்து வணங்கினான். சம்படையின் தோளைப்பற்றியபடி வந்த காந்தாரி வணங்கி சூதர் அளித்த துளசி இதழை வாங்கி தன் தலையில் சூடிக்கொண்டு பின்னால் நகர்ந்தாள். அவளுக்குப்பின்னால் நின்றிருந்த சத்யசேனை மேலும் பின்னால்நகர அவள் மேல் தன் உடல் படக்கூடாதென்பதற்காக காவலன் விலகி மேலும் பின்னால் பாய்ந்தான். அவனுக்குப்பின்னால் நின்றிருந்த காவலன் அதே கணம் பீஷ்மர் செல்வதற்காக தன் வேலைத் தாழ்த்த அதன் கூரிய நுனி வீரனின் தோளைக் கிழித்தது. அவன் கைகளால் பொத்திக்கொள்ள விரலிடுக்கை மீறி குருதி ஊறியது.

பலபத்ரர் புருவம் தூக்கி “என்ன?” என்றார். அவன் “இல்லை” என்று சொல்லி பின்னகர்ந்து மற்ற வீரர்களுக்கு இடையே சென்றான். இன்னொரு வீரன் தலைப்பாகையைக் கிழித்து அவன் காயத்தைக் கட்ட அவன் தன் கையை விரித்துத் தொங்கவிட்டபோது விரலில் இருந்து மூன்று குருதிச்சொட்டுகள் உதிர்ந்து மணலில் விழுந்தன. காய்ந்த மணல் அவற்றை உடனடியாக உறிஞ்சி செம்புள்ளிகளாக ஆக்கிக்கொண்டது.

அனைவரும் மீண்டும் வண்டிகளிலும் ரதங்களிலும் ஏறிக்கொண்டனர். முதல் குதிரை அருகே கொடியுடன் நின்ற காவலன் திரும்பி பலபத்ரரைப் பார்த்தான். அவர் தலையசைத்ததும் தன் சங்கத்தை ஊதிக்கொண்டு புரவியில் ஏறிக்கொண்டான். கடைசியில் நின்ற காவலனும் சங்கை ஊதியதும் புரவிகள் கடிவாளம் இழுபட்டு கால்களைத் தூக்கி வைத்தன. வண்டிகளின் சக்கரங்கள் கூழாங்கற்களை அரைத்தபடி அசைந்து முன்னகர்ந்தன.

அவர்கள் சென்ற தடம் செம்புழுதியில் நீண்டு கிடந்தது. ஓசைகள் திசைவிளிம்பில் மறைந்தன. சோலைக்குள் சருகுகளின் அசைவாக ஒரு காற்று நுழைந்தது. முதுசூதர் மணலில் குனிந்து கூர்ந்து நோக்கி மூன்றுதுளி குருதி விழுந்த இடத்தைக் கண்டடைந்தார். அந்த இடத்தை தன் சுட்டுவிரலால் தொட்டார். குருதி உலர்ந்து கருகி கரும்புள்ளிகளாக இருந்தது. ஒரு சருகை எடுத்து அந்த மணலை மெல்ல அள்ளினார். அதை கொண்டுசென்று ருத்ரர்களின் முன்னால் வைத்தார். அதை தன் கைகளால் தொட்டு ஒவ்வொரு ருத்ரரின் மீதும் வைத்தார்.

ருத்ரர்களின் முன் அமர்ந்துகொண்டு தன் தலையை ஆட்டியபடி அவர் அக்கற்களை நோக்கிக்கொண்டிருந்தார். கற்களில் கண்விழித்தெழுந்த ருத்ரர்கள் அவரை நோக்கினர். தொலைதூரப்புயல் எழுந்து வருவதுபோல அவரிலிருந்து வேதமந்திரம் வெளிப்பட்டது.

‘ஊதப்பட்ட அனல்போல் ஒளிர்பவர்களே
இருமடங்கு மும்மடங்கு என
வீசுந்தோறும் பெருகுபவர்களே
புழுதிபடியா பொற்தேர்கொண்டவர்களே
மருத்துக்களே
செல்வங்களுடனும் ஆற்றல்களுடனும் எழுக!

குருதிபொழியும் ருத்ரர்களின் மைந்தர்களே
அனைத்தையும் அடக்கிய விண்ணகத்தால்
ஆளப்படுபவர்களே
மகத்தானவர்களே மருத்துக்களே வருக!
அன்னை பிருஷ்னியால்
மானுடர்களுக்காக கருவுறப்பட்டவர்களே
விரைந்து வருக!

வடமேற்கே வான்விளிம்பின் ஒளியாலான வில்வட்டத்தில் சிவந்த அலைகள் எழுவதுபோல ருத்ரர்களின் மைந்தர்களான மருத்துக்கள் தோன்றினர். செம்பிடரி பறக்கும் ஆயிரத்தெட்டு பொன்னிறப்புரவிகளின் வடிவில் அவர்கள் பறந்து வந்தனர். அவர்களின் ஓசைகேட்டு அடிமரங்கள் நடுங்கின. செம்புழுதிக்கடல் பெருகிவந்து திசைகளை முழுமையாக மூடிக்கொண்டது. மலையடுக்குகள் பாறைகள் மணல்சரிவுகள் மரங்கள் இலைகள் என அனைத்தும் செம்புழுதிப்பரப்புள் புதைந்தழிந்தன. விழிதிறந்தாலும் மூடினாலும் செந்நிறமன்றி ஏதும் தெரியவில்லை.

வானில் நெடுந்தொலைவில் இடி ஒலித்தது. தூசுக்குள் அந்த ஓசை நீருக்குள் என ஒலித்தது. மின்னல் வெட்டிய ஒளி பட்டுத்திரைக்கு அப்பால் என தெரிந்து மறைந்தது. இடியோசை யானை வயிற்றுக்குள் உறுமலோசை போல ஒலித்து நீண்டு நெடுந்தொலைவில் நுனி நெளிந்து அடங்கியது. முதுசூதர் செம்புழுதியால் மூடப்பட்டவராக அசையாமல் அமர்ந்திருந்தார். அவர் சற்று அப்பால் சிறு அம்பு ஒன்று மண்ணைத் தைத்த ஒலியைக் கேட்டார். இன்னொரு அம்பு எனஅருகே விழுந்தது நீர்த்துளி. இன்னுமொரு இன்னுமொரு அம்பு என நீர்த்துளிகள். நீரில் விழும் மீன்கொத்திகள் என அவை மண்ணை அறைந்து நிறைந்தன.

அவர் தன் இடத்தோளில் கூழாங்கல் விழுந்ததுபோல பெரிய மழைத்துளி அறைந்தது உணர்ந்து திரும்பி நோக்கியபோது கொழுத்த குருதிபோல செம்புழுதியில் கரைந்து அது வழிந்தது கண்டார். இன்னொரு துளி அவர் முகத்தில் விழுந்தது. சடசடவென நீர்த்துளிகள் விழுந்து பரவ மரங்களில் இலைகளில் இருந்து செங்குருதி சொட்டியது. அடிமரங்களில் ரத்தம் அலையலையாக வழிந்திறங்கியது. பாறைகள் செந்நிற ரத்தம் பரவி ஊன்துண்டுகள் போலத் தெரிந்தன.

ருத்ரர்களின் மீது குருதிமழை பொழிந்தது. கல்மழுங்கிய தலைகளில் விழுந்த செம்புனல் சிறிய மலர்கள் போல மலர்ந்து மலர்ந்து தெறித்து மறைய கல்லுடல் வளைவில் செவ்வலைகள் இறங்கின. பீடத்தில் செந்நிணம்போல அதிர்ந்து சுழித்து வளைந்தோடி விளிம்பிலிருந்து செவ்விழுதாகக் கொட்டியது நீர். முதுசூதர் எழுந்து சோலைவிட்டு வெளியே வந்து அங்கிருந்த பாறைமேலேறி பார்த்தார். நான்குதிசைகளையும் மூடி குருதிமழை பொழிந்து கொண்டிருந்தது.

பதினொரு ருத்ரர்களும் மருத்துக்கள் மீது ஏறி செஞ்சடைகளில் இருந்து குருதித்துளிகள் தெறிக்க பறந்துவந்து அஸ்தினபுரியின் கோட்டைவாயிலை அடைந்தனர். நள்ளிரவில் காவல்மாறியபின் புதிய காவலர்கள் வந்து வேல்களை தங்கள் கால்களுக்கு நடுவே நட்டு அமர்ந்திருந்த நேரம் அது. தாளமுடியாத புழுக்கத்தால் அவர்கள் தங்கள் தோலாடைகளைக் கழற்றி அப்பால் வீசியிருந்தனர். அவர்களைச் சுற்றி வென்னீர்க்குளம் போல அசைவே இல்லாமல் காற்று தேங்கி நின்றது. உடலை அசைத்தும் மூச்சை ஊதியும் விசிறிகளாலும் ஆடைகளாலும் வீசியும் அவர்கள் அக்காற்றை அசைக்க முயன்றனர். இருண்ட காற்று கோட்டைச்சுவர் போல திடம்கொண்டிருந்தது.

வியர்வை வழிய காவல்மாடத்தில் நின்றிருந்த வீரன் புரவிப்படை ஒன்று வரும் ஒலியை கேட்டான். அப்பால் தெரிந்த குறுங்காட்டுக்குள் மரங்கள் அசைவதைக் கண்டு எழுந்து நின்று பார்த்தான். மரங்களை அசைத்துக்குலைத்தபடி இரைச்சலுடன் கோட்டைமேல் மோதி மேலெழுந்து சுழித்து மறுபக்கம் பொழிந்தது காற்று. “காற்றா?” என்று வாய் வழிய தூங்கிக்கொண்டிருந்த வீரன் கேட்டான். “ஆம்…” என்றான் முதல்வீரன்.

“காற்று இப்படி காட்டாறு போல வருமா என்ன?” என்று அவன் கேட்டான். மறுபக்கம் சென்ற காற்றில் மரங்கள் இலைளை திருப்பிக்கொண்டு ஓலமிட்டன. நூற்றுக்கணக்கான சாளரங்கள் அறைபட்டு ஓசையிட்டன. முதல் வீரன் தன் தோள்களிலும் மார்பிலும் நீர்த்துளிகள் அழுகியபழங்கள் போல வீசப்பட்டதை உணர்ந்தான். கையைவைத்து திகைத்து எடுத்துப் பார்த்தான். “ரத்தம்” என்றான்.

இரண்டாவது வீரன் “ரத்தமா? முதல்மழை… வானின் புழுதிகலந்திருக்கிறது” என்றபடி எழுந்தான். அதற்குள் அவர்கள் அந்த மழையில் முழுமையாகவே நனைந்திருந்தார்கள். அறைக்குள் பேசிக்கொண்டிருந்த வீரர்கள் அணைந்த எண்ணைக்குடுவை விளக்கை பற்றவைத்தனர். ஈரம் சொட்ட உள்ளே வந்த வீரனைக் கண்டு அரைத்தூக்கத்தில் விழித்த ஒருவன் அலறியபடி எழுந்து சுவரோடு ஒட்டிக்கொண்டான். உள்ளே வந்தவனின் உடல் செங்குருதியால் மூடப்பட்டிருந்தது.

“செந்நிற மழை” என்றான் காவலன். அனைவரும் வெளியே முண்டியடித்தனர். கோட்டைக்குமேலிருந்தும் கீழிருந்தும் பலர் “மழையா..? மழையா பெய்தது?” என்று கேட்டுக்கொண்டிருந்தனர். யாரோ “சேற்றுமழை!” என்றனர். “செங்குருதி போல…” “இதுவரை இதைப்போல பெய்ததே இல்லை.” “முன்னொருகாலத்தில் தவளைமழை பெய்ததாக என் தாத்தா சொன்னார்.” “சென்றமுறை பனிக்கட்டி மழை பெய்தது.” குரல்கள் கேட்டுக்கொண்டிருந்தன. நனைந்தவர்கள் உள்ளே சென்று தங்கள் உடல்களை தாங்களே பார்த்துக்கொண்டனர்.

“போர்க்களத்தில் இருந்து வருவதைப்போலிருக்கிறான்” என்று ஒருவன் சொன்னான். “பிறந்த குழந்தைகூட இப்படித்தான் இருக்கும்” என்றான் இன்னொருவன். காவலர்கள் வெளியே சென்று பார்த்தனர். மொத்தக்காற்றும் ஏதும் நிகழாதது போல அசைவற்று இருளை ஏந்தி நின்றிருந்தது. வானில் நிறைந்திருந்த விண்மீன்கள் முற்றிலும் மறைந்திருந்தன.

அவர்கள் உள்ளே சென்று மீன்நெய் விட்ட அறுமுனைப் பந்தங்களைக் கொளுத்தி வெளியே கொண்டுவந்தார்கள். அந்த ஒளியில் கோட்டைக்குமேலும் கீழும் இருந்த நூற்றுக்கணக்கான கைவிடுபடைக்கலங்களின் அம்புநுனிகளில் குருதி துளித்துச் சொட்டிக்கொண்டிருப்பதைக் கண்டனர்.

முந்தைய கட்டுரைநீர்க்குமிழிகள்
அடுத்த கட்டுரைவெண்முரசுக்காக ஒரு தேடல் பக்கம்